அய்யோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு.......தீயாத்தான்!
இன்றைக்கு வலைப்பதிவுகளுக்கு வந்து, சூடாக ஒரு இடுகையோ, அல்லது மொக்கையாக ஒரு பின்னூட்டமோ போடாமல், நம்மில் பலருக்கும் பொழுது விடிவதே இல்லை
 
"காலை எழுந்தவுடன் காப்பி! படிக்கக் கொஞ்சம் பேப்பர்!" என்றிருந்த காலம்போய், வலைப்பதிவுகளில் மேய்வது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகவே ஆகிவிட்ட மாதிரி இருக்கிறதல்லவா
 
நீங்களும் நானும் வந்து புழங்கும் இணையத்துக்கு வயது 40 ஆகி விட்டது என்றால் நம்புவீர்களா?ஆமாம்! நாற்பது வருடங்களுக்கு முன்னால், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், செப்டெம்பர் மாதம் இரண்டாம் தேதி,இணையத்தை உருவாக்கின  லியனார்ட் க்லேயின்ராக் என்ற கணினித்துறை பேராசிரியரும், பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளவும், கூடப் பங்கெடுத்துக் கொண்டவர்களுமான  இன்னும் ஒரு இருபது பேரும், அவரது பரிசோதனைக் கூடத்தில் இரண்டு கணினிகளை ஐம்பது அடி கேபிள் இணைப்பை வைத்து, ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும் முறையை [நெட் வொர்கிங்] ஆரம்பித்து வைத்தார்கள்.

இன்றைக்கு நான் பயன்படுத்துகிற ரூட்டர் ஒரு சிறு தீப்பெட்டியின் அளவே இருக்கிறது. நாற்பது வருடங்களுக்கு முன்னால், அது ஒரு பெரிய தொலைபேசி பூத் அளவுக்கு இருந்ததாம்! பேராசிரியர், அந்த நாளை, நகைச்சுவையோடு இப்படி நினைவு கூர்கிறார்:"ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அங்கே இருந்த இருபது பேரும் அடுத்தவரைக் கை காட்டுவதற்குத் தயாராக இருந்தார்கள்!" 

 
நல்ல வேளையாக, அப்படி ஒன்றும் ஆகவில்லை, இரண்டு கணினிகளுமே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு கை குலுக்கிக் கொண்டன
 
இணையம் பிறந்தது
 
அது, செப்டம்பர் இரண்டாம் தேதி இல்லை, இணையம் அக்டோபர் இருபத்தொன்பதாம் தேதி தான் இணையம் பிறந்தது என்றும் சிலர் சொல்கிறார்களே என்று கேட்டால் பேராசிரியர் சிரித்துக் கொண்டே சொல்கிறார்: "அதுவும் சரிதான்! செப்டம்பர் இரண்டாம் தேதி இரண்டு கணினிகளை ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளச் செய்ய முடியும் என்று பார்த்தோம்.அன்றைக்கு அதன் முதல் சுவாசம் பிறந்தது.அக்டோபர் இருபத்தொன்பதாம் தேதி, அவை தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டதையும் பார்த்தோம். இரண்டுமே சரிதான்!"

பேராசிரியர் லியனார்ட் க்லேயின்ராக் மேலும் சொல்கிறார்:"இந்த முயற்சி வணிகரீதியில் நிச்சயம் ஜெயிக்கும் என்பது தெரியும், ஆனால், மிக இயல்பான, சமூகத்துடன் தொடர்புகொள்ளும் சாதனமாக மாறும் என்பதை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை..

99 வயதான என்னுடைய தாயார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த தருணம் வரை இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். நாற்பது வருடங்களுக்கு முன்னால், இது எப்படி ஒரு சமூகமாக நாம் இயங்குவதில் ஆழமாக ஊடுருவப் போகிறது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை."

நாற்பது தாண்டினாலே என்னவோ குணம் வந்து ஒட்டிக் கொள்ளும் என்பார்கள். அது மனிதனுக்கு மட்டும் தான், இணையத்துக்கு இல்லை என்பதையும் அடுத்து அடுத்து இந்தத் துறையில் ஏற்பட்டு  வரும் முன்னேற்றங்கள் காண்பித்துக் கொடுக்கின்றன.

இணையத்தைப் படைத்தவர் அதை எப்படிச் சொல்கிறார் என்பதையும் பார்ப்போமே!

"தொடர்ந்து வரும் புதிய வழிமுறைகள் எப்படி இந்த இணையத்தை அப்படியே ஆளுமை செய்யத் தொடங்குகின்றன என்பதைப் பார்ப்பதே மிக ஆச்சரியமான விஷயம் தான்! மின்னஞ்சல் அனுப்புகிற முறை ஊகத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது, ஆனாலும் வந்தது... உஷ ..ஷ்.ஷ் அப்படியே இணையத்தில் ராஜாங்கம் நடத்த ஆரம்பித்தது.அப்புறம் பார்த்தால், நாப்ஸ்டர், யு ட்யூப், மை ஸ்பேஸ்..பேஸ் புக் ..இப்படி ஏராளமான சோஷல் நெட் ஒர்கிங் ..யாருமே இப்படி எல்லாம் வரும், இப்படி வளரும் என்று எண்ணிப்பார்த்தது கூட இல்லை. இணையத்தை ஏன் நேசிக்கிறேன் என்றால், அது புதுமையின், புதுப்படைப்புக்களை உருவாக்கும் உந்துசக்தியாக இருக்கிறது. எங்கிருந்து என்ன வரும் என்று தெரியாது. ஆனால், வந்தவுடன், அய்யோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சுன்னு தீயாப் பத்திக்கும்."

2002-2003 வாக்கில் பெங்களூரு கணினி சார் தொழிலில் இருந்தவர்கள், இந்த வலைப்பதிவுக் கலாசாரத்தைக் கொஞ்ச கொஞ்சமாக விரிவு படுத்திக் கொண்டிருந்த நாட்களில் இருந்து வலைப்பதிவுகள் அடைந்து வரும் வளர்ச்சியைக் கவனித்து வருகிறேன்
 
இன்றைக்குத் தமிழில் ஏராளமான பதிவர்கள், எத்தனை எத்தனை வகையான விஷயங்களைத் தொட்டு, எத்தனை விதமான சிந்தனைகளை, இன்று இணையத்திலேயே படிக்க, உரையாட முடிகிறது!

கணினித்தமிழ் ஒரு உன்னதமான நிலையை எட்டும்!

"மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படல் ஆகாதோ" என்ற பாரதி வாக்கு பலிக்கும் நாள் வரும்! ஆம்! வானமும் வசப்படும்!

இணையத் தமிழில் இணைந்த பதிவர்களுக்கு நல்ல செய்தியாக, சிங்கைப்பதிவர் திரு.செந்தில்நாதன், அறுவைச் சிகிட்சை நல்ல விதமாக முடிந்து, இப்போது உடல் நலம் நல்ல முறையில் தேறி வருவதாகவும் சேதி கிடைத்திருக்கிறது.

இறைவனது கருணை- நல்ல எண்ணம் கொண்ட பதிவர்களின் பிரார்த்தனை ஒன்றுகூடி இது சாத்தியமாகி இருக்கிறது.

செந்தில்நாதன் நீடூழி வாழப் பிரார்த்தனைகளுடன்!

6 comments:

 1. பல முக்கிய தகவல்களை பரிமாறி கொண்டதற்கு நன்றி!

  ReplyDelete
 2. //
  இன்றைக்குத் தமிழில் ஏராளமான பதிவர்கள், எத்தனை எத்தனை வகையான விஷயங்களைத் தொட்டு, எத்தனை விதமான சிந்தனைகளை, இன்று இணையத்திலேயே படிக்க, உரையாட முடிகிறது!//

  இணையம் பற்றி சிறப்பான தகவல்.

  இணையப்பயன்பாட்டில் முதன்மையாக நான் கருதுவது, கிடைத்திருக்கும் நட்பு வட்டம் !

  ReplyDelete
 3. வாங்க, திரு கோவி. கண்ணன்!
  உண்மைதான்! இணையம் நிறையப் பேரை, நிறையக் கருத்துக்களை இணைத்தும் வைத்திருக்கிறது, முட்டி மோதவும் வைத்திருக்கிறது. முனைவர் நா. கண்ணன் சொல்கிற மாதிரி, இந்த மின்வெளியில், மின்னெழுத்துக்களில், சீக்கிரமே நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ள முடியும்! அதே மாதிரி, எதிரிகளையும்!

  மூன்றாம் தேதிக்குப் பின்னால், பதிவு எதையுமே காணோமே, அறிவிக்கப்படாத விடுமுறையில் இருந்தீர்கள் என்று நினைத்தேன்!

  ReplyDelete
 4. இரு கைகள், தலை தவிர, மார்புக்குக் கீழ் செயலற்ற ஒரு மனிதனுக்கு, வீட்டிலிருந்தபடியே வேலை செய்துப் பிழைக்கும் வரத்தை இந்த இணையம் தந்திருக்கிறதே?

  பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி திரு அந்தோணி முத்து!

  உங்களுடைய பதிவுகள் அத்தனையையும் படித்துப் பார்த்து மிகவும் நெகிழ்ந்தேன்.

  இறைவனது பரிபூரணமான கருணை உங்களோடு என்றைக்கும் இருக்கப் பிரார்த்தனை செய்கிறேன்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!