நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்,

ஊத்திக்கிறேன் கொஞ்சம்!

சாராயக் கடையில், குடிக்க வேண்டாமென்று கணவனிடம் கெஞ்சுவாள் ஒரு பெண். அவளுடைய கணவன், அவள் தலைமேல் கைவைத்து சத்தியம் செய்து "நாளையிலிருந்து குடிக்கவே மாட்டேன், ஆனால் இப்போதைக்கு மட்டும் கொஞ்சம்.........." என்று பேசுவதாக ஒருகாட்சி.
 

நீதி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சாராய போதையில் இன்னொரு குடிகாரனைப் பார்த்துப் பாடும் இந்தப் பாடல் அந்த நாட்களில் மிகவும் பிரபலம்!  அந்த நாட்களில் ஒரு பாடல் பிரபலமாகவேண்டுமேன்றால், பாடல் வரிகளில் சொல்லியிருப்பது தெளிவாகப் புரியும்படி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது.

கவிஞர் கண்ணதாசனுடைய இந்தப் பாடல் வரிகள் பிடித்துப் போனதற்குக் காரணம், நாம் எல்லோருமே சாராய போதை தேவைப் படாமலேயே, எதையும் நாளைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போடுகிறவர்களாக இருப்பது தானோ என்று அவ்வப்போது தோன்றும்! குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்ற மாதிரி, இப்படித் தள்ளிப் போடுவதான சோம்பேறித்தனம் காரியத்தையே கெடுத்துவிடுவதாக, நம்முடைய வாழ்க்கையிலேயே பல தருணங்களில் பார்க்கமுடியும். 


Procrastination! எதையும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றே தள்ளிக் கொண்டே போய், கடைசியில் எதையும் பார்க்க முடியாமலேயே போன அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு! சொல்லப் போனால், என்னை என்னுடைய எதிராளிகள் எப்போதுமே தோற்கடித்ததில்லை! தோற்கடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் என்னுடைய இந்த பலவீனமே பல தருணங்களில் காலை வாரிவிட்டுக் கொண்டிருந்தது என்பது தான் உண்மை!

அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம் என்றோ, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றோ இப்போது செய்ய வேண்டிய காரியத்தைத் தள்ளிப் போடுவது, எவ்வளவு மோசமானது என்று தெரிந்துமே கூட நம்மால் அதிலிருந்து விடுபட முடியவில்லையே?!


என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைப் பார்க்கலாமா? 


நர்சரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப் படும் பாடல்களில் ஒன்றான, "Work while you work, Play while you play" என்பது கூட வேலைசெய்யும்போது வேளையில் கவனம், விளையாடும்போது விளையாட்டில் கவனம் என்று நேரத்தின் அருமையைஉணர்த்துவதாகவே சொல்லிக் கொடுக்கப் படுவதுதான்!

நம்முடைய கல்விமுறையில் உள்ள கோளாறும், ஒருபகுதி ஆசிரியர்களின் திறமையின்மையும் சேர்ந்து நல்ல விஷயங்கள் எதுவுமே மனதில் தங்கிவிடாமல் செய்துகொண்டிருப்பதையும், விசனத்தோடு இங்கே பதிவு செய்தாகவேண்டியிருக்கிறது.

பழக்கம், வழக்கம் என்று சொல்வோமில்லையா! எந்த ஒரு செய்கையும் முதலில், அனுபவங்களாகவோ, பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதாகவோ ஒரு தனிநபரிடம் இருந்து ஆரம்பிக்கும்! அப்படிப்  பயிற்சியின் முதிர்ச்சி என்றே பழக்கத்தைச் சொல்லலாம். 

வழக்கம் என்பது ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வது. இந்த அடிப்படையை நினைவில் வைத்துக் கொண்டு, தள்ளிப் போடுவது என்பதான வழக்கம், சோம்பேறித்தனம் என்ற பழக்கமாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் இருந்து, விடுவித்துக் கொள்வது தொடங்குகிறது.
உதாரணமாக, மாலை நேரமாகிவிட்டால், தொலைக் காட்சி முன்னால் அமர்ந்து, அதில் வரும் மெகா சீரியல்களில் கதாபாத்திரங்கள் மூசுமூசென்று அழுது வடிவதை, பார்த்துக் கொண்டிருப்பது நேரத்துக்குப் பிடித்த கேடு என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான செண்டிமெண்டை வைத்துப் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், ஒரே சினிமாவைப் படங்களாகவும், க்ளிப்பிங்க்சாகவும், பாடல் காட்சிகளாகவும் தொடர்ந்து கீறல் விழுந்த ரெகார்ட் போல ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. 

எந்த சானலை மாற்றினாலும், சற்று முன்னே பின்னே, ஏற்கெனெவே பார்த்த அதே காட்சிகள் தான் வரும் என்பதும், தலைப்பு மட்டுமே மாறியிருக்கும் என்பதும் தெரிகிறது. தெரிந்த பிறகும், அதற்குப் பின்னாலும் அதையே பார்த்துக் கொண்டிருந்தோமானால், அது முதலில் வழக்கமாக ஆகிறது. 

கவனிக்காமல் அப்படியே தொடர்ந்துகொண்டே இருந்தால் பழக்கமாகவும் ஆகி, நம்மை அடிமைப் படுத்தி விடுகிறது பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதில் தான் மனிதனுடைய தேக்கம் தொடங்குகிறது.
ஆக, நாம் வழக்கப் படுத்திக் கொண்டிருப்பதில் எது தேவையற்றது என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அவசரம், அவசியத்தை ஒட்டி எதை முதலில் செய்ய வேண்டும், அடுத்ததாக என்ன  என்பதை வரிசைப் படுத்தித் தீர்மானிப்பதுதான் அடுத்துச் செயல் படுவதற்கான முதல்படி. 

எந்த ஒரு காரியத்தையும் அப்புறம், அல்லது நாளைக்கு என்று தள்ளிப் போடாமல், அதனதன் முக்கியத்துவத்தை ஒட்டி உடனேயோ, அடுத்தோ செய்து முடித்து விட்டு, அதற்கு அப்புறம் மிஞ்சுகிற நேரத்தைப் பொழுது போக்குவதற்காக செலவிடுவோமேயானால் நம்முடைய வாழ்க்கையில் குறிப்பிட்டு உணரக்கூடிய நல்லதொரு மாற்றத்தைக் காண முடியும்.  


இது தான் நேர மேலாண்மை! கிடைத்திருக்கும் ஒவ்வொரு வினாடியையும்  பொன்னாக்குகிற வித்தையும் இது தான்! உண்மையான ரசவாதம்!

Time Management என்று இன்றைக்கு நிர்வாக இயலில் சொல்லப் படும் கோட்பாடு, மிக மிக எளிமையானது. எல்லோராலும் செலவே இல்லாமல் உடனடியாகக் கடைப் பிடிக்க முடிவதும்,வீணாகப் போய்க் கொண்டிருக்கிற நேரத்தைப் பயனுள்ளதாகவும், நிறைவானதாகவும் மாற்றக் கூடிய வல்லமை உடையது. 


இந்த ஒத்திப் போடுகிற அல்லது தள்ளிப் போடுகிற வழக்கம்எப்படி என்னென்ன விதங்களில் ஆரம்பிக்கிறது என்று பார்க்கும் போது சில காரணங்கள் இப்படித் தெரிகின்றன,

முதலில் நமக்கு நல்ல மூடு இருக்கும்போது, அப்புறம் சரியான நேரத்தில் செய்வது என்று காத்திருப்பதுபோல ஒரு பாவனையில் ஆரம்பிக்கிறது. உண்மையில், மூடு இல்லை என்பது நமக்கு இருக்கிற தயக்கம் அல்லது நாம் தயாராக இல்லை என்பது  மட்டுமே!


முடிவெடுப்பதில்  தயக்கம், எப்படி ஒரு சரியான தீர்மானம் அல்லது முடிவுக்கு வருவது என்பதில் தெளிவின்மை, போதிய அளவு திறமையை வளர்த்துக் கொள்ளாதது இப்படி.

அமைப்பு ரீதியிலான, தெளிவான திறமை, பார்வை, பயிற்சி இல்லாதது.

எதையும்  முழுமையாக, குறையே இல்லாமல் செய்யவேண்டும்-அது முடியாவிட்டால் செய்யாமலேயே இருந்துவிட வேண்டும் என்று தத்துவம் பேசிக் கொண்டு, என்னிடம் சரியான  பயிற்சியோ சாதனங்களோ எதுவுமில்லை, அதனால் இப்போதைக்கு நான் இதைச் செய்வதாக இல்லை என்கிற மனோபாவம்..தத்துவம் என்றால் முழுமையாகத் தெரிந்துகொள்வது. என்ன காரணமோ, தத்துவம் என்பது இங்கே  தூங்கி வழிகிற தன்மையைக் குறிப்பிடுவதாகவே ஆகிப்போனது!

இப்படி எதோ ஒன்று அல்லது அதற்கு  மேற்பட்ட வடிவங்களில், அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே என்பது வழக்கமாகி, முற்றிப் பின்பு பழக்கமாகவும் மாறிவிடுகிறது.

இந்த விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டால், மூன்றே படிகளில், சோம்பேறித்தனத்துக்கு  இடம் கொடுக்கும் வழக்கங்கள் எவை எவை என்று பார்த்துக் களைவதில் ஆரம்பித்து, ஒத்திப்போடுகிற அல்லது அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே என்பது அறவே இல்லாமல் பண்ணிவிட முடியும்!

என்னவென்று பார்க்கலாமா?


முதலாவதாக, சோம்பேறித்தனம் தொற்றிக் கொள்ளாமல் இருக்கிறோமா என்பதை அவ்வப்போது, நம்முடைய நேரம் என்னென்ன விதத்தில் செலவாகிறது, என்ன வரிசையில் செலவாகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான், தள்ளிப் போடுவது என்ற வியாதி நம்மிடத்தில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கிறதா என்பதையே புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, ஆராய்ந்து சோதித்துப் பார்த்ததில், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப்போடுகிற நினைப்பு எதனால் எழுகிறது என்பதைக் கவனமாகப் பார்க்கப் பழக வேண்டும்.

மூன்றாவதாக, முதலிரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டால், நோய் நாடி நோய்முதல் நாடி என்று, நோய்க்கான அறிகுறிகளும், எதனால் நோய் வந்தது என்பதும் தெரிந்துவிடுகிறது! அப்புறம் என்ன, நோயைக் களைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை
செய்வதற்கு ஆரம்பித்து விடவேண்டியதுதான்!

ஆக மூன்றே படிகளில், ஒத்திப் போடும் கெட்ட பழக்கத்தைக்
களைந்துவிடலாம்! என்ன சொல்கிறீர்கள்!
oooOooo

ஈரோட்டில், நாளை பிற்பகல் பதிவர்கள்-வாசகர்கள் சங்கமமாக கூடுகிறார்கள்! கொஞ்சம் விரிவாகவே நடத்திவிட விடவேண்டுமென்ற முனைப்போடு செயல்படுகிற அமைப்புக் குழுவினருக்கும், சங்கமத்தில் சங்கமிக்கும் பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நிறைய விஷயங்களைத் தொட்டுப் பேசவேண்டும் என்ற ஆசையோடு நிகழ்ச்சி நிரலைத்  தயாரித்திருக்கிறார்கள். மூன்றரை மணி நேரத்திற்குள் அத்தனை விஷயங்களையும் தொட்டு விட முடியுமா என்பது ஆச்சரியத்துடனான கேள்விக் குறியாக இருந்தாலுமே, வித்தியாசமான நிகழ்ச்சியாக நடத்தவேண்டும் என்ற துடிப்போடு இருப்பது புரிகிறது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம், நிரல் மற்ற  விவரங்களுக்கு இங்கே!

நினைவூட்டல் - பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம்
13 comments:

 1. நண்பர் சோம்பேறி (இப்பெல்லாம் இவர் தளத்தில் எழுதுவதில்லை)சொல்றமாதிரி இன்றைய வேலையை நாளைக்கு ஏன் செய்யனும், நாளை மறுநாள் இருக்கும்போதுன்னு. எனக்கும் இந்தப்பிரச்சனை உண்டு பாஸ்.

  ReplyDelete
 2. ஆஃபிஸ் வேலைகளை பெண்டிங் வைக்க பிடிக்கவில்லை. வேலை இருந்தால் லேட் அவர்ஸ் ஆஃபிஸ்ல இருந்து முடிச்சிட்டு போறேன். ஆனால் அதுவே சொந்த விஷயங்களில் சோம்பறித்தனம் அதிகமாகிறது. அறைக்குத் திரும்பினால் அவ்வளவுதான்.

  ReplyDelete
 3. வாருங்கள் நவாஸுதீன்!

  பழக்கங்களின் அடிமையாகவே இருந்துவிடுகிற தன்மை நம் அனைவருக்குமே பொதுச் சொத்து! அந்த வார்த்தையிலேயே ஒரு லிங்க் இருக்கிறது, பழக்கத்தின் அடிமையாகவே இருந்துவிடத் தவிக்கும், மாற்றங்களைக் கண்டு அஞ்சி நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிரேனே என்று கெஞ்சும்,மிருகத்தன்மையில் இருந்து விடுபடத் தயங்கும் மனித சுபாவம் குறித்து புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்து ஸ்ரீ அன்னை சொல்லும் ஒரு அற்புதமான செய்தியை அங்கேயே படிக்க முடியும். வெறும் சோம்பேறித்தனம் என்பது tip of the iceberg மட்டும் தான்!

  உண்மை அதை விடப் பெரியது, சீரியசானதும் கூட!

  முனைவர் கந்தசாமி ஐயா, வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 4. இப்பதிவு தனிப்பட்ட வகையில் மாற்றி கொள்ள உதவி இருக்கிறது நன்றி.

  ReplyDelete
 5. ஏதோ ஒரு வகையில், இங்கே எழுதப்படுவது உபயோகமாக இருக்கிறது என்று சொல்லும் முதல் பின்னூட்டம் உங்களுடையது! மிகவும் நன்றி!

  ReplyDelete
 6. Good one Krishnamoorthy Sir.

  நான் பாடலின் வரிகளால் படிக்க ஆரம்பித்தேன். கண்ணதாசன் வரிகளுக்கு உங்கள் ஊர் டி.எம்.எஸ். குரலால் கிடைத்த நல்ல பாட்டு இது.

  பாடலையும் போஸ்ட்போநிங் என்று இரண்டையும் நன்றாக கலந்து புத்தி புகட்டும் நல்ல கருத்துக்கள்.

  எங்களுக்கு ஞாயிறு இப்போது தான் விடிந்துள்ளது. அலுவலக வேலை தள்ளிபோடாமல், குளித்து சரணம் சொல்லி உங்களால் ஆரம்பிக்கறேன் !!

  நன்றி

  - சாய்ராம் கோபாலன், நியூ ஜெர்சி, USA

  ReplyDelete
 7. நான் பாடலின் வரிகளால் படிக்க ஆரம்பித்தேன். கண்ணதாசன் வரிகளுக்கு உங்கள் ஊர் டி.எம்.எஸ். குரலால் கிடைத்த நல்ல பாட்டு இது.

  பாடலையும் போஸ்ட்போநிங் என்று இரண்டையும் நன்றாக கலந்து புத்தி புகட்டும் நல்ல கருத்துக்கள்.

  எங்களுக்கு ஞாயிறு இப்போது தான் விடிந்துள்ளது. அலுவலக வேலை தள்ளிபோடாமல், குளித்து சரணம் சொல்லி உங்களால் ஆரம்பிக்கறேன் !!

  நன்றி

  - சாய்ராம் கோபாலன், நியூ ஜெர்சி, USA

  ReplyDelete
 8. வாருங்கள் சாய்ராம் கோபாலன்!

  ஐயப்பனுக்காக விரதம் எல்லாம் இருக்கிறீர்கள் போல!

  டி எம் எஸ் என்று இல்லை, வேறு எந்தக் கழுதை பாடியிருந்தாலுமே, கண்ணதாசன் கவிதை வரிகளுக்காகவே, இந்த வரிகளில் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் வெளிப்படுகிற வாழ்வியல் யதார்த்தத்துக்காகவே, இந்தப் பாடல் ஜெயித்திருக்கும் என்பது எனது கருத்து. டி எம் எஸ் மாதிரிப் பாடகர்களுக்குத் திறமையே இல்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கும் டி எம் எஸ் பாடிய பாட்டுக்களைப் பிடிக்கும் என்பது வேறு! அவர்களுடைய திறமை, இசை அமைப்பாளர்களுடைய தயவில் மட்டுமே பிழைத்திருக்கும் ஒன்று.

  தன்னுடைய குரல் வசீகரத்தில் ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள் என்ற பலத்தில் இசையமைப்பாளர்களை மட்டுமல்ல, போட்டியாக வந்தவர்களையும் விரட்டியடிக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்த ஒரே ப்ளேபாக் சிங்கர் லதா மங்கேஷ்கர் தான்! பாடும் திறமையை விட, போட்டியை முளையிலேயே கிள்ளி விடுகிற தந்திரம் அம்மையாரிடம், இருந்தது! சிவசேனாக்காரர்கள் செய்ய முடியாததை, அம்மையார் தனது துறையில் செய்து காட்டினார்.

  இங்கே தமிழ்நாட்டில் தியாகராஜ பாகவதருக்கு மட்டுமே அந்த அளவு வசீகரம் இருந்தது. அவர் கதையும் ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை!

  ReplyDelete
 9. Latha Mangeshgar was amazing to even get her own sister in bay !

  ReplyDelete
 10. அக்கா-தங்கைகளுக்குள் நடந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருந்தாலும், இரண்டு பேருமாகச் சேர்ந்துகொண்டு தங்களுக்குப் போட்டியாக வருகிறவர்கள் என்று தோன்றினவர்களை எல்லாம் ஃபீல்டில் நிற்கவிடாமல் துரத்தியடித்த சாமர்த்தியம், சிவேனாக்காரர்களுக்குக் கூட வராது!

  ReplyDelete
 11. //கிருஷ்ணமூர்த்தி said...

  டி எம் எஸ் என்று இல்லை, வேறு எந்தக் கழுதை பாடியிருந்தாலுமே, கண்ணதாசன் கவிதை வரிகளுக்காகவே, இந்த வரிகளில் சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் வெளிப்படுகிற வாழ்வியல் யதார்த்தத்துக்காகவே, இந்தப் பாடல் ஜெயித்திருக்கும் என்பது எனது கருத்து. டி எம் எஸ் மாதிரிப் பாடகர்களுக்குத் திறமையே இல்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கும் டி எம் எஸ் பாடிய பாட்டுக்களைப் பிடிக்கும் என்பது வேறு! அவர்களுடைய திறமை, இசை அமைப்பாளர்களுடைய தயவில் மட்டுமே பிழைத்திருக்கும் ஒன்று.//

  கெளரவம் படத்தில் வந்த "கண்ணா நீயும் நானுமா" பாடலை டி.எம்.எஸ். வெளியூர் போய் இருக்கிறார் என்று எம்.எஸ்.வி சார் படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்று தானே பாடி ரெகார்ட் செய்து விட்டாராம்.

  அதை சிவாஜியின் நடிப்புடன் சேர்த்து பார்க்கும்போது எம்.எஸ்.வி அவர்களுக்கே சகிக்கவில்லையாம் !! இது நான் கேள்விப்பட்ட ஒன்று. உண்மையா பொய்யா தெரியாது ! அதனால் இந்த பாடல் மட்டும் சிவாஜி நடித்து விட்டு போனபின் டி.எம்.எஸ் பாடிய ஒரே பாடல் என்று சொல்லுவார்கள் !

  எம்.எஸ்.வி நிறைய நல்ல பாடல்களை தன் குரலால் செம்மைப்படுத்தி இருக்கிறார்.

  இருந்தாலும் எந்த பாடலை எந்த பாடகருக்கு தரவேண்டும் என்பதும் இசை அமைப்பாளருக்கு தெரியும், அதே போல் தான் நான் மேலே சொன்னதும்.

  டி.எம்.எஸ் இருந்த காலத்தில் தான் பி.பி.எஸ் போன்றோரும் திறமையான பாடல்களை கொடுத்துள்ளார்கள். டி.எம்.எஸ் அவர்களுக்கு மிக பெரிய உந்துக்கோல் அவருடைய குரல் அப்போதைய சிவாஜிக்கும், எம்.ஜி.யாருக்கும் பொருந்தியது மட்டும் அல்லாமல் ஜெய்ஷங்கர் முதல் நாகேஷ் வரை எல்லோருக்கும் பாடியது தான் !

  - சாய்

  ReplyDelete
 12. வாருங்கள் சாய்ராம் கோபாலன் சார்!
  இதை ஒரு பெரிய விவாதமாக எடுத்துச் செல்ல ஒன்றுமே இல்லை என்றாலும், ஒன்றிரண்டு விஷயங்களைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது.

  முந்தைய பதிலில் சொன்ன மாதிரி, இசையமைப்பாளரையும் மீறித் தனது குரல் வளத்தால் ஜெயித்த ஒரே பாடகர் தமிழில் பாகவதர் மட்டும் தான். அந்தக் கால கட்டத்தில், கதைக்கோ, வசனம் பேசும் திறமைக்கோ அல்லது இப்போது விவாதிக்கப் படுகிற மாதிரி தொழில் நுட்பமோ, சுத்தமாக எடுபடாத காலம்! படத்தில் எத்தனை பாட்டு, என்னென்ன ராகம் என்பது மட்டுமே பேசப்பட்ட காலம்.

  அதற்கப்புறம், சினிமா என்பது பாடகர்களின் மீடியம் மட்டுமே அல்ல, கொஞ்சம் கதை, கொஞ்சம் பாட்டு கொஞ்சம் டான்ஸ் என்று ஒரு கதம்பமாக இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதில், டி எம் எஸ் கொஞ்சகாலம் அதிர்ஷ்ட வசமாக நீடித்தார் என்பதைத் தவிர, பாடகருடைய திறமை, அவரை இசையமைப்பாளர் பயன்படுத்திக் கொள்வது எல்லாமே அப்புறம் தான்! கொஞ்சம் ஏற்ற இறக்கங்களில் வித்தியாசப்படுத்தி, அந்த நேரத்து இரண்டு துருவங்களுக்கும் அவர் பின்னணி பாடியது, ஹிட்டானதால் எம்ஜியார், சிவாஜி இருவருக்குமே அவர் பாட முடிந்தது. உண்மையைச் சொன்னால், அவர்களுக்குக் கிடைத்த புகழும் பெயரும் இவருக்கும் கிடைத்தது. அதிக வெளிச்சம் பட்டதாலேயே, அதிகத் திறமை உள்ளவர் அவர் மட்டுமே என்று சொல்லி விட முடியுமா என்ன?

  அவருடைய வெற்றி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிற்கக் கூடியதாகிப் போனது, இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே சேர்த்துச் சொல்வது தான்! எம் எஸ் வி- ராமமூர்த்தியை விட கே.வி.மகாதேவன் திறமையான இசையமைப்பாளர் தான்! ஆனால், திரையுலகப் பிரபலங்களுக்கு, இரட்டையர்கள் தான் வேண்டியிருந்தது. அதிகம் அறியப்படாத வேதா கூட மிகத் திறமையான இசையமைப்பாளர் தான்! அவர் இசையமைப்பில் கூட டி எம் எஸ் சில அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார். அவை நினைவுக்கு வருகிறதா அல்லது எம்ஜியார், சிவாஜி இருவருக்காகப் பாடினது நினைவுக்கு உடனே வருகிறதா என்பதை ஐந்தே வினாடிகளில் உங்களால் சொல்ல முடிந்தால், டி எம் எஸ் சந்தேகமில்லாமல் ராக தேவனாகக் கூட இருக்க முடியும். ஆனால் அவருக்கு அந்த அதிர்ஷ்டம் எம்ஜியார் சிவாஜியோடேயே போய் விட்டது!

  ராசியில்லா ராஜா என்று பாட வைத்து, தன்னை ராசியில்லாத ராஜாவாகவே வீட்டுக்குள் உட்காரவைத்து விட்டார் என்று டி. ராஜேந்தரைப் பற்றி மேடை தவறாமல் இன்றைக்கும் டி எம் எஸ் புலம்பிக் கொண்டிருப்பது உங்களுக்குத்தெரியுமா?

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!