தேவை! ஒரு நல்ல தலைமை....!


தினமணி தலையங்கம் :: தலைமைக்கான தேடல்...!


Last Updated : 31 Aug 2011 05:09:40 AM IST


அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதமும் அதைச் சார்ந்து நாடு தழுவிய அளவில் எழுந்த மக்கள் போராட்டமும் அடங்கி விட்டிருக்கிறது. லோக்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்ட பிறகு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படும். இதனாலேயே பிரச்னை முடிந்துவிட்டது என்றோ, லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதாலேயே ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்றோ அர்த்தமில்லை.

"ஊழலை ஒழிக்கவே முடியாது',

"அண்ணா ஹசாரேயின் இயக்கம் வெறும் தொலைக்காட்சிச் சேனல்களால் பெரிதுபடுத்தப்பட்ட இயக்கம்',

"இந்த மக்கள் எழுச்சியின் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்தன',

"அண்ணா ஹசாரேயும் குழுவினரும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர்கள்',

"மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவது என்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது, நாடாளுமன்றத்தைக் கொச்சைப்படுத்துவது  

இப்படி இன்னும் என்னென்னவோ விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரவர் பார்வை அவரவருக்கு. ஆனால், மக்கள் ஊழலுக்கு எதிராக ஒருமித்த குரலில் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கத் தெருவில் இறங்கிப் போராடத் தயாராகி விட்டனர் என்பதுதான் யதார்த்த உண்மை.

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு, லோக்பால் அமைப்பு ஏற்படுவதால் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடாது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அப்படி ஓர் அமைப்பு ஏற்படுவதுகூட நமது அரசியல்வாதிகளுக்கு ஏற்புடையதாக இல்லையே என்பதுதான் மக்களின் ஆத்திரத்துக்குக் காரணம். காவல்நிலையங்கள் இருப்பதாலும், சிறைச்சாலைகள் உள்ளதாலும் குற்றங்கள் குறைந்து விடுகிறதா என்ன? அதற்காக, காவல் நிலையமோ, குற்றங்களைக் கண் காணிக்கவும் தடுக்கவும் தண்டிக்கவும் சட்டமே வேண்டாம் என்றால் எப்படி?

தொலைக்காட்சிச் சேனல்களின் முனைப்பினால்தான் இந்தப் போராட்டம் வலுப்பெற்றது என்பது ஏற்புடைய வாதமல்ல. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டு சக்தி வாய்ந்த தொலைக்காட்சிச் சேனல்கள் அன்றைய ஆளும்கட்சிக்குச் சாதகமாகப் பிரசாரத்தை முடுக்கி விட்டன. மக்களை ஈர்க்க முடிந்ததா இல்லை ஏமாற்றத் தான் முடிந்ததா?

ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவலுத்து வரும் இந்தப் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஊடகங்கள் உந்தப் பட்டன.  
ஊடகங்களின் ஆதரவு இல்லாமல் இருந்தாலும், இந்தப் போராட்டம் வலுப்பெற்றிருக்கும்.

ஒரு வார இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல, "அண்ணா ஹசாரே ஓர் எளிய மனிதர். அவர் ஒரு பெரிய சித்தாந்தவாதி அல்ல. அவர் ஒரு காந்தியும் அல்ல. நிச்சயம் இன்னொரு ஜெயப்பிரகாஷ் நாராயணனும் அல்ல''.

அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதுபோல, அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர்கள் சிறுபான்மைக் கூட்டமாக இருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தில் அவர்களும் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். ஒரு மகத்தான மாற்றத்துக்கான அடித்தளத்தை இந்தப் போராட்டம் நிச்சயமாக உருவாக்கும். அதைத்தான் நாடாளு மன்றத் தீர்மானம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை எதிர்பார்ப்பு, தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது. இங்கே தேர்தல் நடக்கிறது, பிரதிநிதிகள் இருக்கிறார்கள், பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கிறது. அமைச்சரவையும் பிரதமரும் நிர்வாகத்தை நடத்துகிறார்கள். நாடாளுமன்றம் கூடுகிறது, பேசுகிறது, கலைகிறது. ஆனால், இவர்கள் யாரும் மக்களின் உணர்வுகளைப் பிரதி பலிப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை. தேர்தல் நடப்பதால் மக்களின் கோபம் வாக்குச் சாவடிகளில் பிரதிபலித்து, தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாற்றத்தால் தணிந்து விடுகிறது.

அண்ணா ஹசாரே இயக்கத்துக்கு தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், புவனேஸ்வரம் போன்ற நகரங்களில் இருந்த அளவுக்கு உத்வேகமும் உற்சாகமும் சமீபத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்த கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாமில் இல்லாமல் போனதற்கு தேர்தலும் ஆட்சி மாற்றமும் அவர்களது கோபத்தைச் சற்று தணித்திருந்தது தான் காரணம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் மெகா ஊழல்களும், அந்த ஊழல்களை மறைப்பதற்கு மத்திய அரசு எடுத்துக் கொண்ட அக்கறையும் தான் மக்களை இந்த அளவுக்கு விரக்தியின் விளிம்புக்கே அழைத்துச் சென்றிருக்கிறது.

ஒருவேளை அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதமும் லோக்பால் மசோதா பிரச்னையும் ஏற்படாமல் போயிருந்தால், இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்களில் தீவிரமடைந்திருக்கும் தீவிர வாதம் மேலும் பல மாவட்டங்களுக்கும் பரவி இருக்கக்கூடும்.

அரசு அலுவலகங்களிலும், காவல்துறையிலும் காணப்படும் சிறு லஞ்சங்கள்தான் சராசரி குடிமகனை அதிகமாக அலட்டுகிறது. ஆனால், 2ஜி-யிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், கடந்த பாஜக தலைமையிலான ஆட்சியில் நடந்த யு.டி.ஐ. முறைகேடு, சவப்பெட்டி ஊழல் போன்றவைகளிலும் கொள்ளைபோன பல கோடிகள் அந்தக் கோபத்தைக் கொந்தளிப்பாக மாற்றிவிட்டது.

வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்தது போல இன்றைய அரசியல் வாதிகளின் கொள்ளைக்கார ஆட்சியிலிருந்தும் விடுதலை கிடைக்க வேண்டும் என்று சராசரி இந்தியர் ஆசைப் படுகிறார் என்பது தெரிகிறது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது நமது நிர்வாக இயந்திரம். ஒழுக்கமற்ற அரசியல் தலைமை. ஊழல் உருவாவதற்கான காரணம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது.

இதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். லோக்பால் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் நிர்வாக சீர்திருத்தம், நீதித் துறை சீர்திருத்தம்.

அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதம் முடிந்திருக்கிறதே தவிர, சராசரி இந்தியரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தலைமைக்கான தேடல் இப்போது தான் தொடங்கி இருக்கிறது.

பொது வாழ்க்கையில் நேர்மையும் தனிமனித வாழ்க்கையில் தூய்மையும் உள்ள ஒரு தலைமைக்கான தேடல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதுதான் சராசரி இந்தியனின் பிரச்னைக்கும், வருங்கால இந்தியாவின் வலிமைக்கும் தீர்வாக இருக்க முடியும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------

தினமணி தலையங்கம் பிரச்சினையின் ஆணிவேரைத் தொட்டு எழுதப் பட்டிருப்பதை, இதில் பெயர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தாலே புரிந்துகொள்ளக் கூடியதுதான்! 

நேரு காலத்தில் இருந்தே பொதுவாழ்க்கையில் நேர்மையான, தனிமனித ஒழுக்கமுள்ள, பொறுப்பாக செயல் படத்தெரிந்த ஒரு தலைமைக்காக இந்த தேசம் தவமாய்த் தவமிருக்க ஆரம்பித்து விட்டது.

நேருவிடமிருந்த வசீகரம்,அவரைத் தகுதியுள்ள தலைவராக மாறக் கொஞ்சம் கூட உதவவில்லை! சமாதானப் புறாவாகக் காட்டிக் கொண்டு சர்வதேசப் புகழுக்காக ஏங்கிய நேருவின் போக்கு, தேசத்தை இன்றைய தேதி வரை பல பிரச்சினைகளில் தள்ளி விட்டிருக்கிறது. 

காஷ்மீர் பிரச்சினை நேருவின் தனிநபரின் அகந்தை, இந்த தேசத்துக்கு விட்டுச் சென்றிருக்கிற சீ(ழ்)தனம்!  

அவருக்குப் பின் பதவியேற்ற அவருடைய மகள் இந்திரா,மிரண்ட மாடு எல்லாவற்றையும் முட்டிச் சாய்க்கிற மாதிரியே,தன்னுடைய பாதுகாப்பாற்ற உணர்வினால் எல்லாவற்றையும் சந்தேகப்பட்டு, எல்லாவற்றையுமே நாசப்படுத்திய நபராகிப் போனார். 

அவரைத்தொடர்ந்து அரியணை ஏறிய ராஜீவ் காண்டி, கொஞ்சம் நம்பிக்கை ஊட்டியதென்னவோ உண்மை!ஆனால் அவரைச் சுற்றியிருந்த ஆலோசகர்கள், துதிபாடிகள் கூட்டம், ராஜீவை செயல்பட முடியாதவராக்கி வைத்தது. அவருடைய இத்தாலிய மனைவியின் உறவினர்கள் ஊழலில் ஈடுபட்டதைத்தடுக்க அவர் ஒன்றுமே செய்யவில்லை அல்லது முடியவில்லை.

ராஜீவின் கொடூரமான மரணத்தைத்தொடர்ந்து, இத்தாலிய மருமகள், தியாக சிகரமாகத் தன்னைக் காட்டிக் கொள்ள நடத்திய நாடகங்கள் இன்றைக்கு ஒவ்வொன்றாக சந்திக்கு வந்து சிரித்துக் கொண்
டு ருக்கின்றன.அவரை ஒதுக்கிவிட்டு, தன்னுடைய முகத்தைக் காட்டி ஒட்டுக் கேட்டால், பத்து ஓட்டுக் கூடத்தேறாது என்பதைப் புரிந்து கொண்ட துதிபாடிகள் மட்டுமே இன்றைக்குக் காங்கிரசில் நிரம்பி ருக்கின்றனர்!

இந்தப்பக்கங்களில், இந்தியா இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை அத்தனைக்கும் காரணம், ஒரு வலிமையான தெளிவாக முடிவெடுக்கத் தெரிந்த அரசியல் தலைமை இல்லாமல் இருப்பது தான் என்பதை பல முறை பேசியிருக்கிறோம்.அதற்கும் மூல காரணம், எங்கே எது நடந்தால் எனக்கென்ன என்ற நம்முடைய அலட்சியமான மனோபாவம் தான் என்பதையும் பேசியிருக்கிறோம்.

தலைவர்களாக இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் தருணங்களில்,அடுத்த வரிசையில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம். ஒட்டு மொத்தமுமே ஒட்டுண்ணிகளாக இருக்கும்போது,வேரோடு வெட்டிச் சாய்த்து விடுவதைத் தவிர வேறு வழி உதவாது.

காளிமுத்து சொன்னது மாதிரி கருவாடு  மீனாகாது! 
அல்லது 
கருணாநிதி சொன்னது மாதிரி, காகிதப்பூ மணக்காது! 

அவ்வளவுதான்!

முதல்வர் மனதுவைத்தால்......!



எவரெவரோ எது எதற்காகவோ தமிழக முதல்வர் மனது வைத்தால் மட்டுமே நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! தமிழ்நாடு வளம் பெறுவதற்காக, மணல் கொள்ளையைத்  தடுப்பதற்காக, நமது நீராதாரங்கள் பாதுகாக்கப்படுவதற்காக, தோழர் ஆர் நல்லகண்ணு குரல் கொடுத்திருக்கிறார். தமிழக முதல்வர் மனது வைத்தால் நிறைவேறக்கூடியதாக இருக்கும் என்று தோழரும் சொல்கிறார்! கொஞ்சம் செவிமடுத்துக் கேட்போமே!   

"உணவெனப்படுவது நிலத்தொடு நீரே"

தோழர் ஆர்.நல்ல கண்ணு

தினமணியில் எழுதிய கட்டுரை

First Published : 26 Aug 2011 01:32:01 AM IST


தினமணி (3.8.2011) இதழ் "வாசகர் அரங்கம்' பகுதியில் வெளியான இருபது கடிதங்களையும் படித்தேன். தமிழ்நாட்டின் ஆறுகளிலிருந்து மணல் கொள்ளை போகும் அவலங்களைக் கண்டு வாசகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

 ÷"சாயப்பட்டறை பிரச்னையில் முதல்வர் நேரடி கவனம் செலுத்தியதைப்போல், மணல் கொள்ளையையும் தடுத்து நிறுத்த உறுதியான ஆக்கப்பூர்வமான நேரடி நடவடிக்கைகளை எடுத்தால் மணல் கொள்ளை கட்டுக்குள் வரலாம்'' என்று ஒருவர் எழுதியிருந்தார்.

 ÷தமிழ்நாட்டில் 33 ஆற்றுப் படுகைகள் உள்ளன. அத்தனை படுகைகளிலும் கடந்த பத்தாண்டுகளாக அளவுக்கு அதிகமான ஆற்று மணல் அள்ளப்பட்டு விட்டது. உயிர்ப் பிராணிகள் சில கொடூர மிருகங்களால் கடித்துக்குதறிச் சிதறிக் கிடப்பதைப் போல அழகான ஆற்றுப் படுகைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. தேவைக்கும் மாறாக அதிக லாபத்துக்கு விற்கப்படும் பொருளாகக் கருதப்படுவதால் சட்ட விதிகள் மீறப்படுகின்றன.

 ÷சட்ட விதிகள்:

÷1. அரசின் சட்ட விதிகளின்படி மணல் என்பது சிறு கனிமமாகக் கருதப்படுகிறது. ஆற்றின் கரைகளிலிருந்து உள்புறமாக 50 மீட்டர் பாதுகாப்பு இடைவெளிவிட்டே மணல் குவாரி அமைக்கப்பட வேண்டும்.

 ÷2. ஆற்றின் மேல்பரப்பிலிருந்து 1 மீட்டர் ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்கப்பட வேண்டும்.

 ÷3. 1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதி 36ஏ(6)ன் படி குவாரி செய்யும் பணிக்கு எந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. அரசின் அனுமதி பெற்ற பின்னரே கனரக எந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

 ÷4. ஆற்றின் இயற்கையான நீர்ப்போக்கில் மாற்றம் ஏற்படா வண்ணமும், ஆற்றின் கரைகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படா வண்ணமும் மணல் எடுக்க வேண்டும்.

÷5. மேற்படி பகுதியில் மணல் எடுப்பதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் மணல் எடுக்க வேண்டும்.

 ÷6. தமிழ்நாடு குடிநீர் வாரியத்தால் பராமரிக்கப்படும் நீர் ஆதார அமைப்புகளுக்கு விதிகளின்படி 500 மீட்டர் சுற்றளவு கொண்ட குறைந்த பட்ச பாதுகாப்பு இடைவெளி கண்டிப்பாக விடப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் மேற்படி நீர் ஆதார அமைப்புகளுக்கு விடப்படும் பாதுகாப்பு இடைவெளிப் பகுதியில் மணல் குவாரி செய்யக் கூடாது.

 ÷7. மணல் எடுக்கும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படா வண்ணம் மணல் எடுக்க வேண்டும்.

 ÷8. காலை 8 முதல் மாலை 6 மணி வரைதான் மணல் எடுக்க வேண்டும்.

 ÷9. ஒரு லோடு மணலுக்கு ரூ.200 கட்டணமாகவும், வரி ரூ.26-ம் கட்ட வேண்டும்.


 ÷மேற்படி இவ்விதிகளை மீறாமலிருக்க மாதம் ஒருமுறை சம்பந்தப் பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித் துறை நிர்வாகப் பொறியாளர், மண்ணியல் அதிகாரி மற்றும் பல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெறும். தவறு நடந்தால் கண்காணிக்கும், முறைப்படுத்தும் பொறுப்பு இவர்களுடையது என அரசின் விதிமுறைகள் அறிவுறுத்துகின்றன.


 ÷இத்தனை விதிகளும் காவல் கண்காணிப்புகளும் இருந்தாலும் தடையின்றி மணல் கொள்ளை நடந்து வருகிறது.

தோட்டக் காவல் காரனும் கொள்ளைக்காரனும் இணைந்துவிட்டால் விடியவிடியக் கொள்ளை அடிக்கலாம் என்பது நாட்டு வழக்கு.

÷சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் 2010 அக்டோபரில் தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

 மதுரை நீதிமன்றத்தின் அறிவுரைப்படி நிபுணர்குழு அமைக்க உத்தரவிடப் பட்டது. புவியியல் ஆய்வாளர், நீதிமன்றப் பதிவாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

÷நீதிபதி பானுமதி, நீதிபதி நாகமுத்து ஆகியோர் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட அக்குழு பாதிக்கப்பட்ட தாமிரபரணி மணற்கொள்ளைப் பகுதிகளை நேரடியாக ஆய்வுசெய்து ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

 ÷அந்த அறிக்கையின்படி தாமிரபரணி ஆற்றுப்படுகையின் மேலே உள்ள மணல் மட்டும் எடுக்கப்படவில்லை, மாறாக, மிக ஆழமாக, அகலமாக மணல் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது என்றும், இதனால் ஆங்காங்கே பெரும் பெரும் பள்ளங்கள் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த விதிகளுக்கு மாறாக மணல் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. நதி முழுவதும் மேடுபள்ளங்களாக ஆக்கப்பட்டு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, செயற்கை நீர்த் திட்டுகள் போன்று காணப்பட்டன.

 ÷இயற்கை ஊற்றுகள் அழிக்கப்பட்டிருந்தன. இனிவரும் 5 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதிகளில் மண் எடுக்க அனுமதிக்கக்கூடாது. நெறிமுறைகளுக்கும் விதிமுறைகளுக்கும் மாறாக 3 அடிக்கு மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு மணல் எடுக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் அந்த நிபுணர்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.


 ÷மணற் குவாரிகளில் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்வதாகவும் இதற்கான விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிபடத் தெரிவித்திருந்தது.

 ÷இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் மேல் முறையீடு செய்து கொண்டதற்கு இணங்க, மேற்படி தீர்ப்பைத் தாற்காலிக அனுமதியுடன் செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக சில மணற்குவாரிகள் மூடப்பட்டனவே தவிர, குறிப்பிட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் எப்போதும் போல மணல் அள்ளப்படுவது குறைந்ததாகத் தெரியவில்லை
.
 ÷2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் அமைக்கப் பட்ட மாநில அமைப்பு செயல்பட, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிபதி ஜோதிமணி (ஜூலை முதல் வாரத்தில்) ஒரு தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

 ÷தமிழ்நாடு நீங்கலாக மற்ற மாநிலங்களில் எல்லாம் பொக்லைன் எந்திரம் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளனர். கேரளத்தில் 2001-ம் ஆண்டிலிருந்தும் ஆந்திரம், மகாராஷ்டிரத்தில் 2006-ம் ஆண்டிலும் பொக்லைன் எந்திரத்தின் மூலம் மணல் அள்ளுவது தடை செய்யப் பட்டுள்ளது.

 ÷தாமிரபரணி நதியில் மணல் அள்ளும் நடவடிக்கைகளுக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்த பின்னர், பாலாற்றிலும் மணல் அள்ளுவதற்குத் தடைவிதித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது.

 ÷தாமிரபரணி, பாலாறு மட்டுமன்றி தமிழ்நாட்டில் மணல் கொள்ளை போகும் முக்கிய நதிகளான காவேரி, பவானி, அமராவதி மற்றும் பெண்ணை ஆற்றுக்கரைகளிலும் மணல் அள்ளத் தடை மற்றும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு கொண்டு வரவில்லை.

 ÷தாமிரபரணி வழக்கில் அனுமதிக்கப்பட்ட மணல் எடுப்பு என்பது 6 மாதத்துக்கு 54,417 யூனிட் அளவுதான். ஆனால், ஒரே மாதத்திலேயே 65,000 யூனிட் அளவிலான மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை பொக்லைன் எந்திரத்தைக் கொண்டுதான் எடுத்திருக்க முடியும். ஆனால், அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வெறும் 1,758 யூனிட் அளவில் தான் தாமிரபரணியில் மண் எடுக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 ÷ஒரு டிப்பர் லாரியில் 100 கன அடி மணல் ஏற்றலாம். மணல் பாடி லாரிகளில் ஒன்றரை யூனிட் வரை ஏற்றலாம். ஒரு நாளைக்குக் குறைந்தது 5 முதல் 6 யூனிட் வரை மணல் நிரப்பிக் கொண்டிருக்கின்றன, மெகா டிப்பர் எனப்படும் மணல் லாரிகள். ஆனால், அரசுக்கு 1 லாரி மணல் என கணக்குக் காண்பித்து 1 யூனிட் அளவு மண்ணுக்கு மட்டுமே பணம் தந்து விட்டுச் செல்கிறார்கள்.

 ÷மணல், மக்களின் தேவைப் பொருளாக இருக்கிறது. கட்டுமான அமைப்புகளுக்கு அடிப்படையானதாக இருந்து வருகிறது. இந்த ஆற்று மணல் தமிழ் மாநிலத்தில் கட்டட வேலைகளுக்காக மட்டும் பயன்படுத்துவதைவிட, வெளி மாநிலங்களுக்கும் பிற வெளி நாடுகளுக்கும் கடத்திக் கொண்டுபோய் விற்று வந்தார்கள். மணல் இவ்வாறு ஏற்றுமதிப் பொருளாக மாறியதுதான் மணல் கொள்ளைக்குக் காரணமாக இருக்கிறது.

 ÷வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் இயக்குநர் செயலகத்தின் அறிக்கையின்படி மாலத் தீவுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மணல் அளவு 2008-2009-ம் ஆண்டுகளில் 5.5 லட்சம் டன்னாக இருந்தது. இது 2009-2010-ம் ஆண்டுகளில் 10.5 லட்சம் டன்னாக உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ÷வெளிநாட்டுக்குக் கடத்தப்படும் இத்தகைய சட்டப்பூர்வ நடவடிக்கைகளால் நமது நாட்டின் இயற்கை வளமும் சுற்றுச்சூழல் வளமும் வெகுவாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

 ÷இத்தகைய மணல் கொள்ளைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. ஆற்றின் போக்கும் மாறுகிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. நாளாவட்டத்தில் நீர் வழித்தடங்கள் அழிக்கப்படுகின்றன.

 ÷அரசின் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதாலும், நீர்மட்டம் குறைந்து போகிறது. தொழிற்சாலை பயன்பாடுக்கான ஏற்பாடுகளும் ஆற்று நதி நீரின் பெரும்பங்கை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.

 ÷ஆற்று மணல் என்பது வெறும் கனிமப் பொருள் மட்டும் அல்ல. அது நீரைச் சுத்தப்படுத்தி நீரைச் சேமித்து வைக்கும் இயற்கை சுத்திகரிப்பு சேமிப்புக் கலன். அது செடி கொடிகள் மற்றும் பல் உயிர்களையும் பாதுகாப்பதாகும்.

 ÷தமிழ்நாட்டில் நமது முன்னோர்கள் விளைநிலங்களைப் பாது காத்தார்கள். விவசாயத்துக்கான நீரைப் பெறுவதற்காக ஆற்றைப் பராமரித்தார்கள். கரைகளைச் சீரமைத்தார்கள். குடிமராமத்துப் பணிகளை முறையாக காலாகாலத்தில் நிறைவேற்றி வந்தார்கள். ஆறு, குளங்கள் கரைகளைப் பாதுகாப்பதற்கும் மதகுகளைப் பராமரிப்பதற்கும் கரைக்காவலர்கள், லஸ்கர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள்.

 ÷மணற் பரப்பினை "தொட்டனைத்து ஊறும் மணற் கேணி' என்றும், இத்தகைய மணற் கேணிகளில் சேமிக்கப்பட்டு வரும் நீரை "நீரின்றி அமையாது உலகு' என்றும் திருக்குறள் வலியுறுத்துகிறது.

 ÷"உணவால் விளைந்தது உடம்பு. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என புறநானூற்று பாடல் அறிவித்துள்ளது.

 ÷தமிழக அரசின் 2011-2012-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீரைப் பாதுகாப்பதென்றும், பாசன வசதிகளைப் பெருக்குவதென்றும் திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

 இத்திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். கட்டுமான நடவடிக்கைகளுக்கு மணல் கொடுப்பதற்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 எல்லாவற்றுக்கும் மேலாக, மணல் நமது பயன்பாட்டுக்கும் தேவைக்கும் மட்டுமே அள்ளப்பட வேண்டுமே தவிர, வெளி நாடுகளுக்கும், அண்டை மாநிலமான கேரளத்துக்குக் கடத்தப்படுவதும், ஏற்றுமதி செய்யப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். நமக்கு நியாயமாகத் தரப்படவேண்டிய தண்ணீரைக் கூடத் தரமறுக்கிறார்கள், சகிக்கிறோம். ஆனால், நமது மணலைக் கொள்ளையடித்துப் போய் தமிழகத்தைப் பாலைவனமாக்குகிறார்களே, இது பொறுப்பதில்லை.

 ÷முதல்வர் மனதுவைத்தால் மட்டுமே நமது மணல் கொள்ளை போவது தடுக்கப்படும்!
<script type="text/javascript">
var gaJsHost = (("https:" == document.location.protocol) ? "https://ssl." : "http://www.");
document.write(unescape("%3Cscript src='" + gaJsHost + "google-analytics.com/ga.js' type='text/javascript'%3E%3C/script%3E"));
</script>
<script type="text/javascript">
try {
var pageTracker = _gat._getTracker("UA-11911750-1");
pageTracker._trackPageview();
} catch(err) {}</script>

<!-- Place this tag in your head or just before your close body tag -->
<script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script>

<!-- Place this tag where you want the +1 button to render -->
<g:plusone></g:plusone>