தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன?டம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில்  சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம் எங்கள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் இருந்தால், எதிர்க் கட்சிகளுக்கும் அதே மாதிரித்தானே என்று காமெடி செய்திருக்கிறார்.காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலவீனமே இதுதான்! வாலறுந்த நரிபோல, வால் இல்லாமல் இருப்பதுதான் அழகு என்று மற்ற நரிகளுக்கு உபதேசம் செய்ய முயன்றதைப் போல, தாங்கள் ஊழல் சாக்கடைக்குள் புதைந்து கிடந்தாலும், மற்றவர்கள் மீதும் சேற்றை வாரி இறைத்து அவர்கள் மீதும் சாக்கடை இருக்கிறதே என்று தங்களை உத்தமபுத்திரர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது காங்கிரசின் வழக்கம், பலவீனம். 
காங்கிரஸ் கட்சி இந்த தேசத்துக்கு செய்துவரும் மிகப்பெரிய துரோகம், இவர்கள் பலவீனப்படுகிற தருணங்களில்,இந்த தேசத்தையும் சேர்த்தே பலவீனப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதுதான். அரசு இயந்திரம்,  நிர்வாகம்,நாடாளுமன்ற நடைமுறைகள், நீதித்துறை, ஊடகங்கள்  என்று எல்லாவற்றையுமே காங்கிரஸ் தொடர்ந்து பலவீனப் படுத்திக் கொண்டு வருகிறது. குற்றுயிரும், குலையுயிருமாக இருந்துகொண்டே, இந்திய ஜனநாயகம் அவ்வப்போது சில நம்பிக்கைக் கீற்றுக்களையும் தந்து கொண்டிருக்கிறது என்பது ஒன்று தான் இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

இன்று ஆகஸ்ட் முதல் தேதியன்று நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர், 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் புயல்  காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதற்கொண்டு நடந்த எக்கச்சக்க ஊழல் சூறாவளியுடன் தொடங்க இருக்கும் தருணத்தில் மன்மோகன் சிங்குடைய இந்த வசனம், 'போனால் போகட்டும் போடா' என்ற விரக்தியின் வெளிப்பாடாகவே இருக்கிறது.  சோனியா குடும்பத்தின் முகமூடியாக, ஊமையாகவே இத்தனை நாள் இருந்ததில் மன்மோகன் சிங்குடைய மிஸ்டர் கிளீன் இமேஜ் சரியான அடி வாங்கியிருக்கிறது. நேற்றைய நாட்களில், இந்த மனிதரின் மீது இருந்த பரிதாபம் இன்றைக்கு  இந்த மனிதர் டம்மியாகவேனும் பிரதமர் பதவியில் இருக்க ஆசைப்பட்டே இத்தனை மோசடிகளுக்கும் உடந்தையாக இன்னும் இருக்கிறார் என்ற அளவுக்கு வெகுஜன அபிப்பிராயமாக மாறியிருக்கிறது.

ஜனங்களுடைய குரலுக்கு செவிசாய்க்காத 'ஜனநாயகப் பண்பு' காங்கிரசுடையது!காங்கிரஸ் மட்டுமில்லை, வாரிசு, குடும்ப அரசியலில் சிக்கியிருக்கும் அத்தனை கட்சிகளுமே, காங்கிரசுக்கு இணையானவைதான்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் இந்தவாரம் மூன்றாவது துணைக் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டி
ருக்கிறது.இதில் என்னென்ன வரும், அல்லது என்னென்ன கோக்குமாக்குகள் நடக்கும் என்பது இந்தவாரம் முதற்கொண்டு பூனைக்குட்டிகள் வெளியே வருவதுபோல, ஒவ்வொன்றாக வெளியே வந்துதானாக வேண்டும். என்னென்ன அப்படி வெளியே வர ருக்கிறது என்பதை சென்ற மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையே இந்தப்பக்கங்களில் ஒரு கோடி காட்டப்பட்டிருந்தது.

பூனைக்குட்டி ஒன்று வெளியே வந்த கதையாக, கூடா நட்பு என்று தான் விமரிசித்த காங்கிரஸ் கட்சி, அதிமுக உறவுக்காக ஏங்கித் தவித்ததற்கு, இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று கருணாநிதி நேற்றைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால், வெறும் அறிக்கைகளிலேயே காலத்தை ஓட்ட வேண்டிய கட்சியாகத்  திமுகவும் ஆகிவிடும் போலிருக்கிறது!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் புகாருக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதுபோலவே, தமிழ்நாட்டில் நி
அபகரிப்புப் புகார்களில் சிக்கிக் கொண்டு திமுக தவியாய்த்  தவிக்கிறது. பொய் வழக்குப் போடுகிறார்கள் என்று தங்களுடைய குடும்பத் தொல்லைக்காட்சிகளில் கூவிக் கூவி முரசொலித்தாலும், அது அவர்களுடைய கட்சிக்காரர்களே நம்புகிற மாதிரி இல்லை என்பது, உளியின் ஓசை வசனகர்த்தாவின் இன்றைய பரிதாபம்!
மகளை ஜாமீனில் கூட எடுக்க முடியாமல், காங்கிரஸ் கட்சிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று பொருமுவதைத்  தவிர, பாவம் என்ன செய்துவிட முடியும்!!  இத்தனை அமளிதுமளிகளுக்கும் இடையில் கேடி பிரதர்ஸ், சத்தமே இல்லாமல் காய் நகர்த்திக் கொண்டிருப்பது! கலாநிதி மாறன் புகார் கொடுத்தவரிடமேசமரசமாகிக் கொண்டு போலீஸ் சம்மனில் ஆஜராகாமல் தப்பித்து வருவதும், சன் டிவி கொஞ்சம் நல்ல பிள்ளையாக அடக்கி வாசித்துக் கொண்டிருப்பதும், பேரன்களிடம் இருந்து தாத்தா  கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதாகவே காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆ.ராசாவோ, மாப்பிள்ளை கணக்காகக் கச்சிதமாகக் காங்கிரஸ் ஆட்சியையும் சேர்த்துக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் என்று தைரியமாக தன்னுடைய வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார். அடுத்து இருவருடைய வாதங்களும்,ராசா வகுத்த வழியிலேயே, டம்மிப் பீசை ரொம்பவுமே நெளிய வைத்திருக்கிறது. டிபி ரியாலிடி, வினோத் கோயங்காவும் அதே நிலையை எடுத்து விடாமல் இருக்க சரத் பவாரின் ஆட்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.இந்த வாரம் அந்தக் கூத்தும் அம்பலத்துக்கு வரும்.

சும்மா வேடிக்கை பார்ப்பதோடு நமுடைய பொறுப்பு முடிந்து விடுகிறதா?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!


 


4 comments:

 1. பதிவும் படமும் அருமை.(கண்ணாடியிலாத களைஞரின் படத்தை பார்த்ததும் குழம்பிவிட்டேன்.

  ReplyDelete
 2. கலைஞரே குழப்பத்தின் மொத்த வடிவமாக இருக்கையில் குழம்புவதற்கு தனியாக என்ன இருக்கிறது?

  :-)))

  ReplyDelete
 3. //...தமிழ்நாட்டில் நிலா அபகரிப்புப்...// இதுல உள்குத்து, வெளிகுத்து எதுவும் இல்லியே :-)

  ReplyDelete
 4. தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் எதற்குத்தான் இவ்வளவு தயக்கமோ?

  இருந்தாலும் தோஹா கத்தாரில் இருந்து வேலை மெனெக்கெட்டு எழுத்துப் பிழையைத் திருத்த உதவ முன்வந்ததற்கு மிகவும் நன்றி. நிலா அபகரிப்பு என்பது எழுத்துப் பிழை தான்! முடிந்திருந்தால் அதையும் ஆட்டையைப் போட்டிருப்பார்கள் என்பதால் கருத்துப் பிழை ஏதுமில்லை!

  ஆக உள்குத்து, சைடு குத்து எதுவுமில்லை!!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!