அரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும்! காங்கிரஸ்காரனுக்கு.........!

ஆதரிக்கிறார்களா? கைகழுவிக் கழுத்தறுக்கிறார்களா? காங்கிரஸ்காரனை நம்ப முடியாதுப்பா!

ரு பொறுப்பான பத்திரிகையின் தன்மை, அது செய்திகளை என்ன மாதிரி வெளியிடுகிறது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் மட்டுமே இல்லை, அதன் ஆசிரியர் குழு எழுதுகிற தலையங்கத்திலும் வெளிப்படுகிறது என்பதை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம், பேசி இருக்கிறோம்!  

நாட்டைப் பற்றிய உண்மையான அக்கறையுடன், தவறுகளைக் கண்டிப்பதில் தயவு தாட்சணியமே இல்லாமல், ஒருபக்கச் சார்பு இல்லாமல்,தமிழில், தலையங்கம் என்றாலே அது தினமணிதான் என்று சொல்கிற அளவுக்கு, தனித்தன்மையுடன் இருப்பதை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.தினமணி தவிர்த்த மற்ற நாளிதழ்கள் அநேகமாகத் தலையங்கம் என்ற ஒன்றை மறந்தே போய் விட்டன. தலையங்கம் என்று தப்பித்தவறி எழுதுகிற ஒன்றிரண்டுமே கூட வாலாக, வால்பிடிக்கிறதாக மட்டுமே இருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அந்நிய சதி ஒண்ணுமில்லை சார்! 
நமக்கு நாமேன்னு, அது உங்க "கை" தான்!

தினமணி  தலையங்கம்: காங்கிரஸுக்கு நன்றி!

First Published : 19 Aug 2011 12:00:00 AM IST

Last Updated : 19 Aug 2011 05:09:28 AM IST



ந்தியாவை எந்தத் தீமையும் அழித்துவிடாது என்கிற நம்பிக்கையைத் துளிர்விடச் செய்திருக்கிறது, அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆங்காங்கே தன்னிச்சையாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மனிதச் சங்கிலிகள், வாசல் முழக்கங்கள் போன்றவை.

"தீயன புரிதல், முறைதவிர் உடைமை/ செம்மைதீர் அரசியல், அநீதி/ ஆகியவற்றென் நெஞ்சு இயற்கையின் எய்தும் அரும்பகை அதன் மிசை ஆணை' என மகாகவி பாரதி மாஜினியின் பிரதிக்கினையில் குறிப்பிடுவது போல எதிர்ப்புத் தெரிவித்து வீதியில் இறங்கியுள்ள இந்த முகங்கள் எதுவும் இதற்கு முன் எந்தவொரு அரசியல் கூட்டத்திலும் காணாத முகங்கள் என்பதும், இவர்கள் அனைவரும் படித்த இளைஞர்கள் என்பதும், நமது நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது.

த்தீமை சூழ்ந்தாலும் இந்தியா அழிந்துவிடாது எனும் நம்பிக்கையை கடந்த இரு நாள்களாக இந்திய மண்ணில் விதைத்து வரும் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

தில்லி திகார் சிறை வாசலில் கூடி இருக்கும் கூட்டமும், இந்தியாகேட் தொடங்கி ஜந்தர் மந்தர் வரை நடைபெற்ற பேரணியும் மத்தியில் ஆளும் கட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்ததோடு, இதே நிலைமை பெருநகரம் தொடங்கி சிறு நகரம் வரை காணப்படுவதை அறிந்து, அண்ணா ஹசாரே முதலில் விரும்பியதுபோல ராம்லீலா மைதானத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தலாம் என்று அனுமதி அளிக்கிறது என்றால், அவர்கள் அடைந்துள்ள கலக்கம் எத்தகையது என்பது வெளிப்படை.

ப்போது அண்ணா ஹசாரே, ராம்லீலா திடலில் உண்ணாவிரதத்தை 15 நாள்களுக்கு நடத்த அனுமதித்திருப்பது மட்டுமல்ல, எவ்வளவு பேர் கூட வேண்டும் போன்ற பல நிபந்தனைகளையும்கூட தளர்த்திக் கொண்டு உள்ளது தில்லி காவல்துறை.

தே ஊழல் பிரச்னைக்காக ராம்தேவ் போராட்டம் நடத்தினாலும், அவர் தன்னிடம் யோகாசானம் பயின்ற, தன் அமைப்பில் தொடர்புடைய கூட்டத்தினரின் ஆதரவுடன் நடத்தினார். ஆனால், அண்ணா ஹசாரேயோ தொடக்கம் முதலே, மக்களைப் போராட்டம் நடத்த அழைத்தார். ஒரு அமைப்பு சார்ந்ததாக இல்லாமல், இதை மக்கள் அனைவருக்குமான போராட்டமாக முன்வைத்த விதமும், அவரை இந்த அரசு நடத்திய விதமும் ஆளும்கட்சி மீதான வெறுப்பைத்தான் அதிகரித்தது.

வ்வொரு இந்தியக் குடிமகனும் ஏதாவது ஒரு விதத்தில் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தங்கள் வேலை நடைபெற வேறு வழியே இல்லை என்கிற கட்டாயத்தால் இவர்கள் லஞ்சம் தர உடன்பட்டு இருக்கிறார்கள். அந்தக் குற்ற உணர்வும் ஆத்திரமும் தான் இன்று இவர்கள் வீதியில் இறங்கிப் போராட முற்பட்டிருப்பதன் காரணம். இந்தப் போராட்டங்களில் பங்கெடுக்கும் பலரும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும்போது, தாங்கள் தனிப்பட்ட முறையில் லஞ்சத்தால் அடைந்த பாதிப்பை சொல்கிறார்கள்.

ப்போதும்கூட காங்கிரஸ் தனது தவறை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறிய காரணங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கட்சியினர் தூள்தூளாக்கிவிட்டனர். பிரதமருக்கு ஆலோசனை சொல்வோர் சரியில்லை என்பதோடு, அரசியல் சிக்கலுக்கு அரசியல்ரீதியில் தீர்வுகாணாமல், காவல்துறையை வைத்துத் தீர்வுகாண முயல்வதா என்று பிரதமரை ஒரு பிடிபிடித்து விட்டார்கள். ஆனாலும்கூட, மத்திய அரசு இந்தக் கைது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கேட்கத் தயங்குகிறது.

யோத்தி யாத்திரையின்போது, அத்வானியும்கூட இதேபோல, முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார் என்பதையும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் இத்தகைய கைதுகள் எத்தனை என்பதையும் பட்டியிலிடும் பணியில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இன்னுமும்கூட, ""கைது துரதிருஷ்டவசமானது, ஆனால், அவரது கோரிக்கை ஏற்க முடியாதது'' என்று கூறிக் கொண்டு இருக்கிறார் என்றால், இவர்கள் இந்த இரண்டு நாளில் பாடமெதுவும் படிக்கவில்லை என்பதுதானே பொருள்?

ண்ணா ஹசாரேவுக்கு ஏன் அமெரிக்கா பரிந்து பேசுகிறது, இதில் ஏதோ இருக்கிறது என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு மதிமயக்கம் ஏற்பட்டுவிட்டது. அமெரிக்காவின் வழிகாட்டுதலுடன், அமெரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படும் அரசா அமெரிக்காவைக் குற்றம் சாட்டுவது?

க்கள் அரசியல் தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆட்சிகள் மாறின. கட்சிகள் மாறின. ஆனால், காட்சிகள் மாறவில்லை. மக்களின் வரிப்பணம் ஒரு சிலரின் வெளிநாட்டு வங்கிகளில் தஞ்சம் புகுவதும், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தன வணிகர்கள் கூட்டணியால் நாட்டின் செல்வம் அனைத்தும் கொள்ளை போவதும் பட்டவர்த்தனமாகத் தெரிந்தும், மக்களால் தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலைமை. ஆட்சியை மாற்றினாலும் காட்சியை மாற்ற முடியாத தவிப்பு.

அண்ணா ஹசாரே, குமுறிக் கொண்டிருந்த இந்த மக்களின் மன சாட்சியாகத் தெரிகிறார். ஒவ்வொரு இந்தியனும் இப்போது தன்னை அண்ணா ஹசாரேயாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறான். மக்கள் சக்தி ஒன்று திரண்டால் மட்டுமே ஆட்சியாளர்கள் மிரள்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டு விட்டனர். அவர்கள் துப்பாக்கியை எடுக்கவில்லை. சூறையாடவில்லை. புரட்சி என்று கோஷம் போடவில்லை. தெருவில் இறங்கித் தங்களது அதிருப்தியைக் காட்டத் தலைப்பட்டிருக்கிறார்கள், அவ்வளவே.

64 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் "வந்தே மாதரம்' கோஷம் எழுப்பப் படுகிறது. காந்தி குல்லாய் இளைஞர்களால் அணியப்படுகிறது. அகிம்சையும் சத்தியாகிரகமும் ஆயுதங்களாகின்றன. மீண்டும் காந்தியம் உயிர்த்தெழுந்திருக்கிறது.

தற்கெல்லாம் காரணம், தவறுக்கு மேல் தவறுகளைச் செய்த காங்கிரஸ் அரசுதானே?  

நாம் காங்கிரசுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்!

எப்படி என்கிறீர்களா? உள்ளாட்சித் தேர்தலோ, சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலோ, எதுவானாலும், காங்கிரசையும் அதோடு கூட்டணி அமைக்கும் கட்சிகளையும் முற்றொட்டாக நிராகரிப்பது! அது வெறும் ஆரம்பம் தான்! ஒருநாள் வேலை!

அரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும் என்று இங்கே சிலம்பின் பாடம் ஒன்று தெரியுமில்லையா, அதைக் காங்கிரசுக்குப் பரிபூரணமாகக் கற்றுக் கொடுப்பது!காங்கிரஸ் என்ற களை
முற்றிலுமாக எடுக்கப்பட்டால் மட்டுமே, தேசத்தில் ஜனநாயகம் தழைக்கும்! 

அண்ணா ஹசாரே ஆரம்பித்திருக்கும் இந்த உண்ணா விரதப்போராட்டம் ஒரு ஆரம்பம் தான்!அண்ணா ஹசாரே காந்திக்கு இணையாக வர முடியாமல் கூடப் போகலாம்! ஆனால் இது காந்தி தேசம் தான், காண்டிகள் தேசமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக, காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களுக்கு உறைக்கும்படி சொல்ல வேண்டிய தருணம் இது!   



2 comments:

  1. The punch line
    அண்ணா ஹசாரே காந்திக்கு இணையாக வர முடியாமல் கூடப் போகலாம்! ஆனால் இது காந்தி தேசம் தான், காண்டிகள் தேசமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக, காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களுக்கு உறைக்கும்படி சொல்ல வேண்டிய தருணம் இது!

    ReplyDelete
  2. 64 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் "வந்தே மாதரம்' கோஷம் எழுப்பப் படுகிறது

    பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!