Showing posts with label ஏய்ப்பதில் கலைஞன். Show all posts
Showing posts with label ஏய்ப்பதில் கலைஞன். Show all posts

ஏய்ப்பதில் கலைஞன்! அரசியல் களம் இன்று!

எதுபொருளோ அதைப்பேசுவதை விட்டுவிட்டு வெறும் அக்கப்போர்களில் மட்டும் கவனத்தைத் திருப்புவது நக்சல் குறுங்குழுக்கள், லிபரல்கள் என்று சொல்லிக் கொள்கிற கும்பல் மற்றும் காசுக்காகக் கூவுகிற ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகிற திரித்தல் வேலை. இதை இந்தப்பக்கங்களில் தொடர்ந்து சொல்லி வருவதை நண்பர்கள் நினைவு வைத்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். பிரகாஷ் ராஜ் கூட ஒருவித நக்சல் குறுங்குழு ஆதரவாளர் போலத்தான், தன் அரசியல் மேதாவித் தனத்தை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார் என்பதால் அவருடைய ஆம் ஆத்மி கட்சிப்பாசம், கேசரிவாலு உளறுவதை அப்படியே ஆதரிப்பதென்பது ஆச்சரியமான விஷயம் இல்லை.


பிரகாஷ் ராஜ் உளறலுக்கு ஊடகங்கள் இந்த அளவு முக்கிய இடம் கொடுத்து இருக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. நல்ல நடிகன் இங்கே ஏமாற்றுவதில் கலீஞன் ஆக  இருப்பது ஒன்றும் புதிதல்ல.

கூட்டணி சீட் பேரம் முடிகிற வரை பொறுமையாக இருந்து விட்டு ரிசல்ட் வர இரண்டு வாரங்களே இருக்கும்நிலையில் விசிகவின் திருமாவளவன், திமுகவுடனான கூட்டு நீடித்து நிலைக்கக்  கூடியதல்ல என்ற ரீதியில் பேசியிருப்பது எதைக் காட்டுகிறதாம்?

ஏய்ப்பதில் கலீஞன்!  ஆக இருப்பது திமுகவின் ஏகபோகச்  சொத்தல்ல! தாங்களும் அந்தக்   கலையில் தேர்ந்து விட்டோம் என்று திருமா சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது திமுகவுடன் கூட்டணி வைத்துப் பட்டது போதும் என்று பட்டறிவில் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாமா?  

எனக்கென்னவோ தங்களுடைய ரிசல்ட் என்னவாக இருக்கும் என்கிற களயதார்த்தம் விடுதலைச் சிறுத்தைகளுக்குப் புரிந்து விட்டதன் வெளிப்பாடு இது என்றுதான் தோன்றுகிறது.  

  
அடுத்துவரும் ஆட்சியில் திருமா மத்திய அமைச்சர் என்று திமுகவின் வெட்டி அலப்பறை தமிழன் பிரசன்னா பேசியது வீண்தானா? இசுடாலினுடைய விருப்பத்துக்கு மாறாகப் பேசி விட்டாரா என்றெல்லாம் கேள்வி கேட்பது உங்கள் உரிமை. 


அமைச்சர் ஜெயக்குமார் பவுண்டரி, சிக்ஸர் என்று அடித்து ஆடுகிறார்!   

மீண்டும் சந்திப்போம் .

சமுதாய வீதி! நா.பார்த்தசாரதி

புத்தகங்களை ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்? 

அந்த நாட்களில் இந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு "கூட்டாஞ்சோறு" ஆர்வி புத்தகங்களுக்கான தன்னுடைய தனி வலைப்பக்கங்களில்  ஒரு தொடர் பதிவாக எழுதியிருந்தார் 

இந்தக் கேள்வியே எனக்குக் கொஞ்சம் வினோதமாகத் தான் தெரிகிறது. என்னுடைய சிறுவயதில் இருந்தே என்னுடைய அண்ணன்மார்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை எனக்கும் தொற்றி விட்டதால் இந்தக் கேள்வி விநோதமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் படிப்பது மட்டும் இல்லை, எந்த ஒரு பழக்கத்திற்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களே முன்னோடிகளாக ஆரம்பித்துக் கொடுக்கிறார்கள், நாம் நமது சூழ்நிலை, ஆர்வத்திற்குத் தகுந்த மாதிரி இந்தப் பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறோம் அல்லது மறந்து விடுகிறோம் என்பது தான் சரியான பதிலாக இருக்கும் என்று தோன்றுகிறது.


இன்றைக்குத் தற்செயலாக Good Reads தளத்தில் 50 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த சமுதாய வீதி புதினத்துக்கு வாசகர் பரிந்துரையாக 2018 டிசம்பரில் 
இப்படி ஏழே வரிகளில்! 

Praveen
Aug 02, 2018rated it it was amazing  ·  review of another edition
1. Sahitya Academy winning book
2. Every character has been justified
3. Professional's has had the pride and temper which can't eradicate from their behavior
4. Though the book written in 1968, but many scenes depicts the present generation
5. I enjoyed the character of Gopal - who know how to do the branding in his domain
6. Author gave an insight of Artist's situation much early. He's a prophet i would say
7. Completed this book in 3 hours without a break ; hypnotized by every situation and dialouge


இதை பார்த்ததும் மனதுக்குள் ஏக மகிழ்ச்சி. ஒரு நல்ல எழுத்தாளன், தன்னுடைய காலத்துக்குப் பிறகும் , தன் படைப்புகளில் உயிர்வாழ்வதைப் பார்க்க முடிவதில் வருகிற மகிழ்ச்சி, சிலிர்ப்பு! "அச்சமே கீழ்களது ஆச்சாரம்"   இப்படி இந்தப் புதினத்தில் நாயகன் சொல்வதாக அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய வரிகளில் இருக்கும் அறச்சீற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், புத்தகத்தைப் படித்துவிடுவது ஒன்று தான் சுலபமான, நல்லவழி! 

இது கலைஞர்களைப் பற்றிய கதை. ஒரு நல்ல கலைஞன் என்று ஆரம்பித்துச் சொல்லும்போதே இங்கே ஏய்ப்பதில் கலைஞன் என்றும்   உண்டில்லையா?

அப்படி நேரெதிரான குணாதிசயங்களைக் கொண்ட இருவரின் கதையாக, சமுதாய வீதி நாவலைச் சொல்லி விடலாமா? சொல்லலாம் தான்! அனால் இது அந்த இருவருடைய கதை என்பதையும் தாண்டி, இன்று கலைச்சேவை செய்வதற்காக சிங்கப்பூர் மலேசியா வளைகுடாநாடுகள் என்றெல்லாம் பயணிக்கிறார்கள் இல்லையா, அந்தக் கலைச்சேவை எப்படிப்பட்டது என்பதையும் கொஞ்சம் புட்டுவைத்திருப்பது, நா.பா ஒருவருக்கே கைவருகிற லாவகம் என்பதைவிட ஒருவித சத்திய ஆவேசம் என்றே கொள்ளலாம்.

நாடகசபாவில் வாத்தியாராக இருந்த முத்துக்குமரன், சென்னைக்கு வருகிறான்.நாடகசபாவில் இருந்து, இன்று சினிமாவில் நடிகர்திலகமுமாகிப்போன பழைய நண்பன் கோபாலிடம் சொல்லி தன்னுடைய பிழைப்புக்கும் ஏதாவது செய்து கொள்ளலாம் என்று வந்ததில் இருவருடைய குணவார்ப்பும் வெளிப்படுகிற வரிகள் இவை:       

 முத்துக்குமரன் பதில் சொல்லவில்லை. கோபாலின் டிரைவர் சிறிய கார் ஒன்றில் எழும்பூருக்குப் புறப்பட்டுப் போனான். அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த கோபால் நண்பனை மிகவும் பிரியத்தோடு அணுகி, "ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நல்லாச் சேர்ந்து சாப்பிடணும். ராத்திரி என்ன சமையல் செய்யச் சொல்லட்டும்?... சங்கோசப்படாமே சொல்லு வாத்தியாரே?..."

     "பருப்புத் துவையல், வெந்தயக் குழம்பு, மாங்காய் ஊறுகாய்..."

     "சே! சே! அடுத்த பிறவி எடுத்தால் கூட நீ அந்த பாய்ஸ் கம்பெனியின் நிரந்தர 'மெனு'வை மறக்க மாட்டே போலிருக்கே... மனித குணங்களாகிய காதல், சோகம், வீரம் எதுவுமே நமக்கு உண்டாகி விடாதபடி பத்தியச் சாப்பாடா வில்லே போட்டுக்கிட்டிருந்தான் அந்த நாயுடு!"

     "அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டாலே உனக்கு 'நல்ல சாப்பாடு' போடுன்னு நாயுடுவை எதிர்த்துக் கேட்கச் சத்து இருக்காதே."

     "அதுக்காகத்தான் அப்படிச் சாப்பாடு போட்டானா பாவி மனுஷன்?"

     "பின்னே? வேறே எதுக்காக? சாப்பிடுகிற சாப்பாடு - நாயுடுவை எதிர்த்துப் புரட்சி செய்யிற எந்தக் கொழுப்பையும் உனக்குள்ளற உண்டாக்கிடப் பிடாதுங்கிறது தானே அவரு நோக்கம்?"


     "எப்படியோ அதையும் சாப்பிட்டுத்தானே காலங் கடத்தினோம். ஒரு நாளா ரெண்டு நாளா? ஒரு டஜன் வருசத்துக்கு மேலேயில்ல பருப்புத் துவையலும் வெந்தயக் குழம்பும் மாங்காய் ஊறுகாயும் வவுத்துக்குள்ளாறப் போயிருக்கு?"

     "அந்த ஒரு டஜன் வருசத்தை அப்படி அங்கே கழிச்சதிலே இருந்துதானே இன்னிக்கி இங்கே இப்படி முன்னுக்கு வந்திருக்கோம்."

     "அது சரிதான்! அதை நான் ஒண்ணும் மறந்துடலே; நல்லா நினைவிருக்கு..." - என்று கோபால் கூறியபோது அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். அவன் இதைக் கூறும்போது அவனுடைய கண்கள் எந்த அளவுக்கு ஒளி நிறைந்து தெரிகின்றன என்பதைக் காண முத்துக்குமரன் விரும்பினான். நன்றியுடைமையையும், பழைய நினைவுகளையும் பற்றிய பேச்சு எழுந்த போது மேலே பேசுவதற்கு எதுவும் விஷயமில்லாமற் போனது போலச் சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது.

     அந்த மௌனத்தின் தொடர்பாகக் கோபால் எழுந்து சென்று சமையற்காரனிடம் இரவுச் சமையலுக்கானவற்றைச் சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தான்.

     ஹாலுக்கு அப்பாலுள்ள அறையில் யாரோ ரேடியோவைப் போட்டிருக்க வேண்டும். இனிய வாத்திய இசை ஒலிக்கு முன் பேரில்லாத அநாதி தத்துவத்தில் ஐக்கியமாகிவிட்டவர்களாகிய 'நிலைய வித்வான்களின்' - காரியம் இது என்று அறிவிக்கப்பட்டது.

     "உனக்குத் தெரியுமா வாத்தியாரே? பாய்ஸ் கம்பெனியிலே 'காயாத கானகம்' பாடி அப்ளாஸ் வாங்கிக்கிட்டிருந்த கிருஷ்ணப்ப பாகவதரு இப்ப ஏ.ஐ.ஆர்லே நிலைய வித்வான் ஆயிட்டாரு."

     "ஒரு காலத்திலே சமஸ்தானங்களையும், ஆதினங்களையும், நாடகக் கம்பெனிகளையும் நம்பிக்கிட்டிருந்த கலைஞர்களுக்கு இப்ப ரேடியோதான் கஷ்ட நிவாரண மடமாயிருக்கும் போலத் தெரியுது...?"

     "நான் கூட ஒரு நாடகக் கம்பெனி ஸ்டார்ட் பண்ணப் போறேன். நம்மை அண்டிக்கிட்டிருக்கிறவங்களுக்குச் சோறு துணி குடுக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கு..."

     "இப்ப பண்ணின 'இண்டர்வ்யூ' எல்லாம் அதுக்குத்தானே!" 
..........
என்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினாலும் கோடீஸ்வரனாகவும், நடிகர் திலகமாகவும் ஆகிவிட்ட தன்னை முத்துக்குமரன் 'அடாபிடா' போட்டுப் பேசுவதைக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்வொரு 'டா'வும் முள்ளாகக் குத்தியது. ஆனால், அதே சமயத்தில் முத்துக்குமரனின் கவிதைச் செருக்கும், தன்மானமும், பிடிவாதமும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை. ஆகவே, முத்துக்குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது போல் தானும் அவனை 'அடா' போட்டுப் பேசலாமா என்று ஒரு கணம் குரோதமாகத் தோன்றினாலும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை. நீ, நான் போன்ற ஒருமைச் சொற்களும், 'வாத்தியாரே' போன்ற பெயரும்தான் தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற தைரியசாலியோடு மேடையில் ஸ்திரீ பார்ட் போட்ட காலங்களில், 'நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிலையே இன்னும் நீடித்தது. முத்துக்குமரனை மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது. அந்தப் பிரமையிலிருந்து அவனால் இன்னும் விடுபட முடியவில்லை. எதிரே வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு எடுத்தெறிந்தாற் போன்ற கர்வத்துடனும், ஒரு கவிஞனின் செருக்குடனும் பேசும் முத்துக்குமரனின் உரிமையையோ துணிவையோ, அந்தக் கோடீஸ்வர நடிகனால் நிராகரிக்க முடியாமலிருந்தது. லாட்ஜிலிருந்து காலி செய்து சாமான்களை எடுத்து வந்துவிட்டதாக டிரைவர் வந்து தெரிவித்தான்.

கெட்டும் பட்டினம் சேர் என்று பிழைப்பிற்காக சென்னைப் பட்டினத்துக்கு வருகிற நாடக ஆசிரியன் அறிமுகம் முதல் அத்தியாயத்தில்! இரண்டாவது அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு பெண் அவன்பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தன் பெயர் மாதவி என்றும் அறிமுகம் செய்து கொள்கிறாள். அடுத்து நேற்றைய வருடங்களில் ஒரு நாடகசபாவில் வாத்தியாருடன் சிநேகிதமாக இருந்து, இன்றைக்கு சினிமாவில் கோடீஸ்வர நடிகர்திலகமுமாக மாறிப்போன கோபால் அறிமுகம். கதைக்களத்தில் காட்சிகள் விறுவிறுப்பாக மாறுவதில் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகிக் கொண்டே வருவதில் கதை சுவாரசியமாக கண்முன்னே விரிகிறது.

கோபால் நாடகமன்றத்துக்காக முத்துக்குமரன் நாடகம் எழுத ஆரம்பிக்கிறான். மாதவி அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறாள் என்று சொல்லிக் கொண்டே போனால் என்ன சுவாரசியம் வரும்?

கலைச்சேவை செய்வதற்காக முத்துக்குமரன், கோபால், மாதவி உள்ளிட்ட நாடகக்குழுவை book செய்வதற்காக வரும்  கலாரசிகர் cum கான்டராக்டர் பினாங்கு அப்துல்லா பத்தாவது அத்தியாயத்தில், நாடக அரங்கேற்றத்தில் அறிமுகம் ஆகிறார். ஆரம்பமே மோதலாக! 

"தமிழர்களின் பொற்காலத்தை இந்த நாடகம் நிரூபிப்பது போல் இதுவரை வேறெந்த நாடகமும் நிரூபிக்கவில்லை. இனியும் இப்படி ஒரு நாடகம் வரப்போவதில்லை. இது வீரமும் காதலும் நிறைந்த தமிழ்க் காவியம். இதைப் படைத்தவரைப் பாராட்டுகிறேன். நடித்தவர்களைக் கொண்டாடுகிறேன். பார்த்தவர்கள் பாக்கியசாலிகள். இனிமேல் பார்க்கப் போகிறவர்களும் பாக்கியசாலிகள்" - என்று மந்திரி புகழ்மாலை சூட்டினார். உடனே முத்துக்குமரன் தப்பாக நினைக்கக் கூடாதே என்று உள்ளூறப் பயந்த கோபால் கீழே முன் வரிசையில் நேர் எதிரே அமர்ந்திருந்த அவனை மேடைக்கு அழைத்துப் பினாங்கு அப்துல்லாவிடம் ஒரு மாலையைக் கொடுத்து அதை முத்துக்குமரனுக்கு அணிவிக்கும் படி வேண்டினான். முத்துக்குமரனும் மேடைக்கு வந்து அப்துல்லா அணிவித்த மாலையை பலத்த கரகோஷத்தினிடையே ஏற்றான். அதோடு அடுத்த காட்சிக்குப் போயிருந்தால் வம்பில்லாமல் முடிந்திருக்கும். "நீ இரண்டு வார்த்தை பேசேன் வாத்தியாரே" - என்று முத்துக்குமரனுக்கு முன்னால் மைக்கை நகர்த்தினான் கோபால். முத்துக்குமரனோ அப்போது நிகரற்ற அகங்காரத்தில் திளைத்திருந்தான். அவன் பேச்சு அதை முழுமையாகப் பிரதிபலித்து விட்டது. "இப்போது இந்த மாலையை எனக்குக் சூட்டினார்கள். எப்போதுமே மாலை சூட்டுவதை வெறுப்பவன் நான். ஏனென்றால் ஒரு மாலையை ஏற்பதற்காக அதை அணிவிப்பவருக்கு முன் நான் ஒரு விநாடி தலைகுனிய நேரிடுகிறது. என்னைத் தலைகுனிய வைத்து எனக்கு அளிக்கும் எந்த மரியாதையையும் நான் விரும்புவதில்லை. நான் தலை நிமிர்ந்து நிற்கவே ஆசைப்படுகிறேன். ஒரு மாலையை என் கழுத்தில் சூட்டுவதின் மூலம் சாதாரணமானவர்கள் கூட ஒரு விநாடி என்னைத் தங்களுக்கு முன் தலைகுனிய வைத்துவிட முடிகிறதே என்பதை நினைக்கும்போது வருத்தம்."- 

     பேச்சு முடிந்து விட்டது. பினாங்கு அப்துல்லாவுக்கு முகம் சிறுத்துப் போய்விட்டது. கோபால் பதறிப் போனான். முத்துக்குமரன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிங்கநடை நடந்து தன் இருக்கைக்காக கீழே இறங்கிப் போய்க் கொண்டிருந்தான்.   

இப்படி 10 வது அத்தியாயம் முடிந்து 11 ஆரம்பம்! 
 
முத்துக்குமரன் மேடையில் அப்படி நடந்து கொண்டதைக் கோபால் ஒரு சிறிதும் விரும்பவில்லை. பினாங்கு அப்துல்லாவின் மனம் புண்படும்படி நேர்வதனால் மலேயாப் பயணமும் நாடக ஏற்பாடுகளும் வீணாகி விடுமோ என்று அவன் பயந்தான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் நடிக்கிறபோதுகூட இந்த எண்ணமும் பயமுமே அவன் மனத்தில் இருந்தன. 

     நாடக முடிவுக் காட்சியில் கூட்டம் மெய்மறந்து உருகியது. திரை விழுந்த பின்பும் நெடுநேரம் கைதட்டல் ஓயவே இல்லை. மந்திரி போகும்போது முத்துக்குமரனிடமும் கோபாலிடமும் சொல்லிப் பாராட்டி விட்டுப்போனார். அப்துல்லாவும் பாராட்டிவிட்டுப் போனார். அப்படிப் போகும்போது அவரை மறுநாள் இரவு தன் வீட்டில் விருந்துக்கு அழைத்தான் கோபால். 


     மேடையில் போட்ட ரோஜாப் பூ மாலை உதிர்ந்தது போலக் கூட்டமும் சிறிது சிறிதாக உதிர்ந்து கொண்டிருந்தது. 

     நிகழ்ச்சி எல்லாம் முடிந்து தேடி வந்து பாராட்டிய ஒவ்வொருவருடைய பாராட்டுக்கும் முகம் மலர்ந்த பின் அண்ணாமலை மன்றத்திலிருந்து வீடு திரும்பும்போது காரில் மாதவியிடமும் முத்துக்குமரனிடமும் குறைபட்டுக் கொண்டான் கோபால். 

     "அடுத்தவங்க மனசு சங்கடப் படறாப்பிலே பேசறது எப்பவுமே நல்லதில்லை. அப்துல்லா கிட்ட ஒரு பெரிய காரியத்தை எதிர்பார்த்து நாம் அவரை இங்கே அழைச்சிருக்கோம். அவரு மனம் சங்கடப்பட்டா நம்ம காரியம் கெட்டுப் போயிடுமோன்னுதான் பயப்பட வேண்டியிருக்கு- " 

     இதற்கு மற்ற இருவருமே பதில் சொல்லவில்லை. மீண்டும் கோபாலே தொடர்ந்து பேசலானான்: 

     "மேடையிலே கொஞ்சம் பணிந்தோ பயந்தோ பேசறதிலே தப்பு ஒண்ணுமில்லே..." என்று கோபால் கூறியதும் அதுவரை பொறுமையாயிருந்த முத்துக்குமரன் பொறுமையிழந்து,

     "ஆம்! அச்சமே கீழ்களது ஆசாரம்" - என்று வெடுக்கென மறுமொழி கூறிவிட்டான். 

     கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. இரண்டு பேரில் யாருக்குப் பரிந்து பேசினாலும் மற்றொருவருடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி மாதவி மௌனமாயிருக்க வேண்டியதாயிற்று. கோபாலோ கார் நா பங்களாவை அடைகிறவரை கடுங்கோபத்தோடு வஞ்சகமானதொரு மௌனத்தைச் சாதித்தான். முத்துக்குமரனோ அதைப் பொருட்படுத்தவே இல்லை. 

பள்ளிப்பருவத்தில் அறிமுகம் ஆன நல்ல எழுத்து நா.பார்த்தசாரதியுடையது. லட்சியவேகத்துடன் எழுதிய, விரல்விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவரும் கூட! நாட்டுடமை ஆக்கப்பட்ட இவரது படைப்புக்கள் அனைத்தும் இணையத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளக் கூடியதாக, கிடைக்கின்றன.

படித்துப்பாருங்கள் என்று படித்தான் பரிந்துரையாக சமுதாய வீதி புதினத்தை மறுபடியும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

   

    

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #5

 முந்தின பதிவில் சொல்லியிருந்த மாதிரி டில்லி சட்டசபைத் தேர்தல்களில்  கொசுவை விரட்ட பீரங்கியைத் தூக்கின கதையாக பிஜேபி ஒரு கசப்பான தேர்தல் முடிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. பிஜேபிபாடம்  கற்றுக்கொள்ளப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த இடைப்பட்ட நேரத்தில் 

சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! 


#stalinfor2016 என்று கோஷமெழுப்பி ஸ்டாலின் தரப்பு ஓய்ந்துபோய்க் கிடந்தாலும் அழகிரி தரப்பு விடுவதாயில்லை. சென்ற ஜனவரி 30 அழகிரி பிறந்த நாளுக்கு மதுரை அடிப்பொடிகள் வைத்த கட்அவுட், போஸ்டர்களில் அடித்தே சொல்லிவிட்டார்கள். எப்படி என்கிறீர்களா?


  

மதுரைக்கூத்து இப்படியென்றால் அறிவாலயக்கூத்து அதைவிடக் கொஞ்சம் மேலே தி இந்து நாளிதழ் வாசகர் கருத்து, இப்படிப் படமாக!  #ஆராசா #கனிமொழி #தயாநிதிமாறன் இவர்களை வைத்து சம்பாதித்து வைத்த நல்ல பெயரை #ஓபிஎஸ்கெடுத்து விட்டாராம்! நக்கல் கொஞ்சம் தூக்கல்தான்!  ஆனால் உண்மை ஏகத்துக்கும் சுடுகிறதே!

#KDbrothers ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன் செல்லாது, ரத்து செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெஞ்ச் முதலில் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், `2ஜி அலைக்கற்றை தொடர்பாக எழும் அனைத்து வழக்குகளும் நேரடியாக உச்ச நீதிமன்ற விசாரணைக்கே வர வேண்டும். வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கக் கூடாது’ என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இதையடுத்து, மாறன் சகோதரர் களின் மனுவை ஏற்க முடியாது என்ற தங்களது முந்தைய உத்தரவை நீதிபதிகள் திரும்பப் பெற்றனர். அம்மனு, தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவித்தனர். ஆக, உலை தயாராகிவிட்டது பொங்கல் வைக்கும் நேரம் மட்டுமே தள்ளிப்போயிருக்கிறது. நன்றாகப் பொங்கட்டுமே!

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் | படம்: கே.பிச்சுமணி  
சட்டம் என் கையில்! போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு: சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் என்கிறது இந்தச்செய்தி 

மாலன் புதியதலைமுறை ஆசிரியராக வந்தபிறகு  அவர் எழுதுவதைப் படிப்பதில் இடைவெளி விழுந்தது. தற்செயலாக அவர் முகநூலில் சென்னை சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பாக எழுதியிருந்தது கண்ணில் பட்டது.. சில அடிப்படையான சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீங்களும் வாசிக்கலாமே    

சில அடிப்படையான கேள்விகள்

1.சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் பின்னணி என்ன?

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களில் இருபிரிவினர் ஆயுதங்களோடு கல்லூரியில் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அதையடுத்து அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது. 2009ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கமிஷன் தனது அறிக்கையை அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் அளித்தது. அந்த அறிக்கை ஜூலை 21ஆம் தேதி சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. (திரு.ரவிகுமார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் இது குறித்து மேலும் தகவல் தரலாம்) அந்த அறிக்கை,வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க சென்னையில் 3 மருத்துவ கல்லூரி இருப்பது போல சட்டக் கல்லூரியை பிரித்து தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூந்தமல்லி ஆகிய இடங்களில் சட்டக்கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ப் பரிந்துரைத்தது

இதையடுத்து 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மாநில அரசின் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “Government has accepted the recommendation made in the report of Justice P Shanmugam Commission of Inquiry to shift TN Dr Ambedkar Government Law College, Chennai to a location within the city and open three new Law Colleges in and around the city of Chennai. The estimated outlay for this relocation and construction would be Rs 75 crore (Rs 25 crore per college),” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. 2013ல் வெளியான அறிக்கைக்குத்தான் இரண்டாண்டுகள் கழித்து இப்போது மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டு நிலவரத்தில் ஆறிப்போன பொங்கலே இப்படி இருக்கிறதே என்று அலுத்துக் கொள்கிறீர்களா? அதுவும் சரிதான்!

******
பட்டி மன்றங்கள் என்றாலே வெறும் வெட்டி மன்றங்கள், வெட்டி விவாதங்கள் என்றாகிப் போன காலம் இது.பட்டிமன்றங்களுக்குக் கொஞ்சம் மவுசு இருந்த நாட்களில் அடிக்கடி பழகிப்போன தலைப்பு:

கற்பில் சிறந்தவள்   
கண்ணகியா ? மாதவியா ?


இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு இன்னுமொரு பட்டிமன்றத்தை ஆரம்பித்து விட வேண்டாம்! காலம் நிறைய விஷயங்களில் புதுப்புது மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு மேல்  பெரிதாக அலட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இதில் கருத்துச் சொன்னவர்களில் எவருமே பொய் சொல்லவில்லை, வெறும் ஊடக வெளிச்சத்துக்காக மாற்றிச் சொல்லவில்லை, மனதில் பட்டதை, தங்களுக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள் என்றே எனக்குப் படுகிறது.    

தற்செயலாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது தளத்தில் இதுபற்றிப் பேசியிருந்தது கண்ணில் பட்டது. அவர் முடிவாகச் சொல்வதிது:

நம் மரபே நமக்குக் கற்பு என்பதற்கு இரு வரையறையை அளிக்கிறது. ’கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என்பது ஒன்று. ‘கற்பென்பது ஒருவனைப்பற்றி ஓர் அகத்திருத்தல்’ என்பது இரண்டாவது. நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது முதல் வரையறையைத்தான். ஓரகத்தில் இருக்கவேண்டுமா ஒருவனைப்பற்றிக் கொள்ளவேண்டுமா என்பதெல்லாம் பெண்கள் அவர்களே முடிவுசெய்யட்டும்.


என் பார்வையில் ‘நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி’ கொண்டு தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரமான பெண்ணே கற்புள்ளவள். கற்பு என்பது அந்த நெறியைக் கற்றுக்கொள்வதுமட்டும்தான் 

ஜெயமோகன் சொல்வது நியாயமாகத்தான் படுகிறது.

..

மந்திரி......கொஞ்சம் எந்திரி! மாற்றம் வந்தாச்சாம்!



ஒருவழியாக, மன்மோகன் சிங் வரும் வரும் என்று சொல்லிக் கொண்டிருந்த மந்திரிசபை மாற்றத்தைக் கொண்டே வந்துவிட்டார்!
ஏழு வெளியேபோக எட்டு உள்ளே வருவதாகக் கணக்கு! அந்த எட்டில் ஒன்று புட்டுக் கொண்டுபோக. ஏழுக்கு ஏழு சரியாகப்போயிற்று!திமுக காலி செய்த இடத்தை நிரப்பவில்லை, காலியாக வைத்திருப்பதாகப் பிரதமர் சொல்கிறார். 



மிழ்நாட்டில் இருந்து ஜெயந்தி நடராஜனுக்கு ராஜாங்க மந்திரி பதவி கிடைத்திருக்கிறது. ஏற்கெனெவே அம்மா அலட்டல் அதிகம்! இப்போது ராஜாங்கமும் சேர்ந்து கொண்டு என்ன பாடுபடுத்தப் போகிறதோ தெரியவில்லை!

அடுத்த வருஷம் வரப்போகிற சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு சல்மான் குர்ஷீத் உள்ளே வந்திருக்கிறார். சட்ட அமைச்சராக! சட்ட அமைச்சராக இதுவரை இருந்த வீரப்ப மொய்லி கார்பரேட் விவகார அமைச்சராகியிருக்கிறார். வேண்டாதவர்கள் சேர்ந்து
என்னை சட்ட அமைச்சகத்தில் இருந்து கழற்றி விட்டு விட்டார்கள் என்று மனிதர் வருத்தப்பட்டுக் கொள்கிறார். 

மும்பையைச் சேர்ந்த குருதாஸ் காமத், தனக்குக் காபினெட் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று குறைப் பட்டுக் கொண்டார். பதவியேற்புக்குக் கூட இரண்டு அமைச்சர்கள் வரவில்லை! அதில் இந்தக் காமத்தும் ஒருவர். கொடுத்த பதவியை வாங்கிக் கொண்டால் ஆயிற்று, இல்லையென்றால் அதுவும் கிடைக்காது என்று மேலிடம் சொன்னதாம்! மனிதர் எனக்குக் கட்சிப் பொறுப்பே போதும் என்று ராஜினாமா செய்துவிட்டார்.

ஆக, மன்மோகன் சிங்கும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, இப்போதெல்லாம் என்ன செய்தாலும் ஏறுக்குமாறாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது!

கூட்டணிதர்மத்தைப்பற்றிப் பேசி இன்றைக்கும் மன்மோகன் சிங் தமாஷ் செய்திருக்கிறார்! கூட்டணிக் கட்சி எதுவும் இவரை மதிப்பதில்லை, கூட்டணி தர்மத்தையும் மதிப்பதில்லை என்பது தெரிந்தே மனிதர் காமெடி செய்துகொண்டிருப்பது, அசிங்கமாக இருக்கிறது.திமுகவின் டி ஆர் பாலு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைந்து பார்த்தார்! கதைக்கு ஆகவில்லை!

வேணாம் ..விட்று! வலிக்குது...அழுதுடுவேன் என்று வடிவேலு ரேஞ்சில் அஞ்சா நெஞ்சன் என்று மார்தட்டிக் கொண்ட அழகிரியை முகத்தை மூடிக் கொண்டு அழக்கூட விடாமல் செய்தியாளர்களும், டிவி காமெராக்களும் துரத்தித் துரத்தி மதுரை, உத்தங்குடிக்கருகில் பதினேழு ஏக்கர் கோவில் சொத்தை  மனைவி பெயரில் வாங்கிய விவகாரத்தைக் கேட்க, மனிதர் வேகமாக நடந்துகொண்டே டிவி மைக்குகளைக் கையால் தள்ளிக் கொண்டு ................'ஐயா டாகுமெண்டேல்லாம் இருக்குன்னு சொல்றாங்களே' என்று செய்தியாளர் கேட்க, 'இருந்தா வந்து எடுத்துக்குங்க.. என்ன விலை தர்றீங்க..  ஸ்டுபிட்' என்று விறைத்துக் கொண்டு போனதைத் திரும்பத் திரும்ப  ஹெட்லைன்ஸ் டுடே தொலைக் காட்சியில் பார்க்க பரிதாபமாக இருந்தது.

In his annual declaration to the Prime Minister's Office on March 31, 2010 Alagiri did not declare his assets to the PMO office. These documents have also been accessed by Headlines Today. But when confronted by Headlines Today with this proof, the minister replied: "Show me papers. Don't ask stupid question."

சீச்சீ, நாயும் பிழைக்குமோ இந்தப் பிழைப்பு என்று மன்மோகன் சிங், தியாக சிகரம் சோனியா காந்தி, ஐமு கூட்டணிக் குழப்பத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியைப் பார்த்தும் காறித் துப்புவதோடு விட்டுவிடாமல், தேர்தல்களிலும் சரியான பாடம் புகட்ட வேண்டிய கடமை இந்திய மக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.








 
பதிவு பிடித்திருக்கிறதா? அருகில் இருக்கும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

ஆலிவர் ட்விஸ்டும் ஏய்ப்பதில் கலைஞனும்...!

இந்த வலைப் பக்கங்களுக்கு வாசிக்க வருகிறவர்களிடம் பொருளாதாரம், வங்கிகள், அரசியலைத் தொட்டு எழுதிய சில பதிவுகளில், சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் கதையைப் படிக்கும் படி சிபாரிசு செய்வது உண்டு. 
 
முக்கியமான காரணம், அந்தக் கதையின் தொடக்கமே இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி எப்படி கிராமங்களில் இருந்து மக்களை நகர்ப்புறத்துக்கு, சேரிகளில் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து தள்ளியது என்பதை விவரிக்கும், காலத்தின் கண்ணாடியாக இருப்பதை அறிந்து கொள்வதற்காகத் தான்.

ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப் பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன் புரிந்து  கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும். மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற பொதுவான பண்பு இது. 

தமிழில் மட்டுமல்ல, பொதுவாகவே வலைப் பதிவுகளைப் படிக்க வருபவர்கள், மேலோட்டமாகவே பார்த்து விட்டுப்போய் விடுகிறார்கள்.அவர்களைக் குறை சொல்லியும் பயனில்லை. இன்றைக்கு எழுத்து என்பது, அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு  ஓட வைக்கிற  ஃபாஸ்ட் ஃபுட் சமாச்சாரமாகவே ஆகிப்போன நிலையில், ஆழ்ந்த வாசிப்பு என்பது மிகவும் அரிதாகிப்போன விஷயமாகவே படுகிறது.

இப்படிக் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு,
அவஸ்தையோடு  பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியின் பக்க விளைவுகளில் எழுந்த கதை ஆலிவர் ட்விஸ்ட்! சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய இரண்டாவது கதை இது. ஒரு சிறுவனை மையமாக வைத்து எழுதிய கதை என்று பார்த்தால், அவருக்கு இது முதலாவது முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் பரவியதாக இருக்கும் இரண்டு சுவாரசியமான வாக்கியங்கள், உங்களுக்கும் கூடத் தெரிந்தது தான்,  இந்தக் கதையில் தான் இருக்கிறது!

ஒன்று, "சட்டம் ஒரு கழுதை!"

கிட்டத் தட்ட  நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் டிக்கென்ஸ் எழுதிய  இந்த வார்த்தை, இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!

இன்னொன்று, "தயவு செய்து ஐயா, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்!"

சாதாரண ஜனங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்து, இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் கெஞ்சல்!

தொழிற்புரட்சியின் முக்கியமான அம்சம், தேவை இருக்கிறதோ இல்லையோ, உற்பத்தி செய்து அதை நுகர்வோர் தலையில் கட்டி விடுவது! கிராமப் பொருளாதாரத்தின் வலிமை இருப்பதைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்ச்சி இல்லை என்றாலும் தேய்மானமாவது இல்லாமல் இருந்தது. தொழிற்புரட்சி அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டதையும், ஏழைகளையும் உற்பத்தி செய்ததையுமே, அதன்  ஆரம்ப காலத்தைத் தொட்டுச் செல்லும் கதை ஆலிவர் ட்விஸ்ட்.

Bentley's Miscellany என்ற பத்திரிகையில். 1837 பெப்ருவரியில் தொடங்கி, 1839 ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கதையாகத் தான், பிரிட்டிஷ்  வாசகர்களுக்கு அறிமுகமானது.

சட்டம் ஒரு கழுதை, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று சில வாக்கியங்களை அறிமுகப் படுத்திப் பிரபலப் படுத்தியது மட்டுமல்ல, அந்த நாளைய சரித்திரக் குறிப்பேடுகளில் கூடப் பதிவு செய்யப் படாமல் இருந்த ஏழை மக்களின் துயரங்களை விரிவாகப் பதிவு செய்த, சமூகப் பிரக்ஞையோடு  வெளிவந்த  முதல் ஆங்கிலப் புதினம் இது தான்


மற்ற எழுத்தாளர்கள், பணம் படைத்தவர்களைப் பற்றியே எழுதி எழுதி மாய்ந்துகொண்டிருந்த நேரத்தில், வெளிவந்த வித்தியாசமான எழுத்து இது.

கதை ஆலிவர் ட்விஸ்ட் என்ற சிறுவனைச் சுற்றியே ஆரம்பிக்கிறது. இவனைப் பெற்றுப்  போட்டதும் தாய் இறந்து விடுகிறாள். தந்தை யார் என்று தெரியவில்லை. ஏழைகளுக்கான சட்டம் என்ற ஒன்றின் கீழ் நிர்வகிக்கப் படும் ஒரு விடுதியில் முதல் ஒன்பது வருடங்கள்! இல்லாதவர்கள் அனுபவிக்கும் கொடுமை, பசியுடன் அந்த ஒன்பது வருடங்கள் இருப்பதை,கானா காப்பீடு, சமூகக் காப்பீடு என்று இப்போதுகூடச் சொல்லப் படுவதில் உள்ள ஓட்டைகளை, அந்தக் காலத்திலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்! காப்பீடுகள், சமூகப் பாதுகாப்பு என்ற வார்த்தை ஜாலங்கள், வாக்குறுதிகள்  எல்லாம் இன்னும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவே!

ஒன்பது வயது நிறைந்ததும், திருமதி மான் நிர்வகித்து வரும் அமைப்பில் இருந்து, வேலை செய்வதற்கு வேறோர் இடத்திற்கு அனுப்பப் படுகிறான் ஆலிவர் ட்விஸ்ட்! அங்கே தான், பசி தாங்க முடியாமல், "தயவு செய்து ஐயா! இன்னும் கொஞ்சம்!" என்று உணவுக்குக் கெஞ்சுகிறான்.
 
போனால் போகிறதென்று கொஞ்சம் சோறு போட்டால் இன்னும் கொஞ்சம் என்று கேட்பாயா என்று அங்கே இவன் மீது கோபம் வருகிறது ஐந்து பவுண்ட் கொடுக்கும் எவர் வேண்டுமானாலும் இவனை அழைத்துச் செல்லலாம் என்று முடிவாகிறது. 
 
அந்த நாளைய பிரிட்டிஷ் சமூக அமைப்பு, தங்களுடைய சொந்த ஜனங்களையே எப்படி நடத்தியது, ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் எப்படி, வீட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள் என்பதைக் கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக, ஆழ்ந்து யோசிக்க வைக்கிற பகுதி இது. பணம் படுத்தும் பாடு எப்படிப் பட்டது என்பதைப் போகிற போக்கிலேயே சொல்கிற இடமாகவும் இந்தப் பகுதி இருக்கிறது.

உள்ளூர் பாரிஷில் (ஒரு சர்ச் அமைப்பு) இருக்கும்  சோவெர்பெரி என்பவர்,  வேறு ஒரு மோசமான நபரிடம் தள்ளிவிட இருந்த நிலையில் தலையிட்டுத் தன வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மனிதர் நல்லவர் தான்! ஆனால், அவர் மனைவிக்கு, இந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை. அங்கே இருந்த வேலையாட்களுமே கூட இவனைக் கொடுமைப் படுத்துகிறார்கள். அதில் ஒருவனைத் திருப்பித் தாக்கியதால், தண்டிக்கப் படுகிறான். ஆலிவர். கொடுமை தாங்காமல், அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுகிறான்! பசியும், துயரமும் தொடர்ந்து துரத்துகிறது.

லண்டனை நோக்கிப் பயணப்படும் நேரத்தில்,  ஜாக் டாகின்ஸ் என்ற சம வயதுள்ள ஒருவனைச் சந்திக்கிறான்.

ஏய்ப்பதில் கலைஞன் (the artful dodger) என்றே அவனைத் தெரிந்து வைத்திருந்த வட்டாரத்தில்  அழைக்கப்படுவதில் காரணமில்லாமல் இல்லை. பிக் பாக்கெட் அடிப்பதில் கலைஞன் மட்டுமில்லை, ஆலிவர் மாதிரி ஆதரவற்ற சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய கூட்டத்தில் சேர்க்கும் வலைஞனும் கூட! தன்னுடைய குரு ஃபாகின்சிடம் அழைத்துப் போகிறான். எளிதாகச் சம்பாதிக்கலாம், சுகமாக வாழலாம் என்ற கனவுகளைத் தந்திரமாக இப்படிப்பட்ட ஆதரவற்றவர்களிடம் விதைத்து, அவர்களை உபயோகிக்கும் ஒரு கொடூரமான கும்பல் அது.

கைக்குட்டை விற்கிற சாக்கில் தங்களைப் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்து, ஆலிவர் இந்தக் கும்பலை விட்டு விலக முனைகிறான். பிக்பாகெட் அடிக்கிற முயற்சியில் டாகின்ஸ் அம்பலப்பட்டு, ஆலிவரும் இன்னொருவனுமாக டாகின்சுடன் தப்பித்து ஓடுகிறார்கள். மற்ற இருவரும் தப்பித்து விட, ஆலிவர் மட்டும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறான். நடந்ததைப் பார்த்த சாட்சிகளில் ஒருவர், ஆலிவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லவும், விடுவிக்கப் படுகிறான். பிரவுன்லோ என்ற முதியவர் இவன் மேல் இரக்கப் பட்டுத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஆனால், அதுவும் நிலைக்காமல் போகிறது. கும்பல் தலைவன்  ஃபாகின்ஸ், தன்னுடைய கையாளான நான்சி என்ற பெண்ணை அனுப்பித் தந்திரமாக ஆலிவரை மறுபடி கும்பலுக்குள் கொண்டு வந்து விடுகிறான். வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் முயற்சி ஒன்றில் ஆலிவர் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப் படுகிறான். எதிர்பாராத விதமாக அந்த முயற்சி தோற்றுவிடுகிறது, ஆலிவர் சுடப்படுகிறான். அந்த வீட்டில் இருப்பவர்களால்,
ஆலிவர் காப்பாற்றப் பட்டு, அவர்களுடைய அரவணைப்பும் கிடைக்கிறது.

இவனை மறுபடி கும்பலுக்குள் சிக்க வைத்த நான்சி, இவன் மீது இரக்கம் கொள்கிறாள். ஆலிவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தவிக்கிறாள். அதே கும்பலில் இருக்கும் இவளது காதலன் சைக்ஸ் எதிராக இருக்கிறான். திருட்டுக் கும்பலுக்குள்  மோன்க்ஸ் என்ற புது நபர் வந்து சேர்கிறான். ஆலிவரைத் தீர்த்துக் காட்டுவதில் அவன்  அதிக அக்கறை காட்டுகிறான். தொடர்ந்து நிகழும் மோதல்களில் சைக்ஸ் தன் காதலி நான்சியைக் கொன்று விட்டு, தப்பியோட முயலும்போது தானும் கொல்லப் படுகிறான்.

மோன்க்ஸ் ஏன் ஆலிவரைத் தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறான் என்ற மர்மமும் உடைகிறது. அவன் ஆலிவருக்கு சகோதரன் முறையானவன்.  ஆலிவர் ஒரு பணக்காரனின் வாரிசு என்றெல்லாம் தெரிய வருகிறது. ஃபாகின்ஸ் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறது. அப்புறம், பிரிந்திருந்த உறவுகள் எல்லாம் சேர சுபம் சுபமே என்று கதை முடிகிறது.

புத்தக விமரிசனம் என்று முழுக்கதையுமே சொன்னால் எப்படி என்று கேட்கிறீர்களா?

இங்கே கதையில்  பெரிதாக ஒன்றுமே இல்லை.தமிழில் அனாதை ஆனந்தன் என்ற பெயரில் ஏவிஎம் தயாரிப்பில்,  ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா, மாஸ்டர் சேகர் நடித்து, இதே கதை படமாகவும் வந்தது. இப்போது சொன்ன அவுட்லைனை வைத்து படமாக வந்திருந்தாலும், முக்கியமான ஒன்று மிஸ்ஸிங்! அது தான், எழுத்தாளன், தான் வாழ்ந்த காலத்தை எழுத்தில் பிரதிபலித்துக் காட்டியிருந்த விஷயங்கள்!  அதை விட்டு விட்டு படமாக எடுத்தபோது, அங்கே எதுவுமே இல்லை!

எழுத்தில் தெரியும் ஜீவனை, வாசிப்பின் வழியாக உணர முடிவது போல, மாற்று ஊடகமாகப் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடுவதுமில்லை. முக்கியமான காரணமாக எனக்குப் படுவது என்னவென்றால் மாற்று ஊடகத்தில் கொண்டு வரும்போது, எழுத்தின் ஜீவனைப் புரிந்துகொண்டு சொல்ல இங்கே எவரும் முனைவதில்லை என்பது தான்!

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தீர்களானால், ஏழாவது உலகம் கதை, (இன்னமும் படிக்கவில்லை) நான் கடவுள் படம் (பார்த்தாயிற்று) இவற்றில் பேசப்படும் பிச்சை எடுப்பவர்களின் நதி மூலம் இங்கே ஆலிவர் ட்விஸ்ட் கதையில் ஃபாகின்ஸ் கும்பலை வைத்து ஆரம்பிப்பதையுமே பார்க்க முடியும். இந்த அவலங்கள்,  பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை அடிமைப் படுத்தியவுடன் செய்த முதல் காரியம், கிராமங்கள் அழிக்கப் பட்டு, மக்கள் நகர்ப்புரங்களுக்குக் கூலிகளாக விரட்டப் பட்டதில் இருந்து ஆரம்பித்தது தான்! அதற்கு  முன்னால் இத்தகைய அவலங்கள்  இந்திய சமூகத்தில் இருந்ததே இல்லை! இந்திய கிராமப் பொருளாதாரம், சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரமாக, பகிர்ந்து கொள்கிற தன்மையில் இருந்தது, அங்கும் இங்குமாக சில கொடூரமானவர்கள் இருந்தாலும், ஒட்டு மொத்த சமுதாயமும் ஒரு தர்மகர்த்தா இயல்பில், எளியவர்களையும் அரவணைத்துச் சென்றதைக் கொஞ்சம் வரலாறு படித்தவர்களுமே தேடித் தெரிந்து கொள்ள முடிகிற விஷயம். இன்றைக்குக் குறிவைத்துத் தாக்கப் படுகிற இந்தியக் கலாசாரம், எளியவர்களுக்கு ஆதரவாகவே இருந்தது.

ஆலிவர் ட்விஸ்ட்! நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் எழுதிய கதை தான்! இன்றைக்கும் கூட, சமூகம், பொருளாதாரம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு சொன்ன படைப்பாகவும் இருப்பது தான் இதன் சிறப்பு.

நாவலை முழுதாகப் படித்துப் பாருங்கள்! எழுத்தின் ஜீவனை அங்கே தான் கண்டு கொள்ள முடியும்!


படித்ததும், பிடித்ததுமான புத்தகங்களைப் பேசுவதற்காகவே, தனியாக ஒரு வலைப்பூவைத் துவங்கி அதில் வெளியிட்ட புத்தக விமரிசனத்தின் மீள்பதிவு இது.. என்ன காரணமோ, ஆரம்பித்து ஐந்து மாதங்களாகியும் இந்தப் பக்கங்களுக்கு வருகிறவர்களைக் கூட சென்றடையவில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காக.

புத்தகங்களைப் படிக்கிற பழக்கம் வளர வேண்டும் என்று உரக்கச் சொல்வதற்காகவுமே கூட!.