பிரதமர் நரேந்திரமோடி நேற்று நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சக அமைச்சர்களுக்குத் தெளிவான அறிவுரைகள் சிலவற்றைத் தெரிவித்திருக்கிறார். முக்கியமாக அமைச்சர்கள் காலை 9.30 மணிக்கே அலுவலகம் வந்துவிட வேண்டும், கீழே பணியாற்றுகிறவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். வீட்டில் இருந்து வேலை செய்யக் கூடாது என்பதில் கண்டிப்புக் காட்டியிருக்கிறார். இதெல்லாம் ஒரு செய்தியா என்று கேட்கிறீர்களா? ஆமாம்! நிச்சயமாக! திமு கழகமும் காங்கிரசும் கூட்டணிதர்மத்தில் இணைந்து ஐமு கூட்டணிக்குழப்பம் இரண்டு வெர்ஷன்களிலும் அமைச்சர்கள் மீது மன்மோகன்சிங்குக்கு எந்தவித கண்ட்ரோலும் இல்லாமல் இருந்தது, அமைச்சர்கள் எப்படி ஆடினார்கள் என்பதெல்லாம் ஞாபகம் இருக்குமானால், இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தியே!
பங்க்சுவாலிட்டி பற்றி மட்டும் இல்லை, அமைச்சர்களுக்குத் தெளிவாக என்னென்னவெல்லாம் மோடி சொன்னார் என்பதை மேலே லிங்கில் முழுதாகத் தெரிந்து கொள்ளலாம்.
இதுவும் இன்றைக்கு ஊடகங்களில் வெளியான ஏட்டிக்குப் போட்டியான செய்தி!
கன்யாஸ்த்ரீகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்ட பிஷப் பிரான்கோ முலாக்கல் அரசியல் செல்வாக்குடன் கொக்கரிக்கிற மாதிரி KK சுபாஷ் வரைந்த கார்டூன் இது. கேரள லலித் கலா அகாடெமி விருதையும் பெற்றது. ஆனால் பாதிரிமார்கள் விடுவார்களா? இடதுமுன்னணி அரசைக் கண்டனம் செய்தவுடன் கேரள அரசின் தயவுடன் நடக்கும் கேரள லலித் கலா அகாடெமி விருதை வாபஸ் வாங்கி விட்டது. கார்டூனில் ஆட்சேபகரமாக அப்படி என்னதான் இருக்கிறதாம்?
கொக்கரிக்கிற சேவலாக பிஷப் பிரான்கோ முலாக்கல், அவரைத் தூக்கிப் பிடிப்பவராக கேரள MLA பிசி ஜார்ஜ், அவருடன் சேர்ந்து போலீசும் தாங்கிப்பிடிப்பதாக, பாலியல் சீண்டல் புகார் பிஷப் மீது கொடுத்த கன்யாஸ்த்ரீகள் தெறித்து ஓடுவதாக, கூடவே நக்கலாக விசுவாசம் ரட்சிக்கும் என்ற வாசகம் வேறு! இந்த நல்ல .மேய்ப்பனுடைய குச்சியில் பெண் உள்ளாடை தொங்குகிற மாதிரி வேறு! போதாதா? கத்தோலிக்க பிஷப்மார் கவுன்சில் பொங்கி எழுந்துவிட்டார்களாம்! பிணரயி விஜயன் அரசு தலையைத் தொங்கப்போட்டு சில்மிஷம் செய்த பாதிரிமாருக்குப் பணிந்து விட்டதோ என்ற கேள்வி நேற்று முழுக்க உலாவிக் கொண்டிருந்தது ஏட்டிக்குப்போட்டியான சங்கதி.
குமுதம் வார இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கும் பாட்டாளி பதில்கள் என்ற புதிய பகுதி இந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் வெளியான வினா - விடைகள் இதோ....என்கிறார் மருத்துவர் ராமதாசு.
படமே செய்தியும்! ஏட்டிக்குப் போட்டியுமாக! எப்படியென்று கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன்!
போகன் சங்கர் சொல்லியிருப்பது செய்தியுமல்ல! ஏட்டிக்குப் போட்டியும் அல்ல! ஏடாகூடம்!
அப்படிக் கண்ணால் பார்த்தது எல்லாம் நிஜமாகி விடுமா?
உன் கண் உன்னை ஏமாற்றினால் என்ன செய்வது?
"கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரித்து அறிவதே மெய்!" என்று பெரியவர்கள் அதனால் தான் சொல்லி வைத்து இருக்கிறார்கள்! இங்கே கீழே உள்ள படத்தைப் பாருங்கள்! ஒரே ஒரு கண் தானே! அதற்கு இப்போது என்ன வந்தது என்கிறீர்களா?
இரண்டும் ஒரே படம் தான்! ஆனால் அந்த ஒரே கண்ணைத் தான் பார்த்தீர்களா அல்லது வேறெதையாவது பார்த்தீர்களா?
இந்தோனேஷியாவில் உள்ள ஒரு விளம்பர நிறுவனம், ஜான்சன் அண்ட் ஜான்சனுக்காக இந்த விளம்பரத்தை உருவாக்கியிருக்கிறது! இணையத்தில் உங்கள் குழந்தைகள் என்னென்னவெல்லாம் பார்ப்பார்கள், பெற்றோர்களே கவனம் என்று ஒரு எச்சரிக்கைச் செய்தியாக இந்த விளம்பரம் உருவாக்கப் பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் எச்சரிக்கைச் செய்தியையா பார்ப்பார்கள்..........?!
oooOooo
"தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்" "தண்ணீரை வீணாக்காதீர்கள்" "தண்ணீரை அசுத்தப் படுத்தாதீர்கள்"
இப்படியெல்லாம் நிறைய இடங்களில் போர்டு பார்த்தாயிற்று! யாராவது, இந்த போர்டில் எழுதி இருப்பதைக் கொஞ்சமாவது மதித்து, அட்லீஸ்ட் ஒரு சொட்டுத் தண்ணீரையாவது மிச்சப் படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்ன!
யான் லு டாட் காம் இந்த வலைத் தளத்தில் ஒரு தங்க மீனை மிதக்க விட்டு, ஒரு கைகழுவும் தொட்டியை வித்தியாசமாக வடிவு அமைத்து இருக்கிறார்கள்! பாவப்பட்ட மீன் தொட்டி கம் கைகழுவும் இடத்தை நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும், நீர்மட்டம் வற்றி அந்த தங்க மீன் இறந்து விடுமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாக இருக்கும் இந்த வடிவமைப்பு, நாம் விரையம் செய்யும் தண்ணீர் எப்படி இந்த உலகில் உள்ள மற்ற ஜீவராசிகளை (சக மனிதர்களையும் சேர்த்துத் தான்) பாதிப்பதாக இருக்கிறது என்பதை யோசிக்க வைக்கிறது!
நிலத்தடி நீர் மட்டம் வேக வேகமாகக் குறைந்து, தண்ணீருக்கே கஷ்டப்படும் நிலையில், இந்த மாதிரி, க்ரியேடிவான சிந்தனைகள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன.
புரிந்தால் சரி!
oooOooo
"நான் இங்கிலாந்தை மூன்றாவது உலக நாடு என்று ஒருதரம் சொன்னால், நூறு தரம் சொன்ன மாதிரி"
என்ற மாதிரி ஒற்றை விரலை நீட்டி நடக்கும் காஸ்பர்
வாய்க் கொழுப்பு என்றால் அதை வாடிகன் ஆ''சாமிகளிடம் தான் நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்! போப் அரசர் இங்கிலாந்து விஜயத்தில் இருக்கிறார்! ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஏற்கெனெவே இங்கிலாந்தில் பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருந்ததை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!
"போப் பெனடிக்ட் எங்கே போனாலும், வில்லங்கம் அங்கே முன்னால் போய் ஆஜராகி விடுகிறது!
ஒரு மருத்துவ மனையில் கருத்தடைக்கான வார்டைத் திறந்து வைப்பது
உள்ளிட்ட யோசனைகளை ப்ரெயின் ஸ்டார்மிங் என்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதில், ஒரு அரசு ஊழியர் யோசனைகளாக சமர்ப்பித்த விவரம் வெளியே கசிந்து, பிரிட்டிஷ் அரசுக்குத் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது! சண்டே டெலிகிராப் பத்திரிகையில் நேற்றைக்கு இந்த செய்தி வெளியானதும், வாடிகனில் உள்ள பிரிட்டிஷ் தூதர் போய் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தாராம்!
போப்பின் வருத்தம் தீர்ந்ததா? அல்லது பாதிரி சில்மிஷப் பிரச்சினை தீர்ந்ததா?"
வாய்க் கொழுப்பு எங்கே வந்தது? போப் விஜயத்தில் அவரோடு கூட வரவிருந்த ஜெர்மானிய கார்டினல் வால்டர் காஸ்பர், "இங்கிலாந்துக்கு வருவது ஏதோ ஒரு மூன்றாவது உலக நாட்டுக்கு வருவதைப் போல இருக்கிறது" என்று உளறப் போக ஏற்கெனெவே அரசு முறை விஜயமாக போப்பை, மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து செலவு செய்து வரவேற்க வேண்டுமா என்று கொதித்துக் கொண்டிருப்பவர்களை இன்னமும் கொதிநிலைக்குக் கொண்டு போய்விடும் என்று முன்னெச்சரிக்கையாக, "உடல் நலம் சரி இல்லாததால்" காஸ்பர் திட்டமிட்டபடி போப்புடன் கூட வர முடியவில்லையாம்!
பாதிரி சில்மிஷங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகிறார்கள்! உண்மை வேண்டும், நியாயம் வேண்டும், தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வாடிகனை விரல் நீட்டிக் குற்றம் சுமத்துகிறார்கள்!செய்தி இங்கே
"நான் அப்படியே சாப்பிடுவேன்" "ஐ யாம் எ காம்ப்ளான் பாய்"
இந்த மாதிரிக் குழந்தைகளை மையமாக வைத்து விளம்பரப் படங்கள் நிறைய வளர்ந்திருக்கின்றன.குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டவை என்றாலும், டார்கெட் ஆடியன்ஸ் நாம் எல்லோருமே தான். அதுவும் தவிர மார்க்கெட்டிங் துறையில், ஒரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி முடிவு, குழந்தைகள் எதை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் முக்கியமான பங்காற்றுவதாகத் தெரிவிக்கிறது. இந்த வலிமையான செக்மெண்டை கவர்வதற்காகவே இன்றைய விளம்பரங்களில் மிகப் பெரும் பாலானவை, குழந்தைகளைக் குறிவைத்துவெற்றி பெற்றவைகளாகவுமே இருப்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
நம்முடைய முடிவுகளை, தீர்மானங்களை, எண்ணங்களை, வேறு யாரோ தான் எப்போதுமே தீர்மானிக்கிறார்கள்!
கொஞ்சம் நாசூக்காகச் சொல்வதானால், influences, influences all the way! இவைகள் இல்லாமல் நம்மால் சுதந்திரமாக முடிவு எடுக்கவே முடியாதா? அப்படி என்ன முடிவை நாம் சமீபத்தில் எடுத்திருக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடை தேடினோமேயானால், எப்போதுமே நாம் நமது முடிவுகளை அடுத்தவரைச் சார்ந்தே எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வரும்.
இந்த அடிப்படை உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க முனைந்து விட்டீர்கள் என்றால், முதலில் ஒரு சபாஷ்!
இந்தப் பதிவு உங்களுக்காகத் தான்! அடுத்தது என்ன என்பதைக் கொஞ்சம் பேசுவதற்காகத் தான்!
சரி! அப்படி எடுக்கப் படும் முடிவுகள் எல்லாமே, சிறந்தவை தானா? அல்லது, 'ஏதோ பத்துக்கு ஒண்ணு பழுதாகாம இருந்தாலே போதும்' ரகம் தானா?
இந்தக் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், முதலில்,
யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
அல்லது, இதையே வேறு விதமாகச் சொல்வதானால்,
யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்த இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டு பிடிப்பதில் கூட அவ்வளவு சிரமம் இல்லை! அதில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விட்டீர்களேயானால், உங்களை வெல்ல யாருமே இல்லை!
யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
சந்தையில் பொருட்களை வாங்குவதில், பெரியவர்களை விட குழந்தைகள் எடுக்கும் முடிவே அதிகமாக இருக்கிறது என்பதை சர்வே எடுத்துத் தெரிந்து கொண்ட விளம்பர நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை, குழந்தைகளை, இளம் வயதினரை மையமாகக் குறிவைத்தே விளம்பரம் செய்யப் பழகிக் கொண்டு விட்டன. இதை, உங்களுடைய வீட்டில், பல தருணங்களில், சொந்த அனுபவமாகவுமே பார்த்திருக்கலாம்!
இப்படியே, இந்தக் கேள்வியை இன்னமும் விரிவுபடுத்திப் பாருங்கள்! நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், யாராலேயோ தீர்மானிக்கப் படுகிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் அதை உணர்வதே இல்லை, ஆனாலும் பழக்கப் பட்டுப் போய் விட்டது! கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?
ஆனால் அது தான் உண்மை!பிறர் சொல்வதை கேட்க வேண்டாம் என்பதற்காக இல்லை, எதையும் சுயமாக ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம் பாருங்கள், அதைச் சொல்வது தான் இது! மந்தைத்தனம் என்பது இது தான்! ஆறாவது அறிவு, பகுத்தறிவு என்பதெல்லாம் பெயருக்குத் தான்! பகுத்தறிவு, இனமானம், சுய மரியாதை என்று சொல்பவர்களே இந்த மந்தைத் தனத்தில் இருந்து உங்களை விலக விட மாட்டார்கள்!
அதனால் தான் வறுமையே வெளியேறு!சிங்காரச் சென்னை மாதிரி வெற்று கோஷங்களில் பெரும்பாலான ஜனங்களை நீண்ட காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்க இங்குள்ள அரசியல் வாதிகளால் முடிகிறது.
டாஸ்மாக் வழியாக உங்களிடமிருந்து பறிக்கப் பட்ட பணம், அங்கே இங்கே என்று போய்வந்த பிறகு, தேர்தல் வரும் நேரங்களில், வாரம் ஐந்து நாளைக்கு அவித்த முட்டை சத்துணவாக அறிவிக்கப் படுகிற விதம் புரிகிறதா? என்றைக்கும் இல்லாத திருநாளாக, அடுத்த வருடம் தேர்தல் வருகிறது என்பதற்காக, சீர்கேடடைந்த ரோடுகளை எல்லாம் வருகிற மார்ச் மாதத்திற்குள் செப்பனிடப் போவதாக அறிவிப்பும் வருகிறது!
ஆறாவது அறிவு, பகுத்து அறிவது என்பதெல்லாம், கொஞ்சம் சுயசிந்தனை, சுய முயற்சியோடு, எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கிக் கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றறியேன் என்ற அளவோடு நின்று விடாமல், விடைகளையும் தேட முயற்சி செய்கிறவர்களுக்கு மட்டும்தான்!
அடுத்து, யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்த கேள்வியோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் நம்முடைய உழைப்பு, முயற்சிகள் எந்த அளவுக்கு கடலில் கரைத்த பெருங் காயம் போல வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும். மறுபடியும், புள்ளிராசா வங்கியையேஉதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்! அங்கே எல்லோரையும் திருப்திப் படுத்தக் கடுமையாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
எல்லோரையும் திருப்திப்படுத்த முயன்று தோற்று, எல்லோருடைய எரிச்சல், வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது மட்டுமே அங்கே நடந்தது.வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று எவரையுமே திருப்திப் படுத்த முடியாமல், ஒரு தலைமை நிர்வாகி புலம்பினாரே, "எல்லாமே இங்கே கம்மி தான்! ஆனாலும் வாங்க யாருமே வர மாட்டேன் என்கிறார்களே" அந்தக் கதைதான்!
எல்லோருக்கும் எல்லாமும்! சோஷலிசம்! கேட்பதற்கும், பேசுவதற்கும் மிகவுமே நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில்....?
கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுமாம்!
இது அனுபவத்தில் கண்டு சொன்னவர்கள் சொலவடை! கேள்வி கேட்காமல், ஆராய்ந்து பார்க்காமல், எவரோ எதற்காகவோ சொன்னதை அப்படியே நம்பிவிடுவதும் அப்படித்தான்!
ப்ரீத்திக்கு நான் காரண்டீ என்று அழகாகச் சிரித்துக் கொண்டு ஒரு பெண் சொல்வதைகேள்வி கேட்காமல் பார்ப்பவர் ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்கிற மாதிரித் தான் இங்கே எல்லாமும் இருக்கும்.
விளம்பரம் என்ற அளவில் சரிதான்! விளம்பரத்தை நம்பி வாங்குகிறவர் அளவில் ....?
சொல்லப் பட்ட மாதிரியே இருந்துதானாக வேண்டும் என்பது இல்லையே!
சொல்லோ, பொருளோ,அரசியலோ, பதிவுகளில் படிக்கும் விஷயங்களோ எதுவானாலும் சோதித்துப் பாருங்கள்!
யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளோடு, இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்!
இவையெல்லாம் உண்மை தானா? நம்புகிறமாதிரிச் சொல்லப் படுபவை எல்லாமே நம்பத் தகுதியானவைதானா?
ஏன், எப்படி, எதற்கு, எதனால், எதற்காக இப்படிக் கேள்வி மேல் கேள்வி கேட்காதவர்களுக்கு வாழ்க்கை இல்லை! வாழ்க்கையில் வெற்றியும் இல்லை!
உங்களுக்குக் கிடைக்கிற யோசனைகள் கூட சமயங்களில்யாரோ ஏதோ உள்நோக்கத்தோடு எதற்காகவோ போடுகிற 'இலவசங்கள்' தான்! இங்கே சிருஷ்டியில் எதுவுமே இலவசம் இல்லை!
இலவசமாக வருவதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!
தூண்டிலில் புழுவை வைப்பது மீனுக்கு இலவசம் தானா? மீன்கள் பேரில் கருணை கொண்டா புழுவை, சோளப் பொரியை அள்ளித் தெளிக்கிறார்கள்?
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அல்லது இலவசங்களே போதுமா?இந்த மாதிரி இலவசங்களாக வைக்கப் படும் புழுவிற்காக ஆசைப்பட்டுத் தன்னுடைய மொத்தத்தையும் இழந்து விடுகிற மீன்களாக ஆகிவிடப் போகிறோமா என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!
உங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அல்லது என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
பதிவர் உண்மைத் தமிழனுடைய பதிவைப் படித்து விட்டு எழுந்த சிந்தனையில், ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் சில மாதங்களுக்கு முன் பேசியிருந்தது தான் என்றாலும், கொஞ்சம் யோசித்துப் பார்ப்பதற்காக மீள்பதிவு! நடப்புச் செய்திகளோடு கொஞ்சம் அப்டேட் செய்யப் பட்டது.
******
மன்னிக்க வேண்டுகிறேன்! கொஞ்சம் கண்டுக்காம விட்டு விடவும் வேண்டுகிறேன்!
பாதிரிமார்கள் பாலியல் வக்கிரம், சில்மிஷங்கள் என்று கொஞ்சம் அத்து மீறலைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் வேளையில், போப் ஆண்டவர் இங்கிலாந்து விஜயத்தில் இருக்கிறார். பாதிரி சில்மிஷங்கள், சிறுவர்களிடம் செக்ஸ் வக்கிரங்கள் என்று திருச்சபைப் பிரமுகர்கள் மாட்டிக் கொண்ட பிறகு, ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி நாத்திகப் பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமில்லாமல், பாதிரி சில்மிஷங்களில் பாதிக்கப் பட்டவர்களும் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
போப் விஜயத்தில் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பணம் கொடுத்து வாங்க வேண்டிய டிக்கெட்டுக்கள் ஏராளமான எண்ணிக்கையில் விற்பனையாகாமல் தேங்கியிருக்கிற பரிதாபத்தோடு, அரசு வரிப்பணத்தில் இருந்து போப் விஜயத்துக்காகச் செலவு செய்வதா என்ற கேள்வியும் வலுவாக இங்கிலாந்தில் எழுந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன.
மனோன்மணீயம் நாடகக் காப்பியத்தில் வருகிற கெட்ட மந்திரி குடிலன் குணாதிசயமாகக் "கெஞ்சினால் மிஞ்சுவன்; மிஞ்சினால் கெஞ்சுவன்" என்றபடியே வாடிகனும், எதிர்ப்பு வலுக்கவும் "வருத்தம் தெரிவிக்கிற வேலையை" வேறு வழி இல்லாமல்,வழக்கம் போல செய்திருக்கிறது.
1510 இல், ஒன்றுமறியாத இளம் துறவியாயிருந்த மார்டின் லூதர் ரோமா புரிக்குச் சென்றார். பரிசுத்த நகரம் என அவருக்குச் சொல்லப்பட்டிருந்த அவ்விடம், உண்மையிலேயே அசுத்த நரகம் என்பதைக் கண்டு கொண்ட லூத்தரின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை. பாவ மன்னிப்புக்கென்று, பிலாத்துவின் ஏணிப்படிகளில் முழங்கால்களினாலேயே ஏறும்போது “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்ற இடிமுழக்கக் குரல் ஒன்றைக் கேட்டார்.
அந்த நாட்களில், புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புனித பேதுரு பேராலயத்தின் கட்டுமானப்பணிக்கானப் பணத்தேவை மிகவும் பெரிதாயிருந்தது. இதுதான் ‘பாவமன்னிப்புச் சீட்டு’ என்ற பெரிய ஏமாற்றுவேலைக்குக் காரணமாக அமைந்தது.
இந்த ரோமாபுரிப் பயணத்தைப் பற்றிப் பின்னாளில் லூத்தர் இவ்வாறு கூறினார்: “நரகம் என்ற ஒன்று இருக்குமானால்,அதின்மேல்தான் ரோமாபுரி கட்டப்பட்டுள்ளது,” என ரோமாபுரியின் தெருக்களில் மக்கள் பேசிக்கொண்டுசெல்வதை என் செவிகளாலேயே கேட்டேன்."
இப்படிப் பதினாறாம் நூற்றாண்டில் கிறித்தவம் இரண்டாகப் பிளக்கும் அளவுக்கு வாடிகனின் செயல்பாடுகள் இருந்தன. அம்பலப் படுத்தப் பட்டு, அசிங்கப்பட்ட பிறகும் கூட வாடிகன் தன்னைத் திருத்திக் கொண்டதே இல்லை இப்போது கிளம்பியிருக்கும் பாதிரி சில்மிஷங்கள், பாலியல் குற்றச்சாட்டை வாடிகன் தீவீரமாக மறுத்துப் பார்த்தது. எதிர்ப்புக் குரல்கள் வலுக்க ஆரம்பித்தவுடன், இப்போது வருத்தம் தெரிவிக்கும் படலம் நடந்தேறியிருக்கிறது. அவ்வளவு தான்!
ட்விட்டர் புகழ் சசி தரூர் மறுபடியும்ஒரு பரபரப்பான செய்தியின் நாயகனாகஆகி இருக்கிறார்! இந்தத் தடவை, டிவிட்டரில் சிக்கனத்தை வெறுமே வாயளவில் போதிக்கும் புனிதப் பசுக்களோடு ஒன்று சேர்ந்து காட்டில் கிளாஸ் ஜனங்களுக்கு உதவுகிற மாதிரி டிவிட்டியோ வேறு அரசியால் பரபரப்பிலோ இல்லை! இந்த ஐம்பத்து நான்கு வயது இளைஞர், மூன்றாவது திருமணத்துக்குத் தயாராகி வருவதாக, வதந்திகள் உலாவுகின்றன.
முதல் திருமணம், அவருடன் கொல்கத்தாவில் ஒன்றாகப் படித்த திலோத்தமா முகர்ஜியுடன்! அப்புறம், தரூர் ஐ நா வில் பணிபுரிந்து வந்த போது கனடிய அரசு ஊழியராக, அமெரிக்காவில் ஆயுதக் குறைப்பு விவகாரத் துறையில் பணியாற்றி வந்த கிறிஸ்டா கைல்சுடன் திருமண வாழ்க்கை!
இப்போது,முப்பது வருடங்கள், ஐ.நாவில் பணியாற்றி விட்டு, ஐயா இந்தியாவில் முழுநேர அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும் வந்துவிட்ட படியால், இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்து விட்டு, மூன்றாவதாக ஒரு காஷ்மீரிப் பெண்ணை, சுனந்தா என்று பெயர், துபாயில் இருந்தவர், தற்சமயம் ஒரு ஸ்பா(பெரிய அளவிலான அழகு நிலையம்) நடத்தி வருகிறாராம்!அவரை அமைச்சர் திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தகவல்கள் சொல்கின்றன.
அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், மிக நாகரீகமாக இந்தச் செய்தியைப் பற்றிப் பேசும்போது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, உரிமைகளை மதிக்கும்படி வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சொல்லவேண்டியதை, உரிய தருணத்தில் அவரே சொல்வாராம்!
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்!
அந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது! ஆனால், ஊனமுற்ற சிறுவர்களிடம்பாதிரிமார்களின் பாலியல் சில்மிஷங்களைக் குறித்த கண்டனங்கள் வலுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அதை மூடி மறைத்ததாக, பதவி விலகவேண்டும் என்று தன்னைக் குறித்தே கண்டனங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போதைய போப் செய்த காரியம் அப்படித்தான் இருக்கிறது!
போப் பெனெடிக்ட், வெள்ளிக் கிழமை மாலை, எந்தக் கவலையும் இல்லாமல் தன்னுடைய இல்லத்தில் சினிமாப் பார்த்துக் கொண்டிருந்ததாகநியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்தச் செய்தி சொல்கிறது! Under the Roman Sky என்ற படத்தைப் பார்த்து ரசித்து விட்டு, போப் மிகவும் உபயோகமான படம் என்று சிலாகித்துச் சொன்னதாக வாடிகனின் சனிக்கிழமை செய்திக் குறிப்பு சொல்கிறது!
ஜெர்மானியர் ஒருவர் போப்பாக இருக்கும் இந்தத் தருணத்தில். ஜெர்மானிய மக்கள் சர்ச், வாடிகன் மீதான நம்பிக்கையை வேகமாக இழந்து வருகிறார்கள்! பதினெட்டு சதவீத ஜெர்மானியர்கள் தான் கத்தோலிக்க சர்ச் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பும் சொல்கிறது.
oooOooo
மீண்டும்! மீண்டும்! சானியா மிர்சா!
இந்த இளம் டென்னிஸ் வீராங்கனை, மீண்டும் மீண்டும் சர்ச்சையில் மாட்டிக் கொள்வது வாடிக்கையாகிப் போனதைப் போலவே, இவரது திருமணம் குறித்த தகவல்களும் மேலும் மேலும் குழப்பிக் கொண்டிருக்கின்றன!
டென்னிஸ் விளையாட்டில், இந்தியப் பெண் ஒருவர், நம்பிக்கையூட்டும் விதத்தில் வளர்ந்து வருவதாகத் தான் ஆரம்பத்தில் தோன்றியது. குட்டைப் பாவாடை அணிந்து ஆடியதைக் கண்டித்த மதகுருமார்களுக்கு, பர்தா அணிந்தா டென்னிஸ் விளையாட முடியும் என்று எதிர்க் கேள்வி கேட்டு எரிச்சலை அதிகப் படுத்தினார்.
சானியாவின் புகழுக்கு அவருடைய ஆட்டத் திறமை காரணமில்லை என்று ஓட்டப் பந்தய வீராங்கனை பி டி உஷா சொன்னது நிஜம்! கடந்த பதினெட்டு மாதங்களில் கலந்துகொண்ட போட்டிகளில் தொடர்ந்து சரிவையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். குடும்ப நண்பர் ஒருவர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது! ஒத்து வாழ முடியாது என்பதைப் பரஸ்பரம் புரிந்து கொண்டு, அந்த திருமணம் நிறுத்தப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.
திரைப்பட நடிகர் ஷாஹித் கபூர், சக டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி இருவருடனும் நெருக்கமாகப் பழகியதும் பத்திரிகைகளில் அரசல்புரசல்களாக அடிபட்டது தான்! திடீரென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குடன் திருமணம், துபாயில் குடியேற்றம் என்று அறிவித்த நிலையில் பிரச்சினைகள் எழுந்தன. மதத் தலைவர்கள் தலையிட்டு, சோயப்-ஆயிஷா விவகாரத்தைத் தீர்த்து வைத்ததாக வெளியில் சொல்லப் பட்டாலும், ஒரு பெருந்தொகையைக் கொடுக்க ஒப்புக் கொண்ட பிறகே(பதினைந்து கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள்!), விவாகரத்து என்பது சுமுகமாக ஒப்புக் கொள்ளப் பட்டதாக செய்திகள் கசிந்தன. இந்த விவகாரத்தில் சோயப் தொடர்ந்து சொன்ன பொய்களை ஒப்புக் கொண்ட மாதிரியே அடுத்தடுத்து வந்த செய்திகள் காட்டின.
திருமணம் நடைபெறுவதற்கு முன்பேஒன்றாகப் பழகியதற்கு எதிராகடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் ஆகியோருக்கு எதிராக முஸ்லிம் மதத் தலைவர்கள் ஃபத்வா பிறப்பித்துள்ளனர்.இருவரும் தங்களின் நடவடிக்கைகளால் இஸ்லாம் மற்றும் முஸ்லீம் சமூகத்திற்கு களங்கம் விளைவித்துவிட்டதாக சன்னி உலமா அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து சானியா, ஷோயப் இருவருக்கும் எதிராகஃபத்வா பிறப்பித்துள்ள சன்னி உலமா தலைவர்கள், முஸ்லீம்கள் யாரும் அவர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சானியா என்றாலே சர்ச்சை, திருமணப் பேச்சு வரும்போதெல்லாம் பிரச்சினை என்றாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது.அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமையில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது!
oooOooo
வலைப் பக்கங்களை வடிவமைப்பதில் ஒரு போட்டியை வீப்லி தளம் அறிவித்திருந்ததில், ஒரு தீமை எடுத்துக் கொண்டு வாசுதேவன் என்ற இருபது வயது இளைஞன் சமர்ப்பித்திருந்த ஒரு வடிவமைப்புக்கு, உங்கள் ஆதரவு வாக்குகளை அளிக்க வேண்டும் என்று சென்ற பதிவில் வேண்டுகோள் விடுத்திருந்தேன்! அதை ஏற்று வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி!
கூகிள் விவகாரத்தில், நண்பர் ரவி எழுப்பிய ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பதை, இப்போது தான் கவனித்தேன்! கீழே அவர் தன்னுடைய பின்னூட்டத்தில் எழுப்பியிருந்த கேள்வி!
Do you think that there is US Government behind Google's action? It is losing around $4 billion because of pulling out of china immediately and much more in the times to come. Just because it is not able to become number one, there is absolutely no business sense for any one to throw away $4 billion. same way, I do not think US government can have such a big clout in Google's decision. If US government has such big clouts in many US companies, there will not be big US companies having their head quarters abroad to evade US tax laws. As for as action against Toyota is concerned, it is a revenge for the humiliation US automakers have been facing for more than 10 years. Last 10+ years, Toyota Camry has been the number 1 car. the number 2 has been Honda Accord. This is a big humiliation considering that the Car was invented in US! This is first time they are tasting the blood of Toyota and so they are going great guns behind them.
வருகிற செய்திகள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடியதாக இருந்ததில் உண்மை இன்னது தான் என்று போட்டு உடைத்து விட முடிவதில்லை. கூகிள், வெளியேறிவிடுவேன் என்று சென்ற ஜனவரி 12 ஆம் தேதி அறிவித்த போதும் சரி, அதற்குப் பிறகு ஹிலாரி கிளிண்டன் இணைய சுதந்திரத்தைப் பற்றி உபதேசம் செய்த போது, அதைச் சீன அரசு முளையிலேயே கிள்ளிஎறிந்த செய்தியிலும் சரி அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க அரசோடு ஒருங்கிணைந்து செயல்படுகிற ஒரு சித்திரம் கிடைத்தது.அதில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் தேவைப் படுவதாக எனக்குத் தோன்றவில்லை. அமெரிக்க அரசை, அதன் முடிவுகளை, வங்கி, நிதித்துறைகளுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கத் தொழில் துறைதான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.
அடுத்து, அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க வரிச் சட்டங்களை ஏமாற்றுவதற்காகவே வெளிநாடுகளில் தலைமையகங்களை வைத்திருப்பது! கேய்மன் தீவுகளில் இருந்து, துபாய் வரை வரி ஏமாற்றுகிறவர்களின் சொர்கங்கள் நிறைய உண்டு! முப்பதே ஆண்டுகளில் துபாய் கொழித்தது, எண்ணெய் விற்று அல்ல! தாவூத் இப்ராஹீம் மாதிரி நிழல் உலக தாதாக்கள், வரி ஏய்ப்புச் செய்கிறவர்கள், உல்லாசம் தேடி வருகிறவர்கள் இப்படிப் பலவிதமான நபர்களுக்கும் இடம் கொடுத்துத் தான், துபாய் காசு கொழிக்கும் பிரதேசமாக உருவானது, பிழைப்புத் தேடி வந்தவர்களை அடிமைகளாக நடத்தி உருவாகி இருக்கும் நவீன அடிமை சாம்ராஜ்யம் என்பதும் இந்தப் பக்கங்களில் பொருளாதாரம் குறித்த பதிவுகளில் பேசியிருக்கிறோம்!
" we here highly resolve that these dead shall not have died in vain, that this nation under God shall have a new birth of freedom, and that government of the people, by the people, for the people shall not perish from the earth" கெட்டிஸ்பர்க் பிரகடனத்தில் ஆப்ரஹாம் லிங்கன் இப்படி முழங்கியதுபோல இப்போது நடைமுறையில் இல்லை என்பது வரை சரிதானே ரவி! கூகிள் எடுத்த முடிவு, அதைத் தனிமைப் படுத்தியிருக்கிறது, மற்ற நிறுவனங்கள் அடக்கி வாசிக்கவே விரும்புகின்றன. அமெரிக்க அரசு சீனக் கரன்சியின் மதிப்பைக் கூட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தததற்குப் பலன் கிடைத்திருக்கிறது. உடனடியாகச் செய்தால், அமெரிக்காவுக்குப் பணிந்தது போல ஆகிவிடும் என்று சீனா, பரிவர்த்தனை விகிதத்தைப் படிப் படியாக உயர்த்தச் சம்மதித்திருப்பதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
கார்டியன் நாளிதழில் இப்படி வந்திருக்கிறது:"This is pure dog-whistle politics. Western governments, especially in the US, engage in endless posturing about human rights, but rarely do anything to endanger their economic interests. But governments do care about restraints on trade and are minded to take action to deal with them. As General de Gaulle, paraphrasing Lord Palmerston, once observed: "Great nations do not have friends; they only have interests." By aligning their company's commercial interests with the wider economic interest of the US, the Google boys have begun to recruit powerful allies "
இப்போது நான் சொல்ல வருவது தெளிவாக இருக்கிறதா, திரு ரவி?
******
Christians in Britain are being treated with disrespect and apparent discrimination unacceptable in a civilised country, according to a group of senior bishops led by Lord Carey, former archbishop of Canterbury.
இப்படிப் புலம்புகிற அளவுக்குப் பாதிரிமார்களின் செய்கைகள், நடத்தை கொண்டுபோய் விட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதாக மட்டும் காணோம்! எல்லா இடங்களிலும் ஏசு என்னோடு வாக்கிங் வருகிறார் என்று ஊழியம் நடத்திக் காணிக்கைகளில் கோடி குவித்துவிட முடியுமா என்ன! காருண்யமே இல்லாமல் ஒரு கல்லூரி, ஜெப ஊழிய கோபுரங்கள், விசுவாசமாகக் காசைக் கலெக்ட் செய்து கொட்டும் அடிமைகள் என்று ஊர் ஊராக பிரான்ச் ஆரம்பிக்க முடியுமா என்ன?
The church has been tone deaf and dumb on the scandal for so long that it’s shocking, but not surprising, to learn from The Times’s Laurie Goodstein that a group of deaf former students spent 30 years trying to get church leaders to pay attention.
“Victims give similar accounts of Father Murphy’s pulling down their pants and touching them in his office, his car, his mother’s country house, on class excursions and fund-raising trips and in their dormitory beds at night,” Goodstein wrote. “Arthur Budzinski said he was first molested when he went to Father Murphy for confession when he was about 12, in 1960.” இப்படி நடந்த அசிங்கத்தை சொல்லிவிட்டு அப்படியே சந்தடி சாக்கில் போப்புக்குப் பதிலாக நோப் வர வேண்டும் என்று, மகளிர் இட ஒதுக்கீட்டைக் கேட்கிறார் இந்தப் பெண்மணி!
நான் அப்படித்தான் இருப்பேன்! எவன் எப்படிச் சொன்னால் எனக்கென்ன என்று அலட்சியம் காட்டும் போப்! வீடியோவில் பார்க்க!
******
நண்பர் அமர்ஹிதூர், முந்தைய பதிவில், பாதிரி சில்மிஷங்களைப் பற்றித் தொட்டு எழுதியிருந்ததற்கு, எல்லாமே அழுகிப் போனது தான், இதில் அது என்ன இது என்ன என்கிற மாதிரி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். பொதுவாக, ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கை அது எப்படிப்பட்டதாகவே இருந்தாலும், அதை விமரிசிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால், ஒருவருடைய நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை, பொதுத் தளத்திற்கு வரும்போது அது விமரிசனத்திற்கு உட்பட்டது தான்! அது, இது, எதுவாக இருந்தாலுமே!
பதிவைக் கொஞ்சம் கவனித்துப் படித்தால், நித்தியானந்தாவாகட்டும், ஜெயேந்திரராகட்டும், அல்லது சில்மிஷங்கள், பாலியல் வக்கிரங்களில் ஈடுபடுகிற பாதிரிகள் எவரானாலும், தவறு செய்தவன் தண்டிக்கப் பட்டே ஆக வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து மாறுபாடே இல்லை. அதே நேரம், இப்படி சில சில்லறைகள் செய்யும் சில்மிஷங்களை வைத்து, ஒட்டு மொத்தமாக ஒரு நம்பிக்கை, அல்லது மரபுகளை பொத்தாம் பொதுவாகக் கையை நீட்டி விமரிசித்து விட முடியாது என்பதிலும், நான் தெளிவாகவே இருக்கிறேன்.
ஸ்ரீ அரவிந்தர், அன்னையிடம் எனக்கிருக்கும் ஈடுபாட்டைக் குறித்துக் கூட சில கேள்விகள், அது மட்டும் ஒழுங்கோ என்ற மாதிரியான கேள்விகள் வந்திருக்கின்றன. அங்கேயே கூட, என்னுடைய அனுபவங்கள் மட்டுமே என்னுடைய நம்பிக்கையைத் தீர்மானிக்கின்றன என்பதைச் சொல்லி இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கைகளை எவர் மீதும் திணித்ததில்லை, ஏற்றுக் கொண்டாகவேண்டும் என்று எதிர் பார்த்ததுமில்லை. எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டுவிடுகிற பழக்கம் இல்லை. அதே நேரம், கேள்விகள் என்பது உண்மையைத் தேடுவதற்காகவே, புரிந்து கொள்வதற்காகவே!
இங்கே தமிழகத்தில் என்ன நடந்தது?
நித்தியானந்தா -ரஞ்சிதா விவகாரம், என்னவோ வெடிகுண்டு வந்து விழுந்து விட்ட மாதிரி, பூமிப் பந்து சுழல்வது அப்படியே நின்று போன மாதிரி, இங்கே ஊடகங்களால், திரும்பத் திரும்ப பதிவர்களால் பேசப் பட்டுக் கொண்டே இருந்தது. அடுத்தவன் படுக்கையை எட்டிப் பார்க்க விரும்புகிற அற்பத்தனத்தைத் தவிர, அந்த செய்தியால் வேறு எந்தப் பயனுமே இல்லை! நித்தியானந்தாவோடு வேறு வகையான பேரம் படியாமல் போனதால், இந்த விவகாரம் கிளப்பப் பட்டது என்று ஒரு வலுவான சந்தேகம் விவரம் தெரிந்தவர்களால் எழுப்பப் படுகிறது. இன்னொரு ஊடகம், இதை ஸ்பெஷல் எடிஷனாகப் போட்டு, காசு பார்த்தது! பர்மா பஜாரில் ஐநூறு முதல் எண்ணூறு ரூபாய் வரை சிடிக்கள் விற்பனையான வேடிக்கையும் கூட நடந்தது என்றால்....!
தொழில் முறை நீலப் படங்கள் கூட இந்த அளவுக்கு விலை போவதில்லை என்று நண்பர்கள் சொல்லக் கேட்கும்போது இதை என்னவென்று சொல்வது?பரபரப்புச் செய்திகளாக வருவதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிற போக்கை, எங்கே போகிறோம் என்ற இதே கேள்வியை முன்னால் புவனேஸ்வரி விவகாரம் இங்கே பற்றிக் கொண்டு எரிந்த தருணத்திலும் எழுப்பியிருக்கிறேன். அதை இங்கேயும் பார்க்கலாம்!
கிறித்தவ நிறுவனங்கள் தொண்டு என்ற பெயரில் நிறைய இடங்களில் சில்மிஷங்கள், பல சமயங்களில் சண்டியர்த்தனங்களோடு கூடஇருந்ததுண்டு என்பதை நிறைய சம்பவங்களைத் தொகுத்து என்னால் தர முடியும். ஆனால், அதைத் தொட்டு எழுதுவது, மத நம்பிக்கைக்கு எதிரானது என்ற அளவில் மட்டுமே குறுகிப் போய்விடக் கூடியதாகிவிடுமே என்பதால், பொதுவாக எந்த ஒரு மத நம்பிக்கை, பழக்கங்களையும் தொட்டு எழுதுவதில்லை. சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் கூட இந்தக் கிறித்தவத் தொண்டு எப்படி இருந்தது சட்டம் எப்படி இருந்தது என்பதை ஒரு இங்கே சாம்பிள் பார்க்க முடியும்.
மத குருமார்கள் எப்படி ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அதையே வேத வாக்காக எடுத்துக் கொள்பவர்கள் பலர் என்ன மாதிரிக் கொடும் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை இந்த பக்கங்களின் பல பதிவுகளில் பார்க்க முடியும்! இதில் எந்த ஒரு ப்ரான்டையும் விட்டு விடவில்லை!
இந்த தேசம், மக்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? இந்தக் கேள்வியைக் கேட்டு, சரி செய்துகொள்ளாமல் போனால் என்னவாகப் போகிறோம் என்பதை எந்த அருள் வாக்குச் சித்தர்களிடம், ஜெப ஊழியம் செய்து அற்புதங்களை என்னவோ நாயர் கடை டீ போல வியாபாரம் செய்து கொண்டு இருப்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
எங்கே போகிறோம்? இந்தக் கேள்வி வாழ்க்கையில், ஒவ்வொரு தருணத்திலும் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியது, பயணம் செய்யும் பாதை சரிதானா என்பதில் .கவனமாக இருக்க வேண்டியது என்பதைத் தவிர வேறு இதற்கு மேலும் என்ன சொல்ல முடியும்?
பிரேமானந்தா, நித்யானந்தா விவகாரம் மனித இயல்பாக ஆண் பெண் உறவு என்ற அளவில் தான் இருந்தது! ஏற்படுத்திவைத்திருந்த புனித பிம்பம், சிலருடைய சுயநலன்களுக்காக போட்டு உடைக்கப் பட்டது என்ற அளவில், அவனவன் செய்ததுக்கேற்ற பலனை அல்லது தண்டனையை அனுபவித்து விட்டுப் போகட்டும் என்று போக முடியும்! தப்பு செய்தவன், தண்டிக்கப் பட்டே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமே இல்லை!
அதே நேரம், ஒரு கொலை வழக்கில், அப்ரூவர் உட்பட வரிசையாக இது வரை, 57 சாட்சிகள் தாங்கள் முன்னால் சொன்னதற்கு மாறாகப் பிறழ் சாட்சியம் அளித்து, அந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் பிசுபிசுத்துப் போக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்குப் பின்புலம் என்ன, அரசியல், பணபலம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே, அதைப் பற்றி எந்த ஊடகமும், கழகமும் கண்டு கொள்ளவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
இந்தப் பிறழ் கூத்து எல்லாம் இங்கே தான்!
அங்கே, வாடிகன் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் விவகாரங்களெல்லாம், இப்போது பொத்தல் பெரிதாகிப் போனதால் வெளியே வந்து நாறிக் கொண்டே இருக்கிறது! பாதிரிகளுக்கு செக்ஸ் சில்மிஷம் செய்வதற்கு சிறுவயதுப் பையன்கள் தான் வேண்டுமாம்! அப்படி, போப்பின் சுற்றுப் பரிவாரங்களுக்கு சிறு பையன்களை ஏற்பாடு செய்து தந்த ஒரு உள்வட்டப் பாதிரி சிக்கியதில் இருந்தே, இப்போதுள்ள போப் பெனெடிக்ட் மீது, பாலியல் சில்மிஷம், பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்ந்து புகார்கள், வழக்குகள் என்று தினசரி மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக இருக்கிறது.
வாடிகன், பாதிரிகள் மீதான சூடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, அவர்கள் செய்த சில்மிஷங்களைப் போல!
டொனால்ட் மார்ஷல் என்கிற 46 வயது மெக்கானிக், போப் பெனெடிக்ட் பாதுகாக்கும் பாலியல் வக்கிரப் பாதிரி மர்பியால் பாதிக்கப் பட்டவர் சொல்கிறார்: "போப் ஆவதற்கு முன்னால், மர்பி என்ன செய்தாரென்று நன்றாகத் தெரிந்தும், அதைக் குறித்து ஒன்றுமே செய்யாமல் இருந்த ஒரு நபரைப் பற்றித் தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்!" இவர், 1977 ஆம் ஆண்டு, பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருந்தபோது, பாதிரி மர்பியால் பாலியல் வக்கிரத்துக்கு ஆளானவர். மேலும் சொல்வது, " இந்த போப் ஒரு மோசடிப் பேர்வழி, ஒரு வேஷதாரி!"
தன்னுடைய மோசமான அந்தத் தருணங்களை டொனால்ட் இப்படி நினைவுபடுத்திச் சொல்கிறார்! அவருடைய அறைக்குப் பாதிரி மர்பி வந்தார், பக்கத்தில் அமர்ந்தார். பைபிளை வாசிக்க ஆரம்பித்தார். "அப்புறம் என்னுடைய முழங்காலில் கையை வைத்தார், முத்தமிட ஆரம்பித்தார், அப்புறம் அவருடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, அப்போது எனக்குப் பதின்மூன்று வயது தான்.".
பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றம் செய்வதற்கு, பைபிள் வாசிப்பது ஒரு வழி! என்ன ஒரு கொடுமை?
பாதிரியார்களால் கெடுக்கப் பட்டவர்களுக்கான நிவாரண அமைப்பு (Survivors Network of Those Abused by Priests) ஒன்றின் இயக்குனர் பீடர் ஐஸ்லி, "பெனெடிக்ட் இது சம்பந்தமாக அனைத்துத் தகவல்களையும் தரவேண்டும், இங்கே சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறையை மூடி மறைப்பதற்கு, மேலே இருப்பவர்கள் செய்த சதியை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்!" என்று சொல்கிறார்!
இதை எழுதிய பிரான்க் ப்ரூனி ஏனோதானோவென்று எழுதியவர் அல்ல! வாடிகனில் பல வருடங்களாக செய்தியாளராக இருந்திருக்கிறார்.1993 இல் “A Gospel of Shame: Children, Sexual Abuse and the Catholic Church,” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.. 2002 இல் இதன் திருத்தப்பட்ட பதிப்புக் கூட வந்திருக்கிறது.
வீடியோவைப் பார்ப்போம். நமக்குத் தெரிந்ததெல்லாம், அது ஒன்று தானே!
oooOooo
தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசுவதில், பீற்றிக் கொள்வதில் அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்கா மட்டும் தான்!
ஸ்டாப், ஸ்டாப், நான் கூகிள் பிரச்சினையைப் பேச வரவில்லை!
அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தில், பிஸ்கடாவே என்ற நகரம்! போன வருடம் மட்டும், நானூறுக்கும் மேற்பட்ட புகார்கள், நாய்கள் அதிக சத்தம் போட்டுக் குரைப்பது தொந்தரவாக இருக்கிறதென்று!
நம்மூராக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தான்!
ஆனால் அங்கே, நாய்கள் குரைப்பது ஒரு எல்லைக்கு மேல் அதிகமாக இருந்தால், நாயின் உரிமையாளருக்கு அறுநூறு டாலர்கள் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்கள்!
யூட்யூபில் இந்த செய்தியை முதலில் பார்த்தது ஐடிஎன் செய்திகளில் தான்! அங்கே பார்த்த சுவாரசியமான இரண்டு பின்னூட்டங்கள்.
--அடுத்தாற்போல அவர்கள் அழகாயில்லை என்பதற்காக அபராதம் விதிப்பார்களோ?
-- நாய் என்றால் குரைக்க வேண்டும், இல்லையா?
அமெரிக்கா! ஓ, அமெரிக்கா!
oooOooo
படம் பாத்தீங்க இல்லையா! நீங்களே பதவுரை, பொழிப்புரை எல்லாம் எழுதிக்குங்க! அப்படியே, இப்படிப்பட்ட ஆசாமிகளிடம் நம்முடைய பிரதமர் எதுக்கு மண்டியிட்டு, ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்னு முடிஞ்சா பின்னூட்டத்தில் வந்து சொல்லுங்க!
oooOooo
நம்மூரில் கல்யாணம், கருமாதி, தேர்தல் இப்படி என்ன வந்தாலும் ஒருகாலத்தில் கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் எட்டு மைல் சுற்றளவுக்குக் கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கும்.
இப்போது நாகரீகமாக பத்தடி உயரத்திற்கு பாக்ஸ் ஸ்பீக்கர்களை வைத்து உயிரை வாங்குகிறார்கள்.
பரீட்சை நேரம், வானொலியின் ஒலி அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், படிக்கிற மாணவர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் என்ற நளினமான அறிவிப்புக்கள், கேட்டுக் கொண்டிருந்ததெல்லாம் முன்னொரு காலம்! கனவில் தான் மறுபடி பார்க்க முடியும் போல இருக்கிறது!
என் பக்கத்து வீட்டுக்காரிக்கு இரண்டு பிள்ளைகள்! பெண் இப்போது தான் +2 பரீட்சை முடிந்தது! அடுத்து ஒரு பையன், பத்தாவது வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுதிக் கொண்டிருக்கிறான்! அம்மாக்காரி, வீட்டில் டீவீயைப் பெரிதாக அலற விட்டுக் கொண்டு, படம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்! அல்லது பெரிதாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள்! பிள்ளைகளிடம் வம்பு அல்லது செல் போனில் உறவுக்காரர்கள் எவரிடமாவது வம்பு, எல்லாம் எட்டுத் தெருவுக்கு கேட்கிற மாதிரித் தான்!
பிஸ்கடாவே சட்டம் இங்கும் வந்தால் எப்படி இருக்கும்?