"சென்னை: வீட்டில் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாக கைதான நடிகை புவனேஸ்வரி தாக்கல் செய்த ஜாமீன் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
அடையாறு பகுதியில் ஆள் வைத்து வீட்டில் விபச்சாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புவனேஸ்வரி விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது மகன், தாயார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் பூபாலன், நேற்று ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.”
அடையாறு பகுதியில் ஆள் வைத்து வீட்டில் விபச்சாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புவனேஸ்வரி விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது மகன், தாயார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் பூபாலன், நேற்று ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.”
2. “தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'சிடி' ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, 'புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களின் கருத்து கிடைத்தவுடன் நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.”
இணையத்தில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தபோது, "என்ன! நாட்டு நடப்பு எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது போல இருக்கிறதே!" என்ற குரல் கேட்டதும் திரும்பிப்பார்த்தேன்.
புள்ளிராஜா வங்கி தந்த புள்ளி விவரச் சிங்கம், உள்ளே வரும்போதே நமட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டே தான் வந்தார். சரி, இன்னைக்கு நம்ம கதை கந்தலாகுமா, நொந்து நூடுல்சாகுமா என்று டாஸ் போட்டுப் பார்த்து விட வேண்டியது தான் என்று மனதிற்குள்ளேயே முனகிக் கொண்டே, வாய் நிறைய "வாங்க அண்ணாச்சி!" என்று வரவேற்றேன்.
"மனசுக்குள்ளாரையே டாஸ் போட்டுப் பாத்தியே, என்ன வந்தது? பூவா? தலையா?"
கொஞ்சம் கூட நமட்டுச் சிரிப்பு மாறாமல் அண்ணாச்சி கேட்ட போது என்ன பதில் சொல்வது?
"இதுக்குத் தான் இந்தப் புள்ளி விவர ஆசாமிகளோடு சகவாசம் வேணாம் என்கிறது!"
நான் மனதிற்குள் சொல்லிக் கொண்டதை அண்ணாச்சியும் சேர்ந்து சத்தம்போட்டுச் சொன்ன போது அழுவாச்சி அழுவாச்சியா வந்தது! வேணாம்! நேரம் கேட்ட நேரத்துல அழுவாச்சி வந்தா, நடிகர் சங்கக் கண்டனக் கூட்டத்தில் பிரபல பதிவரும் நடிகர்களுடன் சேர்ந்து கண்ணீர் என்று செய்தி வந்து அசிங்கமாகிப் போய்விடுமே என்று கட்டுப் படுத்திக் கொண்டேன். ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்று சிலப்பதிகாரத்தில் தெரியாமலேயா இளங்கோ அடிகள் சொல்லி விட்டுப் போனார்!
"புவனேஸ்வரி புராணம் படிக்க உன்னுடைய பதிவுக்கு நிறையப் பேர் வந்தார்களாமே! நீயும் பிரபலப் பதிவர் ஆகி விட்டாய் என்று சொல்லு!"
"பிரபலப் பதிவர்னு சொல்லிக்கறது, இங்கே தனக்குத் தானே ஆப்பு வச்சுக்கற கதை அண்ணே! அது ரொம்பக் கெட்ட வார்த்தை!"
இதை மட்டும் முனகிவிட்டு அண்ணாச்சிஎழுப்பிய நியாயமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசனை பண்ணுகிற பாவனையில் மௌனமாக இருந்தேன். உண்மையிலேயே இந்த இரண்டு பதிவுகளுக்கு வந்த பார்வையாளர் எண்ணிக்கையைப் பார்த்தபோது, திரைப்படங்களும், அவற்றை வைத்தே பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கும் ஊடகங்களும், எந்த அளவுக்கு சமுதாயச் சீரழிவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதைக் குறித்து ஒரு அச்சம் எழுந்தது.
எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
கடந்த இரு பதிவுகளின் இறுதியிலும் புவனேஸ்வரி விவகாரம், ஒரு பேச்சுக் காலாக, தொடக்கப் புள்ளியாக மட்டுமே இருந்ததே தவிர, சொல்ல வந்த அடிப்படைக் கருத்தே வேறு! முதல் பகுதியின் கடைசி இருபத்தைந்து வரிகளிலேயே பதிவு சொல்ல வந்த கருத்து, எதை எதை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று, திரைப்பட மோகத்தைக் கண்டிப்பதாக மட்டுமே இருந்தது.
ஆனால், மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விஷயத்தை தொட்டதால் மட்டுமே பார்த்தவர் எண்ணிக்கை சராசரியை விட ஒன்பது மடங்குக்கு மேல் அதிகம் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். பார்க்க வந்தார்கள், படித்தார்களா என்பது தெரியாது. மக்களுடைய மன ஓட்டத்தைத் தெரிந்து கொள்ள முடியவில்லை, நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்பதை அண்ணாச்சிக்கு எப்படிச் சொல்வது?
இங்கே நடிகர் சங்கம் நடத்திய கண்டனக் கூட்டம் உண்மையில் கேலிக் கூத்தே. வினவு தளத்தில் பழைய பதிவு -நடிகை ஷகிலா பர்தா அணிந்து நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜரான தருணங்களில் வெளியானது. கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
காலச் சுவடு இதழில், இதே மாதிரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னட பிரசாத் என்ற பெயர் பரபரப்பாக ஊடகங்களில் அடிபடத் தொடங்கிய போது, அதைக் குறித்துப் பேராசிரியர் அ. ராமசாமி சொல்கிறார்::
"மரபான நம்பிக்கைகளின்படியும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் படியும் குற்றவாளிகள் எனக் கருதத்தக்க சில தனிநபர்களின் வாழ்க்கைக் கதையை இந்தப் பத்திரிகைகளின் பக்கங்களில் எழுதிக் காட்டுவதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
பின்பற்ற வேண்டிய முன்மாதிரிகளாக இவர்கள் முன்னிறுத்தப்படவில்லை என்பது உறுதி. அதே நேரத்தில் ஒதுக்கப்பட வேண்டிய முன்மாதிரிகள் என்று வலியுறுத்துவதும் இல்லை என்பதும் உண்மை.
அவர்கள் அறியாமல் குற்றம்செய்துவிட்டார்கள் என்று வாதிடுவதும் அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல என வலியுறுத்துவதையும்கூட அந்தக் கட்டுரைகளோ தொடர்களோ தெளிவாக வெளிப்படுத்துவதில்லை. அதற்குமாறாக வேறொரு நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. மனித உயிரின் அந்தரங்க வெளிக்குள் தற்காலிகப் பிம்பங்களை அலையவிட்டு, அடக்கி வைக்கப்படும் பாலியல் தூண்டல்களைக் கிளறிவிடும் வேலையைச் செவ்வனே செய்வதுதான் அந்த நோக்கம்."
ஒரு நல்ல விஷயம், காலச்சுவடு இதழின் இந்த சுட்டியை நிறையப்பேர் போய்ப் படித்திருக்கிறார்கள் என்பது கொஞ்சம் நிறைவாக இருந்ததைச் சொல்லியே ஆக வேண்டும்.
தொடர்ந்து மௌனமாகவே இருந்த என் மன நிலையை அண்ணாச்சி புரிந்து கொண்டிருக்க வேண்டும். புள்ளிவிவரம்னா சும்மாவா!
"ஹிட்ஸ் கணக்கை விடு. அது சும்மாக் கிண்டலுக்காகச் சொன்னேன்! எந்த ஒரு வலைப்பதிவையும் வாசகர்கள், மேம்போக்காகவே படிக்கிறார்கள். கொஞ்சம் கவனமாகப் படிக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதிலுமே கூட அறுபது சதவிகிதத்திற்கு மேல் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதில்லை. அதனால், உன்னுடைய பக்கங்களில் அவர்களுடைய ஆர்வத்திற்குத் தீனி போடுகிற மாதிரி விஷயம் இருக்கிறதா என்று மட்டுமே வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போயிருப்பார்கள்."
"சரவணபவன் ஹோட்டல் அதிபர் கைதானபோது, அவரோடு தொடர்புடைய பெண்களின் கதைகளை ஒட்டுமொத்தத் தமிழ் வாசகப் பரப்பிற்கும் விருந்தாக்கியவை நமது அச்சிதழ்கள் என்பது மறந்துவிடக்கூடியதல்ல."அப்படீன்னு காலச்சுவடு கட்டுரையில இருந்ததைப் படிச்சப்புறம் எனக்கு வேற ஒண்ணு ஞாபகம் வந்தது. தேடிப் படிச்ச கையோட, உனக்கும் சொல்லணும்னுதான் இப்ப நான் வந்ததே!”
"ஒரு ஏழரை வருஷத்துக்கு முன்னாடி, கமல்-சரிகா பிரிஞ்ச விவகாரம் ரொம்பப் பரபரப்பா இருந்துச்சு. நம்ம பத்திரிகைகளுக்கு எப்பவுமே எதையாவது மென்னுகிட்டே இருக்கணுமே! இந்த மாதிரி வாசனை கிடைச்சா விடுவாங்களா? ஏகப்பட்ட ஆராய்ச்சிகள்! அதைப் பாத்து நொந்து போன ஒருத்தர் திண்ணையில் எழுதினதைப் படிக்கறேன் கேளு!”
பொன் முத்துக்குமார்
திரையுலகில் தற்போது பரபரபாகப் பேசப்படும் கமல்-சரிகா மணமுறிவு விஷயம் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள். அது தொடர்பான பத்திரிகை மனப்போக்கு பற்றின ஒரு எண்ணப்பரிமாறல்.
தேசத்தையே சமீபத்தில் உலுக்கி எடுத்த குஜராத் கலவரம் பற்றி இரண்டு பக்கத்திலும் மேற்படி விஷயத்தை எட்டு பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறது குமுதம் இதழ். அதுகுறித்து கேள்வி கேட்ட வாசகருக்கு அம்பலம் இணைய இதழில் 'நான் ஆசிரியராக இருந்தால் அந்த டைவர்ஸ் விஷயத்தை நீக்கியிருப்பேன். நடிகர்களின் நடிப்புத்தான் முக்கியமே தவிர அவர்கள் சொந்த வாழ்க்கை அல்ல. Invasion of Privacy என்பது மூன்றாந்தர ஜர்னலிஸம். இதை தமிழ்நாட்டில் எல்லா பத்திரிகைகளும் பயன்படுத்துவது சோகமே (விகடன் தவிர) ' என்று சுஜாதா பதிலளிக்க, அதுகுறித்து கேள்வி கேட்ட வாசகருக்கு 'சுஜாதா-வுக்கு எப்போதுமே நகைச்சுவை உணர்ச்சி அதிகம் ' என்று அரசு பதில்களில் நக்கலடித்திருக்கிறது குமுதம்.
தெரிந்தோ தெரியாமலோ குமுதம் வெளியிட்டுவிட்ட இரண்டு செய்திகளை மட்டும் குமுதத்திற்கு நினைவூட்டிவிட்டு குமுதத்தை விட்டு வெளியே போகலாம். முதல் வாரத்தில் கமல்-சரிகா உறவு முறிகிறது ' என்று முரசறிவித்து, அடுத்த இதழில் கமலின் முதல் மனைவி வாணி கணபதி அவர்களின் பேட்டி என்று தொடர்ந்த குமுதம் இந்த இதழில் சிம்ரனின் தங்கை மோனலின் பேட்டி வெளியிட்டிருக்கிறது. அதில் வெகு அருமையாய் குமுதத்திற்காகவே சொல்லப்பட்ட பதிலாய் நச்சென்று ஒரு பதில் சொல்லியிருக்கிறார் மோனல்.
கே : 'சிம்ரனுடன் சண்டையா ? ' (என்னவோ இது இஸ்ரேல்-பாலஸ்தீன் ப்ரச்சினை போலவும், அவர் ஆமென்று சொல்லியிருந்தால் சவுதி இளவரசர் போல மத்தியஸ்தம் செய்ய கிளம்பிவிட தயாராயிருப்பது போலவும்)
ப : '......இது எங்களுடைய பர்சனல் லைஃப். இதில் யாரும் நுழையவும் முடியாது. நுழையவும் கூடாது '
நகைச்சுவை உணர்ச்சி என்று நக்கலடிக்கும் குமுதம் தனது 10-03-2002 தேதியிட்ட 'குமுதம் ரிப்போர்ட்டர் ' இதழை சற்றே புரட்டி நடிகை மும்தாஜின் பேட்டிக் குமுறலை படிக்க வேண்டுகிறேன்.
இப்படிப்பட்ட மூன்றாந்தர ஜர்னலிசம் தன் எல்லை மீறும்போது என்ன ஆகிறது என்பதற்கும் மேற்படி மும்தாஜின் பேட்டி பக்கத்தில் உள்ள 'ஒழியுமா கவர் ? ' என்ற பகுதியில் இருக்கிறது.
இப்படிப்பட்ட கவர் வாங்குவதற்கு காரணம் கூறிய ஒரு நிருபர் 'நான் வாங்கும் இரண்டாயிரம் சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும் ? பத்திரிகைகாரங்க நியாயமா சம்பளம் குடுத்தா நா ஏன் கவர் வாங்க போறேன் ? ' என்கிறார்.
ஆக, நடிக நடிகைகளை அணுகும்போது சுய மரியாதையோடும், நிருபர் பணியில் கம்பீரமோடும் இயங்க வாய்ப்பளிக்காத பத்திரிகைகள்தான், (குமுதம் இதழின் சினிமா நிருபரின் சம்பள விபரம் தெரியாததால் அதை ஒரேயடியாக இந்த பட்டியலில் சேர்க்க விரும்பவில்லை) தாம் வெளியிடும் செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகையை தற்கொலைக்குக்கூட துரத்தும் இது போன்ற குரூரங்களுக்கு காரணமாகிவிடுகின்றன. (மூன்றாந்தர ஜர்னலிஸம் என்று கண்டனம் தெரிவிக்கும்போது மட்டும் நக்கலடிக்க முன்வருவது எப்படி ?)
கிசுகிசு என்பதே திரை கலைஞர்களின் அந்தரத்தை அம்பலமாக்கும் அசிங்கம்தான். 'எப்போது நடிக நடிகையர் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டார்களோ அப்போதே நடிக-நடிகையரின் அந்தரங்கத்தைக்கூட அறிந்துகொள்வதற்கு ரசிகனுக்கு முழு உரிமை உண்டு ' என்று ரசிகன் தலைக்கு கிரீடமும், 'அவர்களைப்பற்றி என்னவும் எழுத எங்களுக்கு முழு உரிமை உண்டு ' என்று தமக்குத்தாமே உரிமமும் வழங்கிக்கொண்ட பத்திரிகைகளின் அகம்பாவமே இந்த கிசுகிசு மனப்பான்மை.
இந்த லட்சணத்தில், 'தம்மைப்பற்றி கிசுகிசு எழுதக்கேட்டு சிலர் தூண்டிவிடுவது உண்டு ', 'வெளியான கிசுகிசு பற்றி எங்களிடமே யார் என்றெல்லாம் நடிக நடிகையர் விசாரித்ததுண்டு ' என்றெல்லாம் சில பத்திரிகைகள் சப்பை கட்டு கட்டுவது நல்ல வேடிக்கை. ஒரு பத்திரிகை கேள்வி-பதிலில், 'இப்படிப்பட்ட கிசுகிசு எழுதும் எங்கள் நிருபரின் 'புத்திசாலித்தனத்தை சம்பந்தப்பட்ட நடிக நடிகையர் ஆச்சர்யப்பட்டுப்போய் மெச்சி மகிழ்வர் ' என்று சொன்னதுதான் உச்சகட்ட தமாஷ் (நல்ல வேளை, 'உச்சி முகர்ந்து ஆசீர்வதிப்பர் ' என்றெல்லாம் சொல்லவில்லை!)
ஒரு வாதத்திற்காக, அப்படியே வைத்துக்கொள்வோம். அவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்திருப்பது ஒரு கலைஞனாக அங்கீகாரம் தேடி. அதை வழங்குவது அல்லது மறுப்பது என்ற அளவில் மட்டும் நமது பொறுப்பு நின்றிருக்க வேண்டும். அதை விட்டு அவர்களது அந்தரங்கத்தை முகர்ந்து பார்ப்பது வக்கிர மனப்பான்மையல்லவா ? நடிக நடிகையரின் நடிப்புத்திறமையை விமர்சித்து சாட்டை சொடுக்கலாம்; அதை விட்டு அவர்கள் படுக்கை அறையிலா நுழைவது ?
'வாசகர்கள் விரும்புகிறார்கள் ' என்ற விவாதம் வரலாம். மஞ்சள் பத்திரிகையில் பச்சை பச்சையாய் வரும் நீல விஷயங்களை விரும்பும் கணக்கற்ற வாசகர்களும் இருக்கிறார்களே ! அந்த விஷயங்களையும் இவர்கள் தங்கள் பத்திரிகையில் அச்சேற்றலாமே ? 'வாசகர்கள் விருப்பத்தை ' நிறைவேற்றி ஜென்ம சாபல்யம் அடையலாமே ?
எந்த பத்திரிகையும் நடிக நடிகையரின் அந்தரங்கத்தை இனி எழுதப்போவதில்லை என்று உறுதி செய்துகொள்வதாக வைத்துக்கொள்வோம். (இந்த உடோபிய மனோபாவம் சற்று அதிகம்தான். மன்னிக்கவும்) அப்போது வாசகன் என்ன செய்வான் ? பத்திரிகை அலுவலகம் முன்பு தீக்குளிப்பானா ? அல்லது தாமே அப்படி ஒரு செய்தியை அச்சிட்டு படித்து மகிழ்வானா ?
வியாபாரப்பத்திரிகைகளிடம் இதுபோன்ற நளினத்தை எதிர்பார்த்தல் தவறுதான். ஆனாலும் ஒரு எல்லை உண்டல்லவா ? இப்படித்தான் நடிகை ரோஜாவிற்கு எய்ட்ஸ் என்று ஏதோ ஒரு பத்திரிகை உலக புண்ணியவான் கிளப்பிவிட்டான். சில வருடங்களுக்குமுன் பற்ற வைக்கப்பட்ட இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் இன்றைய நிலையில் உருக்குலைந்தல்லவா போயிருக்க வேண்டும் ?
'எப்போது பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்களோ அப்போதே இதெல்லாம் சகஜம் என்று தயாராக இருக்க வேண்டும். சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் ' என்பது 'கக்கத்தில் இடுக்கின துண்டும், நெஞ்சோடு கட்டின கைகளும், தாழ்த்தின தலையுமாய் தம் முன் நிற்கவேண்டும் ' என்று எதிர்பார்க்கும் அருவருக்கத்தக்க ஆண்டை மனப்பான்மை.
சரி, அங்ஙனமாயின் பத்திரிகைகாரர்களும் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள்தானே ? அவர்களது அந்தரங்கத்தை கடை விரித்து விலை பேசினால் இளித்துக்கொண்டே 'அப்படியே ஐயா ! ' என்றா ஒப்புதல் தருவார்கள் ? 'வார இறுதி மலரில் புளுகு மூட்டையை அவிழ்த்துவிடும் திரை கன்னையா, 'தன் பத்திரிகையில் தாறுமாறாக எழுதிவிடுவேன் ' என்று மிரட்டியே பல்வேறு துணை நடிகைகளையும், புதுமுக நடிகைகளையும் பணிய வைத்து தன் ஆசைக்கு இணங்க வைத்துவிடுகிறாராம். தற்போது கொடிகட்டிப் பறக்கும் ஓரெழுத்து நடிகையும் ஆரம்ப காலத்தில் இவர் வலைக்கு தப்பவில்லை ' என்று கிசு கிசு எழுத தாங்குவார்களா ?
பாலகுமாரன் எழுதின சிறுகதைவரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
'தன் அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவனே அடுத்தவன் அந்தரங்கத்தைப்பற்றி பேசுகிறான் ' (அந்தரங்கம்)
"என்ன கேட்டுக்கிட்டியா?" என்றார் அண்ணாச்சி!
"அது சரிண்ணே! ஜாமீன்ல வெளிவர முடியாத பிரிவுகளில் கைதான தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை ஜாமீன் மனு தாக்கல் செய்ய வச்சு, அரசு தரப்பு அதை எதிர்க்காததால், அவரு ஜாமீன்ல வெளியே வந்தாச்சு! மாலையெல்லாம் போட்டுப் படம் புடிச்சு அதையும் பெரிய சாதனையா ஆக்கியாச்சு. புவனேஸ்வரிக்கு மட்டும், அவருக்கு நிரந்தர முகவரி கிடையாது, அதனால ஜாமீன் கொடுக்கக் கூடாதுன்னு அரசு தரப்புல எதுத்திருக்காங்களே அது ஏண்ணே?"
அண்ணாச்சி என்னை ஒருமுறை நன்றாக முறைத்துப்பார்த்து விட்டு வெளியே போய் விட்டார்!!
நல்ல பதிவு, பாலகுமாரனின் மேற்கோள் வரிகள் அருமை. திரைத்துறை, பத்திரிக்கை உலகம் இரண்டும் பாழ்பட்டன என்பதற்கு சான்று இந்த விவகாரம்.
ReplyDeleteஅந்தரங்கம் பற்றிய பாலகுமாரனின் வரிகள் அருமை!
ReplyDeleteபுவனேஸ்வரிக்கு ஜாமின் கொடுக்காமல் இருப்பது எதோ அரசியல் தான்! அவர் என்ன கொலை குற்றமா செய்து விட்டார்!?