புவனேஸ்வரி படம் போதுமே! வரலாறெல்லாம் எதற்கு?





"இம்சை அரசனின் “வரலாறு முக்கியம் அமைச்சரே” இவ்விடத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது!"


சென்றபதிவில் வந்திருந்த பின்னூட்டம் இது!


வரலாறு முக்கியம் தான் வால்பையன் அவர்களே! அதைவிட முக்கியம் வரலாற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பது! கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் கூட நெய் வடியும் என்பது இந்தப்பக்கங்களில் புழக்கத்தில் இருக்கும் அனுபவச் சொலவடை.


காரணம், வரலாறு என்பதே புனைவு, வெறும் கட்டுக் கதைதானே என்ற அலட்சிய மனோபாவம் இங்கே மிகுந்திருப்பதனாலேயே, இந்த மாதிரித் தெரிந்தே திரித்து, திரிசமன் செய்கிற பேர்வழிகள் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது.


இன்னொரு புறம், வரலாற்றை ஒரு சரியான கண்ணோட்டத்தில் பார்க்கச் சொல்லிக் கொடுக்கிற எந்த உருப்படியான முயற்சியையும் இங்கே அரசும் செய்யாது, ஆசிரியர்களும் செய்ய மாட்டார்கள், தெரியவும் தெரியாது, ஏற்கெனெவே பிரபலமாக இருக்கும் ஒன்றை அல்லது ஒருவரை இழிவுபடுத்தி, ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ அடுக்கடுக்காக திரித்துச் சொல்வதன் மூலமே அறிவுஜீவிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு, மிகவும் எளிய வழியாக இங்கே நிறையப்பேர் கிளம்பியிருக்கிறார்கள்.


ஆக, வரலாறு என்றாலே கட்டுக்கதை, யாருடைய ஹீரோயிசத்தையோ தாங்கிப் பிடிக்கிற வெறும் புனைவு, என்று ஒட்டுமொத்தமாகத் தள்ளிவிடும் போக்கு இங்கே நிறையப் பேருக்கு இருப்பதனால் தான், வரலாற்றைத் தங்கள் மனம் போன போக்கில் திரித்தும், இழிவு படுத்தியும் எழுதுகிற அறிவுஜீவிகளின் தம்பட்டம் அவ்வப்போது நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாங்கள் சொல்வது முழுப் பொய் என்பது தெரிந்த பிறகும், நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட இந்த கனவான்கள் தங்களுடைய தவறை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள், திருத்திக் கொள்ளவும் மாட்டார்கள்.


சில காலத்துக்கு முன்னாள், பிஜேபி கட்சியின் முக்கியப் பிரமுகரான ஜஸ்வந்த் சிங், ஜின்னாவைப் பற்றிய தன்னுடைய கருத்தை சர்ச்சைக்குரிய விதத்தில் புத்தகம் எழுதி வெளியிட்டுப் பரபப்பை ஏற்படுத்தியதைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதியிருந்தேன்.


அதில் இருந்து கொஞ்சம் ........


"இந்தப் புத்தகத்தை, உள்ளூர்க் கடைகளுக்கு வந்து சேர்வதற்கு முன்னாலேயே, பரபரப்புச் செய்தியாக்கும் வழக்கமான மார்க்கெட்டிங் தவிர, ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து சிஎன் என் -ஐ பி என் லைவ் தொலைக் காட்சியில் கரன் தபார் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பேட்டி அளித்திருப்பதன் தொகுப்பை நேற்று மாலை தான் படித்தேன். இன்று காலையில், நேற்று புத்தக வெளியீட்டின்போது ஏழு பேர் கொண்ட குழு புத்தகத்தை அறிமுகப் படுத்தி அல்லது விமரிசனம் செய்ததைப் பற்றியும், வழக்கம் போல ஆர் எஸ் எஸ், ஜஸ்வந்த் சிங்குடைய கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்ன செய்தியையும் படித்தேன்.


பூனை இளைத்தால், எலி வந்து எங்கேயோ தட்டிஆட்டைக்கு வர்றியான்னு கேக்குமாம். அதே மாதிரி, தொடர்ந்து இரண்டு முறை தோற்றால், ஏற்கெனெவே தோற்று நொந்தவனை இன்னும் நூலாக்கும் வேலை எப்போதுமே நடக்கும். பி ஜெ பியிலும் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஜஸ்வந்த் சிங் ஒருபக்கம் புத்தகம் எழுதி, அதைப் பரபரப்புச் செய்தியாக்கிவிட்டு, கமுக்கமாகி விட்டாரென்று செய்திகள் வரும் வேளையில், வசுந்தரா ராஜேவும் அத்வானி வீட்டு வாசல் முன்னால் தனக்கிருக்கும் ஆதரவை நிரூபித்து விட்டு, கட்சியின் முடிவை மீறுகிற எண்ணமே இல்லை என்று பவ்யமாகச் சொல்லி, ராஜ்நாத் சிங்கின் மூக்கை உடைத்திருக்கிறார்.


இதைச் சொல்லும் வேளையில், பி ஜெ பி அரசியல் உள்விவகாரங்களிலோ, நடப்பு அரசியலைப் பற்றி விவாதிக்கவோ,முற்படவில்லை. வால்பையன் மாதிரி, நிறையப்பேர், இங்கே வரலாறு என்பதே கட்டுக் கதை, நம்முடைய வரலாற்றையே என்றைக்கோ எவனோ எழுதி வைத்திருப்பதில் இருந்து தான் தெரிந்துகொள்ள முடிகிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு, அவ்வளவுதான் என்று போய்விடுகிறார்களே, அவர்களுக்காக, ரொம்ப இல்லை ஜென்டில்மேன், சும்மா ஒரு எழுபது வருடங்களுக்குள் நடந்ததையே நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே, அப்புறம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே 'வாலொடு' முன்தோன்றிய மூத்த குடி மக்களுடைய வரலாற்றை எப்படிப் புரிந்து கொள்வது -வெறுமனே கேட்டுவிட்டுப் போவதற்காக மட்டும் அல்ல, கொஞ்சம் யோசிப்பதற்காகவும் கூட!"


இப்படி என்னதான் விளக்கமாக, விலாவாரியாக எழுதினாலும் கூட, வரலாறு என்றாலே நிறையப்பேருக்கு பயம் வந்து விடுகிறது. நம்முடைய கல்விமுறை, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுடைய யோக்கியதை, பாடத் திட்டத்தை முடிவு செய்யும் அறிவுக் கொழுந்துகள் இப்படி நிறைய வடிவங்களில் நம்முடைய அறிவை மழுங்க அடித்திருப்பதால், சுயமாக சிந்தியுங்கள் என்று என்ன தான் கூப்பாடு போட்டாலும் இங்கே நாங்கள் தயாராக இல்லை, தொலைக் காட்சி முன்னால் உட்கார்ந்துகொண்டு மெகா சீரியல்களின் கதா பாத்திரங்களோடு மூசு மூசென்று நாங்களும் அழுது வடிந்துகொண்டே கிடந்து விட்டுப் போகிறோம் என்றோ, புவிகுட்டி வரலாறை எழுதினால் ஓடோடி வந்து படிக்கக் காத்திருக்கிறோம் என்றோ சொல்வதற்கு வெட்கப் படுவதே இல்லை!


கே நட்வர் சிங், இந்திய வெளியுறவுத் துறைப் பணியில், முப்பத்தோரு வருட காலம் பணி புரிந்து விட்டு, ஒய்வு பெற்றபிறகு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர். 1956-1958 கால கட்டங்களில் சீனாவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தவர், பிறகு அமேரிக்கா, யுனிஸெஃப் என்று பல இடங்களில் பணியாற்றிய பிறகு, கடைசியாக 1984 இல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர்.


இங்கே சாகும் தருவாயில் காசி நகரில் கங்கைக்கு அருகில் ஒண்டினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணியில் இருந்து ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியில் ஒண்டிக் கொள்வது எதற்காக என்பதை நான் விலாவாரியாகச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை அல்லவா!


இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், நேருவின் காலத்தில் நட்வர் சிங் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார், சீனாவிலும் பணியாற்றியிருக்கிறார், அந்த நேரத்து அதிகாரபூர்வமான நிலையை, நிலவரத்தை அறிந்தவர் என்பது தான்.மற்ற அரசியல் வியாதிகளைப் போல ஒரு தகுதியுமில்லாமலேயே, வாய்க்கு வந்ததைப் பேசி அதுவே இலக்கியம், மொழிக்கு இலக்கணம் என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிற கூட்டத்தோடு சேர்த்து விட முடியாது.


முந்தைய பதிவில் ஒரு பிழை திருத்தம்: நட்வர் சிங் தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது என்று இருந்தது தவறு. புத்தகம் இந்த வருடம் ஜனவரியிலேயே வெளியாகி விட்டது.ரூபா அண்ட் கோ வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் மீதான விவாதங்களில் பேசும்போது என்றிருந்திருக்க வேண்டும்.


திரு நட்வர் சிங் சில அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறார். 1962 யுத்தம் ஏன் நிகழ்ந்தது? நம்முடைய தரப்பில் பிரச்சினையை ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியது ஏன்?


அடுத்து நட்வர் சிங் எழுப்பும் ஒரு முக்கியமான பிரச்சினை 1960 இல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அன்று நிலவிய பலப்பரீட்சையை புரிந்து கொள்ளாமல் இந்தியா தவற விட்டு விட்டது என்பது தான்.இதைப் பற்றி மறந்து கூட இந்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ இன்றுவரை எதுவும் பேசுவது இல்லை. நட்வர் சிங்கும் இதைப் பற்றி விலாவாரியாக எதுவும் கூறாமல் வாய்ப்பை நழுவ விட்டு விட்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்

படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கி படிக்கலாம்
இந்திய சீன உறவில், திபெத்திய பிரச்சினை பெரும் விரிசலை ஏற்படுத்தியது போக. பிரிடிஷ்காரர்கள், இந்திய சீன எல்லைகளை நிர்ணயிப்பதில் மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டிருந்ததும் அடுத்த பிரச்சினைக்கான விதையாக வீரியத்தோடு கிளம்பியது.

1960 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப்பிரதமர் சூ என் லாய் பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, அதாவது அக்சாய் சின் பகுதியை இந்தியா விட்டுக் கொடுப்பது, பதிலுக்கு சீனா அருணாச்சல பிரதேசம் என்று தற்போது அழைக்கப்படும் பகுதி மீது உரிமை கொண்டாடாமல் இருப்பது என்ற மாதிரி எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது, நேரு அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அப்படிச் செய்தால், நான் இங்கே பிரதமராக இருக்க முடியாது என்று சொன்னதாகவும் ஒரு குறிப்பு உண்டு. நேருவின் அணுகுமுறை, தங்களை அவமதிப்பதாக சீனா கருதியதும், நேருவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே யுத்தம் தொடங்கப்பட்டதாகவும் தகவல்கள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்தன. இதைத் தான், நட்வர்  சிங், என்னவென்று விவரித்துக் கூறாமல் 1960 வாக்கிலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு வந்ததைத் தவற விட்டு விட்டது என்று மட்டும் சொல்கிறார்.


நாற்பத்தேழு ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட இந்திய சீன எல்லைப் பிரச்சினை ஒரு போரில் முடிந்தது ஏன் என்பதைப் பற்றியோ, அரசு இயந்திரம் மரத்துப்போன ஜடமாக, அரசியல், ராணுவ ரீதியாக, ராஜதந்திர ரீதியாக தயாராக இல்லாமல் இருந்த கேவலத்தைப் பற்றியோ இன்றைக்கும் கூட ஒரு சரியான விமரிசன அணுகுமுறை இல்லை. இந்திய அரசும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு மூடு மந்திரமாக வைத்திருக்க முடியுமோ, அந்த அளவு மூடி வைக்கவே விரும்புவது வெளிப்படை.


எவரோ செய்த முட்டாள்தனத்துக்கு எவரையோ பலிகடா ஆக்கி விடுவது காங்கிரஸ் கட்சி அன்றையிலிருந்து இன்றைக்கும் செய்து கொண்டிருக்கும் உத்தி. சீனாவிடம் கேவலமாக அடிவாங்கியதில் மக்களிடம் எழுந்த கோபத்திற்கு பலிகடாவாக வி கே கிருஷ்ண மேனன் ஆக்கப் பட்டு, அவரும் பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


நேருவுடைய பிரம்மாண்டமான சமாதானப் புறா இமேஜ் வெறும் காற்றடைத்த பலூன் தான் என்பதை ஒரு சின்ன ஊசிக் குத்திலேயே சீனா நிரூபித்த பரிதாபத்தை எடுத்துச் சொல்ல நேருவுக்குப் பக்கத்தில் எவருமே இல்லை.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்


தவறு செய்யும் பொது அதை இடித்துரைத்து, சரியான பாதையைக் காட்டுபவரைத் துணைக் கொள்ளாத அரசன், கெடுப்பதற்கென்று எவருமில்லாமலேயே கெடுவான் என்ற வள்ளுவர் கூறும் வாழ்வியல் உண்மைக்கு நேருவுடைய அன்றைய கையைப்பிசைந்துகொண்டு நின்ற நிலையே சரியான சமீப காலத்து உதாரணம். அதைவிடக் கேவலம், சீனப்போர் முடிந்து ஒரு வருடம் ஆன பின்னாலும் கூட, அவர் சரியாகப் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு "The efficacy of nonviolence is not entirely convincing" என்று ஒரு பேட்டியில் சொன்னதே சரியான நிரூபணம்.


ஆயுத பலமோ, எதிரியை இனம் கண்டுகொள்ளும் பக்குவமோ இல்லாத பாமர மக்களை, சுதந்திர வேட்கை கொள்ளச் செய்வதற்கும், அந்நியர் ஆட்சியை எதிர்த்து உறுதியாக நிற்பதற்கும், அப்பாவி ஜனங்களை ஆயுத பலம் கொண்ட மிருகத்தனமான அரசு இயந்திரத்தை செயலற்றுப்போகச் செய்ய, மகாத்மா காந்தி சாமர்த்தியமாகக் கையிலெடுத்த ஆயுதம் சாத்வீக மறுப்பு எனும் சத்தியாக்கிரகம். தடியால் அடித்து மண்டையை பிளந்து ரத்தம் கொட்டிய போதிலும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்த சத்தியாகிரகிகளைக் கண்டு தடியெடுத்தவன் பயந்தான். அந்த சூழ்நிலையே வேறு!


வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பார்த்த நினைவு வருகிறதா? பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு முன்னால் பீரங்கிகளோடு முற்றுகை இட்ட வெள்ளையர் படையை எதிர்த்து வெற்றிவேல்! வீர வேல் என்று உணர்ச்சி கொப்பளிக்க போர் புரிய வந்த படை,நவீன ஆயுத பலம், பழக்கமில்லாத போர்முறைக்கு முன்னால்   பீரங்கி குண்டுகள் முழங்கவுமே காணாமல் போகும் காட்சி நினைவுக்கு வருகிறதா?


ஒரு அரசைத் தலைமை ஏற்று நடத்துபவன், அதே மாதிரி நின்றால், இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு போய்ச் சமாதானம் பேசும்போது தியாகு காறித் துப்புவது போலத் தான் நடக்கும். அப்படித்தான் நடந்தது!


ஆக காந்தியோடு நீண்ட காலம் இருந்தும் நேருவுக்கு காந்தியின் மிக எளிமையான, நேர்மையான உத்திகளும், காந்தீயமோ அகிம்சைப்போராட்டம் என்றால் என்ன என்பதோ புரியவில்லை. ஐரோப்பிய நாகரீகத்தில் மிகவும் ரசிகராக இருந்து, வெள்ளையர்களோடு உறவாடினபோதிலும், அவர்களிடமிருந்து தந்திரத்தையும் நவீன உத்திகளையும் கற்றுக் கொள்ளவும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில், உலக சரித்திரத்தை வெறும் ஏட்டளவில் கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, அதைத் தன் மகளுக்கும் கடிதங்களில் கற்றுக் கொடுக்க முனைந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது?


இதே மாதிரி லண்டனிலேயே பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்து, ஆங்கிலம் பேசும் மக்களிடம் உணர்ச்சி பொங்க இந்திய விடுதலைக்காக ஆதரவுப் பிரசங்கங்கள் மட்டுமே நிகழ்த்துவதில் வல்லவராக இருந்த வி. கே கிருஷ்ண மேனன். இன்னொரு ஆங்கிலேய நாகரிக ரசிகர். நேருவுக்கு ஏற்றார்போல, சரியான ஜாடிக்கேற்ற மூடியாக வந்து அமைந்ததை என்னவென்று சொல்வது?


இந்த இரண்டு நபர்கள், தங்களுடைய ஐரோப்பிய ஞானத்தைக் கொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தார்கள். ஆங்கிலேயர்கள் விட்டுப்போன ஐசிஎஸ் எச்சங்களுடைய உதவியுடன், இந்தியாவைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே கொள்கைகளை வகுத்தார்கள். முதல் சோதனை 1948 இல் பாகிஸ்தானிய காஷ்மீர் ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்தது.


அங்கிருந்தாவது சரிசெய்துகொள்ளும் போக்கு தொடங்கியிருந்தால், நேரு என்ற ஷோக்குப்பேர்வழி, காந்தியின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அரசியல் வாதியும் ஆன மாதிரி, ஒரு ராஜதந்திரியாக உயர்ந்த நிலையாகவும் மாறியிருக்கும்!


1951 இல் திபெத்தை சீன ராணுவம் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது அக்கினிப் பரீட்சைக்கு, நேருவின் அயலுறவுக் கொள்கைஉள்ளானது. தலாய் லாமா தன்னுடைய ஆதரவாளர்களோடு இந்தியாவுக்கு ஓடி வருகிறார். ஒரு மதத் தலைவர் என்ற முறையில், மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக முடிவெடுத்திருந்தால் அது, சோதனையாக இல்லாமல், சாதனையாகவும் மாறியிருக்கும்!திபெத் சீனாவின் ஒரு பகுதிதான் என்று வெளிப்படையாக இந்திய அரசு ஒப்புக் கொள்வதற்கே அடுத்து பதினேழு வருடங்கள் தேவைப்பட்டன. அப்போது கூட, இரட்டை நாக்குடனேயே திபெத் பிரச்சினை அணுகப்பட்டது.


நேருவின் கண்களை அந்த கால கட்டத்தில், கண்முன்னால் தெரிந்த யதார்த்த உலகைப் பார்க்க விடாமலும், புரிந்துகொள்ள விடாமலும், வெறும் கற்பனாவாதியாகவே இருக்கச் செய்தது எது என்று இன்னமும் எனக்குப் புரியவே இல்லை. சோஷலிசக் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கனவு காண ஆரம்பித்த நேரு, விழித்துக் கொள்ளவே இல்லையோ என்றுகூட சமயங்களில் அவரைப் பற்றி அங்கேயும் இங்கேயும் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவதுண்டு.


தன்னுடைய பகல் கனவு குரூரமாக க் கலைக்கப்பட்டு, சமாதானப் புறா இமேஜும் பறிபோய், மனமுடைந்த நிலையில் நேருவின் மரணம் நேர்ந்தது.


தயிர்வடையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே தோழர் கே.வரதராஜன் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீதேறி நரகத்துக்குக் கூடப் போகலாம்!" இந்த வார்த்தை நினைவுக்கு வரும் போதெல்லாம், நேருவின் கதை சொல்லும் பாடம் தான் எனக்கு நினைவுக்கு வரும்.


அப்புறமாவது காங்கிரஸ் கட்சியும், இந்திய அரசும் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார்களா என்று பார்த்தால், இன்று வரை அதற்கான அறிகுறி ஒன்றுமே புலப்படவில்லை.


இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எந்த அர்த்தமுமில்லாமல் போனதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம். சுப்ரமணிய சாமி என்றாலே ஒரு கோமாளி, ரீல் மன்னன், முட்டையடி வாங்குவதற்கே பிறந்தவர் என்றமாதிரி நக்கலான எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை! ஆனாலும், சீனப் பிரச்சினையில், இங்குள்ள அரசியல்வாதிகள் எவரையும் விட அதிகம் அறிந்தவர் என்ற முறையில் அவர் எழுதிய கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.


பிரச்சினையை இன்னமும் விரிவாகப் புரிந்துகொள்ள அவை உதவும்.


புவிக்குட்டிகளோடேயே கற்பனையில் மிதக்க விரும்புகிறவர்களுக்காக இதை எழுதவில்லை. வரலாறு என்றாலே அலெர்ஜி என்பவர்களுக்காகவும் இல்லை.ஒரு அரசியல் நிகழ்வை, வரலாற்றோடு பொருத்திச் சொல்வது, கற்றுக் கொள்வதற்காகவே.


தொடர்ந்து பேசுவோம்!









3 comments:

  1. //புவிகுட்டி வரலாறை எழுதினால் ஓடோடி வந்து படிக்கக் காத்திருக்கிறோம் என்றோ சொல்வதற்கு வெட்கப் படுவதே இல்லை!/

    நான் ஏன் வெட்கப்பட வேண்டும்!

    சென்ற ஜெவின் ஆட்சியில் மேம்பால ஊழலில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, சண்டீவீல் அய்யோ, அம்மா கொல்றாங்களேன்னு கூச்சலும் கூப்பாடும் போடப்பட்டது, அதே செய்தி ஜெயா டீவில் கருணாநிதி சாந்தமாக நடந்து வருவதாக காட்டப்பட்டது!

    ஒரே செய்தி ஒரே நேரத்தில் அவர்களுக்கு சாதகமாக காட்டப்படுகிறது, இன்றைய செய்தி தானே நாளைய வரலாறு, பின் ஏன் அன்றைய செய்தி இன்றைக்கு அவர்களுக்கு சாதகமாக வரலாறாக திரிக்கப்பட்டிருக்க கூடாது!

    உண்மையா, பொய்யா என யோசித்து மூளை மழுங்குவதை விட புவிகுட்டியை ரசிப்பதே என் போன்ற யூத்துகளுக்கு நல்லது என நினைக்கிறேன்!

    ReplyDelete
  2. 1960 களில் எங்களை விட வெகு திடிப்பான இளைஞராய் இருந்த உங்களுக்கு இருந்த அரசியல் நிலைப்பாடே இந்த கட்டுரை!

    இதே செய்தியை வேறு இருவர், கிருஷ்ணன் மேனனுக்கு ஆதரவாகவும், நேருவின் நிர்வாக திறமையே சிறந்ததாகவும் புள்ளிவிபரங்கள் கொடுத்து விளக்கலாம்!

    வெகு சமீபத்தில் இருக்கும் கச்சதீவை ஏண்டா கொடுத்திங்க!? அதை திருப்பி வாங்க வேண்டியது தானேன்னு உள்ளே ஓடி கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில்லில்லை, கேட்டாலும் கிடைக்காது!

    மேலும் சீனா எல்லை பிரச்சனையை பற்றி யோசிக்கும் நிலையில் எந்த இளைஞனும் இங்கில்லை, உனக்கு வேலையில்லைன்னு மெயில் வந்து விடுமோன்னு மெயில் பாக்சை திறந்து வைத்து கொண்டு கண்டில் விளக்கெண்ணை ஊற்றி பார்த்து கொண்டிருப்பவனிடம் அருணாச்சல பிரதேச எல்லை பிரச்சனைக்கு யார் காரணமனு கேட்டா சத்தியமா நானில்லைன்னு தான் சொல்லுவான்!

    அவனுக்கும் வரலாறு தெரிந்து கொள்ளும் ஆர்வமுண்டு, ஆனால் ஒரே பதிவில் எல்லாத்தையும் போட்டு கருத்து சொல்லுன்னா எனக்கு வரலாறு வேணாம், புவியியல்(புவிகுட்டி இல்ல) கத்துகிறேனு போயிடுவான்!

    உங்களுக்கு நிறைய நேரம் இருக்கு! படிக்க, எழுத, விவாதிக்க அதே போல் எல்லோருக்கும் இருக்குமா!?
    எவ்வளவு பெருசா எழுதுனா யாரும் படிச்சு கருத்து சொல்லமாட்டாங்க! அதே மாதிரி இனிமே புவிகுட்டின்னு தலைப்பு வ்ச்சா உண்மையிலேயே புவிகுட்டி பத்தி எழுதினாலும் வரமாட்டாங்க!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!