கனிமொழி bail! ஊடகங்கள் fail!

அதிகாரத்தரகுவேலை செய்து ஆ.ராசாவுக்கு தொலை தொடர்பு மந்திரிசபையை வாங்கிக் கொடுத்த நிரா ராடியா ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சியாக இல்லையாம்! சிபிஐ முடிவு!  


கம்பிக்குள் இருந்து வருவாரா கனிமொழி?


பாட்டியாலா பரபர!

டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனியின் முகத்தில் டென் ஷனைப் பார்க்கவே முடியாது. எல்லாவற்றையும் சிரித்த முகத்தோடு கேட்பார்... அமைதியாகவே பதிலும் கொடுப்பார். ஆனால், அவர் கடந்த 22-ம் தேதி 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 14 குற்றவாளிகள் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது குற்றப்பதிவு செய்து உத்தரவு இட்டபோது, எரிமலைக் குழம்பாக வெடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை ஆவேசத்துடன் இருந்தார். 


சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரி கையை முழுமையாக ஆராய்ந்து, இரு தரப்பு வாதங்களையும் எடுத்துக்காட்டி, பல்வேறு தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டி, 456 பக்கங்களில் குற்றப் பதிவுகளைச் செய்தார் நீதிபதி ஷைனி.


குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், வழக்கைக் கடுமையாக்க குற்ற வாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 409-வது பிரிவை சி.பி.ஐ. சேர்த்தது. நம்பிக்கை மோசடிக்கான இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படும். மேலும் குற்றவாளிகள் ஜாமீனில் செல்வதும் எளிதல்ல. 

அமைச்சர் மற்றும் அதிகாரிகளான ஆ.ராசா, சித்தார்த் பெஹூரா, ஆர்.கே. சந்தோலியா போன்றோர், அரசுக்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் அலை வரிசையைத் தவறான வழிகளில் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்த விவகாரத்தில் இந்தக் குற்றப் பிரிவை சி.பி.ஐ. சேர்த்தது. இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும், நீதிபதி ஷைனி அனைத்துக் குற்ற வாளிகளும் இதற்கு உட்படுவதாக அறிவித்தார்.


ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவரோடு பணியாற்றிய சித்தார்த் பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோரை... குற்றம் செய்யும் நோக்கத்துடன் தொலைத் தொடர்புத் துறைக்கு அழைத்து வந்தது; சுற்றுச் சூழல் துறையில் ராசாவுக்கு அறிமுகமான யுனிடெக் ரியல் எஸ்டேட் அதிபர் சஞ்சய் சந்திராவுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியது போன்றவற்றை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.


அதனால் சதித் திட்டம் தீட்டியது (120B), மோசடி செய்தது (420), மற்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுக்காமல் தடுத்து, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதற்காகப் பொய்யாக ஆவணம் புனைந்தது (468), இது உண்மையான ஆவணம்தான் என்று காட்டியது (471) போன்ற இந்திய தண்டனைச் சட்டங்களோடு,கலைஞர் டி.வி-க்கு 200 கோடி கிடைக்கச் செய்ய ஆதாயம் அடைந்த வகையில் லஞ்ச ஊழல் சட்டத்தின்படி குற்றம் புரிய அந்த சட்டத்தின் {13(2), 13(1) பீ)} ஆகிய பிரிவுகளின்படியும் எல்லாக் குற்றவாளிகளும் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என நீதிபதி அறிவித்தார்.


''இந்தப் பணம் முழுக்க முழுக்கத் தகுதியே இல்லாத ஸ்வான் டெலிகாமுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவே பெறப்பட்டுள்ளது. இது கடனாகக் கொடுக்கப் பட்டது என்று காட்ட, நீதிமன்றத்துக்கு வழக்கு வந்த பின்னர் இவர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து உள்ளனர்...'' என்கிற குற்றச் சாட்டை வைத்து, 193 ஐ.பி.சி. தண்டனைப் பிரிவை சேர்த்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


சி.பி.ஐ. வாதாடும் போதுகூட, ஆ.ராசா சார்ந்த கட்சி என்றே தி.மு.க-வை சில இடங்களில் குறிப்பிட்டது. ஆனால், நீதிபதி ஷைனி தனது குற்றப் பதிவில், ஆ.ராசா சம்பந்தப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கலைஞர் டி.வி-க்கு 200 கோடி சட்ட விரோதமாக லஞ்சம் [illegal gratification]  கொடுக்கப்பட்டதாகவே குறிப்பிட்டார். நீதிபதி ஷைனி இந்த வழக்கில், சி.பி.ஐ-யையும் தாண்டிக் கடுமையாகவே இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் போன்றவர்களும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாக ஆ.ராசா சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட்டார். 

இதே மாதிரி ஸ்பெக்ட்ரம் மதிப்பை உயர்த்த வேண்டாம் என்றும் மற்றும் இதனை ஏலம்விடத் தேவை இல்லை என்று டிராய் (தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) சொன்னதாகவும் கருத்துகளை முன்வைத்தார். ஆனால், நீதிபதி அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றப் பத்திரிகையின் 'கட் அண்ட் பேஸ்ட்’ என்றே 'குற்றப் பதிவைச் சொல்லலாம்.


குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அடுத்து வழக்கின் அடுத்த கட்டம் வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கேட்கும் படலம்தான் அது. உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் கேட்டபோது, 'குற்றச்சாட்டு பதிவு முடிந்ததும் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்’ என்ற அனுமதியை ஏற்கெனவே கொடுத்து இருந்தது. அந்த அடிப்படையில் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஷைனி முன் இந்த மனு கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. அடக்கி வாசித்ததுதான் ஆச்சர்யத்துக்கு உரியது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதற்கான தீர்ப்பை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


'சி.பி.ஐ. தரப்பு தனது வாதங்களில் கனிமொழியின் ஜாமீனைக் கடுமையாக எதிர்க்காததால், அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்றே நினைக்கிறோம். குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில்... ஜாமீன் கேட்பது குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் உரிமைதான்!'' என்று கனிமொழி தரப்பு இப்போது சொல்ல ஆரம்பித்து உள்ளது. அப்படியே ஜாமீன் கிடைத்தாலும் கனிமொழி டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் விதிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.


'ஜாமீன் மனுவை எதிர்த்து சி.பி.ஐ. சரியாக வாதாடவில்லை என்று சுவாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு போடத் தயாராக இருக்கிறது’ என்றும் சிலர் சொல்லி, பீதியைக் கிளப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே, கனிமொழி வெளியே வந்தால் மட்டுமே, இனி நம்மால் எதையும் நம்ப முடியும்!


- சரோஜ் கண்பத்

தமிழ் ஊடகங்களுடைய நிலையைப் பார்த்தால், உண்மையிலேயே மிகப் பரிதாபமாகத்தான் இருக்கிறது!

புலனாய்வுப் பத்திரிகைகள் என்று பீற்றிக் கொண்டு,உண்மையைத் திரித்துச் சொல்வது, அல்லது தெரிந்ததைக் கூட சொல்ல பயப்படுகிற அளவுக்குத் தான் உள்ளூர்ப் பத்திரிகையாளர்களுக்கு தைரியம், அல்லது நெஞ்சில் மாஞ்சாச் சோறு இருக்கிறது.காசுக்காகச் சோரம்போய்ச் செய்திகளைப் போடுகிற அவலமும் உண்டு! 


ஆட்சியாளர்கள் அனுப்புகிற குண்டர்கள், ஆட்டோக்களுக்குப் பயந்துகொண்டு கூட அல்ல! தாங்கள் செய்கிற இதர வியாபாரங்களுக்கு இடைஞ்சல் வந்து விடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வில் தான் ஊடகங்கள் தம் நெஞ்சறிந்தே பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு...! தினமலர் நாளிதழில் வேலை செய்யும் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
திமுகவை நக்கலடித்து, திமுகவைக் கொஞ்சம் ஏற்றி வைத்து, அழகிரி தரப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமலர் தன்னுடைய வியாபார உத்தியைப் பறை சாற்றிக் கொண்டிருந்த நேரம் அது. 

என்வரையில் தினமலர், நம்பகத்தன்மை கொஞ்சமும் இல்லாத ஒரு குப்பை என்பதை அவரிடம் சொன்னபோது சிரித்தபடியே கேட்டுக் கொண்டாரே தவிர மறுப்பேதும் சொல்லவில்லை. மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆரம்ப காலத்தில் தினமலர் இயங்கிக் கொண்டிருந்த தருணங்களில் அழகிரி தரப்பு ஆட்கள் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கியது தினமலருக்கு மறந்துபோய் விட்டதா என்று கேட்டபோது மனிதர் ஒரு யதார்த்தத்தைப் புட்டு வைத்தார்.

பத்திரிக்கை நடத்துவது ஒரு வியாபாரம்!வியாபாரிக்கு ஆதாயம் தான் முக்கியமே தவிர, சூடு சொரணை அல்ல! அழகிரி கோபத்தால் ஏற்பட்ட சேதத்தை விட, மாறன்கள் போட்டியாகக் கொண்டு வந்த தினகரனால் சேதம் அதிகம். மாறன்களை சமாளிக்க வேண்டுமானால், அழகிரி ஆதரவு நிலை எடுத்துத் தானே ஆகவேண்டும்?இது சரியா தவறா என்று எதை வைத்து சொல்ல முடியும்? 

இது சிறிது நேரம் கழித்து அவர் என்னிடம் கேட்ட எதிர்க் கேள்வி! ஆக, தினமலர் அழகிரிக்கு ஆதரவாகஎடுத்த நிலை  என்பது உண்மையில் மாறன்களை  அல்லது தொழில் போட்டியை சமாளிப்பதற்காக மட்டுமே!

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்? தினமலர் உரிமையாளர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது என் உரிமை, வேலை அல்ல! வேண்டுமானால், இப்படி ஒரு சந்தர்ப்பவாத நிலை எடுத்த அந்த நாளிதழைப் படிப்பதைத் தவிர்த்து விடலாம்! அது ஒன்றுதான் நம்மால் செய்ய முடிந்தது! தினமலர் ஒன்று தான் இப்படி சந்தர்ப்பவாதியாக இருக்கிறதென்று நினைத்து விடாதீர்கள்! அத்தனை ஊடகங்களும் இங்கே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அப்படித்தான் இருக்கின்றன!

அவைகள் அவ்வப்போது, கொஞ்சம் உண்மையும் பேசுகின்றன என்பது தான் விசித்திரம்!

இன்றைய ஜூனியர் விகடனில் சரோஜ் கண்பத் பெயரில் வெளியாகி இருக்கும் இந்த செய்திக் கட்டுரையையே கொஞ்சம் கவனியுங்கள்! செய்தியாளர் சொன்னதை விட, சொல்லாமல் விட்டது அதிகம்! சொன்னதையுமே எப்படி வடிகட்டிச் சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால், இன்னும் சில விஷயங்கள் கண்முன்னாலேயே இளித்துக் கொண்டு நிற்கும்!

முதல் பாராவிலேயே நீதிபதியைப் பற்றிய வர்ணனை கொஞ்சம் அதீதமாகத்தான் இருக்கிறது!இதெல்லாம், அந்த நீதிமன்றத்துக்குத் தெரியவந்து  நீதிமன்ற அவமதிப்பாக எங்கே ஆகப் போகிறது என்ற தைரியம் தெரிகிறதே தவிர, அதன் உண்மை வெளிப்படவில்லை. குற்றப்பத்திரிகையின் கட் அண்ட் பேஸ்ட் மாதிரித்தான் குற்றப் பத்திரிகை இருந்தது என்ற விமரிசனம் வேறு! குற்றப்பத்திரிகையில் இருப்பதை வைத்துத்தானே, அடிப்படை ஆதாரம் இருந்து ஏற்றுக் கொள்ளப்படுகிறதா  அல்லவா என்று முடிவு சொல்ல முடியும்? ஜூவியில் வருகிற செய்தியை வைத்தா குற்றப்பதிவு செய்ய முடியும்?

சிலவிஷயங்களைச்  சொல்லாமலேயே ஒரு பொய்யை விதைக்க முடியும் என்பது கனிமொழி ஜாமீன் கேட்டதில் சிபிஐ அடக்கி வாசித்தது என்ற வரி சொல்கிறது. சிபிஐ வழக்கறிஞர் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர்களுடைய ஜாமீன் மனுவை, நீதிமன்றமாகப் பார்த்துத் தகுதியானது என்று கருதினால் ஜாமீனில் வெளியே விடுவதில் தங்களுக்கு ஆட்சேபணை  இல்லை என்று சொன்னார். அக்டோபர் 14 அன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞரிடம் கனிமொழி ஜாமீன் கோரினால் ஆட்சேபிக்கப் போவதில்லை என்று செய்திகள் வருகின்றனவே, அது உண்மை தானா என்று கேட்டதற்கு, தன்னுடைய குறிப்பில் அப்படி இல்லை என்று மழுப்பினார். அதைத் தொடர்ந்து சிபிஐ நிலையைத் தெளிவுபடுத்துமாறு நீதிபதிகள் கேட்ட போது சிபிஐ நிச்சயமாக ஜாமீனில் வெளியில் விடுவதை எதிர்க்கும் என்று உறுதி சொல்ல வேண்டியதாயிற்று.

தாத்தா டில்லிக்குத் துணைவியுடன் வந்து சோனியா, டம்மிப்பீஸ் மன்மோகன் இவர்களை சந்தித்தார் என்பதைத் தவிர,பத்தே நாட்களில் சிபிஐ  தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவேண்டிய அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது? 


சிபிஐ  வழக்கறிஞர், நீதிபதியிடம் குட்டு வாங்குவதில் இருந்து தப்பிக்க, மிக சாமர்த்தியமாக வார்த்தைகளைப் பயன் படுத்தினார்.  நீதிமன்றம், இவர்கள் ஐவர் ஜாமீன் மனுவில் தகுதி இருக்கிறது என்று கருதினால்,  தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்பதாக!

ஜூவி கட்டுரை, கொஞ்சம் நடுநிலையோடு உண்மை நிலவரத்தை சொல்கிற மாதிரி, இன்னொரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது! 

விகடன் ஒளித்திரை வியாபார உறவுகள் தொடர வேண்டுமே!


இன்றைக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.........!



தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாக மாறி, இருபத்து நான்கு மணி நேரமும் சினிமா அல்லது சினிமாக்காரர்களை ஒற்றியே ஜனங்களை மூளைச்சலவை செய்வதற்கு முன்னமேயே, செய்தித்தாட்கள், தங்களுடைய நல்ல இலக்கணங்களை சுத்தமாகவே மறந்து விட்டன.அதில், முக்கியமான ஒன்று நாளிதழில் வெளிவரும் தலையங்கம்!

செய்திகளைப் படிப்பதோடு, வாசகருடைய கவனத்தை முக்கியமான பிரச்சினைகளில் ஈர்ப்பதற்கும், நடப்பு நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதென்ன என்ற சிந்தனையைத் தூண்டுவதற்கும் இந்தத்  தலையங்கங்கள் மிகவும் முக்கியமாகப் பயன் பட்டன.

1960 களில் தினத்தந்தி சகாப்தம் கொஞ்சம் உச்சத்துக்குப் போன போது, அக்கப்போர்களில் பிரதான கவனம் இருந்ததே தவிர உருப்படியான சிந்தனையைத் தூண்டுகிற விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தமிழ் நாளிதழ்களில் தலையங்கம் எழுதுவதே குறைந்து போனது! ஒன்றிரண்டு வந்தாலும் அது ஏதோ ஒரு அரசியல் சார்பு நிலை எடுத்துக் கொண்டு, சப்பைக் கட்டு கட்டுகிற மாதிரி இருந்தனவே ஒழிய, குடிமைப்பண்பு (citizenship) வளர்வதற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை! இன்றைய தினமலர் உள்பட, பெரும்பாலான பத்திரிகைகள், அப்படித்தான் வாலறுந்த நரிகளாக இருக்கின்றன.

அந்தவிதத்தில், ஒரு சமூகப்பொறுப்புடன்,நடப்பு விஷயங்களைத் தெளிவாக ஆராய்ந்து தலையங்கம் எழுதுகிற ஒரே நாளிதழ் தமிழில் தினமணி தான்! சர்குலேஷன் விழுந்து போனாலும் கூட, தன்னுடைய வீரியத்தைக் குறைத்துக் கொள்ளாத நாளிதழ் என்று தினமணியைப்  பார்க்க முடிகிறது. பதிவுகளைப் படிக்க வருகிறவர்கள் கொஞ்சம் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பலமுறை தினமணி நாளிதழின் தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகளை இந்தப் பக்கங்களில் பார்த்திருப்பீர்கள்!

இன்றைய தினமணி தலையங்கம், உங்கள் சிந்தனைக்காக....!




ரெப்போ விகிதத்தை நமது ரிசர்வ் வங்கி இப்போது 13-வது முறையாகக் கூட்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கிக்கு கடந்த 12 முறை அதிகரிப்பாலும் கட்டுக்குள் கொண்டுவர முடியாத விலைவாசி 13-வது முறையாக ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கட்டுக்குள் வந்து விடும் என்கிற நம்பிக்கையா இல்லை கஜினி முகம்மது, ராபர்ட் ப்ரூஸ் பாணியில் மீண்டும் மீண்டும் முயற்சித்தால் பயனளித்து விடாதா என்கிற நப்பாசையா என்று தெரியவில்லை.

விலைவாசி ஜுரவேகத்தில் ஏறிக்கொண்டிருப்பதை ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய நிதி அமைச்சகமும் சரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. அதற்காக, பயனளிக்காத முடிவுகளை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பது அசட்டுத்தனம் என்பதைச் சுட்டிக்காட்டாமலும் இருக்க முடியவில்லை.

சமீபகாலமாக, சிறுசேமிப்பில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. வங்கி டெபாசிட்டுகளில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் ஆர்வத்தை சிறு சேமிப்பில் காட்டுவதில்லை என்பது தெரிகிறது. சிறு சேமிப்பு தாரர்களுக்கு அதிக வட்டி விகிதம் தரும் அதேவேளையில், அவர்களுக்கு நியாயமாகத் தரப்பட வேண்டிய சேவைகள் அனைத்துக்குமே வங்கிகள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி விட்டன. வங்கிகளில் சிறு சேமிப்பு வைத்துக் கொள்வது போன்று எரிச்சலூட்டும் செயல் வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதுதான் சாமானியனின் எதார்த்த அனுபவம். இந்த நிலையில் சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தைப் பெயருக்கு உயர்த்துவதால் எதுவும் பெரிதாக நிகழ்ந்து விடாது.

பிரதமரும் சரி, நிதியமைச்சரும் சரி விலைவாசி உயர்வுக்கான காரணமாகக் கருதும் காரணிகள் நியாயமானவையாகத் தெரியவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரமும் வாங்கும் சக்தியும் உயர்ந்திருப்பதால், அவர்கள் சத்துள்ள உணவு முறைக்கு மாறியிருப்பதாகவும், அதற்குத் தகுந்தாற்போல உற்பத்திப் பெருக்கம் இல்லாமல் இருப்பதும்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்பது பிரதமரின் கருத்து. நிதியமைச்சரும் இதையேதான் வேறு வார்த்தைகளில் கூறி வருகிறார்.

உணவுப் பொருள்களானாலும், ஏனைய தொழிற்சாலைத் தயாரிப்புப் பொருள்களானாலும் தட்டுப்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உணவு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவுக்குச் சாதனை புரிந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அரசின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. கிடங்குகளில் தேங்கி வீணாகிவிடாதபடி உணவுப் பண்டங்களை விநியோகிக்க உச்ச நீதிமன்றம் கூறும் அளவுக்கு உற்பத்தி இருக்கிறது. ஆனாலும், அரிசி, கோதுமை, பருப்பு விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர குறையக் காணோம்.

சரி, காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, இறைச்சி என்று எடுத்துக் கொண்டாலும், தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மூலகாரணம் உற்பத்திக் குறைவும், மக்களின் அதிகரித்த தேவையும்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பதப்படுத்தி வைப்பதற்கான வசதி பரவலாக இல்லாத நிலையில், செயற்கையாக இந்தப் பொருள்களின் விலைகளை அதிகரித்துவிட முடியாது என்கிற நிலையிலும் தொடர்ந்து விலை ஏறிக் கொண்டே போகிறது என்று சொன்னால் இடையில் ஏதோ தவறு நடக்கிறது என்பதும் அதைக் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்த அரசுக்குத் தெரியவில்லை அல்லது தெரிந்தே தவறுக்கு நமது நிர்வாகம் துணை போகிறது என்பதும்தான் காரணங்களாக இருக்க முடியும்.


மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. இதற்கு இரண்டு காரணங்கள். நகர்ப்புறங்களில் கூலி அல்லது சம்பளம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், கிராமப்புறங்களில் உற்பத்தி அதிகரிப்பால் வாங்கும் சக்தி அதிகரிக்காமல், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் காரணமாகப் பணப் புழக்கம் அதிகரித்து வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது.

பொதுத்துறையில் தொழில் நிறுவனங்களை அமைப்பது, சாலைகள் அமைப்பது, அணைகள், மின் நிலையங்கள் ஏற்படுத்துவது, ஏன் வீடுகள் அலுவலகங்கள் கட்டுவது என்று அரசின் பணம் முதலீடு செய்யப்பட்டு, அதன் பயனாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும்போது, பணப்புழக்கமும் ஏற்படும், உருப்படியான முதலீடாகவும் அந்த வரிப்பணம் பயன்படுத்தப் படும்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்கிற பெயரில், ஆக்க பூர்வப் பயன் இல்லாமல் மக்கள் வரிப்பணம் விநியோகம் செய்யப் படுவதால் ஏற்பட்டிருக்கும் செயற்கையான வாங்கும் சக்தி, விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணி என்பதைப் பிரதமரும், நிதியமைச்சகமும் சொல்லத் தயங்குகிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் அரசால் புழக்கத்தில் விடப்படும்போது பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி அதிகரிக்கும் என்கிற அரிச்சுவடிப் பொருளாதாரப் பாடத்தை பொருளாதார நிபுணர்களான பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் படிக்கத் தவறி விட்டிருக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையை ஊன்றிக் கவனித்தால் இன்னொரு உண்மையும் வெளிப்படுகிறது. அதாவது, விலைவாசி உயர்வு நகர்ப் புறங்களைவிட கிராமப்புறங்களில்தான் அதிகம் என்பதுதான் அது. ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதாலும், சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாலும் விலைவாசி உயர்வு எப்படிக் கட்டுக்குள் வரும் என்பது நமக்குப் புரியவில்லை.

ஒருபுறம் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் அரசின் வரவு செலவில் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. போதாக் குறைக்கு, முதலீடுகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கோதுமைக்கும் கடுகுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைக் கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள். நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாள் வேலை உறுதித் திட்டமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
 
இதையெல்லாம் செய்துவிட்டு விலைவாசி குறைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்!!ஒரு குருட்டு மல்யுத்த வீரன் மறைந்து கொண்டிருக்கும் எதிரியுடன் இருட்டில் குத்துச்சண்டை போட்டால் எப்படி இருக்கும்? நமது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விலை வாசியைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன.