BSNL பொறுப்பில்லாத பொதுத்துறை, இங்கே யாருக்காக?

இன்றைய செய்தியாக BSNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இன்று வழங்கப்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் அறிவித்தது வந்திருக்கிறது. ஏற்கெனெவே இந்தச் செய்தியை ஓரிரு  நாட்களுக்கு முன்னாலேயே எகனாமிக் டைம்சில் MTNL நிறுவனத்துக்கு 171 கோடி செவ்வாய்க்கிழமையே  DoT தந்துவிட்டது BSNL  ஊழியர்களுக்கு சம்பளம் மார்ச் 21தேதிக்கு முன்னர் வழங்கப்படும் என்தாகப் பார்த்தேன்.

BSNL Salary Issue: Govt. Says Every Employee Will Get Salary Before Holi; Releases Rs 171 Crore. For the first time in 18 years, BSNL employees haven't received their salaries இது இரண்டுநாட்களுக்கு முந்தைய செய்தி 

கிருஷ்ண மூர்த்தி STweet text
 
 இழவு வீட்டில் அரசியல் செய்யும் திமுக தலைவர்கூட நேற்றைக்கு ட்விட்டரில் தன் கண்டனக்குரலைப் பதிவு செய்திருக்கிறார். ஆமை புகுந்த வீடும் அரசியல்வாதி தலையிடும் பொதுத்துறையும் உருப்பட்டதில்லை என்பதை BSNL ஊழியர்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. நிறுவனத்தை மூடுகிற எண்ணம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இன்னொருபுறம்  பொறுப்பில்லாத பொதுத்துறையை மக்களுடைய வரிப் பணத்தில் எதற்காகக் கட்டி அழவேண்டும் என்ற கண்டனக்குரல்களும் வலுத்து வருகின்றன. 

தொடர்புடைய பதிவு1    பதிவு 2    

மத்தியில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் பிஎஸ்என்எல்-லை விற்பதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன். நட்டம் ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் பொறுப்பற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தயவு தாட்சண்யமின்றி அரசுப்பாதுகாப்பில் இருந்து வெளிவர வேண்டும்.
நான் அடிக்கடி சொல்லி வருவது போல, அரசுக்கு தொழில் செய்யும் எந்தத் தகுதியும் கிடையாது. தனியார் யாரும் வரும் வரை, தனிக்காட்டு ராஜாவாக இயங்கி வந்த ஏர் இந்தியா, தூர்தர்ஷன், பிஎஸ்என்எல் போன்ற அரசு நிறுவனங்கள் தனியாரின் திறன்மிகு போட்டியால் இப்போது தத்தித் தடுமாறுகின்றன. எந்த சுய முன்னேற்ற முயற்சிகளும் எடுக்காமல் ராஜாங்கம் செய்து வந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் புலம்புகின்றனர்.
இருக்கும் ஒரே வழி இவை யாவும் தனியார் மயமாக்கப்பட வேண்டும். ஓரளவு நட்டமடையாத விலைக்கு இவற்றின் பங்குகளை விற்று விட்டு அரசு தன் தொடர் நட்டத்தை நிறுத்த வேண்டும். இந்த விற்பனையில் வரும் லாபம் வளர்ச்சி, கட்டுமான மற்றும் சமூக நலப்பணிகளில் செலவழிக்கப் பட வேண்டும்.
இப்படிச் சொல்லியிருப்பதைப் பார்த்துக் கொண்டு வந்ததில் ...........
வலது சாரி இயக்கங்கள் உலக அளவில் தற்போது வெற்றி அடைவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? 
இது தமிழ் கோரா தளத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு கேள்வி!
காரணம் உலகமயமாக்கல்.உலகமயமாக்கலின் காரணமாக பல்வேறு கலாச்சாரங்கள் பல புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.இதனால் பல சமூகங்கள், தங்கள் தங்கள் அடையாளங்களை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளன.இந்த அச்சத்தை வலதுசாரி இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.எனினும் இதன்பின் நியாயமானக் காரணங்கள் ஏதுமில்லை என முழுமையாக புறந்தள்ளிவிட இயலாது.

நம் உலகம் சரிசமமானது அல்ல. ஒரு அமெரிக்க உழவர் சராசரியாக வைத்திருக்கும் நில அளவு, முதலீடு ஒரு இந்திய உழவரின் அளவைவிட மிகப்பெரிது. அவர் கொடுக்கும் விலை இவருக்கு ஒரு போதும் கட்டுப்படியாகாது. எனவே ஒரே சந்தை, ஒரே போட்டி என்பது சாத்தியமே இல்லை.இதிலிருந்துதான் அச்சம் தொடங்குகிறது.

ஐரோப்பிய யூனியனைப் பொறுத்தவரை பொருளாதாரக் காரணங்களுக்காக இடம்பெயர்வது பெரும் சிக்கலை உண்டாக்கியது. உள்ளூர் மக்கள் வேலையிழப்பு, ஊதியக் குறைவு போன்றவை சிக்கலை உண்டாக்கின. ( கலாச்சார சீர்கேடு, அரசியல் வலிவு குறைதல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்பதெல்லாம் அடுத்தக் கட்டம்தான் )

அதுபோல கட்டுப்பாடற்ற இடப்பெயர்வும் தவறு தான். அனைவரும் ஓர் இடம் நோக்கி படையெடுத்தால் அந்த இடம் வாழும் தகுதியை இழக்கக் கூடும். தவிர அவர்களின் சொந்தப் பகுதியும் அழிந்து போகும்.இந்தியாவைப் பொருத்தவரை, வலதுசாரி இயக்கங்கள் குழப்பமானவை. அவை மக்களைப் பின்னோக்கி இழுக்கின்றன.

அடுத்தப் பத்தாண்டுகளில் மாநிலங்களுக்கிடையேயான இடப்பெயர்வு மிகப்பெரியச் சிக்கல்களை உருவாக்கப்போகிறது. ஏற்கனவே குசராத், கர்னாடகா மாநிலங்கள் வேலைவாய்ப்புகளில் தத்தமது மக்களுக்கே முன்னுரிமை என்ற சட்டங்களை இயற்றியுள்ளன. இக்கருத்து மற்ற மாநிலங்களுக்கும் விரிவடையும்.வட மற்றும் தென் மாநிலக்கிடையேயான பொருளாதார மற்றும் மக்கட்தொகை இடைவெளி இதைத் தீவிரப்படுத்தும்.

மாநிலங்களுக்கிடையேயான நகர்வு இங்கு கட்டுப்பாடற்றது. சரியான தரவுகள் கூட நம்மிடம் இல்லை. இதுவும் ஒரு சிக்கல்.கட்டுப்பாடற்ற குடியேற்றம் வளர்ந்த மாநிலங்களில் அழுத்தங்களை உருவாக்கும். விட்டுவந்த மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ( மூளை ஏற்றுமதி )

நடுவண் அரசு சட்டம் இயற்றி முறைப்படுத்தினால் பல பிரச்சினைகளை முன்கூட்டித் தீர்க்கலாம்.
மொத்தத்தில் இது ஒரு சுழற்சி போல. இரண்டாம் உலகப்போருக்கு முன் வலதுசாரிகள் கை ஓங்கியிருந்தது. எல்லை மீறிய போது போருக்கு இட்டுச்சென்றது. போருக்குப் பின் இடதுசாரிகள். எல்லை மீறிய போது உலகமயமாக்கல் அழுத்தங்களைக் கொடுத்துள்ளது..

இப்பொழுது மீண்டும் வலதுசாரிகள்!.இரண்டுக்கும் நடுவே தீர்வு உள்ளது  

என்கிறார் Arivaran Balu கற்பனாவாத சோஷலிசக் கனவுகளில் திளைத்தவரோ? அறியேன்! எதிரும் புதிருமான இரு கண்ணோட்டங்களை உங்கள் பார்வைக்கு வைத்திருப்பது ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்காக!
 

24 comments:

 1. ஜீவி ஸார் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஜீவிசார் வருவார், கருத்தும் சொல்வார், சரி! உங்களுக்கென்ன தோன்றுகிறது என்பதைச் சொல்லியிருக்கலாமே ஸ்ரீராம்!

   Delete
 2. ஸ்டாலின் கருத்தை விட்டுவிடுங்கள். அவருக்கு பொதுத் துறை நிறுவனம்னா என்ன என்பதே தெரியாது. அவரும்தானே பி.எஸ்.என்.எல் கேபிள்கள் மூலம் பலனடைந்தவர். (இல்லைனா மாறனை ஏன் வேட்பாளராக அறிவிக்கப்போகிறார்)

  ஆனாலும் பொதுத் துறை நிறுவனம் என்பது எளிய மக்களுக்காக தேவையான இடங்களில் மட்டும் இருக்கவேண்டும். உதாரணமா, ஏழைகள் வசிக்கும் பகுதியில் பள்ளிகள் (மேநிலைப் பள்ளி வரை), பேருந்து, தொலைத் தொடர்பு போன்ற அத்தியாவசியத் தேவைகள் இருக்கணும். இவை நஷ்டமாகும், ஆனால் அரசு அதனை ஏற்றுக்கவேண்டும். நஷ்டம் ஏற்படும் இடங்களில் தனியார்துறை கடை விரிக்காது.

  ஆனால் சென்னை போன்ற மாநகரங்களில் பி.எஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை இவ்வளவு பெரிய அளவில் தேவையில்லை. அதிலும் அத்தியாவசிய தொலைத் தொடர்பு தவிர, பெரிய அளவில் கடைவிரிக்கத் தேவையில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நெல்லைத்தமிழன்!

   இசுடாலின் சொன்னதை ஒரு nuisance value என்பதோடு கடந்துபோய்விடலாம்! இங்கே BSNL மட்டுமே பொதுத்துறை என்று எடுத்துக் கொள்ளவேண்டாம். இங்கே தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், அரசுப்போக்குவரத்துக் கழகங்களும் TNEB யும் மாநில பட்ஜெட் பள்ளம் விழுவதிலும் அரசின் கடன் அதிகரிப்பிலும் முன்னணியில் இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பேசுங்களேன்!

   முக்கியமாந கேள்வி, ஒரு அரசு வர்த்தக நிறுவனங்களை நடத்தவேண்டிய அவசியம் என்ன? நீங்கள் குறிப்பிட்ட மாதிரி, கல்வி, மருத்துவம் இரண்டிலும் லாபநோக்கமில்லாமல் அரசு நடத்தலாம். எதுவரை? இலவசப் பள்ளிக்கல்வி வரை சரி! அப்புறம்?

   Delete
  2. வெளி நாட்டில், மின்சாரம் தண்ணீர் பொதுத்துறைதான் செய்கிறது. சில தேசங்களில் சப்சிடைஸ்ட் செய்தது கடந்த சில வருடங்களாக மெதுவாக வாபஸ் வாங்கப்பட்டது. அதுபோல இந்தியாவிலும் செய்யவேண்டும். லாப நோக்கு இருக்கவேண்டாம், ஆனால் நஷ்டப்படக்கூடாது.

   அரசு செய்துதரும் வசதிகள், மக்களிடமிருந்து வரும் பணத்திலேயே செய்யப்படுகின்றன. அதேபோல இத்தகைய சேவை நிறுவனங்களுக்கு சாதாரண சம்பளம்தான் கொடுக்கப்படவேண்டும்.

   Delete
  3. சம்பளம் நல்ல சம்பளமாகவே கொடுக்கட்டும்! ஆனால் அதற்கேற்றபடி வேலை செய்கிறார்களா,நிறுவன வளர்ச்சியில் உண்மையாகவே பங்கேற்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டுமென்பது தான் முக்கியம்!

   Delete
 3. என்னை நினைவு கொண்ட ஸ்ரீராமிற்கு நன்றி.

  நான் சமீபத்தில் சில நாட்கள் வெளியூர் சென்றிருந்ததால் இந்தப் பதிவை இப்பொழுது தான் பார்த்தேன்.

  இது பற்றி ஏற்கனவே நான் கருத்து கூறியிருக்கிறேன். அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பினால் பொதுத்துறையில் ஏற்படும் நஷ்டங்களுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். எதிர்காலத்தில் அரசியல்வாதிகளால் ஏற்படும் நஷ்டத்தை அரசு ஏற்றுக் கொள்வதற்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். அரசு ஏற்கொள்வது என்பது மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் என்பது தெரியாத மக்களுக்கு அந்தமாதிரியான அரசுகள் மறுபடியும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க இது ஒரு விழிப்புணர்ச்சியாகவும் இருக்கும்.

  நெல்லைத்தமிழன்! இந்தியாவில் தனியார்கள் லாபம் ஈட்டும் இடங்களில் தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள். எல்லைப் பகுதிகள், தீவிரவாத பிரச்னைகள் உள்ள இடங்கள், அடர்ந்த மலைப்பிரதேசங்கள், பொருளாதார பின்னடைவுப் பகுதிகள் போன்ற இடங்களில் சேவை செய்ய விருப்பப்படவே மாட்டார்கள். இன்றும் இந்த மாதிரி பகுதிகளில் BSNL சேவை தான் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நஷடங்களையும் அரசு ஈடு செய்ய வேண்டும்.

  இதெல்லாம் செய்வார்கள் என்று இந்த அரசிடம் ஒரு எதிர்பார்ப்பு. இந்த அரசும் மற்ற அரசுகள் போலத் தான் எல்லா பொதுத்துறைகளையும் தனியார் வசம் ஒப்படைத்து விட்டு எளிய மக்கள்
  'கஞ்சி குடிப்பதற்கு வழியில்லாதார்; அதற்கு காரணம் ஏது என்று அறியாதாராய்' என்று வாழட்டும். படித்தவர்கள் கூட நாட்டின் பொருளாதார வீழ்ச்சிகளை அறியாதாராய் இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு போலும்!

  ReplyDelete
 4. இந்த அரசும் மற்ற அரசுகள் போலத் தான் என்றால்... என்று திருத்திப் படிக்கவும்.

  இரயில்வேயும் தனியார் வசம் ஆகும் பொழுது இன்னும் தெளிவாக இந்த சூது புரியும்.

  ReplyDelete
  Replies
  1. //அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பினால் பொதுத்துறையில் ஏற்படும் நஷ்டங்களுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்//

   அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் அரசே சிக்கியிருக்கும் போது, வாக்களித்த ஒருவிரல் புரட்சியாளர்களுக்கு பொறுப்பே இல்லையா ஜீவி சார்? அதல்லவா முக்கியமாக இந்த நாடு எதிர்பார்க்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

   தனியாரிடம் தாரைவார்ப்பதோ மூடலோ இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியிருப்பதை சொல்லியிருந்தேனே! ஆனால், ஒரு நிறுவனம் competing திறனுடன் இருப்பதற்கு, அந்த நிறுவனம் அல்லவா பொறுப்பேற்க வேண்டும்? இருக்கிறார்களா? இல்லை என்பது தெளிவாகக் கிடைத்திருக்கும் பதில்.

   ஆரம்பநாட்களில் இதுமாதிரித்துறைகளில் இறங்காத தனியாரிடம் மூலதனம் இல்லை.அரசே ஆரம்பித்துக் கொடுத்தது சரி, இப்போதும் அதற்கான அவசியம் இருக்கிறதா?

   ரயில்வே மிகப்பெரிய வெள்ளையானை! பென்ஷன் கொடுப்பதற்கே இன்னும் இரண்டு மூன்று மடங்கு சம்பாதித்தாகவேண்டும்! தனியார் வசம் போய்விடும் என்பதே குரூரமான கற்பனை இல்லையா ஜீவி சார்

   Delete
  2. 000000000 -- என்று எண்ணமுடியாத zero க்களை மனத்தில் கொள்ளாமல் அத்தனை இடற்பாடுகளையும் ஊழியர்களின் பொறுப்பாக்கி விட்டு இதோபதேசம் செய்யக் கூடாது.
   இப்போதைக்கு மூடல் இல்லை என்பது இந்த அரசோடு முடிந்து விடுவதில்லை. ஓட்டு வங்கியில் இருக்கிறவர்களுக்கும் இருக்கப் போகிறவர்களுக்கும் எல்லோருக்குமே கவனம் உண்டு. எந்த அரசாக இருப்பினும் ஊரறிந்த இழப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்வது அமைச்சரவையின் தார்மீகக் கடமை இல்லையோ?..

   நோக்கமே தனியார் துறையை வளர்ப்பது தான் என்று இருக்கக் கூடாதில்லையா?.. இப்படி இருந்தால், இதற்கு அடுத்த நிலை வளர்ச்சி கூட உண்டு. அடுத்த நிலை, தனியார் துறையிலேயே பினாமியாக பங்கு கொள்வது.

   Delete
  3. ஜீவி சார்! பதிவை நன்றாகக் கவனித்திருந்தால் என்னுடைய சொந்தக் கருத்தாக எதையும் சொல்லவில்லை என்பதும், தனியார் வசம் மாற்றிவிடவேண்டுமென்கிற ஒரு கருத்தும், கொஞ்சம் நேர்மாறான அதேநேரம் இதெல்லாம் உலகமயமாக்கலின் விளைவு என்று சொல்கிற ஒரு கருத்து இரண்டையும் கொடுத்துவிட்டு, இங்கே வருகிறவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று காத்திருந்தும் தெரிய வந்திருக்கும்.

   என்வரையில் கற்பனாவாத சோஷலிச மாயைகளில் இருந்து விடுபட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.

   Delete
 5. 'பொறுப்பில்லாத பொதுத்துறை' என்ற அர்ச்சனையெல்லாம் பொய்த்துப் போக பேசாமல் அம்பானியையே நாட்டின் பிரதமர் ஆக்கிவிடலாமா?.. இடையில் இவர்கள் எதற்கு, கிருஷ்ணமூர்த்தி சார்?..

  ReplyDelete
  Replies
  1. ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் தொழிற்சங்கவாதியாகவும் இருந்துகொண்டு, நிறுவனத்தில் என்னைச் சுற்றியிருந்த பகுதியில் கொஞ்சம் மாற்றம், வளர்ச்சிக்காகவும் உழைத்த அனுபவம், கிடைத்த பாடங்களில் இருந்து நான் பேசுகிறேன் ஜீவி சார்! அர்ச்சனை செய்ய நான் யார்? அப்பன் அம்பானி வளர்ந்தவிதம், வங்கிகள் சில நாசமான கதைஎல்லாம் பொதுவெளியில் பேசமுடியாது. இணையத்தில் தேடினால் The Polyester Prince புத்தகம் pdf ஆகக் கிடைக்கும். இந்த நாசகார பூதங்களை வளர்த்துவிட்டது யார்?

   அதைப்பேசாமல், அம்பானியைப் பிரதமராக்கிவிடலாமா என்ற கேள்விக்கு விடையும் இல்லை.

   Delete
  2. http://guruprasad.net/posts/the-polyester-prince-rise-of-dhirubhai-ambani/

   Delete
 6. சரி.. போகட்டும். பேசுவதற்கு இதை விட்டால் வேறு நிறைய இருக்கின்றன.

  மாசம் ஆச்சுனா நூறோ இருநூறோ கொடுத்து விட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போ திடீர்ன்னு Pay channel என்கிறார்கள்.. இது பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன். ஸ்ரீமான் பொதுஜனம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, சார்!

  ReplyDelete
  Replies
  1. கேபிள் டிவி கட்டணம் என்னவாய் இருந்தாலென்ன? ஜனங்கள் டிவி பார்க்காமல் இருந்துவிடப்போகிறார்களா என்ன? இதெல்லாம் எழுத கிருஷ்ணமூர்த்தி எதற்கு சார்? :)))

   Delete
  2. ஜீவி சார்...இப்போதுதான் இதனைப் பார்த்தேன். நான் ஏர்டெல்லில் 365 ரூபாய் கொடுத்து தென்னிந்திய சேனல், ஸ்போர்ட்ஸ் என்று எனக்குத் தேவையில்லாத ஏகப்பட்ட சேனல்களையும் சேர்த்து பணம் கொடுத்துக்கொண்டிருந்தேன். சன் டிவி 22 ரூபாய், விஜய் 22, Zee 22 என்றெல்லாம் ஆனபிறகு, ஆனந்தமாக 250 ரூபாய்க்கு எனக்குத் தேவையான எல்லா சேனல்களையும் பார்க்கிறேன். இதில் டிராய் செய்தது சரியான செயல்தான். ஆனால், 100 இலவச சேனல் என்பதில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. 25 இலவச சேனல் கண்டிப்பாக இவை என்று குறிப்பிடுவது அநியாயம். இதற்கும் யாராவது வழக்கு போடவேண்டியதுதான்.

   சன், விஜய், Zee, Jaya இல்லாமல் நான் மிகவும் சவுகரியமாக தேவையான சேனல்கள் மட்டும் பார்த்துவருகிறேன் (பெரும்பாலும் ஹெச்.டி என்பதால் 250. இல்லைனா 200தான் வரும்)

   Delete
 7. எஸ்.. எதற்கு எஸ்.கே. என்றால்---

  தனியார் துறை எப்படியெல்லாம் சம்பாதிக்க புதிது புதிதாக வாசல்கள் திறக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள---

  ReplyDelete
  Replies
  1. நான் தனியார்துறையின் அல்லது அம்பானியின் PRO இல்லையே சார்!

   Delete
 8. கிருஷ்ணமூர்த்தி சார்! சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானான் ஆண்டி என்று இது டிராய் வகுத்த திட்டம். விளம்பரங்களில் சம்பாதித்தது போதும் என்று மாத சந்தாவோடு (ரூ.200/-) திருப்தி அடைந்திருந்தவர்கள் டிராயின் கடாட்சத்தில் ஆளுக்கு கிட்டத்தட்ட சராசரியாக ரூ.150/- கூடப் பெற்று ஏகப்பட்ட குஷியில் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 9. நெல்லை! நீங்கள் சொல்கிற மாதிரி ரூ.250/- கொடுத்து விட்டு ஏர்டெல்லில் DTH-ல் ஆனந்தமாக எதுவும் இல்லையே! அப்படி ஏதாவது இருந்தால் எனக்கும் தெரியப்படுத்துங்களேன். Family Pack- ரூ.450/-. அதில் கூட HD சேனல் எதுவுமில்லையே!

  ReplyDelete
  Replies
  1. ஜீவி சார்! பாவம் ஏழை ஜனங்கள் கஷ்டப்படக்கூடாதே என்று ஏழைபங்காளர்கள் சன் குழுமத்திலிருந்து சன் டைரக்ட் 169 ரூபாய் முதல் 278 ரூபாய்வரை(251சேனல்கள்) மலிவாகக் கொடுப்பதாகச் சொல்கிறார்களே!

   Delete
  2. அதிக விற்பனை - குறைந்த விலை என்ற வியாபார தாரக மந்திரம் போலும். தேர்தல் பிரச்சாரம், அதனால் விளையும் பயன்கள் என்ற மறைமுக லாபங்கள் தான் லாபங்களுக்கெல்லாம் ஆணி வேர்!

   Delete
  3. ஜீவி சார்! இன்னும் இதிலேயே இருக்கிறீர்களா? கடந்துவாருங்கள்! கவனிப்பதற்குப் புதிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!