தடுமாறும் அரசியல்! தேர்தல்களம் சூடாகிறதோ?

ஒருவழியாக, CONகிரஸ் கட்சி தமிழக வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. அதிலும் ஒரு இக்கு வைத்து சிவகங்கை தொகுதிக்கு மட்டும் பிறகு அறிவிப்பார்களாம்!காங்கிரஸ் இந்த தேசத்தைப் பீடித்திருக்கும் ஏழரை என்றால் பானாசீனா CONகிரசை பீடித்திருக்கும் ஏழரை என்பது சிவகங்கையை விட்டுக்கொடுக்காமல் நந்தி மாதிரி மறித்துக் கொண்டிருப்பதே இந்தத் தடுமாற்றம் சொல்லும் சேதிப.சிதம்பரத்துக்கே இந்த நிலைமையா..? கெத்தாக முடிவெடுத்து கதறவிட்ட ராகுல் காந்தி..! என்று ஆசியாநெட் தமிழில் செய்திபோட்டால் சரியாய்ப்போய் விடுமா? 

இந்து தமிழ்திசை நாளிதழ் சொன்னபடி குஷ்பூவுக்கு ஜாக்பாட்  கிடைக்கவில்லை. ஈரோட்டு வெங்காய பரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் ஈவிகேஎஸ் இளங்கோவனைத் தேனி தொகுதியில் தள்ளி விட்டார்கள். ஈரோட்டு வெங்காயத் தொலி நிற்குமா தூசியாகப் பறக்குமா என்பது இப்போதே ஊகிக்க முடிகிற ரிசல்ட்தான்!

இந்த வாய்தான் ஈவிகேஎஸ் இளங்கோவனை அரசியலில் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியாமல் செய்தது என்றாலும் இந்தவாய் மட்டும் இல்லாவிட்டால் என்றோ இவரை காக்கை தூக்கிக் கொண்டுபோயிருக்கும் என்று கூட சொல்ல முடிகிறது.


உதயநிதி அரசியல் பரப்புரை செய்கிறார்! வேடிக்கை! கூட நிற்கும் வேட்பாளர் பொன்முடி வாரிசு வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்!

இப்படியெல்லாம் கார்டூன் போடுவதால் இந்து தமிழ் திசை நாளிதழ் எப்படி நடுநிலை ஊடகம் ஆகிவிடாதோ அதுபோலவே பிரியங்கா பேசுவதெல்லாம் உண்மை ஆகிவிடாது. 

வாட்சப்பில் வந்து ரசித்தது என்று முகநூலில் இதைப் பகிர்ந்திருக்கிறார் உண்மைத்தமிழன் :
அரசியலுக்கு வராமல் போயிருந்தால்!!!!!
பேரறிஞர் அண்ணா பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றிருப்பார்.
கருணாநிதிக்கு ஆரூர்தாஸுக்கு முந்தைய இடம் தமிழ்த் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்திருக்கும்.
ராஜாஜி, சேலத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து பேர் சொல்லும் ஜூனியர்களை வளர்த்திருப்பார்.
காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும்.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசன் மாதிரி இறுதிக் காலம் வரை நடிப்பாக இருந்திருக்கும்.
சரோஜாதேவி மாதிரி ஜெயலலிதா, ஆண்டுக்கு ஒருமுறை பெங்களூரில் இருந்து வந்து இங்கு பொங்கல் நேரத்தில் சிறப்புப் பேட்டி கொடுத்துவிட்டு போயிருக்கலாம்.
ஓ.பன்னீர்செல்வம் டீக்கு பெரியகுளம் வட்டாரத்தில் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இணையான பிரான்ட்வேல்யூ கிடைத்திருக்கும்.
அண்ணாதுரையை, கருணாநிதியை, ராஜகோபாலனை, சின்னச்சாமியை, எம்.ஜி.ராம்சந்திரனை, ஜெயலலிதாவை, பன்னீர்செல்வத்தை உச்சிக்குக் கொண்டுபோய் உட்கார வைத்ததற்குப் பெயர் தேர்தல்!
அண்ணா இறந்துபோனபோது கூடிய கூட்டம் கின்னஸில் இடம் பெற்றது. ஆனால், அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுப் போனார்.
நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்விக்குறி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்திரியைச் சொன்ன காமராஜர்,சாஸ்திரி மறைவுக்குப்பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர்,சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரிப்பருவம் தாண்டாத பெ.சீனிவாசனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார்.
‘தென்னகத்தில் மார்லன் பிராண்டோ’ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றிபெற வைக்கவில்லை.
‘மிஸ்டர் ராஜீவ் காந்தி.. எங்கே ஓடுகிறீர்கள்?’ என்று நாடாளுமன்றமே நடுங்க கேட்ட வைகோவை, விருதுநகர் அரவணைக்கவில்லை.
ஊரார் மெச்சிய பிள்ளைகளை சொந்த வீட்டில் அன்னியம் ஆக்கியதற்குப் பெயரும் தேர்தல்!
ஒரு மணிநேரத்துக்கு 10 லட்சம் கட்டணம் வாங்கும் வக்கீல்கள்கூட ‘மை லார்ட்டு’ என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி சிவகாசி வெயிலில் அலைந்ததும், கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க காற்றுகூட குறுக்கிடாத பாதுகாப்புடன் ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடியே பின்னே நடந்த உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை விழுப்புரம் வீதிகளில் பார்க்கிறவர்கள் அனைவரையும் வணங்கிப் போனதும்,இந்திய அளவில் புகழ்பெற்ற பல் மருத்துவரான பி.பி.ராஜன் நெல்லைத் தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதவர்களை எல்லாம் பார்த்துச் சிரித்ததும் எதனால்?
தேர்தலால்!
‘அயோக்கியனின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம். அவருக்கு அதைப் பற்றி தெரியவில்லை.நான் சொல்கிறேன்: அயோக்கியனின் முதல் புகலிடமே அரசியல்தான்’ என்று சொன்ன கண்ணதாசனும் அரசியல்வாதியாக இருந்தார்.‘அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது’ என்று சொன்ன ஜெயகாந்தனும் அதில் பங்கேற்றார்.
‘திராவிட மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணரை தலைமேல் தூக்கித் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்க்குடிமகனையும் அது விடவில்லை.அதிகார வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவும் அதில் மூழ்கினார்.
தேர்தல் மோகம் யாருக்கு வராது? கோடீஸ்வர ஏ.சி.சண்முகம் சோடா உடைப்பவரிடம் தோற்றுப் போனதும்,சிறந்த பார்லிமென்டேரியன் என்று பாராட்டப்பட்ட இரா.செழியனை வைஜெயந்தி மாலா வென்றதும்,
நல்லகண்ணு தேர்தலில் நின்றாரா என்பது கோவை தொகுதிவாசிகளுக்கே தெரியாமல் போனதும்,ராமராஜன் அதிக வாக்குகளில் வென்றதும் தேர்தல் விநோதமா?
பால்காரனுக்குக்கூட வீட்டுக்கதவைத் திறக்காத சிலர், ஐந்து தடவைக்குமேல் எம்.பி தேர்தலில் வெல்வதும்,மக்கள் பிரச்னைக்காக எப்போதும் பேருந்து நிலைய வாசல்களில் முழக்கம் போட்டு நிற்பவருக்கு 100 ஓட்டுகள்கூடத் தாண்டாததும்,
நடிகர்களை தியாகிகளாகப் பார்க்கக் கூடுவதும்,தியாகிகளை காமெடியன்களாக நோக்குவதும் ஜனநாயக விநோதமா? தனது தேகத்தைத் தேய்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம்,எலும்புருக்கி நோய் தாக்கியபிறகும் சவம் எழப்பேசிய சுப்பிரமணிய சிவா,ரத்தத்தை உறையவைக்கும் கவிதை இயற்றிய பாரதி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த பெரியார்,இவர்கள் யாரும் தேர்தலில் நின்றது இல்லை.
ஈரோட்டில் மக்கள் பிரச்னைக்காக நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்களிடம், ‘என் பேச்சைக் கேட்கத்தான் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். நான் தேர்தலில் நின்றால் உங்களில் யாரும் ஓட்டுப் போடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்?’ என்று பெரியார் சொன்னார்.நின்றிருந்தால் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சோகம் பெரியாருக்கும் வந்திருக்கும்! உண்மைதானே?
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவரின் மனைவி ஜானகியை "தாய்" என்று போற்றிய அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள்,எம்.ஜி.ஆர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அவரைத் தோற்கடித்த நாடு இது.
சிவாஜி படம் பார்க்காதவர் உண்டா? அவரது நடிப்பைப் புகழாதவர் உண்டா? அவர் பாட்டை இன்றும் கேட்டு கண் கலங்காதவர் உண்டா?இந்த மொத்தக் கூட்டமும் அவர் கட்சியில் சேர்ந்திருந்தால் சூரக்கோட்டைக்காரருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை சாத்தியமாகி இருக்கும்.
ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, அன்புமணி, ஜி.கே.வாசன் என எல்லோர்க்கும் உண்டு முதலமைச்சர் கனவு.அந்தக் கனவுக்கு முன்னோட்டம்கூட இன்று வரை சாத்தியம் ஆகவில்லை.
ஆனால், இப்படி யோசித்தாலே 107 டிகிரி காய்ச்சல் வரக்கூடிய கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்கள்.
செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி என்று பெருமாள் பெயர் கொண்டவர்கள் தங்களுக்கும் அது சாத்தியம் என்று நினைத்தார்கள்.அந்த அளவுக்கு அது எளிமையான பொருளா?
இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த தியாக வியர்வை காய்வதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்த தமிழகம் - கடந்த 40 ஆண்டுகளாக அந்தக் கட்சியைத் தள்ளி வைத்திருக்க என்ன காரணம்?
எவ்வளவு அதிகாரம் பொருந்தியவர்களாக ராஜீவ் காந்தியும் நரேந்திர மோடியும்
மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும்,தமிழ்நாட்டில் தனியாக நிற்க, தண்ணீர் குடிக்க வேண்டி வந்த கள யதார்த்ததுக்கு என்ன காரணம்?
எல்லா ஜனநாயக நெறிமுறைகளையும் பேசிய ராஜாஜி முதலமைச்சர் பதவிக்கு வந்த இரண்டு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர் இல்லை.
ஆனால், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட பல பேர், மக்களால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் என்றால் மக்களுக்கு இந்த வகை மனிதர்களைத்தான் பிடிக்கிறதா?
அன்று சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இருந்த நிழல் யுத்தம் இன்று இளங்கோவனுக்கும், சிதம்பரத்துக்கும் நடக்கிறது.
அன்று அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இருந்த ஈகோ யுத்தம், கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடந்தது.
ராஜாஜி, சாதி பார்த்திருந்தால் சத்தியமூர்த்திக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம்.
கருணாநிதி, ரத்தம் பார்த்திருந்தால் ஸ்டாலினுக்கு விட்டுத் தர முன்வந்திருக்கலாம்.
ஆனால் பதவி, இவை எல்லாவற்றையும்விட உயர்ந்ததா? வெற்றி பெற்ற கட்சிக்குத் தலைவராக இருப்பவரே முதலமைச்சர் ஆவார் என்று காத்திருக்க,
வெள்ளையனே வியக்கவைக்கும் அளவுக்குப் பதவியை மறுத்த தியாகராயர்.
நான் பதவி விலக சம்மதிக்கிறேன், ஆனால் என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று சொன்ன ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
எனக்கு உடல்நலமில்லை, முதலமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று மறுத்த பி.எஸ்.குமாரசாமி ராஜா.
ஒன்பதாண்டுகால முதலமைச்சர் பதவியை தூசியைப்போல தட்டிவிட்டு வெளியேறிய காமராஜர் போன்றோர் வாழ்ந்த மண் என்பதற்கு அடையாளமே இல்லாமல் இப்போது அசிங்கமாகிப் போனதே தமிழ்நாடு.
என்ன காரணம்? சிந்தியுங்கள்...நல்ல முடிவை எடுங்கள்...வாக்களியுங்கள்..!


4 comments:

  1. அரசியல் செய்கிறது (சமையல் செய்வது போல) என்று இவர்கள் அடிக்கடி சொல்கிறார்களே?.. அப்படின்னா இன்னா சார்?.. அரசியல் என்பது மக்களுக்கான தொண்டாக இருக்கலாம்... அதில் என்ன சார் செய்யறதுக்கு இருக்கு?..

    ReplyDelete
    Replies
    1. மக்கள் என்பது தன் மனைவி மகன் மகள் பெயரன் என்று இப்போது சுருக்கிவிட்டார்களே ஜீவி சார்!

      Delete
  2. ஆட்டமும் சிரிப்புமாக வாரிசுகள் களத்தில் விளையாடுகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! உங்கள் கமெண்டுக்குத் தனிப்பதிவாகவே சுவாசிக்கப்போறேங்க தளத்தில் பதில் எழுதியாச்சு!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!