Showing posts with label சோதனையும் சாதனையும். Show all posts
Showing posts with label சோதனையும் சாதனையும். Show all posts

இட்லி வடை பொங்கல்! #45 இரு பிரதமர்கள்! ஐநாவில் சாதித்ததென்ன?

பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருவாரகால அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பியிருக்கிறார். Howdy Modi நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டது முதல் சுமார் 40 நிகழ்ச்சிகளில் பிரதமரும், இருமடங்கு நிகழ்வுகளில் முன் எப்போதும் இல்லாதவகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ஐநா பொதுசபை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளோடு பேசி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார்கள்.ஐநா பொதுசபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ப்புலவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசியது இந்தப் பயணத்தின் உச்சம்!

 

பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கானும் கூட அமெரிக்காவுக்கு வந்திருந்தார். டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட இந்திய எதிர்ப்பு நிலையில் உள்ள ஊடகங்களிடம் பேசினார். இந்தியப் பிரதமருக்கு அடுத்தபடியாக இம்ரான் கானும் UNGA ஐநா பொது சபையில் காஷ்மீர் விவகாரம் தொடங்கி  இங்கே ராகுல் காண்டி பேசுகிற மாதிரியே சுத்தப் பேத்தலாக RSS பற்றியும்  பேசியது இங்கே திமுக மாதிரி மோடி மீதுள்ள பயத்தை மோடி வெறுப்பாகவும் மோடி எதிர்ப்பாகவும் காட்டியது பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது!  

  
காங்கிரசுக்காக கூவுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் The Print தளத்தின் சேகர் குப்தா கூட, காஷ்மீரில் நடப்பது, ஆர்டிகிள் 370 abrogation எல்லாம் இந்திய உள்விவகாரம் என்கிற நிலையை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கன்வின்ஸ் செய்து விட்டார் என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனாலும் காஷ்மீரில் நடப்பதை உலகநாடுகள் கவனித்துக் கொண்டிருக்கின்றன என யாரைத் திருப்தி செய்வதற்காகச் சொல்கிறார்? 7 நிமி.


இம்ரான் கான் வெறுப்பு, வன்மத்தைக் கொட்டி ஐநா பொது சபையில் பேசியதற்கு, அங்கேயே இந்தியாவின் சார்பில்  பதில் சொல்கிறார் வெளியுறவுத்துறையில் செயலாளர் விதிஷா மைத்ரா! point by point பதில் சொன்னதிலேயே இம்ரான் கானுக்கு சில விஷயங்கள் புரிந்திருக்க வேண்டும். நான் சொல்ல வருவது என்னவென்று உங்களுக்குப் புரிந்தால் சரி! ஐம்பது நிமிடத்துக்கு மேலேயே அணு ஆயுதப் பூச்சாண்டி காட்டி UNGA வில் பேசினாரே இம்ரான் கான்! அதை யாருமே பொருட்படுத்தவில்லையா?


அல்ஜசீரா சேனல் இருக்கவே இருக்கிறதே! இம்ரான் கானுடைய பேச்சை 6 நிமிடத்திலேயே இங்கே சுருக்கிச் சொல்கிறார்கள்! 


News X சேனலின் ரிஷப் குலாடி இம்ரான் கான் புலம்பலுக்கு 8 நிமிட பதிலடியாகச் சொன்னது கூட சுவாரசியமாகத் தான் இருக்கிறது! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்ன மாதிரி இம்ரான் கான் வரவர கார்டூனிஸ்டுகளுக்குப் பிரியமான காமெடிப் பீசாகி வருகிறார் என்பதுதான் விஷயம்!



காஷ்மீர் முஸ்லிம்களை பற்றிக் கவலைப்படுகிறீர்களே இம்ரான்! சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் நிலையைப் பற்றி எப்போது பேசுவீர்கள் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பி இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.    
       

#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன? யோசித்துச் சொல்லுங்கள்!

இரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் அமைச்சரவை நேற்று  பதவியேற்றிருக்கிறது. சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், பலருக்கு ஏமாற்றங்கள் என இந்தப் பதவியேற்பு விழா நடந்து முடிந்திருக்கிறது. தமிழக மக்கள் பிஜேபிக்கு வாக்களிக்காவிட்டாலும், இரண்டு தமிழர்கள், திருமதி நிர்மலா சீதாராமன், திரு D ஜெய்சங்கர் கேபினெட் அமைச்சர்களாகப் பதவியற்றிருக்கிறார்கள்  என்பதை இங்கே எவரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இருவருக்குமே திருச்சிதான் பூர்வீகம். விகடன் தளம் கூட  `போச்சே.. போச்சே.. !' - ஓ.பி.ரவீந்திரநாத் ஒதுக்கப்பட்ட கதை என்று விஷமத்துடன் செய்தி வெளியிடுகிறதே தவிர கண்முன் தெரிகிற ஒன்றை, நிதர்சனத்தை மறைத்துத்தான் எழுதுகிறார்கள்.  






பிரதமர் உள்ளிட்டு 25 கேபினெட் அமைச்சர்கள், 24 ராஜாங்க அமைச்சர்கள்  மற்றும் 9 தனிப்பொறுப்புடன் ராஜாங்க அமைச்சர்கள் என்று 58 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றிருக்கிறது என்பதில் முக்கியமாக  இந்திரா குடும்ப வாரிசு, சஞ்சய் காண்டியின் மனைவி மனேகா காண்டி பெயர் இடம்பெறவில்லை என்பதை நிறையப் பேர் கவனிக்கத் தவறியிருப்பார்கள். காண்டி வாரிசுகளுடைய தேவை காங்கிரசுக்கு இருக்கிறதோ இல்லையோ, பிஜேபிக்கு இனி தேவையில்லை என்றாகி இருப்பது என்பது  மிகவும் நல்ல விஷயம். 


இந்த விவாதம் கூட  புளித்துப்போன ராகுல் காண்டி ராஜினாமா பற்றித்தான் என்றாலும், இதுவரை விவாதங்களில் பங்கேற்பாளராக மட்டுமே பார்த்து வந்த பானு கோம்ஸ் இதில் விவாதக்களத்தை முன்னெடுக்கும் நெறியாளராகவும்! எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். 
  

உபிக்கள் தம்பட்டமடித்தபடி ஜூன் 3 அன்று முதல்வர் பதவியில் இசுடாலின் என்பது பொய்யாகிப்போனது என்பதில் ரொம்பவுமே அப்செட் ஆகியிருக்கிறவருக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமா? 

#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன? யோசித்துச் சொல்லுங்கள்!   

மீண்டும் சந்திப்போம்.

தமிழை நேசித்த கவியோகி! சுத்தானந்த பாரதியார்!



அது 1980 ஆம் ஆண்டு.

உலகத் தமிழ் மாநாடு நடக்கிறது.

எம்.ஜி..ஆர் 1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி கலந்து கொள்வதற்காக, நட்சத்திர ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து, அழைப்பிதழும் அனுப்பியிருந்தார். ஆனால், அரசியல் சாணக்கியர்கள், "அட சாமியார் எங்கே வரப்போறாரு!" என்று, அறை ஏற்பாட்டையோ, இல்லை அழைப்பிதழ் அனுப்பியது பற்றியோ, கவியோகிக்கு செய்தி அனுப்பாமல், அவர்களே அந்த அறையில் கும்மாளமடித்துள்ளனர்!
 
ஆனால், சுத்தானந்தரோ, " என் தாய் தமிழுக்கு விழா! நான் போகவேண்டும்!! என்று சொல்லி விழாவுக்குச் சென்றுவிட்டார்! பழ.நெடுமாறன் கவியோகி மேடையை நோக்கி வருவதைப் பார்த்ததும், ஓடோடிச் சென்று மேடைக்கு அழைத்து வந்தார். மேலே அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துவிட்டது!
 
அவர் தாமே, கவியோகியை அருகில் அழைத்து, முதல் நாள் விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்! கவியோகி கணீர் குரலில் தான் எழுதிய தமிழ் தாய் வாழ்த்தான, " காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்.." எனும் பாட்டை பாடி வணங்கிவிட்டு, வணங்கி, கீழே இறங்கிச் சென்றுவிட்டார்!! பதைத்துப் போன எம்.ஜி.ஆர், திரு.பில்லப்பனை அழைத்து, "சுத்தானந்த பாரதியாரை எப்படியேனும் 5ஆம் நாள் விழாவில் பங்கு பெறச்செய்யுங்கள்." என்று கூறினார்.  

மாநாட்டின் கடைசி நாளான 5ஆம் நாள் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால், 5 தமிழ் அறிஞர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட இருந்தது! தான் தந்த பெயர் இல்லாததைக் கண்ட எம்.ஜி.ஆர், தனது கையாலேயே ஒரு பெயரை நீக்கிவிட்டு, கவியோகியின் பெயரை எழுதினார்! அவர் செய்ததை அடித்தெழுத யாருக்குத் தைரியம் வரும்?  

கடைசியில், எங்கோ திருச்சி வானொலி நிலையத்தில், தமிழ் கவிதை வாசிக்கச் சென்றிருந்த கவியோகியை, தனிக் காரில் அழைத்து வந்து அன்னை இந்திரா காந்தியால் கெளரவித்தார்கள், உலகத்தமிழ் மாநாட்டினர்!”

இப்படிப் புறக்கணிக்கப் பட்ட, தமிழ் கூறும் 'நல்லுலகம்' அனேகமாக மறந்தே போன கவியோகி சுத்தானந்த பாரதியைப் பற்றி தனது வலைப் பதிவில் குமுறியிருந்தார் மரபூர் J சந்திர சேகரன்.


அவருடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.. திரு சந்திரசேகரன்  தனது பதிலில்  இப்படி எழுதியதை ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம்!


"தங்கள் மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி. அரவிந்த விஜயம் முதலில் தமிழ், ஆங்கிலம் தெலுங்கு ஆகியவற்றில் அரவிந்த விஜயம் எழுதியது சுத்தானந்தர். அங்கே வங்காளர்கள், வங்காளர்கள் அல்லாதவர் என்ற மவுன யுத்தத்தில், எங்கே அன்னையும் அரவிந்தரும், அன்பிற்கருளான சுத்தானந்தன் பிரதான சீடன் ஆகிவிடுவானோ என்று விஷம் வைத்ததையும், ஆலகாலனை தியானித்து விஷத்தை கழுத்து வரை நிற்கச் செய்ததையும், சுத்தானந்தர் தமது  Pilgrim's Soulல் நகைச்சுவையாக எழுதியுள்ளார். அதோடு புதுச்சேரியை விட்டுவந்தவர்தான், மீண்டும் அங்கே போகவில்லை.

பாரத சக்தி மகாகாவியம் மறு பிரசுரம் ஆகிவிட்டது. சுத்தானந்தர் நூலகம் நடத்தும் நண்பர் நாகராஜன் மூலமாக. அவரது கீர்த்தனாஞ்சலியை சந்தங்களோடு புத்தகமாகவும், பெரும்பாலான பாடல்களை ஒலிப்  பேழைகளாகவும் வெளிக்கொணர ஆசை. பார்க்கலாம். எல்லாம் அவன் சித்தம்."

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்த  உரையாடல் இது! இதைத் தொடர்ந்து, இணையத்தில் சுத்தானந்த பாரதியாருடைய பாடல்களை, அவர் எழுதிய நூல்களைக் குறித்துப் பேசும் சிறு சிறு இழைகள், மின்தமிழ் குழுமத்தில் தொடர ஆரம்பித்து, இப்போது மறுபடியும் தொய்வடைய ஆரம்பித்திருக்கிறது.;

பதினைந்து நாட்களுக்கு முன்னால், நான் நீண்ட நாட்களாகப் படிக்க ஆர்வம் கொண்டிருந்த பாரத சக்தி மகா காவியம், சோதனையும் சாதனையும் என்ற இரு நூல்களையும் திரு சந்திரசேகரன் எனக்கனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தபடி வந்து சேர்ந்தது. படிக்க ஆரம்பித்தேன், கவியோகியின் தமிழில் தோய்ந்திருந்தது சிலநேரம், அதில் கண்ட அனுபவச் சிதறல்களை உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தது சிலநேரம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. இப்படித் தமிழ்ப் புத்தாண்டு அன்றைய பதிவில், கவியோகி சுத்தானந்த பாரதியாருடைய சுயசரிதையான "சோதனையும் சாதனையும்" புத்தகத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பையும், புத்தகத்தில் இருந்து வ உ சிதம்பரனாருடனான சந்திப்பைப் பற்றி எழுதியிருந்த பகுதியையும் கொடுத்திருந்தேன்.


கவியோகி சுத்தானந்தருடைய சுய சரிதையைப் படிக்கிற எவருக்குமே, எந்தவிதக் கட்டுப் பாட்டுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத ஒரு சுதந்திரப் பறவையாக, தன்னுடைய உள்ளுணர்வின் குரலுக்கு மட்டுமே செவி சாய்த்து நடந்த தன்மை  உடனேயே புலப்படும். ஒரு துறவியாக, யோக சாதனையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், அதற்கும் மேலே தமிழ் மீது, தன்னுடைய எழுத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம்  வெள்ளிடை மலை.

தன்னுடைய சோதனையும் சாதனையும் என்ற சுயசரிதையிலேயே வேறோரிடத்தில் குறிப்பிடுகிற மாதிரி, அவர் தன்னுடைய வாழ்வின் நான்கு குறிப்புகளாக (நோக்கங்களாக) முதலாவதாகப் பாட்டும், கவிதையும், பாரத சக்தியும் அருளுதல், இரண்டாவதாக யோக சித்தி பெறுதல், மூன்றாவதாக உலகத் தொண்டு பரவுதல், கடைசியும் நான்காவதுமாக யோக சமாஜம் நாட்டி உலக சேவைக்கு யோகிகளைப் பயிற்றுதல் என்பதுதான்.


தன்னுடைய சுய சரிதையில், அவரே அரவிந்தாசிரமத்து அனுபவங்களைக் குறித்து எழுதியதைக் கொஞ்சம் பார்க்கலாம்! 

நான் ஏன் அரவிந்தாசிரமத்தை விட்டு வந்தேன் என்று பலர் கேட்கிறார்கள், "கடவுள் ஆணை" என்பதே பதில். போ, வா, இரு, செல், நில் என்று என் ஜீவநாதன் கட்டளையிடுகிறான், அவ்வாறே நடக்கிறேன். ஜீவ நதி ஒரே இடத்தில் தேங்கிக் கிடக்க முடியாது. நான் 25 ஆண்டுகள் மௌனத் தனிமையில் ஸ்ரீ அரவிந்தர் திருவடியில் இருந்ததே ஆச்சரியம். ஒவ்வொரு மூச்சையும் தவத்திலு, எழுத்திலும் செலவிட்டேன். என் உள்ளுணர்வுக்கும் உயர்ந்த கனவுகளுக்கும் தெய்வ ஆதேசங்களுக்கும் செதுக்கிய மணி போன்ற கவியுருக் கொடுத்தேன். பிற்கால யோக சமாஜத்தை சிந்தனையாக்கிப் பேனாவினால் சிற்பம் செய்து வைத்தேன். பாரதசக்தியே நான்தானே பாரதசக்தி! அதை ஆழ்ந்த மஹா துரிய சமாதியில் உருவாக்கி வெளியிட்டதே எனது வாழ்வின் நிறைவேற்றம். அதற்கு அச்சகம் நாட்டி நூலை வரிவரியாக ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்த்து ஊக்கிய பகவான் அரவிந்தரையும் என் அன்பிற்குரிய அன்னையையும் நான் மறக்கவே முடியாது. இன்றும் அவர்களை தியான அறையில் வைத்து வணங்குகிறேன். சமயோகம் உலகில் உருக்கொள்ள வேண்டியதைச் செய்தேன்.

ஆனால் நான், அரவிந்தாசிரமத்தை விட அரவிந்தரையே மேலாக மதிக்கிறேன். கட்டிலும் காவலிலும் கோட்டை மதில்சூழ்ந்த இருள் வீட்டிலும் நெருக்குண்டு அவரை அன்பு செய்தேன். இப்போது மதிலை விட்டு வந்து அகண்ட வானுலகில் விசாலமான அன்பு செய்கிறேன். முன்னே அன்பிற்கு எல்லையுண்டு. இப்போது எல்லையில்லை. மேலும் என் வாழ்க்கை முழுதும் தவயோகத்திற்கும் அருட்கவிதைக்குமே அர்ப்பனமானது. வேறெந்தத் துறையிலும் நான் என் சக்தியை வீணாக்க முடியாது. ஆசிரம விளையாட்டுகளைப் போற்றுகிறேன். ஆனால் நான் அப்படி விளையாடப் பிறக்கவில்லை. என் ஒவ்வொரு மூச்சும் பொன் விலை பெற்றது. ஆண்டவன் ஒருவனுக்கே நான் கட்டுப் பட்டவன். அவனுக்கு ஒவ்வொரு மூச்சையும் தியான மலராக்கிக் கணக்குத் தர வேண்டும். இன்னொருவர் நிழலில் இருந்து எனது தவம் பலிக்காது. நான் அரவிந்தாசிரமத்திளிருந்து வெளியேறியதால் அரவிந்தரிடமோ அன்னையிடமோ எனக்குள்ள பக்தி விசுவாசம் குறையவில்லை. இப்போதே என் அன்பு அதிகமாயிருக்கிறது. இப்போதே உள்ளுறவு உறுதி பெற்றுள்ளது. தமிழ்க் குருகுலத்தை நீத்தேன்; ஆனால் என் கலையை நகாசு செய்த (வ வே சு) ஐயரை நீக்க மாட்டேன்;
ரமணாசிரமத்தை நீத்தேன்;ரமண மகர்ஷிகளை இதயத்தில் உறுதியாக நாட்டியுள்ளேன். அரவிந்தாசிரமத்தை நீத்தேன்; அரவிந்தரை என்றும் பிரிய மாட்டேன். ரமணர், அரவிந்தர் என்பது உடலன்று; ஆத்ம  சைதன்யமே இந்த மகான்கள் உடலில் விளையாடியது. அதான பிறகு அதுவென்ன, இதுவென்ன? எல்லாம் ஒரு பொதுப் பொருளே--ஸ்ரீ அரவிந்தருக்கு நான் எழுதிய இறுதிக் கடிதத்தின் சுருக்கம் இதுவே. அதுவே என் உள்ளத்தை விளக்கும்." --

"தெய்வீக குருவே வணக்கம். கூண்டிற்குள் இருந்து அன்பு செய்த கிளி கூண்டை விட்டு அகண்ட வானுலகச் சோலையில் சுதந்திரக் கனியுண்டு அன்பிசைக்கத் துடிக்கிறது. இருபத்தைந்தாண்டுகளாகத் தங்கள் திருவடியில் தவம் புரிந்த யோகாத்மா எல்லையற்ற சைதன்ய உலகிலே சுற்றிச் சுழன்று உள்ளே பாடியதை உலகிற்குப் பாடத் துடிக்கிறது. புல்லின் இடம் கூண்டன்று; சுத்தான்மக் கவியின் இடம் சுவர் மூலையன்று. பூமிக்குள் ஆழ்ந்த விதை முளைத்து மேலோங்கிக்  கிளைத்து, இலைபரவி, மலர்ந்து, கனி குலுங்கிக் காற்றும் வெய்யிலும் பட வாழ்கிறது. ஒரு பறவை இடம் முட்டையன்று. முட்டையை உடைத்து வெளிவந்து சோலைக்குச் சோலை துள்ளிப் பறக்கும் இன்பத்தை இறைவன் அதற்குக் கொடுத்திருக்கிறான். இந்தப் பறவையும் குறுகிய இடத்தை விட்டு எல்லையற்று வாழ விரும்புகிறது. இதனால் அது தங்களை உதறித் தள்ளிச் செல்வதாக நினைக்கக் கூடாது. அரவிந்தர், அன்னை என்ற இரண்டு அகரங்களும் என் ஆன்மாவின் இரண்டு உயிர்ப்புக்கலாகும். உங்களை இனித்தான் தீவீரமாக அன்பு செய்வேன். எனது தியான பீடத்தின் எதிரே நீங்கள் என்றும் கட்சியளிப்பீர்கள். என் உள்ளத் துடிப்பில் என்றும் உணர்வுத் துடிப்பாக வாழ்வீர்கள்.
 

அன்னை என்னும் அமுதே, நின்னால் எனது பாரதசக்தி வெளிவந்தது. நின்னால் பிரெஞ்சுக் கவியானேன். நின் சைதன்யக் கனல் என் ஆதார கமலங்களில் சுழல்கிறது. நீ தந்த கனிகள் என் ரத்தத்திற் கலந்துள்ளன. மகாலக்ஷ்மியே, நின் ஆசீர்வாதம் எனக்கு என்றும் இருக்கட்டும். நின் அழைப்பு வந்தால் ஓடி வருவேன்.

குருதேவா, சிறுவயது முதல் நான் சுத்தயோகம் பயின்று வந்தேன். ஞான சித்தர் எனக்கு ராஜ யோகமளித்தார்.ராமகிருஷ்ணர் பக்தியோகமளித்தார். மஹாத்மா காந்தி கர்ம யோகமளித்தார். ஸ்ரீ அரவிந்தரே எனக்கு விஞ்ஞான 
யோகமளித்து, மஹா துரிய சமாதிக்கும் மஹா சகஸ்ரார  சித்திக்கும் வழிநடத்தினார். தங்கள் யோக சக்தியே எனக்குப் புது வாழ்வளித்தது. ஒரே வானின் கீழ் ஒரே உயிர்க்குலமாக ஒரே கடவுளின் அன்பில் எல்லோரும் இன்புற்று உலகாலயத்தில் வாழவே என் கவிக்கனவு பாடியது. அந்தக் கனவு பாரத சக்தியாக மலர்ந்தது. அதன் பெருமை குருதேவரையே சேரும்.

ஹா சக்திச் சுடரே, தங்கம் பொன்னான பிறகு அது சுரங்க மண்ணுடன் சேர்ந்து போகாது; சமாதி நிலை தாண்டிய சமயோகி இருள் மூலையிலோ  பிறர் அதிகாரத்திலோ கட்டுப் பட்டிருக்க மாட்டான். பால் கரைக்கு மட்டும் கன்றைக் கட்டிப் போபட வேண்டும். பால் கறந்து குடித்த பிறகு அது சுதந்திரமாகத் துள்ளி விளையாடட்டுமே. இந்தவுடல் ஒரு நாள் வீழ்ந்தே தீரும். இதை நித்தியமாக்கும் வித்தை வீண் வேலை. நான் இந்த ஆசிரமத்தை விட்டப் போவதுபோல், இந்த உடலையும் விட்டுச் செல்ல வேண்டியுள்ளதே;இங்கிருக்கும் எல்லோரும் அப்படியே. என் உள்ளம் திடுக்கிடுகிறது. குருதேவா, தங்கள் உடல் தள்ளாடுவதை, தலை சுற்றுவ்கத்தை, அடிவயிறு குமுறுவதை, நான் பார்த்தே வருகிறேன். இந்த ஆண்டு என்னவோ பெரிய துயரம் நிகழப் போகிறதென்று அஞ்சுகிறேன். தாங்கள் கீழே வீழ்ந்து கால் முறிந்தது முதல் ஆசிரமம் இருள் படரக் காண்கிறேன். அட்சுத்த ஆண்டு என்ன நடக்குமோ, ஆசிரமம் அரவிந்தரே, அவருக்கே நான் ஆசிரமத்தில் இருப்பது. என் உள்ளம் ஏதோ நடுங்குகிறது. உடலாகிய அரவிந்தரை விட்டு உலகான்மாவான அரவிந்தரை உள்ளத்தில் வைத்துச் செல்கிறேன். ரோஜாத் தோட்டம் அத்தர் புட்டியில் மணப்பது போலவே ஸ்ரீ அரவிந்த பக்தி என்னுள் சுத்த பரமாத்மா சக்தியாக மணக்கட்டும்.

ஓம் ஸ்ரீ சத்குரு ஸ்ரீ அரவிந்தாய நம:
ஓம் ஸ்ரீ அன்னையே வணக்கம்

இந்தக் கடிதத்தை இரவு பன்னிரண்டு மணிக்கு ஸ்ரீ அரவிந்தர் திருவடியில் வைத்துவிட்டேன். இதன் சுருக்கத்தைப் பத்து வரியில் எழுதி அன்னையிடம் சுவர்ண புஷ்பத்துடன் கொடுத்து ஆசி பெற்றேன்.

சுத்தானந்த பாரதியார் தனது சுய சரிதையில் சொன்ன விஷயங்கள், இங்கே நூல் அறிமுகமாக மட்டும்! தமிழை நேசித்த ஒரு கவியோகியின் வரலாறு தமிழருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதற்காக நூலின் ஒரு பகுதி இது. அத்தியாயம் 74  பக்கங்கள் 380-382
 
காப்புரிமையை மீறுவதற்காகவோ, வணிக நோக்கத்திற்காகவோ, இந்தப் பகுதி எடுத்தாளப் படவில்லை என அறிவிக்கப் படுகிறது.

சோதனையும் சாதனையும்


கவியோகி சுத்தானந்த பாரதியார்

வெளியீடு:  சுத்தானந்த நூலகம்
திருவான்மியூர், சென்னை

பக்கங்கள் 435 விலை ரூ.120/-

புத்தகங்களைப் பெறவும், மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் மின்னஞ்சல் முகவரி
 
shuddhashakthi@gmail.com



சோதனையும் சாதனையும்!

இது இன்றைக்கு சுவாசிக்கப்போறேங்க வலைத் தளத்துக்காக, கவியோகி சுத்தானந்த பாரதியாருடைய சுய சரிதையான சோதனையும் சாதனையும் புத்தகத்தைப் பற்றி எழுதியது.

கவியோகி சுத்தானந்த பாரதியார்!அன்பே சிவமாகிக் கனிந்த துறவி,
பன்மொழிப் புலமை, துறவையும் மீறித் தமிழில், இலக்கியங்களின் மீது காதல் கொண்டு,  ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர், அதே போலப் பாடல்கள்எழுதியவர், சுதந்திரப் போராட்ட வீரர், ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், காவ்யகண்ட கணபதி முனி முதற்கொண்டு எண்ணற்ற ஞானிகளோடு கூடவே இருந்து அவர்களுடைய சாதனையை நேரடியாகவே அறியும் பேறு பெற்றவர், ரமண சரிதம், அரவிந்த விஜயம் என்று அவர்களுடைய சரிதையை நாம் அறியத் தந்தவர்.

என்ன காரணமோ, உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த தேசம் அறிந்துகொள்ளத் தவறிக் கொண்டே இருக்கிறது. நடிப்புச் சுதேசிகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தமிழ், தனித்தமிழ் என்று மூக்கினால் பேசிக் கொண்டே தமிழ்வளர்த்த பெரியோர்களை உரிய மரியாதையோடு நடத்தத் தவறியிருக்கிறது. வெறுப்பில் எரியும் மனங்களாகப் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. உண்மையைப் பார்க்கவொட்டாமல், வம்பு செய்து கொண்டே இருக்கிறது.

சுத்தானந்த பாரதியாரை, தமிழ் கூறும் நல்லுலகம், அவருக்குரிய இடத்தில் மரியாதையோடு வைக்கத் தவறியதை என்னுடைய குமுறலாக, ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!
இப்போது, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் மரபூர் ஜே சந்திரசேகரன், கொஞ்சம் கொஞ்சமாக சில நினைவுகளைப் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்.

கவியோகியார் தனது சுயசரிதையை இரண்டு பகுதிகளாக வெளியிட்டார். முதல் பகுதி ஆத்மா சோதனை என்ற பெயரில் வந்தது. 
இதை என்னுடைய  சிறு வயதிலேயே படித்திருக்கிறேன். இரண்டாவது பகுதி, சோதனையும் சாதனையும் என்ற புத்தகமாக வெளி வந்திருக்கிறது. தற்போது இரண்டு பகுதிகளையும் ஒரே புத்தகமாக, சோதனையும் சாதனையும் என்ற தலைப்பில், சுவாமிகளிடம், வடலூரில் அருட்பணி, கல்விப்பணி செய்து வந்த நாட்களில் அவரிடம் பயின்ற இரு சகோதரர்கள், திரு நாகராஜன், திரு. நாக சுப்பிரமணியம், கவியோகியாரது படைப்புக்களை சுத்தானந்த நூலகம் என்ற பெயரில் மறுபடி வெளியிடுகிற செய்தியை திரு சந்திர சேகரன் ஏற்கெனெவே தெரிவித்திருந்தார்.

பதினைந்து நாட்களுக்கு முன்னால், நான் நீண்ட நாட்களாகப் படிக்க ஆர்வம் கொண்டிருந்த பாரத சக்தி மகா காவியம், சோதனையும் சாதனையும் என்ற இரு நூல்களையும் திரு சந்திரசேகரன் எனக்கனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தபடி வந்து சேர்ந்தது. படிக்க ஆரம்பித்தேன், கவியோகியின் தமிழில் தோய்ந்திருந்தது சிலநேரம், அதில் கண்ட அனுபவச் சிதறல்களை உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தது சிலநேரம் என்று போய்க் கொண்டே இருக்கிறது.

மற்ற நூல்களைப் போல, படித்து விட்டு, அந்த நேரத்தில் தோன்றுகிற எண்ணங்களை முடிவாகச் சொல்கிற விதத்தில் இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுத முடியாது. விமரிசனம் என்று எழுத முடியாத அளவுக்கு, சத்தியக் கனல், அனுபவச் சிதறல்கலாகக் கொழுந்து விட்டெரிகிற தன்மையைப் பார்த்தேன், பிரமித்தேன்!

ஒரு சிறு பகுதி, இங்கே நூல் அறிமுகமாக!

சுதந்திரப் போராட்டம் நடந்த போது, அதில் பங்கு கொண்ட எவரும் தங்களுக்கு மாலை மரியாதை வேண்டுமென்றோ, அரசு வழங்கும் கட்டாந்தரை பூமி ஐந்து ஏக்கர் மானியத்துக்காக ஏங்கித்  தவித்தோ, போராட்டத்தில் குதிக்கவில்லை! தங்களுடைய ஜாதி, அந்தஸ்து, தொழில், குடும்பம் எல்லாவற்றையும் உதறிவிட்டு,தேச விடுதலை ஒன்றில் மட்டுமே குறியாக இருந்தார்கள். அப்போதெல்லாம் கூட வராத சொந்தபந்தம், ஜாதியெல்லாம், இப்போது சமீப காலங்களில் அவர்களை ஜாதிக்குள் குறுக்கி வைத்துச் சிலை வைத்துத் தகராறு வளர்க்கும் கூத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

இது 1937-1942 காலங்களிலேயே ஆரம்பித்து விட்டதை இந்தப் பகுதி உறைக்கும்படி சொல்கிறது. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையை, இன்றைக்குப் பிள்ளைமார் சமூகம் தத்தெடுத்துக் கொண்டு சிலை வைத்து, தங்களுடைய சொந்த லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. காமராஜர், நாடார் சமூகத்தின் சொத்தாகிப் போனார்!

 "சோதனையும் சாதனையும்" என்ற தனது சுயசரிதையில் கவியோகி சுத்தானந்த பாரதியார், தூத்துக்குடிக்குப் போனபோது, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதில் முதல் பகுதியை இங்கே பார்க்கலாம்!

சமீப கால வரலாறு கூடத் தெரியாமல் வளர்க்கப் படும் இன்றைய இளம் தலைமுறைக்காக இந்தப் பதிவு சமர்ப்பணம்! இது புத்தக மதிப்புரையோ, விமரிசனமோ இல்லை! இந்த மண்ணை நேசிக்கும் ஒருவனின் ஆதங்கமாக....குமுறலாக,,,,!


சிதம்பரம் பிள்ளையுடன்....!

தூத்துக்குடியில் மாசிலாமணிப் பிள்ளை என்னை வரவேற்றார். அரசியல் உலகின் கோழிச்சண்டையைத் தூத்துக்குடியில் கண்டேன். அங்கே இரண்டு கட்சிகள், ஒத்துழையாமைக் கட்சி என்னைத் தலைவனாக்கி விளம்பரம் செய்திருந்தது. ஸ்வராஜ்யக் கட்சி வரதராஜுலு நாயுடுவைத் தேர்ந்தது. அதை நானும் ஆமோதித்து எழுதினேன். நான் வந்ததுமே ஒத்துழையாமைக் கட்சி, நமது தலைவர் வந்து விட்டார் என்று தண்டோராப் போட்டது.காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டியவர் "என்ன சுவாமிகளே" என்றனர். சில்லறைக் கட்சியாட்கள் எங்கள் பக்கமே பேசவேண்டும் என்றனர். நான் மாநாட்டுக்குப் பொதுவாகப் பேசுவேன் என்றேன்.

நான் வந்த நாளே சிதம்பரம் பிள்ளை, மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றுப் பழைய கதைகளெல்லாம் பேசினார்--உரம் பெற்ற வீரவுள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ் பேச்சு, பெச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல்--எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. "வீரச் சிதம்பரம் பிள்ளை" என்ற பாட்டைப் பாடினேன்.

(வ. உ.சிதம்பரம் பிள்ளை  இந்த சம்பாஷணை முழுதும் சித என்றே குறிப்பிடப் படுகிறார்) 

நான் :  தங்களைக் காணவே மகாநாட்டிற்கு  வந்தேன். எந்தாய் வாழ்க!

சித :     பாட்டு கம்பீரமாயிருக்கிறது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வராஜ்யாவில் தங்கள் தலையங்கம் பார்த்தேன். நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாயிருக்கிறது. திலகரும்  உமது நண்பர் தாமே!

நான் :  எனக்குத் திலகரிடமும் உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கக் கண்டேன். வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன்  வெட்கக் கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன்னெழுத்தில்  பொறிக்கும்.

சித  :   நான் சிறையை விட்டு வந்தபோது, எனக்கு மாலை சூட்டி வரவேற்கக் கூட ஒரு தமிழன் இல்லை. எண்ணெய்க் கடை வைத்தும் பிழைத்தேன். வறுமையால் வாடினேன், வாலஸ் துரை எனது சன்னதை  மீட்டுத் தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் "

இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தாள், இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்.

நான் :  இந்தக் காலம்
கதர் கட்டினாலே மேடையில் மதிப்பு.

சித :      ஹார்வி மில் முன், ராட்டையும் கதரும் எந்த மட்டு ஐயா?  இந்தியர் மான்செஸ்டருடன் போட்டி போட மின்சார யந்திரம் வேண்டும். கொட்டை நூற்று, முப்பது கோடிக்குக் கோவணம் கட்டவாவது முடியுமா? நான் என் ஊரில் நோற்று நெய்த கைத்தறி ஆடையை அணிகிறேன். நான் காந்தியை வெறுக்கவில்லை. திலகரை மதிக்கிறேன். எனது குருநாதன் சுதந்திரச் சங்கூதினான். விடுதலை, பிறப்புரிமை என்று உணர்த்தினான். பாரதி வாக்கில் திலகர் உணர்ச்சியே வெடித்தெழுகிறது.

நான் :  தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு,  (வ வே சு )ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம்---இந்நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்பு வாதம் நாட்டைப் பிளந்தது.

சித :     எனது குருநாதன் காலத்தில், வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து-முஸ்லீம்,பார்ப்பான்-அல்லான்,
வைதீக ஒத்துழையாமை-ஸ்வராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும் ஐயங்காரும் ஐயரும் என்னுடன் கைகோத்து நடக்கச் செய்வேன்.

நான்:  தடையென்ன? தமிழன் தன்நாட்டு வீரரை மதிக்கத் தொடங்கினாலே, அந்த அற்புதம் நடக்கும். இப்போதுள்ள நிலையை இங்கே வந்ததுமே கண்டேன். பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன், நீங்கள் பேசினாலே போதும்.

சித :    தாங்கள் பேச வேண்டும், நான் கேட்க வேண்டும்.

இச்சமயம் டாக்டர் வரதராஜுலு வந்தார். எலாரும் வட்டக் கிணற்றிற்குப் பவனி சென்றோம். அங்கே பதினாயிரம் பேர் கூடினர். சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். நாயுடுகாரு, எம் எஸ்
சுப்ரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர்---எல்லாரும் பேசினர்.

கடைசியில், "சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார்" என்று அழைத்தார் தமிழ்ச் சிங்கம். நான் ஒருமணி நேரம் பேசினேன்.




நூலின் 70 ஆவது அத்தியாயத்தின் முற்பகுதி. 2003 ஆம் ஆண்டுப் பதிப்பின் பக்கங்கள் 337-339 நூலை அறிமுகம் செய்வதற்காக மட்டும்
வணிக அல்லது வேறெந்த உள்நோக்கமும் இல்லாமல் எடுத்தாளப்பட்டது. 


சோதனையும் சாதனையும்
 
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
 
சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை வெளியீடு.
மேல்விவரங்களுக்கு  shuddhashakthi@gmail.com  

434 பக்கங்கள் விலை ரூ.120/-
 

தமிழை நேசித்த கவியோகி! பன்முகத் திறமை கொண்ட துறவி! சுதந்திரப் போராட்ட வீரர்! கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய சுய சரிதையை "ஆத்ம சோதனை" என்ற பெயரில் வெளியிட்ட பழைய பதிப்பைச் சிறுவயதில் படித்திருக்கிறேன்.இந்தப் பதிப்பு, அதன் இரண்டாம் பகுதியையும் உள்ளடக்கிய பதிப்பாக, 434 பக்கங்களில் எண்பது அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கிறது.

சோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல் இது!