தமிழை நேசித்த கவியோகி! சுத்தானந்த பாரதியார்!அது 1980 ஆம் ஆண்டு.

உலகத் தமிழ் மாநாடு நடக்கிறது.

எம்.ஜி..ஆர் 1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி கலந்து கொள்வதற்காக, நட்சத்திர ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து, அழைப்பிதழும் அனுப்பியிருந்தார். ஆனால், அரசியல் சாணக்கியர்கள், "அட சாமியார் எங்கே வரப்போறாரு!" என்று, அறை ஏற்பாட்டையோ, இல்லை அழைப்பிதழ் அனுப்பியது பற்றியோ, கவியோகிக்கு செய்தி அனுப்பாமல், அவர்களே அந்த அறையில் கும்மாளமடித்துள்ளனர்!
 
ஆனால், சுத்தானந்தரோ, " என் தாய் தமிழுக்கு விழா! நான் போகவேண்டும்!! என்று சொல்லி விழாவுக்குச் சென்றுவிட்டார்! பழ.நெடுமாறன் கவியோகி மேடையை நோக்கி வருவதைப் பார்த்ததும், ஓடோடிச் சென்று மேடைக்கு அழைத்து வந்தார். மேலே அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துவிட்டது!
 
அவர் தாமே, கவியோகியை அருகில் அழைத்து, முதல் நாள் விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்! கவியோகி கணீர் குரலில் தான் எழுதிய தமிழ் தாய் வாழ்த்தான, " காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்.." எனும் பாட்டை பாடி வணங்கிவிட்டு, வணங்கி, கீழே இறங்கிச் சென்றுவிட்டார்!! பதைத்துப் போன எம்.ஜி.ஆர், திரு.பில்லப்பனை அழைத்து, "சுத்தானந்த பாரதியாரை எப்படியேனும் 5ஆம் நாள் விழாவில் பங்கு பெறச்செய்யுங்கள்." என்று கூறினார்.  

மாநாட்டின் கடைசி நாளான 5ஆம் நாள் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால், 5 தமிழ் அறிஞர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட இருந்தது! தான் தந்த பெயர் இல்லாததைக் கண்ட எம்.ஜி.ஆர், தனது கையாலேயே ஒரு பெயரை நீக்கிவிட்டு, கவியோகியின் பெயரை எழுதினார்! அவர் செய்ததை அடித்தெழுத யாருக்குத் தைரியம் வரும்?  

கடைசியில், எங்கோ திருச்சி வானொலி நிலையத்தில், தமிழ் கவிதை வாசிக்கச் சென்றிருந்த கவியோகியை, தனிக் காரில் அழைத்து வந்து அன்னை இந்திரா காந்தியால் கெளரவித்தார்கள், உலகத்தமிழ் மாநாட்டினர்!”

இப்படிப் புறக்கணிக்கப் பட்ட, தமிழ் கூறும் 'நல்லுலகம்' அனேகமாக மறந்தே போன கவியோகி சுத்தானந்த பாரதியைப் பற்றி தனது வலைப் பதிவில் குமுறியிருந்தார் மரபூர் J சந்திர சேகரன்.


அவருடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.. திரு சந்திரசேகரன்  தனது பதிலில்  இப்படி எழுதியதை ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம்!


"தங்கள் மடல் கண்டு மிக்க மகிழ்ச்சி. அரவிந்த விஜயம் முதலில் தமிழ், ஆங்கிலம் தெலுங்கு ஆகியவற்றில் அரவிந்த விஜயம் எழுதியது சுத்தானந்தர். அங்கே வங்காளர்கள், வங்காளர்கள் அல்லாதவர் என்ற மவுன யுத்தத்தில், எங்கே அன்னையும் அரவிந்தரும், அன்பிற்கருளான சுத்தானந்தன் பிரதான சீடன் ஆகிவிடுவானோ என்று விஷம் வைத்ததையும், ஆலகாலனை தியானித்து விஷத்தை கழுத்து வரை நிற்கச் செய்ததையும், சுத்தானந்தர் தமது  Pilgrim's Soulல் நகைச்சுவையாக எழுதியுள்ளார். அதோடு புதுச்சேரியை விட்டுவந்தவர்தான், மீண்டும் அங்கே போகவில்லை.

பாரத சக்தி மகாகாவியம் மறு பிரசுரம் ஆகிவிட்டது. சுத்தானந்தர் நூலகம் நடத்தும் நண்பர் நாகராஜன் மூலமாக. அவரது கீர்த்தனாஞ்சலியை சந்தங்களோடு புத்தகமாகவும், பெரும்பாலான பாடல்களை ஒலிப்  பேழைகளாகவும் வெளிக்கொணர ஆசை. பார்க்கலாம். எல்லாம் அவன் சித்தம்."

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்த  உரையாடல் இது! இதைத் தொடர்ந்து, இணையத்தில் சுத்தானந்த பாரதியாருடைய பாடல்களை, அவர் எழுதிய நூல்களைக் குறித்துப் பேசும் சிறு சிறு இழைகள், மின்தமிழ் குழுமத்தில் தொடர ஆரம்பித்து, இப்போது மறுபடியும் தொய்வடைய ஆரம்பித்திருக்கிறது.;

பதினைந்து நாட்களுக்கு முன்னால், நான் நீண்ட நாட்களாகப் படிக்க ஆர்வம் கொண்டிருந்த பாரத சக்தி மகா காவியம், சோதனையும் சாதனையும் என்ற இரு நூல்களையும் திரு சந்திரசேகரன் எனக்கனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தபடி வந்து சேர்ந்தது. படிக்க ஆரம்பித்தேன், கவியோகியின் தமிழில் தோய்ந்திருந்தது சிலநேரம், அதில் கண்ட அனுபவச் சிதறல்களை உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தது சிலநேரம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. இப்படித் தமிழ்ப் புத்தாண்டு அன்றைய பதிவில், கவியோகி சுத்தானந்த பாரதியாருடைய சுயசரிதையான "சோதனையும் சாதனையும்" புத்தகத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பையும், புத்தகத்தில் இருந்து வ உ சிதம்பரனாருடனான சந்திப்பைப் பற்றி எழுதியிருந்த பகுதியையும் கொடுத்திருந்தேன்.


கவியோகி சுத்தானந்தருடைய சுய சரிதையைப் படிக்கிற எவருக்குமே, எந்தவிதக் கட்டுப் பாட்டுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத ஒரு சுதந்திரப் பறவையாக, தன்னுடைய உள்ளுணர்வின் குரலுக்கு மட்டுமே செவி சாய்த்து நடந்த தன்மை  உடனேயே புலப்படும். ஒரு துறவியாக, யோக சாதனையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், அதற்கும் மேலே தமிழ் மீது, தன்னுடைய எழுத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம்  வெள்ளிடை மலை.

தன்னுடைய சோதனையும் சாதனையும் என்ற சுயசரிதையிலேயே வேறோரிடத்தில் குறிப்பிடுகிற மாதிரி, அவர் தன்னுடைய வாழ்வின் நான்கு குறிப்புகளாக (நோக்கங்களாக) முதலாவதாகப் பாட்டும், கவிதையும், பாரத சக்தியும் அருளுதல், இரண்டாவதாக யோக சித்தி பெறுதல், மூன்றாவதாக உலகத் தொண்டு பரவுதல், கடைசியும் நான்காவதுமாக யோக சமாஜம் நாட்டி உலக சேவைக்கு யோகிகளைப் பயிற்றுதல் என்பதுதான்.


தன்னுடைய சுய சரிதையில், அவரே அரவிந்தாசிரமத்து அனுபவங்களைக் குறித்து எழுதியதைக் கொஞ்சம் பார்க்கலாம்! 

நான் ஏன் அரவிந்தாசிரமத்தை விட்டு வந்தேன் என்று பலர் கேட்கிறார்கள், "கடவுள் ஆணை" என்பதே பதில். போ, வா, இரு, செல், நில் என்று என் ஜீவநாதன் கட்டளையிடுகிறான், அவ்வாறே நடக்கிறேன். ஜீவ நதி ஒரே இடத்தில் தேங்கிக் கிடக்க முடியாது. நான் 25 ஆண்டுகள் மௌனத் தனிமையில் ஸ்ரீ அரவிந்தர் திருவடியில் இருந்ததே ஆச்சரியம். ஒவ்வொரு மூச்சையும் தவத்திலு, எழுத்திலும் செலவிட்டேன். என் உள்ளுணர்வுக்கும் உயர்ந்த கனவுகளுக்கும் தெய்வ ஆதேசங்களுக்கும் செதுக்கிய மணி போன்ற கவியுருக் கொடுத்தேன். பிற்கால யோக சமாஜத்தை சிந்தனையாக்கிப் பேனாவினால் சிற்பம் செய்து வைத்தேன். பாரதசக்தியே நான்தானே பாரதசக்தி! அதை ஆழ்ந்த மஹா துரிய சமாதியில் உருவாக்கி வெளியிட்டதே எனது வாழ்வின் நிறைவேற்றம். அதற்கு அச்சகம் நாட்டி நூலை வரிவரியாக ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்த்து ஊக்கிய பகவான் அரவிந்தரையும் என் அன்பிற்குரிய அன்னையையும் நான் மறக்கவே முடியாது. இன்றும் அவர்களை தியான அறையில் வைத்து வணங்குகிறேன். சமயோகம் உலகில் உருக்கொள்ள வேண்டியதைச் செய்தேன்.

ஆனால் நான், அரவிந்தாசிரமத்தை விட அரவிந்தரையே மேலாக மதிக்கிறேன். கட்டிலும் காவலிலும் கோட்டை மதில்சூழ்ந்த இருள் வீட்டிலும் நெருக்குண்டு அவரை அன்பு செய்தேன். இப்போது மதிலை விட்டு வந்து அகண்ட வானுலகில் விசாலமான அன்பு செய்கிறேன். முன்னே அன்பிற்கு எல்லையுண்டு. இப்போது எல்லையில்லை. மேலும் என் வாழ்க்கை முழுதும் தவயோகத்திற்கும் அருட்கவிதைக்குமே அர்ப்பனமானது. வேறெந்தத் துறையிலும் நான் என் சக்தியை வீணாக்க முடியாது. ஆசிரம விளையாட்டுகளைப் போற்றுகிறேன். ஆனால் நான் அப்படி விளையாடப் பிறக்கவில்லை. என் ஒவ்வொரு மூச்சும் பொன் விலை பெற்றது. ஆண்டவன் ஒருவனுக்கே நான் கட்டுப் பட்டவன். அவனுக்கு ஒவ்வொரு மூச்சையும் தியான மலராக்கிக் கணக்குத் தர வேண்டும். இன்னொருவர் நிழலில் இருந்து எனது தவம் பலிக்காது. நான் அரவிந்தாசிரமத்திளிருந்து வெளியேறியதால் அரவிந்தரிடமோ அன்னையிடமோ எனக்குள்ள பக்தி விசுவாசம் குறையவில்லை. இப்போதே என் அன்பு அதிகமாயிருக்கிறது. இப்போதே உள்ளுறவு உறுதி பெற்றுள்ளது. தமிழ்க் குருகுலத்தை நீத்தேன்; ஆனால் என் கலையை நகாசு செய்த (வ வே சு) ஐயரை நீக்க மாட்டேன்;
ரமணாசிரமத்தை நீத்தேன்;ரமண மகர்ஷிகளை இதயத்தில் உறுதியாக நாட்டியுள்ளேன். அரவிந்தாசிரமத்தை நீத்தேன்; அரவிந்தரை என்றும் பிரிய மாட்டேன். ரமணர், அரவிந்தர் என்பது உடலன்று; ஆத்ம  சைதன்யமே இந்த மகான்கள் உடலில் விளையாடியது. அதான பிறகு அதுவென்ன, இதுவென்ன? எல்லாம் ஒரு பொதுப் பொருளே--ஸ்ரீ அரவிந்தருக்கு நான் எழுதிய இறுதிக் கடிதத்தின் சுருக்கம் இதுவே. அதுவே என் உள்ளத்தை விளக்கும்." --

"தெய்வீக குருவே வணக்கம். கூண்டிற்குள் இருந்து அன்பு செய்த கிளி கூண்டை விட்டு அகண்ட வானுலகச் சோலையில் சுதந்திரக் கனியுண்டு அன்பிசைக்கத் துடிக்கிறது. இருபத்தைந்தாண்டுகளாகத் தங்கள் திருவடியில் தவம் புரிந்த யோகாத்மா எல்லையற்ற சைதன்ய உலகிலே சுற்றிச் சுழன்று உள்ளே பாடியதை உலகிற்குப் பாடத் துடிக்கிறது. புல்லின் இடம் கூண்டன்று; சுத்தான்மக் கவியின் இடம் சுவர் மூலையன்று. பூமிக்குள் ஆழ்ந்த விதை முளைத்து மேலோங்கிக்  கிளைத்து, இலைபரவி, மலர்ந்து, கனி குலுங்கிக் காற்றும் வெய்யிலும் பட வாழ்கிறது. ஒரு பறவை இடம் முட்டையன்று. முட்டையை உடைத்து வெளிவந்து சோலைக்குச் சோலை துள்ளிப் பறக்கும் இன்பத்தை இறைவன் அதற்குக் கொடுத்திருக்கிறான். இந்தப் பறவையும் குறுகிய இடத்தை விட்டு எல்லையற்று வாழ விரும்புகிறது. இதனால் அது தங்களை உதறித் தள்ளிச் செல்வதாக நினைக்கக் கூடாது. அரவிந்தர், அன்னை என்ற இரண்டு அகரங்களும் என் ஆன்மாவின் இரண்டு உயிர்ப்புக்கலாகும். உங்களை இனித்தான் தீவீரமாக அன்பு செய்வேன். எனது தியான பீடத்தின் எதிரே நீங்கள் என்றும் கட்சியளிப்பீர்கள். என் உள்ளத் துடிப்பில் என்றும் உணர்வுத் துடிப்பாக வாழ்வீர்கள்.
 

அன்னை என்னும் அமுதே, நின்னால் எனது பாரதசக்தி வெளிவந்தது. நின்னால் பிரெஞ்சுக் கவியானேன். நின் சைதன்யக் கனல் என் ஆதார கமலங்களில் சுழல்கிறது. நீ தந்த கனிகள் என் ரத்தத்திற் கலந்துள்ளன. மகாலக்ஷ்மியே, நின் ஆசீர்வாதம் எனக்கு என்றும் இருக்கட்டும். நின் அழைப்பு வந்தால் ஓடி வருவேன்.

குருதேவா, சிறுவயது முதல் நான் சுத்தயோகம் பயின்று வந்தேன். ஞான சித்தர் எனக்கு ராஜ யோகமளித்தார்.ராமகிருஷ்ணர் பக்தியோகமளித்தார். மஹாத்மா காந்தி கர்ம யோகமளித்தார். ஸ்ரீ அரவிந்தரே எனக்கு விஞ்ஞான 
யோகமளித்து, மஹா துரிய சமாதிக்கும் மஹா சகஸ்ரார  சித்திக்கும் வழிநடத்தினார். தங்கள் யோக சக்தியே எனக்குப் புது வாழ்வளித்தது. ஒரே வானின் கீழ் ஒரே உயிர்க்குலமாக ஒரே கடவுளின் அன்பில் எல்லோரும் இன்புற்று உலகாலயத்தில் வாழவே என் கவிக்கனவு பாடியது. அந்தக் கனவு பாரத சக்தியாக மலர்ந்தது. அதன் பெருமை குருதேவரையே சேரும்.

ஹா சக்திச் சுடரே, தங்கம் பொன்னான பிறகு அது சுரங்க மண்ணுடன் சேர்ந்து போகாது; சமாதி நிலை தாண்டிய சமயோகி இருள் மூலையிலோ  பிறர் அதிகாரத்திலோ கட்டுப் பட்டிருக்க மாட்டான். பால் கரைக்கு மட்டும் கன்றைக் கட்டிப் போபட வேண்டும். பால் கறந்து குடித்த பிறகு அது சுதந்திரமாகத் துள்ளி விளையாடட்டுமே. இந்தவுடல் ஒரு நாள் வீழ்ந்தே தீரும். இதை நித்தியமாக்கும் வித்தை வீண் வேலை. நான் இந்த ஆசிரமத்தை விட்டப் போவதுபோல், இந்த உடலையும் விட்டுச் செல்ல வேண்டியுள்ளதே;இங்கிருக்கும் எல்லோரும் அப்படியே. என் உள்ளம் திடுக்கிடுகிறது. குருதேவா, தங்கள் உடல் தள்ளாடுவதை, தலை சுற்றுவ்கத்தை, அடிவயிறு குமுறுவதை, நான் பார்த்தே வருகிறேன். இந்த ஆண்டு என்னவோ பெரிய துயரம் நிகழப் போகிறதென்று அஞ்சுகிறேன். தாங்கள் கீழே வீழ்ந்து கால் முறிந்தது முதல் ஆசிரமம் இருள் படரக் காண்கிறேன். அட்சுத்த ஆண்டு என்ன நடக்குமோ, ஆசிரமம் அரவிந்தரே, அவருக்கே நான் ஆசிரமத்தில் இருப்பது. என் உள்ளம் ஏதோ நடுங்குகிறது. உடலாகிய அரவிந்தரை விட்டு உலகான்மாவான அரவிந்தரை உள்ளத்தில் வைத்துச் செல்கிறேன். ரோஜாத் தோட்டம் அத்தர் புட்டியில் மணப்பது போலவே ஸ்ரீ அரவிந்த பக்தி என்னுள் சுத்த பரமாத்மா சக்தியாக மணக்கட்டும்.

ஓம் ஸ்ரீ சத்குரு ஸ்ரீ அரவிந்தாய நம:
ஓம் ஸ்ரீ அன்னையே வணக்கம்

இந்தக் கடிதத்தை இரவு பன்னிரண்டு மணிக்கு ஸ்ரீ அரவிந்தர் திருவடியில் வைத்துவிட்டேன். இதன் சுருக்கத்தைப் பத்து வரியில் எழுதி அன்னையிடம் சுவர்ண புஷ்பத்துடன் கொடுத்து ஆசி பெற்றேன்.

சுத்தானந்த பாரதியார் தனது சுய சரிதையில் சொன்ன விஷயங்கள், இங்கே நூல் அறிமுகமாக மட்டும்! தமிழை நேசித்த ஒரு கவியோகியின் வரலாறு தமிழருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதற்காக நூலின் ஒரு பகுதி இது. அத்தியாயம் 74  பக்கங்கள் 380-382
 
காப்புரிமையை மீறுவதற்காகவோ, வணிக நோக்கத்திற்காகவோ, இந்தப் பகுதி எடுத்தாளப் படவில்லை என அறிவிக்கப் படுகிறது.

சோதனையும் சாதனையும்


கவியோகி சுத்தானந்த பாரதியார்

வெளியீடு:  சுத்தானந்த நூலகம்
திருவான்மியூர், சென்னை

பக்கங்கள் 435 விலை ரூ.120/-

புத்தகங்களைப் பெறவும், மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் மின்னஞ்சல் முகவரி
 
shuddhashakthi@gmail.com7 comments:

 1. நல்ல பதிவு கிருஷ் சார். தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 2. வெறுமனே தகவல்களுக்கு நன்றி சொல்லி விட்டுப்போய் விடுகிற விஷயமா இது?

  எப்படிப் பட்டவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை அடுத்த தலைமுறையினரும் புரிந்து கொள்ள ஏதாவது செய்ய வேண்டாமா கௌதமன் சார்!

  ReplyDelete
 3. // வெறுமனே தகவல்களுக்கு நன்றி சொல்லி விட்டுப்போய் விடுகிற விஷயமா இது?//
  அதனால்தான் எங்கள் ப்ளாக் சைடு பாரில் இந்தப் பதிவிற்கு ஒரு சுட்டி கொடுத்திருக்கிறோம்.

  ReplyDelete
 4. மதியம் அந்தச் சுட்டியைப் பார்த்தேன் கௌதமன் சார்! நன்றி!

  நான் சொல்ல வந்ததே வேறு! செம்மொழி மாநாடு என்று தமிழ் ஆர்வலர்களை வைத்து ஒரு நிகழுவ நடக்க இருக்கும் தருணம் இது.

  உண்மையிலேயே தமிழ் வளர்த்த பெரியவர்களைப் பற்றி அங்கே பேசப் போவதில்லை என்பதுமே ஊகிக்க முடிகிற விஷயம் தான்!

  இந்த நேரத்தில், துறவையும் மீறித் தமிழை நேசித்த கவியோகியைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமே! உங்களுடைய பதிவில் பாடகர்களைப் பற்றிக் கொஞ்சம் அறிமுகம் செய்து வருகிறீர்கள்! கவியோகி இயற்றிய எத்தனையோ பாடல்கள் தமிழிசையாகப் பல பிரபலப் பாடகர்களால் நேற்றைய நாட்களில் பாடப் பட்டதன் இசை வடிவத்தை உங்களுடைய பதிவுகளில் மறுபடி ஒலிக்கச் செய்யலாமே!

  இங்கே ஒரு கை ஓசையாகச் செய்து கொண்டிருக்கும் ஒரு சிறு வேளையில் பலரும் பங்கு கொண்டால், அதில் கிடைக்கும் ஆத்மத்ருப்தியை பற்றித் தான் நான் குறிப்பிட்டுச் சொன்னேன்!

  எம்பி 3/ ஆடியோ வடிவங்களை பதிவில் சரியாக இணைப்பதில் எனக்கு ஞானம் மிகவும் குறைவே! அதனால் தான், தெரிந்தவர்களும் சேர்ந்து கொண்டு செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கேட்கத் தோன்றுகிறது!

  ReplyDelete
 5. செம்மொழி மாநாட்டில் ஆன்மிகமும் சேர்க்கப்படும் என்று மாண்புமிகு அன்பழகன் (பெரிய மனசு பண்ணி!) கூறியதாக நேற்று எங்கேயோ படித்தேன். அதனால நமக்கு சந்தோஷம்.
  எம் பி 3 சமாச்சாரம் இப்போதான் கற்றுவருகின்றோம். அடுத்த நிலை, தமிழ்ப் பாடல்களை வாசகர்களிடம் கேட்டு வாங்கி பதிவு இடுவது. நிச்சயம் முயற்சி செய்வோம்.

  ReplyDelete
 6. ///// எம்பி 3/ ஆடியோ வடிவங்களை பதிவில் சரியாக இணைப்பதில் எனக்கு ஞானம் மிகவும் குறைவே! அதனால் தான், தெரிந்தவர்களும் சேர்ந்து கொண்டு செய்தால் .........................////

  கவலையே வேண்டாம்.
  // வந்தே மாதரம் // சசி குமார் http://vandhemadharam.blogspot.com/2010/05/background-music.html

  மற்றும் //வேலன் // போன்றவர்கள் இருக்கிறார்கள் http://velang.blogspot.com/2010/05/blog-post_12.html

  மேலும் நிறைய பிள்ளைகள் உதவ வருவார்கள்.முயற்சிக்கலாமே!

  ReplyDelete
 7. தகவலுக்கு மிகவும் நன்றி, மாணிக்கம்! நண்பர்களோடு தொடர்பு கொண்டு கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறேன்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!