தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....?!

காதிருப்பவர் கேளுங்கள்! கண்ணிருப்பவர் பாருங்கள்! செயல் பட முடிந்தவர் செயல்படுங்கள்!
 
 இந்திய சுதந்திரத்தையே கேள்விக்குறியாகவும், கேலிக்குரிய ஒன்றாகவும் ஆக்கிக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் குறித்துக் கவலை தெரிவிக்கும் தினமணி நாளிதழின் தலையங்கம் இது! என்னால் என்ன செய்து விட முடியும் என்று சோம்பி இருந்தால் வாராது வந்த  சுதந்திரத்தை இழக்கவும் வேண்டி வரும் என்பதை எச்சரிக்கை செய்யும் அபாய அறிவிப்பு இது.


தலையங்கம்: 
இதன் பெயரா ஜனநாயகம்?
சுதந்திரம் பெறுவதற்கும் தன்னாட்சி செய்யவும் இந்தியர்கள் தகுதியில்லாதவர்கள் என்கிற முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்று, இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அப்போது பெருவாரியான இந்தியக் குடிமக்கள் கல்வியறிவு இல்லாமல், இந்தியப் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியிருந்த காலம்.

ஆனால், உலக வல்லரசாகத் துடிக்கும் ஒளிரும் இந்தியா மக்களாட்சியின் அடிப்படை உணர்வையும், செயல்பாட்டையும் தெரிந்து கொள்ளாத நிலையில் இருப்பதுதான் தலைகுனிவை ஏற்படுத்துகிறது.

நாடாளுமன்ற விவாதம் நடக்கும்போது நாள்தவறாமல் வந்தமர்ந்து விவாதங்களில் கலந்து கொள்வதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தார் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு. அன்றைய எதிர்க்கட்சி வரிசையில் ராம் மனோகர் லோகியா, ஆச்சாரிய கிருபளானி, என்.ஜி. கோரே, மது லிமயே, மது தண்டவதே, என்.ஜி. ரங்கா, மினு மசானி, எஸ்.ஏ.  டாங்கே, பி. ராமமூர்த்தி, ஏ.கே. கோபாலன், பூபேஷ் குப்தா, ஜோதிர்மாய் பாசு, இந்திரஜித் குப்தா, அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைசிறந்த நாடாளுமன்றவாதிகள் அமர்ந்திருந்தனர்.

எந்தவொரு பிரச்னையிலும் காரசாரமான விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், அரசின் செயல்முறைகளைத் துளைத்தெடுக்கும் கேள்விக்கணைகள். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றும்போது தவறாமல் வந்தமர்ந்து விடுவாராம் பண்டித நேரு. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளில் நியாயம் இருந்தால் அரசுத் தரப்பில் விளக்கங்கள் போதவில்லை என்று கருதினால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்குப் பிரதமர் நேரு தலை வணங்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம். நல்லாட்சியை ஆளும் தரப்பும் எதிர்க்கட்சி தரப்பும் இணைந்து உறுதிப்படுத்துவது என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளம் என்று பிரதமர் நேருவே பல தடவை தனது நாடாளுமன்ற உரைகளில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

பல பிரச்னைகளில், நடைமுறைகளில் நாம் "அது அந்தக் காலம்' என்று ஏக்கப் பெருமூச்சு விடுவது என்பது வேறு. மக்களாட்சித் தத்துவத்தில் அடிப்படையான நாடாளுமன்ற நடைமுறைகளில்  "அது அந்தக் காலம்" என்று ஏக்கப் பெருமூச்சு விடுவது என்பது நமது அடித்தளம் ஆட்டம் காண்கிறது என்பதற்கான அறிகுறியல்லவா? இதைப் பற்றி நாம் சிந்திப்பதுகூட இல்லையே, ஏன்?

கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தது எப்படி என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எந்தவித விவாதமும் இன்றி, காதும் காதும் வைத்ததுபோல ஐந்து முக்கியமான மசோதாக்கள் கடைசி இரண்டு நாள்களில் நிறைவேற்றப்பட்டது பல உறுப்பினர்களுக்கேகூடத் தெரியுமா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
 

ஒருபுறம், மத்திய தகவல் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்திருந்தது. திரிணமூல் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிரான கோஷங்களை இடதுசாரிகள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதையே ஒரு சாக்காக வைத்துப் பல முக்கியமான மசோதாக்களை விவாதம் எதுவுமே இல்லாமல் நிறைவேற்றிக் கொண்டுவிட்டது மத்திய அரசுத் தரப்பு.

"முதலில் அவையை ஒழுங்குக்குக் கொண்டு வாருங்கள். அதற்குப் பிறகு இந்த மசோதாக்களைத் தகுந்த விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றுங்கள். மக்களைப் பாதிக்கும் பல விஷயங்கள் வெளிப்படுத்தப்படாமலே மசோதா நிறைவேறுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்'' என்று சில மூத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவர் மீரா குமாரிடம் மன்றாடிக் கொண்டிருக்கும்போது, எதையுமே சட்டை செய்யாமல் சட்டம் மெத்தப் படித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கான தேசிய  கமிஷனின் சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றிக் கொண்டார்.

தொடர்ந்து, மத்திய எரிசக்தி அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தன் பங்குக்கு, எரிசக்தி பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிக் கொண்டார். ஏழே நிமிடங்களில் இரண்டு முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றி சரித்திரம் படைத்தது இந்திய நாடாளுமன்றம்.
 

தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டச் சட்டத்திருத்த மசோதா, பணிக்கொடை (கிராச்சுவிடி) வழங்கும் மசோதா மற்றும் மருத்துவப் பரிசோதனைச் சாலைகள் பதிவு மற்றும் நெறிப்படுத்துதல் மசோதா ஆகியவை விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்ட ஏனைய மூன்று மசோதாக்கள். சந்தடிச் சாக்கில், கடந்த 18 ஆண்டுகளாக இப்போது அப்போது என்று சாமர்த்தியமாக ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் தாக்கல் செய்யப்படாமலே நழுவி (தடுக்கப்பட்டு) வந்த லாட்டரி தடைச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுவிட்டது.
 

எதிர்க்கட்சிகள் பொறுப்பில்லாமல் இருப்பதுகூட மன்னிக்கப்படலாம். அரசின் தவறுகளை விமர்சிப்பதும், எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் எதிர்க்கட்சிகளின் உரிமை என்றால், நியாயமான விவாதங்கள் மூலம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை எதிர்கொள்வது ஆளும் கட்சியின் கடமை. எதிர்க்கட்சிகளைச் சமாதானப்படுத்தி அரவணைத்துச் செல்வதும், முறையான விவாதங்களுக்கு வழிகோலுவதும்தானே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற விவகார அமைச்சரின் பொறுப்பு?

எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்பங்களைச் சாதகமாக்கி விவாதமில்லாமல் தனது மசோதாக்களை அரசு நிறைவேற்றிக் கொள்வது என்பது தவறான முன்னுதாரணம் வகுப்பதுடன், நாடாளுமன்ற நடைமுறையின் நியாயத்தையே கேலிப்பொருளாக்கும் செயல். தேவையில்லாமல் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்தி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது. வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்றை மெய்ப்படுத்தி விடாதீர்கள் என்பதுதான் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு "தினமணி' விடுக்கும் வேண்டுகோள்.


ஜெயராம் ரமேஷ் விவகாரம் குறித்து தினமணியின் சிந்திக்கப் பட வேண்டிய இன்னொரு தலையங்கம்

தலையங்கம்:வாய்க்கு வந்தது...

நாக்கிலே சனி என்பார்கள். அது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு நிறையவே இருக்கிறது. தன் பேச்சால் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த சசி தரூர் பதவி விலகிவிட்டாரே, இனி பரபரப்பே இருக்காதே என்று நினைக்குமுன்பே குரல் கொடுத்துவிட்டார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இப்படிப் பேசுவது இவருக்கும் புதியதொன்றுமல்ல!

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பு என்பது ஒவ்வோர் அமைச்சரும் ஏனைய அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் தார்மிக ரீதியாகக் கட்டுப்பட்டவர்கள் என்பதைத்தான் குறிக்கிறது. பொறுப்பான பதவியிலிருப்பவர்கள் அதிலும் குறிப்பாக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் வாய்க்கு வந்தது கோதைக்கு பாட்டு என்கிற விதத்தில் சிந்திக்காமல் பேசிவிட முடியாது.

இரு நாடுகளின் நட்புறவை மேம்படுத்தும் பயணங்களில் ஈடுபடும்போது, அந்நாட்டுக்கும் நமது நாட்டுக்கும் இடையிலான உறவை எந்த விதத்தில் பலப்படுத்த முடியும் என்பதையும், இதில் உள்ள பிரச்னைகளை எப்படிப் போக்குவது என்பது குறித்தும் பேசுவதும், சில முரண்கள் இருந்தாலும் அதை அரசு அளவிலேயே நிறுத்திக் கொண்டு, பத்திரிகைகளுக்குத் தீனி போடாமல், அமைதியாக நாடு திரும்புவதும்தான் நல்ல அமைச்சருக்கு அடையாளம்.

ஆனால், சீனாவுக்குச் சென்றுள்ள அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களுடன் மட்டும் தன் பேச்சு மற்றும் பேட்டிகளை நிறுத்திக் கொள்ளாமல், உள்துறை அமைச்சகத்தைக் குறை கூறும் வகையில் பேட்டி அளித்தது தேவையில்லாதது. வரம்பு மீறியதும்கூட!

தற்போது, சீனா எல்லைக்குள் உள்ள பிரம்மபுத்திரா நதியில், இந்திய எல்லைக்குள் இந்நதி நுழைவதற்குச் சில கிலோமீட்டர் தூரத்தில், 540 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான அணை கட்ட சீனா முடிவெடுத்திருக்கிறது. இதற்கு இந்தியாவின் எதிர்ப்பை அமைச்சர் ரமேஷ் பதிவு செய்ததுடன் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

சீனா இந்த அணையைக் கட்டுவது மறுக்க முடியாத உண்மை. இந்த அணை வெறும் புனல்மின்நிலையம் மட்டுமே அல்ல என்பதும், தேக்கப்படும் நீர் சீனாவின் தென்மேற்குப் பகுதியில் விவசாயத்துக்குத் திருப்பிவிடப்படும் திட்டங்களும் அந்நாட்டு அரசிடம் இருக்கிறது என்பதும்தான் இந்தியாவின் கவலை.

இத்திட்டம் அரசியல் ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியிருப்பது அவருக்கும் அவர் பொறுப்பேற்றுள்ள அமைச்சகத்துக்கும் அழகு சேர்க்கிறது.

இந்தியாவைவிட 6 மடங்கு அதிகமாக புவிவெப்ப வாயுக்களை வெளியேற்றும் சீனாவுடன் இந்தியா ஏன் சுற்றுச்சூழல் தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்ற விமர்சனங்களுக்குப் பதில் அளித்தபோதும், தனது அமைச்சர் பதவிக்கு மரியாதை ஏற்படும் வகையில், இரு நாடுகளும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க மேற்கொண்டுள்ள முதல்கட்ட நடவடிக்கை என்று அவர் சொன்னதும்கூட நல்ல பதில்தான். அவர் அத்தோடு நின்றிருக்கலாம்.

தனக்குத் தொடர்பே இல்லாத உள்துறை அமைச்சகம் குறித்து விமர்சிக்கும் வகையில், அவர்கள் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தேவையே இல்லாமல் மிகவும் அச்சப்படுகிறார்கள் என்று கூறியதுதான், நாவடக்கம் இல்லாத விதமாக அமைந்துவிட்டது.

இந்திய சீனா ராஜீய உறவுகள் 1950-ல் ஏற்பட்டாலும், நேரு-சூ என் லாய் காலத்தில் பஞ்சசீல கொள்கை அமைந்தாலும்கூட, 1962-ல் இந்தியாவை சற்றும் எதிர்பாராமல் சீனா ஆக்கிரமித்ததுமுதல் இந்திய சீன உறவில் விரிசல் தொடர்ந்து அதிகரித்து வந்தது என்பதுதான் உண்மை. 1988-ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் சீன விஜயத்திற்குப் பிறகுதான் வர்த்தக உறவுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டன. கடந்த இரு மாதங்களில் மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதற்கு இணையாக சீன நாட்டிலிருந்து இறக்குமதியும் செய்துகொண்டிருக்கிறோம். இதையெல்லாம் மனதில் இருத்தி, அவர் பேசியிருக்க வேண்டும்.

தீவிரவாதிகள் எல்லாத் தொழில்நுட்பத்தையும் எளிதாகப் பயன் படுத்துகின்றனர்.  அண்மைக்காலம்வரை, ஒவ்வொரு செல்போனிலும் 14 இலக்கங்கள் கொண்ட ரகசிய எண் இல்லாதவை லட்சக்கணக்கில் இருந்தன. அத்தகைய செல்போன்களில் 90 சதவீதம் சீனா தயாரிப்பு. இந்தச் சூழ்நிலையில், தகவல்தொடர்பு சார்ந்த சீனாவின் வர்த்தக உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் இந்திய உள்துறை அமைச்சகம் இருக்கும் என்றால் அதன் காரணங்கள் யாருக்கும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அமைச்சர் ரமேஷுக்கு மட்டுமே எப்படி புரியாமல் போனது. அல்லது, சீனாவை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வோம் என்று சொல்லி வைத்தாரா?

அமைச்சர் ரமேஷ் சில மாதங்களுக்கு முன்பு மரபீனி மாற்று கத்தரிக்காய் விவகாரத்தில் விவசாயிகளிடம் நடந்துகொண்ட விதமும், போபால் நகரில் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிகழ்ச்சியில், கார்பைடு நிறுவன கழிவுகளால் தற்போது பாதிப்பே இல்லை என்று பேசியதும் ஏற்படுத்திய உள்நாட்டு பரபரப்புகளைவிட, அவர் வெளிநாட்டிலும் இப்படித்தான் பரபரப்பை ஏற்படுத்துவார் என்றால் அது அந்தப் பொறுப்புக்குரியவராக நடந்துகொள்ளத் தவறிவிட்டார் என்றுதான் பொருள்.

இந்த விவகாரத்தில் மற்ற துறைகள் பற்றி அமைச்சர்கள் பேச வேண்டாம் என்று ஒரு நிபந்தனை போன்ற அறிவுரையை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டு, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருக்கிறார். அமைச்சர் ரமேஷ் கூறிய குற்றச்சாட்டில் நியாயமில்லை என்பதையும், இந்தியா எந்த அளவுக்கு இணக்கமான சீன உறவைக் கொண்டுள்ளது என்பதையும், அமைச்சர் குறிப்பிடும் தகவல்தொடர்பு நிறுவன முதலீட்டில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கியிருந்தால், இந்திய உள்துறை அமைச்சகத்தின் மீதும் அரசின் மீதும் மக்களுக்கு மேலதிகமான நம்பிக்கை ஏற்பட உதவியிருக்கும். ஒரு வரி கண்டிப்பும், அதற்கு அமைச்சர் ரமேஷ் தனது மன்னிப்பை பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமும் தெரிவித்துக் கொண்டதோடு பிரச்னை முடிந்துபோனால் போதுமா? சரியா?

இத்தகைய அமைச்சரவைச் செயல்பாடுகள் பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் அமைச்சர்கள் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றன. கட்சித் தலைமை காரணமாக அவர்கள் பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறார்களா அல்லது பிரதமரும் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு வாளாவிருக்கிறாரா என்பதுதான் புரியவில்லை.
 

நன்றி:தினமணி நாளிதழ்.


 

2 comments:

  1. நல்ல அருமையான, சிந்திக்கக்கூடிய தகவல்கள்.MP தேர்தலின் போது உங்களது நிறைய பதிவுகள் மீள்பதிவாப் போட்டா புண்ணியமாப் போகும் சாமி.நன்றி.

    ReplyDelete
  2. சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது என்பதும், ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்கும் தேர்தல் அன்று ஒரு நாள் மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் விழிப்பாக இருந்தால் தான் முடியும்!

    இங்கே இந்திய ஜனநாயகம் ஆரம்ப நாட்களில் இருந்தே, ஒரு தலைவன் இருக்கிறான், அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அல்ல-நான் எதுவும் செய்ய மாட்டேன் , வேறு எவராவது வந்து வேண்டுமானால் செய்யட்டும் என்ற சோம்பேறி மனோபாவத்தில் உருவான கோளாறு.

    முந்தைய பதிவில் சொன்னதுமாதிரி, ஜனநாயகம், உரிமைகள், சுதந்திரம் என்பது ஒருவழிப் பாதை அல்ல. அதைப் புரிந்து கொள்ளத் தவறுவதாலேயே இங்கே இலவச டீவீக்கள் ஈயென்று இளித்துக் கொண்டு மானாட, மயிலாட நமீதாக்கள் மார்பாட என்று இளித்துக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!