நான்கு முட்டாள்கள்! பீர்பால் கதைகள்!



தெனாலி ராமன், மரியாதை ராமன் கதைகள் மாதிரி, வடக்கே அக்பர்-பீர் பால் கதைகள் மிகவும் பிரசித்தம். இதில் பல கதைகள், கொஞ்சம் முட்டாள்தனமான காமெடியாகத் தோன்றினாலும் கூட, இந்தக் கதைகளிலும் சில வாழ்வியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் செவிவழியாகவே பரவிய இந்தக் கதைகள் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. தவிர, கதைப்பது, கதை கேட்பது என்பது படைப்பில், பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கே மட்டும் சொந்தமானது.

அந்தப் பரிணாம பலவீனத்தை நன்கு புரிந்து கொண்டிருப்பதால் தான், இந்திய அரசியல் வியாதிகள், ஜனங்களுடைய காதுகளில் அம்பாரம் அம்பாரமாகப் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்! நாமும் சந்தோஷமாக, கேப்பையில் நெய் வடிகிறது என்று அவர்கள் சொல்லும் போது, ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டு, தேர்தலுக்குத் தேர்தல் அவர்களிடமே தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறோம்!

இல்லையா?!!

பீர்பால் கதைகள் வரிசையில், இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே  ஒன்று, இரண்டு என இரு  கதைகளை இன்றைய நடப்போடு தொடர்புபடுத்திப் பார்த்திருக்கிறோம்! அந்த வரிசையில் இது மூன்றாவது!



நான்கு முட்டாள்கள் !

 
என்னவோ தினசரி மிகப் பெரிய அறிவாளிகளையே சந்தித்துக் கொண்டிருந்தது போலவும், அப்படி சந்தித்து சந்தித்து மிகவும் அலுப்புத் தட்டி விட்டது போலவும், டில்லி பாதுஷா அக்பருக்கு இருப்பதிலேயே படு முட்டாள்களை சந்திக்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஒரு நாள் உண்டாகி விட்டது! டில்லி பாதுஷாக்கள் என்றாலே அன்றைக்கும்  சரி இன்றைக்கும் சரி கொஞ்சம் விபரீதமான, வித்தியாசமான, மறை கழன்ற கேசுகள் தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே!

முட்டாள்களை சந்திக்க வேண்டுமென்ற ஆசை வந்தது சரி, அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது?

அக்பர் டில்லி பாதுஷா அல்லவா, உத்தரவு போட்டால் போயிற்று! அத்தனை முட்டாள்களும் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா என்ன?! ஆனாலும் அதில் கடினமான  பகுதி என்னவென்றால், இருப்பதிலேயே வடிகட்டின முட்டாள்களாகப் பார்த்து அதில் நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! அதற்கு புத்திசாலித்தனமும், சாதுர்யமும் உள்ள ஒருவர் வேண்டாமா!

"கூப்பிடு பீர் பாலை!" பாதுஷா அக்பர் காவலருக்கு உத்தரவிட்டார். பீர் பாலும் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.

"பீர்பால்! இருப்பதிலேயே வடிகட்டின முட்டாளிலும் வடிகட்டின முட்டாளாக ஒரு நான்கு பேரைப் பார்க்கவேண்டும்! கண்டு பிடித்து அரசவைக்கு அழைத்து வாரும்!"

"அப்படியே செய்கிறேன் பாதுஷா!" சொல்லி விட்டு பீர் பால் புறப்பட்டு விட்டார்.

போகிற வழியில் தென்படும் மனிதர்களைக் கவனித்துக் கொண்டே பீர்பால் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.முட்டாள்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம்,இருப்பதிலேயே அடிமுட்டாள்களாகப் பொறுக்கிஎடுக்க வேண்டாமா!

எதிரே ஒரு மனிதன், ஒரு திருமணத்திற்கு சீர்வரிசை கொண்டு போவது போல, பரிசுப் பொருட்களை ஊர்வலமாகக் கொண்டுபோவதைப் பார்த்தார். அந்த மனிதனுடைய நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவே அவனை நிறுத்தி விசாரித்தார்.

"ஐயா! எனக்கும் சோனியா  என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. திடீரென்று அந்தப் பெண் என்னுடன் நிச்சயத்தை முறித்துக் கொண்டு வேறொருவனுடன் திருமணம் செய்து கொண்டு விட்டாள். வம்பு வழக்கு,ஏகப்பட்ட ரகளை, பிரச்சினைக்குப் பிறகுதான் திருமணம் நடந்ததாம்.அவளுக்குத் தான் இந்த சீர் வரிசையெல்லாம் எடுத்துப் போகிறேன்." என்று விவரம் சொன்னான் அந்த மனிதன். அவன் யார், அந்த சானியா யார் என்பதையெல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டு, பீர்பால் இவன் அடி முட்டாளிலும் வடிகட்டின முட்டாள் என்று முடிவு செய்தார்.

அடுத்து ஒரு மனிதன்,
தலைக்கு மேல் புல்கட்டுச் சுமையைச் சுமந்து கொண்டு சினையாயிருந்த எருமை மீது உட்கார்ந்து கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவனை நிறுத்தி பீர்பால், புல்கட்டை எருமை மீது வைத்துக் கொள்ளாமல் எதற்காகத் தன தலை மீது சுமந்து கொண்டு போகிறான் என்று விசாரித்தார்.

"ஐயா! என்னுடைய எருமை  சினையாயிருக்கிறது! அதன் மேல் புல்கட்டை வைத்துக் கொண்டு போனால், அதற்கு சுமையாக இருக்குமே என்று தான், நான் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு, என்தலைமேல் புல்கட்டைச் சுமந்துகொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். எருமைக்கு பாரம் குறையும் அல்லவா?" என்று பதில் சொன்னானாம். அக்பருக்குக் காட்ட இவனை விட அடிமுட்டாள் வேறு எவனும் கிடைக்க மாட்டான் என்று பீர்பால் முடிவு செய்தார்.

சோனியாவுக்கு சீர்வரிசை கொண்டுபோனவன், எருமைக்கு சுமையைக் குறைக்கிறேன் என்று அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, புல்கட்டை சுமந்து போனவன் ஆக இந்த இரண்டு பேர்வழிகளையும் அழைத்துக் கொண்டு பீர்பால் அக்பரிடம் போனார்.

இரண்டு பேர் கதையையும் கேட்ட அக்பர், பீர்பால் தேர்ந்தெடுத்தது சரிதான் என்று ஒப்புக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துத் தான், தான் சொன்னது நான்கு பேர், பார்த்தது இரண்டைத்தான் என்று அக்பருக்கு உறைத்தது. பாதுஷாக்களாக இருப்பதில் மிகப் பெரிய சிரமம், தாங்கள் என்ன உத்தரவு போட்டோம் என்பதை நினைவு வைத்துக் கொள்வது தான்.

"பீர்பால்! உம்மை நான்கு முட்டாள்களை அல்லவா கண்டு பிடித்துக் கொண்டு வரச் சொன்னேன். மீதி இரண்டு பேர் எங்கே?" என்று கேட்டார் அக்பர்.

"நான்கு முட்டாள்களும்  இங்கேயே இருக்கிறார்கள் பாதுஷா!" என்றார் பீர் பால். அக்பருக்குக் கோபம் வந்து விட்டது. பாதுஷாவாக இருப்பதனால் ஒன்று இரண்டுக்கு மேல் எண்ணத் தெரியாது என்று பீர்பால் நினைத்துவிட்ட்டானா என்ன?

"எங்கே அந்த மீதம் இரண்டு பேர்?"

"இதோ என்னைப் பாருங்கள் பாதுஷா! மூன்றாவதாக நான் இருக்கிறேன்! முட்டாள்களைத் தேடிக் கொண்டு போன என்னை விடப் பெரிய முட்டாள் வேறு எவராவது இருக்க முடியுமா? "

பீர்பால் இப்படித் தன்னையே முட்டாள் என்று சொல்லிக் கொண்டதில் அக்பருக்கு மிகவும் சந்தோஷம்! இத்தனை நாள் இவன் பெரிய புத்தி சாலி, பெரிய சாமர்த்தியக் காரன் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானே கூட இவனைப் பாராட்டி நிறைய சன்மானம் அளித்துப் பாராட்டியிருக்கிறேன். ஆனால், அவனே தன்னை பெரிய முட்டாள் என்று சொல்லிக் கொள்வது கேட்பதற்கே எவ்வளவு சுகமாக இருக்கிறது! புத்தி சாலிகளுக்கு பாதுஷா ஒரு பொருட்டே அல்ல! முட்டாள்கள் இருந்தால் தான் பாதுஷாக்கள் பாதுஷாக்களாக இருக்க முடியும்!

பாதுஷாவின் சந்தோஷம் கொஞ்ச நேரம் நீடித்தது! அப்புறம் வழக்கமாக வருகிற சந்தேகம்வந்து விட்டது! பீர்பால்,கண்ணில் இரண்டைக் காட்டினான், தன்னையே மூன்றாவது முட்டாள் என்று சொல்லிக் கொண்டான். நாலாவது எங்கே?

"பீர்பால்! ஒன்று, இரண்டு, மூன்று! எங்கே அந்த நாலாவது முட்டாள்? இங்கேயே இருப்பதாக வேறு சொல்கிறாய்! என்னை ஏமாற்றுகிறாயா?" அக்பரின் கேள்வியில் கோபம் கொஞ்சம், குழப்பம் கொஞ்சம் கலப்படமாக வந்தது.

பீர்பால் மிகவும் பணிவோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை பாதுஷாவிடம் நீட்டி, "நான்காவது மிகப் பெரிய முட்டாளை இதிலேயே பார்க்கலாம், பாதுஷா!" என்றார்!

கண்ணாடியில் தன்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்ட பாதுஷாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை! மறுபடியும், பீர்பால் தன்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டதும், தான் தோற்றுவிட்டதும் புரிந்தது.

"உருப்படியான வேலைகளை விட்டு விட்டு, முட்டாள்களைத் தேடி அலைந்த நான் பெரிய முட்டாள் என்றால், அப்படி என்னைத் தேட அனுப்பித்தவர்  என்னைவிடப் பெரிய முட்டாளாகத் தான் இருக்க வேண்டும்! இல்லையா பாதுஷா?! ஆக, நான்கு முட்டாள்கள் இங்கேயே இருப்பதாகச் சொன்னது தவறில்லையே!"

அசடு வழிய, பீர்பால் சொல்வதற்குத் தலையாட்டி சிரித்து மழுப்புவதைத் தவிர டில்லி பாதுஷாவுக்கு வேறு வழி தெரியவில்லை! 

அக்பர் மனதுக்குள் கருவிக் கொண்டார். பீர்பால் நீ புத்திசாலிதான்! ஆனால், என்றைக்காவது ஒரு நாள், நீ என் முன்னால் மண்டியிட்டுக் கெஞ்சத் தான் போகிறாய்!  அப்படி ஒரு நாள் வராமலா போய்விடும்?

பீர்பால் அக்பரைப் பார்த்துச் சிரித்தது, தன்னுடைய  மனவோட்டத்தைப் புரிந்து கொண்டதால் தான் என்று அக்பருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது. சந்தேகமெல்லாம், இப்போதே அதைக் கேட்கலாமா, வேண்டாமா என்பது தான்!

இப்போது, பாதுஷாவுக்கு அடுத்த குழப்பம் ஆரம்பித்து விட்டது.






15 comments:

  1. முன்னரே படித்த கதைகள் தான் என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு படிக்க வைத்ததில் மகிழ்ச்சி.

    // டில்லி பாதுஷாக்கள் என்றாலே அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி கொஞ்சம் விபரீதமான, வித்தியாசமான, மறை கழன்ற கேசுகள் தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே! //

    ரொம்பவும் ரசித்தேன்

    ReplyDelete
  2. நான் அரசியல் தெரியாத சிறுவன், உள்குத்தை எவ்வாறு விளங்கி கொள்வது!

    ReplyDelete
  3. வால்ஸ்!

    கக்கு- மாணிக்கம் கதைக்குள் இருக்கும் கதையை சரியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்.

    உள்குத்து, சைடு குத்து எதுவுமில்லை. சமீபத்தில் ஒரு பதிவில் படித்தபடி, கிசுகிசுவெல்லாம் இல்லை, நேரடித் தாக்கு மட்டும் தான்!

    டில்லி பாதுஷாவை முட்டாளாகப் பார்த்து சந்தோஷப் படுகிற தருணத்தில், ஓட்டுப் போடும் நாமும் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருக்கிறோம், எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சமாவது யோசிக்க வைப்பதற்காகத் தான் பீர் பால் தன்னைத் தானே முட்டாள் என்று சொல்லிக் கொண்டதில் அக்பர் சந்தோஷப் படுகிற விதத்தைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லியிருந்தேன்!

    வால்சுக்குப் புரிய வைக்க கூடிய விரைவிலேயே கோனார் நோட்ஸ் பதிவு ஒன்றும் ஆரம்பித்து விட வேண்டியது தான்!

    ReplyDelete
  4. இதை படிச்ச உடனே என்க்கே கொஞ்சம் சந்தேகம் தட்டியது!

    ReplyDelete
  5. ஆரண்ய நிவாசில் மாமரங்கள் வளர்ந்துவிட்டனவா, திரு ராமமூர்த்தி!

    என்ன சந்தேகம், எங்கே தட்டியது என்பதைச் சொல்லவே இல்லையே! சொன்னால் தானே பதில் சொல்ல முடியும்?

    ReplyDelete
  6. சின்ன வயதில் படித்த கதைகள்.

    பீர்பாலைப்பற்றிய மேலும் சில குறிப்புகள்:
    * இயற்பெயர்: மகேஷ்தாஸ்.
    * உ.பி மாநிலத்தைச்சேர்ந்தவர்.
    * சிறந்த கவிஞர்.
    * பீர்பால் என்ற பெயர் அக்பரால் சூட்டப்பட்டது. ‘அறிவில் சிறந்தவர்’ என்று பொருள்.

    அன்புடன்
    கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.com

    ReplyDelete
  7. அவிங்க எப்பவும் இபடித்தான் சார். லூஸ்ல விடுங்க இந்தியாவ 14 வருஷம் ஒரு ஜோடி செருப்பு ஆண்டிருக்கு. இந்த வெளிநாட்டு அன்னை ஆண்டால் என்ன? :) :)

    ReplyDelete
  8. வாருங்கள் கார்த்திகேயன்!

    உங்களுடைய காரணம் ஆயிரம் பதிவு நன்றாக இருக்கிறது.

    பீர்பாலுடைய இயற்பெயர் விவரங்களை முதல் கதையிலேயே சொல்லி விட்டேன். சுட்டி இங்கேயே ஒன்று, இரண்டு என இருக்கிறது.

    பீர்பால் கதைகளைக் கொஞ்சம் நடப்பு நிலவரங்களோடு கலந்து நையாண்டி செய்யும் விதத்தில் இந்தக் கதைகள் இங்கே கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்யப் பட்டவை.

    ReplyDelete
  9. வாருங்கள் மயில் ராவணன்!

    /லூஸ்ல விடுங்க இந்தியாவ 14 வருஷம் ஒரு ஜோடி செருப்பு ஆண்டிருக்கு./

    தவறான புரிதலோடு சொல்லியிருக்கிறீர்களே! ராமனுடைய பாதுகைகள் தான் சிம்மாசனத்தில் இருந்தன. ஆனால், பாதுகைகள் நேரடியாக ராஜ்ய பரிபாலனம் செய்ததாக ராமாயணத்தில் எங்குமே இல்லை. பாதுகையின் பிரதிநிதியாக இருந்த பரதன், திறமையுள்ள அமைச்சர்கள் உதவியோடு, குடிமக்களுடைய மனம் குளிர நல்லாட்சி செய்ததாக மட்டுமே குறிப்பு இருக்கிறது!

    லூஸ்ல விட்டு விட்டுத் தான் நம்மை அரை, முக்கால், முழுசு என்று வெற்று வாக்குறுதிகள், இலவசங்கள், மானாட மயிலாட என்று முழு லூசாகவே ஆக்கி விட்டார்களே!

    ரௌத்திரம் பழகு என்றான் பாரதி! ஜனங்கள் ரௌத்திரம் பழக வேண்டிய தருணம் இது. பொறுமையாக இருந்ததனால் தான், எண்ணூறு வருடங்களுக்கு மேலாக, மொகலாயர்கள் இந்த நாட்டைச் சூறையாடினார்கள். மோந்நூரே வருடங்களில் மொத்தத்தையும் சுருட்டி, பிரிட்டிஷ் குள்ளநரிகள் அந்த சாதனையை முறியடித்தார்கள்!

    இப்போதைய நேதாக்கள், இன, மொழித்தலைவர்கள் வெறும் அறுபது வருடங்களுக்குள்ளாகவே பிரிட்டிஷ் குள்ளநரிகளை விட அதிகமாகக் கொள்ளை அடித்து,தங்களுடைய முந்தைய சாதனையை தாங்களே முறியடித்துக் கொண்டு வருகிறார்கள்.

    அப்புறம், முதலில் சானியா என்று தான் பேர் இருந்தது..சானியாவுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வர மயில் ராவணன் இருக்கும் நினைவு வரவே தான் சோனியா என்று திருத்தம் செய்தேன். அப்படியும் கூட, அந்தப் பத்தியின் கடைசியில் சானியா என்று இருந்தது, மாற்றப் படாமலேயே விடுபட்டுப் போனது.

    கதையில் சோனி சோனியா சானியா என்ற பெயர் முக்கியமல்ல! டில்லி பாதுஷாக்கள் என்று சொல்லும்போது, அதிகார மையம், அது நேரடியாகப் பதவியில் இருந்தாலும் சரி, திரை மறைவில் இருந்து ஆட்டி வைக்கிறவர்களாக இருந்தாலும் சரி, அதை மட்டும் குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

    ReplyDelete
  10. // முதலில் சானியா என்று தான் பேர் இருந்தது..சானியாவுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வர மயில் ராவணன் இருக்கும் நினைவு வரவே தான் சோனியா என்று திருத்தம் செய்தேன்.//

    என்னா வில்லத்தனம். சானியா என்ன ஏன் மாமா பொண்ணா? அப்படி அல்ல. ஒரு மாதத்தில கண்ணாலம் ஆகப்போற பொண்ண உள்ளாடை தெரியறாப்ல ஒரு ஃபோட்டோ போட்டிருந்தீங்க.அதான் கொஞ்சம் எரிச்சலூட்டியது. மற்றபடி ஒண்ணும் இல்லை சார்.
    என் வயசு உங்க அனுபவத்தோட ரொம்ப கம்மி.என்ன சார்,நீங்க? வெள்ளைக் கொடி காட்டிக்கிறேன்.

    ReplyDelete
  11. //ரௌத்திரம் பழகு என்றான் பாரதி! ஜனங்கள் ரௌத்திரம் பழக வேண்டிய தருணம் இது. பொறுமையாக இருந்ததனால் தான், எண்ணூறு வருடங்களுக்கு மேலாக, மொகலாயர்கள் இந்த நாட்டைச் சூறையாடினார்கள். மோந்நூரே வருடங்களில் மொத்தத்தையும் சுருட்டி, பிரிட்டிஷ் குள்ளநரிகள் அந்த சாதனையை முறியடித்தார்கள்!//
    என்ன பண்ணிவிட முடியுமென்று நினைக்கிறீர்கள் இந்தியாவை? ஒண்ணும் பண்ணமுடியாது, அதுவும் ப்ளாக்ல எழுதி ம்கூம்... ஒரே காமெடி பண்றீங்க சார் நீங்க..போங்க

    ReplyDelete
  12. மயில் ராவணன்!

    வெள்ளைக் கொடியை சேர்ந்தே காட்டுவோம்!

    சானியா விஷயம் கொஞ்சம் வித்தியாசமான விபரீதம்! ஆட்டத் திறமையை விட காட்டும் திறமையில் தான் அம்மணிக்கு அதிகப் புகழ் வந்தது என்பது என்று இங்கு எல்லோருக்குமே தெரியும்.
    இந்தியாவின் தங்க மங்கை என்று ஓட்டப்பந்தயத்தில் தன்னுடைய திறமையை வைத்து மட்டுமே அழைக்கப் பட்ட பி டி உஷா கூட சொன்னார்! "சானியாவின்புகழ் வெறும் ஆடத் திறமைக்காக மட்டும் கிடைத்ததல்ல."

    இந்தப் பெண் வேண்டுமென்றே சர்ச்சைக்கு மேல் சர்ச்சையாகப் பார்த்து சிக்கிக் கொள்வது போலவே, திருமணமும் ஆகிப்போனது.

    சியால்கொட்டிலும், லாஹூரிலும் நடந்த திருமண வரவேற்புக் குளறுபடிகளைத் தொட்டு ஒரு பதிவை எழுதி, அப்புறம் வேண்டாமென்று ஒதுக்கி விட்டேன்.

    அம்மணி இப்போது பாகிஸ்தானின் நல்லெண்ணத் தூதுவராக இருக்க விருப்பம் தெரிவித்த செய்தியை படித்தபோது இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் தலைவிதியை நினைத்து நொந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை!

    ReplyDelete
  13. அப்புறம் ப்ளாகில் எழுதி..என்ன செய்து விடமுடியுமென்று .. ஒரே காமெடியாக....!

    இந்த விஷயத்தை இரண்டு விதமாக அணுகலாம், பார்க்கலாம்.

    ஒன்று ஒன்றுமே செய்யமுடியாத ஜடங்களாக இருப்பதை விட, ஏதாவது செய்யவேண்டும் என்ற தவிப்பை வெளிப்படுத்துவது நிச்சயம் ஒருநாள் பயன் தரும் என்ற நம்பிக்கை! அதற்கு அனுசரணையாக விஞ்ஞானத்தில் பட்டர்பிளை தியரி, கேயாஸ் தியரி என்றெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள், அப்படி ஏதாவது ஒரு அதிசயம் நிகழும் என்பதற்காகத் தான் எழுதுவது!

    அப்புறம் சமீபகாலத்தைய வரலாற்றிலேயே ஒரு சம்பவம் முன்னுதாரணமாக இருக்கிறது.

    மொகலாயர்கள் இன்கிந்திய மரபுகள், கலாசாரத்தின் மீது மிகக் கொடூரமான வன்முறையை நிகழ்த்தியதைக் கண்டு மனம் வெதும்பிய இருவரின் எண்ணங்கள் ஒன்று சேர்ந்த கதை.

    ஒருவர் ராமதாசர் என்ற துறவி. மொகலாயர்களின் கொட்டத்தை ஒடுக்க ஒரு வீரன் வரமாட்டானா என்ற ஏக்கமும் தவிப்பும் இருந்த துறவி.

    இன்னொருத்தார் ஜீஜாபாய் என்ற எழுத்தறிவில்லாத, தன்னுடைய மரபுகள், பண்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட ஒரு சாதாரண கிராமத்துப் பெண். தன்னுடைய மகனுக்கு, இந்த மண்ணில் உதித்த மகாவீரர்களுடைய கதையைச் சொல்லியே வளர்த்தவள்.

    கதையைக் கேட்டு வளர்ந்த சிறுவன் வளர்ந்தபிறகு, ராமதாசரைச் சந்தித்தான். வீர சிவாஜி என்று இன்றைக்கு அழைக்கப்படும் அந்த மாவீரன் நிறுவிய மராத்தியக் குதிரைப் படையை, எதிரிகளே வியந்து போற்றிய அற்புதமும் நிகழ்ந்தது.

    ஒரு சிறு பொறிதான்! அதுவே ஒரு பெருங்காட்டை அழிக்கப் போதும்! அதுபோல, ஒரு சிறு உறுதியான எண்ணம் தான், சிறுமை கண்டு பொங்கிஎழப் போதுமானது!

    ReplyDelete
  14. திரு.மீனாட்சிசுந்தரம்!

    ஆழியாறு ஓம்கார மண்டபத்தின் புகைப்படத்தை உங்கள் ப்ரோபைலில், பதிவில் பார்த்த பிறகு, சின்னக் குழந்தைகளுக்குக் கதை சொல்கிற மாதிரிக் கதை சொன்னதனாலோ என்னவோ என்னையும் ஒரு சின்னப் பையன் ரேஞ்சுக்கு ஊக்குவித்திருக்கும் உங்கள் கமென்ட் எனக்கு ஆச்சரியம் தரவில்லை.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!