ஒரு இந்தியக் கனவு! இந்தியப்பெருமிதமும் கூட!
இந்திய வரைபடத்தைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால், சுற்றிலும் இந்தியாவைத் தங்கள் எதிரியாகவே கருதும் நாடுகளால் சூழப்பட்டிருப்பதைக் காண முடியும். பாகிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர், ஆப்கானிஸ்தான்,மியான்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மா, இலங்கை, நேபாளம், இந்த நாடுகள் அனைத்துமே தோற்றுப்போன அரசு அமைப்புக்கள், அல்லது ரவுடி அரசு அமைப்புக்களாக (Rogue States) இருப்பதைப் பார்க்க முடியும். இயல்பாகவே இந்தியாவோடு விரோதம் பாராட்டி வரும் இந்த நாடுகளில், திட்டமிட்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான சதிகளை, பாகிஸ்தானும், சீனாவும் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதை, செய்தித் தாட்களை வழக்கமாகப் படிக்கும் ஒரு சிறுவன் கூட சொல்ல முடியும்.


அறுபது வருடங்களுக்கு முன்னால், விடுதலை பெற்ற இந்த நாடுகள், பிரதேச ஆதிக்கப் போட்டியில் எவ்வளவு மோசமான எதிரிகளாக மாறிப்போயின என்பதையும், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது தான், எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பது புரியும்.


பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை விட வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு குட்டையைக் குழப்ப முடியுமோ அந்த அளவுக்குக் குழப்பி விட்டு, இருக்கிறவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று குள்ளநரித்தனமாக வெளியேறியது என்பதையும், இரண்டு உலகப் போர்கள், அதன் பின்னால், ஆங்கிலேயர்களுடைய மவுசு காலிப் பெருங்காய டப்பா என்ற அளவுக்கே சுருங்கிப்போன நிலையில், புதிய வில்லனாக அமெரிக்கா சர்வ தேச நிகழ்வு ஒவ்வொன்றிலும் நாட்டாமை செய்ய ஆரம்பித்ததையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்தால், நம்முடைய நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிற சவால்களைப் புரிந்து கொள்ள முடியும்.


எதிரிகள் என்று சொல்லும் போது, வெளியே இருக்கும் எதிரிகள், நமக்குள்ளேயே இருந்து கொண்டு அற்பத்தனமான காரணங்களுக்காக தேசத்தைத் துண்டாட நினைக்கும் எதிரிகள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.


இங்கே எழும் கலகக் குரல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வெளி எதிரியின் தூண்டுதல், பங்கு, பயிற்சி, பண உதவி இப்படி நிறைய இருக்கிறது. ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம், பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற முகமாகத் தான், சீனப் பெருமிதம் வயது அறுபது என்ற தலைப்பில், இந்த மாதத்தின் முதல் பதிவை எழுதினேன்.


மகாத்மா காந்தியை, இங்கே ஒருவர் தீவீரமாக வெறுத்தாலும் சரி, ஆதரித்தாலும் சரி, தவிர்க்க முடியாத ஆளுமையாக இந்த தேசத்தின் சமீப கால வரலாறோடு பின்னிப் பிணைந்திருக்கிறார். காந்தியின் ஆளுமையின் மீது சவாரி செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேரு, அடிப்படையில் நல்ல எண்ணம் உள்ளவராக இருந்தபோதிலும், ஜனநாயகத்தை மதித்து நடந்த போதிலும், அவருடைய சில பலவீனங்கள், தேசத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தின.


நேருவிடம் இருந்த தனிநபர் ஆளுமை, பிறரது எண்ணங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாத சூழ்நிலையைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் ஏற்படுத்தியது. நேருவோடு முரண்பட்டவர்கள், அவர் மனம்புண் பட்டுவிடக் கூடாதே என்று ஒதுங்கிப்போன தருணங்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், மாறாத வடுக்களாக இன்றைக்கும் இருக்கின்றன,


நல்லதை நினைத்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள். சம்சா அடித்தே, ஆளுபவரை, அதிகார மையத்தில் இருப்பவரைச் சுற்றியே கும்மியடிக்கும் பேர்வழிகள் காங்கிரசுக்குள் அதிகமாகப் புகுந்து கொண்டார்கள் காங்கிரஸ் கட்சியின் வரலாறே, ஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்! விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே, சுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள், அப்படிப்பட்ட சிலருமே, கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்.


நேருவின் ஆட்சிக் காலத்தில் எழுந்து, இன்று வரை தீர்வு காணப்படாமல், பெரும் அச்சுறுத்தலாகக் கூட மாறக் கூடிய பிரச்சினைகள், இன்றைய ஆட்சியாளர்களுடைய திறமைக் குறைவு, அலட்சியத்தால் தேசத்திற்கு ஏற்படக் கூடிய சேதம் இவைகளைத் தொட்டும் எழுத வேண்டும் அன்ற ஆசையில் தான் இந்த மாதம் முதல் மூன்று பதிவுகளுமே ஒரு அச்சாரமாக ஆரம்பித்தன.காந்தி பிறந்த அதே நாளில் தான், முப்பத்தைந்து வருடம் கழித்து 1904 ஆம் வருடம்  அக்டோபர் இரண்டாம் தேதி, லால் பஹதூர் சாஸ்திரியும் பிறந்தார். நேருவின் மறைவுக்குப் பின்னால், அடுத்த பிரதமராகப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். பதவியில் இருந்த காலம் சிறிதே என்றாலும் கூட, நேருவின் காலத்தில் இருந்த தரித்திர இமேஜை உடைத்து, இந்தியா அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடு, வருங்காலத்தில் வலிமையான நாடாக வளரக்கூடிய நாடு என்பதைச் செயலில் காட்டிய மிக உயர்ந்த மனிதர்! ஜெய் ஜவான்! ஜெய் கிசான்! என்ற கோஷம் அவருக்குப் பின் கொஞ்ச காலம் வரை நினைவு இருந்தது.


நல்லவர்களைத் தான் நாம் சீக்கிரம் மறந்து விடுவோமே!


நேருவைப்போல மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லை. ஏழ்மையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் சாஸ்திரி. அரசியலில் கூட, நேருவுக்குக் கிட்டத்தட்ட, முடிசூடா இளவரசர் அந்தஸ்தை காந்தி வழங்கியிருந்ததுபோல, சாஸ்திரிக்கு எவரும் காட்பாதர் இருந்ததில்லை. ஆனாலும், நேர்மையான செயல்பாடுகள், திறமை மதிக்கப்பட்ட காலம் அது என்பதனால், விடுதலைப்போராட்டத்தில் மிகவும் கவனிக்கப்பட்ட தலைவராக வளர்வதில் லால் பஹதூர் சாஸ்திரிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.


இன்றைய நவீன இந்தியாவின் சிற்பியாக நேருவை மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறதே தவிர, லால் பஹதூர் சாஸ்திரி மாதிரித் திறமையான நபர்களின் பங்களிப்பை, அவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றியிருக்கும் பணிகளை வாய்விட்டுக் கூட நாலு வார்த்தை சொல்வதில்லை.ஆகஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறது. குறைந்த நேரத்திற்குள்ளாகவே, இந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராக, திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது.


நேருவின் மறைவுக்குப் பின்னால், லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!


குள்ளமான மனிதர் தான். இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்தது. புதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார். லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.


1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோது, மேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாக, அமெரிக்க டைம் பத்திரிக்கை, அக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:


”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்டவுடன் அட்டையைத் துப்புவது போல, இந்தியா என்று சொன்னவுடனேயே, மகாராஜாக்கள், பாம்பாட்டிகள், எக்கச் சக்கமாகக் குழந்தைகள், ஏகப்பட்ட பசுமாடுகள், தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகப்போகிறது என்பது எல்லோருக்குமே தெரிகிறது.
காந்தியைப் பற்றி, அவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூட, இந்தியா என்றால் பாம்பாட்டிகள், சாமியார்கள், மகாராஜாக்கள், பிச்சைக்காரர்கள், கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம், நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்பு, அப்புறம், 1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள் (ஸ்பிந்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!


வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும், இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபெந்ஸ் ஜார்னல் கட்டுரை ஒன்று!இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை! கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றியகண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.இது நேருவை மட்டுமே முழுக்க முழுக்கக் குறை சொல்வதற்காக எழுதிய வரிகள் இல்லை.


உள்ளது உள்ளபடி, அறிந்துகொள்வதற்கான ஒரு படிக்கட்டு மட்டுமே! சாஸ்திரி எனும் அற்புதமான மனிதரை இன்னமும் அறிந்துகொள்ள வேண்டும் !


தொடர்ந்து பேசுவோம்!


10 comments:

 1. Super Mr.Krishnamoorthy. Continue your good writing. The tamil blog world is surrounded by hatred and several useless things. This article is really nice one and thought provoking. Keep it up.

  ReplyDelete
 2. நேற்றுத்தான் ஜீ வி யில் இந்த டாங்குகளை அடித்து துவம்சம் செய்த பரம்வீர் அப்துல் ஹமிது பற்றி படித்தேன். இன்று புகைப் படங்களுடன் கூடிய அசல் உத்தர் என்ற 1965 சண்டையை பற்றிக் குறிப்பிட்டீர்கள். அரசியல் பற்றி கவலைப் படவேண்டியதில்லை,வெகுவிரைவில் இந்த ஓட்டுப் பிச்சைக்காரர்களை விரட்டி நல்ல சமுதாயம் ஒன்று வரும்.

  ReplyDelete
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  இந்த தேசத்தின் மிகப்பெரும் சோகமே, இந்த மண்ணுக்கு ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது என்பதையே மறந்து விட்டு, வாலறுந்த நரிகள், வால் எவ்வளவு சுமை, அவமானம் தெரியுமா என்று பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது தான்.

  'தமிழ் வலைப்பதிவுலகம் ஒரு தனித்தீவாகவே எப்போதுமே இருந்து வருகிறது. உலகமெல்லாம் ஒரு திசையைக் கவனித்துக் கொண்டிருக்கும்போது, இங்கே எதையோ நோண்டி முகர்ந்து பார்க்கிற குணம் நிறையவே உண்டு' என்று மேலோட்டமாக ஒரு அபிப்பிராயம் இருந்தாலும் கூட, இங்கே அன்பையும், அறிவையும் விதைக்கிற நல்ல பதிவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள், நல்ல விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பார்க்கிற அருவருப்பான தன்மை விரல் விட்டு எண்ணக்கூடிய சில பேரிடத்தில் மட்டுமே இருக்கிறது.

  ReplyDelete
 4. இதை டாங்குகளின் யுத்தம் அல்லது அமெரிக்க சாபர் ஜெட் போர் விமானங்களை, சாதாரண விட்டில் பூச்சி மாதிரி நம்மிடம் இருந்த நாட் ரக விமானங்கள் வீழ்த்திய வெறும் சாகசம் என்று மட்டுமே வர்ணிக்கவோ, ஒரு பயில்வான் தொடை தட்டி எப்படி என் சாமர்த்தியம் என்று கேட்பதைப் போலவோ பார்க்க முடியாது.

  ஜெயிப்பது கூட சுலபம் தான், அதைத் தக்க வைத்துக் கொள்வது தான் உண்மையிலேயே கடினம் என்ற பாடத்தை நாம் உண்மையிலேயே கற்றுக் கொண்டிருக்கிறோமா? தீவீரவாதம் பல வழிகளிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் வேளையில் விழிப்போடு இருக்கிறோமா என்பது தான் முக்கியமான கேள்வி!

  ReplyDelete
 5. //ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம், //

  யாருக்கு வேணும் அரசை நடத்தும் தகுதி!
  குவாட்டரும், கோழி பிரியாணியும் வாங்கி கொடுக்கும் தகுதி இருந்தால் பத்தாது!?

  ReplyDelete
 6. //சம்சா அடித்தே, ஆளுபவரை, அதிகார மையத்தில் இருப்பவரைச் சுற்றியே கும்மியடிக்கும் பேர்வழிகள் காங்கிரசுக்குள் அதிகமாகப் புகுந்து கொண்டார்கள்//

  நேரு காலத்துல ஆரம்பிச்சது இன்னைக்கு வரைக்கும் அப்படியே தான் இருக்கு போல!

  ReplyDelete
 7. //தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள்//

  இது என்ன புதுகதையா இருக்கு!
  தொடை நடுங்கி என்பதை தான் இப்படி சொல்றிங்களா?

  ReplyDelete
 8. திரு.அருண்,

  உங்களுடைய முதல் பின்னூட்டத்திற்கு இப்படி ஒரு தரப்பும் இருக்கிறது. சாக்கடையில் இருந்து கொசுக்களும் நோய்களைப்பரப்பும் இன்ன பிற ஜந்துக்களும் தான் உருவாகும். தலைவர்கள் எங்கிருந்து உருவாகிறார்கள்? எப்படிப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்குகிறார்கள்?

  காங்கிரஸ் கட்சியின் தொடக்கமே, அரசுடன் இணக்கமாக இருந்து கொஞ்சம் சலுகைகளைப் பெறுவது என்பதில் தான். ஒரு சில குரல்கள், முழு அளவிலான சுதந்திரம் என்று ஒலித்தாலும், அதை முழுமையான சுதந்திரத்திற்கான இயக்கமாக மாற்றியது மகாத்மா காந்தியின் வருகைக்குப் பிறகு தான். நேருவின் களத்தில், காங்கிரஸ், அதன் பழைய இயல்புக்கே திரும்பியது என்று வேண்டுமானால் கவுரவமாகச் சொல்லலாம்.

  தொடை நடுங்கி தான்! புதுக் கதை இல்லை. பதிவை இன்னொரு தரம் படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லவும்.

  ReplyDelete
 9. //தொடை நடுங்கி தான்! புதுக் கதை இல்லை. பதிவை இன்னொரு தரம் படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லவும்.//


  பின்னூட்டம் போட்ட பிறகு பார்த்தேன் சார்!
  அதனால் தான் தொடர்ச்சியாக பின்னூட்டம் போடாமல் முழுவதும் படித்தேன்!
  அதன் பின் எல்லாமே நீங்களே சொல்லிட்டதால் நான் சொல்ல என்ன இருக்குன்னு ஓடிட்டேன்!

  ReplyDelete
 10. நல்ல விளக்கம்

  நன்றி

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!