எனக்குத் தெரியாது!


எனக்குப் பிடித்த பதிவுகள், பதிவர்கள் என்று வலையில் சிக்கிய சில மனிதர்கள், எண்ணங்கள் பற்றிய  தொடராக, ஒரே மூச்சில் தொடர்கிற விதத்தில் இல்லாமல். அவ்வப்போது இந்தத் தலைப்பில் எழுத விரும்பிய ஆசையைச்  சில நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவில் எழுதியிருந்ததோடு,  குறைந்தது மூன்று நான்கு பதிவுகளுக்கு மேல்  இந்தப்பக்கங்களில் வந்திருக்கின்றன. 

இப்படி வகைப் படுத்தாமலேயே, நிறையப் பதிவர்களைப் பற்றிய சிறிய குறிப்பு, சுட்டி, விமரிசனம், பதில் என்று இங்கே இன்னும்  நிறையப்பக்கங்களில் சக வலைப்பதிவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்! என்ன, என் பதிவுகளில் மட்டுமல்ல, மனதிலுமே  ஏதோ ஒரு விதத்தில் இடம் பிடித்திருப்பதையும்  சொன்ன இந்த சங்கதி, அவர்களுக்கே தெரியாது!  இதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று கூட எண்ணம் எழுந்ததில்லை!

ஒரு வாசகனாக, எனக்குக் கிடைக்கிற தளங்களை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்ப்பதும், எனக்குள்ளேயே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதுமாக இருந்ததில், சில தருணங்களில் மட்டுமே அவர்களைப் பின்னூட்டங்களோடு அணுகியிருக்கிறேன். முழுக்க முழுக்க அவர்களுடைய கருத்தோடு உடன்படுகிறேன், அல்லது நிராகரிக்கிறேன்  என்பது எனக்கு முக்கியமாகப் பட்டதே இல்லை. எதை வைத்து அவர்கள் அப்படி ஒரு முடிவுக்கு வருகிறார்கள், ஏன் அது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்பது, என்னுடைய அனுபவங்களில் இருந்தே பெறப்படுபவை. அல்லது, அடுத்த அனுபவமாக மாறக் காத்திருப்பவை.

இவ்வளவு பீடிகையோடு தான், பிடித்த பதிவர், பிடித்த பதிவுகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்க வேண்டுமா என்று வால்பையன் வந்து  சரவெடி வெடிப்பதற்கு முன்னால், ஒன்றைப்  பிடித்திருக்கிறது . இல்லை பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு, சரியான காரணங்கள் இருக்க வேண்டுமே!

எதனால் அப்படி என்று தெரிந்து கொள்ள முயலும் போது மட்டுமே,  பிடித்தம் அல்லது பிடித்தமில்லை என்ற நிலையைக் கடந்து போக முடியும்!
அதுவரைக்கும், வெட்டி வாதம் பண்ணிக் கொண்டு மட்டுமே இருக்க முடியும்! அதைக் கடந்து போக வேண்டும் என்பதற்காகத் தான், இவ்வளவு முன்னோட்டம், பீடிகை எல்லாம்! முந்தைய பதிவு ஒன்றில் என்னுடைய அனுபவம் என்ன கற்றுக் கொடுத்தது என்று  இப்படிச் சொல்லியிருந்ததைக் கொஞ்சம் முன்னோட்டமாகப் பார்த்துவிடலாமா?


அந்த நாட்களில், தி க ஆதரவாளரான ஒரு வழக்கறிஞர், அவருடைய இளவல்கள், எங்களைப்போல இடதுசாரிச் சிந்தனை உடையவர்களோடு, நன்கு பழகிக் கொண்டிருந்தார்கள், அல்லது அப்படிக் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்றும் கூட சொல்லலாம். வாரத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட, வழக்கறிஞருடைய வீட்டில், பேசப்போவோம். கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் நடந்த அந்தக் கூத்தை இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும், கொஞ்சம் வேடிக்கையான அனுபவமாகவே இருக்கிறது.

மனிதன் சினிமாவில் வருகிற கோர்ட் சீனில் காண்பிப்பதுபோலவே, தன்னுடைய வாதத் திறமை இருப்பதாக எங்களை நம்பச் செய்யப் படாத பாடு படுவார். கருத்துப் பரிமாற்றம் என்று சொன்னேன் அல்லவா, அது வெறும் வார்த்தை தான்! அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார், எதிராளி என்ன தான் சொல்கிறார் என்று ஒரு பொழுதும் கவனித்ததில்லை. நாங்களும், அவரை மாதிரி என்று சொல்ல முடியாது, அவர் அந்தக் கலையில் சகல கலா டாக்டர் பட்டம் வாங்கியவர், எங்களுடைய கருத்தை எடுத்து வைத்து விட்டதாக ரெகார்ட் பண்ணி விட்டு ஜமா கலைந்து விடும், அடுத்த வாய்தா வருகிறவரை
 
இந்த வழக்கறிஞரோடு என்னுடைய உறவும் நட்பும் கொஞ்சம் அதிக நாள் நீடித்தது என்று சொன்னால், மேலே சொன்னது மாதிரி கருத்துக் களம், பரிமாற்றம் என்று சொன்னேனே, அந்த மாதிரி வார்த்தை அலம்பல்களினால் அல்ல. எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஒரு வெறித்தனமான காதலும், நேரமும் இருந்த நாட்கள் அவை. அவரிடம் நிறைய நூல்கள் இருந்தன. எந்தப் புத்தகம் கடைக்கு வந்தாலும், உடனே வாங்கி விடுவார்.பல்வேறு தலைப்புக்களில் அவரிடம் இருக்கும் நூல் சேகரம் கொஞ்சம் பெரிதுதான். இப்படி ஒரு புத்தகப் புதையல் இருக்கும் இடத்தை யாராவது தவற விடுவார்களா என்ன!

எனக்குத் தேவைப்படுகிற புத்தகங்களை, நான் தேடிப்போக வேண்டிய அவசியம் கூட இல்லாமல், அனுப்பி வைப்பார். அவரிடம் இல்லை என்றால், உடனே வாங்கியும் வைத்து விடுவார். பெரியாரைப் பற்றி, இவரிடமிருந்து தான், கொஞ்சம் ஆதாரங்களோடு கூடிய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறேன். அதே மாதிரி, மார்க்சீயச் சிந்தனைகள், மதக் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகள் என்று நூற்றுக்கணக்கான புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறார். எங்கே தகராறு வருமென்றால், திடீரென்று சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இதோ பாருங்கள் லெனின் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சில பத்திகளை அடிக்கோடிட்டு வைத்துக் காண்பிப்பார். அதை ஆதாரமாக வைத்துக் கொண்டே தான் பேசுவதையும் ஒருமாதிரி முடிச்சுப் போட்டுத் தன்னுடைய கருத்துப் "பரிமாற்றத்தை" வலுவாக ஊன்றி வைப்பார்!

இப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று வழக்கறிஞர், புத்தகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டும் போது எங்களுக்கு முதலில் கொஞ்சம் மயக்கம் வந்ததென்னவோ உண்மை! அப்புறம் கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்தது, குதிரையல்ல கழுதைதான் என்று தெரிந்தது என்று ஒரு கதை சொல்வார்கள் இல்லையா, அதே மாதிரி, வழக்கறிஞரும் மேற்கோளில் எப்படிப் புரட்டுகிறார் என்பது சீக்கிரமாகவே தெரிந்துபோய் விட்டது. எனென்றால், அந்தப் புத்தகத்தையே, எனக்குப் படிப்பதற்காகக் கொடுத்து அனுப்புவார் என்று சொன்னேன் இல்லையா, புத்தகத்தை முழுமையாகப் படிக்கும் போதே குட்டு உடைந்த தருணங்கள் வந்தது.

உதாரணத்திற்கு லெனின் எழுதிய புத்தகங்கள் பெரும்பாலானவை, அந்த காலகட்டத்தில் பரவலாக இருந்த அல்லது பரப்பப்பட்டு வந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களாகவே எழுதப்பட்டவை. லெனினுக்கு ஒரு பழக்கம், தன்னுடைய எதிராளி சொல்லும் ஒவ்வொரு கருத்தையும், முழுதாக எடுத்துச் சொல்லி, அதற்கு அப்புறம் எதிராளி எப்படி அதைத் தப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறார், தப்பாக வாதங்களைஎப்படி எடுத்து வைக்கிறார் என்பதை, ஒவ்வொன்றாக, ஆணித்தரமாக மறுக்கும் வகையிலேயே எழுதுவது. ஆக, லெனின் எழுதிய ஒரு நூலை நீங்கள் வாசிக்கப் புகும் போது, எதிர்க்கருத்தாக எவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு விட முடியும். நம்முடைய பகுத்தறிவு வழக்கறிஞர், அப்படி லெனின் எடுத்து வைக்கிற எதிராளியின் கருத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, பாருங்கள் லெனின் இங்கே இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதம் செய்வதுதொடரும்போது, நாங்கள் ஐயா, அதற்கு அப்புறம் லெனின் இதை எப்படி மறுத்திருக்கிறார் என்பதையும் பாருங்கள், தொடர்ந்து தவறாகவே லெனினை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னபிறகும் கூட, அவர் தன்னுடைய வாதத் திறமையை, பாணியைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர் மட்டுமல்ல, பகுத்தறிவு வாதம் பேசுகிற நிறையப்பேரும் அதே பாணியைக் கடைபிடித்து வருவதும் புரிந்தது.பகுத்தறிவை அவர்கள் புரிந்துகொண்டிருக்கும் விதமும் புரிந்தது!

கொஞ்சம் ஒன்றைக் கவனித்துப் பாருங்கள், பெரியாரை மேற்கோள் காட்டுகிறவர்களாகட்டும், அல்லது இறக்குமதி செய்யப்பட்ட நாத்திகம் பேசுபவர்கள் ஆகட்டும், தாங்கள் மேற்கோள் காட்டும் விஷயம் உண்மைதானா, அதில் சொல்லப் பட்டிருப்பவை, இங்கே இப்படி அங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது என்று எடுத்துக் காட்டப் படும் இடங்களைத் தாங்களே ஒருதரம் சோதித்துப் பார்த்து, அங்கே அப்படித்தான் சொல்லியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வதில்லை. யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது!

இவர்கள் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் மீது 'ஆன்மிகம்' பேசுபவர்களுமே கூட இந்தத் தவறைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.


டோண்டு ராகவன் எங்கே பிராமணன் தொடரைப்  பேஷ் பேஷ் என்று பார்த்து, பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார்! கோவி கண்ணன் இல்லாத பிராமணனைத் தேடுவது ஏன் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். வால்பையன் " எனக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது என்று கேட்டு, படிக்க வருபவர்களைக் கிறுக்குப் பிடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்! சந்தடிசாக்கில்,சாருவைக் கலாய்க்கிற சீசன் மறுபடி ஆரம்பித்து விட்டது!

ராயல்டி வருகிறதோ இல்லையோ, பன்றிக் குட்டிகளைப் பிரசவிப்பது போல, இப்போதெல்லாம், ஒரே நேரத்தில் ஒரே எழுத்தாளர்/பதிப்பகம் பத்து அல்லது அதற்கு  மேல் நூல்களை வெளியிடுவதும், விழா எடுப்பதும்  எதிர்வினையாக இரும்புத்திரை அரவிந்த் பதிவு எழுதுவதும் களைகட்ட ஆரம்பித்து விட்டது! மார்கழி மகோத்சவம் ஆரம்பித்த ஜோரில், வருடம் முடிவதற்கு இன்னும் பதினான்கே நாட்கள் தான் என்பது கூட மெல்லத் தான் உறைக்கிறது!

புது வருடம் பிறந்தால் மட்டும் என்னவாம்? பதிவர்கள் அதே பழைய ஆட்டைகளையே மாற்றி மாற்றி ஆடிக் கொண்டிருப்போம்! வாலு போயிக் கத்தி வந்தது டும்..டும்..! என்று சிறுபிள்ளைகளுக்கான பாட்டு, பழைய விளையாட்டைப் போலவே ஒன்று மாற்றி ஒன்று தப்பாமல் சீசனாக வரும்!அப்புறம் சோ மட்டும் தானா இங்கே பழமை வாதி என்று என்னைக் கேட்காதீர்கள்! என்னவோ நாம் மட்டும் புதுமைப்பித்தர்களாக இருப்பது மாதிரி!

எனக்கு உண்மையிலேயே பதில் தெரியாது!!

10 comments:

  1. ////யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது!

    இவர்கள் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் மீது 'ஆன்மிகம்' பேசுபவர்களுமே கூட இந்தத் தவறைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.////

    முழுக்க முழுக்க உடன்படுகிறேன்.

    ReplyDelete
  2. //யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது!//

    சரிதான்,

    ஆன்மீகவாதிகள் தான் பிறக்கும் போதே அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்களே, எங்களுக்கு தான் புத்தி இல்லை, யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியிருக்கு, உங்களை போல் ஆட்களிடம் கேட்கலாம் என்று பார்த்தால், அரவிந்தர் என்கிறீர்கள், அவர் சொல்லிவிட்டு போனதை நாமும் சொல்வது கிளிபிள்ளை தனமென்று நீங்கள் தானே சொன்னீர்கள் என்றால் உனக்கு கிறுக்கே தாண்டா என்கிறீர்கள்!

    எனக்கு பகுத்தறிவும் வேணாம், புண்ணாக்கும் வேணாம்!

    ReplyDelete
  3. நீங்கள் மதுரையில் இருப்பதாக அறிகிறேன்...மதுரையில் ஞாயிறுகளில் நடக்கும் Readers Club Meeting போனதுண்டா...அல்லது போவதுண்டா?

    ReplyDelete
  4. My consent to be something, for this post.

    ReplyDelete
  5. வாருங்கள் அண்ணாமலையான் ! எனக்கும் தான் என்று ஒரே வரியில் நிறுத்திக் கொண்டு விட்டீர்களே! அதற்கு மேல் எழுதினால் வரி கட்டவேண்டும் என்று யாராவது பயமுறுத்தி விட்டார்களா என்ன:-))

    நவாஸுதீன்! ஒரு தவறை இன்னொரு தவறால் சமன் செய்துவிட முடியும் என்று நம்புகிற போக்கு ஆத்திகம், நாத்திகம் பேசுகிற இரண்டு தரப்பிலுமே, கால காலமாக இருந்து வருகிறது. இந்த மூடத்தனத்தை ஒழிக்க யாரும் முன்வரக்காணோம்! ஆனாலும், மூட நம்பிக்கைகள், பழமைவாதம் என்று மட்டு மட்டும் பேசுவோம்! தொடர்ந்து இதே மாதிரி இறுகிப் போன மன நிலையில் இருந்து எழுதிய சில பதிவுகளைப் பார்த்து எனக்கே வெறுத்துப்போய் விட்டது!

    அன்புள்ள திரு அருண்!
    சில நாட்களாகவே கொஞ்சம் பொறுமை இழந்து வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! நான் ஸ்ரீ அரவிந்தர் சொன்னதை, சிந்தித்துப் பார்த்து, அப்புறம் எனக்கு ஏற்புடையதாக இருப்பதை அனுபவத்திலும் கண்டு சொல்கிறேன். எவர் மீதும் என் கருத்தைத் திணிக்க முற்படவில்லை. மத மாற்றமோ, மன மாற்றமோ செய்யும் வேலை எதுவும் என்னுடைய பதிவுகளில் இல்லை. உங்களுடைய வேகம், சுறுசுறுப்பை மிகவும் ரசிக்கிறேன் என்பதை நிறைய இடங்களிலேயே சொல்லியிருக்கிறேன். அதே நேரம், எதிர்த்தரப்பு சொல்வதில் இருந்து, அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று உங்களுக்கு சௌகரியப்படுகிறமாதிரி வார்த்தைகளை உருவி, பின்னூட்டச் சரவெடிகளாக வெடிக்கிறீர்கள், சரி. வால்தனம் என்று ரசிக்க முடிகிறது! அதே நேரம், அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? குறைந்த பட்சம் உங்களுக்காவது?

    ஸ்ரீராம்!
    கேள்விப்பட்டதில்லை. எங்கே? யார் நடத்துகிறார்கள்?

    கௌதமன் சார்!
    தீதும் நன்றும் பிறர் தர வாரா! நல்லதோ, அல்லதோ, அதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நம்மிடம் தான் இருக்கிறது. அல்லது அப்படி நம்மிடமிருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் செய்யும் ஒவ்வொன்றிற்கும் நாம் தான் பொறுப்பேற்கவேண்டும்!

    ReplyDelete
  6. //நான் ஸ்ரீ அரவிந்தர் சொன்னதை, சிந்தித்துப் பார்த்து, அப்புறம் எனக்கு ஏற்புடையதாக இருப்பதை அனுபவத்திலும் கண்டு சொல்கிறேன். எவர் மீதும் என் கருத்தைத் திணிக்க முற்படவில்லை. மத மாற்றமோ, மன மாற்றமோ செய்யும் வேலை எதுவும் என்னுடைய பதிவுகளில் இல்லை.//

    எனக்கு எந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறதோ அதே அளவுக்கு மற்றவர்களுக்கும் உள்ளது என்பதை நம்புபவன் நான்! உங்களை போலவே ஏற்புடயதை மட்டும் தான் மற்றவரும் நம்புவார் என்பது உங்களுக்கு ஏற்புடயதாக இல்லாமல் இருப்பது தான் கொஞ்சம் வருத்தம்!

    யாராலும் ப்ளாக் மூலம் யாருடய மனதையும் மாற்றிவிட முடியாது, முன்னரே சொன்னது போல் அன்வருக்கும் சிந்திக்கும் திறனும் ஏற்புடயதை மட்டும் ஏற்று கொள்ளும் பக்குவமும் இருக்கிறது!

    நான் என் பாதையில் போய் கொண்டிருக்கிறேன், கூட வருபவர்களை வேண்டாம் என்று சொல்லவுமில்லை, ஏன் வரவில்லை என்று கேட்பதும் இல்லை!

    ReplyDelete
  7. //பின்னூட்டச் சரவெடிகளாக வெடிக்கிறீர்கள், சரி. வால்தனம் என்று ரசிக்க முடிகிறது! அதே நேரம், அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? குறைந்த பட்சம் உங்களுக்காவது?//

    இப்போ பின்னூட்டம் மூலம் உரையாடி கொண்டிருக்கிறோமே, அது கூட ஒரு பயன் தான் எனக்கு!

    ReplyDelete
  8. /எனக்கு எந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறதோ அதே அளவுக்கு மற்றவர்களுக்கும் உள்ளது என்பதை நம்புபவன் நான்! உங்களை போலவே ஏற்புடயதை மட்டும் தான் மற்றவரும் நம்புவார் என்பது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருப்பது தான் கொஞ்சம் வருத்தம்!/

    வால்ஸ்! உங்களுடைய மனம் வருத்தப் படும்படி இந்தப் பதிவுகளில் ஏதாவது சொல்லியிருக்கிறேனா? உங்களை வருத்தப்படச்செய்யும் எண்ணம் எனக்கில்லை.

    மற்றவர்களுக்கும், உங்களைப் போலவே சிந்திக்கும் திறன் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறீர்கள், சரி! அப்புறம் வாத்தியார் பதிவில் வரிசையாக....போதாதென்று நீங்கள் வேறு இரண்டு பதிவுகளில் வேறு! உங்களுடைய வாக்குமூலம் இங்கே முரண்படுகிறதே, கவனித்தீர்களா?
    நீங்கள் எப்படி எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்பதைச் சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. என்ன மாதிரி இருந்தால்,படிப்பவருக்கும் உபயோகம் இருக்கும் என்கிற ஆசையை சொன்னேன் அவ்வளவு தான்! ஏற்றுக் கொள்வது, மறுப்பது அல்லது மாற்றிக் கொள்வது எதுவானாலும் அதை நீங்கள் தான் செய்தாகவேண்டும்.

    ReplyDelete
  9. வாத்தியாரும் சிந்திக்கிறார், நானும் சிந்திக்கிறேன்

    ஆனால் வேறு வேறு கோணத்தில், ஏற்புடய விசயத்தில் தெளிவு பெற உரையாடுவது ஒன்றும் தவறில்லையே!

    நான் வாத்தியாரை தாக்கவில்லை, சோதிடத்தையும், அதை வைத்து பிழைப்பவர்களையும் தான் சாடுகிறேன்! வாத்தியாருக்கு கொபம் வந்தால் நான் எப்படி பொறுப்பாக முடியும்!

    பண்பு இல்லாத பதிவர் என்ற பகிரங்க பதிவு போட்டும் நான் எங்கேயும் மரியாதை குறைவாக எழுதவில்லையே! இத்தனைக்கும் எனது சொந்த பெயரில் பின்னூடம் இட்டேன், ஆனால் எனது கழிப்பறையில்(என் ப்ளாக் தான்
    )சிஷ்யகோடிகள் அனானியாக வந்து இருந்து விட்டு சென்றார்களே, நான் எதுவுமே சொல்லவில்லையே!

    எனக்கு தவறாக பட்டதை முகத்துக்கு நேராக கேட்கிறேன், பதில் சொல்லவிருப்பம் இல்லையென்றால் முடியாது எனலாம், ஒருவேளை பதிலே தெரியவிலையென்றால் பண்பில்லாதவர் எனலாம்

    வாழ்க்கையே முரண்பாடு தான், நான் மட்டும் என்ன விதிவிலக்கா!?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!