அந்த நாள் ஞாபகம் வந்ததே, வந்ததேன் நண்பனே!



என்னை ஒரு ஒளிவட்டத்தோடு ஆன்மிகம் பற்றி எழுதுகிற ஆன்மீகப் பதிவராகக் கற்பனை செய்து கொண்டிருந்த ஒன்றிரண்டு பேருக்கு, முந்தைய நான்கு பதிவுகள், ஏமாற்றத்தை, அதிர்ச்சியை அளித்திருக்கலாம். அப்படி ஒரு ஒளிவட்டத்தோடு இருப்பவனாகக் கருதும் விதத்தில், ஒருமுத்திரை, branding, அற்புதங்களை விற்பவனாகத் தவறான ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள்!


எனக்கென்று எந்த ஒரு அடையாளமும் இல்லை! Simply, I consent to be.....nothing!

இப்படி ஒரு பதிவிலேயே தெளிவான விளக்கம், டிஸ்கி என்ன போட்டாலும், சில வாத்தியார்களுக்கு மட்டும் அது புரியவே மாட்டேன் என்கிறது. காரணம், வாத்தியார் வேலை என்பது இன்றைக்குத் தமிழ்நாடு அரசு கொடுக்கும் 'கலைமாமணி' விருது மாதிரி, அப்புறம் இந்த வாடிகன்ல இருந்த போப்பு ஒருத்தர் தேடித் தேடி நானூறு பேருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தா மாதிரி ஆகிப்போனதுதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

இது அக்கரை ஞாபகம்! நான் 'அக்கரையில் இருந்தபோது' என்று எதையோ கண்டு பிடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு ஆசிரியர் தூண்டிவிட,அரசியலிலும், தொழிற்சங்கச் செயல்பாடுகளிலும் தீவீரமாக வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருந்த அந்த நாள் நினைவுகள். இப்போது வருவதும் ஒரு காரணத்திற்காகத் தான்!

அந்த நாட்களில், தி க ஆதரவாளரான ஒரு வழக்கறிஞர், அவருடைய இளவல்கள், எங்களைப்போல இடதுசாரிச் சிந்தனை உடையவர்களோடு, நன்கு பழகிக் கொண்டிருந்தார்கள், அல்லது அப்படிக் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்றும் கூட சொல்லலாம். வாரத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட, வழக்கறிஞருடைய வீட்டில், பேசப்போவோம். கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் நடந்த அந்தக் கூத்தை இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும், கொஞ்சம் வேடிக்கையான அனுபவமாகவே இருக்கிறது.


மனிதன் சினிமாவில் வருகிற கோர்ட் சீனில் காண்பிப்பதுபோலவே, தன்னுடைய வாதத் திறமை இருப்பதாக எங்களை நம்பச் செய்யப் படாத பாடு படுவார். கருத்துப் பரிமாற்றம் என்று சொன்னேன் அல்லவா, அது வெறும் வார்த்தை தான்! அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார், எதிராளி என்ன தான் சொல்கிறார் என்று ஒரு பொழுதும் கவனித்ததில்லை. நாங்களும், அவரை மாதிரி என்று சொல்ல முடியாது, அவர் அந்தக் கலையில் சகல கலா டாக்டர் பட்டம் வாங்கியவர், எங்களுடைய கருத்தை எடுத்து வைத்து விட்டதாக ரெகார்ட் பண்ணி விட்டு ஜமா கலைந்து விடும், அடுத்த வாய்தா வருகிறவரை
 
இந்த வழக்கறிஞரோடு என்னுடைய உறவும் நட்பும் கொஞ்சம் அதிக நாள் நீடித்தது என்று சொன்னால், மேலே சொன்னது மாதிரி கருத்துக் களம், பரிமாற்றம் என்று சொன்னேனே, அந்த மாதிரி வார்த்தை அலம்பல்களினால் அல்ல. எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஒரு வெறித்தனமான காதலும், நேரமும் இருந்த நாட்கள் அவை. அவரிடம் நிறைய நூல்கள் இருந்தன. எந்தப் புத்தகம் கடைக்கு வந்தாலும், உடனே வாங்கி விடுவார்.பல்வேறு தலைப்புக்களில் அவரிடம் இருக்கும் நூல் சேகரம் கொஞ்சம் பெரிதுதான். இப்படி ஒரு புத்தகப் புதையல் இருக்கும் இடத்தை யாராவது தவற விடுவார்களா என்ன!

எனக்குத் தேவைப்படுகிற புத்தகங்களை, நான் தேடிப்போக வேண்டிய அவசியம் கூட இல்லாமல், அனுப்பி வைப்பார். அவரிடம் இல்லை என்றால், உடனே வாங்கியும் வைத்து விடுவார். பெரியாரைப் பற்றி, இவரிடமிருந்து தான், கொஞ்சம் ஆதாரங்களோடு கூடிய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறேன். அதே மாதிரி, மார்க்சீயச் சிந்தனைகள், மதக் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகள் என்று நூற்றுக்கணக்கான புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறார். எங்கே தகராறு வருமென்றால், திடீரென்று சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இதோ பாருங்கள் லெனின் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சில பத்திகளை அடிக்கோடிட்டு வைத்துக் காண்பிப்பார். அதை ஆதாரமாக வைத்துக் கொண்டே தான் பேசுவதையும் ஒருமாதிரி முடிச்சுப் போட்டுத் தன்னுடைய கருத்துப் "பரிமாற்றத்தை" வலுவாக ஊன்றி வைப்பார்!

இப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று வழக்கறிஞர், புத்தகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டும் போது எங்களுக்கு முதலில் கொஞ்சம் மயக்கம் வந்ததென்னவோ உண்மை! அப்புறம் கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்தது, குதிரையல்ல கழுதைதான் என்று தெரிந்தது என்று ஒரு கதை சொல்வார்கள் இல்லையா, அதே மாதிரி, வழக்கறிஞரும் மேற்கோளில் எப்படிப் புரட்டுகிறார் என்பது சீக்கிரமாகவே தெரிந்துபோய் விட்டது. எனென்றால், அந்தப் புத்தகத்தையே, எனக்குப் படிப்பதற்காகக் கொடுத்து அனுப்புவார் என்று சொன்னேன் இல்லையா, புத்தகத்தை முழுமையாகப் படிக்கும் போதே குட்டு உடைந்த தருணங்கள் வந்தது.

உதாரணத்திற்கு லெனின் எழுதிய புத்தகங்கள் பெரும்பாலானவை, அந்த காலகட்டத்தில் பரவலாக இருந்த அல்லது பரப்பப்பட்டு வந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களாகவே எழுதப்பட்டவை. லெனினுக்கு ஒரு பழக்கம், தன்னுடைய எதிராளி சொல்லும் ஒவ்வொரு கருத்தையும், முழுதாக எடுத்துச் சொல்லி, அதற்கு அப்புறம் எதிராளி எப்படி அதைத் தப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறார், தப்பாக வாதங்களைஎப்படி எடுத்து வைக்கிறார் என்பதை, ஒவ்வொன்றாக, ஆணித்தரமாக மறுக்கும் வகையிலேயே எழுதுவது. ஆக, லெனின் எழுதிய ஒரு நூலை நீங்கள் வாசிக்கப் புகும் போது, எதிர்க்கருத்தாக எவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு விட முடியும். நம்முடைய பகுத்தறிவு வழக்கறிஞர், அப்படி லெனின் எடுத்து வைக்கிற எதிராளியின் கருத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, பாருங்கள் லெனின் இங்கே இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதம் செய்வதுதொடரும்போது, நாங்கள் ஐயா, அதற்கு அப்புறம் லெனின் இதை எப்படி மறுத்திருக்கிறார் என்பதையும் பாருங்கள், தொடர்ந்து தவறாகவே லெனினை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னபிறகும் கூட, அவர் தன்னுடைய வாதத் திறமையை, பாணியைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர் மட்டுமல்ல, பகுத்தறிவு வாதம் பேசுகிற நிறையப்பேரும் அதே பாணியைக் கடைபிடித்து வருவதும் புரிந்தது.பகுத்தறிவை அவர்கள் புரிந்துகொண்டிருக்கும் விதமும் புரிந்தது!

கொஞ்சம் ஒன்றைக் கவனித்துப் பாருங்கள், பெரியாரை மேற்கோள் காட்டுகிறவர்களாகட்டும், அல்லது இறக்குமதி செய்யப்பட்ட நாத்திகம் பேசுபவர்கள் ஆகட்டும், தாங்கள் மேற்கோள் காட்டும் விஷயம் உண்மைதானா, அதில் சொல்லப் பட்டிருப்பவை, இங்கே இப்படி அங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது என்று எடுத்துக் காட்டப் படும் இடங்களைத் தாங்களே ஒருதரம் சோதித்துப் பார்த்து, அங்கே அப்படித்தான் சொல்லியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வதில்லை. யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது!




இவர்கள் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் மீது 'ஆன்மிகம்' பேசுபவர்களுமே கூட இந்தத் தவறைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.

ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு பதிவரோடு விவாதித்துக் கொண்டிருந்த தருணங்களில், கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பது--

அவர் எழுதிய முதல் மூன்று பகுதிகளுக்கான பின்னூட்டங்களிலேயே, இருக்கிறது. என்னுடைய இந்த ஒரு பதிவின் பின்னூட்டங்களிலேயே ஒரு சாம்பிள் பார்க்கலாம்.

இவர்களால் புரிந்துகொள்ள முடியாதது என்ன, ஏன் என்பதைக் கொஞ்சம் எது பக்தி என்ற தலைப்பில் மின்தமிழ் வலைக் குழுமத்தில் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதும் விவாத இழையின், இரண்டாம் பகுதியைப் படிக்கத் தருகிறேன். முதல் பகுதியை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில், இங்கே பார்த்திருக்கிறோம்!

ஒருவருக்கு நம்பிக்கையாக இருக்கும் ஒன்றை, நாத்திகம் பேசுபவர்கள் மூட நம்பிக்கை என்று ஒதுக்கித் தள்ளுவது ஒருபக்கம் கிடக்கட்டும். ஆத்திகம் பேசும் பலபேருக்கே அது புரிவதில்லை என்பதையும் மிக எளிமையாகச் சொல்லும் மோகனமான எழுத்து! மின்தமிழில் வெளி வந்த மோகனத் தமிழ்!
 
தெரியவில்லை என்றால் கிருஷ்ணா, ராமா என்று ஒதுங்கிக் கிடக்க வேண்டும் என்று யோசனை சொல்ல வந்த ஒரு ஆசிரியருக்கும் பதில், புரிந்துகொள்கிற தன்மை இருந்தால், இங்கேயே படிக்கும் போதே கிடைக்கும்.

அரங்கனைக் காத்தால் அவன் நம்மைக் காப்பான் எனும் திடபக்தியில்........?

அரங்கனைக் காப்பதா? ... இல்லை ......


இல்லை கண்ணன் நமக்கு பக்தி புரியாது. வியாபாரம் லவலேசம் இருந்தாலும் பக்தி புதிர்தான். ஏதோ படித்தரங்கள் எல்லாம் சொல்கிறார்கள். சும்மா ஏமாற்று. எனக்குக் கூட கத்த வேண்டும் போல்தோன்றுகிறது..




அரையரைப் பார்த்து, "ஏனய்யா? அறிவிருக்கிறதா? நீதான் ஏதோ பைத்தியமா நடந்துக்கறன்னா அது சின்ன குழந்தையா? அதை ஏன்யா போயி...?"


ஒரு சமயம் கண்முன் தெரியாத கோபம் பொங்குகிறது. அடுத்த கணம்
அழுகிறேன்......... என்ன உத்திரவாதம் கண்ணன்
 


'ஆற்றைத் தாண்டினால் வைகுந்தமாம். சற்றுப் பொறுத்துக் கொள்.'


மடையர்கள் என்று திட்டுகிறீர்களா இவர்களை? ஐயோ எனக்கு ஒரே குஷி.
இது எல்லாம் மூடநம்பிக்கைன்னு ஜட்ஜ்மண்ட் பாஸ் பண்றேங்களா? குஷி.




ஆனா ஒன்றை மாத்திரம் எனக்குச் சொல்லி விடுங்கள். அவர்கள் அந்தக்
கணத்தில், அழிவு சிறுகச் சிறுக அவர்களைத் தின்ற அந்தக் கணத்தில்
அப்பனும் பிள்ளையுமாக என்னத்தையா பார்த்துத் தொலைத்தார்கள்? அரங்கன்
காப்பத்துவான்னா? அட போய்யா! ஆத்துல உட்கார்ந்துண்டு தச்சி
மம்மு சாட்டுண்டு [தயிர் சாதம்] பேசிண்ட்ருக்காங்கன்னு நினைச்சீங்களா
 


சுற்றிலும் தீ விக்ரகத்தை எட்டும் நாக்குகள் இவர்களின் உடல் கவசத்தைப்
பற்றுகிறது. இந்த விபத்து உங்களுக்கு கோரமாகப் படலாம். ஆனால் அதைத்
தாண்டி அவர்கள் பார்த்தது என்னைப் படுகுலையாக உலுக்குகிறது.
ஒருவருடைய மரணத்தின் கோரத்தை வைத்து நம்பிக்கையை வளர்க்க முயலாது
சநாதனம்
 


எனவேதான் இந்த நிகழ்வுகளைப் பதிந்ததற்கு மேல் இதைப் பற்றி எதுவும் தத்துவ ரீதியாகப் பெரிது பெரிதுபடுத்துவதில்லை ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம். காரணம் அவர்கள் பக்தியின் உலகில் வாழ்ந்தார்கள்
 


ஆனால் நாம் பக்தி என்ற பெயரில் மிஞ்சிப் போனால் நம்பிக்கையை வளர்ப்போம். அது யாராவது ஏதாவது கேள்வி கேட்டால் உடனே சொத்தென்று உட்கார்ந்துவிடும். உடனே அடுத்த கேள்விக்கும் கேள்வி கேட்பவரைக் கண்டும் பயப்பட ஆரம்பித்து விடுவோம். கேள்வி கேட்காத ஒத்துப் போகின்ற சமத்தான ஆட்களாகப் பார்த்து சத்சங்கம் என்ற பெயரில் குதுகுதுன்னு நமக்குள் பேசிக் கொள்வோம். இதுதான் நாம் முக்கி முக்கி அடையும் பக்தி, நம்மைப் பொறுத்தவரை.


அறிவைப் பூரணமாக உள்வாங்கியது பக்தி என்பது என்று நமக்குப் புரியத்
தொடங்குகிறதோ அன்று நமக்குக் கிழக்கு வெளுத்தது என்று பொருள்.


அவர்கள் பக்தியின் உலகில் வாழ்ந்தார்கள் என்று சொன்னேனே எப்படி என்று கேட்கிறீர்களா? திருமலையில் ஸ்ரீராமானுஜரின் சீடர் அநந்தாழ்வான் நந்தவனம் கைங்கரியம் செய்துகொண்டு இருந்தார். அவர் பாட்டுக்குப் போகிறவரை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அனைவரும் அலறுகிறார்கள். ஸ்வாமி ஸ்வாமி என்று அவரோ நிச்சிந்தையாக பகவத் ஸ்மரணத்தில் போகிறார். அலறல் உரைத்ததும் நின்று என்ன என்று கேட்கிறார்
 


"அய்யோ அங்கு பாரும் உம்மை அரவம் தீண்டிவிட்டது. உடனே வைத்தியம் பார்க்கவேண்டும். வாரும். சீக்கிரம். கிளம்புங்கள்."


"அதற்கு நேரமில்லை. திருவேங்கடமுடையான் கைங்கரியமாகச் செல்கிறேன்.

கடித்த பாம்பு விஷம் மிக்கதாகில் விரஜா நதியில் தீர்த்தமாடி
வைகுந்த நாதனை ஸேவிக்கிறேன். கடியுண்ட பாம்பு விஷம் மிக்கதாகில்
திருக்கோனேரி தீர்த்தத்தில் தீர்த்தமாடி திருவேங்கடமுடையானை
ஸேவிக்கிறேன்." என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்
 


நமது அளவுகோல்கள், கட்சிகட்டல்கள், பூஜை புனஸ்காரம், அறிவுத் தீவிரம்,
படிப்பு, உளவியலைப் பற்றிய ஆழ் ஆய்வு எல்லாம் அப்படி ஓரமாக
விக்கித்துப் போய் பார்த்தபடி இருக்கின்றன, மிதியுண்ட பாம்பு
போல் நினைவிழந்து!!! 
 


தயவு செய்து சொல்லுங்கள் எது பக்தி?


ஏதாவது உங்களுக்குப் புரிகிறதா?


என்னைக் கேட்காதீர்கள் எனக்குத் தெரியாது."

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

 
Judge not, that Ye shall be judged என்கிறது கிறித்தவ வேதாகமம். நான் உங்களிடம் வேண்டுவது, எப்படி இந்த வசனம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, நீ என்னைப் பற்றி ஒன்றும் பேசாமல் இருந்தாயானால், நான் உன்னைப் பற்றி எதுவும் பேச மாட்டேன் என்கிற மாதிரியோ, அல்லது இந்த வசனம் உண்மையிலேயே என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் வெறும் கிளிப்பிள்ளைகள் மாதிரியோ பேச வேண்டாமே என்பது தான்!

தீர்ப்புச் சொல்லுங்கள்! கொஞ்சம் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டபிறகு, உண்மையைப் புரிந்து கொண்டபிறகு, அதற்குப்பிறகு உங்கள் தீர்ப்பை எழுதுங்கள்! அல்லது புரிந்துகொள்ள முற்படும் முயற்சிகளாகக் கேள்விகளை எதிர்கொள்ளுங்கள்!

கேள்வி கேட்கிறவனை பெஞ்சு மேல் நிற்க வைக்கிறவன் உண்மையான ஆசிரியனாக இருக்க முடியாது. கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல், நீ இங்கே வராதே என்று, வகுப்பை விட்டு வெளியேபோ என்று விரட்டுபவன் கூட நல்ல ஆசிரியனாகக் கூட அல்ல, ஆசிரியனாகவே இருக்க லாயக்கற்றவன்!

அப்புறம் என்னத்துக்கு ஆசிரியர் பணி புனிதமான பணி என்று.........?
சைடு பிசினஸைக் கவனிக்கப் போக வேண்டியது தானே......எதற்குக் கமென்ட் எல்லாம் என்று உங்கள் பாணியிலேயே நான் கேட்கப்போவது இல்லை
 
தெரிந்துகொள்வதற்காக கேள்வி கேட்கிறவன் தெரிந்து கொள்கிறான், புரிந்து கொள்கிறான். விதண்டாவாதம் செய்கிறவன் என்ன ஆகிறான் என்பதை அவரவர்கள் அனுபவத்தில் புரிந்துகொள்ளும் காலம் வரும். வரவில்லை என்றாலும், இழப்பு எனக்கில்லை.

இருட்டைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட்டு, மோகனத் தமிழோடு, வெளிச்சம் தந்தவர்களைப் பற்றித் தொடர்ந்து பேசுவோம்!

அசதோ மா சத் கமய ! இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு
 
வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் ஆசிரியனைப் போற்றுவோம்! குரு வணக்கம் சொல்லுவோம்


 
An old pull of subconscious cords renews;
It draws the unwilling spirit from the heights,
Or a dull gravitation drags us down
To the blind driven inertia of our base.
This too the supreme Diplomat can use,
He makes our fall a means for a greater rise.


Sri Aurobindo
(Savitri, Page: 34) 

 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!