தேவன் வருவாரா?



இந்த வலைப்பதிவைப் படிக்க வரும் நண்பர்களை, "தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது. - தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம். இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களுக்கு புரிய வைக்க நானும் எனது சில நண்பர்களும் செய்து வரும் முயற்சிகளின் தொகுப்பு இதோ..." படிப்பதோடு, உங்களுடைய தார்மீக ஆதரவையும், உதவிகளையும் வழங்குமாறு அவரோடு நானும் வேண்டிக்கொள்கிறேன்.



"தேவன் வருவாரா"

ஜெயகாந்தனுடைய இந்தக் கதையை, எத்தனைபேர், இன்னமும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், நம்மில் பெரும்பாலோர், யாரோ ஒரு தேவனுடைய வருகைகாகத்தான் காத்திருக்கிறோம், அந்த தேவன் வந்து தான் நம்முடைய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்றுஎதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் வேறு யாரோ வந்து நமக்காகச் செய்து தர வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதே, இது நாலு காலில் இருந்து இரண்டு கால்களில் நிற்கத் தெரிந்து கொண்ட ஹோமோசேபியன்ஸ் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது போல!

தேவன் மெய்யாலுமே வருகிறாரோ இல்லையோ, ஆனால் காலையில் நம்மை எழுப்பி விட்டு, பல் தேய்த்துக் குளிப்பாட்டிவிட்டு, இப்படியே நம்முடைய ஒவ்வொரு தேவையையும், தேவனே வந்து செய்து தர வேண்டும் என்ற ஆசை ஏதோ ஒரு வடிவத்தில் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது.

நம்முடைய முயற்சி, சிந்தனை, உழைப்பு எதுவுமில்லாமலேயே சுகவாசியாக இருந்து விட மட்டும் ஆசைப்பட்டு, அதற்குக் குறுக்குவழி சொல்லும் இயேசு என்னோடு சாப்பிட்டார், இயேசு என்னோடு ஏப்பம் விட்டார், இயேசு என்னை அழைக்கிறார், பிரேமானந்தா, ஓஷோ மாதிரி குஷால் சாமியார்கள், டீவியில் தாயத்து விற்கும் சாமியார்கள், என்று விக்கினேஸ்வரனுடைய பதிவில் பார்த்தோமே ஒரு படம், பன்றியோடு பன்றியாக....இப்படி சோம்பேறியாக இருந்து விடுவதிலேயே நமக்குப் பொழுது சரியாகப்போய் விடுகிறது இல்லையா?

இது மாதிரி சோம்பேறித்தனத்தில், முயற்சி இல்லாமல் இருப்பதில், எனக்கு முன்னே நூறு பேர் இப்படித்தான் செய்தார்கள், நான் நூத்தி ஒண்ணு என்ற ரீதியில் செய்யப் படுபவைகளுக்கும், உள்ளார்ந்து, ஒருமையுடன் நிகழ்கிற நம்பிக்கைக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. சடங்குமயமாவது ஒரு குறுக்குவழி, அர்த்தம் தெரியாமலேயே பண்ணிக்கொண்டிருந்தால் பயன் எதுவும் இல்லை, என்பதோடு கேலிக்கூத்தாகவும் மாறிப்போய் விடும்.

எருமை மாடுகளை நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கும் ஒரு அவலத்தைச் சென்ற பதிவில் சுட்டியிருந்தேன் அல்லவா? மின்தமிழ் வலைக் குழுமத்தில்பாலச்சந்திரன் என்பவர் , வருகிற இருபத்திரண்டாம் தேதி சூரிய கிரகணத்தை ஒட்டிப் பேரழிவுகள் ஏற்படலாம் என்ற புருடாக்களைத் தொட்டு எழுதியிருந்தார். யாரெனத் தெரிந்து கொள்ளும் ஆவலில் அவரது வலைப்பக்கங்களுக்குப் போன போது, ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடான வசன கவிதை என்னைக் கவர்ந்தது.

கடைசி ஏழு வரிகளில், எழுதியவருடைய இயலாமை மட்டும் அல்ல, மனித சமூகத்தின் ஒட்டு மொத்த உணர்வும் வெளிப்படுகிற மாதிரி இருந்ததால், அந்தக் கவிதையை இங்கே தருகிறேன்.

ஆன்மாவின் உறுதியின் மீது
உண்மையின் கண்ணீர்துளி
வடிகிறது
உவர்க்காத கண்ணீர்
வியர்வையாகக் கூட வரவில்லை...

எனக்கான தேசம்
இருட்டடையும்போது
இதயம் ஒருங்கே அழுகிறது
வேதனை கங்குகள்
ஆற்றாமையால்
குற்றவாளிக் கூண்டில்
தண்டனைக்காக காத்திருக்கிறது

உறவுகளின் பிஞ்சுகளின்
இரத்தங்கள்,அவலங்கள்
மார்பு ஒடுங்கிய மகளிர்களின் ஓலங்கள்...
ஆற்றாமையின் தண்டனை அதிகரிக்க...

தீர்வுக்காய் குழப்பத்துடன் காத்திருக்கிறேன்
நிகழ்காலம் தாண்டிப்போவது தெரிகிறது...
எதிரிகள் என்னிலும் என்னைசுற்றிலும்
மறைமுகமாய் அவர்அவராய் சிரித்து விளையாடி...
துடித்தும் துவண்டும் ஈனப்பிறவியாகிறேன்................

எதிரியின் நாக்கு
எனது இரக்கத்தைத் தீயால் நக்குகிறது
நிதர்சனப் பெருவெளியில் பிதற்றுகிறேன்
பித்தலாட்ட நாடகத்தில்
கரைந்தும் தேய்ந்தும் ஒடுங்கிப்போய்....

என் ஆற்றாமை இரத்தம், கொலைகள் கண்டெல்லாம் அதிர்வதில்லை... உண்மை கண்டு கொதிப்பதில்லை... ஆற்றாமை பெயர் மாறி உலாவுகிறது அதன் பெயர்........... எருமை மாடு! எருமை மாடு......!

ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய The God Delusion புத்தகத்தைப் பற்றி சற்று மேம்போக்காகவே முந்தைய பதிவுகளில் பேசியிருக்கிறோம். மேம்போக்காக என்று சொல்வதற்குக் காரணம், டாகின்ஸ் எடுத்து வைக்கும் வாதங்கள் மேம்போக்காக இருந்ததால் மட்டுமே. கடவுளை மறுப்பவர்கள், தங்களுடைய சுய சிந்தனையாக, புதிய கண்ணோட்டமாக, கண்டுபிடிப்பாக எதையும் சொல்வதில்லை. கடவுளை நம்புகிறவர்கள், இங்கே சில ஊழியக்காரர்களைப் போல, தசமபாகத்தில் லம்ப்பாகச் சம்பாதித்துக் கொள்வதற்காக நடத்துகிற செயற்கையானஅற்புதங்கள் , என் ஆவிக்குரியவர் வந்து பிரசன்னமாவதாக நடத்தும் நாடகங்களில் இருந்தே, தங்களுடைய வாதங்களைத் தயாரிக்கிறார்கள். தசம பாகம், லம்ப்பாகச் சம்பாதிப்பது, ஏதோ ஒரு ஏற்பாட்டுடன் சிங்காரச் சென்னையின் பசுமையான சாலைக்குத் தன் பெயரை வைத்துக் கொள்வது பற்றி ஏதும் அறியாத அப்பாவிகள் இங்கே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால், பிரபலப் பதிவர்கள் மாதிரியே இந்தப் பதிவரும் பால் தினகரன், மோகன் லாசரஸ் இருவரும் ஊழியம்செய்கிறவர்களுக்கு எப்படி தசம பாகத்தைப் பெறுவதில் முன்னோடியாகவும், ஆதர்சமாகவும் இருந்தார்கள் என்று பெயரைக் குறிப்பிட்டே எழுதியிருந்த பகுதியை நீக்கி விட்டார்!

இவரும் ஒரு பாதிரியார் தான்!ஆநிரை கவர்தல் என்ற குறு நாடகமாக எழுதியிருக்கும் பதிவில் நல்ல கிண்டல் இருக்கிறது.சமீபத்திய இடுகையின் தலைப்பு: "இயேசு துப்புகிறார்". ஜெபக்கூட்ட ஊழியங்களை எப்படி நடத்துகிறாரோ தெரியாது, தலைப்பு வைப்பதில், பிரபலப் பதிவர்களை எல்லாம் மிஞ்சி நிற்கிறார். உள்ளூர, நம்பிக்கையின் பேரில் சக ஊழியக்காரர்கள் செய்யும் சில வேலைகள் தந்த வருத்தமும் தெரிகிறது.

தேவனுடைய மகிமையை விட தசம பாகத்தை அதிகம் பங்கு போட்டுக் கொள்ளும் ஊழியக் காரர்களுடைய வல்லமை பெரிது,இல்லையா பின்னே!!

அதனால் தானோ என்னவோ, அற்புதம் பற்றிப் பேசும் பால் தினகரனுக்கும், அது அற்புதமே இல்லை என்று முன்னவரை மாதிரியே பேசும் ரிச்சர்ட் டாகின்சுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இந்த இரண்டு பெயர்களுக்குப் பதிலாக ஆத்திக-நாத்திகம் பேசும் வேறெந்த இருவர் பெயரையும் மாற்றிப்போட்டுக் கொண்டாலும் கூட, ரிசல்ட் என்னவோ ஒன்றாகத்தான் இருக்கிறது!

வெறும் காலிப் பாத்திரம்! வெற்று டமாரம்! பெரியார் பாணியில் சொல்வதானால், உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாமல் போகிற "வெங்காயம்".

கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலைச் சொன்னார். ஜெயா டீவீயில் காலையில், தினம் ஒரு திவ்ய நாமம் என்ற நிகழ்ச்சியை நடத்தும் அனந்த பத்மனாபாசாரியார் என்பவர், மதுரை லக்ஷ்மி சுந்தரம் அரங்கில் ஹயக்ரீவ ஹோமம் ஒன்றை நடத்தினாராம். சென்னையில் இருந்து வந்து போக விமானப் பயணச் செலவு, தங்கும் வசதியுடன், முப்பதாயிரம் ரூபாய் சன்மானமும் அவருக்குக்கொடுக்கப் பட்டதாக, நண்பர் சொன்னார். இவர்கள் எல்லாம் இந்த வியாபாரத்தில் ஐம்பது வருஷம் லேட்டாக நுழைந்திருக்கிறார்கள். தசம பாகம் என்று கறாரான ஏற்பாடு இல்லாத இவர்களுக்கே இத்தனை என்றால், முந்தியே நுழைந்து ஆட்சி செலுத்துபவர்களுக்கு 'தசம பாகம்' எவ்வளவு கிடைத்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

சம்பாதிப்பது, சம்பாதிப்பதில் ஒரு பங்கை விட்டுக் கொடுத்தோ அல்லது வேறு உடன்பாடு வைத்துக் கொண்டோ, தகப்பன், பாட்டன் பெயரை இன்றைக்கு ஒரு பிரதான சாலைக்கு வைப்பதில் ஆரம்பித்திருக்கிறார்கள், பரிணாம வளர்ச்சியில் (டார்வினுடைய ஆத்மா என்னை மன்னிப்பதாக) நாளைக்கு, சேர, சோழ, பாண்டியர்கள் என்று தமிழகம் மூன்றாகப் பெயர் பெற்றிருந்தது போல, என்றைக்காவது ஒரு நாள் இவர்கள் குடும்ப விளக்கின் பெயரால் அழைக்கப் படாமல் போய் விடுமா என்ன!

சொல்ல வந்த விஷயம், இவர்களைப் பற்றி அல்ல! இவர்களைப் பற்றி அல்ல!!

"வீட்டுப் பிள்ளைக்குத் தேர்வு நெருங்குகிற நேரம். பிள்ளைக்குப் படபடக்கிறதோ இல்லையோ, பெற்றவர்களுக்கு வந்து விடும். கோயிலென்றால், குறிப்பிட்ட சாமிகளுக்கு மவுசு வந்து விடும்." இதை முன்னமேயே, ஒரு பதிவில் பேசியிருக்கிறேன்.

தசம பாகத்தில்பங்கு பெறுபவர்களும், ஹோமம் நடத்தி தட்சணை பெறுபவர்களும், மனிதனுடைய மிக அடிப்படையான பலவீனத்தின் வெளிப்பாடு தான்! என் பிள்ளை நன்றாகப் படிப்பதற்கு உண்டான சூழலையும் வசதிகளையும் செய்து கொடுப்பதை விட, பரீட்சையில் நல்ல மார்க் எடுப்பதற்காக நடத்தப் படும் ஜெபக் கூட்டங்களில், ஹயக்ரீவ ஹோமங்களில், ஒரு 'காணிக்கை'யை லஞ்சமாகக் கொடுத்து விடுவது எனக்கு சுலபமாகவே இருக்கிறது.

ஏனென்றால், நான் அதற்காக கஷ்டப்பட வேண்டியது எதுவும் இல்லையே! என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லையே! என் பிள்ளை பாவம், கஷ்டப்பட்டுப் படிக்கக் கூட வேண்டியதில்லையே!

ஆக, மனிதனின் இயல்பான இந்த மந்தத்தன்மையைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆத்திக-நாத்திக வாதங்களை விட்டு விலகி, உண்மை என்ன என்பதைத் தேட முயற்சிக்கலாம்! மெய்ப்பொருளை இவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியாது! இவர்கள் சொல்வதை வைத்து மட்டும், இருக்கிறது அல்லது இல்லை என்று தெரிந்து கொள்ள முடியாது!

டாகின்ஸ் புத்தகத்தைப் படிப்பது கொஞ்சம் போரடிக்கும்! தமிழிலேயே, "கடவுள் இருக்கிறாரா" என்று எழுத்தாளர் சுஜாதா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். டாகின்ஸ் மாதிரி இல்லாமல், அறிவியலும், கடவுள் கோட்பாடும் என்ன சொல்கின்றன என்பதைக் கொஞ்சம் எளிமையாகவே, சொல்ல முயற்சித்திருக்கிறார். புத்தகக் கடைக்குப் போய், காசு கொடுத்து வாங்க மனமில்லாத கஞ்சர்களுக்கு மட்டும் --> இணையத்தில் தேடினால் எளிதாகக் கிடைக்கும். படித்துப் பாருங்கள், விவாதத்தைத் தொடரலாம்!

அப்புறம், என்னை ஒரு ஒளிவட்டத்தோடு ஆன்மிகம் பற்றி எழுதுகிற ஆன்மீகப் பதிவராகக் கற்பனை செய்து கொண்டிருந்த ஒன்றிரண்டு பேருக்கு, முந்தைய நான்கு பதிவுகள், ஏமாற்றத்தை, அதிர்ச்சியை அளித்திருக்கலாம். அப்படி ஒரு ஒளிவட்டத்தோடு இருப்பவனாகக் கருதும் விதத்தில், ஒருமுத்திரை, branding, அற்புதங்களை விற்பவனாகத் தவறான ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள்!

எனக்கென்று எந்த ஒரு அடையாளமும் இல்லை! Simply, I consent to be.....nothing!

மெய் எது, மெய்ப்பொருள் எது என்ற தேடல் தொடரும்..!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!