இப்போதைக்கு இது போதும்!


"சாரு-ஜெமொவைப்பற்றியே எழுதிக் கொண்டிருந்தது, நகைச்சு வையுற மாதிரிஆயிடுச்சு போல!" என்று சொல்லிக் கொண்டே நண்பர் உள்ளே வந்தார். அவரே விஷயத்தைக் கிண்டி கிளறட்டும் என்று அமைதியாக இருந்தேன்.

"நீ ஒண்ணப் புரிஞ்சுக்காமலேயே எழுதினதுல தான் தப்பு இருந்தது, விஷயத்தில இல்ல, அதாவது ஒனக்குத் தெரியுமா?" என்று கேள்வியைக் கொக்கி போட்டு விட்டு, கையில் இருந்த சில காகிதங்களை உன்னிப்பாகக் கவனிக்கிற மாதிரி, அதே நேரம் நான் என்ன நினைக்கிறேன் என்பதை என் முகத்திலிருந்து கண்டு பிடிக்கிற மாதிரி,ஒரு கோணத்தில் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார். எதைப் புரிந்து கொள்ளாமல் எழுதினேன் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும், கொக்கியில் சிக்கிக் கொண்டால், அடுத்ததடுத்த கொக்கிகளுள் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை மணி உள்ளே அடித்ததால், ஏதோசொல்ல வந்தவன், அப்படியே நிறுத்திக் கொண்டேன்.

நண்பர், இதற்கெல்லாம் அசருகிறவர் இல்லை. புள்ளிராஜா வங்கியில், பணியாற்றியவர், புள்ளி விவரம் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி! புள்ளி ராஜாவுக்குப் புள்ளி வருமான்னு கேட்டா என்னென்ன கலர்ல எத்தனை எத்தனை புள்ளி வரும்னு விவரத்தோட சொல்றவர். புள்ளிராஜா வங்கியில, இவர மாதிரிப் புள்ளி வச்சுக் கோலம் போடறவங்களை நிறையவே பாத்ததுனால, நண்பர் ஏதோ புள்ளிவிவரம், கோலமெல்லாம் வரஞ்சு வச்சுத் தான் வந்திருக்கணும்னு தெரிஞ்சது. விதி யாரை விட்டது?!

"வலைப்பதிவு எழுதறவங்க எல்லாம் ஏதோ தெரிஞ்சுக்கணும்னு தேடி வர்றவங்க இல்ல. ச்சும்மா, டைம் பாஸ் பண்றதுக்காக வர்றவங்க, அப்படியே நல்ல மூடுல இருந்தால், விஷயத்தைத் தெரிஞ்சுக்கவும் கொஞ்சம் படிப்பாங்க. அவ்வளவு தான்! இது தெரியாம, நீ என்னமோ, பெரிசா கருத்துக் களம், விவாதக் களம்னு சொன்னாக்க, யார் படிப்பாங்க?"

சரி, இன்னிக்குப் புள்ளி வச்சுக் கோலம் போடாமப் போக மாட்டார்னு நல்லாவே தெரிஞ்சது. பரிதாபமாக, முகத்தை வைத்துக் கொள்ள முயன்றதில், ஒரு காப்பங்கு வடிவேலு ரேஞ்சுக்குத்தான் அவ்வ..வ்வ்வ்வ்..வ்வ்வ்வ்..வ்னு பம்ம முடிஞ்சது. பம்மினாலும் எங்க விடறாங்க?

லாப்டாப்பில விறுவிறுவென என் பக்கங்களைப் புரட்டினார். ஜாதகம் பாக்கறவுங்க, கை விரலை நீட்டி, மடக்கி வாய்க்குள்ளாரையே கணக்குப் போடற மாதிரி கொஞ்சம் பந்தாக் காண்பித்துக்கொண்டிருந்தார். சரி, இன்னிக்குக் கிளிஞ்சது கிருஷ்ணகிரின்னு , அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரொம்ப நேரம் காக்க வைத்தால், வர்ர்ட்டான்னு டாட்டா சொல்லிட்டுப் போயிடுவேன்னு நண்பருக்குப் புரிந்திருக்க வேண்டும். புள்ளி விவரங்களை, அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார். அப்படித் தெளிச்சதுல இருந்து கொஞ்சம் இங்கேயும்:

"அடிக்கடி வாசிப்பு அனுபவத்தைத் தொட்டு எழுதியிருக்கே இல்லியா? லிடரேச்சர் கிளாசா நடக்குது இங்க?

இணையத்துல வர்றவங்க பெரும்பாலும் வாசிக்கறதுக்காக்ன்னு வரல, பொழுது போக்கத் தான் வர்றாங்க! உண்மையான வாசிப்பு அனுபவம், இன்னும் கூடப் புத்தகங்களில் தான் கிடைக்கிறது. பொழுதுபோக்க இணையத்துக்கு வர்றவங்க, சுவாரசியமா இருந்தா அங்கே இங்கேன்னு கொஞ்சம் வாசிக்கவும் செய்யறாங்கங்கறது உண்மைதான், ஆனாலும் இன்னும் பரவலாகவில்லை."

நான்: அது உண்மைதான்.

"நம்ம தமிழ் வாத்தியாரை ஞாபகம் இருக்கா? கட்டுரை எழுதுன்ற கேள்விக்கு மாஞ்சு மாஞ்சு பதில் எழுதியிருப்போம்..பாவி வாத்தியான் விரக்கடையால அளந்து மார்க் போடுவாரே, அது மாதிரித் தான் இங்கயும், ஆனாக்க அப்படியே உல்டா! நீ எழுதற அத்தனை விஷயத்தையும் நீ ஒத்தன் மட்டும் தான் படிக்கோணும். மேலோட்டமா, பதிவைப் பாப்பாங்க, இண்டரஸ்ட் இருந்தாக்கக் கொஞ்சம் படிப்பாங்க. அத மொதல்ல ஞாபகம் வச்சுக்கோணும்."

நான்: உண்மை, உண்மை! இதைத் தான் நானும் ஒரு பதிவுல, கூத்துக்கட்டுகிறவன் எப்படி ஆடியன்சை இழுத்துப் பிடிச்சு வைப்பாங்கன்னு சொல்லியிருந்தேனே!

"சொல்லியிருந்தா மட்டும் போதுமா? அதே டெக்னிக் பதிவிடும் போது இருக்க வேண்டாமா?

படிக்க வர்றவங்க பெரும்பாலும் 600 வார்த்தைகளுக்கு மேல இருந்தா, அல்லது நீளமா இருந்தா, அப்பாலிக்காப் பாத்துக்கலாம்னு போயிடுவாங்க! கண்ணுல படற வரிகள் கொஞ்சம் இழுத்துப் பிடிச்சு வச்சாத்தான், கொஞ்சமாச்சும் படிப்பாங்க!

அப்படிப் படிக்கிரவங்களுமே கூட, முழுசாப் படிக்கிறதில்ல. அதிக பட்சம் அறுபது சதவீதத்தைத் தான் படிக்கறாங்க.அப்படிப்படிக்கிறதுலயுமே எவ்வளவு புரிஞ்சுப்பாங்க, தெரிஞ்சுப்பாங்கங்கிறது இன்னொரு ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரித்தான்! செல்லுபடியாகுமான்னு தெரியற வரைக்கும் சஸ்பென்ஸ் தான்"

நான்: நீ சொல்வது எனக்குக் கொஞ்சம் புரிகிறது!

"இதத்தான் சொன்னேன்! கிட்டத்தட்ட ஆறு வருஷமா ப்ளோக் எழுதினவன் நீ. ஆனாலும், இப்பத் தான் கொஞ்சம் கொஞ்சமாப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கே, இல்லையா?"

நான்: நான் பதிவிட ஆரம்பித்த சூழ்நிலையே வேறு! இதை ஒரு டயரிக் குறிப்பு மாதிரித் தான் ஆரம்பித்தேன். என்னுடைய டயரி என்ற அளவுக்கு மேல், வாசகர்கள் என்ற அளவில் யோசித்ததே இல்லை.

"இப்பத்தான் சாக்ரடீஸ் சொன்னமாதிரி 'உன்னையே நீ அறிவாய்' கட்டத்திற்கு வந்திருக்க நண்பா. திவுலகத்திற்கு வர்ற எல்லாருமே, இப்படித்தான் ஆரம்பிக்கிறாங்க! தடுமாறுவதும் கூட இந்தக் கட்டத்துல தான்! தன்னை எப்படி அடையாளம் காட்டிக்கிறது என்பதில் தடுமாற்றம்! தன்னுடைய உண்மையான தன்மை, அடையாளத்தை அறியாமலே இருப்பதும் இன்னொரு தடுமாற்றம்!

மொதல்ல, இந்தப் பரந்த பூமியில நானும் இருக்கேன்னு மத்தவங்களுக்கு சொல்ல ஆரம்பிக்கிற முயற்சி தான். என்னை அடையாளம் காட்டிக்க, என்னோட உணர்வுகளைப் பகிர்ந்துக்கன்னு ஆரம்பம் தான் எழுத்து. அது நீ உயிரோட்டத்தோடு, உணர்வோடு இருப்பதற்கு அடையாளம் அவ்வளவுதான்."

நான்: ம்ம்ம்..மேல சொல்லு!

"இப்படித் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள, தன்னோட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிற ஒரு முயற்சி, ஒரு தெளிவான பார்வையோ, நோக்கமோ இல்லாதனால, சீக்கிரமே நீர்த்துப் போகவோ, தடம் மாறவோ செய்கிறது. திருவிழாக் கூட்டத்துல தொலைஞ்சு போன பிள்ளை மாதிரி, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள வருபவன், இங்கே பார்க்கிற ஏகப்பட்ட அடையாளங்களைப் பார்த்துக் குழம்பி தன்னுடைய அடையாளம் என்ன என்பதிலேயே தடுமாறுகிற அனுபவமும் கூடக் கிடைக்கும்."

நான்: ஐயா! புள்ளி விவர ராசா! நான் பாட்டுக்கு ஏதோ எழுதி, எதை எதையோ படித்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னை ஏதோ ஒரு திருவிழாவில் தொலைத்துவிட்டுத் தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டு குழப்புகிற மாதிரி இருக்கிறது.

"குழப்பம் வருவது, தெளிதலுக்கான முதல் படி"

நான்: இப்படியே பேசிக்கிட்டிருந்தா, அடி தான் கிடைக்கும்!

"படிக்க வர்றவங்க ரொம்பத் தெளிவா இருக்காங்க நண்பா! நான் பள்ளிக்கூடத்திலேயே கட் அடிச்சு சைட் அடிக்கப் போனவன், இங்க நெட்ல ஏதோ கொஞ்சம் பொழுது போக்கலாம்னு வந்தா இங்கேயும் வந்து இம்சையை கூட்டுனா எப்பூடீன்னு எச்சரிக்கையாத் தான் இருக்காங்க!"

நான்: இதனால், புள்ளி விவர ராசா, சொல்ல வருவது..?

"யாருக்காக எழுதுகிறோம் என்பதை விட , என்ன எழுதுகிறோம் என்பதில், எவ்வளவு எழுதுகிறோம் என்பதில் தெளிவாக இரு."

"இப்போதைக்கு இது போதும்!"


4 comments:

 1. நல்லா இருக்கு.

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி பாலா! இப்படி ஒத்தை வரியில சொல்லிட்டா..?
  நீங்களும் ஒரு பதிவர், என்ன நினைக்கிறீங்க,உங்களுடைய அனுபவம் என்னங்கிரதையும் கொஞ்சம் பகிர்ந்துக்கலாமே! பின்னூட்டப் பெட்டி இருப்பதே, அதற்காகத் தான் இல்லையா!

  ReplyDelete
 3. இந்த பாணி நன்றாக இருக்கிறதே! லேபிள் காரண்டியைக் காப்பாற்றி நிறைய புன்னகைக்க வைத்து விட்டீர்கள்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 4. வருகைக்கு நன்றி திரு.ஜீவி! வாசிப்பது மட்டுமே பெரும் சுகம் என்றிருந்தவனை, எழுத வைத்து விட்டார்களே!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!