"அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே"


"இருபது தேதிக்கு மேல் ஆகிவிட்டாலே வீட்டில் ஒரே நச்சரிப்பு-அது இல்லை, இது இல்லை என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தால் மனிதனுக்கு எரிச்சல் வருமா, வராதா? நீயே சொல்லேன்." என்று நண்பர் வரும்போதே கொஞ்சம் அலுத்துக் கொண்டே வந்தார்.

இந்த இல்லைப் பாட்டு, தமிழ் நாட்டுக்கோ, தமிழர்களுக்கோ, அல்லது தமிழ் வலைப் பதிவர்களுக்கோ புதிது ஒன்றும் இல்லையாகையால், சிரித்துக் கொண்டே பேசாமல் இருந்தேன். பேசினால் வம்பு வரும், மனிதர் வீட்டில் காட்ட முடியாத வீரத்தை, என்மேல் கோபப் பட்டுக் காண்பித்தால் செம காமடியாக இருக்கும், எதற்கு இப்போது தேவையே இல்லாமல் ஒரு காமடி சீன என்று மௌனமாக இருந்தேன்.நண்பர் விடுவதாக இல்லை.

"இப்பத் தேவையே இல்லாம ஏன் சீன் காமிக்கிறான்னு தானே நினைக்கிறே?"

நான் பேசாமல் மௌனமாக வேறுபக்கம் பார்க்கிற மாதிரி இருந்து விட்டேன். நண்பருக்குக் கொஞ்சம் மூடு திரும்பியிருக்க வேண்டும், "அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே" என்று பாட ஆரம்பித்தார். ஒரு பழைய திரைப்படப் பாட்டு.

கொஞ்சம் நாடகத் தனமான பாட்டு. கிராமங்களில், கூத்துக் கட்டுகிறவர்கள், இப்படி விடுகதை மாதிரி பாட்டுப் படி வசனம் பேசும் விதூஷகன் பாத்திரத்தை வைத்து, ஆடியன்ஸைக் கவர் பண்ணுகிற அரதப் பழசான, ஆனாலும் ரொம்ப வெற்றிகரமான டெக்னிக். என்னுடைய ஆர்வத்தை நண்பர் ஊகித்து விட்டிருக்க வேண்டும். அல்லது என் மனதில் ஓடிய எண்ணங்களை அப்படியே படித்திருக்க வேண்டும்.

"சந்தேகம் இல்லே-சந்தேகம் இல்லே" மனோகர திரைப்படத்தில் காகா ராதாகிருஷ்ணன் மாதிரிப் பாட ஆரம்பித்தவரை "என்ன சந்தேகம், என்ன இல்லை என்று சொல்லி விட்டு அப்புறம் பாடு" என்றேன்.

"என்னவோ, கவனிக்காதவன் மாதிரி மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு இருந்தாயே, அது தான் சந்தேகம் இல்லே, சந்தேகம் இல்லே."

இப்படித்தான், அந்தக் கால நாடகங்களில், ஒரு காமெடியன், ரொம்ப விசித்திரமாக டிரஸ் போட்டு, சாயம் பூசிக் குல்லாய் எல்லாம் வைத்துக் கொண்டு குட்டிக்கரணம் அடித்துக் கொண்டே, காட்சியில் பிரவேசிப்பார். வழக்கப்படி வந்தனம், அறிமுகம் எல்லாம் ஒரு நீளமான பாட்டாகப் பாடிவிட்டு, ஒரு விடுகதை போடுவார். அது விடுகதைதானா, வேற கதையாங்கிற பஞ்சாயத்தைத் தனியா வச்சுக்கலாம்

"ஒரு காட்டுல, ஒரு குளம். குளத்துல அது இல்ல. அந்தக் குளத்துக்குத் தண்ணீர் எடுக்க ஒருத்தி வர்றா..அவளுக்கு அது இல்ல..அவ கொண்டு வந்தாளே குடம், அந்தக் குடத்துக்கு அது இல்ல, அப்புறம், இந்தக் கூத்தைப்பாக்கக் கூடியிருக்கும் மகாசனங்களே, உங்களுக்கும் அது இல்ல..." காமெடியன் இப்படி நீட்டி முழக்கிக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு நடிகரோ, வாத்திய கோஷ்டியில் ஆர்மோனியப் பெட்டி வாசிப்பவரோ, "நிறுத்து, நிறுத்து!" என்று பெரும் குரலில் அவரை அடக்குவார்கள். "நீ பாட்டுக்கு, அதுக்கு இது இல்ல, இதுக்கு அது இல்லன்னு சொல்லிகிட்டே போனா என்ன அர்த்தம்?"

இப்படி எதிர்க் கேள்வி கேட்டவுடனேயே, குந்தியிருக்கிற நம்ம மகாசனமெல்லாம், ரொம்ப ஆர்வமா கூத்துக் கட்டுகிறவர்களைக் கவனிக்க ஆரம்பிப்பாங்க.

ஆடியன்ஸ் கவனம் வேறுபக்கம் போய் விடாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே!

காமெடியன் உடனே, "ரொம்ப நல்லாக் கேட்டீங்க! என்ன கேட்டீங்க?

"எதுக்கு எது இல்லன்னு பாப்பமா? காட்டுக்குள்ளார ஒரு குளம்னு சொன்னேன் பாருங்க, அதுல தண்ணி இல்ல. அங்க தண்ணி எடுக்க வர்றாளே ஒருத்தி, அவளுக்கு ஒரு கையில்ல... தண்ணி எடுக்கக் கொண்டு வந்தாளே ஒரு குடம் அதுக்கு அடி இல்ல...அப்புறம் இந்தக் கூத்தப் பாக்க வந்த மகா சனங்க உங்களுக்கு......." அப்படீன்னு ஒரு இழுவை இழுத்து.........................................................

"ஒரு கொறையும் இல்ல" என்று சொல்லி முடித்தவுடனேயே, குந்தியிருக்கிற சனமெல்லாம் ஒரு பூரிப்பு, புளகாங்கிதம் இன்னும் என்னென்னவோ சொல்லுவாங்களே..அட, அதையெல்லாம் அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்கணும்!

ஆமா, எதுக்காக, இது இருந்தா அது இல்ல, அது இருந்தா இது இல்லைன்னு ஆரம்பிச்சோம்?

இதுக்காகத்தான்!

ஒரு சுவாரசியமான "இதுக்கு" "அது இல்லை" பட்டியல்!


அரேபியாவில் ஆறுகள் இல்லை

அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.

ஆமைக்குப் பற்கள் இல்லை.

இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.

இந்திய அரசியல்வாதிகள், கல்லறைக்குப்போகும் வரை ஓய்வு பெறுவதில்லை.

இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.

இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.

இந்தியாவில் எரிமலைகள் இல்லை.

ஈசலுக்கு வயிறு இல்லை.

உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.

ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.

ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.

கடலில் முதலைகள் வாழ்வதில்லை.

பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.

மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.

யமுனை நதி கடலில் கலப்பதில்லை.

யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.

யானையின் கால்களிலும் எலும்புகள் இல்லை.

வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.

ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.

ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன் படுத்துவதில்லை

கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.

குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.

குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.

பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.

பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.

2 comments:

  1. இல்லை பாட்டு பாடுபவர்களை பார்த்தாலே பத்திக்கிட்டு வரும்....நல்லா இருக்கு..தொடர்ந்து எழுதுங்கோ..உங்களின் எழுத்து ரசிக்கும் படியா இருக்கு..வாழ்த்துக்கள்..

    அன்புடன்,
    அம்மு.
    http://ammus-recipes.blogspot.com

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி.
    உண்மைதான்! ஆனால், இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்கும் இயல்பு மனிதனுடையது. அதுதான் மனிதனை வளரச் செய்து கொண்டிருக்கிறது, அதே நேரம், எதுவோ இல்லை என்கிற குறையும் இருந்து கொண்டே இருக்கிறது இல்லையா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!