தேவை! மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, மாற்றுச் சிந்தனையும் கூட....!


மாற்று மருத்துவம் என்று  சென்ற பதிவில் ஒரு சிந்தனைக்காகப் பேச ஆரம்பித்தபோது--

முதலில், நோயின் தன்மையைச் சரியாகக் கண்டறிகிற மருத்துவரின் தொழில் ஞானம். இது அலோபதி மட்டுமல்ல, எல்லா மருத்துவ முறைக்கும் பொருந்தும். டயக்னைஸ் செய்ய வேண்டிய மருத்துவர், ஸ்கேன், பரிசோதனை முடிவுகளை மட்டுமே வைத்து மருந்துகளை பரிந்துரை செய்கிற அவலம் இங்கிருக்கிறதா இல்லையா?

அடுத்து, பரிந்துரைக்கும் மருந்து என்னென்ன விரும்பத்தகாத பக்க விளைவுகளைக் கொண்டு வரும் என்பதிலும் தேர்ச்சி, அதற்குத் தகுந்த மாதிரி மருந்தின் அளவு உட்கொள்ளவேண்டிய காலம் இவைகளைப் பற்றியும் மருத்துவர்களில் எத்தனை பேருக்குத் தேர்ச்சி இருக்கிறது? கொசு அடிக்க பீரங்கியைப் பயன்படுத்துகிற மாதிரி, ஓவர்டோஸ் பரிந்துரைக்காத மருத்துவர்கள் எத்தனை பேர்?

எல்லாவற்றுக்கும் மேலாக மருந்தின் விலை! கலப்படம், போலி, காலாவதியாகிப்போன மருந்தா  இல்லையா என்பது, இப்படி நிறையக், கேள்விகளுக்கு அலோபதி மருத்துவம் இந்தியச் சூழ்நிலைகளில் என்ன சொல்கிறது?

இதே கேள்விகளுக்கு மாற்று மருத்துவம் என்ன சொல்கிறது?

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!


இப்படிக் கேள்வியை முன்வைத்து, ஒரு கருத்துப் பரிமாற்றத்தை வேண்டியிருந்தேன். மாற்று அல்லது மாற்றம் என்றாலே இங்கே நிறையப்பேருக்கு அலெர்ஜியாக இருக்கிறது. செந்தில்பாலன் என்ற வாசகர் வந்து ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார்.


"மாற்று மருத்துவ முறைகளில் எளிதில் போலிகள் கலந்து விட வாய்ப்பு உண்டு. அவர்கள் தரும் மருந்துகளில் உள்ள கன உலோகங்களால் (heavy metals) கொடுமையான வியாதிகள் வரலாம். மருத்துவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கை தேவை நண்பர்களே!!!! "


எச்சரிக்கைக்கு நன்றி. ஆனால் இந்த எச்சரிக்கையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதையும் கொஞ்சம் பார்த்து விடலாம்! அவருடைய எச்சரிக்கை, மாற்று மருத்துவத்தை மட்டும்  முழுமையாக நிராகரிப்பதாக இருக்கிறது. மருத்துவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கை தேவை என்று சொல்கிறவர், அலோபதி மருத்துவத்தையும் உள்ளிட்டு என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் அர்த்தம் இருந்திருக்கும்.


கடந்த ஒன்றரை வருடங்களாகப் பன்றிக் காய்ச்சல் என்ற விஷக் காய்ச்சல் இதுவரை இந்தியாவில் ஆயிரத்து எழுநூறுக்கும் ஏற்பட்டவர்களைப் பலி கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட புள்ளி விவரம் சொல்கிறது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு காய்ச்சலே எவருக்கும் இல்லை என்று சுகாதாரச் செயலாளர் அறிக்கை விட்டார். ஆனாலும்,ஆய்வு செய்வதற்காகத் திருநெல்வேலிப்பக்கம் நேரடி விசிட் போனதாகக் கூட போன வருடம் செய்திகள் வந்தன. பத்திரிகைகளில் அரசு, முழுப்பக்க விளம்பரங்களைக் கூட வெளியிட்டதாக நினைவு! இப்போது கேரளாவிலும், மஹாராஷ்ட்ராவிலும் பன்றிக் காய்ச்சல் மறுபடி பரவிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.


மத்திய அரசு, மாநில அரசு, பொது மக்களுடைய சுகாதாரத்தில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொண்டன என்பதை இந்தப் பக்கங்களில் போலி மருந்து என்ற சொல்லை வைத்துத் தேடிப்பாருங்கள்! கொஞ்சம் கூடுதல் விவரம் கிடைக்கும்.


இப்போது திரு செந்தில்பாலன் முன்வைத்திருக்கும் ஒரு சந்தகத்திற்கு விடை சொல்கிற மாதிரி, அலோபதி மருத்துவத்தில் மட்டும் என்ன வாழ்கிறது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு செய்தியைப் பார்ப்போமா?ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா?

"உலகை உலுக்கும் (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித் க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது.

பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.

ஜெர்மனி அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்து ஆய்வு அமைப்பில் பணியாற்றும் டாக்டர் லுத்விக் இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பி, அதனை மருத்துவர்கள் பயன்படுத்தவேண்டாம், இதில் பிரச்சாரம்தான் அதிகமுள்ளது, பிரச்சாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் விஞ்ஞான சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாதது என்று அதிர்ச்சியூட்டியுள்ளார்.

நேச்சுரல் நியூஸ் இணையத் தள ஆசிரியர் மைக் ஆடம்ஸ் இது குறித்து 10 கேள்விகளை தன் இணையத் தளத்தில் எழுப்பி அதற்கு விமர்சன ரீதியான விடைகளையும் அளித்துள்ளார்.

அவர் அந்த கேள்விகளுக்கு முன் குறிப்பிடுகையில், எந்த ஒரு தடுப்பு மருந்தும், அதன் வினைத்திறன் பற்றிய கட்டுக்கதைகளுடன்தான் வெளிவருகிறது. அதாவது எந்த ஒரு தடுப்பு மருந்தும் சிறப்பாகவே செயல்படும், அதன் வினைத்திறன் பற்றி ஒருவரும் கேள்வி எழுப்பக்கூடாது, அப்படி கேள்வி எழுப்பினால் அந்த விஞ்ஞானியை விஞ்ஞான சமூகம் ஒதுக்கிவிடும் அல்லது அவரை பொதுச் சுகாதாரத்திற்கு எதிரி என்று முத்திரை குத்தும் என்று சாடியுள்ளார்.

அதாவது மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் எப்போதும் விடை தர மறுக்கும் ஒரு 10 கேள்விகளை அவர் எழுப்புகிறார்:

1.
ஃப்ளூவால் பாதிக்கப்படாத ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மீது நடத்தப்படும் 'ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள் எங்கே? அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செயல்திறன் மிக்கவை என்ற ஆய்வுகள் எங்கே?

விடை: இல்லை.

2.
ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான "விஞ்ஞான" ஆய்வுகள் எங்கே?

விடை: குழு அளவில் செய்யும் பரிசோதனை முறை, அதாவது 'கோஹார்ட் ஸ்டடீஸ்' தவிர வேறு இல்லை. இந்தஆய்வுகளை நம்ப முடியாது. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான நேர்மையான எந்த ஒரு சாட்சியமும் இல்லை.

3.
ஃப்ளூ தடுப்பு மருந்தில் சேர்க்கப்படும் துணைப்பொருளான திமிரோசால் மனித உடலுக்கு ஏற்றதுதானா? ஏனெனில் மெதில் மெர்குரி என்று அழைக்கப்படும் இது பாதரசமாகும். பாதரசம் என்பது தீவிரமான நச்சு கனரக உலோகம் என்று கூறப்படும்போது, அதன் பாதுகாப்பு நம்பகத் தன்மையுடையதா?

விடை: இது பாதுகாப்பானது அல்ல. மேலும் தளர்வுறச் செய்யும் நரம்பு நோய்கள் ஏன் தோன்றுகின்றன என்பதையும் இது விளக்குகிறது.

4.
தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட பின்பு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நாளடைவில் நரம்புத் தளர்ச்சியும், மூளை வீக்கமும், வலிப்பும், சில வேளைகளில் மரணமும் ஏற்படுவதாக ஏன் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன?

விடை: ஏனெனில் தடுப்பூசி மருந்துகள் அபாயகரமானவை. தடுப்பு மருந்து தொழில் துறையினர் தொடர்ந்து இது போன்று எழும் மருத்துவ எச்சரிக்கைகளை கண்டு கொள்வதில்லை. தற்செயல் விளைவு என்று இந்த அறிக்கைகள் கூறினாலும், ஏன் தற்செயல்?

5.
ஃப்ளூவை திறம்பட தடுக்கும், காலங்காலமாக இருந்து வரும் வைட்டமின் 'டி' ஏன் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுவதில்லை? வைட்டமின் "டி" அனைத்து தடுப்பு மருந்துகளை விடவும் உடலில் இயல்பான எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது.

விடை: ஏனெனில் வைட்டமின் டி-யிற்கு காப்புரிமை கிடையாது. அதனை ஒரு மருந்தாக விற்கமுடியாது. ஏனெனில் நாமே அதனை நமக்கு உருவாக்கிக் கொள்ளலாம். வைட்டமின் டி தேவையா அதற்கு மருத்துவரின் உதவி கூட தேவையில்லை. சூரிய ஒளியில் ஏகப்பட்ட வைட்டமின் டி உள்ளது.

6.
ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டால்தான் மனிதர்கள் உயிர் வாழ முடியுமெனில், பூமியில் மனித குல வரலாற்றில் எப்படி ஃப்ளூ காய்ச்சலை மீறி வாழ்ந்து வந்துள்ளனர்?

விடை: வைட்டமின் டி உள்ளவரை மனித மரபணு சமிக்ஞை ஏற்கனவே வெளியிலிருந்து வரும் சக்திகளை எதிர்த்துப் போராடுமாறு அமைந்துள்ளது.

7.
ஃப்ளூ தடுப்பு மருந்து கொடுத்தால் ஃப்ளூ தாக்காது என்று கூறப்படுகிறது. இது உண்மையெனில், தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களையே ஃப்ளூ வைரஸ் ஏன் தாக்குகிறது?

விடை: சக்தி வாய்ந்த ஃப்ளூ வைரஸ்களுக்கு தடுப்பு மருந்துகள் பயன் படுவதில்லை. அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் யாருக்கு அது தேவைல்லையோ அவர்கள் உடலில் மட்டுமே வேலை செய்கிறது.

8. 2004
ஆம் ஆண்டு ஃப்ளூ தடுப்பு மருந்துகள் தேவைக்கும் குறைவாக கிடைத்தபோதும், தடுப்பு மருந்து போடப்படும் நபர்களின் எண்ணிக்கை 40% குறைந்த போதும் ஏன் ஃப்ளூ வைரஸ்களால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை?

விடை: சாவு விகிதங்களில் மாற்றமில்லை. தடுப்பு மருந்தை ஒருவருக்கும் கொடுக்காவிட்டாலும் சாவு எண்ணிக்கையில் மாற்றமில்லை. ஏனெனில் ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்வதில்லை.

9.
குளிர் காலங்களில் ஃப்ளூவினால் மரணமடைவோர் விகிதம் 10%ஆக இருக்கும் போது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் சாவு விகிதத்தை 50%ஆக குறைக்கிறது என்ற பிரச்சாரம் ஏன்?

விடை: ஏனெனில் 50 சதவீதம் மரண விகிதத்தை குறைக்கிறது என்பது ஒரு விற்பனை உத்தி மட்டுமே. என் அறையில் 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 50 ஆரோக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் சாக்லேட் கொடுக்கிறோம் என்று வையுங்கள், 50% மக்களுக்கு சாக்லேட் ஆரோக்கியமானது என்று நாம் கூற முடியுமா? இதே தர்க்கம்தான் ஃப்ளூ தடுப்பு மருந்தினால் மரண விகிதம் 50% குறைகிறது என்ற பிரச்சாரத்திலும் உள்ளது.

10.
ஃப்ளூ தடுப்பு மருந்துகள் அபாரமாக வேலை செய்கிறது என்றால் ஏன் மருத்துவ அதிகாரிகள் அதனை முறையான வெளிப்படையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கின்றனர்? அதாவது பிளாசிபோ ஆய்வுக்கு ஏன் உட்படுத்துவதில்லை?

விடை: அவர்கள் பிளாசிபோ ஆய்வு அற ரீதியானது அல்ல என்று கூறினாலும், அதைவிட அறக்கேடானது பக்க விளைவுகளை கடுமையாக ஏற்படுத்தும் தடுப்பு மருந்துகளை உலகம் முழுதும் கோடிக்கணக்கான பேருக்கு கொடுப்பது.

இது போன்ற பதில் கூற முடியாத கேள்விகளை மைக் ஆடம்ஸ் எழுப்ப காரணம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

தற்போது உலகை உலுக்கி வரும் ஸ்வைன் ஃப்ளூவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளும் அங்கீகரித்து, பல்வேறு கட்டங்களில் அனைவரும் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படும் 'பேன்டம்ரிக்ஸ்' என்ற கிளாக்சோ நிறுவன மருந்தில் துணை மருந்தாக சேர்க்கப்பட்டுள்ளது 'ஸ்க்வாலீன்' என்ற மருந்தாகும்.

அமெரிக்காவை உலுக்கிய ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பு மருந்திலும் இதே ஸ்க்வாலீன் உள்ளது. முதல் வளைகுடாப்போரின் போது இந்த தடுப்பு மருந்து அமெரிக்க ராணுவத்தினருக்கு போடப்பட்டது. கல்ஃப் வார் சின்ட்ரோம் (Gulf War Syndrome) என்று அழைக்கப்படும் நோய் 6,97,000 அமெரிக்க ராணுவத்தினரில் 25% பேரை தாக்கியது. இந்த தடுப்பு மருந்தால் விளைந்த விளைவுதான் இந்த நோய்.

பேராசிரியர் ஆர்.எஃப். கேரி என்பவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ஸ்க்வாலினுக்கும் கல்ஃப் வார் சின்ட்ரோமுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். இதனால் 2004ஆம் ஆண்டு ஃபெடரல் நீதிமன்றம் இதனை ராணுவத்தினருக்கு பயன்படுத்த தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது
.
ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தின் அபாயம் என்ன? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள டாக்டர் ஆண்டர்ஸ் ப்ரூன் லார்சென் என்பவர் பேன்டெம்ரிக்சில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்க்வாலீன் என்ற இந்த துணை மருந்துப் பொருள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வளைகுடாப்போருக்கு முன்பும் பின்பும் போடப்பட்ட ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி மருந்தில் ஸ்க்வாலீனின் அளவு 100 கோடி மைக்ரோகிராம் நீர் அளவில் 34.2 மைக்ரோ கிராம் என்று இருந்தது
.

ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தான பேன்டெம்ரிக்சில் 0.5 மில்லிக்கு 10.68 மில்லி கிராம் ஸ்க்வாலீன் சேர்க்கப்பட்டுள்ளது. இது கல்ஃப் வார் சின்ட்ரோம் என்ற நோயை உருவாக்கிய ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தில் உள்ள ஸ்க்வாலீன் அளவைக்காட்டிலும் 10 லட்சம் மடங்கு அதிகம் என்று கூறுகிறார்
.

இந்த துணை மருந்து பொருள் அதாவது தடுப்பு மருந்திற்கு உடலின் வினையாற்றும் திறனை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுவதாகக் கூறும் இந்த ஸ்க்வாலீன், பல்வேறு நரம்பு மண்டல நோய்களையும், உடலின் நோய் தடுப்புச் சக்தி தனது திசுக்களையும், உறுப்புகளையுமே தாக்கும் லூபஸ் என்ற நோயையும், முடக்கு வாதத்தையும் உருவாக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வந்துள்ளன.

14 கினியா பன்றிகளிடத்தில் ஸ்க்வாலீனை கொடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் ஒரு பன்றிதான் உயிரோடு இருந்தது. இதே ஆய்வை மீண்டும் செய்து பார்த்தபோதும் முடிவுகளில் மாற்றம் எதுவும் இல்லை.

அப்படி என்ன இந்த ஸ்க்வாலீன் என்று பார்த்தால் அது ஒரு வகை எண்ணெய் அவ்வளவே. ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தை தயாரித்த தி சிரான் என்ற இந்த நிறுவனம் எம்.எஃப்- 59 என்ற துணை மருந்துப் பொருளை தயாரிக்கிறது. இதில் ஸ்க்வாலீனும், கிளைக்கோ புரோட்டீன் - 120, அதாவது ஜி.பி.- 120 என்ற துணைப்பொருளும் அடங்கும்.

தற்போது புழக்கத்தில் உள்ள வாக்சைன்களில் - அதாவது தடுப்பூசிகளில் - இந்த எம்.எஃப்.- 59 உள்ளது. டெடனஸ், டிஃப்தீரியா தடுப்பூசியிலும் இது உள்ளது. இதன் மோசமான பக்க விளைவுகள் பற்றி காலங்காலமாக ஆய்வாளர்கள் எழுதி வருகின்றனர்.

கிளைக்கோ புரோட்டீனை மூளையில் உள்ள மைக்ரோக்ளியா செல்கள் உள் வாங்கும் போது தீவிரமான அழற்சியை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கிளைக்கோ புரோட்டீனின் ஒரு பகுதிதான் ஹெச்..வி. வைரஸிலிருந்து தனியாக பிரிக்கப்படுகிறது. இதனால்தான் எய்ட்ஸ் நோயாளிகள் பலருக்கு மனச்சிதைவு (Dementia) நோய் ஏற்படுகிறது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட சில மாதங்களில் தெரிய வருவதல்ல. இதன் நோய்க்கூறுகள் வெளிப்பட, அதாவது வெளிப் படையாக தெரிய சில ஆண்டுகளும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபலப்படுத்தப்பட்ட ஹெபடைடிஸ் - பி நோய் தடுப்பு மருந்திலும் நாம் முன்பு குறிப்பிட்ட திமெரசால் என்ற துணை மருந்துப் பொருள் சேர்க்கப்படுகிறது.

ஃப்ளூ காய்ச்சல், அது எந்த வகையானாலும் சரி, எச்1 என்1 ஆக இருந்தாலும் சரி, அதற்கான தடுப்பூசி மருந்துகளில், அதாவது வாக்சைன்களில் அலுமினியம், திமெரசால் அல்லது ஸ்க்வாலீன் என்ற மேற்கூறிய அபாய விளைவுகளை ஏற்படுத்தும் துணைப்பொருள் சேர்க்கப்படுகிறது
.

இந்த ஒவ்வொரு துணை மருந்து பொருளும், நரம்புச் சிதைவு அல்லது நரம்பு தளர்வு நோயையும், வளர்ச்சிக் குறைபாடுகளும், தண்டு வட அழற்சியும் (Spinal Chord Inflammation), பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் கண் நோயும், இன்னும் பிற நோய்களும் உருவாவதாக ஆய்வுகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

இந்த மோசமான விளைவுகள் பிரச்சாரம் மூலம் ஒன்றுமில்லாமல் அடிக்கப்படுகின்றன. எந்த ஒரு நாட்டிற்கும் தடுப்பு மருந்து கொள்கைதான் முக்கியமாகப்படுகிறதே தவிர அதன் மோசமான பின் விளைவுகள் முக்கியமாகப் படுவதில்லை.

பேன்டெம்ரிக்ஸ் என்ற கிளாக்சோ ஸ்மித்க்ளைன் நிறுவனத்தின் ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து ஜெர்மன் பத்திரிக்கையான் டை ஸ்ப்லீகல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

டாக்டர் லுத்விக் என்ற ஜெர்மன் மருத்துவ அதிகாரி இந்த மருந்தின் மீது கடுமையான விமர்சனங்களை தொடுத்துள்ளார்.

வாக்சைன்கள் மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும்தான் ஆதாயமானது, ஏனெனில் மேலும் நோயாளிகளை அது உருவாக்குகிறது என்று எங்கோ படித்ததன் அர்த்தம் இப்போது நமக்கு புரிகிறது.

ஆனால் ஃப்ளூ வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள எளிய வழி உள்ளது. அதாவது வைட்டமின் டி- 3 தான் அது என்று ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. நல்ல உணவு, தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் தடுப்பு மருந்துகள் அல்லது உணவு முறை போன்ற வாழ்க்கை முறையே ஃப்ளூ வைரஸிலிருந்து நம்மை காக்கும்.

வைட்டமின் - டி என்ற நோய்த்தடுப்பு சக்தி

நேச்சுரல் நியூஸ் இணையத் தளத்தில் மைக் ஆடம்ஸ் சென்ற வருடம் அக்டோபர் 13ஆம் தேதி எழுதிய கட்டுரைக்கு '6 கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி கூறுகிறது வைட்டமின் டி உங்களை ஸ்வைன் ஃப்ளூவிலிருந்து காக்கிறது என்று' என்று தலைப்பே இட்டுள்ளார்
!

இந்தக் கட்டுரையை மைக் ஆடம்ஸ் எழுதுவதற்கு 2 மாதங்கள் முன்னதாக ஆரிஜன் ஸ்டேட் பல்கலை கழக ஆய்வு ஒன்று வைட்டமின் டி-யின் நோய் தடுப்பு அரிய குணங்களை கண்டு பிடித்துள்ளனர்.

அதாவது 6 கோடி ஆண்டுகளான பரிணாம வளர்ச்சியில் இன்றும் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்களில் இந்த வைட்டமின் டி இயல்பாகவே உள்ளது. ஆனால் வைட்டமின் டி அளவை நாம் கச்சிதமாக பராமரிக்க வேண்டும். சூரிய ஒளியிலும், சில உணவுகளிலும் இந்த சத்து நிறைய உள்ளது.

வைட்டமின் டி வேலை செய்யும் விதம் நம் உடலின் இயல்பான தற்காப்பு சக்தி எந்த ஒரு புற நோய் சக்திகளுக்கும் எதிராக அளவுக்கு அதிகமான வேலையைச் செய்வதில்லை. மாறாக உள்ளிருக்கும் தடுப்பு சக்தியை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வைக்கிறது. அதிகமாக எதிர்வினை ற்றினால்தான் அழற்சி என்ற 'இன்ஃப்ளமேஷன்' ஏற்படுகிறது.

எனவே வைட்டமின் டி - குறைபாடு இருப்பவர்களுக்கு எளிதில் குளிர் காலத்தில் அல்லது மழைக் காலத்தில் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுகிறது. துவக்க நோய்க்கிருமியை தடுப்பதோடு, அதிகமாக எதிர் வினையாற்றி அதனால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதிலிருந்தும் தடுக்கிறது. 1918ஆம் ஆண்டு பரவிய ஃப்ளூ நோயில் இறந்தவர்கள் இந்த அதிகப்படியான எதிர்வினையால் ஏற்பட்ட பேக்டீரியல் நிமோனியா என்ற நுரையீரல் அழற்சி நோயாலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் வைட்டமின் டி சத்தை தக்கவைத்துக் கொள்ளும் உணவு முறை, அல்லது மருந்துகள் என்ன என்பதை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நல்லது." 

இந்த செய்தியைப் படித்துப்பார்த்தால்,செந்தில் பாலன் பயமுறுத்துகிற கன ரக உலோகங்கள் மட்டுமில்லை, பாதரசம் மாதிரிக் கொடுமையான நஞ்சும், அலுமினியம் மாதிரி லேசான உலோகங்களுமே தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிற செய்தியும் இருக்கிறது. பக்க விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நமக்குத் தேவைப் படுவது மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, சரியான மாற்றுச் சிந்தனையும் கூடத்தான்!

இல்லையா?!
இந்தக் கட்டுரை சென்ற வருடம் அக்டோபரில் வெளியானது.  வெப்துனியா தளத்துக்கு நன்றி

உங்கள் கருத்துக்களையும்,கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்! 
  

24 comments:

 1. என்ன பயமுறுத்துகிறீர்களே.

  நான் இரண்டு வாரம் முன்புதான் H1N1 தடுப்பூசி போட்டேன்.

  நீங்கள் சொல்வதை பார்த்தால் எனக்கு எதாவது நேரிடுமோ?

  ReplyDelete
 2. அது என்னவோ தெரியவில்லை,கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன் என்று சொன்னாலே பயமுறுத்துகிற மாதிரி, தடை சொல்கிற மாதிரித் தான் இங்கே நம்மில் நிறையப் பேருக்குத் தோன்றுகிறது.


  எந்த ஒரு விஷயத்திலும் நல்லது, கெட்டது இரண்டுமே உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று இதைத் தான் மூதுரையாகச் சொல்லி வைத்தார்கள்.

  இந்தப்பதிவும், இதற்கு முந்தின பதிவும் பெருகி வரும் வியாதிகள், கட்டுப்படியாகாத மருந்து விலை, மருத்துவச் சேவை காஸ்ட்லியாகிக் கொண்டே போவது, போலி மருந்துகள், ஓவர்டோஸ் பரிந்துரைத்து இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை ஒன்றுமே இல்லாமல் ஆக்கும் மருத்துவர்கள், மருந்துகள் ஏற்படுத்தும் பின் விளைவுகள், இங்கே இந்தியச் சூழ்நிலையில், அரசு, சுகாதாரத் துறைகளின் "பொறுப்பான தன்மை" நிறையத் தருணங்களில் வெளிப்பட்டிருப்பது ஆக எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மாற்று மருத்துவத்தைப் பற்றியும் யோசிக்கவேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது.

  ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதைப் போல,

  ".......and finally, it is the faith that cures!"

  ReplyDelete
 3. நோயின் தன்மையை சரியாகக் கண்டறியும் மருத்துவர் அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை செய்பவராக இருக்கலாம். பார்க்கும் நோயாளிகள் அதிகம் என்பதால் அனுபவம் அதிகமாகிறது.மருந்துகளுக்கு பக்க விளைவுகள் இருக்கும்தான். ஆனால் அதுதான் குணப் படுத்தும் என்ற நிலையில் சில சமயம் வேறு வழி இல்லாமல் போகலாம். அல்லது பக்க விளைவைச் சந்திக்க உடன் வேறு சப்போர்டிவ் மருதுகள் தரலாம். உதாரணம் கேன்சர்.

  பொதுவாகவே மருத்துவர்கள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, குறிப்பிட்ட நோய்க்கான மாத்திரை, பக்க விளைவை சமாளிக்க ரெனிடிடின் போன்ற மாத்திரல்கள், (வலி நிவாரணியுடன் பெரும்பாலும் கொடுக்கிறார்கள்), ஒரு விட்டமின் என்று மருத்துவர்களின் சீட்டு இருக்கிறது.

  மருந்தின் விலை என்பது ஒரு அதிசயம். ஒரே மூலக்கூறைக் கொண்ட மாத்திரைகள் கம்பெனியின் பெயரை வைத்து தரம் என்ற பெயரில் விலை அதிகம் வைத்து விற்கப் படுவது உண்டு. போலி மருந்துகள் எது என்று தயாரித்து வெளியில் விற்ற்டவர்களுக்கே பின்னர் கண்டு பிடிக்க முடியுமோ என்னமோ...!! ஆனால் சாதாரண மக்களால் பெரிதும் உபயோகிக்கப் பட்ட ரிநேர்வ் ரேவிட்டால் போன்ற விட்டமின் மாத்திரைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை புகழ் பெற்ற இருமல் மருந்து என செலெக்ட் செய்தே விற்றிருக்கிறார்கள் எண்பதுகளில் மதுரையில் இருந்த போதே மதுரை மருந்துக் கடை நண்பர் ஒருவர் சொல்லுவார். சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து புகழ் பெற்ற கம்பெனிகள் பெயரில் அதே நிறத்துடன் மாத்திரைகள் கிடைக்கும் என்று. க்ளூகோஸ் பாக்கெட் அன்றே போலியில் ஒரு எழுத்து வித்தியாசத்துடன் வந்தது பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. ஸ்ரீராம்!

  ஒரு தனிப்பதிவாகப் போடுகிற அளவுக்கு, முன்னும் பின்னுமாக நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

  நோய் நாடி நோய் முதல் நாடி என்று சரியாக நாடிபிடித்துப் பார்க்கத் தெரிந்த வைத்தியர்கள் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். இப்படிச் சொல்லும்போதே சிலர் அல்லது பலர் அப்படியில்லை என்பது கண்கூடு. அலோபதி உட்பட எல்லா மருத்துவ முறைகளிலும் இப்படிப் பட்டவர்களைப் பார்க்க முடியும். அதிக நோயாளிகளைப் பார்ப்பதால் அனுபவம் அதிகமாகிறது என்பது உண்மையாக இருந்தால், அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு அதிகத் திறமை இருக்கும் என்று அர்த்தமாகிறதே! உண்மை நிலவரம், அப்படித்தானா?

  என்னுடைய நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் வழியாக நிறைய மருத்துவர்கள் எனக்கு பரிச்சயமாகி இருக்கிறார்கள். அதுபோக தொழிற்சங்க ஈடுபாட்டுடன் திரிந்த நாட்களில் நிறைய மருத்துவர்கள், வெவ்வேறு துறைகளில் தங்களுக்கேற்பட்ட அனுபவங்களைத் தனிப்படப் பகிர்ந்து கொண்டவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவர்களிடம் தெரிந்து கொள்ள முடிந்த விஷயங்களை வைத்தே, ராபின் குக் எழுதிய சுரம் மாதிரி, இந்திய சூழ்நிலைகளில் மருத்துவம் எப்படிப்பட்டது என்பதை வெவ்வேறு கோணங்களில் எழுத முடியும். பதிவின் நோக்கம் அதுவல்லவே!

  மாற்று மருத்துவத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும், அதில் நிறைய ஆபத்தான விஷயங்கள் இருக்கின்றன என்று வந்த பின்னூட்டத்திற்குப் பதில் சொல்வதற்காகவே, அலோபதியில் அதை விடக் கொடுமையான விஷயங்கள் இருக்கின்றன என்பதை எடுத்துச் சொன்னேன்.

  மாற்று மருத்துவத்தைப் பற்றி ஒரு மூன்று அல்லது நான்கு நண்பர்களைத் தவிர வேறு எவருக்கும் அக்கறை இல்லையா அல்லது எப்போதும் போல ஊமைச் சனங்களாகவே இருந்து விடுவது தான் உத்தமம் என்று படிக்க வருகிறவர்கள் நினைக்கிறார்களா என்பதுதான் புரியவில்லை!

  ReplyDelete
 5. ஆரோக்கியமான விவாததிற்கு நன்றி.

  'ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள்' ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான "விஞ்ஞான" ஆய்வுகள்" - இவை
  ஆங்கில மருந்துகளுக்கு மட்டும் தானா? எத்தனை மாற்று மருந்துகளுக்கு 'ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள்' செய்யப்பட்டுள்ளது?
  அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில மருந்துகளில் கன உலோகங்கள் இல்லை.99% ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள்
  செய்யப்பட்டவை.
  தடுப்பு ஊசிகள் வாழ்நாளில் ஓரு முறை மட்டுமே போடப்படுகிறது. ஆனால் மாதக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் மாற்று மருந்துகளினால் அதுபோல் எத்தனை மடங்கு பாதிப்பு வரும்?
  ///அலோபதி மருத்துவம் செலவு பிடிப்பதாக, ஏழை, எளிய மக்களுக்குக் கட்டுபடியாகாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருப்பதில், மருந்து தயாரிப்பு என்பது கொள்ளை லாபம் பார்க்கும் வர்த்தகச் சூதாட்டமாக, போலி மருந்துகள், நிரந்தரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் ...../////
  இவை அனைத்தும அலோபதி மருத்துவ முறைக்கு மட்டும் தான் பொருந்துமா? சிறிய அளவில் வளர்ந்துள்ள முறைகளில் சிறிய சூதாட்டம். மான்கறி ராஜவைத்தியம் போல.. சேலத்தில் சொந்தமாக ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியே கட்டியுள்ளார் ஓரு மருத்துவர்..
  பெரியம்மை, போலியோ போன்ற நோய்களை ஓழித்ததில், முழுப் பெருமை தடுப்பூசிகளையே சாரும். இந்திய சுதந்திரத்தின் போது 40 வருடங்களாக இருந்த சராசரி ஆயுட்காலம் இப்போது 65 வருடங்களாக அதிகரித்து உள்ளதே!
  "ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா?" என்ற கட்டுரையில் இறுதியாக குறிப்பிடும் வைட்டமின் டி சிகிச்சை முறையும் ஆங்கில மருத்துவ முறை தான். இக்கட்டுரை ஆங்கில மருத்துவத்தின் இரு முறைகளை பற்றி தான் விவாதிக்கிறது. மாற்று மருத்துவத்திற்கு சாதகமான கருத்துகள் ஒன்றும் இல்லை.
  மேலும், விபத்தில் அதிக இரத்த இழப்பு,மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சை தேவைப்படும் இடங்களில் மாற்று மருத்துவத்தின் நிலை என்ன?
  மாற்றுச் சிந்தனைக்கும், மாற்றுச் சிந்தனை உண்டு. நன்றி.

  ReplyDelete
 6. தங்களுகாக
  ///கன ரக உலோகங்கள் மட்டுமில்லை, பாதரசம் மாதிரிக் கொடுமையான நஞ்சும்///
  பாதரசமும் கன ரக உலோகம் தான்..

  ReplyDelete
 7. திரு செந்தில்பாலன்,

  முந்தைய பின்னூட்டத்தில் ஸ்ரீ ராமுக்குப் பதில் சொல்லியிருந்ததோடு சேர்த்துப் படித்தால், இதை ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு எடுத்துச் செல்வது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருப்பதும் புரியும்.என்னுடைய நண்பர்களில் பலர் அலோபதி மருத்துவர்கள். அவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் வழியாக அறிமுகமான பல ஸ்பெஷலிஸ்டுகளிடமிருந்தும் தகவல்களை அறிந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறைக்கு ஆதரவாக அல்லது எதிர்ப்பு நிலை என்பது இந்தப்பதிவுகளின் நோக்கமே அல்ல.

  மருத்துவம் என்பது இங்கே வியாபாரமாக மட்டுமே ஆகிவிட்ட சூழலில், எல்லாவிதமான மருத்துவ முறைகளிலும் நிறையக் கோளாறுகளைக் கண்டுபிடிக்க முடியும். அதே நேரத்தில் பாரம்பரியமான மருத்துவ முறைகளை அப்படியே புறக்கணித்து விடவும் முடியாது. பதிவின் நோக்கமே, ஒரு சரியான மாற்று இருந்தால் அதைப்பற்றியும் தெரிந்து வைத்திருப்பது உதவியாகவே இருக்கும் என்பது தான்.

  அறுவை சிகிச்சை, விபத்துக்கள் மாதிரி உடனடி கவனம் தேவைப்படுகிற சந்தர்ப்பங்களில் இன்றைக்கு அலோபதி வைத்திய முறை மட்டுமே முதலிடத்தில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அலோபதி வைத்தியம் என்று சொல்லும்போது, வைத்தியனுடைய Presence of mind, Diagnostic skills இவை வைத்திய முறையை விட முக்கியமானவை என்பதையும் சேர்த்துப் பாருங்கள். அலோபதி வைத்திய முறை, எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருப்பது அதன் சாதகமான அம்சம் என்றால், வசதி படைத்த மருந்து நிறுவனங்கள் அந்த ஆவணங்கள், ஆராய்ச்சி முடிவுகளையே தங்களுக்கு சாதகமாக manipulate செய்யவும் முடிகிறது என்பது மிகப்பெரிய பலவீனம்.

  ராபின் குக் என்ற மருத்துவர் எழுதிய The Fever புதினத்தைப் பற்றிய விமரிசனத்தை, போலி மருந்துகள் விவகாரம் கிளம்பியபோது இந்தப்பக்கங்களில் எழுதியிருந்தேன். சுவாசிக்கப்போறேங்க வலைப்பதிவில் முழுப்பதிவைப் படிக்கலாம்.

  ReplyDelete
 8. நன்றி திரு.கிருஷ்ணமூர்த்தி சார்.,

  நீங்கள் சொல்லும் மருத்துவ வியாபரம் ஏற்கனவே மாற்று மருத்துவ துறையிலும் நுழைந்து விட்டது. ஹிமாலயா, ஆம்வே போன்ற மருந்து கம்பெனிகள் ஏற்கனவே பல மாற்று மருந்துகளை சந்தைப்படுத்தி விட்டன. எனவே, மருத்துவ வியாபார பிரச்சனையினால் மாற்று மருத்துவதிற்கு மாறலாம் என்றால் அங்கும் அது தான் உள்ளது. வரும் காலத்தில் மாற்று மருத்துவத்திலும் இது பெரிய அளவில் வளரும். அப்போது என்ன செய்வது?

  ஆவணப்படுத்தப் பட்ட ஆங்கில மருத்துவ முறைகளில் ஓவர்டோஸ் என்ன என்பதை சாதாரண மருத்துவ பயனாளியும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஆவணங்கள் சரியாக இல்லாத மருத்துவ முறைகளில் ஒரு மருந்தின் டோஸ் ஓவர்டோஸ், பக்க விளைவுகளை எப்படி அறிவது?
  பன்னாட்டு நிறுவனங்கள் புதிதாக கையில் எடுத்துள்ள மாற்று மருந்துகள் தயாரிப்பில், இனி போலி மருந்துகள், காலாவதி மருந்துகள் பிரச்சனைகள் வராதா?
  அவசரத்தில் கை விடும் மருத்துவம் எப்படி தகுதியான மாற்றாக இருக்க முடியும்?
  மாற்று மருத்துவத்திலும் வைத்தியனுடைய Presence of mind, Diagnostic skills இவை வைத்திய முறையை விட முக்கியமானவை.
  எலும்பு முறிவிற்கு பாரம்பரிய வைத்தியம் என்று நுட வைத்தியம் செய்து, இரத்த ஓட்டம் தடை ஆகி,கால்களையே எடுக்க வேண்டிய நிலைமைக்கு வந்த நபரை சந்தித்திருக்கிறேன்.
  அதனால் தான் அந்த பின்னூட்டத்தில் எனது எச்சரிக்கையை இட்டேன்.
  பாரம்பரிய, மாற்று மருத்துவத்திலும் ஆபத்துகள் நிறைய உள்ளன. முழுமையான ஆய்வுகள், ஆவண்ங்கள் இன்றி இவற்றை பயன்படுத்துவதும் ஆபத்து தான்.
  இப்போது நான் சொல்லப்போகும் கருத்து அதிர்ச்சியாக கூட இருக்கலாம்.. டைபாஃய்டு காய்ச்சலின் போது மஞ்சள் உபயோகிப்பது அதை அதிகரிக்க செய்யும் என்பது லேட்டஸ்ட் ஆராய்ச்சி முடிவு. (http://www.hindu.com/2010/07/18/stories/2010071862472000.htm)

  எனவே மாற்று மருத்துவதிற்கு இப்போதய தேவை ஆழ்ந்த ஆராய்ச்சியும், ஆவணபடுத்துதலும்... அதன் பிறகே தைரியமாக பயன்படுத்தலாம்.
  மாற்றுச் சிந்தனை ஆபத்திற்கு இட்டுச் செல்ல கூடாது. நன்றி

  ReplyDelete
 9. //இதை ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு எடுத்துச் செல்வது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருப்பதும் புரியும்.//

  மன்னிக்கவும்

  எனக்கு அப்படி புரியவில்லை.

  ஒரு வேளை என் புரிதலில் குறை இருக்கலாம்

  என் புரிதலில் குறைக்கு காரணம் இது தான்

  பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்தை வைத்துக்கொண்டு நீங்கள் அலோபதியே மோசம் என்று கூற முற்பட்டிருப்பதாகவே எனக்கு புரிகிறது

  இது அயோக்கியத்தனம் என்பது என் கருத்து. காரணம் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சில நாட்களே ஆகின்றன. அப்படி இருக்கும் போது இது குறித்து முழு விபரமும் இருக்காது

  கல்லூரி முடித்தவனை பார்த்து அனுபவம் இருந்தால் வேலை தருகிறேன் என்று கூறி டபாய்ப்பவர்களை நினைவு படுத்தியுள்ளீர்கள்

  இது என் புரிதல். தவறென்றால் என் புரிதல் தான் தவறு. நீங்கள் கூறுவது சரிதான். போதுமா
  --

  உதாரணமாக நீங்கள் பெரியம்மை தடுப்பு மருந்தை வைத்து இந்த விவாதத்தை ஆரம்பித்திருந்தீர்கள் என்றால் அது ஆரோக்யமான விவாதம்


  1. பெரியம்மையால் பாதிக்கப்படாத ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மீது நடத்தப்படும் 'ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள் எங்கே? அதாவது பெரியம்மை தடுப்பு மருந்துகள் செயல்திறன் மிக்கவை என்ற ஆய்வுகள் எங்கே?

  விடை: உள்ளது.

  2. பெரியம்மை தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான "விஞ்ஞான" ஆய்வுகள் எங்கே?

  விடை: உள்ளது


  3. ஃப்ளூ தடுப்பு மருந்தில் சேர்க்கப்படும் துணைப்பொருளான திமிரோசால் மனித உடலுக்கு ஏற்றதுதானா? ஏனெனில் மெதில் மெர்குரி என்று அழைக்கப்படும் இது பாதரசமாகும். பாதரசம் என்பது தீவிரமான நச்சு கனரக உலோகம் என்று கூறப்படும்போது, அதன் பாதுகாப்பு நம்பகத் தன்மையுடையதா?

  விடை: இது பாதுகாப்பானது அல்ல. மேலும் தளர்வுறச் செய்யும் நரம்பு நோய்கள் ஏன் தோன்றுகின்றன என்பதையும் இது விளக்குகிறது.

  நீங்கள் தினமும் சாப்பிடும் உப்பும், சக்கரையும் கூட வேதிப்பொருள் தான்

  அவற்றால் கூட பாதிப்பு வரலாம்

  ஏன் உடலில் அதிகம் நீர் சேர்ந்தால் கூட நரம்பு பிரச்சனை வரும்

  எனவே யாரும் நீர் பருக கூடாது என்று கூறுவீர்களா

  நீங்கள் அரோக்யமான விவாதத்திற்கு தயார் என்றால் விவாதிக்க நான் தயார்.

  --

  இல்லை நான் விவாதிக்க விரும்பவில்லை. என்னிடம் ஆதாரம் கிடையாது. இது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. இதில் ஆதராம் கேட்க கூடாது என்று நீங்கள் கூறினால், எனக்கு பிரச்சனை யில்லை

  நன்றி

  ReplyDelete
 10. அலோபதியில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. சில கெட்ட விஷய்ங்கள் உள்ளன
  பாரம்பரிய மருத்துவ முறையிலும் பல நல்ல விஷயங்கள் உள்ளன. சில கெட்ட விஷய்ங்கள் உள்ளன

  -

  இதில் சில நல்ல விஷயங்கள் இரண்டிலும் பொதுவானவை
  சில கெட்ட விஷயங்கள் இரண்டிலும் பொதுவானவை

  -

  நீங்கள் அலோபதியின் பாதகம் என்று கூறும் அனைத்து கருத்துக்களும் பாரம்பரிய மருத்துவ முறைக்கும் பொருந்தும் (உதாரணம் பக்க விளைவு, சந்தைப்படுத்துதல்). ஆனால் நீங்கள் அவற்றை அலோபதிக்கு மாத்திரம் என்று கூறுவது ஏன்

  ReplyDelete
 11. //ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள் எங்கே? //

  இந்த கேள்வியை நீங்கள் பாரம்பரிய மருந்து நோக்கி எழுப்பாதது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா

  --

  இது போல் ஆய்வு செய்வதால்தான் அலோபதி மருந்துக்களின் பக்க விளைவுகள் தெரிய வருகின்றன

  பாரம்பரிய மருந்துகளி இது போல் ஆய்வு இல்லை

  --

  ஆக பன்றிக்காய்ச்சல் தடுப்பு ஊசி குறித்து நீங்கள் எழுப்பிய அனைத்து வினாக்களும் நீங்கள் ஆதரிக்கும் பாரம்பரிய மருந்துக்களுக்கும் பொருந்துமே

  இல்லையா

  ReplyDelete
 12. மருத்துவர் ப்ருனோ!

  அலோபதி மருத்துவத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு வக்காலத்து வாங்கிக் களத்தில் குதித்திருக்கிறீர்கள்.இந்தப் பதிவு, அதன் ஆரம்ப வரிகளில் சொன்னமாதிரி, திரு செந்தில்பாலன் அதற்கு முந்தைய பின்னூட்டத்தில் எழுப்பியிருந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்வதற்காக மட்டும், ஒரு குறிப்பீட்ட தடுப்பூசி மீதான மாற்றுக் கருத்தை focus செய்து எழுதப்பட்டது.

  ஒரு மருத்துவராக உங்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்ததோடு கொஞ்சம் தகவல்களையும் தந்திருகிறீர்கள். நன்றி. அதற்குமேலும், என்னுடைய உள்நோக்கங்களையும் அறிந்துவிட்ட மாதிரி ஒரு முடிவு செய்து எழுதியிருக்கிறீர்களே, அங்கே தான் ஒரு biased approach ஆரம்பிக்கிறது.

  /உதாரணமாக நீங்கள் பெரியம்மை தடுப்பு மருந்தை வைத்து இந்த விவாதத்தை ஆரம்பித்திருந்தீர்கள் என்றால் அது ஆரோக்யமான விவாதம்/

  இதற்கு என்ன அர்த்தம்? நீங்கள் விரும்புகிறபடி ஆரம்பித்தால் தான் அது ஆரோக்கியமான விவாதமா?

  என்னுடைய அனுபவத்தில், பலவிதமான மருத்துவ முறைகளின் பயனை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். சித்தர்கள் வைத்திய முறையில் கொச்சுவீரம் என்ற எரிமலைக் குழம்பு என்று சொல்லப்படுவதில் இருந்து பாதரசம் எடுக்கப்படுவதையும், மருந்துகூட்டப்படுவதையும் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். இங்கே மதுரையில் சித்தராஜ சுவாமிகள் என்றழைக்கப்பட்ட சித்தர் ஒருவர், அலோபதி வைத்தியத்தால் கைவிடப்பட்ட பல பேருடைய வியாதிகளைக் குணப்படுத்திய வைத்தியத்தை நேரடியாகப்பார்த்திருக்கிறேன். அதே மாதிரி, ஹோமியோபதி, இயற்கை வைத்திய முறைகளில், பக்க விளைவுகள் ஏதுமில்லாமல், அலோபதி வைத்தியத்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியாத கோளாறுகளைச் சரி செய்ததையும் பார்த்திருக்கிறேன்.

  இதெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதா, ஆதாரம் இருக்கிறதா என்பது தான் கேள்வியாக வரும். பாரம்பரிய வைத்திய முறைகளை ஆவணப்படுத்தவும், ஆராய்ச்சிக்குட்படுத்தவும், இங்கே இந்தியாவில், தமிழகத்தில் அரசு என்ன செய்திருக்கிறது? எந்த அளவுக்கு உள்ளூர்த் தொழில் அதிபர்கள், அல்லது இதில் ஈடுபட்ட வைத்தியர்களே அதற்கான முனைப்பில் பங்கு கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போதே ஏன் அவ்வளவாக இல்லை என்பதன் விடையும் இருக்கிறது.

  அலோபதி வைத்தியத்தில், ஆவணப்படுத்தப் படுகிறது, ஆராய்ச்சி தொடர்ந்து செய்யப்படுகிறது. உண்மைதான்! மருந்துக் கம்பனிகளின் லாப வேட்டைக்குத் தகுந்த மாதிரி, manipulate செய்வதும் நடக்கிறது. இங்கே பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி விவகாரத்தில் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் அதைத் தான் செய்தது..

  போலி மருந்து என்ற குறியீட்டுச் சொல்லை வைத்துத் தேடிப் பாருங்கள். இந்தப் பதிவு, அந்த முந்தையபதிவுகளின் தொடர்ச்சியாகவே, ஒரு சிந்தனையாகவே எழுதப்பட்டவிதம் புரியும்.

  ReplyDelete
 13. //ஆக பன்றிக்காய்ச்சல் தடுப்பு ஊசி குறித்து நீங்கள் எழுப்பிய அனைத்து வினாக்களும் நீங்கள் ஆதரிக்கும் பாரம்பரிய மருந்துக்களுக்கும் பொருந்துமே//

  தவறு. இந்த வினாக்கள் என்னுடையதல்ல. இந்த வினாக்கள், நான் பாரம்பரிய வைத்திய முறைகளை ஆதரிப்பதற்காக இட்டுக் கட்டியவையும் அல்ல!.

  /ஜெர்மனி அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்து ஆய்வு அமைப்பில் பணியாற்றும் டாக்டர் லுத்விக் இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பி, அதனை மருத்துவர்கள் பயன்படுத்தவேண்டாம், இதில் பிரச்சாரம்தான் அதிகமுள்ளது, பிரச்சாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் விஞ்ஞான சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாதது என்று அதிர்ச்சியூட்டியுள்ளார்.

  நேச்சுரல் நியூஸ் இணையத் தள ஆசிரியர் மைக் ஆடம்ஸ் இது குறித்து 10 கேள்விகளை தன் இணையத் தளத்தில் எழுப்பி அதற்கு விமர்சன ரீதியான விடைகளையும் அளித்துள்ளார்./

  இது பதிவிலேயே இருக்கிறதே!

  ReplyDelete
 14. மருத்துவர் ப்ருனோ!

  //வாக்சைன்கள் மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும்தான் ஆதாயமானது, ஏனெனில் மேலும் நோயாளிகளை அது உருவாக்குகிறது என்று எங்கோ படித்ததன் அர்த்தம் இப்போது நமக்கு புரிகிறது.//

  இந்தவரிகள் கூட பதிவில் எடுத்தாளப்பட்ட கட்டுரையில் இருந்தது தான். இங்கே இந்தியச் சூழ்நிலையில், இது எவ்வளவு விபரீதமாகப் பொருந்துகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

  ReplyDelete
 15. //என்னுடைய அனுபவத்தில், பலவிதமான மருத்துவ முறைகளின் பயனை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். சித்தர்கள் வைத்திய முறையில் கொச்சுவீரம் என்ற எரிமலைக் குழம்பு என்று சொல்லப்படுவதில் இருந்து பாதரசம் எடுக்கப்படுவதையும், மருந்துகூட்டப்படுவதையும் நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.//

  //இங்கே மதுரையில் சித்தராஜ சுவாமிகள் என்றழைக்கப்பட்ட சித்தர் ஒருவர், அலோபதி வைத்தியத்தால் கைவிடப்பட்ட பல பேருடைய வியாதிகளைக் குணப்படுத்திய வைத்தியத்தை நேரடியாகப்பார்த்திருக்கிறேன்.//
  என்ன நோய் என்று கூறினீர்கள் என்றால் அந்த நோயுடன் யாராவது நோயாளி வந்தால் பரிந்துரைக்க வசதியாக இருக்கும்

  // அதே மாதிரி, ஹோமியோபதி, இயற்கை வைத்திய முறைகளில், பக்க விளைவுகள் ஏதுமில்லாமல், அலோபதி வைத்தியத்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியாத கோளாறுகளைச் சரி செய்ததையும் பார்த்திருக்கிறேன்.//
  என்ன நோய் என்று கூற வேண்டுகிறேன்

  ReplyDelete
 16. //
  இதற்கு என்ன அர்த்தம்? நீங்கள் விரும்புகிறபடி ஆரம்பித்தால் தான் அது ஆரோக்கியமான விவாதமா?//

  இல்லை

  பொதுவாக முன்முடிவு எதுவும் இல்லாமல் ஆரம்பிக்க வேண்டும்

  பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து அன்மையின் கண்டுபிடிக்கப்பட்டது

  எனவே பத்தாண்டுகள் முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட எந்த மருந்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்

  அன்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்து என்பதால் நீங்கள் கேட்ட கேள்விகள் விமர்சிக்கப்பட்டன

  --

  ஒரு மூன்று மாத குழந்தையை காட்டி அதனால் ஓட முடியவில்லை என்று குற்றம் சாட்டுவது என்ன நியாயம்

  ReplyDelete
 17. //இதெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதா, ஆதாரம் இருக்கிறதா என்பது தான் கேள்வியாக வரும். பாரம்பரிய வைத்திய முறைகளை ஆவணப்படுத்தவும், ஆராய்ச்சிக்குட்படுத்தவும், இங்கே இந்தியாவில், தமிழகத்தில் அரசு என்ன செய்திருக்கிறது?//

  அலோபதியை ஆவணப்படுத்துவற்கு என்ன செய்திருக்கிறதோ அதற்கு அதிகமாகவே செய்திருக்கிறது !!!

  // எந்த அளவுக்கு உள்ளூர்த் தொழில் அதிபர்கள், அல்லது இதில் ஈடுபட்ட வைத்தியர்களே அதற்கான முனைப்பில் பங்கு கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போதே ஏன் அவ்வளவாக இல்லை என்பதன் விடையும் இருக்கிறது.//

  :) :)

  //அலோபதி வைத்தியத்தில், ஆவணப்படுத்தப் படுகிறது, ஆராய்ச்சி தொடர்ந்து செய்யப்படுகிறது. உண்மைதான்! மருந்துக் கம்பனிகளின் லாப வேட்டைக்குத் தகுந்த மாதிரி, manipulate செய்வதும் நடக்கிறது.//

  மருந்து நிறுவனங்களை பொருத்த வரை அலோபதி, சித்தா வித்தியாசம் இல்லை என்று ஏற்கனவே விளக்கியாகிவிட்டது.. படித்து பாருங்கள்

  // இங்கே பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி விவகாரத்தில் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் அதைத் தான் செய்தது..

  போலி மருந்து என்ற குறியீட்டுச் சொல்லை வைத்துத் தேடிப் பாருங்கள். இந்தப் பதிவு, அந்த முந்தையபதிவுகளின் தொடர்ச்சியாகவே, ஒரு சிந்தனையாகவே எழுதப்பட்டவிதம் புரியும்.//

  ////ஆக பன்றிக்காய்ச்சல் தடுப்பு ஊசி குறித்து நீங்கள் எழுப்பிய அனைத்து வினாக்களும் நீங்கள் ஆதரிக்கும் பாரம்பரிய மருந்துக்களுக்கும் பொருந்துமே//

  தவறு.//

  ஏன் தவறு என்று விளக்க முடியுமா... விளக்குங்கள் ஏற்றுக்கொள்கிறோம்

  // இந்த வினாக்கள் என்னுடையதல்ல.//

  சரி. ஆனால் அனைத்து வினாக்களும் நீங்கள் ஆதரிக்கும் பாரம்பரிய மருந்துக்களுக்கு பொருந்துகிறது !!

  // இந்த வினாக்கள், நான் பாரம்பரிய வைத்திய முறைகளை ஆதரிப்பதற்காக இட்டுக் கட்டியவையும் அல்ல!.//
  பிறகு எதற்காக !!!

  //ஜெர்மனி அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்து ஆய்வு அமைப்பில் பணியாற்றும் டாக்டர் லுத்விக் இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பி, அதனை மருத்துவர்கள் பயன்படுத்தவேண்டாம், இதில் பிரச்சாரம்தான் அதிகமுள்ளது, பிரச்சாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் விஞ்ஞான சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாதது என்று அதிர்ச்சியூட்டியுள்ளார்.//

  சரி

  இதே வினாக்களை நீங்கள் குறிப்பிடும் பாரம்பரிய மருந்துக்களுக்கு பொருத்தி பாருங்கள்

  அதிர்ச்சி அடைவீர்கள்

  //நேச்சுரல் நியூஸ் இணையத் தள ஆசிரியர் மைக் ஆடம்ஸ் இது குறித்து 10 கேள்விகளை தன் இணையத் தளத்தில் எழுப்பி அதற்கு விமர்சன ரீதியான விடைகளையும் அளித்துள்ளார்.///

  இதே வினாக்களை நீங்கள் குறிப்பிடும் பாரம்பரிய மருந்துக்களுக்கு பொருத்தி பாருங்கள்

  அதிர்ச்சி அடைவீர்கள் !!

  //இந்தவரிகள் கூட பதிவில் எடுத்தாளப்பட்ட கட்டுரையில் இருந்தது தான். இங்கே இந்தியச் சூழ்நிலையில், இது எவ்வளவு விபரீதமாகப் பொருந்துகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?//

  கண்டிப்பாக மறுக்கிறேன்

  இங்கு பார்க்கவும் http://www.payanangal.in/2009/08/blog-post_27.html

  ReplyDelete
 18. நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறேன் :) :)

  ReplyDelete
 19. மருத்துவர் ப்ருனோ!

  மறுபடியும் மற்றவர்கள் அனேகமாக ஆர்வத்தை இழந்து விட்ட இந்தப்பதிவில் மறுபடி பார்த்துவிட்டு, சில கேள்விகளை எழுப்பியிருப்பதற்கு முதலில் நன்றி!

  சித்தராஜ சுவாமிகளைப் பற்றி, அவரது மருத்துவ முறை, அவரால் பயன்பெற்றவர்களைப் பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் இங்கே மதுரையில் வெள்ளியம்பலத் தெருவிலும், ஞாயிற்றுக் கிழமைச் சந்தையில் நாட்டு மருந்துகளை விற்பனை செய்கிற பலரும், மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் உள்ள பல வணிகர்களும் (அதில் பலர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) இன்னமும் இருக்கிறார்கள்.

  சங்கரன் கோவிலில் இருந்து தென்காசி போகிற வழியில், பாம்பாட்டிச் சித்தர் கோவில், சித்தராஜ சுவாமிகள் எழுப்பியது, அந்தப்பக்கம் உள்ள மக்களிடம் கேட்டால் கூட கொஞ்சம் தகவல்கள் அதிக விவரத்துடன் சொல்வார்கள்.

  நெருங்கிய உறவினர் ஒருவர் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் என்னுடைய நண்பர் ஒருவர், அவர் ஒரு அலோபதி மருத்துவர் தான், அறிமுகம் செய்து சித்தராஜ சுவாமிகளை பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் வெள்ளியம்பலத் தெருவில் சந்தித்தேன். எனது உறவினருக்கு மருந்து கிடைக்கவில்லை, ஆனால் வேறு அனுபவங்கள் கிடைத்தன.அவருடன் எனக்கேற்பட்ட அனுபவம் கொஞ்சம் ஆன்மீகமானது, அந்தரங்கமானது.

  இந்தப்பக்கம் நண்பர்கள் இருந்தால், அவர்கள் வழியாகவே விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 20. ஐயா, நான் சித்தராஜ சுவாமிகளை பற்றி எதுவுமே கூறவில்லை

  நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்டிருந்தேன்

  :) :)

  ReplyDelete
 21. உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன்!

  //பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து அன்மையின் கண்டுபிடிக்கப்பட்டது.எனவே பத்தாண்டுகள் முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட எந்த மருந்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.அன்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்து என்பதால் நீங்கள் கேட்ட கேள்விகள் விமர்சிக்கப்பட்டன
  ஒரு மூன்று மாத குழந்தையை காட்டி அதனால் ஓட முடியவில்லை என்று குற்றம் சாட்டுவது என்ன நியாயம்?//

  மருத்துவர் ப்ருனோ! உங்களுடைய தர்க்கம் எனக்கு உண்மையிலேயே புரியவைல்லை! தடுப்பு ஊசி புதிதாக இருக்கலாம், ஆனால் கேள்விகளே, அந்த மருந்தில் இருக்கும் ஸ்க்வாலீன் என்ற உபவேதிப் பொருளைத் தொட்டுத் தான் எழுந்தன. Gulf War Syndrome என்ற கோளாறுக்காக அமெரிக்க ராணுவ வீரர்களுக்குப் போடப்பட்ட தடுப்பூசியில் இந்த உபவேதிப் பொருள் இருந்தது, பல மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. அதைத் தொட்டு எழுந்த கேள்விகளுக்கு ஆதாரமாக,

  //பேராசிரியர் ஆர்.எஃப். கேரி என்பவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ஸ்க்வாலினுக்கும் கல்ஃப் வார் சின்ட்ரோமுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். இதனால் 2004ஆம் ஆண்டு ஃபெடரல் நீதிமன்றம் இதனை ராணுவத்தினருக்கு பயன்படுத்த தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தின் அபாயம் என்ன? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள டாக்டர் ஆண்டர்ஸ் ப்ரூன் லார்சென் என்பவர் பேன்டெம்ரிக்சில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்க்வாலீன் என்ற இந்த துணை மருந்துப் பொருள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

  அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வளைகுடாப்போருக்கு முன்பும் பின்பும் போடப்பட்ட ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி மருந்தில் ஸ்க்வாலீனின் அளவு 100 கோடி மைக்ரோகிராம் நீர் அளவில் 34.2 மைக்ரோ கிராம் என்று இருந்தது.

  ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தான பேன்டெம்ரிக்சில் 0.5 மில்லிக்கு 10.68 மில்லி கிராம் ஸ்க்வாலீன் சேர்க்கப்பட்டுள்ளது. இது கல்ஃப் வார் சின்ட்ரோம் என்ற நோயை உருவாக்கிய ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தில் உள்ள ஸ்க்வாலீன் அளவைக்காட்டிலும் 10 லட்சம் மடங்கு அதிகம் என்று கூறுகிறார். //

  அமெரிக்க நடைமுறைகள் கொஞ்சம் கடுமையானவை. அதையும் மருந்து நிறுவனங்கள் எப்படி வளைக்கின்றன என்பதும் கொஞ்சம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப் படவேண்டியவை. அமெரிக்க இராணுவத்தினருக்குத் தான் பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்தது! மற்றவர்களுக்கு இல்லையே?

  ReplyDelete
 22. மருத்துவர் ப்ருனோ சொன்னது:
  //நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறேன் :) :)//
  பதில் சொல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!

  //
  "This is without question one of the scariest books I’ve read in recent times. Ethan Watters, a San Francisco-based journalist and author who explores social trends for publications such as Wired and The New York Times Magazine, has written a chilling book on how multinational pharmaceutical companies export ideas about mental illnesses common in the US to make a killing from marketing the drugs for such conditions in countries which had no concept of such things as depression.

  Mental illnesses popular in the US, such as post-traumatic stress disorder (PTSD), anorexia and depression, in particular, are now spreading across the world with the speed of contagious diseases, says Watters, who went about investigating why this was happening although different cultures view mental illnesses through a complex prism of religious, scientific and social attitudes. In short, the West, primarily the US, has been homogenising the way the world goes mad."

  Even if you’ve read The Truth About the Drug Companies, The $800-Million Pill or Selling Sickness, Watters’ book comes as an eye-opener. Among the more disturbing disclosures is his detailing of GSK’s dishonesty on Paxil. In-house assessments of the drug that have come to light through lawsuits and government inquiry reports show the drug has not been effective. He quotes a company memo that reported that results of Paxil were “insufficiently robust” and urged GSK to “effectively manage the dissemination of these data in order to minimise any potential commercial impact”.

  பிசினெஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் சில காலத்துக்கு முன்பு வியாதிகளை ஏற்றுமதி செய்து கொழுத்த லாபம் சம்பாதிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களைப் பற்றி எழுதப் பட்ட இன்னொரு புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் இது. ராபின் குக் எழுதிய The Fever புத்தகத்தைத் தொட்டுப் பேசிய இந்தப் பதிவில் சொன்னது இது.

  http://consenttobenothing.blogspot.com/2010/05/blog-post_22.html

  கிளாக்சோ ஸ்மித் கிளீன் நிறுவனம் எப்படி Exporting disease, making a killing என்ற தலைப்பில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளிவந்த புத்தக விமரிசனத்தை படிக்க

  http://www.business-standard.com/india/storypage.php?autono=395350
  இந்த நிறுவனத்தின் பிழைப்பே இப்படி இருக்கும்போது, ஐயோ இது மூன்று மாதக் குழந்தை தானே! இதைப் போய்க் குற்றம் சொல்வார்களா என்ற உங்கள் கேள்வியில் இருக்கும் உருக்கம் வலுவிழந்து போய்விடுகிறதே!

  இன்னும் பதில் சொல்லப்பட வேண்டிய கேள்விகள் என்னென்ன?

  ReplyDelete
 23. கிருஷ்ணமூர்த்தி

  என் கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்கவே இல்லை :) :)

  ReplyDelete
 24. மருத்துவரே!

  விடை சொல்வதற்குத் தகுதியுள்ள கேள்விகள் எதையும் நீங்கள் எழுப்பிய மாதிரி எனக்குத் தோன்றவில்லையே!ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் மாதிரித் தான் உங்கள் பின்னூட்டங்கள், பதிவுகள் இருந்தன என்பதால், வாக்குவாதத்தை அந்த எல்லையுடனேயே நிறுத்திக் கொண்டாயிற்றே!

  நீங்களும் நானும் எழுதிய பதிவுகள், பின்னூட்டங்களைப் பார்க்கிறவர்கள் தாங்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்று ஏற்கெனெவே சொன்னதை மறுபடி நினைவுபடுத்துகிறேன்.

  ஜெயமோகன் தளத்தில், விஜய் டிவி நீயா நிகழ்ச்சியில், டாக்டர்ஸ் வெர்சஸ் பப்ளிக் என்ற நிகழ்ச்சியின் வீடியோத் துண்டுகள் கிடைக்கின்றன.இந்தப் பின்னூட்டத்தைப் பார்வையிடுகிறவர்கள் அதையும் ஒரு எட்டு பார்க்கும் படி வேண்டுகிறேன்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!