எல்லா பொறுப்பும் இறைவனுக்கே......!தினமணி தலையங்கம் முன்வைக்கும் சில கேள்விகள்!!


'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்கிற பழமொழி கச்சிதமாகப் பொருந்துவது பாகிஸ்தானுக்கா இல்லை அமெரிக்காவுக்கா என்று சர்வதேச அளவில் ஒரு பட்டி மன்றமே நடத்தி விவாதித்தாலும்கூட முடிவுகாண முடியாது.

அமெரிக்கா ஒருபுறம் மும்பைத் தாக்குதலிலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதிலும் பாகிஸ்தானுக்குப் பங்கு இருப்பதாகவும், குற்றவாளிகளை பாகிஸ்தான் அடையாளம் கண்டு கண்டித்தே தீர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இன்னொருபுறத்தில், தனது ஆப்கானிஸ்தான், ராணுவ நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் துணையை நாடுகிறது. அதனால் நட்புப் பாராட்டுகிறது.

பாகிஸ்தானும் சரி, அமெரிக்காவின் நட்பு நாடாக ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளில் முழுமையான ஈடுபாட்டுடன் உதவுவதாகக் கூறிக் கொள்கிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. தலிபான்களுக்கும், தீவிரவாத அமைப்பான அல்-காய்தாவுக்கும் மறைமுகமாக எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறது.

அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைகிறதோ இல்லையோ, பாகிஸ்தானின் இரட்டை வேடத்தைக் கலைத்துவிட்டிருக்கிறது "விக்கி லீக்ஸ்' இணையதளம் அம்பலப்படுத்தி இருக்கும் ஆவணங்கள். அமெரிக்க சரித்திரத்தில், ஏன் உலக சரித்திரத்தில் என்றுகூட வர்ணிக்கலாம், வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய ராணுவ ரகசியக் குறிப்புகள் அமெரிக்காவின் பலவீனங்களையும், பாகிஸ்தானின் சதிகளையும் அம்பலப்படுத்தி இருக்கின்றன.  


சுமார் 90,000 வெவ்வேறு செய்திக் குறிப்புகளும், ரகசியச் செய்திப் பரிமாற்றங்களும், புலனாய்வுத் துறையின் அவ்வப்போதைய தகவல்களும், ராணுவச் செயல்பாடுகள் பற்றிய ரகசியங்களும் இந்த ஆவணங்களில் காணப்படுகின்றன.

நேட்டோ அமைப்பின் சர்வதேசப் படைகள், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன. அமெரிக்காவின் தலைமையில் நடைபெறும் இந்தத் தீவிரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக எல்லாவித உதவிகளையும் அளிக்க முன்வந்திருப்பதுடன், ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் நேட்டோ படைகள் வந்து இறங்கவும், தளவாடங்களை எடுத்துச் செல்லவும் உதவவும் செய்கிறது.

அமெரிக்காவின் கூட்டாளியாகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான் தனது ஒற்றர்களை ரகசிய இடங்களில் தலிபான் தீவிர வாதிகளைச் சந்திக்க அனுமதிப்பது, அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகளை எதிர்கொள்ளத் தீவிரவாத அமைப்புகளைத் தயார் செய்வது, தாக்குதல் நடத்தவும் சதித் திட்டங்களைத் தீட்டுவது என்று மறைமுகமாகச் செயல்படுவது இணையதளத்தின் மூலம் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க அதிகாரிகள் எந்தவிதத் தீவிரவாதத் தாக்குதல்களுடனும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு இருக்கும் நேரடியான தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிந்ததில்லை. ஆனால், 2008 ஜூலை மாதம், அமெரிக்கப் புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ.வின் துணைத் தலைவர் ஸ்டீபன். ஆர். கேப்ஸ், காபூலிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மீது நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.யின் நேரடி உதவி இருந்ததை ஆதாரங்களுடன் பாகிஸ்தானிய அதிகாரிகளுக்குக் காட்டி அவர்களது கருத்தைக் கேட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

சர்வதேசத் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர் என்று அமெரிக்காவால் இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்குப் பரிந்துரைக்கப் பட்டிருப்பவர் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஹமீத் கல் என்பவர். 1987 முதல் 1989 வரை, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுடன் கரம்கோத்து ஆப்கானிஸ்தானியத் தீவிரவாத அமைப்புகளான அல்-காய்தா மற்றும் தலிபான்களுக்கு சோவியத் படைகளுக்கு எதிராகப் போராடப் பணமும் தளவாடங்களும் அமெரிக்கா தந்து உதவிய காலகட்டத்தில் ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக இருந்தவர்தான் இந்த லெப். ஜெனரல் கல்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் லெப். ஜெனரல் கல் இப்போதும் செயல்பட்டு வருவதை வெளியாகி இருக்கும் இணையதளத் தகவல்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. தான் இப்போது ஓய்வு பெற்று நிம்மதியாக வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் கல் இப்போதும்  தனது ஐ.எஸ்.ஐ. சகாக்களுடன் தொடர்பில் இருப்பதும், ராணுவத் தலைமையிடத்தில் கலந்தாலோசனைக்கு அழைக்கப்படுவதும், பாகிஸ்தானிய ராணுவத்துக்கும், அதிகாரிகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புக்குப் பாலமாகச் செயலாற்றுவதும் இப்போது உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.

ஜெனரல் கல்லுக்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த மனிதராகப் பாகிஸ்தானிய உளவு நிறுவனத்தின் தலைமைப் பதவியை வகித்தவர் ஜெனரல் பர்வீஸ் கயானி. இவர்தான் இப்போதைய பாகிஸ்தானிய ராணுவத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர். முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வீஸ் முஷாரபுக்கு நெருக்கமான இவருக்கு சமீபத்தில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 


ஜெனரல் கயானி ஐ.எஸ்.ஐ. தலைவராக இருந்த 2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்ததுதான் இப்போது வெளியாகி இருக்கும் ரகசியக் குறிப்புகள். தனது ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பக்கபலமாக நம்பிக் கொண்டிருக்கும் ஜெனரல் பர்வீஸ் கயானி தீவிரவாதிகளுக்கு உதவிய தகவல்கள் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறதே, அமெரிக்கா இப்போது என்ன செய்யப் போகிறது?

பாகிஸ்தானின் நயவஞ்சகமும், நாடகங்களும் அம்பலமாகி இருக்கின்றன. மும்பைத் தாக்குதலிலும், இந்தியாவில் நடந்த வேறு பல தீவிரவாதத் தாக்குதல்களிலும் தொடர்புடைய தீவிரவாதிகள்மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள ஏதாவது நொண்டிச் சாக்கை ஏற்படுத்திக் கொள்ளும் பாகிஸ்தான் வருந்துவதாகவும் தெரியவில்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை. அமெரிக்காவும் "நாயர் பிடித்த புலிவால்' கதையாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவும் வழியில்லாமல், அதனால் பாகிஸ்தானைத் தட்டிக் கேட்கவோ, தட்டி வைக்கவோ துணிவில்லாமல் தவிக்கும் நிலை!

இந்தியாவின் நிலைமைதான் அதைவிடப் பரிதாபம்! தகுந்த ஆதாரங்கள் கிடைத்தும், நியாயம் கேட்கும் தைரியமும், தெம்பும் நமக்கு இல்லை. 


பாகிஸ்தானைச் சகித்துக் கொள்ளவும் முடியாது. பகைத்துக் கொள்ளவும் கூடாது என்கிற தர்ம சங்கடம்.

இந்தியா அமெரிக்காவை நம்புகிறது, பாகிஸ்தானின் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு. அமெரிக்கா பாகிஸ்தானை நம்புகிறது, ஆப்கானிஸ்தானில் தான் நடத்தும் தீவிரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்துக்கு உதவுவதற்கு. பாகிஸ்தான் தீவிர வாதிகளை நம்புகிறது தன்னை நிறுத்திக் கொள்ள. இந்த இடியாப்பச் சிக்கலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது இணைய தளம் வெளிக்கொணர்ந்திருக்கும் ரகசியக் குறிப்புகள்.

உலகை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
எல்லா பொறுப்பும் இறைவனுக்கே!

தினமணி நாளிதழில் வெளியாகியிருக்கும் இந்தத் தலையங்கத்தைப் படித்த பிறகு, நாட்டு நலனில் அக்கறை உள்ள எவரும் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.

ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் நம்பர் இரண்டு-காங்கிரசோடு, கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிற கட்சிகளும் சேர்ந்து எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் ஒரு கோமாளித்தனமான கொள்கையைக் கடைப்பிடித்துக் கொண்டு இருப்பதை, ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் உறுதிபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

பாகிஸ்தானுடன் உருப்படியான பேச்சுவார்த்தை நடத்துகிற சூழ்நிலையோ, பேச்சுவார்த்தையை அர்த்தமுள்ளதாக நடத்த சாமர்த்தியமோ இல்லாத நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள். அவமானப்படுத்தப் பட்டுத் திரும்புகிறார்கள்.

முதுகெலும்பு இல்லாத, தொடை நடுங்கிகளைக் கொண்ட ஒரு அரசியல் கட்சி காங்கிரஸ் என்பது இந்த அறுபத்துமூன்றாண்டுகளில்- இடையில் மிகச் சிறிய காலமே ஆட்சி செய்தாலும், ஆண்மையுடன் ஆண்ட சாஸ்திரி ஆட்சிக்காலம் நீங்கலாக,ஒவ்வொரு நாளுமே நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனையது உயர்வு


ஒரு சமுதாயமாகவோ, இனமாகவோ, தேசமாகவோ உயர்ந்து நிற்க வேண்டுமென்றால், அதற்கு அடிப்படையாக என்ன வேண்டும் என்பதைச் சொல்கிற குறள் இது. காங்கிரஸ் கட்சியை, அதன் கூட்டணிக் கட்சிகளை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை. இந்தக் கையாலாகதவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கிறோமே, நாம் எப்படிப்பட்ட கையால் ஆகாதவர்களாக இருக்க வேண்டும்!

"எல்லாப் பொறுப்பு
ம் இறைவனுக்கே" தானா,,,,,,,,,,,,,,?!
 

நமக்கு ஒன்றுமே இல்லையா?

கொஞ்சம் யோசித்துத் தான் பதில் சொல்லுங்களேன்!
7 comments:

 1. Sastri resigned his railway minister post so that he can get some other big post. He got that didn't he.

  He is just another ...

  ReplyDelete
 2. திரு.சக்ரபாணி!

  நேருவையும், வாரிசுகளையும் பார்த்துப் புளித்துப்போனதில், இடையில் சிறிதுகாலமே பிரதமராக இருந்தாலும் ஆண்மையுடன் எழுந்து நின்ற ஒரு மாமனிதரை நீங்கள் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

  1951 இல் மகபூப்நகர் என்ற இடத்தில் ஒரு ரயில் விபத்து நடந்து நூற்றுப்பன்னிரண்டு பேர் மரணமடைந்தார்கள். சாஸ்திரி, அப்போதே ராஜினாமா செய்ய விரும்பினார். நேரு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்று மாதங்கள் கழித்து, அரியலூரில் இன்னொரு ரயில் விபத்து நடந்து 144 பேர் மரணமடைந்தார்கள். இங்கே தமிழ் நாட்டில், திமுக, "அரியலூர் அளகேசா! ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?" என்று போஸ்டர் அடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. இந்தத் தரம், நேரு சாஸ்திரியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்.

  /While speaking in the Parliament on the incident, the then Prime Minister, Jawaharlal Nehru, stated that he was accepting the resignation because it would set an example in constitutional propriety and not because Shastri was in any way responsible for the accident. Shastri's unprecedented gesture was greatly appreciated by the citizens./

  அந்த நாட்களில் நேருவை மீறி எதுவும் நடக்கவில்லை என்பதும், நேரு ஆரம்பித்து வைத்த கோமாளித்தனங்களில், இது மாதிரி அமைச்சர்கள் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதும் ஒன்று என்பதை, இப்போதைய ஐ.மு. கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 இல் ரயில்வே அமைச்சராக இருக்கும் மம்தா பானெர்ஜியின் பதவிக்காலத்துக்குள் எண்ணற்ற ரயில்வே விபத்துக்கள் தொடர்கதையாகி வருவதும், தார்மீகப் பொறுப்பு மட்டுமில்லை, அமைச்சராக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைக் கூட இப்போதைய அமைச்சர்கள் எவரும் நிறைவேற்றுப்வதில்லை என்கிற நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்!

  நாடகமாடியது சாஸ்திரி அல்ல! சாஸ்திரி எப்படி பிரதமராக இருந்த காலத்தில், ஆண்மையுடன் எழுந்து நின்றார் என்பதை, சென்ற வருடம் அக்டோபர் மாதப் பதிவுகளில் இந்திய சீனப் போரைப் பற்றி, அடுத்து வந்த இந்திய பாகிஸ்தான் போரைப்பற்றி எழுதியவைகளில் சொல்லியிருப்பதையும் நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

  ReplyDelete
 3. // கொஞ்சம் யோசித்துத் தான் பதில் சொல்லுங்களேன்! //
  யோசிக்கையில் மிஞ்சுவது தலை வலி மட்டும் தான்! பிரச்சனைகளை பிரச்சனைகளாக அனுகாமால் தனக்கு என்ன கிடைக்கும் என்று இலாப நட்ட கூட்டணி கணக்குப் பார்த்து அணுகுவது தான் அனைத்திற்கும் காரணமென்று தோணுகிறது...
  /
  / "எல்லாப் பொறுப்பும் இறைவனுக்கே" தானா,,,,,,,,,,,,,,?!
  நமக்கு ஒன்றுமே இல்லையா? //
  விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருப்பது தான் நீங்களும் நானும் செய்ய முடிவது ..!?

  அப்புறம் ,
  இன்ஷா அல்லாஹ்
  http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html
  நீங்கள் பின்னூட்டினால் மகிழ்வேன் !

  ReplyDelete
 4. வாருங்கள் நியோ!

  ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டுதான் இருக்கவேண்டும் என்பது சரிதான்!

  இன்ஷா அல்லா ......!

  உங்களுக்குக் கவிதை மாதிரி ஒன்றைப் பின்னூட்டமாக எழுதியாயிற்று!

  ReplyDelete
 5. வரவேற்பிற்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் தோழர் !
  சிறு பிழை ...
  நான் உங்களிடம் குறிப்பிட்டிருந்தது "இன்ஷா அல்லாஹ்" என்ற கவிதை முயற்சி குறித்து.கேரளா பேராசிரியர் மீது அடிப்படைவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து எழுதப்பட்ட ஒன்று.நீங்கள் சுட்டியை பார்க்க தவறி விட்டீர்களென நினைக்கிறேன்.
  http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html
  சிரமப்படுத்துகிறேனா?!

  ReplyDelete
 6. சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே எழுதிய பதிவு ஒன்று உங்களுடைய கேள்விக்குப் பதில் சொல்வதாக இருக்கிறது!

  http://consenttobenothing.blogspot.com/2009/08/blog-post_11.html

  ReplyDelete
 7. சுட்டி வழியே படித்தேன் !
  " மதங்களுடைய உபயோகம் முடிந்து விட்டது!"
  மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரரே! ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான மதத்தையும் கடவுளையும் புனித புத்தகத்தையும் தனது சொந்தத் தேடலின் வழியே தானே உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதே எனது அவா.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!