"அந்த நாட்களில், தி க ஆதரவாளரான ஒரு வழக்கறிஞர், அவருடைய இளவல்கள், எங்களைப்போல இடதுசாரிச் சிந்தனை உடையவர்களோடு, நன்கு பழகிக் கொண்டிருந்தார்கள், அல்லது அப்படிக் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்றும் கூட சொல்லலாம். வாரத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட, வழக்கறிஞருடைய வீட்டில், பேசப்போவோம். கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் நடந்த அந்தக் கூத்தை இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும், கொஞ்சம் வேடிக்கையான அனுபவமாகவே இருக்கிறது.
மனிதன் சினிமாவில் வருகிற கோர்ட் சீனில் காண்பிப்பதுபோலவே, தன்னுடைய வாதத் திறமை இருப்பதாக எங்களை நம்பச் செய்யப் படாத பாடு படுவார். கருத்துப் பரிமாற்றம் என்று சொன்னேன் அல்லவா, அது வெறும் வார்த்தை தான்! அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார், எதிராளி என்ன தான் சொல்கிறார் என்று ஒரு பொழுதும் கவனித்ததில்லை. நாங்களும், அவரை மாதிரி என்று சொல்ல முடியாது, அவர் அந்தக் கலையில் சகல கலா டாக்டர் பட்டம் வாங்கியவர், எங்களுடைய கருத்தை எடுத்து வைத்து விட்டதாக ரெகார்ட் பண்ணி விட்டு ஜமா கலைந்து விடும், அடுத்த வாய்தா வருகிறவரை!
இந்த வழக்கறிஞரோடு என்னுடைய உறவும் நட்பும் கொஞ்சம் அதிக நாள் நீடித்தது என்று சொன்னால், மேலே சொன்னது மாதிரி கருத்துக் களம், பரிமாற்றம் என்று சொன்னேனே, அந்த மாதிரி வார்த்தை அலம்பல்களினால் அல்ல. எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஒரு வெறித்தனமான காதலும், நேரமும் இருந்த நாட்கள் அவை. அவரிடம் நிறைய நூல்கள் இருந்தன. எந்தப் புத்தகம் கடைக்கு வந்தாலும், உடனே வாங்கி விடுவார்.பல்வேறு தலைப்புக்களில் அவரிடம் இருக்கும் நூல் சேகரம் கொஞ்சம் பெரிதுதான். இப்படி ஒரு புத்தகப் புதையல் இருக்கும் இடத்தை யாராவது தவற விடுவார்களா என்ன!
எனக்குத் தேவைப்படுகிற புத்தகங்களை, நான் தேடிப்போக வேண்டிய அவசியம் கூட இல்லாமல், அனுப்பி வைப்பார். அவரிடம் இல்லை என்றால், உடனே வாங்கியும் வைத்து விடுவார். பெரியாரைப் பற்றி, இவரிடமிருந்து தான், கொஞ்சம் ஆதாரங்களோடு கூடிய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறேன். அதே மாதிரி, மார்க்சீயச் சிந்தனைகள், மதக் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகள் என்று நூற்றுக்கணக்கான புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறார். எங்கே தகராறு வருமென்றால், திடீரென்று சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இதோ பாருங்கள் லெனின் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சில பத்திகளை அடிக்கோடிட்டு வைத்துக் காண்பிப்பார். அதை ஆதாரமாக வைத்துக் கொண்டே தான் பேசுவதையும் ஒருமாதிரி முடிச்சுப் போட்டுத் தன்னுடைய கருத்துப் "பரிமாற்றத்தை" வலுவாக ஊன்றி வைப்பார்!
இப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று வழக்கறிஞர், புத்தகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டும் போது எங்களுக்கு முதலில் கொஞ்சம் மயக்கம் வந்ததென்னவோ உண்மை! அப்புறம் கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்தது, குதிரையல்ல கழுதைதான் என்று தெரிந்தது என்று ஒரு கதை சொல்வார்கள் இல்லையா, அதே மாதிரி, வழக்கறிஞரும் மேற்கோளில் எப்படிப் புரட்டுகிறார் என்பது சீக்கிரமாகவே தெரிந்துபோய் விட்டது.
எப்படியென்றால் அந்தப் புத்தகத்தையே, எனக்குப் படிப்பதற்காகக் கொடுத்து அனுப்புவார் என்று சொன்னேன் இல்லையா, புத்தகத்தை முழுமையாகப் படிக்கும் போதே குட்டு உடைந்த தருணங்கள் வந்தது.
உதாரணத்திற்கு லெனின் எழுதிய புத்தகங்கள் பெரும்பாலானவை, அந்த காலகட்டத்தில் பரவலாக இருந்த அல்லது பரப்பப்பட்டு வந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களாகவே எழுதப்பட்டவை. லெனினுக்கு ஒரு பழக்கம், தன்னுடைய எதிராளி சொல்லும் ஒவ்வொரு கருத்தையும், முழுதாக எடுத்துச் சொல்லி, அதற்கு அப்புறம் எதிராளி எப்படி அதைத் தப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறார், தப்பாக வாதங்களைஎப்படி எடுத்து வைக்கிறார் என்பதை, ஒவ்வொன்றாக, ஆணித்தரமாக மறுக்கும் வகையிலேயே எழுதுவது. ஆக, லெனின் எழுதிய ஒரு நூலை நீங்கள் வாசிக்கப் புகும் போது, எதிர்க்கருத்தாக எவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு விட முடியும்.
நம்முடைய பகுத்தறிவு வழக்கறிஞர், அப்படி லெனின் எடுத்து வைக்கிற எதிராளியின் கருத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, பாருங்கள் லெனின் இங்கே இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதம் செய்வது தொடரும்போது, நாங்கள் ஐயா, அதற்கு அப்புறம் லெனின் இதை எப்படி மறுத்திருக்கிறார் என்பதையும் பாருங்கள், தொடர்ந்து தவறாகவே லெனினை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னபிறகும் கூட, அவர் தன்னுடைய வாதத் திறமையை, பாணியைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவே இல்லை.
அவர் மட்டுமல்ல, பகுத்தறிவு வாதம் பேசுகிற நிறையப் பேரும் அதே பாணியைக் கடைபிடித்து வருவதும் புரிந்தது.பகுத்தறிவை அவர்கள் புரிந்து கொண்டிருக்கும் விதமும் புரிந்தது!
கொஞ்சம் ஒன்றைக் கவனித்துப் பாருங்கள், பெரியாரை மேற்கோள் காட்டுகிறவர்களாகட்டும், அல்லது இறக்குமதி செய்யப்பட்ட நாத்திகம் பேசுபவர்கள் ஆகட்டும், தாங்கள் மேற்கோள் காட்டும் விஷயம் உண்மை தானா, அதில் சொல்லப் பட்டிருப்பவை, இங்கே இப்படி அங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது என்று எடுத்துக் காட்டப் படும் இடங்களைத் தாங்களே ஒரு தரம் சோதித்துப் பார்த்து, அங்கே அப்படித்தான் சொல்லியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வதில்லை. அவர் மட்டுமல்ல, பகுத்தறிவு வாதம் பேசுகிற நிறையப் பேரும் அதே பாணியைக் கடைபிடித்து வருவதும் புரிந்தது.பகுத்தறிவை அவர்கள் புரிந்து கொண்டிருக்கும் விதமும் புரிந்தது!
யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது!
இவர்கள் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் மீது 'ஆன்மிகம்' பேசுபவர்களுமே கூட இந்தத் தவறைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.
இதுவும் ஒரு மீள்பதிவு தான்! பழைய நினைவுகளின் ஒரு பகுதிதான்! நான் ஏன் நாத்தியனாக இருக்கிறேன் என்று வால் பையன் சொல்வதற்கு எதிர்வினையாக எழுதப்பட்டதில்லை!
//தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.//
ReplyDeleteசோதித்து பார்ப்போம், உள்ளதை உரைப்போம். நாமாவது செய்வோமே.:))
ஆக, நீங்களும் கூட ஏதும் உரசிப்பார்த்து ஆத்திகனாக ஆனது போல் தெரியவில்லையே! வழக்கறிஞர் மீதுள்ள வெறுப்பால், ஆத்திகனாய் மாறியது போல் உங்கள் கட்டுரையின் தொனி இருக்கின்றது.
ReplyDeleteதொடர்க உங்கள் ஆன்மீகப் பயணம்!
அப்பவே படிச்சிருக்கேன்!
ReplyDelete//இதுவும் ஒரு மீள்பதிவு தான்! பழைய நினைவுகளின் ஒரு பகுதிதான்! நான் ஏன் நாத்தியனாக இருக்கிறேன் என்று வால் பையன் சொல்வதற்கு எதிர்வினையாக எழுதப்பட்டதில்லை! //
ReplyDeleteகிமூசார்,
என்னது இனிப்பகங்களில், இந்தப் பண்டம் அசல் நெய்யினால் செய்யப்பட்டது என்பதைத் தொடர்ந்து சின்னதாக 'அல்ல' என்றும் எழுதி இருப்பாங்களாமே.
வாருங்கள் சிவா!
ReplyDeleteஒவ்வொரு அனுபவமும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே வழங்கப் பட்டிருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
வாருங்கள் கும்மி!
இங்கே நீங்கள் சாதாரணமாகப் பார்க்கிற ஆத்திக நாத்திகங்களை உரசிப் பார்த்துவிட்டு, நான் அடுத்த கட்டத்திற்கு வந்தாகி விட்டது. அந்த வழக்கறிஞரை வெறுப்பதாக நான் எங்கே சொன்னேன்? அவர் சமீபத்தில் தான், இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் காலமானார், அவரை நினைத்துப் பார்த்த மீள் அனுபவமாகவே இது, அவ்வளவுதான்!
வால்ஸ்!
அப்பவே படிச்சதெல்லாம் சரி! நாமும் அந்த வழக்கறிஞர் மாதிரி, எது விஷயமோ அதைக் கோட்டை விட்டு விட்டு, எதெல்லாம் விஷயமில்லையோ அதில் நம்முடைய கவனத்தையும் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோமோ என்று யோசித்தபோது, மறுபடி வந்த நினைவு இது.
வாருங்கள் கோவி கண்ணன்!
அசல் நெய்யினால் செய்யப் பட்டதல்ல ரக நினைவு இல்லை இது! வால் பையன் தான் ஏன் நாத்திகனானேன் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து கொள்வதற்கு முன்னாலேயே எழுதப்பட்ட நினைவு இது. அவருடைய தற்போதைய பதிவுக்கும் இதிலேயே தெளிவான விடை இருப்பதனால் மட்டுமே அவருக்காக எழுதிய எதிர்வினை இல்லை என்று தான் சொன்னேன்.
Krishnamurthy,
ReplyDeleteWe have so many things in common except i don't have your writing skills
Please keep writing
திரு சக்ரபாணி!
ReplyDeleteதங்களுடைய அடையாளங்களை மறைத்து வைத்துக் கொண்டு வரும் பின்னூட்டங்களை ஏற்பதில்லை என்ற எனது முடிவசி இதற்கு முன் பலதரம் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும், நீங்கள் சொல்லியிருக்கிற ஒருபகுதிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது!
எனக்குப் பிடிச்சிருக்கு அல்லது பிடிக்கவில்லை என்று சொல்வதைப் போலத் தான், எழுதுவதும்! எழுத்தோ, பேச்சோ, ஒருவருக்கொருவர் தாங்கள் நினைப்பதைப் பகிர்ந்து கொள்கிற கருவி மட்டுமே!
அதனால் தான் சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்லி வைத்தார்கள்! அடுத்த முறை பின்னூட்டத்தில் உங்களைப் பற்றிய சிறுவிவரக் குறிப்பு அல்லது அடையாளத்துடன் சந்திக்க முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.