சண்டேன்னா மூணு! ஒவ்வொண்ணும் ஒரு விதமா...!சண்டேன்னா மூணு பதிவு கூட போடுங்க!
ஒரே பதிவா போடாதிங்க!


இப்படி இரண்டு வாரங்களுக்கு முன்னால் எழுதிய   சண்டேன்னா மூணு! தினமலர், இட்லி வடைக்குப் போட்டியாக இல்லை! இந்தப் பதிவில் நம்ம வால்பையன் வந்து ஒரு பின்னூட்ட வேண்டுகோள் அல்லது மிரட்டல், இல்லையென்றால் கெஞ்சல், (இளவட்டமாக இருந்தால், கொஞ்சல் என்று இன்னொன்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம் தான்!) இதில் ஏதோ ஒரு ரகத்தில் சொல்லிவிட்டுப் போனதற்காகவேஒரு முப்பது பக்கம் வருகிறமாதிரி பதிவெழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்! அப்புறம், அனாவசியமாக பதிவர்  உண்மைத் தமிழனோடு போட்டி போடுகிற மாதிரி ஆகி விடும் என்பதால் அந்த ஐடியாவைக் கைவிட்டேன். உண்மைத் தமிழனோ என்னடாவென்றால், நம்பவே முடியாத அளவுக்குக் குட்டிப் பதிவுகளாக இரண்டு பதிவுகள் எழுத ஆரம்பித்த ஆச்சரியத்தில், கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! அந்த ஆச்சரியத்தில், போன சண்டேக்கு மூணு எழுதணும்னு நினைப்பே வரலை!யோகி பட விமரிசனத்தில் இருந்துஉண்மைத் தமிழன்  பழையபடி நீளமாகவே ஆரம்பித்து விட்டார் என்பது தனி விஷயம்!

இது முன்னோட்டம் தான்!இனிமேல் தான் மூணு விஷயமே வருது!
ooo1ooo


பதிவர்கள் எல்லோருமே கீபோர்டைத் "தட்டுகிறவர்கள்" தான்! பிரபலப் பதிவராகும் போது திட்டுகிறவர்களாகவும் மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. திட்டு வாங்கியே பிரபலமாகும் யோகமும் சிலருக்கு அமைந்து விடுவது உண்டு! இப்படிப் பதிவுகளில் தட்டிக் கொண்டே பொட்டியையும் தட்டுகிற மென்பொருள் வல்லுனர்களுக்கு என்னென்ன வரலாம் என்று ஒரு சர்வே! இணையத்தில் படிச்சது தான்!
கொஞ்சம் நம்மூர்ச் சூழலுக்கேற்றபடி உல்டா என்பது உண்மை ஆனால் குரூரம், காப்பியடிப்பது என்பது தமிழ் சினிமாவின் ஏகபோகத் தலையெழுத்து, அதனால், மாற்றி எழுதப்பட்டது என்று வைத்துக் கொள்வோமா?

பொட்டியை நெசமாகவே தட்டுகிறவர்களில்...........
பத்து சதவீதப் பேருக்கு,கார்பல் டன்னல் சின்ட்ரோம் CTS என்கிற விரல் நரம்புகளில் ஏற்படுகிற வலி, இதய சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்..


இதைப் பற்றிய மருத்துவக் குறிப்புக்களுக்கான சுட்டி மேலேயேஇருக்கிறது.


இருபது சதவீதப்பேர், தங்களோடு வேலை செய்பவர்களையே திருமணம் செய்து கொள்கிறார்களாம்.

பாலும் பழமும் திரைப் படத்தில் எம் ஆர் ராதா பேசினதாலேயே உயிர் பெற்ற வசனம் இது."அப்படித்தான் இருக்கோணும்! டாக்டருங்கல்லாம் நர்சைத்தான் கட்டிக்கணும்! கொத்தனாருங்க சித்தாளைத் தான் கட்டிக்கணும்" இந்த வசன க்ளிப்பிங்க்ஸ் கைவசம் இல்லை, கிடைத்தாலுமே எப்படிப் பதிவில் இணைப்பது என்கிற பொட்டியை சரியாத் தட்டுகிற ஞானம் எனக்கில்லை. யாராவது கற்றுக் கொடுக்க முன்வந்தால், தயாராயிருக்கிறேன்!

முப்பது சதவீதம் பேர், சௌகரியப்படும் வரை சேர்ந்து வாழ்வது இல்லாவிட்டால் கழன்று கொள்வது என்ற மாதிரியான வாழ்க்கை முறையையே விரும்புகிறார்களாம்! இதற்கு முக்கிய காரணமாக சொல்லப் படுவது, அலுவலகம், வீடு என்று இரண்டு இடங்களிலுமே அதிகமான பொறுப்பைச் சுமக்கத் தயாராக இல்லாததுதான்!

கணவன் மனைவி இருவருமே மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் என்றால், அதில்  விவாகரத்து கோரும் சதவீதமும் சராசரியை விட அதிகமாக இருக்கிறதுவேலையில் ஏற்படும் மன உளைச்சலும், வேலை முடிந்தவுடன் எந்தவிதமான கவலையோ, பொறுப்போ இல்லாமல்இருக்கவேண்டும் என்ற தவிப்பும் தான் காரணமாக இருக்கிறது.

நாற்பதுசதவீதம், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இரண்டும் கெட்டானாகத் தவிப்பதை சொல்வோமில்லையா, அந்த மாதிரிவெளிநாட்டுக்குப் போய் அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகி விடலாமா அல்லது நம்முடைய ஊரே போதும் என்று தங்கி விடுவோமா என்ற இரண்டு தவிப்புக்களுக்கும் இடையில்  மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள்ஊசலாடிக் கொண்டே இருப்பது தான் பிரச்சினையின் தீவீரத்தை அதிகப் படுத்திக் கொண்டிருக்கிறது  என்பது தெரிந்துமே கூட, ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள்.

ஐம்பது சதவீதம், கையிருப்பு, சேமிப்பு என்று சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவுமே இல்லாதவர்கள்!

வருமானம் அதிகம் தான்! வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற கதையாக, வருகிற வருமானத்தில், நவீன வாழ்க்கை முறையே  பெரும்பகுதி அதிகச் செலவினமாகவே கரைத்து  விடுகிறது. சொந்த வீடு என்ற கனவை வளர்த்து ரியல் எஸ்டேட்காரர்கள், மிகக் குறைந்த வட்டியில் வீடு வாங்கக் கடன் என்று வங்கிகள் மிச்சம் மீதி இருப்பதையும் பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள்சேமிப்பு எங்கே இருக்கும்?

அறுபது சதவீத்ப்பேருக்கு, தாங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் ஊதியத்தைப் பற்றி பெருத்த அதிருப்தி இருக்கிறது.

இல்லையா பின்னே? 'கையிலே வாங்கினேன் பையிலே  போடலே-காசு போன இடம் தெரியலேஎன்று பாட்டுப் பாடிக் கொண்டிருப்பவர்களிடம் திருப்தி எப்படி இருக்க முடியும்?

எழுபது சதவீதம் பேர் எட்டு மணிநேரம் என்று இல்லை, அதற்கு மேலேயே அதிகமாக, தினந்தினம் உழைக்க வேண்டியிருக்கிறது! உலகம் முழுக்கப் பொதுவாக இருக்கும் விஷயம், இது ஒன்று தான்!

எண்பது சதவீதப் பேர், தங்களுடைய பெற்றோர், நெருங்கின சொந்தங்களிடம் இருந்து வெகுதூரத்திலேயே வாழ்கிறார்கள்.
  
தொண்ணூறு சதவீதப் பேர், தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி, வேலையில் அடிக்கடி குறிப்பிட்ட காலக்  கெடுவிற்குள் வேலையை முடித்தாக வேண்டும் என்று வரும் நிர்பந்தத்தைப் பற்றி, வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவது குறித்து, கிடைக்கும் ஊக்கத் தொகைகள், ஊதிய உயர்வு, வேலை நிமித்தமாக மேற்கொள்கிற பயணங்கள், பெண்டாட்டி, பிள்ளைகள், விசா கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், செய்து முடித்தே ஆக வேண்டிய பொறுப்புக்கள் என்று இப்படி எதிலுமே மகிழ்ச்சியாக இருப்பது இல்லை.

நூறு சதவீதமும் இந்த ஒன்றில் ஒன்று படுகிறது! வாழ்நாளில் ஒரு தடவையாவது, கம்ப்யூட்டர் முன்னால் வேலை செய்வதைத் தவிர வேறெந்த வேலையாவது அமைந்திருக்கக் கூடாதா என்று  பொட்டி தட்டுகிற தொழிலில் பரபரப்பாக இயங்கும் அத்தனை பேருமே ஏங்குகிறார்களாம்!


இதற்குமேல் விவரிக்க ஆரம்பித்தால், பிடுங்கிக் கொண்டிருக்கிற அத்தனை ஆணிகளையும் இங்கே எனக்கு அடிக்க வந்துவிடுவார்கள் என்று ..ச்சே ச்சே! பயமெல்லாம் ஒன்றுமில்லை!


ooo2ooo

பொட்டி தட்டுகிறவர்களைப் பற்றிப் பேசினதாலோ என்னவோ, இந்த மாட்டர் கூட, அவர்கள் மன நிலை, கவலைகளுக்குப் பொருந்தி வருகிற மாதிரித் தற்செயலாக அமைந்து போனது தான். இதில் சொல்லப்பட்ட அணுகுமுறை நம் எல்லோருக்குமே பொருந்துகிறது, பயன்படுவதாக இருக்கிறது என்பதால், என்றோ இணையத்தில் படித்ததை நினைவில் வைத்து மீண்டும் உங்களுக்காக:

தங்களுடைய ஆசிரியரைத் தேடி, அவருடைய பழைய மாணவர்கள் போனார்கள். ஆசிரியரிடம், ஒவ்வொருவரும், தங்களுடைய வேலைச் சுமை, குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், இப்படி ஒவ்வொன்றிலும் தாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை மனம் திறந்து விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் எழுந்தார். "பேசிக் கொண்டிருங்கள்! உங்கள் எல்லோருக்கும் காபி கலந்து எடுத்து வருகிறேன்" என்று சமையல் அறைக்குப் போனார். காபி தயாரித்துப் பெரிய குவளையில் நிரப்பி எடுத்துக் கொண்டார். பலவிதமான வண்ணப் பீங்கான் கோப்பைகள், வெண்கலக் கோப்பைகள், எவர்சில்வர் கோப்பைகள், வெள்ளிக் கோப்பைகள், பேப்பர் கோப்பைகள் என்று பலவிதமான கோப்பைகளை எடுத்து வந்து ட்ரேயில் வைத்தார்.

"
வேண்டுமான அளவு காபியை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று உபசரித்தார். முன்னாள் மாணவர்களும், ஆளுக்கொரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து, குவளையில் இருந்து காபியை ஊற்றிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தார்கள். "எங்கே நிறுத்தினேன்?" என்று கேட்டுக் கொண்டு ஒரு மாணவன் பேச ஆரம்பித்தான். ஆசிரியர் புன்னகையுடன், "அதற்கு முன்னால் நான் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது." என்றார்.

"
கொஞ்சம்  உங்கள் கோப்பையைக் கவனித்துப் பாருங்கள்! நீங்கள் செய்ய வேண்டி இருந்தது காபி குடிப்பது தான்! ஆனால் என்ன செய்திருக்கிறீர்கள் பாருங்கள்! காபியை விட, பளபளப்பாகத் தெரிந்த, உயர்த்தியாகப் பட்ட கோப்பைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தான் முக்கியமாக இருந்தது இல்லையா? சரி, நீங்கள் ஒரு கோப்பையைத் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் பார்வையும் கவனமும் அடுத்தவர் எடுத்துக் கொண்ட கோப்பை நான் எடுத்துக் கொண்டதைவிட உயர்த்தியா அல்லது கொஞ்சம் மட்டமா இப்படியே உங்களுடைய மனம் சஞ்சலிக்க ஆரம்பித்தது. நான் சொல்வது சரி தானா? இல்லையென்றால், சொல்லுங்கள்!"

அப்போது தான், மாணவர்கள், கோப்பையை எடுக்கும்போது, இருப்பதிலேயே உயர்த்தியாகத்  தென்பட்டதையே எடுத்துக் கொள்ள விரும்பியதையும், மற்றவர்கள் தன்னை விட உயர்த்தியான கோப்பையை எடுத்துக் கொண்டு விட்டார்களா என்பதைக் கொஞ்சம் ஆவலோடு பார்த்ததையும்இன்னொருத்தன் தன்னை விட உயர்த்தியான கோப்பை வைத்திருந்ததைப் பார்த்தபோது பொறாமைஏற்பட்டதையும்  வெட்கத்தோடு புரிந்து கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடியும் பேச ஆரம்பித்தார்: "நண்பர்களே! கோப்பை என்பது ஒரு சாதனம் தான்! காபியைச் சிந்தாமல், சூடு கைகளில் உறைக்காமல் கையாளுவதற்கான கருவி மட்டும் தான். இங்கே காபி தான் பிரதானம்! கோப்பைகள் அல்லவிலை உயர்ந்த கோப்பியோ, அல்லது சாதாரணமான கோப்பை என்பது இங்கே காபியின் தரத்துக்கு சம்பந்தம் இல்லாதது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை! இது புரிகிறதா?"

"
அதே மாதிரி, காபி என்கிற இடத்தில் வாழ்க்கை என்றும், கோப்பை என்ற இடத்தில், வேலை, சம்பாத்தியம், சமூகத்தில் அந்தஸ்து என்றும் வைத்துப் பாருங்கள்.   வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விடாமல், இங்கே கோப்பைகளின் மீது கவனம் போகும் போது, காபியை மறந்த மாதிரி வாழ்க்கையையும் மறந்து விடுகிறோம்! தன்னுடைய கோப்பை அடுத்தவனுடையதைப் போல, அல்லது இன்னும் வெகு உயர்த்தியாக இல்லை என்பதில் கவனம் சிதறும் போதே, அங்கே ஏமாற்றம், அழுகை, ஆத்திரம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, என்று வரிசையாகச் சறுக்கிக் கொண்டே போவதில், கைக்குக் கிடைத்த காபி மாதிரி, ஆறி அவலாகிப் போய்க் கடைசியில் கிடைத்ததும் பயனில்லாமல் போய் விடுகிறது. இது புரிகிறதா?"

"
அது மாதிரித் தான், கிடைத்ததில் என்ன நிறைவைக் காண முடியும் என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக, என்னென்ன கிடைக்கவில்லை என்பதில் கவனம் போனால், வாழ்க்கையும் அங்கே கசந்து, ஆறிப் போய்விடுகிறது. வாழ்க்கையை, நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில், சூடாக காபி குடிப்பது என்பது சுறுசுறுப்பாக இருப்பதற்கு எப்படி அவசியமோ, அதே மாதிரி, வாழ்க்கை முக்கியம்! நாம் எதிர் கொள்கிற சூழ்நிலைகள் கோப்பைகள் மாதிரி இரண்டாம் பட்சம் தான்."


"அது சரியில்லை இது சரி இல்லை என்று பேசிக் கொண்டிருப்பதே நீங்கள் சந்தோஷமாக இல்லை என்பது தான்!. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இங்கே நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரியே குறைகளே இல்லாமல் இருப்பதும் அல்ல! உண்மையில் சந்தோஷமாக இருப்பதற்கு, குறை அல்லது நிறைவு என்ற படிக்கட்டுக்கள் அவசியமே இல்லை! சந்தோஷமாக இருப்பதன் ரகசியம், குறை, நிறை என்ற அளவீடுகளைத் தாண்டிப் போவதில் தான் இருக்கிறது. அவைகளைப் பெரிதுபடுத்துவதிலோ, பொருட் படுத்துவதிலேயோ அல்ல!"


ஆசிரியரைத் தேடி வந்த மாணவர்கள் இப்போது காபி குடிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டார்கள்!


ooo3ooo


படித்ததும் பிடித்ததும்! இந்தத் தலைப்பில், என்னைக் கவர்ந்த தமிழ் வலைப்பதிவர்களைப் பற்றிக் கொஞ்சம் எழுதி வருகிறேன். இவர்களில் எவரையும் நேரடியாக அறிந்தவனில்லை. இவர்களது பதிவுகளை, எழுத எடுத்துக் கொள்ளும் விஷயங்கள், எழுதுகிற விதம் இவைகளை வைத்து மட்டுமே என்னுடைய பிடித்தமான வலைப்பதிவுகளாகவும், பதிவர்களுமாக படித்து வருகிறேன். கருத்து ஒற்றுமை, வேற்றுமை, ஆத்திகம், நாத்திகம் இந்தமாதிரி அளவீடுகளை வைத்து வாசிப்பு அனுபவத்தைக் குறுக்கி விடக் கூடாது, குறுக்கி விட முடியாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு, என்னுடைய ரசனையை பற்றிய கணிப்பை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்  என்ற வேண்டுகோளுடன்............., ஏனென்றால் அது மாறிக் கொண்டே, வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற தைரியம் தான்!

திரட்டிகளின் தயவை எதிர்பார்த்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பதிவர்களிடமிருந்து எல்லா வகையிலுமே வித்தியாசமான இரு பதிவர்களை இன்றைக்குப் பார்ப்போம்.  

இந்த இருவருமே தங்கள் பதிவுகளை எந்தத் திரட்டியிலும் இணைத்துக் கொள்ளவில்லை. பதிவுகளைப் படிக்க வரும் நண்பர்கள், அவர்களுக்குப் பிடித்திருந்தால் தங்களுடைய நண்பர்களுக்கு அறிமுகம் செய்யட்டும்  என்ற அளவில், தங்களுடைய பதிவுகளில் மிக அருமையாக ஆன்மீகத்தைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். எனக்கு இத்தனை ஹிட்ஸ், இத்தனை followers, இன்னும்  இத்தனை பேர் ரீடரில் படிக்கிறார்கள், ஆக ஒண்ணும் ஒண்ணும் கூட்டி வருகிற  மொத்தம் எண்பது என்று கணக்குப் போடும் தமிழ் வலைபதிவுலகத்தில், இப்படியும் அபூர்வமான பதிவர்கள் இருக்கிறார்கள்  என்பதே மிக ஆச்சரியமான செய்தி! அதை விட ஆச்சரியம், அவர்கள் எடுத்துக் கொண்டு எழுதும் விஷயங்கள்! சென்றிடுவீர் எட்டுத் திக்கும்! கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று பாடினானே பாரதி அவன் வார்த்தைகளைக் கொண்டே  இவர்கள் இருவரையும் வாழ்த்தி வணங்கி இங்கே சிறு அறிமுகமாக.............

ஆன்மீகம்4டம்ப்மீஸ்

பெயரே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதல்லவா? கணினி தொடர்பான புத்தகங்களில் for dummies என்ற அடைமொழியோடு, ஒன்றும் தெரியாதவர்களுக்காக நிறையப் புத்தகங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அதே மாதிரி ஆன்மீகத்துக்குமா, என்று ஆச்சரியப் படுபவர்கள் மேலே கொடுத்திருக்கும் தலைப்பிலேயே லிங்க் இருக்கிறது, போய் ஒரு முறை படித்துப் பாருங்கள்! அத்வைதம் கொஞ்சம் சிக்கலானது. புரிந்துகொள்வதற்கு, நடைமுறையில் கடைப்பிடிப்பதற்கு மிகவும் கடினம். மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஆதி சங்கரர் சொல்கிற பிரம்ம சத்யா:ஜகன் மித்யா என்று பரம்பொருளைத் தவிர  இரண்டாவதாக வேறொன்றுமே இல்லை என்பது கேட்கும் போது மட்டும் புரிந்து விட்டதாக ஒரு மயக்கம் வரும்! அவ்வளவு தான்!

சங்கரர் சொல்லும் மாயாவாதத்தை, நான் ஏற்றுக் கொள்பவன் இல்லை. என்றாலுமே கூட, ஒரு கடினமான தத்துவத்தை, தாண்டவராய சுவாமிகள்  தமிழில் சொல்லிவைத்த  பாடல்களில் இருந்து, மிக எளிமையாகமிக ஆரம்ப நிலையில் இருந்து கேட்பவருக்குமே புரிகிற மாதிரி டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் தொடர்ந்து எழுதி வந்து முதல் சுற்றை முடித்து விட்டார்கடலூரில் மயக்க மருந்து நிபுணராகப் பணியாற்றிக் கொண்டே, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், பழைய, அரிதான, இன்றைக்குக் கிடைக்காத புத்தகங்களை மின்னாக்கம் செய்து வரும்  தொண்டையும் சலிக்காமல் செய்துகொண்டிருக்கிறார். லினக்ஸ் நிரல்களைத் தமிழாக்கம் செய்து வரும் பணியிலும் தன்னை ஈடு படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அருமையான, நகைச்சுவை உணர்வு மிகுந்த, சாஸ்திரம், பண்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கையோடு உள்ள மிகச் சிறந்த மனிதர்  என்பதை அவரது எழுத்துக்களிலேயே  அடையாளம் தெரிந்து வைத்திருக்கிறேன்.

டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் இதுவரை எழுதிய பதிவுகள், தலைப்பு வாரியாக மேலே கொடுத்திருக்கும் சுட்டியிலேயே PDF கோப்புக்களாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ் வலைப் பதிவுகளில் மிக ஆரோக்கியமான ஒரு போக்கை ஆரம்பித்து வைத்திருக்கும் மிகச் சில நல்ல வலைப் பதிவர்களில், டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் அவர்களை வாழ்த்தி வணங்கி, இந்தப்பக்கங்களில் அவரைப் பற்றி எழுதக் கிடைத்த இந்தத் தருணமே மிக நல்ல தருணமாக, உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைப்பதற்கான ஒரு அறிமுகமாக இங்கே!
பக்தி என்றவுடனேயே இங்கே சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் முன்னே வந்து நிற்கிறாள்! அப்புறம் உடையவர் என்றும் எதிராசன் என்றும்  போற்றப்பட்ட  ராமானுஜர் தொடங்கி எண்ணற்ற வைணவப் பெரியவர்கள் பக்தியை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்தார்கள்! அதேபோல, வடக்கில் வாழ்ந்த பக்திச் சுடர்களைப் பற்றித் தமிழில் எழுத முனைந்தவர்கள் வெகு சிலரே! அதிலும் கபீர் தாசர் என்ற அடியவருடைய எளிமையான பாடல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்த போதிலும், ஹிந்தி தெரியாததால்,அல்லது தமிழில் முழுமையான மொழிபெயர்ப்பு நூல் ஏதாவது வெளியாகியிருக்கிறதா, தற்சமயம் கிடைக்கிறதா என்பதே தெரியாமல் இருக்கும் சூழலில், கபீரன்பன் என்ற பெயரில் கபீர் தாசருடைய தோஹே என்ற ஈரடிக் கவிதைகளை ஹிந்தியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து, எளிமையான விளக்கங்களோடு எழுதி வரும் திரு. உமேஷ்!

இவருமே தான் எழுதிய பதிவுகளை, PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியைச் செய்து கொடுத்திருக்கிறார். பயனுள்ள பதிவுகள்! இப்படி இணையத்தில் இல்லாத நேரத்திலும் கூட, படித்துப் பயன் பெரும் வகையில் கபீர் தாசருடைய பக்தி வெள்ளம் நமக்குள்ளும் பெருக்கெடுத்து ஓடுகிற  மாதிரிதரவிறக்கம் இங்கே
5 comments:

 1. இரண்டு பதிவுகளுமே எனக்கு அறிமுகமானதாக இருந்தாலும் அவற்றை இங்கே பொருத்தமான முறையில் அறிமுகப்படுத்தியதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்

  வாழ்த்துகள்

  ReplyDelete
 2. இருவரும், இன்னும் பல நாட்கள் கழிந்த பின்னாலும் படிக்கக் கூடிய பதிவுகளை எழுதுகிறார்கள், எளிமையான நடையில் கடினமான தத்துவ விளக்கங்களைத் தருகிறார்கள், தவிர, இதுவரை வெளிவந்த பதிவுகளை PDF கோப்புக்களாகவும், தங்கள் வலைப்பக்கங்களில் இருந்தே தரவிறக்கம் செய்துகொள்ளவும் தருகிறார்கள். தமிழ் வலைப் பதிவர்களில் மிகவும் அபூர்வமானவர்கள்.

  தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள். இவர்களைப் பற்றி எழுத இன்றைக்கு என் விரல்கள் கொடுத்து வைத்திருக்கிறது சிவா!

  ReplyDelete
 3. தங்களின் படைபுகளுக்காக விருது அளித்துள்ளேன். விருதினை ஏற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.

  மூன்று முத்தான பதிவுகளுக்கு நன்றிகள் அய்யா. இவைகள் உண்மையில் வாழ்க்கையில் நல பெற உதவும் கருத்துக்கள். நன்றி.

  ReplyDelete
 4. விருது பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, அப்படி என்ன எழுதிக் கிழித்து விட்டேன் என்று நினைக்கிறீர்கள்?

  இந்தப் பதிவுகளை, இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்தோ, ஆறு ஆண்டுகள் கழித்தோ, படிக்கும்படியாக அப்போது இருந்தால், ஏதோ எழுத வருகிறது என்று வேண்டுமானாலும் ஒப்புக் கொள்ளலாம். இப்போது....it is too early to assess!

  கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே, அந்த நல்ல எண்ணத்திற்கு என் நன்றி!

  ReplyDelete
 5. கொஞ்சம் உண்மைதமிழனின் ப்ளாக்கை எட்டி பார்த்துட்டு வாங்க!

  பலமுறை உங்களையும் எச்சரித்து கொண்டிருக்கிறேன்!
  நீங்க தான் கேக்குறா மாதிரியே தெரியல!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!