வாய்க் கொழுப்பும் அரைவேக்காட்டு அரசியலும்....!

நன்றி: தினமணி, அடடே மதி


வாய்க் கொழுப்பு என்பதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கண்டனூர் சால்வை அழகர் பானா சீனா தான் உடனடியாக நினைவுக்கு வருகிறார்!  

நிதி அமைச்சராக இருந்து கிழித்தது போதும் என்று உள்துறை அமைச்சராக்கின பின்னாலும் கூட, மேலிடத்தின் உள்வட்டத்தில் இருக்கும் தெம்பில் வாய்க்கு வந்தபடி எந்த விஷயமானாலும் பேசி விடுகிறார்! நான் சொன்னதில் தான் நிற்பேன் என்று பிடிவாதமாகவும் நிற்கிறார் பாருங்கள், அங்கே தான், பொறுப்பான பதவி எதற்கும் லாயக்கில்லாதவர் இந்தப் பானா சீனா என்ற முடிவுக்கு வரவேண்டிருக்கிறது!

உள்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றவுடனேயே 
ஒரு வருடத்திற்குள் மாவோயிஸ்டுகளை  ஒழித்து விடுவதாக வசனம் பேசினார். மாநில அரசுடன் கலந்து முடிவு செய்யாமல், மாநிலக் காவல் துறை ஆதரவு இல்லாமல், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அனுப்ப, மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணியில் சிக்கி எழுபத்தாறு மத்திய ரிசர்வ் படையினர் மாண்டது நினைவிருக்கலாம். அரசை நடத்தும் அரசியல்வாதிகள் பொறுப்பை உணர்ந்து முடிவுகளை எடுக்கத் தவறும்போது, அங்கே அழிவு மட்டும் தான் நிச்சயம் என்பதை  காஷ்மீர்ப் பிரச்சினையில் சொதப்பல், இந்திய சீன எல்லைத் தகராறு, பாகிஸ்தானுடன் சீர்கேடடைந்து வரும் உறவுகள் இப்படி எல்லாவகையிலும் இழப்பை இந்த நாடு காங்கிரஸ்காரர்கள் இந்த நாட்டை ஆளத் தொடங்கின காலத்தில் இருந்தே சந்திக்க ஆரம்பித்து விட்டது.

கண்டனூர் பானா சீனா இப்போது "காவி பயங்கரவாதம்" என்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்!

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கூற்றுப் படி, கண்டனூர் பானா சீனாவுக்கு, அரசியல் பிரச்சினை எல்லாவற்றிலுமே காவி, அதாவது பிஜேபி அல்லது ஆர்எஸ்எஸ்  மட்டும் தான் தெரிகிறது போல! பானா சீனா ஒரு அமைச்சர் என்ற முறையில் பேசிய இந்த வார்த்தைப் பிரயோகத்தை,அரண்டவன் உளறுவதைப் போல என்று சும்மா விட்டு விட முடியுமா? அவர் பேசியது சரிதானா? ஒரு அமைச்சருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச அறிவு, நிதானம், தெளிவோடு தான் இப்படிப் பேசினாராமா?

சிக்கல் வரும் என்றால், காங்கிரஸ் தலைமை காத தூரம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும்! நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் இல்லாதவர்கள் வழக்கமாகச் செய்யக் கூடியதுதானே அது! காங்கிர
ஸ்காரர்களுக்கு இப்படி ஓடிப்போய் ஒளிந்து கொள்வது என்ன இப்போது தான் புதிய பிழைப்பா? அது எப்போதுமே நடந்துகொண்டிருப்பது தானே!

சிதம்பரத்தின் இந்தப் பேச்சு பிரச்சினையைத் தோற்றுவிக்கும் என்பதால், வழக்கம்போல, காங்கிரஸ் தலைமை கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறது! காங்கிரஸ் கட்சியின் இன்னொரு மூத்த உறுப்பினர், நிர்வாகி, திக்விஜய் சிங் சிதம்பரத்தின் இந்த வார்த்தைப் பிரயோகம் மிகவும் தவறானது என்று சொல்லியிருக்கிறார். அவரைப் போலவே, காங்கிரஸ் கட்சியில், எதற்காகத் தேவையில்லாமல் சிதம்பரம் இப்படி உளறிக் கொட்டவேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கலாம்!

கட்சி, தான் சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் விலகி நின்றதற்குப் பிறகும், கட்சிக்கும் அரசுக்கும் வித்தியாசமே கிடையாது என்றும் சொல்லி விட்டு, கண்டனூர் பானா சீனா, தான் சொன்னதில் உறுதியாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பவனுக்கு என்ன பெயர் சொல்வோம், தெரியுமில்லையா?

இன்றைக்கு ஹிந்து நாளிதழில் பானா சீனா இப்படிச் சொன்னதாக

செய்தி வெளியிட்டிருக்கிறது:


“I do not claim patent on the phrase ‘saffron'. It has been used by a number of other persons, including my colleagues in the UPA,” he said responding to questions, seeking a clarification on his remark made at the recent annual conference of State police chiefs and top police officials.

Asked about the Congress displeasure over his remark, Mr. Chidambaram, at his monthly press conference held here to give a report card of his Ministry, said: “Party is supreme.”

However, sticking to his stand, he said the message behind the remark was that “right-wing fundamentalist groups are suspected to be behind some bomb blasts.” The remark brought the message home and the purpose was served."

தான் கண்டுபிடித்த வார்த்தை இல்லையாம் அது! ஏற்கெனெவே வேறு பலரும் சொல்லியிருக்கிறார்களாம்!

மிகவும் சரி, பானா சீனா!

அவர்கள் (அப்படிச் சொன்ன நிறையப் பேர்கள்)  சொன்னதை அப்படியே  சுயசிந்தனையில்லாமல் காப்பியடிக்கிறீர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்களா? இங்கே எதிர்க் கட்சி வரிசையில் இருக்கும்போது, பொறுப்பில்லாமல் எவர் வேண்டுமானாலும்  எதை எப்படி   வேண்டுமானாலும் பேசிவிடலாம். அப்படிப் பேசியதை ஒரு பொறுப்புடன் கூடிய அமைச்சராக இருந்து கொண்டு நான் பேசினேன் என்று ஒப்புக் கொள்கிறீர்களா? 

ஒரு அமைச்சர், அமைச்சரவையின் கூட்டு முடிவுக்குக் கட்டுப் பட்டவர், கூட்டுப் பொறுப்புள்ளவர். நீங்கள் பேசியதை உங்கள் அமைச்சரவை ஏற்றுக் கொண்டிருக்கிறதா? உங்களுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் கூட்டுப் பொறுப்பிருக்கிறதா?

பொறுப்பு (Responsibility, Accountability) எதுவுமே இல்லாத அவிழ்த்து விடப்பட்ட பொலிகாளை மாதிரிப் பொறுப்பில்லாமல் அமைச்சர்கள் செயல் படுவது, பேசுவது, அதைக் கட்டுப் படுத்த முடியாத, சக்தி இல்லாத ஒரு பிரதமர் என்று இப்போதிருக்கும் ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டைப் போல வேறு ஒன்றை உலகம் முழுக்கத் தேடினாலும் பார்க்க முடியாது!

Caricature of caricatures! (Cartoon by TN Ninan courtesy - indiatimes.com).

பானாசீனா, இப்படித் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஸ்டேட்மென்ட் விட்ட பிறகு, பத்திரிகையாளர்களிடம் திக்விஜய் சிங் சொன்னது இது என்று ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது:


"Differences within the Congress on the use of the phrase ‘saffron terror' by Home Minister P. Chidambaram showed no signs of ending with senior leader Digvijay Singh saying he had objection to the words. 

“I have objection to the use of caste, colour and religion to describe terror,” Mr. Singh told journalists here shortly after Mr. Chidambaram maintained that the phrase had brought home the message of right-wing terror and the purpose was served.

Mr. Singh, whom the media had earlier credited with using the phrase first in the Congress, said the word saffron symbolised valour and had religious connotations and that terrorism had no colour."

விவகாரம் பெரிதானவுடன்தெலங்கானா விவகாரத்தில் பானாசீனா  அடித்த அந்தர் பல்டியை மறக்க முடியுமா? யாரும் மறுக்க முடியுமா?

காவி, தியாகத்தின் அடையாளம், காங்கிரஸ்காரன் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி கறைபடிந்த சின்னமல்ல. பிஜேபி அல்லது ஆர்எஸ்எஸ் அல்லது வேறு எந்த மத அடிப்படைவாதமாக இருக்கட்டும், இங்குள்ள பிரச்சினைகளுக்கு, இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தால், நேரடியாகவே சொல்லுங்கள், பிடியுங்கள்! விசாரியுங்கள்! தண்டியுங்கள்! 

ஒரு அரசு என்ற வகையில் அது உங்கள் கடமை! 

ஒரு பொறுப்புள்ள அரசாக, உங்கள் கடமையைக் குறைந்தபட்சமாவது செய்கிறீர்களா? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கீழே தினமணி தலையங்கம் புட்டு வைத்திருக்கிறதே! 


ஆனால், பொறுப்பற்ற வகையில், இந்த நாட்டின் பண்பாடு, கலாசாரம் இவைகளின் சின்னமாக இருக்கும் காவித் துணி, துறவிகளைப் பற்றி ஏனோதானோ என்று பேசாதீர்கள்!நீங்கள் அவதூறாகப் பேச முனைவது, இந்த மண்ணின் ஆன்மீக இயக்கத்தின் அடையாளத்தை என்பதை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

ரஷ்யாவில் லெனின் போல்ஷெவிக் இயக்கத்தை ஆதரித்து எழுதிய நூல்களில் இந்தியச் சூழ்நிலையில் பொருத்திப் பார்க்கக் கூடியதாக இருப்பது, "வலதுசாரி சந்தர்ப்பவாதமும், இடதுசாரி தீவீரவாதமும்" ஒன்று.  

வலது சாரி என்று சொல்லும்போது, ஒரு பகுதியில் பொறுப்பு இல்லாமல் அசமந்தமாக அல்லது கவனக் குறைவாகச் செயல் படும் போக்கே, இடதுசாரியாக இன்னொரு  பகுதியில் தீவீர வாதத்தை வளர்க்கிறது என்பது அந்த நூலின் அடிப்படைக் கருத்து.

ஓட்டுப் பொறுக்குவதற்காக, அரசியல் வியாதிகள், ஒருதரப்பினரைக் குளிரச் செய்கிற வெற்று அறிக்கைகளில், இலவசங்களில், ஏமாற்றுச் சலுகைகளில் ஈடுபடும்போது, பாதிக்கப் படும் இன்னொரு பகுதியை, இவர்களை மாதிரியே பொறுப்பில்லாமல் தீவீரமாக இயங்கும்படி தூண்டுவதாக ஆகிப்போய் விடுகிறது. வேதாந்தா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒரிசாவிலும் பக்கத்து மாநிலங்களிலும் வாழும் ஆதிவாசிகளுடைய வாழ்க்கையைப் பாதிக்கும் விதத்தில் செயல்பட்டபோது அந்த மக்கள் வேறு வழில்லாமல் மாவோ- யிஸ்டுகளுடன் சேர்ந்து போராடத் தூண்டப் பட்டார்கள். 

அவர்கள் போராட்டத்தை உதாசீனப் படுத்தினீர்கள்! இனிமேலும் அது முடியாது என்ற நிலை வந்த பிறகு,மாவோயிஸ்டுகளை சமாளிக்க வேறு வழியில்லாமல், வேதாந்தா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி வந்ததா இல்லையா?

அதேபோலத் தான், சிறுபான்மையினரைக் காப்பாற்றுகிறேன் என்ற போர்வையில் பெரும்பான்மையினர் மனம் புண் படுகிற விதத்தில் அரசியல் வியாதிகள் புகுந்து விளையாடும்போது, ஒரு சிறுபகுதி மத அடிப்படைவாதத்திற்கு ஆட்படுகிறது, கொஞ்சம் தீவீரவாதமாகவும் மாறுகிறது. இந்தப் போக்குமே கூட, இந்திய வரலாற்றில் இத்தனை நாட்களாகக் கேள்விப்பட்டிராத ஒன்று தான்!

பட்ஜெட் படிக்கும்போது மட்டும் திருக்குறளை வாசித்து நாடகம் போடும் பானாசீனாவுக்கு  "நோய் நாடி நோய் முதல்நாடி" என்று வள்ளுவன் சொன்ன அந்தக் குறள் மட்டும் தெரியவில்லையோ?

பானா சீனா பொறுப்பேற்று நடத்தும் உள்துறை அமைச்சகத்தின் லட்சணத்தை தினமணி நாளிதழின் இந்தத் தலையங்கம் ஒரு பிடி பிடித்திருக்கிறதே, கண்டனூர்க்காரருக்குத் தகவல் தெரியுமோ? அங்கேயும் காவிக் கலர் வந்து கண்ணை மறைத்துவிட்டதோ?


தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது நாட்டின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்க முடியும். நாட்டுநடப்புகள் நன்றாக இல்லை என்று யாராவது அழுது புலம்பினாலோ, முணுமுணுத்தாலோ அதற்குக் காரணம் அவர்கள் பிறந்த பொன்னாட்டை வெறுப்பதால் அல்ல. தவறுகள் திருத்தப்படாதா, நான் பிறந்த நாடு போற்றுதலுக்கு மட்டுமே உரிய நாடாக மாறிவிடாதா என்கிற ஏக்கமும் ஆதங்கமும்தான் காரணமே தவிர, அது நாட்டுப்பற்று இல்லாமையால் அல்ல. 63 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டு தோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருந்தும் முக்கியமான பிரச்னைகளில் முடிவெடுக்கக்கூடத் துணிவில்லாத அல்லது மனமில்லாத நாடாக இந்தியா தொடர்கிறதே என்று ஆதங்கப்படுவது தவறா என்ன?


2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தீவிரவாத சக்திகளால் தாக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்படி இந்திய நாடாளு மன்றத்தையே தகர்த்தெறியும் திட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான அப்சல் குரு என்பவர் பிடிபட்டார். இது சர்வாதிகார நாடாக இருந்தால், அடுத்த சில நாள்களிலேயே அப்சல் குரு சுட்டுக் கொல்லப் பட்டிருப்பார்.

நாடாளுமன்றத்தைத் தாக்கிய குற்றத்துக்கான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து, 2002-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி குற்றவாளியான அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை அளிப்பது எனத் தீர்ப்பும் வழங்கப் பட்டது. உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலேயே விஷயம் முடிந்துவிடாதே; மேல்முறையீடு செய்வதற்காக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பது என்று 2005 ஆகஸ்ட் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு இதற்குள் 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

2006-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான தடை விலக்கப்பட்டு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடுவதற்கான நாளும் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது, அப்சல் குருவின் மனைவி தபாசம், குடியரசுத் தலைவருக்கு ஒரு கருணை மனுவைச் சமர்ப்பிக்கிறார்.  

இதுபோன்ற கருணை மனுக்களின் மீது குடியரசுத் தலைவர் தன்ச்சையாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. அவர், தனக்கு ஆலோசனை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அந்தக் கருணை மனுவை அனுப்புகிறார்.

இதெல்லாம் நடந்தது 2006-ம் ஆண்டில். மத்திய உள்துறை அமைச்சகம், குற்றவாளி அப்சல் குரு தொடர்பான கோப்புகளை தில்லி மாநில அரசுக்கு அனுப்பி அந்த அரசின் கருத்தைக் கோருகிறது. தில்லி அரசுக்குப் போன அப்சல் குருவின் கருணை மனு தொடர்பான கோப்பு கிணற்றில் போடப்பட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதின. பொதுநல சங்கங்கள் ஊர்வலங்கள் நடத்தின. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஊஹூம், அந்தக் கோப்பைப் பற்றிய பேச்சுமூச்சே காணோம்.


மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் திடீரென்று விழித்துக் கொண்டு தில்லி மாநில அரசுக்கு கோப்புப் பற்றி நினைவூட்டும். ஒருமுறை இருமுறை அல்ல, 16 முறைகள் மத்திய உள்துறை அமைச்சகம் குற்றவாளி அப்சல் குருவின் கருணை மனு மீதான தில்லி அரசின் கருத்தைக் கேட்டும் தில்லி அரசு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே இருந்திருக்கிறது.


இதுவே எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலமாக இருந்தால் இந்தக்காரணத்துக்காகவே அந்த ஆட்சியைக் கலைத்திருந்தாலும் ஆச்சரியம் ல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் 16 கடிதங்களை தில்லி அரசு பார்த்தும் பார்க்காமலும் இருந்தது என்றால், அதுவே நம்பும் படியாக இல்லை.


கடந்த மே மாதம் 18-ம் தேதி தில்லி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சில விளக்கங்களைக் கேட்டு ஒரு கடிதம் அனுப்புகிறார். விளக்கங்கள் கிடைத்ததும் உடனடியாக தில்லி அரசு முடிவெடுத்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு வாரத்துக்கு முன்புதான் சற்று மனம்இறங்கி, குற்றவாளி அப்சல் குரு சம்பந்தப்பட்ட கோப்புகளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் தில்லி துணைநிலை ஆளுநர் தேஜேந்தர் கன்னா.


அப்சல் குருவைத் தூக்கிலிடுவது என்கிற தீர்ப்பில் தங்களுக்கு எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது என்று கூறியதுடன் அவர் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "அப்சல் குருவைத் தூக்கிலிடுவதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பற்றி நன்றாக மறுபரிசீலனை செய்துவிட்டு முடிவெடுக்கவும்' என்று அவர் பரிந்துரைத்திருப்பதுதான் விந்தையிலும் பெரிய விந்தை.

அப்சல் குரு இந்திய நாடாளுமன்றத்தையே தகர்க்க முயன்ற நாசகாரக் கும்பலைச் சேர்ந்தவர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர். அவரைத் தூக்கிலிடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்கிறாரே தில்லி துணைநிலை ஆளுநர், அப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் யார் என்றும் குறிப்பிட்டிருக்கலாமே...

இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அப்சல் குருவுக்காக வருத்தப் படுவார்கள் என்றோ  குரல் கொடுப்பார்கள் என்றோ யாராவது நினைத்தால், அப்படி நினைப்பவர்கள்தான் தேசத் துரோகிகள். 

இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களைக் களங்கப் படுத்துவதும், அவர்களது தேச பக்தியைக் கொச்சைப்படுத்துவதும்தான் இப்படிக் கூறுபவர்களின் உள்நோக்கம். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

குற்றவாளியாகவே இருந்தாலும்கூட  தூக்கிலிடுவதற்கு முன்னால் தீர யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை. ஆனால், தவறான காரணத்தைக் காட்டி தீர்ப்பைத் தள்ளிப்போடுவது ஏற்புடையதல்ல. கருணை மனுவை காலவரையில்லாமல் ஒத்திபோடுவது நீதிக்கும் இழுக்கு, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கும் இழைக்கப்படும் அநீதி.

தேசத்தை நேசிப்பதால் கோபம் வருகிறது. தூக்கிலிடப்பட வேண்டியது அப்சல் குருவையா, இவர்களையா? இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், இந்திய மக்களே கொதித்தெழுந்து நாடாளுமன்றத்தைத் தகர்த்தெறிந்து விடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை மேலெழுகிறது..."

காங்கிரஸ்காரர்களால் இந்த தேசத்தின் ஒற்றுமையை, இறையாண்மையைக் காப்பாற்ற முடியாது! காங்கிரஸ்காரனுக்கு முதுகெலும்பும் கிடையாது, நிமிர்ந்து நிற்கவும் தெரியாது!பொறுப்பாக ஆட்சி செய்யவும் தெரியாது! பிரச்சனைகளை, நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டு எதிர்கொள்ளவும் தெரியாது!

தேசம் பிழைக்கக் காங்கிரஸ் கட்சியை நிராகரிப்பது ஒன்றே வழி! 

2 comments:

  1. அருமையான பதிவு. செருப்படி பானா சினாவுக்கு. தமிழ்ஹிந்து பதிவைப்பாருங்க..

    http://www.tamilhindu.com/2010/09/saffron-terror-or-pc-color-blindness/

    ReplyDelete
  2. கானகம் என்ற பெயரில் பதிவிடும் நண்பருக்கு,

    சுட்டியில் சேக்கிழார் என்பவர் எழுதியிருந்த அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தேன்,நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!