தீர்ப்புகளும் தீர்வுகளும் ....!தினமணி தலையங்கம்

தினமணி தலையங்கம்: தீர்ப்பு அல்ல தீர்வு!

First Published : 19 Feb 2011 12:47:56 AM IST


"டந்த சில நாள்களாக எகிப்து புரட்சி, ஆன்டிரிக்ஸ்-தேவாஸ் எஸ்-பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒப்பந்தம், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சுகள், தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது என பல்வேறு பிரச்னைகளின் தீவிரத்தில், கவனம் பெறாமல் போன சம்பவங்களில் ஒன்று - கர்நாடக மாநிலத்தில் 5 சுயேச்சை எம்எல்ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. 

ர்நாடக மாநிலத்தில், பாஜக ஆட்சிக்கு எதிராக சில ஆளும்கட்சி எம்எல்ஏ-க்கள் புறப்பட்டபோது, அவர்களுடன் சேர்ந்து கொண்ட 5 சுயேச்சை எம்எல் ஏ-க்களும் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கர்நாடக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அக்டோபர் 10-ம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் சிலநிமிடங்களுக்கு முன்பாக, தங்களுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ-க்களை பதவியிலிருந்து நீக்குவதாக சட்டப்பேரவைத் தலைவர் கே.ஜி. போப்பையா அறிவித்து, அவர்களை வெளியேற்றிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தப்பிப் பிழைத்தது. 

பாஜக எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நீக்கம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், சுயேச்சை எம்எல்ஏ-க்களை எப்படிக் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதே பெரிய கேள்வியாக இருந்தது. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, கர்நாடக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இவர்கள் 5 பேரையும் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லும் என்று உறுதிப்படுத்தி இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலில் சுயேச்சை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு குறித்த மாற்றுச் சிந்தனையை உறுதி செய்துள்ளது என்பதால் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை. 

டியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு தந்த 5 எம்எல்ஏ-க்களும் பாஜக கட்சியின் அங்கத்தினராக இல்லை என்றாலும்கூட, அரசின் முக்கிய பொறுப்புகளை வகித்ததோடு, பாஜக கட்சிக் கொறடாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டதாலும், சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்களின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாலும், இவர்களைக் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்தது சரியே என்று கூறப்பட்டுள்ள இத்தீர்ப்பு, இனி எந்தவொரு சுயேச்சை எம்எல்ஏ-வும் அரசுக்கு ஆதரவு தந்துவிட்டு, ஆட்சியில் லாபமும் பெற்ற பிறகு, மேலும் ஒரு கூடுதல் ஆதாயத்துக்காக விலைபோகவும் ஆட்சிக்கு எதிராகத் திரும்பவும் முடியாது என்பதைச் சூடுபோட்டதுபோல மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது. 

நிபந்தனையற்ற ஆதரவு என்று தெரிவித்த பின்னர் அந்த ஆட்சிக் காலம் முழுவதற்கும் உடன் நிற்கவும், அதன் தவறுகளுக்குப் பொறுப்பேற்கவும் வேண்டும் அல்லது ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன், ஆனால் அதன் தவறுகளுக்குப் பொறுப்பேற்க மாட்டேன் என்று அறிவித்து விலகி நிற்கவாகிலும் வேண்டும். இதைச் செய்யாமல், எதிர்க்கட்சியின் மகிழ்ச்சிக்காக சோரம் போவது, மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்கு உள்ளாக்குகிறது என்பது உண்மையே. 

ந்தத் தீர்ப்பு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் குறித்தது என்றாலும்கூட, இதனை இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தினை ஆன்ம உணர்வுடன் பார்க்கும்போது, கூட்டணிக் கட்சிகளுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. சுயேச்சைகள் தேர்தலுக்குப் பிறகுதான் ஒரு அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே மக்களிடம் நாங்கள் ஓர் அணி என்று காட்டிக் கொள்கின்றன. இந்தக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தனித்து போட்டியிட்டால், ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது என்பது திண்ணம். ஆனால், அந்தக் கட்சிக்கு மற்ற கட்சிகளின் ஆதரவாளர்களும் வாக்களிக்கின்றனர் என்பதும், அதனால்தான் இவர்களால் வெற்றியே பெற முடிந்தது என்பதையும் கணக்கில் கொண்டால், அந்தக் கூட்டணி ஆட்சியில் அமரும்போது அதனுடன் கடைசி வரையிலும் இவர்கள் இருந்தே ஆக வேண்டும் என்பதுதான் நியாயம். 

ருவேளை அந்தச் சிறிய கட்சிக்கு, ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் மக்கள் விரோதமாகச் செயல்படுவதாகத் தோன்றினால், ஆட்சிப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்புகளைத் துறந்துவிட்டு விலகி நிற்கலாமே தவிர, கூட்டணியைவிட்டு வெளியேறி, இன்னொரு அரசுக்கு கட்சி என்ற அளவில் ஆதரவு தெரிவிப்பது சரியாக இருக்க முடியாது. ஆகையால், இது ஒரு நம்பிக்கைத் துரோகம், கட்சித் தாவல் என்றும் சொல்ல இடம் இருக்கிறது. 

ட்சித் தாவல் தடுப்புச் சட்டம் பற்றிய மறுசிந்தனை நிச்சயமாகத் தேவைப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், மக்கள் பிரதிநிதிகளைப் பற்றித்தான் பேசுகிறதே தவிர, கட்சிகளைப் பற்றிப் பேசவில்லை. கட்சியின் சின்னத்தில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவரின் முதல் கடமை தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதியின் வாக்காளர்களுக்குச் சேவை செய்வதுதானே தவிர, கட்சிக்கு விசுவாசமாக இருப்பது என்பது முரண்.

வெகுஜன விரோத அரசு அல்லது செயல்பாடுகளைக் கட்சித் தாவல் தடை சட்டம் பாதுகாக்கிறது என்கிற குறைபாட்டையும் மறுப்பதற்கில்லை. 

வறான நபர்களைத் தங்களது வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்காத அளவுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை 64 ஆண்டுகளாகியும் நாம் ஏற்படுத்தாமல் இருப்பதுதான் மிகப்பெரிய குறை. கட்சித் தாவல் தடை சட்டம் பற்றிய மறுபரிசீலனையும், மக்களாட்சித் தத்துவம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படாத நிலையில், இந்தத் தீர்ப்பு ஏற்புடையது. ஆனால், நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்படியும், சட்டத்தின் பயமுறுத்தலினாலும் மக்களாட்சியை நிலைநிறுத்திவிட முடியாது.

டையறாத விழிப்புணர்வு மட்டும்தான் மக்களாட்சியின் மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்க முடியும்"

தொலைக்காட்சிகள் வந்த பிறகு, அச்சு ஊடகங்கள், குறிப்பாக நாளிதழ்களில் தலையங்கம் வெளியாவது, அது வாசகருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது கவனத்தை ஈர்ப்பதாகவும், எது சரியாக இருக்கும் என்பதைப் பயிற்றுவிக்கும் தளமாகவும் இருந்ததெல்லாம் கதையாய்ப் பழங்கனவாய்ப் போய்விட்டது. இன்றைக்கு நாளிதழ்களில் தலையங்கங்கள் அவ்வளவாக வெளியாவதில்லை, வாசகர்களும் அப்படி ஒன்று  இருந்ததே, இப்போது காணோமே என்று தேடுவதில்லை.உண்மையைச் சொல்லப்போனால், தன்னை வெகுவாகப் பாதிக்கிற ஒரு அரசியல் நிகழ்வு அல்லது ஊழல் பற்றிய செய்திகளில் கூட, ஒரு பொழுதுபோக்கும் அம்சத்தை, டீக்கடைகளில் வெறும் பேச்சாகப் பேசிவிட்டு அப்புறம் மறந்து போய்விடுகிற ஒன்றாகத் தான்,நாம் தொடர்ந்து மூளைச்சலவை செய்யப்பட்டு மழுங்க அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மிழில் வெளியாகும் நாளிதழ்களில் தினமணி ஒன்று தான் இன்றைக்கும் கொஞ்சம் பொறுப்பான விதத்தில் செய்திகளையும், பொறுப்புள்ள தலையங்கங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. சர்குலேஷன் அடிப்படையை வைத்துப் பார்த்தால், தினமணிக்கு இன்றைய நிலவரப்படி, குறிப்பிட்டுச்சொல்கிற இடத்தை தமிழக மக்கள் அளிக்கவில்லை என்றுதான் சொல்லத் தோன்றும். 


னால், புறக்கணித்துவிட முடியாதபடி வீரியத்துடனும், நேர்மையுடனும் தினமணி நாளிதழின் தலையங்கங்கள் இருப்பதால் தான், அவ்வப்போது இந்தப்பக்கங்களில் வெளிவருகின்றன.

வீரியத்தைத் தாங்க முடியாததனால் தான், சில அரசியல் தலைகள், எழுத்தில் இருக்கும் விஷயங்களை விட்டு விட்டு, எழுதியவரின் ஜாதியைத் தொட்டுப் பேசி,சொல்லப் பட்டவைகளில் இருந்து திசைதிருப்பும் வேலைகளைச்  செய்து கொண்டிருப்பது, சராசரி மனிதனுக்குப் புரிந்துமே கூட அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியாதவனாக இருப்பது,ஒரு சமுதாயத்துக்கு நல்லது அல்ல.

ங்கே போகிறோம்? ன்ன செய்யப் போகிறோம்?


 

2 comments:

  1. கர்நாடக அரசியல் களத்தில் மிக மோசமான காட்சிகள்தாம் அரங்கேறின. இதைவிடவும் இது கொஞ்சமாவது பரவாயில்லை என்றுகூட சொல்லமுடியாத அளவுக்குத்தான் நிலைமைகள் இருந்தன.இன்னொரு தேர்தல் இப்போதைக்கு வேண்டாம் எப்படியோ யாரோ இருந்துவிட்டுப்போகட்டும் என்ற நிலைமைக்கு மக்கள் வந்திருக்கின்றனர். யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து பதவியைக் காப்பாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது. சுயேச்சை எம்எல்ஏக்கள் நடந்துகொண்ட விதம் ஒன்றும் நாகரிகமானதாக இல்லை.இந்த நபர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியானது என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம். தவிர ஒவ்வொரு நெருக்கடிகளின் பொழுதும் சபாநாயகர்கள் மிகவும் நேர்மையாக நடந்துகொள்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது.சபாநாயகர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் சில சட்டதிருத்தங்கள் தேவை.

    ReplyDelete
  2. கர்நாடக அரசியலைத் தொடர்ந்து அசிங்கமாக்கிக் கொண்டிருந்ததில், காங்கிரஸ், தேவ கவுடா-குமாரசாமி, என்று ஒரு கூட்டமாகத் தொடர்ச்சியாக இருந்திருக்கிறதே! பிஜேபி, எடியூரப்பா எல்லாம் இப்போது தானே திரு அமுதவன்?

    சபாநாயகர் செய்வது சரியா இல்லையா என்பதை அரசியல் சாசனம், நீதிமன்றங்கள் கேட்க முடிகிறது, முடியும்!. ஆனால், "ஆட்டுக்கு தாடி தேவையா. மாநிலத்துக்குக் கவர்னர் தேவையா?" என்று காங்கிரசின் "தர்மக் கூட்டணிக் கூட்டாளி"களான திமுக, அவர்களே மறந்துபோன ஒருகாலத்தில் கேட்ட மாதிரி, பரத்வாஜ் செய்ததையும் கேட்கலாமல்லவா?

    கர்நாடகத்தில் பரத்வாஜ் செய்தது மாதிரி, எதனால் ஆந்திரத்தில், கேரளத்தில், தமிழகத்தில் கவர்னர்கள் செய்வதில்லை? ஊழலுக்கு மேல் ஊழலாக வெடித்துக் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ஏன் செய்ய முயற்சிக்கவில்லை? அது ஏன் காங்கிரஸ் செய்வதற்கு மட்டும் வெண்ணெய் தடவி, பிஜேபி செய்தால் மட்டும் சுண்ணாம்பு தடவிப் பார்ப்பது என்று கேட்டுக் கொள்ளுங்களேன்!

    நான் பிஜேபியை ஆதரிப்பதாக இதற்கு அர்த்தமில்லை!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!