தோசை, மசால் தோசை!

இந்த உலகம், பிரபஞ்சம், இவைகளோடு நமக்கிருக்கும் தொடர்பு என்று தொடர்ந்து தத்துவ விசாரம் செய்து கொண்டிருப்பது ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவம்.ஆனால், வலைப்பதிவுகளில் விவாதிக்கப் படும் தத்துவத் தேடல் என்பதெல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டவையே! ஒரு முழுமையான தேடலோ, கருத்துப் பரிமாற்றமோ இங்கே சாத்தியமில்லை.

இருந்தாலும் கூட, ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய The God Delusion புத்தகமும், அதைக் கொஞ்சம் தமிழில் வலைப்பதிவாக இட்ட தருமி ஐயாவுக்குச் சொன்ன பதில்களும் என்று கடந்த சில பதிவுகளில் பார்த்துக் கொண்டு வருகிறோம்.

பகுத்தறிவு என்ற பெயரில் எடுத்து வைக்கப் படும் இத்தகைய வாதங்கள், உண்மையில் ஒரு ஆழ்ந்த வெறுப்பிலிருந்தே வருவதையும், பகுத்து அறியும் நோக்கம் இவற்றில் இல்லாதிருப்பதையும் தொட்டுப் பேசியிருக்கிறோம். இன்னமும், பேச வேண்டியிருக்கிறது!விக்கிபீடியாவில் தேடிப் பார்த்தீர்களேயானால், டாகின்ஸ் தன்னுடைய புத்தகத்தில் நான்கு விழிப்பூட்டும் செய்திகளைச் சொல்லியிருப்பதாக, இப்படிச் சொல்கிறது.

Dawkins writes that The God Delusion contains four "consciousness-raising" messages:

1. Atheists can be happy, balanced, moral, and intellectually fulfilled.

2. Natural selection and similar scientific theories are superior to a "God hypothesis"—the illusion of intelligent design—in explaining the living world and the cosmos.

3. Children should not be labelled by their parents' religion. Terms like "Catholic child" or "Muslim child" should make people cringe.

4. Atheists should be proud, not apologetic, because atheism is evidence of a healthy, independent mind

முந்தைய பதிவிலேயே, டாகின்ஸ் நாத்திகம் பேசுகிறவர்களுக்குத் தெம்பூட்டுவதற்காக மட்டுமே வாதம் செய்திருப்பதாக, அவருடைய வார்த்தைகளை மேற்கோள் காட்டியே சொல்லியிருந்தது, நினைவிருக்கிறதா?

கொஞ்சம் அலுப்பூட்டுகிற இந்த வாதப் பிரதிவாதங்களில் இருந்து ஒரு மாற்றத்திற்காக, வெளியே வந்து கொஞ்சம் சுத்தமான காற்று.......!

இந்தியத் தத்துவ மரபில் வேதாந்தம் என்பது என்ன, வேதாந்தத்தின் வழியாக அடையக் கூடிய இலக்கு என்ன என்பதை, சுவாமி விவேகானந்தர் தன்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை
இங்கே படிக்கலாம், சிறிது சிந்தித்தும் பார்க்கலாமே!

திரு மாதவ் பண்டிட் எழுதிய SIDELIGHTS ON THE MOTHER [ Published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry] என்ற புத்தகத்தை, மறுபடி இன்று எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். சின்னச் சின்ன விஷயங்கள் தான், ஸ்ரீ அரவிந்த அன்னையோடு, ஆசிரம அன்பர்களுக்குக் கிடைத்த சில மறக்க முடியாத அனுபவங்களை சொல்கிற புத்தகம் இது. இந்தப் புத்தகத்தில் இருந்து, ஓரிரு பக்கங்கள்!

தோசை, மசால் தோசை!


ஒரு ஆசிரமவாசிக்கு, அரவிந்தாச்ரமத்தில், சாதகர்கள் [பழகுபவர்கள்] என்றே குறிப்பிடுவார்கள், தோசை என்றால் கொள்ளைப் பிரியம், ஆசை. ஆசிரம வேலையாக வெளியே செல்லும் போதெல்லாம், தன்னுடைய உறவினர் வீட்டில் தோசையை விரும்பிக் கேட்டுச் சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர். ஒருநாள், தோசையை பற்றி நினைத்துக் கொண்டே இருந்தவரிடம், ஸ்ரீ அரவிந்த அன்னை கேட்டார்: "தோசை என்றால் என்ன?" அந்த சாதகர்,வெட்கம் பிடுங்கித் தின்ன, தோசை என்றால் என்ன, எப்படிச் செய்வது என்பதை ஸ்ரீ அன்னையிடம் விளக்கிச் சொன்னபிறகு, ஸ்ரீ அன்னை சொன்னாராம்: "தெருவில் நடந்து கொண்டு வரும் போதே தோசை, தோசை என்று உன் மனதில் நினைத்துக் கொண்டே வந்தது பெருங்குரலாக எனக்குக் கேட்டது, அதனால் தான் கேட்டேன்!"


"All Prayers are granted. Every call is answered"

Prosperity Room என்றழைக்கப்படும் அறையில் ஸ்ரீ அரவிந்த அன்னை, சில அன்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஸ்ரீ அன்னை தனக்குள் உறைந்து போன மாதிரி சிறிது நேரம் இருந்து விட்டு, பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பினார். என்னவென்று அன்பர்கள் வினவியபோது, பலர் கூடியிருந்து வழிபட்டுக் கொண்டிருந்த ஓரிடத்தை விவரித்து அங்கே தன்னை எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டிருந்ததை அறிந்து, அங்கே அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்கச் சென்றதாகவும் சொன்னார்.

அந்தரங்க சுத்தியுடன் செய்யப் படுகிற எல்லாப் பிரார்த்தனைகளையும் இறையருள் நிறைவேற்றுகிறது. நம்முடைய ஒவ்வொரு அழைப்பையும் இறையருள் செவிமடுத்துக் கேட்கிறது, உரிய பதிலும் தருகிறது. நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதனுடைய வலிமை தெரியும்!

பிரச்சினைகள் சூழும்போது..!


1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்" அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.

இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”

1 comment:

  1. நீங்கள் தந்த 'அரவிந்தாமிர்த' சுட்டி மூலம் என்னுடைய பல எண்ணங்களுக்கு பதில்கள் கிடைக்கின்றன. மிக்க நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!