மண்ணுமோகனுக்கு வந்த கவலை! கரிசனம்!




நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகில்உள்ள மூன்று  குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தையாக உள்ளது என்றும், இது இந்திய தேசத்திற்கு அவமானமாக இருக்கிறது என்றும் பிரதமர் இன்று கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ள்ளாராம்! ஆச்சரியம் தான்! தன்னுடைய அமைச்சரவை சகா ஒவ்வொருவருக்கும் உத்தமர் சர்டிபிகேட் கொடுத்தது போக நேரமிருந்தால்,கொஞ்சம் அரசு வேலைகளையும் பார்க்கும் ஒருவருக்கு நாட்டைப்பற்றிக் கூட கவலைப்பட நேரம் இருந்திருக்கிறது என்றால் அது அதிசயத்திலும் பெரிய அதிசயம் தான்! 
                                                                        
தேர்தல் சமயமாயிற்றே, கவலைப்படாமல் இருக்க முடியுமா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்! ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் விவசாய அமைச்சராக ஒருவர் இருக்கிறார்! சரத் பவார்! விவசாயிகள், மற்ற எது எப்படி எக்கேடு கேட்டுப் போனாலும் பரவாயில்லை, கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பை மட்டும் விட மாட்டார்! ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாக்கள் வந்து உலக சாதனை செய்கிற வரை ஊழல் பெருச்சாளிகளில் அவர் தான் நம்பர் ஒன்! இந்தாலிய மம்மிகளை விடவுமே என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்!

இப்படி ஒரு விவசாய அமைச்சரபை வைத்துக் கொண்டு, பெட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிற மந்திரிகளை வைத்துக் கொண்டு மண்ணு மோஹன்சிங் தேசத்தைப் பற்றியும் கவலைப் படுகிறாராம்! 


எத்தனையோ பொய்களை நம்பிய நாம், இதை மட்டும் நம்ப மறுப்போமா என்ன!  

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் இந்திய விவசாயிகளின் நிலைமை , கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளில், அதாவது அரசு ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்ற நாளில் இருந்தே, மிகவும் பரிதாபத்துக்கு ஆளாகி வருகிறது.

இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்த செய்தி கட்டுரையைப் படித்துப் பாருங்கள்! அதில் சொல்லப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களின் பின்னே லட்சக்கணக்கான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கண்ணீர் இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒரு அரசியல் கொடுமை இருக்கிறது!


மானியங்கள், கடன்கள் எல்லாமே இருப்பவர்களுக்குத் தான்! தேவைப்படுகிறவர்களுக்கு அல்ல! அரசு அறிவிக்கும் திட்டங்களில் உண்மையிலேயே பயன் அடைபவர்கள் யார்?  கேள்வியை உரக்கக் கேட்கவேண்டிய தருணம் இது!

தடம் மாறும் கிராமிய வங்கிகள்!

பி.எஸ்.எம். ராவ்,இன்றைய தினமணியில் எழுதி வெளியாகி இருக்கும் கட்டுரை

ஒரு குழாய் மூலமாக பத்து மணி நேரத்தில் ஒரு தொட்டியை நீரால் நிரப்ப முடியும் என்று வைத்துக் கொள்வோம். மற்றொரு குழாயைத் திறந்துவிட்டால் ஒரு மணி நேரத்தில் தொட்டி காலியாகிவிடும் என்றால்,  இரு குழாய்களும் திறந்திருக்கும்போது எவ்வளவு நேரத்தில் தொட்டி முழுமையாக நிரம்பும்?

 பள்ளிக்கூடத்தில் நாம் படித்த இந்தக் கணக்குக்கு விடை ஒரு காலத்திலும் முடியாது என்பதுதான்.

ஆனால், கிராமியக் கடன்கள் விஷயத்தில் அரசு இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதுதான் நமது அரசின் கவர்ச்சிகரமான கோஷம். இதைக் கூறித்தான் இப்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். அரசியல் பொதுக் கூட்டமானாலும் சரி, தேர்தல் பிரசாரமானாலும் சரி, நாடாளுமன்ற அவைகளில் நடக்கும் விவாதங்களானாலும் சரி எல்லாவற்றிலும் இந்த மயக்கும் வாக்கியத்தைக் கூறுவதற்கு நமது ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை!.

ஆனால், இதெல்லாம் வெற்றுப் பேச்சுதானே தவிர, நிஜத்தில் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கு நேரெதிர்தான். எந்த அளவுக்கு அனைவரையும் வளர்ச்சியில் உள்ளடக்குவதற்கான முயற்சி நடக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு வேகமாக வெளியேற்றும் பணி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாவிதமான திட்டங்களிலும், நடவடிக்கைகளிலும் இதே கொள்கையைத்தான் நமது அரசு கடைப் பிடித்து வருகிறது. சொல்லில் ஒன்றும் செயலில் ஒன்றுமாக அரசின் பணி இதே ரீதியில் தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது சாத்தியமாகப் போவதில்லை.

 இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனாலும், தங்களது கோஷங்களை அவர்கள் நிறுத்துவதாக இல்லை. மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதை எண்ணிக்கூட வெட்கப்படாமல், ஏழைகளை முன்னேற்றுவதற்காக அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் கொல்கத்தாவில் நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்துக்கான விவசாய வங்கிக்கடன் இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதாவது நிதியாண்டுக்கு ரூ. 4.75 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அதில், மார்ச் முதல் செப்டம்பர் 2011 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்பது பிரணாப் தரும் புள்ளி விவரம். இதன்படி இந்த நிதியாண்டின் முழுமையான இலக்கும் எட்டப்பட்டுவிடும்.

இதற்குச் சில நாள்களுக்கு முன்பு பிரணாப் இன்னும் உற்சாகமாக இருந்தார். நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடன்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். நபார்டு வங்கியின் தலைவரும் பிரணாபை ஆமோதித்தார். அவர் சொன்ன தொகை ரூ.5.2 லட்சம் கோடி!

இவர்களது கணிப்பு சரிதான். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தக் கணிப்பு பொய்த்துப் போவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. வங்கிகள் மூலம் வழங்கப்படும் விவசாயக் கடன்களை 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் அரசு முடிவு செய்தது. ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இரண்டே ஆண்டில் இந்த இலக்கு எட்டப்பட்டது. அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் இலக்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. சொல்லிவைத்தாற்போல ஒவ்வொரு ஆண்டிலும் இலக்கைத் தாண்டி கடன்கள் வழங்கப் பட்டதுதான் சுவாரசியமான விஷயம்.

2008-09 முதல் 2010-11 வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் முறையே ரூ.2.8 லட்சம் கோடி, ரூ.3.25 லட்சம் கோடி, ரூ.3.75 லட்சம் கோடி என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், முறையே ரூ.2.87 லட்சம் கோடி, ரூ.3.85 லட்சம் கோடி, ரூ.4.47 லட்சம் கோடி இலக்குகளைக் கடந்து கடன்கள் வழங்கப்பட்டன.

 வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான இலக்குகள் நிர்ணயிக்கப் படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயத்துறைக்கு ரூ. 40 லட்சம் கோடி தேவை என்று நபார்டு வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.கே.மித்ரா கூறியிருக்கிறார்.

இந்தப் புள்ளிவிவரங்களைப் படிப்பவர்களுக்கு சில நியாயமான சந்தேகங்கள் எழக்கூடும். அரசுதான் இவ்வளவு கடன்களை வழங்குகிறதே, பிறகும் ஏன் விவசாயிகள் தனியார் நிறுவனங்களை நாடுகிறார்கள், கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏன் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள் என்று கேட்கலாம்.

தேசிய குற்றப் பதிவு அமைப்பின் ஆவணங்களின்படி 1995 முதல் 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது சர்ச்சைக்குரிய எண்ணிக்கைதான். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தற்கொலைகள் குறைந்திருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்.

2011-ம் ஆண்டில் வெறும் 800 பேர்தான் தற்கொலை செய்து கொண்டதாக வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் பிரத்யேகமாக ஒரு புள்ளி விவரத்தைத் தருகிறார்.

எது எப்படியிருந்தாலும், கடன்தொல்லை காரணமாக அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அரசு என்னதான் விவசாயிகளுக்கு கடன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்தாலும், இலக்குகளைத் தாண்டியும் கடன்கள் வழங்கப்படுவதாகப் புள்ளிவிவரங்களை அடுக்கினாலும், தேவைப் படுவோருக்கு அந்தக் கடன்கள் சென்றடையவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அரசு கூறுவது வெறும் வாய்ஜாலம் என்பதை தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை உணர்த்திக் கொண்டிருக்கிறது. கடன் வழங்கும் முறையில் குறைபாடு இருப்பதற்கு இதுவே ஆதாரம்.

விவசாயம் செய்வோரில் 80 சதவிகிதம் பேர் சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள். இவர்களுக்குக் கடன் வழங்குவதே விவசாயத்தை பாதுகாப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்குமான வழி முறை. ஆனால், இவர்களுக்குக் கடன்கள் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை. இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சாரங்கி குழு, விளிம்பு நிலை விவசாயிகளில் வெறும் 14 சதவிகிதம் பேருக்கு மட்டும் வங்கிக் கடன் போன்ற அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைப்பதாகக் கூறியிருக்கிறது.

 இந்தியாவில் 87 சதவிகித விளிம்புநிலை விவசாயிகளுக்கும் 70 சதவிகித சிறு விவசாயிகளுக்கும் வங்கிக்கடன் கிடைப்பதில்லை என்று உலக வங்கியே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களை

இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் விவசாயிகளில் 51 சதவிகிதம் பேருக்கு எந்தவிதமான கடனோ, பிற வங்கிச் சேவைகளோ கிடைப்பதில்லை என்கிற உண்மை புலனாகும்.

ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையின்படி வெறும் 27 சதவிகித விவசாயிகளுக்கே அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைக்கின்றன. இதிலும் மூன்றில் ஒரு பகுதியினர் தனியார் அமைப்புகளின் மூலம் கடன் பெறுபவர்கள். அதாவது 18 சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் கிடைக்கின்றன. அந்த 18 சதவிகித அதிருஷ்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பணக்கார, பெரு விவசாயிகள் அல்லது அதிகாரம் படைத்தவர்கள்.
இது ஒன்றும் அறியாமலோ தெரியாமலோ நேர்ந்துவிட்டது கிடையாது. 1990-களில் அரசு கொண்டு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுதான் இது. அரசு வங்கிகள் அனைத்தும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும், கிராமப்புற ஏழைகளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் என்பவையெல்லாம் அந்தக் கொள்கை மூலமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

ஒருபுறம் கிராமப்புற ஏழைகளுக்கு எளிதாகக் கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதே லட்சியம் என்று வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருக்கும் வங்கிகள், இன்னொருபுறம் கிராமங்களில் தங்களது கிளைகளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.

ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களின்படி 1991-ம் ஆண்டில் கிராமங்களில் 35,206 வங்கிக் கிளைகள் இருந்தன. 2011-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 33,602-ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் நகரங்களில் தெருவுக்குத் தெரு வங்கிகள் திறக்கப் பட்டிருக்கின்றன.
 1991-ல் வங்கிகளின் 58.46 சதவிகித கிளைகள் கிராமப்புறங்களில் இருந்தன. இப்போது அது 36.10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

அதேபோல், கிராமப்புறக் கடன்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் போன்றவையும் தங்களது நோக்கத்தை மறந்து வேறு வகைக் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிவிட்டன. 1993-94-ம் நிதியாண்டில் 62 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன்கள் வழங்கிக் கொண்டிருந்த கூட்டுறவு வங்கிகள் 2009-ம் ஆண்டில் வழங்கிய விவசாயக் கடன்களின் அளவு வெறும் 12 சதவிகிதம் மட்டுமே!

பிராந்தியக் கிராமிய வங்கிகளுக்கும் இதே நிலைதான். கிராமப் புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கிகள், இப்போது வழக்கமான வர்த்தக வங்கிகளைப் போலச் செயல்பட்டு வருகின்றன. கிராமங்களையும் ஏழ்மையையும் மறந்து, பண ஆதாயம் தேடும் வழிகளை மட்டுமே அந்த வங்கிகள் கடைப்பிடித்து வருகின்றன. கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. அரசு இதைப்பற்றி வாய்திறப்பதேயில்லை.

இப்படி எல்லா வங்கிகளும் கிராமங்களையும், விவசாயத்தையும் கைவிட்டுவிட்டதால்தான் மக்கள் தனியார்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறுங்கடன் அமைப்புகள் என்கிற பெயரில் கந்து வட்டிக்காரர்கள் பெருகி, மக்களிடமிருந்து வியர்வையையும் ரத்தத்தையும் வட்டியாக உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அரசு, இன்னமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றிப் வாய்கிழியப் பேசிக் கொண்டிருக்கிறது.

பருவமழை பொய்த்துப் போவது, பிற இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, விதைத்த பணத்தைக் கூட அறுவடை செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுமானால், முதலில் கிராமிய வங்கிகளை வர்த்தக மயமாக்குவதைக் கைவிட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற மக்களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்பவையாக மீண்டும் மாற வேண்டும். இவைபற்றி அரசு அக்கறை எடுத்துக்கொள்ளாதவரை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வெற்று வாக்குறுதியாகத்தான் இருக்கும்.
 களவாணி காங்கிரசைத் தூக்கி எறிவதே தேசத்தின் விடிவுகாலம்! 

2 comments:

  1. இந்திய வரலாற்றில் இந்த மண்ணு மோகன் சிங் ஒரு கேவலமான இடத்தில் தான் இருக்கப்போகிறார் என்பதில் அவருக்கு ஒன்றும் தெரியாதா புரியாத விஷயமில்லை. இந்த கையாலாகாத மனிதரை இன்னமும் இன் நாட்டின் பிரதமராக நாம் வைத்துக்கொண்டிருப்பதில் கூட நமக்கு வெட்கமோ,மான ரோஷமோ ,சூடு சொரனையோ இல்லை. நாமெல்லாம் மிகச்சிறந்த ஜனநாயக வாதிகள். ஆட்சியில் இருந்த, இருக்கும் அத்தனை நாதாரிகளும் நம்மை நன்றாகவே புரிந்துவைத்துள்ளனர். நமக்கும் வேறென்ன வாய்க்கும்??

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    மண்ணுமோகன் சிங் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! இப்போது பிரதானமான கேள்வி, நாமும் மண்ணுமோகன் மாதிரியே பொறுப்பு எதுவும் இல்லாதவர்களாக இருந்து விடப்போகிறோமா என்பது தான்!

    துப்புக் கெட்டவர்களை ஆட்சியில் அமர்த்திய ஒரே குற்றத்திற்காக இந்திய மக்கள் சர்வதேச அரங்கில் கேவலப் படுத்தப்பட்டு வருகிறோம். வெள்ளைத் துரைமாருக்குத் தலை வணங்கும் அடிமைகளுக்கு, நாம் அடிமைகளாக ஆக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம். விடுதலை நம் கைகளில் மட்டுமே இருக்கிறது! துப்புக் கெட்ட அரசியல்வாதிகளிடம் நம்முடைய விடுதலையையும் தொலைத்து விட்ட துப்புக் கெட்டவர்களாக ஆகிவிடாமல் பாதுகாத்துக் கொள்வதும் நம்மிடமே இருக்கிறது.

    என்ன சொல்கிறீர்கள்?என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்கள்! என்று கேட்கும் சில பதிவுகளிலேயே இதற்கான விடையும் இருக்கிறதே!

    http://consenttobenothing.blogspot.com/2010/01/blog-post_20.html

    http://consenttobenothing.blogspot.com/2010/06/blog-post_22.html

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!