எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?…
பெப்ருவரி பிறந்தவுடனேயே, இனம் புரியாத ஒரு பரபரபப்பும், எதிர்பார்ப்பும் தொடங்கி விடுகிறது.
சிறுவயதில் தீபாவளி எப்பொழுது வரும் என்று பட்டாசு வெடிக்கும் கனவுகளோடு காத்திருப்பதைப் போல, பிறந்த நாள் எப்பொழுது வரும், புது ஆடைகள், பரிசுகள் வாழ்த்துக்கள் என்கிற கனவுகளோடு காத்திருப்பதைப் போல, ஸ்ரீ அரவிந்த அன்னை அவதரித்த பெப்ருவரி மாதம் பிறந்தவுடனேயே, ஸ்ரீஅன்னையின் பிறந்த நாளுக்காக, ஸ்ரீ அன்னையின் ஆசீர்வாதச் செய்திக்காக காத்திருப்பது, இப்போதெல்லாம் ஒரு தவமாகி விட்டது.
கொடுப்பினை உள்ளவர்கள் புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்று, வரிசையில் காத்திருந்து, கூட்டுத் தியானத்திலும், பின்னர் ஸ்ரீ அன்னையின் அறைக்குச் சென்று மானசீகமாக, ஸ்ரீ அன்னையிடம் வாழ்த்துச் செய்தியைப் பிரசாதமாகப் பெறும் பேற்றினைப் பெறுகிறார்கள்.
புதுவை செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள தியான மையத்திற்கோ, தங்கள் இல்லத்திலோ, ஸ்ரீ அரவிந்த அன்னையை அவருடைய உருவப் படத்தை வைத்து வணங்கி, அதே அருளை, சந்தோஷத்தை அடைகிறார்கள்.
நாம் மதித்து, வணங்கும் பெரியோர்களை, மகான்களை, அவர்களை மலர் தூவி வணங்குவதோடு மட்டும்,நம்முடைய பொறுப்பும் கடமையும் முடிந்து விடுவதில்லை.அவர்களுக்குச் செய்கிற உண்மையான மரியாதை, வழிபாடு என்பது, அவர்கள் எந்த செய்தியைச் சொல்வதற்காக இந்த பூமிக்கு வந்தார்களோ, அதன்படி நடந்து காட்டுவதில் தான் இருக்கிறது.
ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் மேற்கொண்ட முயற்சியினால், மாதவத்தால், ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், அருட்பெரும் ஜோதியாக, அதிமானசப் பொன்னொளி இந்த மண்ணில் இறங்கியதும் இதே பெப்ருவரி மாதத்தில் தான்.
அவர்கள் தங்களுடைய தவநிலையில் கண்ட, ஸ்ருஷ்டியில் மனிதனுக்கு அடுத்த பரிணாமத் தோற்றம் முழுமையாக வெளிப்பட, உண்மையோடு ஒருங்கிணைந்து அன்னையின் குழந்தைகளாகத் தங்களைக் கருதும் ஒவ்வொருவரும் செயலில் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.
எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது?
ஸ்ரீ அரவிந்தர் "அன்னை" என்ற தலைப்பில், ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில், மூன்றாவது கடிதத்தில் இதைப் பற்றி விளக்குகிறார்.
“To sit down in inert passivity and say, "If I am to have faith I shall have it, the Divine will give it to me", is an attitude of laziness, of unconsciousness and almost of bad-will.
For the inner flame to burn, one must feed it; one must watch over the fire, throw into it the fuel of all the errors one wants to get rid of, all that delays the progress, all that darkens the path.
If one doesn't feed the fire, it smoulders under the ashes of one's unconsciousness and inertia, and then, not years but lives, centuries will pass before one reaches the goal.
One must watch over one's faith as one watches over the birth of something infinitely precious, and protect it very carefully from everything that can impair it.
In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer.
The Mother
Collected Works Vol.9 pp352
நமக்குள்ளே இருக்கிற உள்ளொளியைக் காண வேண்டும் என்கிற வேட்கைத் தீ அணைந்து விடாமல், ஆர்வத்தால் கொழுந்து விட்டெரியச் செய்ய வேண்டும்,"எல்லாம் தானாகவே நடக்கும்" என்கிற சோம்பேறித்தனமான மனோபாவத்தை விட்டொழித்து,
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!
முதலாழ்வார்களில் முதல்வராகக் கொண்டாடப் படும் பொய்கை ஆழ்வார் சொல்கிற இந்தப் பாசுரம் வழியை அழகாகச் சொல்கிறது.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்
அதையொட்டி விளைந்த, முதலாழ்வார்களில் இரண்டாமவர், பூதத்தாழ்வார் சொல்லும் இந்தத் தமிழ்ப் பாசுரம் அடுத்த அடியைச் சொல்கிறது.
முதல் பாசுரம் புற ஒழுக்கத்தால் தூய்மை பேண, தெய்வீகம் தானே இறங்கி வர வழி கிடைக்கும் என்பதைச் சொல்கிறது. இரண்டாம் பாசுரமோ, அக ஒழுக்கத்தால், தெய்வீக அன்பு மலர்ந்து நெய் விளக்கேற்றி ஞானச் சுடரைப் பரந்தாமனுக்கு ஏற்றுகிறது.
அறியாமையும், இருளும் கூடின தொடக்கத்தில், பூரணமான நம்பிக்கையே தெய்வீக சக்தியின் நேரடி வடிவமாக, அறியாமையையும் இருளையும் எதிர்த்து வெல்லும் துணையாக நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.
ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
உனது ஒளியினால் அனைத்தையும் நிறைவு செய்வாய். உனது ஒளியின் கீழ வர முரண்டு பிடிக்கும், பழக்கங்களின் அடிமையாகவே இருக்க முயலும் பகுதிகளையும், நீ அறிய சமர்ப்பிக்கிறேன்.
நான் செய்கிறேன், எனது விருப்பப்படி, என்கிற கீழ்நிலையிலிருந்து விடுபட வரம் அருள்வாய்.
எனது விருப்பப்படியல்ல, உனது சித்தத்தின்படியே எல்லாம் நடந்தேறட்டும்
என்பது உள்ளார்ந்த பிரார்த்தனையாக இருக்க வரம் அருள்வாய்.
ஒளியை நோக்கி உயருகிற திருவுரு மாற்றத்திற்குத் தகுதி உள்ளவனாகச் செய்வாய் தாயே! எல்லா நிலைகளிலும், உனது பிரியத்திற்குத் தகுதியானவனாக, உனது குழந்தையாக இருக்கும் பேற்றினை வரமாக அருள்வாய்..
ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி,சத்யமயி பரமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!