கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்!


ஹரி மோகனுக்கு, நினைக்க நினைக்க ஆற்றமாட்டாமையும், கோபமும் ஒருசேர எழுந்தன. பின்னே, ஏழை என்ன தான் செய்ய முடியும்? ஒரு ஒட்டு வீட்டில், கிழிந்த பாய், தலையணையில், அமர்ந்து பொருமிக் கொண்டிருந்தான்.

"என்ன நியாயம் இது? நினைவு தெரிந்த நாள் முதல் ஒருவருக்கும் நான் தீங்கு செய்ததில்லை. பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டவனும் இல்லை. பரம சாதுவாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்-ஆனாலும், கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்களையே அந்த கிருஷ்ணன் கொடுத்துக் கொண்டிருக்கிறான், கேட்டால், இது உன்னுடைய கர்ம வினை, முன் ஜென்மத்தில் நீ செய்த பாவங்களைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ கர்மவினை, புண்ணியம் பாவம் என்று சொல்வது எல்லாம், வெறும் பித்தலாட்டம் என்று தான் படுகிறது. அந்த விஷமக் காரக் கண்ணன், தன் மேல் எவரும் பழி சொல்லாமல் இருப்பதற்காகத் தான் கீதையில் இப்படி ஒரு பொய்யைச் சொல்லி வைத்திருக்கிறான்."

தூரத்தில் தெரிந்த கிருஷ்ணன் கோவிலை ஒரு முறை வெறித்துப் பார்த்து விட்டு மறுபடி தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்:

"அவன் சொல்கிறபடி, முந்தைய பிறவியில் நான் பெரும் பாவங்களைச் செய்திருந்தால், என்னுடைய இன்றைய இழிநிலை அதனால் தான் என்றால், இப்போதும் கூட அந்தத் தீவினைகளின் நிழல், நினைவுகள் என் நெஞ்சில் எழுந்து கொண்டு தான் இருக்கும். அவ்வளவு பெரிய பாவச் சுமை, ஒரு பிறவியோடு போயிருக்காது, மனம் கூட இந்த அளவு களங்கமற்றதாக இருந்திருக்காது...கர்ம வினை, பாவம், புண்ணியம் என்பதெல்லாமே சுத்தப் பொய்."

ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தையே எடுத்துக் கொள்ளலாமே..அவனுக்கு இன்றைக்கு இருக்கிற செல்வம், அந்தஸ்து, ஆள்பலம், செல்வாக்கு இதையெல்லாம் பார்த்தால், முந்தின பிறவியில் அவன் பெரிய ஞானியாகக் கூட இருந்திருக்க வேண்டும்.இப்போது அவனிடத்தில் அப்படி நல்ல விஷயங்கள் இருந்ததற்கான அடையாளம் எதுவுமே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவனைவிட சுயநலக்காரனும், கிராதகனும் எவனுமே இல்லை."

"இந்த கர்மவினை, புண்ணியம் , பாவம் இதெல்லாம் இல்லவே இல்லை. அந்தப் பொல்லாத பயல் கிருஷ்ணனின் பசப்பு வேலை மட்டுமே. என்னை மாதிரி ஒன்றும் அறியாத அப்பாவிகளை மயக்க மட்டுமே ஏற்பட்டது."

"அடேய், பொல்லாத விஷமக்காரப் பயலே! கிருஷ்ணா! நீ பெரிய எத்தன். என் பக்கத்தில் வராத வரைக்கும் நீ பிழைத்தாய். நீ மட்டும் என் கையில் அகப்பட்டால், என்ன செய்வேன் தெரியுமா? உன்னைக் கட்டி வைத்து, என் ஆத்திரம் தீறகிற வரை உதைப்பேன். நீ எப்படிப்பட்ட பொய்யன் என்பதை இந்த ஊரே தெரிந்து கொள்கிற வரை உதைப்பேன், உன்னை விட மாட்டேன்."

"நீ மட்டும் என் கிட்ட வந்து பார்....உன்னை என்ன செய்கிறேன் என்று....."

இப்படி ஹரி மோகன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கே ஒரு ஒளிவட்டம் தோன்றியது.கருப்புத்தான், ஆனால் எவ்வளவு வசீகரம்! மயிற்பீலி அணிந்த ஒரு சிறுவன் ஹரி மோகன் அருகே நின்றான். இடையில் அவனது புல்லாங்குழல், கால்களை ஒய்யாரமாக வளைத்து நின்ற படியே, "இதோ வந்து விட்டேன்" என்றான்.

ஏனோ,ஹரி மோகனுக்குத் தன்னுடைய நினைப்பின் மீதே வெட்கம் ..இந்த அழகான குழந்தையையா கட்டிப் போட்டு உதைக்க வேண்டும் என்று எண்ணினோம்...தன் மோசமான நினைப்பின் மேல் எழுந்த பச்சாதாபம் ஒருபுறம், இந்த சிறுவன் முன்னால் காட்டிக் கொள்வதா என்கிற வெட்கம் ஒருபுறம்..சிறுவனிடம், "இங்கு எதற்காக வந்தாய்?" என்றான்.

"எதற்காகவா? நீ என்னைக் கூப்பிடவில்லை? என் கிட்ட வந்து பார் என்று நீ தானே கூப்பிட்டாய்..அதுதான் வந்து விட்டேன், நீ ஆசைப் பட்டபடி, கட்டி வைத்து உதைப்பாயோ, உதைத்தபிறகு கட்டிப் போடுவாயோ, செய்துகொள்."

கொஞ்சம் கூட தயக்கமில்லாமல், சிரித்துக் கொண்டே சிறுவன் சொன்ன வார்த்தையில் ஹரி மோகன் மயங்கி நின்றான். 'என்ன காரியம் செய்து விட்டேன், இந்த மோகனச் சிறுவனை அள்ளி அணைத்துக் கொஞ்ச வேண்டும் என்கிற நினைப்பில்லாமல், கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று நினைத்தேனே, எவ்வளவு பெரிய தப்பைச் செய்ய இருந்தேன்' அடிமனது அரற்ற, ஹரி மோகன் தலை கவிழ்ந்து நின்றான்.

"இங்கே பார் ஹரி மோகன், நான் தான் ஏற்கெனெவே வாக்குக் கொடுத்திருக்கிறேனே..'யே யதா மாம் ப்ரபத்யந்தே..எவரெவர் எந்த முறையில் என்னை அணுக முயல்கிறார்களோ அதே முறையில் நான் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவேன்' அதுதான், கோபமேலீட்டால், என்னை அடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாய்.... உன் ஆசைப்படியே நானும் உன்னிடம் அடிபட வந்திருக்கிறேன்......ஆரம்பிக்க வேண்டியது தானே?"

"குட்டிப்பையா! எனக்கு ஒன்றுமே புரியவில்லை"

இதோ பார் ஹரி மோகன்! எதற்காகத் தலை குனிந்து நிற்கிறாய்? என்னைக் கண்டு பயப்படாதவர்களை எனக்குப் பிடிக்கும். என் மேல் தோழமை கொண்டு, என்னைத் திட்டவும் அடிக்கவும் என்னோடு விளையாடவும் வருகிறவர்களை ரொம்பப் பிடிக்கும்.இந்த உலகத்தை எதற்காகப் படைத்தேன் என்று நினைக்கிறாய்? ஒரு விளையாட்டிற்காகத்தான். என்னோடு விளையாடத் தயாராக இருக்கும் தோழர்களையே நான் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் பார், அப்படிப்பட்ட தோழர்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை."

"எல்லோருக்கும் கோபம் வந்தால் அதை என்னிடத்தில் தான் கொட்டுகிறார்கள். அவர்கள் வேண்டுவதைஎல்லாம் நான் உடனே அவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். செல்வம் வேண்டும், பதவி வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் இப்படி என்னிடத்தில் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சில பேருக்கு, உடனே மோட்சம் வேண்டும் இப்படி அவரவர்கள் வேண்டியதைக் கொடுக்கும் இயந்திரமாகவே என்னை நினைக்கிறார்கள். எனக்காகவே என்னை வேண்டுவார் ஒருவரும் இல்லை. எதையும் எதிர்பாராமல் என்னிடத்தில் அன்பு செலுத்துவார் எவரேனும் உண்டா என்று தேடிக் கொண்டே இருக்கிறேன்....சரி, அது கிடக்கட்டும், உனக்கும் எதோ என்னிடத்தில் வேண்டியிருக்கிறதல்லவா? கோபத்தில் என்னைக் கட்டி வைத்து அடிக்க ஆசைப் பட்டாய். இதோ நான் வந்து விட்டேன்."

ஹரிமோகன் கொஞ்ச நேரம் தயங்கிப் பிறகு சொன்னான்:" கிருஷ்ணா, மிகவும் அழகாகப் பேசுகிறாய். ஆனாலும், உன்னுடைய நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் புரியவே இல்லை."

உனக்குப் புரியும்படி சொல்கிறேன், கேட்பாயா?"

"நீயே சிறுவன், முளைத்து மூன்று இலை கூட விடாத சின்னப்பயல் எதை எனக்குப் புரிய வைக்கப் போகிறாய்? என்ன கற்றுக் கொடுக்கப் போகிறாய்?"

"என்னால் என்ன முடிகிறதென்று பொறுத்திருந்து தான் பாரேன், ?" வசீகரிக்கும் புன்னகையுடன் அந்த சிறுவன் ஹரிமோகனுடைய உச்சந்தலையை லேசாகத் தொட்டான்.

ஹரி மோகனுடைய உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. மூலாதாரத்தில் உறங்கிக் கிடந்த குண்டலினி ஐந்து தலை வெள்ளை நாகம் படமெடுத்து உயர்வது போல, மூண்டெழு கனலாக உச்சிக்கு உயர்ந்தது. தேகமே நான் என்ற நிலை விடுத்துத் தன் இயல்பான சூக்கும சரீரத்தில் இருப்பதைக் கண்டான். பக்கத்திலேயே, கண்ணனும் இருந்தான். இருவரும், ஒரு பெரிய மாளிகைக்குள் இருப்பதை ஹரிமோகன் அறிந்தான்.

என்ன இது, இது ஊர்ப் பெரிய தனக்காரன் செல்வரங்கத்தின் வீடு அல்லவா?

ஒரு கவலையும் இல்லாமல் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகத் தான் நினைத்த அதே செல்வரங்கம், கிழடு தட்டி, விசனத்தோடு, கண்களில் நீர் வழிய வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த போது, ஆட்சி அதிகாரத்தோடு எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்த அதே செல்வரங்கம் தானா இது? ஏன், ஒரு கோழிக் குஞ்சைப்போல நடுங்கிக் கொண்டிருக்கிறான்?

இந்த நிலையிலும் ஹரிமோகனுடைய பயம் போகவில்லை. யாராவது வந்து பிடித்துக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நையப் புடைத்து விடுவார்களோ?

"கிருஷ்ணா, என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறாயா? செல்வரங்கத்தின் செல்வாக்கு உனக்குத் தெரியாதா? அவனுடைய வேலைக்காரர்கள் நம்மைப் பிடித்து நன்றாக உதைக்கப் போகிறார்கள் பார். நம்மைத் திருடர்கள் என்று சொல்லப் போகிறார்கள்."

சிறுவன் கலகலவென்று சிரித்தான்," சொல்லிவிட்டுப் போகட்டுமே. திருட்டுப் பட்டம் எனக்குப் புதிதா என்ன? அட, நீயேன் இப்படி நடுங்குகிறாய்? காவல்காரர்கள் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது நீ செல்வரங்கத்தின் மனத்திற்குள் என்ன ஓடுகிறது, ஏன் அவன் இப்படி இருக்கிறான் என்பதைப் பார்."

"அது எப்படி இன்னொருவர் மனதிற்குள்....." ஹரிமோகன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னாலேயே கிருஷ்ணன் விடையைச் சொல்லி விட்டான். "உனக்கு செல்வரங்கத்தின் செல்வாக்கு, ஆள்பலம் இவைதானே தெரியும், கொஞ்சம் என்னுடையதையும் பாரேன்."

செல்வரங்கத்தின் மனதை ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போல, உள்ளிருக்கும் அனைத்தையும் பார்க்க முடிவதை ஹரி மோகன் உணர்ந்தான். செல்வரங்கத்தின் மனதில், பலவிதமான ஆசைகள், கோபங்கள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். எவ்வளவு பணம் இருந்த போதிலும் போதாது, போதாது என்று கூக்குரலிடும் பேராசை அவனை ஆட்டிப் படைப்பதையும், அவன் பணத்திலேயே குறியாக இருக்கும் உறவு, நட்பு சுற்றத்தாரையும், அவர்களால் கிலேசத்துடனும், ஆங்காரத்துடனும் செல்வரங்கம் தளர்ந்து போய் இருப்பதையும், அவனது ஆசை மகள் நடத்தை தவறி, ஊர்ப்பழிக்கு அஞ்சி அவளை வீட்டை விட்டு விரட்டி விட்டு, அந்த சோகத்திலேயே அழுதுகுமுறிக் கொண்டிருந்த செல்வரங்கத்தப் பார்த்த பொது, ஹரிமோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தவறுகளை உணரவோ, அதற்கு வருத்தப் படவோ அவன் தயாராக இல்லை. நான் நான் என்ற மமதை, அவனை இறைவனை அழைப்பதைத் தடுத்துக் கொண்டிருந்தது. இடை இடையே, யம தூதர்கள், செல்வரங்கத்தை வந்து வந்து மிரட்டி விட்டுப் போவதையும், இத்தனைக்குப் பின்னாலும், உயிர் மேல் ஆசையால், செல்வரங்கம் ஒரு கோழிக் குஞ்சு துடிப்பதைப் போல பயத்தில் துடிப்பதையும் பார்த்தான்.

"கண்ணா, இவன் ரொம்ப சந்தோஷமாக, கவலையே இல்லாமல் இருக்கிறான் என்றல்லவா எண்ணி இருந்தேன்? என்ன ஆயிற்று இவனுக்கு?"

கண்ணன் சொன்னான், "என்னவோ செல்வரங்கத்துடைய செல்வாக்கு, ஆள் பலத்தைப் பற்றிப் பேசினாயே, இப்பொழுது என்ன சொல்கிறாய்? இவனுக்கு இருப்பதை விட செல்வாக்கும், பலமும் எனக்கிருப்பதை மறந்து விட்டாயா? நானும் ராஜாவாக, நீதிபதியாக, தண்டிக்கும் காவலனாக இருக்க முடியும். இந்த விளையாட்டு உனக்குப் புரிகிறதா?"

ஹரிமோகன் உரத்துக் கூவினான்," அடக் கடவுளே, இது எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் கொடூரமாக அல்லவோ இது இருக்கிறது, இதை ஒரு விளையாட்டு என்று லேசாக உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது?"

ஷ்யாமசுந்தரன் உல்லாசமாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்: "எனக்கு எல்லாவிதமான விளையாட்டும் பிடிக்கும். அடிக்கவும் பிடிக்கும், அடிபடவும் பிடிக்கும். உன்னைப் போல, செல்வரங்கத்தைப் போல எல்லோருமே, எதையும் மேலோட்டமாகவே பார்க்கப் பழகி இருக்கிறீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மையான தன்மையில் பார்க்கத் தெரிவதே இல்லை. எதனுள்ளும் இருக்கும் உண்மையை அறியக் கூடிய நுட்பமான பார்வை இல்லை. அதனால் தான், நீ ஒருவன் தான் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி இருப்பது போலவும், செல்வரங்கம் போன்றவர்கள் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல், சந்தோஷமாக இருப்பதாகவும் தோன்றுகிறது. ஆண்டவன் கல்நெஞ்சுக்காரன், இரக்கமே இல்லாமல், உயிர்களை இப்படி வதைத்துக் கொண்டிருக்கிறான் என்று கோபப் பட்டு, என்னை அடிப்பதற்காகவே இங்கு அழைத்திருக்கிறாய் இல்லையா?"

"இதோ பார் ஹரி மோகன், நீ கஷ்டப் படுவதாகவும், செல்வரங்கம் சந்தோஷமாக இருப்பதாகவும் நினைத்தாய் அல்லவா? இப்போது செல்வரங்கம் மனதில் எத்தனை வேதனையை தேக்கி வைத்திருக்கிறான் என்பதையும் பார்த்தாய் அல்லவா? உண்மையில், ஆனந்தம், சந்தோஷம் என்பது மனதின் ஒரு நிலைதான். அதே மாதிரித் தான் வேதனை, துயரம் எல்லாம். மனதின் உரு மாற்றங்கள் தான் இந்த மகிழ்ச்சியும், வருத்தமும்.

உண்மை என்னவென்றால், ஒன்றுமே இல்லாத ஒருவன், துர்வினையே முதலாகக் கொண்ட ஒருவன் கூட, இடைஞ்சல்கள், ஆபத்துகள் மத்தியில், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

உன்னையே எடுத்துக் கொள், வரட்டுத் தனமான நல்வினைகளைச் சேர்ப்பதிலேயே நாட்களைச் செலவழித்து, கஷ்டங்களை நினைத்து வருத்தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாய். உன்னை மாதிரியே செல்வரங்கமும், வரட்டுத் தீவினைகளையே செய்து, மகிழ்ச்சியற்றிருப்பதையும் பார். அதனால் தான் நல்வினைகளால் நிலையற்ற கணப்பொழுதில் மறையும் சுகமும், தீவினைகளால் நிலையற்ற எளிதில் மறையும் துக்கமும், இன்னும் சில நல்வினகளால் நிலையற்ற துக்கமும், தீவினைகளால் நிலையற்ற சுகமும் கூட மாறி மாறி வருகின்றன. இப்படிப் பட்ட போராட்டத்தினால், நிலையான, உண்மையான ஆனந்தம் என்பதே கிடையாது, கிடைக்காது.

ஆனந்தமயமான இருப்பு என்னிடத்தில் இருக்கிறது. என்னிடம் வந்து, என் மேல் காதலால் உருகிக் கசிந்து, என்னைத் தேடி, என்னிடம் அன்பு கொண்டு நெருக்கி, என்னை வாட்டவும் துணியும் ஒருவனே என்னிடமிருந்து எல்லையற்ற மகிழ்ச்சியையும் பலவந்தமாகப் பறித்துக் கொள்கிறான். நானும் அவனிடத்தில் சந்தோஷமாகத் தோற்றுப் போகவும் தயாராக இருக்கிறேன்.

ஹரிமோகனுக்குத் தன்னிடத்தில் இருக்கும் குறை இன்னதென்று இன்னமும் புரியவில்லை. ஆனாலும், ஆர்வத்தோடு கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க ஆவலாகக் காத்திருந்தான்.

பதிவு கொஞ்சம் நீ....ண்டு விட்டது, நாமும் கண்ணன் பெயரைச் சொல்லிக் கொண்டே கொஞ்சம் காத்திருப்போமா?


கண்ணன் வந்தான்-மாயக் கண்ணன் வந்தான்
ஏழை கண்ணீரைக் கணடதும் கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!

நெடுநாட்களுக்கு முன்னால், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியீடான All India Magazine இல் வெளியான ஒரு வங்க மொழிக் கதை. ஆசிரியர் பெயர் தெரியாது. இதன் தமிழ்ப் பதிப்பு 'அகில இந்திய இதழ்' என்ற பெயரில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2002 இதழில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்ததன் தழுவல்.

11 comments:

  1. கண்ணனைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. ...அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே.எத்தனையோ கதை கேட்டிருந்தாலும், இது நீண்ட நாளாக மனதில் தங்கி இருந்த கதை. அவனே கூட ரசித்திருப்பான் போல இருக்கிறது அதனால் தான் ஏழு ஆண்டுகள் கழித்து மறுபடி என்னையும் உங்களோடு கேட்க வைத்திருக்கிறான்.

    ReplyDelete
  3. கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!

    ஏழு ஆண்கள் என்ன, எத்தனை ஆண்டுகளானாலும் இப்படிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது!

    ReplyDelete
  4. //உண்மை என்னவென்றால், ஒன்றுமே இல்லாத ஒருவன், துர்வினையே முதலாகக் கொண்ட ஒருவன் கூட, இடைஞ்சல்கள், ஆபத்துகள் மத்தியில், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.//

    இதை சொல்றதுக்கு எதுக்கு கண்ணன்!?

    ReplyDelete
  5. கண்ணன் பிறந்ததே அதைச் சொல்வதற்குத்தானே! மகாபாரதம் முழுவதையும், கீதை முழுவதையும் படித்தபிறகும் கூட அதன் சாரமாக இரண்டே வார்த்தைகள்தான்! மா சுச: கவலைப் படாதே!

    அதைத் தெளிவாகச் சொல்வதற்கு அன்றையிலிருந்து இன்றைக்கு வரை அவன் தான் வர வேண்டியிருக்கிறது!

    ReplyDelete
  6. //இரண்டே வார்த்தைகள்தான்! மா சுச: கவலைப் படாதே!//


    ஹாஹாஹாஹா!

    எப்படி இப்படி!

    மகிழ்வுறு! என்று ஒற்றை வார்த்தையில் சொன்னால் கண்ணனின் குடி முழுகிப்போயிருமா!?

    ஒத்துகிறேன், உங்களுக்கு காமெடி நல்லா வருது!

    ReplyDelete
  7. சந்தோஷமா இருன்னு ஒருத்தர்கிட்ட சொன்னாப்ல மட்டும் சந்தோசம் வந்துடுமா வால்ஸ்?

    ஆனாக்க, கவலைப்படாதேன்னு சொல்றப்ப, நான் இருக்கேன் துனைக்குன்னு ஒரு தெம்பும் தைரியமும் கொடுக்கிறதும் கூட இருக்கு இல்லையா?

    ReplyDelete
  8. //சந்தோஷமா இருன்னு ஒருத்தர்கிட்ட சொன்னாப்ல மட்டும் சந்தோசம் வந்துடுமா வால்ஸ்?

    ஆனாக்க, கவலைப்படாதேன்னு சொல்றப்ப, நான் இருக்கேன் துனைக்குன்னு ஒரு தெம்பும் தைரியமும் கொடுக்கிறதும் கூட இருக்கு இல்லையா?//

    நீயாக உணர் என்பதை விட்டு, நான் இருக்கேன் என்பது ஒரு வகையில் பயமுறுத்துதல்! கடவுளுக்கு வேலை அதுதானா!?

    ReplyDelete
  9. உன்னையே நீ அறிவாய்! இது சாக்ரடீஸ்! நான் யார் என்று தெரிந்து கொள் -இது ரமணர்! இப்படி அரிவாள் அறிந்து பார் என்று சொன்னவர்களும் இந்த பூமிக்கு நிறையப்பேர் வந்தார்கள்!ஆனால் யார் கேட்கிறார்கள்? நீ யார் என்பதை நீயாக உணர் என்று சொல்வது எளிதுதான், உணர்ந்துவிடமுடியுமா?

    அது தான் கடவுளின் துணை ஒத்தாசை கொஞ்சமல்ல நிறையவே தேவைப்படுகிறது! அதுதானே கடவுளின் வேலை!

    ReplyDelete
  10. அரிவாள் என்று தவறாக வந்திருக்கும் இடத்தில் அறிவால் என்று இருக்கவேண்டும்!

    ReplyDelete
  11. //கடவுளின் துணை ஒத்தாசை கொஞ்சமல்ல நிறையவே தேவைப்படுகிறது! அதுதானே கடவுளின் வேலை! //

    கடவுளுக்கே தன்னை பாதுகாக்க முடியவில்லை பூசாரி, ஒரு பூட்டு. அந்தாள் ஒத்தாசை பண்ணி நாம அறிஞ்சா எல்லாம் விளங்கிடும்.

    இதுவரை ”நீ”யென்று கருதிய ”நீ” அழிந்தொழிய “நீ” அல்லாத “நீ” தான் “நீ”

    -வைரமுத்து

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!