தகவல் அறிவது நமது உரிமை!மு.க.வுக்கும் நீதிமன்றம் குட்டு!


தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தினமணி நாளிதழில் வெளியாகி இருந்த இரண்டு தலையங்கங்களைத் தொட்டு எழுதியிருந்த பதிவுகள் இவை. ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றின், உருப்படியான சாதனை என்று ஒன்றிரண்டைச் சொல்ல முடியுமானால், அதில் இந்தத்தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்று. ஆனால், வெளிப்படையான நிர்வாகம், சரியான விவரங்கள் ஊழல் செய்யும் புள்ளிகளுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும் என்பது புரிய வந்ததுமே, இந்தச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளைக் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துவிட்டது.
 


தமிழ்நாட்டில் அன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த கருணாநிதி சட்டத்தை வளைப்பதிலும், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் , எப்படிப்பட்ட கில்லாடி என்பது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் வெளியாகி இருக்கிறது.ஜெயலலிதா தொடர்ந்து நீதிமன்றங்களில் குட்டு வாங்கிக் கொண்டிருப்பதைப் பறைசாற்ற ஆயிரம் ஊடகங்கள், பதிவுகள் இருக்கின்றன. தாத்தா செய்திருக்கும் சாதனையை அவை கண்டு கொள்வதில்லை என்பதில் எனக்கு ஏகத்துக்குமே வருத்தமுண்டு.எமெர்ஜென்சி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் எச் ஆர் கண்ணா ஒருவர் தவிர, நீதிபதிகளாக இருந்தவர்களே பயந்து, வளைந்து கொடுத்தார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருப்பது போல, தலீவர் கலைஞர் செய்தது பதிவு செய்யப்படவில்லை!

நேர்மையான நீதிபதி என்று வெகுஜன ஊடகங்களால் சித்தரிக்கப் பட்டவர்களுமே கூட, கலைஞர் ஒதுக்கீடு செய்த வீட்டுமனை, வீடுகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் (அதிக விவரங்கள் வேண்டுவோர் http://savukku.net  தளத்தில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்), மாநிலத்தில் இருந்த நீதி மன்றங்கள் அந்த கால கட்டத்தில் அரசுக்கு எதிராக ஒரு சிறு முணுமுணுப்பைக் கூட  எழுப்ப முனையவில்லை என்பதும் வெளியே தெரிந்தாலும் அதிகம் கவனிக்கப்படாத அல்லது கண்டுகொள்ளப் படாமல் விடப்பட்ட விஷயம் தான்!

ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட நீதிபதி பி டி தினகரன், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் தலைமை நீதிபதி கே ஜி பாலக்ருஷ்ணன்  முதலானோர் அன்றைய அரசின் கனிவான பார்வையைப் பெற்றவர்கள் என்பதும், இந்தநேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது. 

மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஜெய லலிதா உச்ச நீதிமன்றத்தின் குட்டை நேற்றைக்கு வலுவில் வாங்கி இருக்கிறார். சென்னை நீதிமன்றம் தொடர்ந்து குட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னமும் குட்டும்!அது தம்பட்டம் அடிக்கப் படுகிற அளவுக்குக் கருணாநிதி வாங்கிய குட்டுக்களையும் பார்க்க வேண்டாமோ?

இப்போது கருணாநிதி அல்லது ஜெயலலிதா வாங்கிய குட்டு அல்ல விஷயம்!

இந்த தேசத்தில் ஊழல் செய்கிற அரசியல்வாதிகள், அவர்களுக்குத் துணைபோகிற நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என்று ஜன நாயகத்தின் தூண்களாகச் சொல்லப் படுகிற ஒவ்வொன்றுமே எப்படி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும்!

ஜூனியர் விகடனில் இன்றைக்கு வெளியாகி இருக்குமொரு  செய்திக் கட்டுரை, ஜூவிக்கு நன்றியுடன்!

 
தீர்ப்பில் தள்ளாடும் தகவல் ஆணையம்!

ஆணையத்தின் மீது அடுக்கடுக்காய் வழக்குகள்!

'தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மூன்று தகவல் ஆணையர்கள் நியமனம் செல்லாது’ என்று அதிர்ச்சித் தீர்ப்பு அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். 

அரசு அலுவலங்களில் ஒளிவுமறைவு இல்லாத செயல்பாடும், லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டுக் கிடைக்காமல் போனால், தகவல் ஆணையங்களில் மேல்முறையீடு செய்ய லாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன.

தகவல் தரவில்லை என்றால் அதிகபட்சமாக Rs. 25,000 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய அதிகாரம் கொண்டது தகவல் ஆணையங்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தகவல் ஆணையத்துக்கு, ஏ.ராமையா, சி.மனோகரன், ஏ.ஆறுமுக நயினார் ஆகிய மூவர் நியமிக்கப்பட்டனர். சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வந்த அன்றுதான் இதற்கான உத்தரவு வெளியானது. இந்த நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இந்த நியமனம் செல்லாது’ என்றது.
''தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாளில், இந்த நியமனம் நடந்துள்ளது. மாநில முதல்வர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவர் அடங்கிய குழுதான், மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். இந்த நியமனத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் கருத்தைக் கேட்காமலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றாமலும் நியமனம் செய்யப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


தகவல் அறியும் உரிமை ஆர்வலரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''தகவல் ஆணையங்கள், தேர்தல் கமிஷனைப் போலவே தன்னாட்சி அதிகாரம்கொண்ட ஓர் அமைப்பு. அறிவியல், சட்டம், இதழியல், சமூக சேவை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களைத்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், இங்கே அரசியல் புகுந்து விளை யாடுகிறது. வெளிப்படையான ஊழல் அற்ற அமைப்பு உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் சட்டமே கொண்டுவரப் பட்டது. ஆனால், இதன் ஆணையர்கள் நியமனம்கூட வெளிப்படையாக நடைபெறவில்லை. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 

கருணாநிதியின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி, தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி போன்றவர்கள் தகவல் ஆணையர்களாக இருக்கிறார்கள். 

2008-ல் தகவல் ஆணையர்களாக சாரதா நம்பி ஆரூரான், டி.சீனிவாசன், டி.ஆர்.ராமசாமி மற்றும் பெருமாள்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கான கூட்டம் 11.4.2008-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டம் நடப்பதற்கு 10 நாட்களுக்குள்தான் டி.ஆர்.ராமசாமியும் பெருமாள்சாமியும் விண்ணப்பிக்கிறார்கள். டி.சீனிவாசன், சாரதாநம்பி ஆரூரான் ஆகியோர் முதல் நாள்தான் விண்ணப்பித்தார்கள். அவர்களுக்குப் பதவி தர வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசரமாக விண்ணப்பங்களை அரசு வாங்கியது. ஒரு வழக்கு தொடர்பாக சீனிவாசன் என்னிடம் பேசிய போது, 'தகவல் ஆணையர் பதவிக்காக நான் விண்ணப்பிக்கவே இல்லை. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்குத்தான் விண்ணப்பித்தேன். அந்த பயோ-டேட்டாவை வைத்து என்னைத் தேர்வு செய்துவிட்டார்கள். பெருமாள் சாமியும், சாரதாநம்பி ஆரூரானும் வேறு பதவிகளுக்குத்தான் விண்ணப்பம் கொடுத்தார்கள்’ என்றும் சொன்னார்.

இப்படிப்பட்டவர்களை தகவல் ஆணையத்தில் நியமித்தால், அங்கே வரும் மேல்முறையீட்டு மனுக்களை எப்படி விசாரிப்பார்கள். இனி மேலாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிந்தவர்களையும், சமூக ஆர்வலர்களையும் நியமிக்க வேண்டும்'' என்றார்.  

இந்த வழக்கை, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். 'தகவல் ஆணையர் தேர்வு நடவடிக்கைகள் தொடர்பான கோப்பு ஒரு நாளிலேயே பிரிவு அலுவலர் தொடங்கி முதல்வர் வரை சென்றிருக்கிறது. ஆணையர்கள் தேர்வுக்கான கூட்டம் 1.3.11 அன்று நடந்தது. எதிர்க் கட்சித் தலைவரின் (ஜெயலலிதா) ஆலோசனையைப் பெறவில்லை. கூட்டத்தை வேறு தேதிக்குத் தள்ளிவைக்கும்படி எதிர்க் கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்து இருந்தார். ஆனாலும் ஆணையர்கள் நியமனம் செய்து அன்றே அதற்கான ஆணையை வெளியிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைக் கருத்தில்கொள்ளாமல் அன்றே கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்யும்போது, ராமையா அரசுப் பதவியில் இருந்தார் என்றும் தேர்வுக் கூட்டம் நடந்த அன்றுதான் அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கூறினார். இப்படி நடந்திருப்பது சட்டப்படி குற்றம். இதனை எல்லாம் பார்க்கும்போது, மூன்று பேர் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை எனவே, மூன்று பேரின் நியமன உத்தரவு சட்ட விரோதமாகவும், நடைமுறைக்கு முரணாகவும் உள்ளது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

''தகவல் அறியும் சட்டத்தில் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உள்ள விதி முறைகள்தான் இந்த மூன்று பேர் நியமனத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. நியமனத்தை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, மாறிவிட்ட அரசுகளின் நிலைப்பாட்டைப் பார்க்கக் கூடாது'' என்கிறார்கள் இந்த மூன்று பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் தகவல்களைப் பெறுவதைவிட... நல்ல ஆணையர்களைப் பெறுவது கஷ்டமாகி விட்டது!

- எம்.பரக்கத் அலி

ஸ்ரீபதிக்கு சிக்கல் இல்லை!

தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக கடந்த 2010-ல் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'அவருடைய நியமனம் செல்லும்’ என்றது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், 'ஸ்ரீபதி தேர்வுக்காக நடந்த கூட்டத்திற்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களைக் கூறி அவர் கலந்துகொள்ளவில்லை. எனவே, அவர் இல்லாமல் எடுத்த முடிவை சட்ட விரோதம் என்று குற்றம் சாட்ட முடியாது’ என்றும் சொன்னது.

சரி, முகவுக்கு எங்கே நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது? 

குறைந்தபட்சம், முக பெயராவது இந்தத் தீர்ப்பில் இருக்கிறதா என்று கேட்டாவது பின்னூட்டம் வரும் என்று காத்திருந்தேன்! எவரும் அந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டதாகத் தெரியவில்லை! போகட்டும், இந்தக் கேள்விக்கு விடை வழக்கைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் எஸ் விஜயலட்சுமியின் மனுவில் இருக்கிறது. மனுவின் முழுவிவரம் இந்த செய்திக் கட்டுரையில் சொல்லப்படாவிட்டாலும், அதன் சாராம்சத்தை RTI activist கோபாலக்ருஷ்ணன் விளக்கியிருக்கும் பகுதியிலேயே இருக்கிறது.

இதே மாதிரித்தான், TNPSC குழுத்தலைவர் உறுப்பினர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள், அவர்கள் செய்த முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் நடத்தப்பட்ட சோதனைகளும் காட்டின. ஆனால்,அது வழக்கு நடந்து தீர்ப்பு வரும் வரை, தீர்மானமான முடிவாகச் சொல்ல முடியாது என்பது தான் வித்தியாசம்.

பதிவிடுகிறவர் தான் சொல்ல வந்ததைத் தெளிவாக சொல்லியிருக்கிறாரா என்பதும்,சொன்ன விஷயம் சரிதானா என்பதும் ஒரு ஆரோக்கியமான உரையாடலில் மட்டுமே சாத்தியம்!ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறேன்.பின்னூட்டப்பெட்டி மேல் இருப்பதையும் படித்து விட்டு அதன் பிறகு பின்னூட்டங்களில் உங்கள் மனதில் படுவதை சொல்லுங்கள்!

3 comments:

  1. Where is MK in this article? You didn't mention his name against this case.

    ReplyDelete
  2. பதிவின் கடைசியில் நானே இந்தக் கேள்வியை எழுப்பிய பிறகு, இவ்வளவு சுறுசுறுப்பா? தாங்க முடியவில்லை!!

    ReplyDelete
  3. முக வுக்கு எதிராக சமச்சீர் கல்வி வழக்கில் நீதிமன்றம் வைத்த குட்டையே பத்திரிக்கைகள் மறைத்து ஜெ மட்டுமே குட்டு வாங்கியது போலவே செய்தி வெளியிட்டன. மீடியாவில் முக்கால்வாசி முகவின் சொந்த பந்தங்களிடம் இருப்பதாலேயே இப்படி ஒரு நிலை இருக்கிறது. இது போக பாக்கி மீடியாக்களை ஆட்சியில் இருந்த காரணத்தினால் வளைத்துக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட இது ஒரு Oligarchy போன்ற செயல்பாடு. மக்கள் பாடு தான் திண்டாட்டம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!