எல்லா சிங்கும் மண்ணுமோகன் சிங் அல்ல! சிங் இஸ் கிங்!இன்றைக்கு மத்திய அமைச்சர் சரத் பவாரை ஒருவர் கன்னத்தில் அறைந்திருக்கிறார்!பரபரப்புச் செய்தி இதுதான்!
  

பரபரப்பை ஒதுக்கி விட்டு, கொஞ்சம் யோசித்தோமானால்,சரத் பவார் மாதிரி ஊழல் பெருச்சாளிகள் இந்திய அரசியலில் எப்படித் தழைக்க, தப்பிக்க முடிகிறது என்ற கேள்விக்கு பதிலாக, அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்கிற பழமொழி அரசியலுக்கும் பொருந்துவது புரியும்.ஊழல் பெருச்சாளிகளிடம், அஹிம்சை, காந்தீயம் பேசுவதில் அர்த்தமிருக்குமா?

எங்கும் எதிலும் ஊழல், கையாலாகாத அரசு, பொறுப்பில்லாத மக்கள் பிரதிநிதிகள், குற்றவாளிகளைப் பாதுகாப்பது தான் தலையாய பணி என்றிருக்கும் அரசியல் தலைவர்கள்,எங்கே எது நடந்தால் நமக்கென்ன என்றிருக்கும் ஊமைச் சனங்கள்!

எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருந்துவிட முடியும்?

மானாட, மயிலாடவிட்டு, இலவசங்களை அள்ளிக் கொடுத்து ஜனங்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியும்? நீ திருடினாயா என்ற கேள்விக்கு அதோ அவன் கூடத்தான் கொஞ்சமாகத் திருடினான், அவனை விட்டுவிட்டு என்னைக் கேட்கிறீர்களே என்று ஒப்பாரி வைக்கும் தலீவர்களை எத்தனை நாட்களுக்குத்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்?


கருணாநிதி அண்ட் குடும்பத்தார் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, சினிமாத் தயாரிப்பு,கல்வி நிறுவனங்கள், தொலைக்காட்சி என்று எல்லாத் திசைகளிலும் தங்களுடைய  சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்டு வளர்ந்ததற்கு முன்னால், மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தான் ஆகக் கூடிய பெரிய பெருச்சாளியாக இருந்தார். தமிழன் இதில் பவாரை ஓவர்டேக் செய்து விட்டதாகப் பெருமை கொள்ள முடியாது.

ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்று மற்றும் இரண்டில் சரத் பவாரின் பங்கு என்ன? விவசாயத் துறை அமைச்சர்! அதாவது முழுநேரமும் அல்ல!

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைத் தன் கையில் வைத்துக் கொண்டு, தாவூத் இப்ராஹீம், பால் தாக்கரே போன்ற எதிர் துருவங்களையும் கூடத் தன் வழிக்குள் கொண்டு வந்து ஊழலில் சத்ரபதியாக இருப்பவருக்கு, மத்திய அமைச்சர் பதவி பார்ட் டைம் வேலைதான்!
 
மத்திய அமைச்சராக இருந்துகொண்டு, வெறும் டம்மியாகவே வலம் வருகிற அஞ்சாநெஞ்சு அழகிரியை விடத் தேவலையா இல்லையா என்று கேட்டீர்களானால்,அதற்கு அந்த ஆயிரம் நாவு படைத்த ஆதி சேஷனைத் தான் பதில் சொல்ல அல்லது பயமுறுத்துவதற்காகக்  கூப்பிட வேண்டி இருக்கும்!

இப்படிப்பட்ட, மானம் கெட்ட ஒருவரை மாண்புமிகு அமைச்சராக வைத்திருப்பதற்கு டம்மிப் பீஸ் மன்மோகன் சிங் வெட்கப்பட மாட்டார்!தியாகசிகரம் இத்தாலிய மம்மிக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாது!

ஜனங்களுடைய கோபத்தை வெளிப்படுத்திய அந்த ஹர்விந்தர் சிங் என்ற நபர் கைகளைப் பிடித்து நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறதா? சிலநாட்களுக்கு முன்னால் தான் இன்னொரு காங்கிரஸ் ஊழல் பெருச்சாளி சுக்ராமை இதே ஹர்விந்தர் சிங் செருப்பால் அடித்தார்!

எல்லா சிங்கும் மண்ணுமோகன் சிங் அல்ல! சிங் இஸ் கிங்!

டிவிட்டரில் ஷரத் பவார் அறை வாங்கின விஷயம் மிகவும் தமாஷாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது!

இந்தியர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று யார் சொன்னது? ஒருவர் சொல்கிறார்!

(சரத் பவார்) அறை வாங்கின அனுபவம் எப்படி இருக்குமென்று ஸ்ரீசாந்த் மட்டும் தான் புரிந்துகொள்ள முடியும்!

கொசுவைக் கூட அடிக்கறதே அது கடிக்க ஆரம்பிச்சப்புறம் தான்! (ஷரத் பவாரை அடிச்சதில் என்ன தப்புன்னு கேக்கற கட்சி இவர்!)

இன்னொரு ட்வீட்!

சச்சின்!யாராவது வந்து ஒரு அறை கொடுக்கும் முன் சீக்கிரமாக (சதம்) அடியுங்கள்!


அதற்காக ஜனங்களை  ஏமாந்த சோணகிரிகளாகவே தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க முடியுமா? ஏமாந்தவன் நிமிர்ந்து நின்றானானால், இவர்களால் தாங்க முடியுமா

சமீப காலத்தில் அரபு நாடுகளில் ஜனங்களுடைய எழுச்சி இந்தக் கேள்விகளை ஆளுகிற எல்லாத் தரப்பையுமே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.அரபு தேசங்களில் ஜனங்களுடைய எழுச்சியை மிக லாவகமாக, எண்ணெய் வளங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் ஜனநாயகக் காவலன் அமெரிக்கா அனேகமாக வெற்றி பெற்று விட்டதென்றே சொல்லலாம்! அமெரிக்க நலன்களுக்குத் தலையாட்டாத அதிபர்கள் மட்டுமே அகற்றப்பட்டார்கள். ஜனங்களுக்கு, அவர்களுடைய கோபாவேசத்துக்கு, இந்தப் போராட்டங்கள் ஒரு வடிகாலாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, அங்கே ஜனங்களுடைய ஆட்சி மலர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

இந்த மாதிரி உணர்ச்சி வசப்படுவது, அடித்து உதைப்பது ஒரு நிரந்தரத் தீர்வாக முடியாது.ஒரு ஜனநாயக அமைப்பில், அதன் வெவ்வேறு அங்கங்கள், தங்களுடைய வீரியத்தை இழந்து, ஆமாம் சாமி போடுகிற அல்லது கூட்டுக் களவாணிகளாக மாறிக் கொண்டிருக்குமானால், ஜனங்களுடைய கொந்தளிப்பைத் தவிர்க்கவும் முடியாது.

அதே  நேரம், இந்தியாவில் அமைதியாகத் தேர்தல் வரும்போது மட்டும் தான் ஜனங்கள் தங்களுடைய கோபத்தை ஓட்டுச் சீட்டில் வெளிப் படுத்திக் கொண்டிருப்பார்கள் என்ற காலமும் மெல்ல மெல்லக் காலாவதியாகிக் கொண்டிருப்பதை ஆட்சி செய்பவர்கள் புரிந்து கொள்வார்களா?

அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள், புரிந்துகொள்ளப் போவதில்லை!

என்பது ஏற்கெனெவே நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சுண்டெலிகளின் கர்ஜனை என்ற தலைப்பில் ஒரு குழுமத்தில் அரபு தேசங்களில் ஜனங்களின் எழுசசியை பேசிக் கொண்டிருந்த தருணங்களில் எழுதியது இது 

இந்த இழையின் முதல் பதிவில் பார்த்தீர்களானால், சுண்டெலிகளின்  கர்ஜனை என்று அரபு  மக்களை வர்ணித்திருந்தது ஒரு ஆஸ்திரேலிய செய்தித்தாளின் வலைத்தளம் என்பது தெரிய வரும்! ஜனங்களை வெறும் சுண்டெலிதான் என்று சொல்கிற தெனாவட்டு அவர்களுக்கு மட்டும் தான் வரும்.இப்போது அரேபிய மக்களிடம் பரவிவரும் கிளர்ச்சி உணர்வு மிகவும் வித்தியாசமானது. இதை எப்படி கணிப்பது, எப்படி சமாளிப்பது என்றே அங்கே ஆளுவோருக்கும் புரியவில்லை, அவர்களுடன் நல்லுறவு வைத்துத் தன்னுடையநலன்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அமெரிககாவுக்கும்புரியவில்லை. 
 
அரேபிய மக்களை முல்லாக்களும் மௌல்விகளும் இதுவரை சுதந்திரமாகச்சிந்திக்க விட்டதே இல்லை. அவர்களை மீறி, வெளியே என்ன நடக்கிறது, நாம் எப்படி இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே அந்த மக்கள் இதுவரை பழக்கப்பட்டதும் இல்லை. அமைதியான போராட்டம் என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளாக அவர்களுக்குத் தெரியாத விஷயமும் கூட. 

முதலில், ஏழ்மையில் வாடும் அரேபியநாடுகளில் உள்ள மக்களிடம் இருந்து ஆரம்பித்து, இப்போது  செல்வச்செழிப்புடன் இருக்கும் பாஹ்ரைனுக்கும் பரவியிருக்கிறது. குவைத், சவூதி அரேபிய அரசுகள், இங்கே இந்தியாவில் இலவசங்களை அள்ளி இறைப்பது போல, திடீரென்று  தங்கள் ஜனங்கள் மீது கரிசனம் பிறந்து நலத் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. 

வசதி படைத்தவன் தரமாட்டான்-அவனை
வயிறுபசித்தவன்விடமாட்டான் 

என்று பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய மாதிரி, அங்கே வெறும் வயிற்றுப்பசிக்கான போராட்டமாகத் தான் நடக்கிறது என்று சொல்வதற்கில்லை ஒரேமாதிரியான  ஆட்சிமுறை, வேறு எந்த விதமாகவும் சிந்திக்கவிடாத அமைப்புக்கு எதிராகவும் தான் என்று தோன்றுகிறது. இன்னும் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

இங்கே, அரபுநாடுகளில் உள்ளமாதிரி, மதங்களின் பெயரால் அவ்வளவு கடுமையான அடக்குமுறைகளோ, குதிரைக்குக் கண்ணைக்கட்டி விட்ட மாதிரி, இப்படித்தான் சிந்திக்கவேண்டும், செயல்படவேண்டும் என்றோ எப்போதுமே இருந்ததில்லை.

எப்படி வெறும் முப்பதாயிரம் வெள்ளையர்களைக் கொண்டே (அரசு அதிகாரிகள், காவல், ராணுவத்தில்) முப்பதுகோடி ஜனங்களை அடிமையாக வைத்திருக்க முடிந்தது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், இப்போது உள்ள நிலவரத்தை நாடிபிடித்துப் பார்த்து மருந்து சொல்வதில், உட்கொள்வதில் எந்தக் கஷ்டமும் இருக்காது!! 

டிஸ்கி 1:

 2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில் பதவி விலகிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்கள் இன்னும் காலியாகே உள்ளன. கனிமொழி கைது நடவடிக்கையால் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் இருந்த திமுக, அந்த இடங்களை நிரப்ப மறுத்துவிட்டது.இதையடுத்து இந்த இடங்கள் திமுகவுக்காக எப்போதுமே காத்திருக்கும் என்று பிரதமர் அறிவித்தார்.இந் நிலையில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கனிந்திருப்பதால், திமுக தனது நிலையை மாற்றிக் கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுத்தது!!

4 comments:

 1. உண்மையிலே ஹர்வீந்த்ர் ஒரு ஹீரோ தான், சந்தேகமே இல்லை. ஊழல் பெருச்சாளி சரத் பவார் போன்ற முதலைகளை அடித்து துரத்தி அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யாவிட்டால் நாட்டில் தீவிரவாதமே வெடிக்கும். இந்த மாதிரி மோசடி பேர்வழிகளை மக்கள் பிரதிநிதி, ஓட்டு போட்ட மக்களுக்கு மரியாதை என்று சொல்லி ஆதரிக்க முடியாது.
  ஒன்னு ஹசாரே பின்னாடி போகணும், இல்ல ஹர்வீந்தர் மாதிரி ஆகணும், மண்ணு மாதிரி சும்மா இருந்தா நம்மையும் வித்துட்டு போய்டுவானுக வெளிநாடுகளுக்கு .... ஹர்வீந்தர் ஒரு பகத் சிங், வீர வாஞ்சி மாதிரி போராளி தான்.

  ReplyDelete
 2. வசதி படைத்தவன் தரமாட்டான்-அவனை
  வயிறுபசித்தவன்விடமாட்டான்

  தமிழ்நாட்டில் எப்போ?

  ReplyDelete
 3. விவேக்!

  முதல் தரம் இந்தப்பக்கம் வந்திருக்கீங்க! நன்றி.ஆனால், ஹர்விந்தர் சிங் சுக்ராமையோ, சரத் பவாரையோ அடித்ததனால் என்ன நடந்துவிட்டது? ஷரத் பவார் திருந்திட்டாராமா?அல்லது, ஜனங்கதான் இந்த மாதிரி ஊழல் பெருச்சாளிகளைக் களை எடுக்கத் தயாராயிட்டாங்களாமா?

  இது மாதிரித் தனிநபர்களுடைய உணர்ச்சி வசப்பட்ட செயல்கள், அல்லது ஒரு கும்பலாக அல்லது கூட்டம் கூட்டமாகத் தேர்தலன்று மட்டும் தங்களுடைய ஆத்திரத்தைக் காட்டுவதால் மட்டுமே எந்த மாற்றங்களையும் சாதித்து விட முடியாது.இந்தப் பதிவே, அண்ணா ஹசாரே மாதிரி காந்தியவாதிகளைக் கூட இந்த சம்பவம், *என்ன ஒரே ஒரு அடி தானா* என்று கேட்க வைத்திருக்கிறதே என்பதில் இருந்து எழுந்ததுதான்!

  ஜோதிஜி!

  தமிழ்நாட்டுக்கு எப்போ? இந்தியா மொத்தத்துக்கும் என்னிக்கு வருதோ அப்போ!

  ReplyDelete
 4. Hello where i my comment ??????????? Ayyo vadai poche !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  Sharadh Pawar deserves a slap but not enough somebody have kick his ass also இப்படி இரண்டு விகாஷ் என்ற பெயரிலும்
  //அமுதமும் விஷமும் ஒரே இடதில்தான் பிறக்கிறது,கட்டபொம்மனும் எட்டப்பனும் அப்படித்தான் என்ற புகழ் பெற்ற வசனங்கள்தான் நினைவிற்கு வருகிறது.// இப்படி vizzy என்ற பெயரிலும் வந்த பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன--

  ப்ளாக்கரில் கணக்கு ஒன்றைத் தொடங்கி, ஒரு பெயரை வைத்திருப்பதனால் மட்டும் அநாமதேயங்கள் என்ற அந்தஸ்து மாறிவிடுவதில்லை என்ற தகவலைச் சொல்வதற்காக!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!