சண்டேன்னா மூணு! ஸ்ரீ அரவிந்தர்! அன்னை! மோகனத் தமிழ்!

டிசம்பர் மாதம் முதல்நாள் இன்று! புதுச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும், அங்கேயே தங்கியிருந்து  ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தைப் பயிலும் சாதகர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களுடைய மாதாந்தரத் தேவைகளை வழங்குகிற  நாளாக Prosperity Day என்று அழைக்கப்பட்டது. 1926 இல்  ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டது என்பதை நவம்பர் 24 தரிசனநாள் செய்தியிலேயே இப்படிப் பார்த்திருக்கிறோம்.

தங்களுடைய சகலத்தையும் ஸ்ரீ அரவிந்தரிடத்தில் ஒப்படைத்துவிட்டு அவருடனேயே தங்கியிருந்து அவரது யோகத்தைப் பயில முன்வந்தவர்களே சாதகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுடைய மாதாந்திரத் தேவைகள், சோப்பு, எண்ணெய், முதலான நடைமுறைத் தேவைகளை ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களுக்கு வழங்குகிற நாளாக மாதத்தின் முதல் நாள் இருந்தது.       அது தவிர ஸ்ரீ அரவிந்தர் தனது தபசு, யோகத்தில் கண்டுணர்ந்த  பொன்னொளி (Supramental Light)  இந்தப் பூமியில் தங்குவதற்காக தன்னுடலையே அர்ப்பணித்து மகா சமாதிக்கு ஏகிய நாளும் டிசம்பர் மாதத்தில் தான் (டிசம்பர் 5) வருகிறது. 24000 வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் ஆங்கிலத்தில் இயற்றிய சாவித்ரி மஹா காவியம், அவருடைய தவத்தில் கண்டுணர்ந்த அனுபவங்களை அதிமானச ஒளி / அருட்பெருஞ்சோதியாக மண்ணில் இறங்கி வரக் காத்திருப்பதை விவரிக்கிறது. 

மஹாபாரதத்தில், போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர். இந்தக் கதை, வேதங்களின் திரண்ட உட்பொருளை, சிருஷ்டியின் ரகசியத்தை ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார். அதன் விளைவாக, சாவித்திரி மகாகாவியம் சற்றேறக் குறைய 24000 வரிகளில்  உருவானது. ஸ்ரீ அரவிந்தர் , 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும்,யோக சாதனையாகவும் ஆனது. ஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரி" ஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது. 1930 களில் "சாவித்திரி- ஒரு கதையும் அதன் தரிசனமும் " என்று வெளியானது,தொடர்ந்து மெருகேறி, SAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

சாவித்ரியை படிப்பதே பலவிதமான அனுபவங்களைத் தர வல்லது என்பதை முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே எழுதியிருந்ததை வாசிக்கலாம்.

ஸ்ரீ அரவிந்தரையும் ஸ்ரீ அரவிந்த அன்னையையும் வணங்குகிறேன்! திருவடிகளை சரண் அடைகிறேன் .
  ******

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுத மாட்டேனென்கிற தன்னுடைய பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து மறுபடியும் முகநூலில் மோகனத்தமிழைப் பொழிய ஆரம்பித்திருக்கிறார் .


நமது குருநாதர்
"ஐயய்ய....என்னிடம் அதெல்லாம் சொல்லாதீர்கள்...அதெல்லாம் நான் ஒருகாலும் செய்ய மாட்டேன்" என்றார் நரேன் என்ற இளைஞர்.
"காலம் வரும் பொழுது நீயே என்னதான் முடியாது என்று மறுத்தாலும் உன் எலும்புகள் தாமே போதிக்கத் தொடங்கிவிடும்." என்று இளநகை தவழ பதிலளித்தார் குரு ஸ்ரீராமகிருஷ்ணர்.
காலமும் கனிந்தது. அதுவரை வாழ்வின் பண்பாடாகவும், உணர்வுகளின் வெளிப்பாடாகவும் மட்டுமே பெரும்பாலும் உள்கலந்து விரவியிருந்த ஹிந்து மதம் என்ற திட்ட வட்டமான வடிவம் ஓர் இந்திய இளைஞனின் சுய அனுபவத்தில் கனிந்து ஆங்கில மொழியில் அகில உலகும் மாணாக்கர்களாக அமர்ந்து கேட்க, சிகாகோ சபையில் வெளிப்பட்டது.
ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான். நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது. அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.
ஹிந்து மதத்தின் உண்மையான பெரும் சிறப்புகள் எல்லாம் வெறுமனே புராணங்களாகவும், பொழுது போவதற்காக மாலை வேளையில் அமர்ந்து சொல்லப்படும் கதைகளாகவும் போய்விடாமல், அந்த அத்தனை சிறப்புகளையும், காலம் காலமாக வந்த ஹிந்து மதப் பெருமைகள் அனைத்தையும் ஒருங்கே தன் உன்னத வாழ்வால் மெய்ப்பித்துக் காட்டிய தக்ஷிணேஸ்வரத்து முனிபுங்கவன் பேசினான்.
"குழந்தாய்! நான் சொன்னேன் என்று எதையும் நம்பிவிடாதே! வியாபாரி ஒவ்வொரு நாணயத்தையும் சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போல், நான் கூறுவனவற்றை அறிவால் நன்கு ஆராய்ந்து சோதனையிட்டுப் பின் உடன்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்' என்று கூறிய வினோதமான குருநாதன் பேசினான்.
ஹிந்து மதமே தன் சிறப்புகளை உள்ளபடி எடுத்துக்காட்ட ஒரு வாழ்வு பூண்டதைப் போன்று வந்த பரமஹம்ஸரிடம் தான் கண்ட ஹிந்து மதத்தைப் பற்றிய நேரடிக் காட்சிக்குப் பின், காலகதியில் என்னென்ன தீங்குகளும், நோய்களும், சமுதாயக் கொடுமைகளும் ஹிந்து மதத்தில் புகுந்து நிலவுகின்றன என்பதை நேரடியாகக் காணவேண்டியோ என்னவோ பாரத தேசம் அனைத்தும் பரிவ்ராஜகனாக அலைந்த பாரதத் துறவி பேசினான்.
ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் மூலம் பெற்ற கல்வி;
ஸ்ரீராமகிருஷ்ணரின் உதாரண வாழ்வால் பெற்ற உணர்வு ரீதியான கல்வி;
பாரத தேசத்தை இண்டு இடுக்கெல்லாம் நேரடியாகக் கண்டு தான் பெற்ற அனுபவக் கல்வி --
ஆகிய இந்த மூன்று கல்விகளும் சேர்ந்த வெளிப்பாடுதான் விவேகாநந்தர் என்கிறார் சகோதரி நிவேதிதா.
சிகாகோ சொற்பொழிவுகள் என்னும் சிறு நூலின் பெரும் விளக்க உரையாகத்தான் விரிந்து கிடக்கின்றன ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தின் மொத்த நூல் உலகமே. விவேகாநந்தர் தன்னியல்பாகப் பேசிச் செல்லும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் நெடிய கல்வியும், ஆழ்ந்த அனுபவமும் இருப்பதை நாளுக்கு நாள் வளரும் அதிசய விளக்கமாய் வியந்து கொண்டிருக்கிறேன். நான் விவேகாநந்தரை வெறுமனே வழிபாடு செய்பவன் அல்லன். அவர் கூறுவனவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் எனக்கு இல்லை. ஆனால் ஹிந்து மத சம்பிரதாயங்களின் மூல நூல்கள், ஹிந்து மத வரலாறு இவற்றில் ஆழ்ந்து போகப்போக எத்தனை பெரிய வேலை! எப்படி அந்த மனிதனால் செய்ய முடிந்தது! -- இந்தப் புதிருக்கு என்னிடம் விடையில்லை.
இப்படி ஒரு மனிதன் எழுவதற்கான முன் காரணங்கள் அன்றைய சமுதாயத்திலும் இருந்திருக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவ்வாறே. அவர் தோன்றுவதற்கான கருத்தியல் காரணங்கள் எதுவும் அன்று இல்லை. அப்படி இருந்தால் சொல்லிவிடலாம் -- இந்தக் காரணங்களால் இவர்களது தோற்றம் பொருத்தம் என்று.
ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார்.
ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்.
ஜூலை 4, 1907ல் நான்கு தொகுதிகளாக விவேகாநந்தரின் நூல்கள் அன்று கிடைத்தவை வரையில் வந்த போது, அதற்கு முன்னுரை எழுதியவர் சகோதரி நிவேதிதா அவர்கள். அதில் அவர்கள் கூறுவது :
In the ... volumes of the works of the Swami Vivekananda which are to compose the present edition, we have what is not only a gospel to the world at large, but also to its own children, the Charter of the Hindu Faith.
What Hinduism needed, amidst the general disintegration of the modern era, was a rock where she could lie at anchor, an authoritative utterance in which she might recognise her self. And this was given to her, in these words and writings of the Swami Vivekananda. For the first time in history, as has been said elsewhere, Hinduism itself forms here the subject of generalisation of a Hindu mind of the highest order. For ages to come the Hindu man who would verify, the Hindu mother who would teach her children, what was the faith of their ancestors will turn to the pages of these books for assurance and light. Long after the English language has disappeared from India, the gift that has here been made, through that language, to the world, will remain and bear its fruit in East and West alike.
What Hinduism had needed, was the organising and consolidating of its own idea. What the world had needed was a faith that had no fear of truth. Both these are found here.
சுவாமி விவேகாநந்தரின் முழுநூல் தொகுதியும் தமக்கு சௌகரியமான எந்த மொழியிலோ, ஒவ்வொரு ஹிந்துவின், ஆணோ, பெண்ணோ, இளம்வயதோ, முதியவரோ, ஒவ்வொருவரின் படிப்பிலும், ஆழ்ந்த சிந்தனையிலும் திகழும் காலத்தைக் காலமே அருள்வாயாக!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! ஸ்ரீரங்கம் மோகனரங்கனின் மோகனத்தமிழ் தங்கு தடையின்றிப் பெருகிவர அருள் செய்வாய்! 

2 comments:

  1. படங்களை இயல்பான சைசில் போடுங்க. அதன் தன்மை மாறிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் மோகனரங்கனின் படத்தை வைத்துச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் ஜோதிஜி! கிடைத்த படத்தின் resolution மிக்க குறைவானதுதான். சிறிதாக்கிப் போட்டும் பயனில்லை

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!