காரடையான் நோன்பும் ஒளி பொருந்திய பாதையும்!

இன்று காரடையான் நோன்பு!   

உருகாத வெண்ணையும், ஓரடையும் நான் தருவேன் என்று சொல்லிப் பெண்கள், இனிப்பு அடை , கொழுக்கட்டை, வெண்ணெய் முதலானவற்றைப் படையலிட்டு, தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்ப் பிரார்த்தனை செய்து கொள்ளும் நாள். ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிராமல், ஆணும் பெண்ணும் சேர்ந்தே வாழ வேண்டியது தான் வாழ்க்கை என்பதைக் கொஞ்சம் நினைவு படுத்துகிற நாளும் கூட!

இந்த காரடையான் நோன்பு என்பது தமிழ் நாட்டிலும்
, கர்வா சௌத் என்கிற பெயரில் வடக்கிலும் பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்க வேண்டும், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மேற்கொள்கிற விரதம் தான் இது.
 

கதையாகச் சொல்லி, அதன் உட்பொருளைப் புரிந்து கொள்வதற்காகவே அதை ஒரு சடங்காகவும், விரதமாகவும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழி வழியாகத் தொடருகிற மரபு. காலப் போக்கில், கதைகள் அங்கே அங்கே கொஞ்சம் திரிந்து, வெறும் சடங்காக மட்டுமே குறுகிப் போய் நிற்கிறது.


மாசியும் பங்குனியும் சந்திக்கும் வேளையில், அதாவது மாசி மாதம் முடிவடைகிற நேரத்திற்கும், பங்குனி மாதம் பிறக்கும் நேரத்திற்கும் இடைப்பட்ட வேளையில், திருமணமான பெண்கள் விரதம் இருந்து, கார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும், வெண்ணையும் நிவேதனம் செய்து, நோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர். சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக, 'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்வது மரபு.

அப்புறம், காலப்போக்கில் அங்கே அங்கே கொஞ்சம் இடைச் செருகல்கள் , இது காமாக்ஷியை நினைத்துச் செய்யப் படுவது...அப்படி இப்படி என்று localise பண்ணுவதும், பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிற ஒரு தரப்பு இதெல்லாம் வெறும் மூடப் பழக்கங்கள், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக, இட்டுக் கட்டிய கட்டுக் கதை என்று கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்ட் போல சொல்லிக் கொண்டிருப்பதுமாகச் சுருங்கிப் போயிருக்கிறது.


"
மாசிச் சரடு பாசி படரும்" என்பதற்கேற்ப, புதியமாங்கல்யச் சரடை அன்றைய தினம் திருமணமான பெண்கள் அணிந்து கொள்வதும், கன்னிப் பெண்கள் தங்கள் மனதிற்கேற்ற மணவாளன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதும் நம்முடைய மரபு.

மாங்கல்ய பலம் வேண்டிப் பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்திற்குப் பின்னணியாக
, மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் சாவித்திரி கதை இருக்கிறது. சாவித்திரி என்றவுடனேயே எமனிடமிருந்து கணவனைப் போராடி மீட்ட பெண் என்ற அளவுக்காவது நம்மில் பலருக்கு அந்தக் கதை கொஞ்சம் தெரிந்திருக்கும்.

மத்ரா தேசத்தின் அரசன் அஸ்வபதி
, அவனது ஒரே மகள் சாவித்திரி. திருமண வயது நெருங்கியதும் தகுந்த மணவாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரத்தை மகளுக்கு வழங்குகிறார் தந்தை. மகளும், தனக்குப் பொருத்தமான மணாளனைத் தேடி வருகையில், அழகிய வாலிபன் ஒருவனைக் காண்கிறாள். அவன்- சத்தியவானுடைய பண்பினால் கவரப்படும் சாவித்ரியும், சாவித்ரியின் அன்பினால் ஈர்க்கப்பட்ட சத்தியவானும் ஒருவரை ஒருவர் யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

சால்வ தேசத்தின் அரசன் த்யுமத்சேனன்
, உறவினர்களுடைய சதியால் அரசிழந்து, பார்வையும் இழந்து, தன்னுடைய மனைவி மற்றும் ஒரே மகனான சத்தியவானுடன், கானகத்தில் வசித்து வருகிறார் என்பதை சாவித்ரி அறிந்து கொள்கிறாள்.

தந்தையிடம் திரும்பும் சாவித்திரி
, சத்தியவான் தான் தன் கணவனாக வரிக்கப் பட்டவன் என்பதைத் தெரிவிக்கிறாள். விசாரிக்கும் போது, சத்தியவானுடைய ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் தான் என்பது தெரிய வருகிறது. சாவித்ரியின் தாய் கலங்குகிறாள், மகளை முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். ஆனால், சாவித்திரி, சத்தியவானைத் தவிர வேறொருவரைக் கணவனாகக் கனவிலும் கூட ஏற்க முடியாது என்று உறுதியாக இருக்கிறாள்.

சாவித்திரி விருப்பப் படியே அவளுக்கும்
, சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறது. கணவனோடு கானகத்தில் சந்தோஷமாக வாழ்கிறாள். அந்தக் குறிப்பிட்ட தருணமும் நெருங்குகிறது. ஆம், ஒரு வருடம் நிறைகிறது. கணவனும் மனைவியுமாக, கானகத்தில் கனி, கிழங்குகளை சேகரிக்கப் போகையில், கூற்றுவன் சத்தியவானுடைய உயிரைப் பறித்துச் செல்கிறான்.

சாவித்திரி மனம் கலங்காமல் கூற்றுவனைப் பின் தொடர்கிறாள்
. உனது நாள் இன்னமும் இருக்கிறது, திரும்பிப் போய் விடு என்று கூற்றுவன் நயமாகவும், பயமாகவும் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய கணவனுடைய உயிரை விட்டுப் பிரிய மாட்டேன், தொடர்ந்தே வருவேன் என்கிறாள். 

இடையில், பல உலகங்களைக் கடந்தும் சாவித்ரி உறுதியாக இருப்பதைப் பார்க்கும் கூற்றுவன் பிடிவாதத்தை விட்டு விடு, நீ வேண்டிய வரங்களைத் தருகிறேன், திரும்பப் போய் விடு என்கிறான். என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்கிறாள் சாவித்திரி! எதுவானாலும் கேள், தருகிறேன் என்கிறான் கூற்றுவன்.

வரமோ, வாக்கோ எதுவானாலும், தருகிறேன் என்று சொன்னால் அதை நிறைவேற்றுகிற தெய்வங்களும், மனிதர்களும், ஏன் மிருகங்களும் கூட வாழ்ந்த புண்ணிய பூமி இது. என்ன சாபத்தினாலோ, வாக்குறுதி என்பது மீறப் படுவதற்காகவே, ஏமாற்றுவதற்காகவே என்று செயல்படும் அரசியல் கட்சிகள், தலைவர்கள்கொஞ்சம் கூடப் பொறுப்போ, அக்கறையோ இல்லாத அதிகார வர்க்கத்தையும், எங்கே என்ன நடந்தால் நமக்கென்ன என்று விட்டேற்றியாக இருந்து விட்டுப் போய்விடுகிற மக்களையும்  கொண்டதாகச் சிறுமைப் பட்டுப் போயிருக்கிறது இன்று.

தன் கணவனோடு கூடி நூறு வீரமும் கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளையே வரமாகத் தரும் படி சாவித்திரி வேண்டுகிறாள்.

'
தந்தேன்' என்றான் எமன்.

பாசக்கயிற்றில் சிக்குண்டிருந்த சத்தியவானுடைய உயிர் மீண்டும் அவனது உடலில் புகுந்தது
. சாவித்ரிக்கு அளிக்கப்பட்ட வரம், மாமனாருடைய பார்வையை மீட்டுக் கொடுக்கிறது, இழந்த ராஜ்ஜியம் மீண்டு வருகிறது என்று இந்தக் கதை முடிகிறது.

மஹாபாரதத்தில், போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர். இந்தக் கதை, வேதங்களின் திரண்ட உட்பொருளை, சிருஷ்டியின் ரகசியத்தை ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார். அதன் விளைவாக, சாவித்திரி மகாகாவியம் சற்றேறக் குறைய 24000 வரிகளில்  உருவானது. 

சாவித்திரி மகா காவியத்தை இணையத்தில் படிக்க இங்கே!

சவித்ரு என்பது சூரியனின் பன்னிரு திருநாமங்களுள் ஒன்று
. சாவித்திரி, சூரியனின் மகளாகவே கருதப்படுகிறாள். பன்னிரண்டே மாதங்களில், கணவனது ஆயுள் முடிந்து போகும் என்பது தெரிந்திருந்தும், மனம் கலங்காது உறுதியுடன் மரணத்தை எதிர்த்து வெற்றி கொள்கிறாள். அன்பே அவளது பலமாக இருப்பதைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் காண முடியும்.

ஸ்ரீ அரவிந்தர்
, 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும், யோக சாதனையாகவும் ஆனது. ஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரி" ஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது. 1930 களில் "சாவித்திரி- ஒரு கதையும் அதன் தரிசனமும் " என்று வெளியானது,  
தொடர்ந்து மெருகேறி, SAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

"நான் சாவித்ரியை மனதளவில் துவங்கினேன். ஒவ்வொரு முறையும் நான் மேல் நிலையை அடையும்போது அந்த நிலையிலிருந்து மறுபடியும் எழுதினேன். உண்மையில் நான் சாவித்ரியை ஒரு செய்யுள் என்ற உணர்வில் எழுதி முடிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு செய்யுளை ஒருவரின் யோகநிலையிலிருந்து எப்படியெழுதி அதை ஒரு சிறந்த சிருஷ்டியாக்க முடியும் என்ற மனதுடன் செயல்பட்டேன்."


என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுத ஆரம்பித்த அனுவவத்தை விவரிக்கிறார். ஏறத்தாழ நாற்பது ஆண்டு கால யோக சாதனையின் வெளியீடாக, "சாவித்திரி" என்னும் பெரும் காவியம் இருக்கிறது. இது வெறும் காவியம் என்றோ, எழுதியவரின் அனுபவக் குறிப்பு என்கிற அளவோடோ, குறுகி நின்று விடாமல், அதை படிக்கிற நமக்கும் ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவத்தை அளிக்கிற மந்திர சித்தியையும் கொண்டிருக்கிறது.


ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட கவிஞர்கள் கூட, இவ்வளவு விரிவாகக் கவிதை இயற்றியதில்லை! மானுடம் சந்தித்த தத்துவார்த்தக் கேள்விகள் அத்தனையையும் ஒரு சேரத் திரட்டி விடை காண முயற்சித்த நூல் எதுவுமில்லை.  வெறும் புனைவு, ஊகம் என்பதில் இருந்து விலகி, இங்கே சாவித்ரி மகாகாவியம், ஸ்ரீ அரவிந்தரின் தவத்தில் விளைந்த அனுபவங்களின் திரட்டு என்றே சொல்லக் கூடிய அளவில் நம் முன்னால் விரிந்து கிடக்கிறது.  ஆன்மீக அனுபவத்தைப் பெற விரும்பும் எவருக்கும், உதவுகிற படிக்கட்டுக்களாக சாவித்திரி மகா காவியம் இருக்கிறது.


On Savitri

If you are depressed, if you feel miserable, if you do not succeed in what you do or else if what happens is always the contrary of what you expect, however you try - if it has come to such a pass that you lose your temper, life becomes disgusting and you are unhappy, then immediately take Savitri and, after a moment's concentration, open it at any page and read. You will see that all your misery disappears like smoke. And you will have the strength to overcome the worst sorrows; you will no longer feel that which was tormenting you. Instead you will feel a strange happiness, a reversal of consciousness along with the energy and force to conquer everything, as though there were nothing impossible. And you will feel this inexhaustible joy that purifies all. 
 
Read just a few lines and that is enough to establish the contact with your inmost being. Such is the extraordinary power of Savitri.

Or else, after having read some lines, if you concentrate deeply, then too you will find the solution to what was tormenting you. You have only to open Savitri just at random without thinking and you will have the answer to your problems. Do this with faith and simplicity, the result is certain.”

The Mother
5-11-1967

 
சாவித்திரி காவியத்தைப் படிப்பதே ஒரு உன்னதமான அனுபவம் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை! ஸ்ரீ அரவிந்தர் அரும்பாடு பட்டு இயற்றிய தவம், யோக சாதனைகளின் அனுபவம் சாவித்திரி காவியத்தின் ஒவ்வொரு வரியிலும் முழுமையாக நிறைந்திருக்கிறது. படிக்க ஆரம்பிக்கும்போது, நம்மிடம் மூடிக் கிடக்கும் கதவுகள் திறப்பதையும், அதுவரை விடைதெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை வரிசையாகக் கிடைப்பதையும், மனச்சோர்வும் சலிப்பும் நிறைந்து நிராதரவாக நிற்கிற தருணங்களில், உற்ற துணையாகவும் பேராதரவாகவும் இருந்து வழி நடத்துவதையும், அனுபவத்தில் தான் கண்டுகொள்ள முடியும். அப்படி ஸ்ரீ அரவிந்தரது யோகத்தைத் துணைகொண்டு நடக்கும் பாதையை ஒளி பொருந்திய பாதை (Sunlit Path) என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

காரடையான் நோன்பு என்பது, வெறும் சடங்கு அல்ல! மரணமில்லாப் பெருவாழ்வு என்று திருவருட்ப்ரகாச வள்ளலார் பெருமான் சொல்கிறாரே, அந்த மரணமில்லாப் பெருவாழ்வின் திறவுகோலும் கூட! வெறும் சடங்கு என்ற அளவோடு குறுகி நின்றுவிடாமல், அதன் உள்ளே பொதிந்துகிடக்கும் நுட்பத்தை அறிந்துகொள்ளத் தயாராக இருக்கும் எவருக்கும் ஒளிபொருந்திய பாதையாக முன்னே இருக்கிறது.

பயணம் செல்லத் தயார் தானே!


**இது ஒரு மீள்பதிவு. கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டது.
 
 

8 comments:

  1. அனைவருக்கும் பயணம் செல்லத் தயாராகத் தான் இருக்கும் என நினைக்கிறேன் - ஏனெனில் கரும்பு தின்னக் கூலியா வேண்டும். இருப்பினும் கூலி போல ஒரு பதிவு தந்தமைக்கு நன்றிகள்.

    அண்மையில் மகளிர் தினத்தில் பலரும் பலவற்றைச் சொன்னார்கள். சாவித்திரியை?

    ReplyDelete
  2. Thanks for sharing this info.

    virutcham

    ReplyDelete
  3. அன்றைய தினத்தின் விசேஷங்களை அன்றைய தினத்தில் போடுவது விசேஷம்தான்

    ReplyDelete
  4. வாருங்கள் ஜீவா!

    அத்தனை பேரும் பயணத்திற்குத் தயாராக....! அது சந்தேகம் தான். எப்போதுமே வெளிச்சத்தைக் கண்டு பயந்து ஒதுங்குகிற ஒரு பகுதி இருந்துகொண்டேதான் இருக்கிறது.

    சாவித்ரியில் ஒரு வரி வரும்....

    வெளிச்சத்தைக் கண்டுகொள்வதற்கே இங்கே இருள் தேவைப் படுகிறது!

    ஒன்றைப் புரிந்துகொள்ள அதற்கு நேர்மாறான ஒன்றை வைத்துத் தான் முடிகிற சிருஷ்டியின் இரட்டைத்தன்மையைப் புரிந்துகொண்டால் மட்டுமே, அதிலிருந்து விடுபட முடியும். இந்த இரட்டைத்தன்மையைப் பற்றி சென்ற வருடம் பிப்ரவரிக் கடைசி நாள் , மார்ச் முதல்நாள் பதிவுகளாக இரண்டு பகுதிகளில், கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான், கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் என்று ஒரு வங்கக் கதை மொழிபெயர்ப்பை வைத்துப் பார்த்திருக்கிறோம்.

    இதே கருத்தை முன்வைத்து ரமண வழியைப் பற்றியும், மலை பாதை எல்லோர்க்கும் எளிதில் வாய்க்குமோ என்று ஒரு பதிவாகவும் பேசியிருக்கிறோம்.

    ReplyDelete
  5. விருக்ஷம்! நல்ல உருவகப் பெயர்!

    பதிவுகள் பகிர்ந்துகொள்வதற்காகத் தானே! அப்புறம் எதற்கு இந்த நன்றி அது இது என்று?

    தேடலில் கிடைத்தது, தேடுகிறவர்களுக்கும் கிடைக்கட்டுமே என்பதற்குத் தான் பதிவுகளாக எழுதுவதே!

    ReplyDelete
  6. வாருங்கள் ஸ்ரீராம்!

    அன்றைய விசேஷத்தை அன்றைக்கே பதிவாக எழுதுவது..விசேஷம் தான்!

    இந்தப் பதிவு போன வருடம் மார்ச் பன்னிரண்டாம் தேதி எழுதியதன் மீள்பதிவு! கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டது, அவ்வளவுதான்!

    தினந்தினம் மாறுகிற விஷயங்களைப் போல மாறாமல், என்றைக்கும் உள்ள சத்தியத்தைத் தேடுகிற ஒரு விஷயம், ஆன்மீக வெளிச்சமாய் நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

    அதை வெறும் சடங்கு, வீட்டுக்கார அம்மா புதுத் தாலிச் சரடு மாற்றிக் கொண்டு, கார் அடை,கொழுக்கட்டையும் வெண்ணெயும் தந்து சாப்பிடுவது என்ற அளவோடு நின்று விடாமல், உள்ளே இருப்பது என்ன என்ற தேடலும் அவசியமா இல்லையா?

    அதுதான் இது!

    ReplyDelete
  7. சாவித்ரி மகா காவியம் இணையத்தில் திறக்க முடியவில்லையே. Consenttobenothingல் பதிவாக கொடுத்தால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. சாவித்ரி இணைய முகவரி தற்போது மாறியிருக்கிறது. இங்கே பார்க்கவும்
      http://savitrithepoem.com/

      சாவித்ரியின் மையக்கருவை இங்கே சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன். அனுபவமாகப்பெற சாவித்ரியை படிப்பது ஒன்றுதான் வழி.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!