நித்யானந்தா! நித்தம் கலாட்டா! வெள்ளிக் கிழமைக் கேள்விகள்!


நித்யானந்தா விவகாரத்தை எழுதிய பிறகு சொத்தைக் கடலையை கடித்த  மாதிரித் தான் இந்த இரண்டு நாட்களாக, ஒருவிதமான அருவருப்பும் கசப்பும் என்ன மாதிரியான சூழ்நிலையில்  வாழ்கிறோம் என்பதான எரிச்சலுடன் கூடிய ஒரு அலுப்பு இருந்து கொண்டே இருக்கிறது. மார்ச் 3 ஆம் தேதி நிலவரமாக  கூகிள் ட்ரெண்ட்ஸ் சொல்கிறபடி,  இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபராக நித்யானந்தா ஆகிவிட்டார்!

பூவோடு சேர்ந்த நாறும் மணக்கிற கதையாக, இந்த நாற்றத்தில் நித்யானந்தாவை விட நியாயமாக சன் டிவியும், நக்கீரனும் தான் இருந்திருக்க வேண்டும்! அவர்களுக்கும் அவர்கள் விரும்பியது கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், எரிகிற வரை எரிய விட்டு விட்டு, இப்போது ஊடகங்கள் தாங்களே அம்பலப் படுத்துகிறோம் என்ற சந்தடியில் இன்னொரு தீமைக்கு வித்திட்டு விடக் கூடாது என்று அறிவுரை, பாம்பும்  நோகாமல், தடியும் நோகாமல் என்று ஒரு கதை சொல்வார்கள், அந்த மாதிரி வந்தாயிற்று!


சென்னை பர்மா பஜாரில் இந்த வீடியோ சிடி ஐநூறு ரூபாய் அளவுக்குப் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருப்பதாகவும், ஏராளமானபேர் இந்த வீடியோ சிடி கிடைக்குமா என்று கேட்டு அலைவதாகவும் நண்பர்கள் சொல்கிறார்கள்! பகுத்தறிவுப் பிரச்சாரம், சாமியார்களை அடக்கி வைப்பது எல்லாம், அறிக்கையில் மட்டும் தான்! இந்த விவகாரத்தை வைத்துக் காசுபார்ப்பவர்களுக்கு எதிராக சின்னக் கண்டனம் கூடக் கிடையாது! இந்து மத சாமியார்களுக்கு எதிராக மட்டும் தான் இப்படி! தங்களுடைய சானல்களுக்குப் பலவிதமாக விளம்பர வருமானம், அல்லது வேறுவிதமான கைம்மாறு செய்கிற கிருத்துவ அல்லது இதர மத நிறுவனங்களில் எத்தனை நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்! இப்படி ஒரு ஆதங்கம் இருப்பது, பல பதிவுகளில், பத்திரிகைச் செய்திகளின் பின் வரும் வாசகர் பின்னூட்டங்களில் மிக வெளிப்படையாகவே தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

நக்கீரன் ஏழு ரூபாய்க்கு  ஸ்பெஷல் எடிஷன் வெளியிட்டு சில்லறை சேர்த்துக் கொண்ட கதையை நண்பர்கள் வாயிலாக அறிந்த போது, மக்களுக்கு எந்த மாதிரியான செய்தி முக்கியமாக இருக்கிறது, அல்லது எது முக்கியமில்லை என்ற பிரக்ஞை கூட இல்லாமலேயே மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டு வருகிற  இந்த நாற்பதாண்டு காலத்தை நினைத்துப் பார்த்து வேதனைப் படத் தான் முடிந்தது! 

பத்திரிகைகள், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று, அமெரிக்காவில் சொல்லப் படுவது உண்டு. இந்தியச் சூழ்நிலையில், எல்லாத் தூண்களுமே மக்களை ஏமாற்றித் திசை திருப்புவதாகத் தான் இருக்கிறது.

நாலாவது தூண்! இதைப் பற்றி ஏற்கெனெவே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்!

"செய்தித் தாட்களில், சில விஷயங்களைப் பார்த்திருக்க முடியாது! அப்படியே பார்த்திருந்தாலும் அது , ஒரு ஓரத்தில் கூறு கட்டிப் போட்டிருக்கும் செய்தி, அல்லது செய்தித்தொகுப்பாக மட்டுமே இருப்பதில் இருந்து, முழு உண்மையைத் தெரிந்து கொள்ள முடியாது! அங்கே உண்மையில் என்ன நடந்தது, என்னென்ன தமாஷ் அரங்கேறியது என்பதெல்லாம், அந்தந்த துறையில் இருப்பவர்களுக்கே சமயங்களில் பிடிபடுவதில்லை.

எவர்  எது சொன்னாலும், அதை அப்படியே உண்மை, பொய் என அப்படியே எடுத்துக் கொண்டுவிடாமல், கொஞ்சம் சுய சிந்தனையோடு இருக்கவேண்டியது, இன்றைய முக்கியத் தேவை! பொய்யை விட, ஆயுதங்களை விட, Disinformation  என்று சொல்லப்படும் செய்திகளை உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லும் ஊடகங்கள் மிகவும் ஆபத்தானவை. அழிவைத் தருபவை."

என்று இங்கே இப்படிச் சொன்னது நினைவிருக்கிறதா?



வானரங்கள் இலங்கையை எரித்தன. குறைந்த பட்சமாக சீதையாவது மீட்கப் பட்டாள் என்று ராமாயணம் சொல்கிறது! இங்கே தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாகவும், தீ வைக்கிறவனாகவும் ஆகிப் போனதில் என்ன மீட்கப் பட்டது? என்ன சாதிக்கப் பட்டது?




மிகக் கேவலமாகக் காமெடி செய்தே தீருவது என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால்,தோழர் உ ரா வரதராஜன் மரணம் கட்சியின் மன சாட்சியை, உளுத்துப்போன நடைமுறைகளைக் கேள்வி கேட்பதாக ஆகி இருக்க வேண்டும். ஆனால், கேள்விகளைக் கண்டு கட்சி அஞ்சுவதாகவே தெரிகிறது! இல்லையென்றால், எதற்காக மக்கள் டிவி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும்? மாநிலக் குழு உறுப்பினர்  சம்பத் கட்சித் தோழர்கள் அமைதியாகப் போராட்டம் நடத்தினார்கள் என்று ஜோக் கடி'த்திருக்கிறார்! படத்தைப் பாருங்கள்!


அங்கே ஒருத்தர் ஐபிஎல் மாட்சுக்காக பவுலிங் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கிற  மாதிரித் தெரியவில்லை?  அதுவும் காவல்துறை கண்முன்னாலேயே! அப்படியும் கூட சொல்வார்கள்!

கேரளத்தில்  பினரயி விஜயன் ஊழலைக் கட்சியே மூடி மறைக்கிறது. இங்கே தமிழ் நாட்டில், மனைவி புகார் செய்கிறார், விவாகரத்து கோரும் அளவுக்கு விவகாரம் முற்றியிருக்கிறது, மாதர் சங்கம் விஷயத்தைக் கையில்  எடுத்துக் கொண்டு டீல்; செய்த விதம் ஒரு நல்ல தோழனுடைய உயிரைப் பறித்திருக்கிறது என்ற வேதனையை, இவர்கள் அடிக்கும் கூத்து, இன்னமும் அதிகரிக்கச் செய்கிறது!

சாமியார்களைக் கூட அடக்கி விடலாம்! இந்த நாலாவது தூண்கள் கொழுப்பெடுத்து ஆடுகிற ஆட்டத்தை அல்லவா முதலில் அடக்கி வைக்க வேண்டும் போல இருக்கிறது!?

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்?




 
 

9 comments:

  1. they also in money making business organisation.

    nowadays not able to believe also.

    eg- on srilanka issue: the hindu , vikatan

    ReplyDelete
  2. வாருங்கள் பாலு!

    பணம் சம்பாதிப்பதற்காகத் தான் எல்லோரும் தொழில் நடத்துகிறார்கள்.

    எப்படி என்பதில்தான் கொஞ்சம் முகத்தைச் சுளிக்க வைக்கிற விதம் இருக்கிறது.

    நாலாவது தூண் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப் பதிவில் தேடித் பார்த்தீர்களானால், ஊடகங்கள் செய்தியைத் தருவதற்குப் பதிலாக, அல்லது விமரிசிப்பதற்குப் பதிலாக, திரித்துச் சொல்கிற விதத்தைப் பற்றி ஏற்கெனெவே எழுதிய பதிவுகளைப் படிக்க முடியும்.

    ஜனங்களுடைய மறதி, அறியாமை, விலைபோகிற பலவீனம் மீது இந்த அயோக்கியர்களுக்கு இருக்கிற நம்பிக்கை இருக்கிறதே......!

    அதுதான் ரொம்பவுமே பயமுறுத்துகிறது!

    ReplyDelete
  3. ஜனங்களுடைய மறதி, அறியாமை, விலைபோகிற பலவீனம் மீது இந்த அயோக்கியர்களுக்கு இருக்கிற நம்பிக்கை இருக்கிறதே......!

    - yes . true .

    - what ourself do/
    we can give awareness to whatever maximum people

    - in my blog i doing same job.
    lot of matter there to publish.

    ReplyDelete
  4. \\மக்களுக்கு எந்த மாதிரியான செய்தி முக்கியமாக இருக்கிறது, அல்லது எது முக்கியமில்லை என்ற பிரக்ஞை கூட இல்லாமலேயே மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டு வருகிற இந்த நாற்பதாண்டு காலத்தை நினைத்துப் பார்த்து வேதனைப் படத் தான் முடிந்தது!\\

    மழுங்கடிக்க வைப்பது இன்றைய அரசியல் கட்சிகள், மழுங்குவது தமிழனின் சிறப்புக்குணங்களில் ஒன்று :)))

    ReplyDelete
  5. நக்கீரன் ஏழு ரூபாய் அல்ல, இருபத்தைந்து ரூபாய் கொடுத்துக் கூட வாங்கினார்கள். அடுத்தவர் அந்தரங்கத்தை அறிவதில் அவ்வளவு ஆர்வம். பொது மக்கள் மேலும் ஏமாறக் கூடாது என்றுதான் இதை வெளியிடுகிறோம் என்று மீண்டும் மீண்டும் சொன்னது சன் டிவி. எதிலோ? மக்கள் அவர்கள் எதிர்பார்ப்பை செவ்வனே நிறைவேற்றினார்கள்...

    ReplyDelete
  6. /பொது மக்கள் மேலும் ஏமாறக் கூடாது என்றுதான் இதை வெளியிடுகிறோம்/

    ஆமாம்! அவர்களிடம் தவிர வேறு எவரிடமும் ஏமாந்து இருக்கிற காசைக் கொடுத்து விடக் கூடாது! தமிழ்நாட்டு மக்கள் மீது அவ்வளவு அக்கறை! கரிசனம்!

    கண்டுகொள்வோம் கழகங்களை என்று பெரியவர் ஜெபமணி எத்தனையோ தரம் படித்துப் படித்துச் சொன்னார்!

    ReplyDelete
  7. சாமியாரின் சிஷ்யரே இவ்வாறு வீடியோ எடுத்ததாக செய்திகள் வருகின்றன. சாமியார் கிரிமினல் குற்றங்கள் செய்திருந்தால் அதுவும் வெளியில் வரும்.கிரிமினல் குற்றங்கள் செய்திருந்தால் பல வருடங்களுக்கு சாமியாருக்கு ஜெயில் தண்டனை தான்.

    ReplyDelete
  8. தனியார் ஊடகங்கள் பணம் ஈட்டுவதற்காக தான் இவ்வாறு செய்கின்றன. வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்.
    ஆனால் சாமியார்கள் சம்பாதித்ததில் நூறில் ஐம்பது பங்குதான் சம்பாதித்ருப்பார்கள். அடுத்து சாமியார்கள் தங்கள் ஆசிரமங்களை பங்கு மார்கெட்டில் லிஸ்ட் செய்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி செய்தால் பங்குகள் வாங்கவேண்டும் என எனக்கு ஆர்வமாக உள்ளது.

    ReplyDelete
  9. அமர்! சாமியார்களின் கார்பரேட் பங்குகளை நீங்கள் விலை கொடுத்து வாங்க ஆசைப் படுகிறீர்கள், தவறில்லை!

    ஊடகங்கள், ப்ளாக்மெயில் செய்து பங்கு கேட்கிறார்கள், சம்பாதித்திருக்கிறார்கள் என்றால் அது வேறு விதமானது இல்லையா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!