இதுவும் கடந்து போகும்!


இதுவும் கடந்து போக வேண்டியதே! இதுவும் கடந்து போகும்!

இப்படி ஜென் ஞானமாகவும், வேதாந்த உண்மையாகவும் நமக்குக் காலம் காலமாகச் சொல்லப் பட்டதெல்லாம் தமிழனிடம், தமிழ் வலைப் பதிவுகள், வாசகர்களிடம்,  கொஞ்சம் மெதுவாகவே தான் வேலை செய்யும் போல இருக்கிறது. எவ்வளவு மெதுவாக என்பதைப் பார்க்கும் போது தான் கொஞ்சம் பகீரென்கிறது!

ரிப்பீட்டே, ரிபீட்டுக்கு மறுக்கா ரிப்பீட்டேய்யய்ய்ய்.....என்று தலைமுறைகளையும் தாண்டி அவ்வளவு மெதுவாக!

இதற்கே இப்படி என்றால் கண்டு கொள்வோம் கழகங்களை என்று பெரியவர் நெல்லை ஜெபமணி போன்றவர்கள் என்னதான் முழுக்க விவரங்களை அடுக்கினாலும், நாற்பத்தைந்து ஆண்டு காலமாகக் கழகங்கள் என்ற மாயையைக் கடந்துபோக இன்னும் எத்தனை காலமாகும் என்பதைக் கணக்குப் போடவே பயமாக இருக்கிறது! 


வலைப் பதிவுகளை, முகம் பார்க்கும் கண்ணாடியாக உருவகப் படுத்துவார் முனைவர் நா.கண்ணன்! நம்முடைய  அகத்தில் என்ன இருக்கிறதோ அதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் தான் இணையத்திலும் பார்க்க முடியும் என்று அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்!

போன வியாழக் கிழமை காதல்! காமம்! சார்க்கோசி! சபாஷ் சரியான போட்டி! என்று ஒரு பதிவை இந்தப் பக்கங்களில் எழுதினேன். 



இந்தப் பக்கங்களுக்கு வரும் வாசகர்களில் இன்னும் கணிசமான எண்ணிக்கை அந்தப் பதிவிலேயே தான் தேங்கி நிற்கிறார்கள், அதைத் தாண்டி வர மாட்டேன் என்கிறார்கள் என்று தளத்தின் கணக்குப் பிள்ளை சொல்கிறார்!  நித்யானந்தாவையே கட்டிக் கொண்டுஇங்கே பதிவுலகமே  மாரடித்துக் கொண்டிருந்த தருணத்தில் காங்கிரசின் அய்யம்பேட்டை வேலையைச் சொல்வதற்காக மேம்போக்காக சார்க்கோசி, ப்ருனி விவகாரத்தைத் தொட்டு எழுதினது தான் அது! 

சப்பை மாட்டர்! கொஞ்சம் சப்பைப் படம்!  அதுக்கே இப்படியா என்று ஆச்சரியப் பட்டுக் குழம்பாமல் வேறென்ன செய்வது? அதற்கப்புறம் ஏழு பதிவுகள் எழுதியாயிற்று! அவைகளுக்கு எண்பது- நூறு வரை வாசகர் வருகை இருந்தது அவ்வளவுதான், மிச்சமெல்லாம் ப்ருனி படம் பார்ப்பதற்குத்தான்! நல்லாப் பாத்துக்கோங்க சாமி!

ப்ரூனி -சார்க்கோசியைப் பத்தி முன்னால வந்த செய்தி, இன்னமும் ஊர்ஜிதமாகலை! யாரோ ஒருத்தர், இப்படி ஒரு செய்தியை கிளப்பி விட்டா என்ன ஆகும்னு டிவிட்டர்ல ட்விட்டை ஆரம்பிச்சு வச்சதா சொல்றாங்க! அதுவும் ஊகம் தான்!இப்போ பரபரப்பான செய்தி என்னவா இருக்குன்னா, அம்மணியோட முகத்தில சமீபத்துல அதிக சுருக்கம் விழுந்து வயசாளியாக் காமிக்குதாம்! பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணது  சரியில்லேங்கற மாதிரி!
 
அதை விடக் கொடுமை நேற்று எழுதிய பதிவர் குணாதிசயங்கள்! அப்புறம் உலக மகா டாக்டர் பட்டம்! தமிலிஷ் திரட்டி இந்தப் பதிவை இன்னும் நாலைந்து பதிவுகளோடு டாக்டர்,பிரகாஷ் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள் என்ற தனிப்பக்கமாக வகைப் படுத்தி வைத்திருக்கிறது. டாக்டர், பிரகாஷ் இரண்டு வார்த்தைகளுக்கு நடுவிலும் ஒரு கமா இருக்கிறதே என்கிறீர்களா? 

அந்தக் கமாவுடனோ, அல்லது இல்லாமலோ கூகுளில் தேடித் பார்த்தால் என்ன ரிசல்ட் சேர்த்து வரும் என்பது தெரியும் தானே!

குதிரைக்குக் கண்ணைக் கட்டி வைத்திருப்பது போல, இப்படி நமது சிந்தனைகளை, செயல்களைக் குறுக்கி வைத்திருப்பது எது?


எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் என்பது தெரியாத வரை, எந்த ஓட்டை வழியாக, எந்த பலவீனத்தை வைத்து  நம்மிடமிருப்பது எல்லாம் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

பதிவர்கள்
, இணையத்தில் புழங்குவோர் ஒன்றும் தனியே எங்கிருந்தோ குதித்து வந்தவர்கள் அல்ல! அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதியே! என்ன, இணையத்தில் மின் வெளிப் பரப்பில் சுதந்திரமாக உலவுகிறோம் என்ற நினைப்பில், கொஞ்சம் கூத்தடிப்பது, மொட்டைக் கடிதாசி எழுதுகிற மாதிரியே, அனானியாக வந்து   தனிமனித வெறுப்பைக் கொட்டுவது, கொஞ்சம் ஆபாசமாக வார்த்தைகளைப் பயன்படுத்துவது எல்லாமே கொஞ்சம் மிகைப் படுத்தப் பட்ட விகிதத்தில் இருக்கும், அவ்வளவு தான்!

எல்லாமே வேண்டியது தான்! எதையும் ஒதுக்கி வைக்க வேண்டியதில்லைஎன்பதும்  உண்மைதான்! ஆனால், களைகளை வேரறுக்காமல் விட்டு விட்டால்,  நல்ல பயிர் தழைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையா?

மலம், மூத்திரம் இவைகளை நம்முடலில்  சுமந்து
கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை! அதற்காக  அவற்றை எடுத்து உணவு உண்ணும் இடத்தில், சேர்த்து வைத்துக் கொள்வோமா? 


சின்னச் சின்ன விஷயங்களில் கவனத்தைச் சிதற விட்டால், அப்புறம் திருடர்கள் ஏன் கழகங்கள் அமைத்துத் திருட மாட்டார்கள்?

அப்புறம், மாயாவதிகள் மாதிரிக் கோடிரூபாய் மாலைகளில் தெனாவட்டாகத்  ஏன் திரிய மாட்டார்கள்? 


ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஏழை அழுத கண்ணீர் எரிக்கும் என்பதெல்லாம் வீரியமில்லாத வார்த்தைகளாகிப் போனது ஏன் என்பது புரிகிறதா?
இதுவும் கடந்து போக வேண்டியதே! இதுவும் கடந்து போகும்!





14 comments:

  1. Once cho.ramasamy was asked "How long people will remember any problem?"

    D next moment he answered "till the next problem comes".

    I know u can relate this to the above post( but dnt take it like im saying ur posts a problem :) jus 4 fun)

    Keep writing sir....teach us about mao-se-tung, lenin,stalin ,angels,marx,krishnamurthy sir...

    ReplyDelete
  2. இரு கோடுகள் படம் பார்த்திருக்கிறீர்களா? ஒரு கோட்டை அழிக்காமலேயே அதைச் சின்னதாக்க வேண்டும். எப்படி என்ற கேள்வியுடன் படம் துவங்கும். கதாநாயகி வந்து, அந்த கோட்டை விடப் பெரிதாக இன்னொரு கோட்டைப் பக்கத்தில் வரைந்து விட்டு, இப்போது கோடு சின்னதாகப் போய்விட்டது பார் என்பார்.

    அந்த மாதிரி, ஒரு அயோக்கியத்தனைத்தைப் பற்றி ஜனங்கள் முழுசாகப் புலம்பித் தீர்ப்பதற்கு முன்னாலேயே, அதைவிடப் பெரிதாக இன்னொரு அயோக்கியத்தனம்..அப்புறம் அதை விடப் பெரியதாக இன்னொன்று என்றே நம்மூர் நிலவரம் போய்க் கொண்டிருக்கிறது.

    நித்யானந்தா-ரஞ்சிதா விவகாரத்தைப் பெரிதாக்கி ஊது ஊதென்று ஊதிக் காசு பார்த்தார்கள். பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்குமே என்று எவருமே இங்கே கவலைப் படவில்லை!

    நித்தி-ரஞ்சி ஷோ இன்னும் கிடைக்காதா என்றே இணையத்தில் தேடிக் கொண்டிருந்தார்கள். மார்ச் மூன்றாம், நான்காம் தேதியில், இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபராக நித்யானந்தா ஆகிப் போனார்! இதை சொல்வது கூகிள் ட்ரெண்ட்ஸ்.

    எது விஷயமோ, அதைக் கோட்டை விட்டு விட்டு, சின்ன விஷயங்களில் தன்னுடைய மொத்தத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிற ஜனங்களை என்னவென்று சொல்வது?

    மாவோ, லெனின், ஸ்டாலின் பற்றிச் சொல்லிக் கொடுப்பதற்கு, ஏற்கெனெவே இல்லாததாக,புதிதாக என்ன இருக்கிறது?

    சுயநலம் மட்டுமே என்பதில் இருந்து கொஞ்சம் உயர்ந்து பொதுநலத்தில் கலந்த சுயநலம் என்ற ஒரு சமூக உணர்வு முதலில் வரவேண்டும்.

    அப்புறம் ஒவ்வொன்றாகத் தானே வந்து அதனதன் இடத்தில் பொருந்தும்!

    ReplyDelete
  3. அன்னையை பற்றிய விவரங்களைப் படிக்க வரும் என் போன்றவர்களையும் சற்று நினைவில் வைத்திருங்கள். அன்னையை பார்க்க வந்து எதையோ பார்க்க வேண்டியதாகி விட்டது.

    ReplyDelete
  4. திரு.சேகர்,

    அன்னையைப் பற்றி மட்டுமே படிப்பதென்றால், இந்த வலைத் தளங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கக் கூடும்.

    http://searchforlight.org/

    http://www.mirroroftomorrow.org/

    http://insearchofthemother.net/

    இது தவிர ஆசிரமத்தின் வலைத் தளம், எல்லாவிதமான வசதிகளையும் அளிக்கிறது.

    இங்கே சமூகத்தைப் பாதிக்கும் அத்தனை விஷயங்களையும் பேசுகிற தளமாக மாறி நீண்ட நாட்களாகி விட்டது. ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த, எழுதிக் கொண்டிருந்த தருணங்களில் உங்களைப் போல வாசகர்கள் எனக்கு இல்லை. நான் தட்டச்சுப் பழகுகிற இடம் மாதிரி மட்டுமே இருந்தது.

    அன்னையைப் பார்க்க வந்த இடத்தில் "எதையோ"பார்க்க வேண்டியதாகி விட்டதே என்று வருத்தப்பட்டிருக்கிறீர்கள்.

    விகாரமோ, விவகாரமோ அப்படி "எதுவாகவோ" படுவது நம்முடைய மனதில் தான் இருக்கிறது!

    எனக்கு ஐம்பத்தாறு வயதாகிறது,நிச்சயமாக வழிகிற வயது இல்லை இது! உங்கள் மனம் வருத்தமடையச் செய்திருந்தால் மன்னியுங்கள்!

    ReplyDelete
  5. // மலம், மூத்திரம் இவைகளை நம்முடலில் சுமந்து கொண்டு இருக்கிறோம்என்பது உண்மை! அதற்காக அவற்றை எடுத்து உணவு உண்ணும் இடத்தில், சேர்த்து வைத்துக் கொள்வோமா? //

    கிருஷ்ணமூர்த்தி said...

    அன்னையை பற்றி எழுதுமாறு ஒரு அன்பர் வேண்டுகிறார். தாராளமாக எழுதுங்கள். ஆனால் அதற்க்கு முன்னர் நீகள் எழுதவேண்டுவது நிறைய உள்ளது . என்னவென்று தங்களுக்கே தெரியும்.
    Please, go ahead .

    ReplyDelete
  6. //சப்பை மாட்டர்! கொஞ்சம் சப்பைப் படம்! அதுக்கே இப்படியா என்று ஆச்சரியப் பட்டுக் குழம்பாமல் வேறென்ன செய்வது //

    கிருஷ்ணமூர்த்தி said...

    வேதனையிலும் உங்கள் குறும்பு ரசிக்கும் படி இருந்தது .

    ReplyDelete
  7. what to do peoples and readers like that only.
    recent regarding atomic bill i posted in my blog. only 2 visiters readed. it is very less compare to other posts.

    but i will not worried. i will continue my job.

    pl be in same tempo.

    ReplyDelete
  8. மாணிக்கம்!

    வேதனை, குறும்பு இரண்டுமே இல்லை! உண்மையைத் தான் சொன்னேன். ஒரு சப்பை மாட்டரைப் பின்னுக்குத் தள்ள அதை விட சப்பையான மாட்டரால் தான் முடியும் என்பது அரசியவியாதிகளால் மட்டுமல்ல, பதிவைப் படிக்க வரும் வாசகர்களாலும் இங்கே நிரூபிக்கப் பட்டிருப்பதாகவே, தளத்தின் கணக்குப் பிள்ளை சொல்கிறார்.

    பதிவர் மயில் ராவணனுக்குச் சொன்ன பதிலில் தமிழ்ப் பதிவுகள், வாசகர்கள் ரசனை எங்கே போய் நிற்கிறது என்பதையும் ஒரு கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறதே!

    ReplyDelete
  9. மாணிக்கம்!

    அதுவும் தவிர, ஒரு பதிவரைப் பற்றி, வாசகர்களே ஒரு முத்திரை குத்திக் கொண்டு இவர் இப்படித் தான், இவர் இதை எழுதினால் மட்டும் தான் சரியாக இருக்கும், அல்லது இவர் இதைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, அப்புறம் படிக்கும் இயல்பு கூட இங்கே இருப்பதாகத் தான் தோன்றுகிறது!

    /நீங்கள் எழுதவேண்டியது நிறைய உள்ளது.என்னவென்று தங்களுக்கே தெரியும்/

    நிஜமாகவே, எனக்குத் தெரியவில்லை!

    வலைப் பதிவுகளின் வடிவமே வேறு!

    இதில் கதை, சிறுகதை, தொடர்கதை என்றெல்லாம் எழுதிக் கொன்டிருந்தால் சரிப்படாது என்றே எனக்குத் தோன்றுகிறது. அதன் வீச்சு, வடிவம் வேறு வகையான தளம்.

    வலைப்பதிவுகள், சமூகத்தின் ஒரு பகுதி, இன்னொரு பகுதியிடம் தன்னுடைய மனதில் படுவதைப் பகிர்ந்து கொள்வதே மிக முக்கியமான அம்சமாக எனக்குப் படுகிறது.

    Social Networks, Web 2.0 என்பதெல்லாம் ஒரு interaction மட்டும் தான்.

    தமிழில் வழக்கம்போலவே, இதையும் தப்புத் தப்பாகவே புரிந்து கொண்டே எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறோம்!

    ReplyDelete
  10. திரு.பாலு,

    தமிழிலேயே உள்ளீடு செய்யப் பழகுங்களேன்!

    நான் வெறும் ஹிட்சுக்காகவோ, பின்னூட்டங்களுக்காகவோ, அல்லது பிரபல பதிவராகியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டோ எழுத ஆரம்பிக்கவில்லை!

    அந்த மாதிரியான ஏக்கம், தவிப்பு எல்லாம் ஒன்றுமில்லை.

    சமூகத்தில் வாழும் ஒரு மனிதன் தனித்தீவாக ஒதுங்கிவிடாமல், தன்னுடைய உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிற ஒரு சமூகக் கடமை இது, அவ்வளவுதான்!

    ReplyDelete
  11. //
    அன்னையைப் பற்றி மட்டுமே படிப்பதென்றால், இந்த வலைத் தளங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கக் கூடும்.

    http://searchforlight.org/

    http://www.mirroroftomorrow.org/

    http://insearchofthemother.net/

    இது தவிர ஆசிரமத்தின் வலைத் தளம், எல்லாவிதமான வசதிகளையும் அளிக்கிறது.

    இங்கே சமூகத்தைப் பாதிக்கும் அத்தனை விஷயங்களையும் பேசுகிற தளமாக மாறி நீண்ட நாட்களாகி விட்டது. ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த, எழுதிக் கொண்டிருந்த தருணங்களில் உங்களைப் போல வாசகர்கள் எனக்கு இல்லை. நான் தட்டச்சுப் பழகுகிற இடம் மாதிரி மட்டுமே இருந்தது.

    அன்னையைப் பார்க்க வந்த இடத்தில் "எதையோ"பார்க்க வேண்டியதாகி விட்டதே என்று வருத்தப்பட்டிருக்கிறீர்கள்.

    விகாரமோ, விவகாரமோ அப்படி "எதுவாகவோ" படுவது நம்முடைய மனதில் தான் இருக்கிறது! //


    புரிந்தது. என் மனதில் இருப்பது கொஞ்ச நஞ்ச விகாரம் அல்ல என்பதையும் அறிந்தேன். ஏனெனில் எனக்கு ஒரு மாதிரிதான் இருந்தது. நீங்கள் சொன்ன வலைத்தளங்களுக்கே போகிறேன். நன்றி.

    ReplyDelete
  12. நன்றி திரு.சேகர்,

    ஸ்ரீ அரவிந்தர் அன்னையை பற்றி ஏறத்தாழ முந்நூறு வலைத் தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அவரவர் தான் பெற்ற ஆன்மீக அனுபவம், சிந்தனையின் விரிவு என்ற ரகத்தில் உள்ளவை.

    அதிக விவரம் வேண்டும் என்றால் தயங்காமல் எழுதுங்கள், தருகிறேன்.

    ReplyDelete
  13. அறுபதாவது பிறந்த நாள் (20 /10 /2010) வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்யமான ஆயுளைப் பெற ஆண்டவனை வேண்டுகிறேன். (என் கணிப்பு சரிதானே..?)

    ReplyDelete
  14. இதுவும் கடந்து போகும். நல்லவற்றை தேடி பலரும் படிக்கும் நாள் வரும் என்ற நம்பிக்கையில்..

    Ravi

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!