உறித்து உறித்து ஒண்ணுமில்லாமல் போனதடி! வெங்காயம்!

 


 
"உன் நண்பன் யார் என்று சொல்! நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்" என்பதாக ஒரு மன நலம் குறித்த விளக்கம், அல்லது ஆரூடம் இப்படி எதோ ஒன்று, கேள்விப் பட்டிருப்பீர்கள்!  
 
சேத் கோடின் பதிவொன்றைப் படித்தபோது கூட இது அவ்வளவாக உறைக்கவில்லை! இங்கே இரண்டு நாட்களுக்கு முன்னால் சென்னையில் பதிவர் குழுமம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சி, அதற்காக நடந்த கூட்டம், அதன் பின்விளைவுகளாகவும்  பக்க விளைவுகளாகவும் வெளிவந்த பதிவுகளைப் படித்த பிறகு சேத் கோடின் எழுதிய அந்தப் பதிவு  எவ்வளவு தெளிவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது!

சேத் கோடின் சொல்வது இது  தான்!

நிஜ உலகில் நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பது கடினம்!  அரிதும் கூட! ஆனால், இணையம் மாதிரி ஒரு மின்வெளிப் பரப்பில், அல்லது கனவுலகில்

ஒன்று-    உங்களுடைய நண்பர்கள் உங்களை ஒரு செயலைத் தீர்மானிக்கும் முடிவுக்குத் தள்ளாமல் இருந்தால்,

இரண்டு- உங்களுடைய இணைய வழி நண்பர்கள், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவலைப் பரவச் செய்யாமல் இருந்தால்,

மூன்று-   உங்களுடைய நண்பர்கள், நீங்கள் பத்திரமாகப் போற்றிக் காப்பாற்றிவரும் நம்பிக்கைகளைக் கண்ணியமாகக் கேள்வி கேட்காமல்           இருந்தால்,

நான்கு-    உங்களுடைய நண்பர்கள், உங்களிடமிருந்து மிகச் சிறந்ததை வலியுறுத்தாமல் இருந்தால்,

நீங்கள் இணையத்தில், அல்லது கற்பனை உலகத்தில், புதிய நண்பர்களைத் தேட வேண்டிய நேரம் வந்து விட்டது! புதிய நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்! 

பதிவர் வட்டம், சந்திப்புக்கள், குழுமங்களில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை! அதே நேரம், பதிவர் சந்திப்புக்களைப் பற்றி எழுதப் படுவதைப் படிக்கத் தவறுவதுமில்லை. படித்தவைகளில் எழுந்த அபிப்பிராயம், பதிவர் சந்திப்புக்களை ஒரு வெட்டி அரட்டை, வடை போச்சே என்று வராமல் இருந்தவர்கள் பின்னூட்டமிட உதவும் ஒரு கூட்டம் என்பது தான்!  மொட்டை மாடிக் கூட்டங்களில், Good touch, Bad touch மாதிரிக் கொஞ்சம் சமூக விழிப்புணர்வுக்கான கூட்டங்களாகவும் நடந்த தருணங்களை, டோண்டு ராகவன் மாதிரி, அதை கவனமாகக் குறிப்பெடுத்து, உடனடியாக பதிவாக எழுதி அவசியம்  தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப் பகிர்ந்து கொண்டபோது, பதிவர் சந்திப்புக்கள் கொஞ்சம் உருப்படியானதாகவும் கூட இருக்க முடியும் என்பது தெரிந்தது.

தற்சமயம் மதுரை வாசியாக இருப்பதால், மதுரைக்காரப் பதிவர்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்கள் எழுதுவதைப் படித்ததோடு,  சிலரைத் தொடர்பு கொண்டு பேசியதுண்டு. அதற்குமேல் ஒருவரை மற்றவர் புரிந்துகொள்கிற மாதிரியோ, தெரிந்தவைகளைப் பகிர்ந்து கொள்கிற மாதிரியான சூழ்நிலை அமையாததால், வலுவில் போய் உறவு கொண்டாடி ஆதரவு தேட விரும்பாத ஒரு தனி நபராக மட்டுமே என்னைப் பொறுத்தவரை அமைந்துபோனது.
 

வால்பையன் அருணை நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக, ஒரே ஒரு சந்திப்புக்குப் போனதோடு சரி! பொதுவான  ஒரு நோக்கமோ, புரிந்துகொள்வது, தனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்வது  என்பதற்கெல்லாம் இடமில்லாத வெறும்  சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்ற முடிவு இன்னமும் உறுதியானது. கூட்டமாக இருக்கவும், தனியாகவும் இருக்கவும் பழகிப்போனவன் என்பதால் என்னைப் பொறுத்தவரை இந்த பதிவர் குழுமம், கூட்டம், சந்திப்பு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமே!

அதற்கப்புறம், உரையாடல் சிறுகதை பட்டறையை  தனிப்பட்ட இரு பதிவர்கள் ஏற்பாடு செய்து, அதைப் பற்றிக் கொஞ்ச நாள் ஒரே பரபரப்பாக இருந்தபோது கூட, என்னுடைய இளமையில், வாசகர் வட்டம்,  சோலைக் குயில்கள், இலக்கியத் திறனாய்வு, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்த மாதிரி அமைப்புக்கள் நடத்திய கிட்டத்தட்ட இதே மாதிரியான பட்டறைகளை நிறையப் பார்த்து விட்ட படியால், பெரிதாக எடுத்துக் கொள்ளவும் தோன்றவில்லை. அதில் கலந்து கொண்ட சிலரிடம், அவர்களுடைய அனுபவம் எப்படி இருந்தது என்பதைக் கேட்டறிந்த போது, இந்த மாதிரியான முயற்சிகள் ஒரு எல்லைக்கு மேல் விரியாமல் குறுகி நின்று போய்விடுகிற பழைய அனுபவம், இவையும் அப்படித்தான், இன்னமும் அப்படித்தான் என்கிற என்னுடைய அனுமானம் சரியாகவே இருந்ததையும் கண்டேன்.

அதே மாதிரி, புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் இளங்கோவன், இணையத்தைப் பயிற்றுவிக்கிற விதமாக பல்வேறு இடங்களில் பயிற்சிக் களங்களை  நடத்தி வருவதை,   தமிழ் இணையப் பயிலரங்கம் என்ற கூகிள் வலைக் குழுமமாகவும் நடத்தி வருவதையும் அறிந்தே இருக்கிறேன். இந்த மாதிரியான பட்டறைகள், பயிலரங்கங்கள் என்ன சாதித்துவிட முடியும் என்பதில் எனக்கு ஒரு கருத்து உண்டு. என்னுடைய அனுபவங்களின் எல்லைக்கு வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். அதே நேரம் அதுவே முடிந்த முடிவாக ஆகிவிடாது என்பதும் எனக்குப் புரிந்திருப்பதால், இதுமாதிரியான முயற்சிகளைப் பார்க்கும் போது, என்னுடைய கருத்துக்களை அங்கே முந்திரிக் கொட்டை மாதிரி  முந்திக் கொண்டு
சொன்னதில்லை, சொல்லப் போவதில்லை.

தண்டோராப் போட்டு அழைப்பு இங்கே! ஒரு அஞ்சு அம்சத் திட்டம் போட்டுச் சொல்லியிருக்கிறார் பாருங்க, அதுக்காகவே போய்ப் பார்க்கணும்!

இப்போது, சென்னை வலைப் பதிவர்களை ஒருங்கிணைத்து, ஒரு சங்கமாக, அமைப்பு ரீதியாகத் திரட்ட வேண்டும் என்ற முயற்சி, சில பதிவர்களால் முன்கையெடுத்து, அதைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு கூட்டமும் மூன்று நாட்களுக்கு முன்னால் நடந்திருக்கிறது. சங்கமாக அமைப்பது என்று வெளிப்படையாகச் சொல்லி  அதற்கு ஆதரவும், கருத்துக்களையும் கேட்க முனைந்த கூட்டத்தில், சுருதிபேதம் இருப்பது மிக வலுவாகவே வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. சுருதி பேதத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் அவ்விடத்தில் ஒரு பின்னூட்டம்!
  
அதிஷா said...
வெங்காயம்!
வெங்காயம்னு  சொன்னாத் தான் இங்கே சில பேருக்குப் பொழுதும் விடிகிறது! பிழைப்பும் நடக்கிறது போல!

ஒரு பிரபலமான, பிரபலமான என்று மட்டும் தான் சொன்னேன்! எப்படி எப்படியெல்லாம் பிரபலம் என்று சொல்லவில்லை, அரசியல் தலையைப் பற்றி சொல்லும்போது இப்படிக் கிண்டலாகச் சொல்வார்கள்!

தலைவருக்குக் கல்யாண வீட்டில் தான்தான் மாப்பிள்ளையாக இருக்கவேண்டும், இழவு வீட்டில் கூட அங்கே செத்த பிணமாகக் கிடக்கவேண்டும், எங்கே எது எப்படி இருந்தாலும், தானே முன்னிலைப் படுத்தப் படவேண்டும்!

எதிர்ப்பவர்கள் அந்த மாதிரி மனநிலையில் இருந்து தான் எதிர்க்கிறார்களா, என்றால் அதுவும் இல்லை.ஒரு விஷயம் வெளிப்படும்போதே மறுக்கத் துவங்குகிற, இங்கே தமிழ் வலைப் பதிவுகளில் இயல்பாகக் காணப் படுகிற போக்காக மட்டுமே எனக்குப் படுகிறது. 


சம்பந்தப் பட்ட பதிவர்கள் மறுபடி கூடிப் பேசினால், நிச்சயமாக ஒரு குறைந்தபட்சப் பொதுக் கருத்தை, செயல்பாட்டை வகுத்து, ஒரு புதிய துவக்கமாகச் செயல் பட முடியும்.

எந்த ஒரு விஷயமும் ஒரு அமைப்பு ரீதியாகத்  திரட்டப் படும்போது, அது தங்களுக்குச் சாதகமானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பு எதிர்பார்ப்பதும் கூட இயல்பு தான்.  நிறுவனப்படுத்தப் படுகிற எதுவுமே, அது எத்தனை உயர்ந்த லட்சியங்களுக்காக ஆரம்பிக்கப் பட்டதாகச் சொல்லப் பட்ட போதும் கூட, அந்த நோக்கங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஆர்வத்துடன் செயல்களை ஊக்குவிக்கிறவர்கள் இருக்கும் வரை, அத்தகைய நல்ல நோக்கங்களோடு செயல் படும், ஆர்வம் குறையத் தொடங்கும் போது, அது  வெறும் சடங்கு மயமாக மட்டுமே குறுகிப் போய், எதற்காகத் தொடங்கப் பட்டதோ அந்த நோக்கங்களுக்கு எதிராகவே செயல் படுவதாக மாறிப் போவது மட்டுமே மிஞ்சும்.

இங்கே தமிழ் வலைப் பதிவுலகத்தில், சிலகாலத்துக்கு முன் நடந்த கூத்துக்களில் "பிரபல பதிவர்" என்றாலே கேலிக்குரியதாக, கேவலப் படுத்துகிறமாதிரி ஆகிப் போனது!பதிவுகள் பகிர்ந்து கொள்ளப் படுவதற்காக என்பதில் இருந்து விலகி, இணையத்திலுமே ஆரிய- திராவிட மாயைகளாகிச் சண்டை போட்டுக் கொண்டிருந்ததுமே அரங்கேறியதில் இருந்து
விடுபட்டு தமிழ்ப் பதிவுலகம் இப்போது தான் மெல்ல மெல்ல விலகி ஒரு முதிர்ச்சிக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒரு சங்கம் மாதிரி,  சிடிசன் ஜார்னலிஸ்ட் என்ற மாதிரியான அங்கீகாரத்தை அரசிடம் வேண்டிப் பெறுவதற்கான கூட்டு முயற்சியாக இருக்கிற மாதிரி, பதிவர்களுக்கு சில அடிப்படைத் தொழில்நுட்பங்களைச் சொல்லித் தருகிற அமைப்பு மாதிரி என்று இந்த முயற்சியை முன்கையெடுத்து நடத்தியவர்கள்  சில கருத்துக்களை முன்வைத்து, அதைச் செழுமைப் படுத்துகிற மாதிரியான கருத்துக்களை, விமரிசனங்களை வேண்டி இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான அமைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொள்வது ஒரு வழி.

அடுத்தது, இப்படி ஒரு அமைப்பு தேவைதான் என்று ஒப்புக் கொண்டால், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சொன்னார்களே, அதை ஒரு முன்மாதிரியாக மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் இன்னும் எப்படி சிறப்பாக செயல் படலாம் என்ற கருத்துக்களை சொல்வதோ, அல்லது, அவர்கள் சொன்ன எதுவுமே உடன்பாடு இல்லையென்றால் கூட, மாற்று யோசனையாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைச் சொல்லியிருந்தால். அது நாகரீகமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்.

அதை விடுத்து, இப்படி வினைக்கு வினை, எதிர்வினை என்று போய்க் கொண்டே இருந்தால் பதிவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே கூட வெட்கப் படுகிற சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே! நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!

 
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! இந்த ஞானம் வந்தால் பின்னர் நமக்கெது வேண்டும்!






 

1 comment:

  1. //வால்பையன் அருணை நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக, ஒரே ஒரு சந்திப்புக்குப் போனதோடு சரி! //


    மிக்க நன்றி சார்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!