பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா?!


டைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது:
Repercussions

"Although Google represents only about 30% of searches in China (Baidu, a Chinese-run company that is close to the government, is the leader), analysts say the country could become one of Google's most lucrative markets and that a withdrawal would have serious implications for Google's long-term bottom line."
 
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போய் விடுமா என்ன?! நிச்சயமாக ஆமாம், பூனைக்கு மட்டும்!

கூகிள் கதையும் கண்ணை மூடிக் கொண்ட பூனை, உலகமே இருட்டாகிவிட்டது என்று சொல்வது போலாகிவிடுமா என்பது 99 ரூபாய் நோட்டு மாதிரி, செலாவணி அல்லது ஆகாத நிலை நிரூபிக்கப் படும் வரை வெறும் பிரசாரமாக மட்டுமே இருக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. போய்விடுவேன், போகப் போறேன், என்று உதார் விட்டுக் கொண்டே இருந்த கூகிள் ஒரு வழியாக, குப்புறக் கவிழ்ந்து குட்டிக் கர்ணம் அடித்து உருண்ட பிறகு மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக இப்போது ஜகா வாங்க ஆரம்பித்திருக்கிறது!

நேற்று வரை  எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த போது, தானே முன்வந்து சீன அரசுடன் ஒத்துழைக்கிற விதத்தில், சீன அரசுக்குப் பிடிக்காத அலெர்ஜியான செய்திகளை முந்தித் தணிக்கை செய்து கொண்டிருந்தார்கள். 


எதிர்பார்த்த அளவுக்கு, அங்கே மார்கெட்டில் தாக்குப் பிடிக்க முடியவில்லை, அதனால் கூகுளுக்கு   இப்போது திடீரென்று மனித உரிமைகள் மீது அக்கறை பிறந்து விட்டதாம்! இனிமேல் சீனச் செய்திகளைத் தணிக்கை செய்து கொள்ளப் போவது இல்லையாம், கூகிள் ஹாங்காங் தளத்துக்குத் திருப்பி விடப் போகிறதாம்!

நிக்சன் காலத்தில் இருந்து சீனாவுடன் இழையோ இழை என்று இழைந்து கொண்டிருந்த இத்தனை நாளில் உதார் விடுவதையாவது ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருக்கலாம்! பாவம் அமெரிக்கா! உலகத்துக்கே தாங்கள் தான் கற்றுக் கொடுக்கப் பிறந்தவர்கள் என்ற நினைப்பு, மமதை, சீன உதார் முன்னால் எடுபடாமல் பிசுபிசுத்துப் போய்ப் பரிதாபமாக, அடுத்தது என்ன என்பது கூடத் தெரியாமல் முழியோ முழி என்று முழித்துக் கொண்டிருக்கிற பரிதாபம் ஆரம்பித்து விட்டது.


மேற்கத்திய ஊடகங்கள், சீன இணையப் பயனர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றன. கூகிள் வெளியேறி விட்டால், சீன இணையத்தில் இருட்டு மட்டுமே மிஞ்சும் என்ற அளவுக்கு, நாற்பது கோடி இணையப் பயனாளர்கள்  கொண்ட சீனச் சந்தைக்கும், உலகத்திலேயே மிகப் பெரிய தேடு பொறியாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் கூகுளுக்கும் ஒரு மல்லுக்கட்டு யுத்தம் ஆரம்பித்திருக்கும் இந்தத் தருணத்தில், ஊடகங்கள் கிளி ஜோசியம், குறி சொல்வது போல கூகுளுக்குச் சாதகமாகவே பேசிக் கொண்டிருக்கின்றன.


ஆனால் நிலைமையை கவனித்துக் கொண்டிருப்பவர்கள் கூகிள், தனது மமதையை அளவுக்கு அதிகமாகவே இந்த விஷயத்தில் வெளிக் காட்டிவிட்டு, தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஏற்கெனெவே ஜனவரி மாதம் இந்தப் பதிவில் இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?

கூகிள் தேடல் சீனாவைப் பொறுத்தவரை சீன அரசு நினைத்து நினைத்து சென்சார் செய்யப் படவேண்டியவை எவை என்பதைப் பொறுத்து மட்டுமே  இருக்கவேண்டிய நிபந்தனைக்கு உட்பட்டதாக, பச்சையாகச் சொல்வதானால் பூம் பூம் மாடு மாதிரித் தலையாட்டிக் கொண்டே தான் சீனாவுக்குள் நுழைந்தது.  


இன்னும் தோலுரித்துச் சொல்ல வேண்டுமானால், சீனாவுக்குள், மனித உரிமை, சுதந்திரம் என்றெல்லாம் எவர் தேடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதை சீன அரசு அறிந்துகொள்ளத் தோதாகத் திறவு கோல்களைக்  கொடுத்ததே கூகிள் தான்!  

திறவுகோல்கள், கூகிளின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்து விடும் அளவுக்கு,  கூகிளின் செர்வர்களுக்குள் உளவறியும் நிரலிகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தது. எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்த கூகிள், சீன அரசு இதன் பின்னணியில் இருப்பதை உறுதி செய்த பிறகு, சீனாவுக்கென்று பிரத்தியேகமான தணிக்கை செய்து கொடுக்கும் தேடுபொறி வசதியை நிறுத்திக் கொள்வது என்ற முடிவையும், சீனாவில் இருந்து வெளியேறவும் தயாராக இருப்பதாகவும் செய்தியை வெளியிட்டது.

இந்தச் செய்தியை பாருங்கள்!

/ Google has “evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists,” according to a posting by the company’s Chief Legal Officer David Drummond on Jan. 12. He said Google now plans to stop censoring results at its Chinese search engine, a move that may lead to the company shuttering its local Web site and offices, pending talks with the government. /


இன்னும் கொஞ்சம் விரிவாகவே இந்தப் பதிவில் சொல்லியிருந்தது:


கூகிள் -சீன த்வந்த யுத்தத்தில், வெளியே அதிகம் விவாதிக்கப் படாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன!

உலகம் முழுக்க கூகிள் நான் தான் நம்பர் ஒன் என்று மார்தட்டிக் கொண்டாலும், சீனாவைப்  பொறுத்தவரை  கூகிள் இரண்டாவது இடத்தில் தான் இருந்துவருகிறது. உள்ளூர்த் தயாரிப்பான பைடூ டாட் காம் தான் அங்கே நம்பர் ஒன் தேடுபொறி!  தினசரி முப்பது கோடி வருகைகள், தேடுபொறி உபயோகத்தில், வருமானத்தில்  அறுபத்து மூன்று சதவீதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது! 

கூகிள் ஆண்டவர், அங்கே வெறும்  முப்பது  சதவீதம் தான் உபயோகத்தில் உள்ளார்! முதலிடத்தைப் பிடிக்க முடியாது , இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற ஒரு விஷயமே கூட, சீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்ற கூகுளின் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் iResearch என்கிற சீன ஆராய்ச்சி நிறுவனம்  சொல்கிறது!

பீகிங் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டுப் பிறகு, நியூ யார்க் மாகாணப் பல்கலைக் கழகத்தில் படிக்க வந்த ராபின் லீ என்ற 41 வயது  இளைஞர் தாயகம் திரும்பியவுடன் இன்னொரு நண்பருடன் சேர்ந்து துவக்கிய பைடூ உள்ளூர் மக்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதில் தன்னுடைய தனித்தன்மையை நிலை நாட்டிக் கொண்டது. பாட்டு, பொழுதுபோக்கு என்று அலைந்த சீன இளைஞர்களுக்கு பைடூ நல்ல தளமாக இருந்ததில் வியப்பொன்றுமில்லை!

தகவல்களைத் தேடத் தேடு போறியா,அல்லது பொழுதுபோக்கத்
தேடு போறியா என்ற கேள்வியில், பொழுதுபோக்கு முதலிடம் பெற்றதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!

பைடு தளம் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வது இது: 
"We know that a lot of interesting things are going on in the Internet space, but we don't want to lose focus. China's Internet search industry is only a newly discovered territory. We see vast untapped grounds in our home base and we believe there are still plenty of prizes to be claimed by the best players."

கூகிள் நினைத்துக் கொண்டிருப்பது போல சீன இணையப் பயனர்கள் கூகிளை மட்டுமே நம்பியிருக்கவில்லை. கூகிள் இருப்பதோ, வெளியேறுவதோ, அவர்களுடைய இணையப் பயன்பாட்டில் பிரமாதமான மாறுதல்களை உடனடியாகவோ, அல்லது சிறிது காலத்திற்குப் பிறகோ ஏற்படுத்திவிடப் போவதில்லை. அப்புறமும் எதற்காக இவ்வளவு பில்டப், பிரசாரங்கள், சீனாவே இருண்டு போய் விடும் என்ற அளவுக்கு பயம் அல்லது பிலிம் காட்டுகிற வேலையெல்லாம்?  

இன்றைய எகனாமிக் டைம்ஸ்  பத்திரிகையில் வெளியாகியிருக்கும் இந்த செய்தி, சீனா டைலி என்ற சீனப் பத்திரிகையை மேற்கோள் காட்டி,  கூகுளின் மமதையை எகத்தாளம் செய்திருக்கிறது. அதே செய்தியில் கொலம்பியா ப்ராட்காஸ்டிங் கார்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த எட் பர்னெட்  கூகுளின் இந்த முடிவு பரிதாபகரமானது தவிர்த்திருக்கப் பட வேண்டியது என்று சொல்கிறார். மேலும் அவர் சொல்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்!

He also believes that it is "arrogant thinking to assume that we know what's best for China, and our values can still work well in that very different culture; and it's an ignorant idea to believe threats and ultimatums can bring positive results, especially from such proud and sufficient people."

நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால், ஜனவரியில் இருந்தே போய்விடுவேன், போகப் போகிறேன் என்று உதார் விட்டுக் கொண்டிருந்த கூகிள், நேற்று திங்கள் கிழமையில் இருந்து, தன்னுடைய தேடுபொறியில் எந்தவிதமான தணிக்கையும் இருக்காது என்றும், தன்னுடைய செயல்பாடுகளை ஹாங்காங்கிற்கு மாற்றிக் கொள்வதாகவும்  திடீரென்று அறிவித்திருப்பதன் பின்னால், அமெரிக்க அரசின் கைவண்ணம் இருப்பது நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது.

இரண்டு வாரங்களாகவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஒரு இழுபறி யுத்தம் வலுவாக நடந்துகொண்டிருக்கிறது. சீனக் கரன்சி ஈன ரென்மின்பி அல்லது யுவானின் மதிப்பை மார்கெட் நிலவரத்திற்குத் தகுந்த மாதிரி உயர்த்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருவதை சீனா நிராகரித்துக் கொண்டே வருகிறது. 


சீனக் கரன்சியின் மதிப்பு உயர்ந்தால், சீனாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி உயரும் என்று அமெரிக்கா கணக்குப் போடுகிறது. ஆனால், சீனாவோ, தன்னுடைய நாணய விகிதத்தைக் குறைந்த நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறது.  சீனா மறுத்தால், வரிவிதிப்புக்களை அதிகரிக்க வேண்டுமென்று அமெரிக்க காங்கிரஸ் (நம்மூர் ராஜ்ய சபா மாதிரி) பயமுறுத்திக் கொண்டிருப்பதற்கெல்லாம் சீனா அசருகிற மாதிரி இல்லை.

இது குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள !


சென்ற ஞாயிற்றுக்கிழமை, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு சீன வர்த்தகத் துறை அமைச்சர் அளித்த பேட்டியில், அப்படி ஒரு வர்த்தகப் போர் மூளுமானால், அமெரிக்க மக்களும், அமெரிக்க நிறுவனங்களும் பெருத்த கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். சீன வர்த்தகத்தின் உபரி மதிப்பு, சீனாவின் முதலீடாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி டாலர்கள் அமெரிக்க முதலீடுகளாகச் செய்யப் பட்டிருக்கிறது. அதாவது, மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி, கடன்பட்டவன் கலங்குவது போல, அமெரிக்கா, சீனா விடுகிற உதார் வேற்று உதாரா, வெடி வைக்கும் உதாரா என்று தெரியாமல் கலங்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இருக்கிறது.

சீனாவும், இந்தியாவும், ஏறத்தாழ ஒரே சமயத்தில் தான் விடுதலை அடைந்து, பல்வேறு இடைஞ்சல்களைச் சமாளித்து முன்னேறி வர வேண்டியிருந்தது. நம்மை விட, சீனர்களுக்கு இருந்த தடைகள், மிக அதிகம். நம்மை விட அதிகமான ஜனத்தொகை, விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்கள், நவீனக் கல்வியறிவோ, தொழில் நுட்பமோ, உதவிகளோ கிடைக்காமல் நம்மைவிடப் பின்தங்கியிருந்த நிலையில் இருந்து, குறிப்பாகக் கடந்த முப்பதே ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசாக ஆகியிருப்பதோடு, தற்சமயம் இரண்டாமிடத்தில் இருக்கும் ஜப்பானை இந்த வருடக் கடைசிக்குள்ளாகவே முந்தி விடுவார்களென்றும் மதிப்பிடப் பட்டிருக்கிறது.

அங்கேயும் ஊழல் உண்டு.உள்ளூர் அரசியலில் ஏகப்பட்ட குளறுபடிகள், கோளாறுகள் உண்டு.ஆனாலும் சீன அரசியல் தலைவர்கள், தங்களுடைய நாட்டு நலனை மறந்து செயல் பட்டதில்லை. அந்நியனைத் தலைக்கு மேல் உட்கார்த்தி வைத்து, அவனுக்கு அடிமைகளாக இன்னமும் கைகட்டி ஒருபோதும் நின்றதில்லை. அமெரிக்காவோ, வேறு எந்த மேற்கத்திய நாகரிக கனவான்களும் வந்து நாகரீகத்தை உபதேசிக்கும் அளவுக்குத் தங்களைச் சிறுமைப் படுத்திக் கொண்டதில்லை. அமெரிக்கா உலகம் முழுவதும் சண்டியர்த்தனம் செய்து வரும் நேரத்தில், சண்டியர் பாச்சா சீனர்களிடம் பலிக்கவில்லை.

இன்னும் எத்தனை நாள்  அந்நியர்களிடம் தன்னை சிறுமைப் படுத்திக் கொள்ளும் காங்கிரஸ்காரர்களிடம் சிக்கி இந்த தேசம் முழுமைக்கும் சிறுமைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று  நினைக்கிறீர்கள்? முடிவு செய்ய நமக்கு இருக்கும் அவகாசம் மிகவும் குறைவு!


அடிமைத் தளையில் இருந்து இந்த தேசம் விடுதலை பெற வேண்டும் என்று போராடிய பகத் சிங், ராஜ குரு, சுக் தேவ் மூவரும் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டு, உயிர்த் தியாகம்  செய்த எழுபத்தொன்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று!

படத்திற்கு மாலை அணிவித்து, வெறுமனே அஞ்சலி
செய்வதில்  ஒரு பயனும் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட ஒவ்வொரு தியாகியையும் நினைவு கூர்வது, அவர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் அருமையை உணர்ந்து, அதைப் பாதுகாத்துக் கொள்வதில்,மட்டுமே இருக்கிறது.
4 comments:

 1. //அவர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் அருமையை உணர்ந்து, அதைப் பாதுகாத்துக் கொள்வதில்,மட்டுமே இருக்கிறது.//


  எப்படியும் காங்கிரஸ் அமெரிக்காவிடம் இந்தியாவை அடகு வைக்கும், மீண்டும் ஒரு சுதந்திர போர் நடக்கத்தான் போகிறது! இதெல்லாம் இந்தியாவில் சகஜம் தான் போங்க!

  ReplyDelete
 2. Do you think that there is US Government beind Google's action? It is losing around $4 billion because of pulling out of china immediately and much more in the times to come. Just because it is not able to become number one, there is absolutely no business sense for any one to throw away $4 billion. same way, I do not think US government can have such a big clout in Google's decision. If US government has such big clouts in many US companies, there will not be big US companies having their head quarters abroad to evade US tax laws. As for as action against Toyota is concerned, it is a revenge for the humiliation US automakers have been facing for more than 10 years. Last 10+ years, Toyota Camry has been the number 1 car. the number 2 has been Honda Accord. This is a big humiliation considering that the Car was invented in US! This is first time they are tasting the blood of Toyota and so they are going great guns behind them.

  ReplyDelete
 3. திரு.ரவி,

  அமெரிக்க அரசின் முடிவுகள், ராணுவ உத்திகள், முண்டா தட்டுதல் எல்லாமே அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள், வங்கி நிதித் துறையால் ஆதிக்கம் செய்யப்பட்டு எடுக்கப் படுபவை என்பது சிதம்பர ரகசியம், இதில் புதிதாக எதுவுமே இல்லை. கூகிள் எடுத்த முடிவு அமெரிக்க அரசின் என்று சொல்வதை விட, கூகிள் அமெரிக்க அரசின் உளவுக் கரமாகவே செயல் பட்டு வருகிறது என்று கூட சொல்லலாம்தான்! நிக்சன்கள் காலத்தில் இருந்து, அமெரிக்கா ஒரு இரட்டை வேடம் போட்டுக் கொண்டு தான் சீனாவோடு உறவை ஏற்படுத்திக் கொண்டார்கள்! அப்போதெல்லாம் அவர்களுக்குத் தேவைப் பட்டது, சீனச் சந்தை! சந்தையில் மேயலாம் என்று தான் உள்ளே நுழைந்தார்கள். சீனர்கள், அவர்களை விட புத்திசாலிகளாக இருந்தார்கள். தங்களுக்குத் தேவையான தொழில் நுட்பத்தை, நட்பு முறையிலோ, அல்லது திருடியோ கூடப் பெற்றுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டார்கள். லாபத்திற்கு ஆசைப் பட்டுப் போன பேராசைக் காரர்களுக்கு எப்படிக் கடிவாளம் மாட்டுவது என்பது சீனர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பது தான் பதிவின் மையக் கருத்து.

  அமெரிக்க அரசியலில், வாக்களிக்கும் மக்களை விட, நிதி கொடுத்துப் படியளக்கும் பெருமான்கள், MNC க்கள் தங்களுடைய விருப்பம், சௌகரியத்திற்கேற்ப வளைக்கக் கூடியதாகவே, அமெரிக்க ஜனநாயகம் தழைத்திருப்பதை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், அமெரிக்க வங்கி, நிதித்துறை உலகத்தின் பல பகுதிகளையும் தங்களுடைய பேராசையினால் சீரழித்திருப்பதை இணையத்தில் தேடவே நிறைய விவரங்கள் கிடைக்கும். அவை இரண்டுக்கும் அடுத்தபடி மூன்றாவது இடத்தில் தான் அமெரிக்கத் தொழில் துறை வருகிறது என்ற அளவில் உங்கள் கேள்வி நியாயமானதே.

  டொயோடா பிரச்சினைக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், இடிபாடுகளில் இருந்து ஜப்பானியத் தொழில்துறையும், தேசமும், தரம், கடுமையான உழைப்பு இவைகளை அடிப்படையாக வைத்தே முதல் இடத்துக்கு வந்தன. முதல் இடத்துக்கு வருவது கூடப் பெரிய பிரச்சினை அல்ல, அதைத் தக்க வைத்துக் கொள்வதில் இன்னமும் கடுமையான சிரத்தை இருக்க வேண்டும். டொயோடா, அங்கே கொஞ்சம் சறுக்கியிருக்கிறது. அறுபத்தைந்து ஆண்டுகளில் ஜப்பானியர்கள் தரம், உற்பத்திப் பொருட்களில் விரையம், வீணாவதைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்தி முதலிடத்துக்கு வந்தார்கள்.

  தரத்தில் ஜப்பானியர்களோடு போட்டியிட விரும்பாமல், அல்லது முடியாமல் அமெரிக்கத் தொழில் துறை சீனர்களுடைய பாணியைப் பின்பற்ற விரும்புவதாகவே தோன்றுகிறது. ஜெனெரல் மோட்டார்ஸ் பதின்மூன்று லட்சம் கார்களைத் திருப்பியழைத்திருப்பதை எந்த அமெரிக்க ஊடகமும், செனேட்டரும் கேள்விக்குரியதாக, டோயோடாவை நடத்திய மாதிரியே நடத்தவும் முன்வரவில்லை. அவர்களுடைய பார்வையெல்லாம், குறிகிய காலத்திலேயே கொழுத்த லாபம், மற்றப்படி அப்புறம் என்னவானால் என்ன என்பதாகத் தான் இருக்கிறது, இல்லையா!

  அதற்கு நேர் மாறாக, சீனா, கடந்த முப்பதாண்டுகளில், மலிவு என்பதை மட்டும் முன்வைத்து, தரமில்லாத பொருட்களை மற்ற நாடுகளில் குவித்தார்கள். அவர்களோடு போட்டி இட முடியாத அளவுக்கு உள்ளூர்த் தொழில்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தார்கள். அமெரிக்கா, தான் விதைத்த வினையைத் தானே அறுவடை செய்தாக வேண்டிய நேரம் இது. சீனா வர்த்தக அமைச்சர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டி, சென்ற ஞாயிறன்று, அதையும் கொஞ்சம் பாருங்கள்.

  பொருளாதாரம் தான் அரசியலைத் தீர்மானிக்கிறதென்பதை வரலாறு, நீண்டகாலமாகவே நிரூபித்து வந்திருக்கிறது. இப்போது நடந்து கொண்டிருப்பதும் அது தான்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!