நினைத்துப் பார்த்து ஒரு சண்டை!

ராஜாங்கம் தான் அப்படிக் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுக்  கேட்டது என்று நினைக்கிறேன்!

"நீங்க ரெண்டு பெரும் உண்மையிலேயே பகையாளிங்களா, இல்லே பங்காளிங்களா? இப்படி அடிச்சுக்கறீங்க, ஆனா உங்களைப் பத்தி யாராவது தப்பாப் பேசினா அவரு அவங்களோட மல்லுக் கட்ட ஆரம்பிச்சிடறாரு!"

எனக்கே அந்த சந்தேகம் அவ்வப்போது வரும்! நாங்கள் இருவரும் நண்பர்களா? அல்லது சண்டைக்காரர்களா? அவனிடமே ஒருதரம் கேட்டபோது சிலிர்த்துக் கொண்டே சொன்னான், "நாயே! இன்னும் இது கூடத் தெரியலை! நீ சண்டைக்கரானாக இருக்கவும் லாயக்கில்லை! சிநேகிதக் காரனாகவும் இருக்க லாயக்கில்லை!"

உடனே அங்கே வார்த்தைகளில் அக்கப் போர் ஆரம்பித்து விடும்!

நினைத்துப் பார்க்கும் போது நானும் அவனும் சண்டைபோட்டுக் கொள்வதற்காகவே சினேகிதமான மாதிரித் தெரிகிறது.நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளாத  நாளே கிடையாது! சண்டை போடுவதற்கு இது தான் காரணம் என்று பிரமாதமான தேவையே எப்போதும் இருந்ததில்லை!

சண்டை போட்டுக் கொண்டே, ஒன்றாக வேலையும் செய்தோம்! வேலையில் இருவருமே கொஞ்சம் கெட்டி தான்! டே புக் டாலி ஆகவில்லைஎன்றால்,  வித்தியாசத்தை வைத்தே இன்னார் தான் தப்பு விட்டிருக்க வேண்டுமென்று நாடி பிடிக்கத் தெரிகிற  அளவுக்கு எங்களிருவருக்கும் தொழில் சுத்தம், பொய்யில்லை! 


என்னைவிடப் பதினெட்டே நாள் மூத்தவன்.ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அவன் பக்கத்து வீட்டில் இருந்த பேக்கரியில் இருந்து  கேக் ஒரு பெட்டியில் வரும். கூட வேலை செய்கிற எல்லோருக்கும் தன் கையாலேயே கொடுப்பது அவன் பழக்கம். வேண்டுமென்றே அவனைச் சீண்டுவதற்காக, இன்னும் இரண்டு கேக்கை லபக்கும் போது, வசவு நாறும்!

 " பரதேசி நாயே, நான் கரெக்டா இத்தனை பேர்னு கணக்குப் பண்ணிக் கொண்டுவந்தால்......" வீட்டுக்கு போன் பண்ணி இன்னும் இத்தனை எண்ணிக்கை கேக் அனுப்பும் படி சொல்வான்.  சொல்லும்போதே, இங்கே ஒரு பரதேசி இன்னும் கிடைக்குமான்னு இங்கேயே பாக்கறான் பாரு! இன்னும் நாலு சேர்த்து அனுப்பு என்பான். அவனைக் கோபப் படுத்தி பார்ப்பதில் அந்த நாளில் அவ்வளவு சந்தோஷம்! அது அவனுக்கும் புரிந்ததாலேயே இன்னும் நாலு வசவு கூட வரும்!

இரண்டுபேரும் வெவ்வேறு சங்கங்களில் இருந்தோம்! சங்கங்கள் வேறானால் சண்டைக்காரர்களாகத் தான்  தான் இருக்க வேண்டுமென்பது, நான் பணியாற்றிய பொதுத் துறை வங்கியில் இருந்த சாபக் கேடு! ஏதோ ஒரு காரணம், சண்டையைத் தூண்டிவிட தினசரி கிடைத்துவிடும்!

அவனுக்கு எல்லா விதங்களிலும் நேர்மாறான குணம் எனக்கு, தொழிற்சங்க வேலைகள், கூட்டங்கள், தோழர்களுடன் விவாதங்கள், என்று மிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. மோதிக் கொண்டே  இருந்ததில் ஏதோ ஒரு கட்டத்தில் அவன் எனக்கு நண்பனாகிப் போனான்.

ஆனால், சண்டைகளை மீறிய முதிர்ச்சி அவனிடம் இருந்தது. சொந்த வாழ்க்கையின் சோகங்களை அவன் எப்போதுமே வெளியில் சொல்லிக் கொண்டதில்லை. திமிரும், கலகலப்பும் நிறைந்தவனாக மட்டுமே வெளியில் அவனைத் தெரியும். பெரிய மனிதர்களுடைய சகவாசம், காரியங்களை சாதித்துக் கொடுக்கும் லாவகம், தினசரி ஆபீசர்ஸ் கிளப்பில் சீட்டுக் கச்சேரி, எல்லாம் உண்டு.

இடமாறுதலில், மலைக்குப் போய் வந்த திருப்பமாக மதுரைக்கு வந்த பிறகு ஒவ்வொரு வருடமும் அவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிற தினம் மார்ச் 2 ! 

மார்ச் இரண்டாம் தேதி!

இப்போது  போனில் கூப்பிட்டு வாழ்த்துச் சொல்ல முடியாது. அவன் இறந்து போய் விட்டான்.

அவனை நினைவுகளில் சுமந்துகொண்டு.... ஞாபகங்களிலேயே அவனோடு சண்டை போட்டுக் கொண்டு....


Happy Birthday S........!



 

4 comments:

  1. ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரே ஒரு ஆத்ம நண்பன் அமைந்து விடுவது உண்டு. அப்படி அமைந்து விட்டவனை அடிக்கடி சந்திக்க வேண்டும், பேசிக் களிக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. எவ்வளவு கால இடைவெளிக்குப் பின் பார்த்துக் கொண்டால் கூட, "என்னடா?" என்று நேற்று சந்தித்துப் பிரிந்த மாதிரி குசலம் விசாரித்துக் கொள்ளலாம்.
    அப்படிச் சந்தித்துப் பிரிந்தது, அடுத்த சந்திப்பு வரை பேட்டரி சார்ஜ் பண்ணிய மாதிரி தாங்கும். அப்படி எனக்கு அமைந்த என் ஆத்ம நண்பனை இப்பொழுது நினைத்துக் கொண்டேன். 'இன்னாருக்கு இன்னார் என்று..' என்று எல்லாம் இறைவனின் கருணையாகத் தான் தெரிகிறது.

    ReplyDelete
  2. இவனை ஆத்ம நண்பன் என்ற வகையில் சேர்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. தவிர, நாங்கள் இருவருமே நேரெதிர் துருவங்கள்.

    ஆனாலும் இருபது வருடங்கள் ஒன்றாகப் பழகியிருக்கிறோம். ஒருவருடைய அந்தரங்க சோகம் இன்னொருத்தருக்குத் தெரியாது. ஆனாலும், அவனை நானும், என்னை அவனும் உள்ளுக்குள் நேசிக்கிற தருணமும் வந்தது. இறைவன், ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொருவர் வழியாக ஏதோ செய்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

    ReplyDelete
  3. நெகிழ்ச்சியான பதிவு..

    ReplyDelete
  4. உங்கள் நட்பை கண்டு வியக்கிறேன்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!