கொம்பேறித் தாவும் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்! வால்பையன் பேசும் பரிணாமம்!

அதானே! நம்பிக்கையே இல்லைன்னு பிரசாரம் பண்ணும் பிரசுரம் கூட ஒண்ணுமே இல்லாமல் எம்ப்டியாத் தான் இருக்கோணும்!
 

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்!கொம்பேறித் தாவும்   
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்! 

தூக்குத் தூக்கி படத்தில் வரும் இந்தப் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டு, இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்!

சென்னைப் பதிவர்கள் குழுமமா, தமிழ் இணைய எழுத்தாளர்கள்  சங்கமா என்ற கேள்வி ஒரு வழியாக அடங்கி, தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்ற வலைப் பதிவோடு, ஒரு வழியாக "இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட சங்கமாய் இருப்பதை விட விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம்"  என்ற முடிவோடு ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. 



 
ஆனால், சனிக்கிழமை நடந்த கூட்டத்தின் அதிர்வலைகள் அங்கங்கே பதிவுகளாக, பின்னூட்டக் கும்மிகளாக கன ஜோராக நடந்து கொண்டே இருக்கிறது.

பதிவுலகம் இப்படிப் போய்க் கொண்டிருந்தால் வால்பையன் என்னதான் செய்வார், பாவம்! சேக்காளி  ராஜன் வேறு உண்மைத் தமிழன்,
டோண்டு ராகவன் பதிவுகளில் தொடர் பின்னூட்டச் சரங்களை வெடிக்கப் போய்விட்டார்!

அதனால் வால்பையன் பழையபடி, பரிணாமம், கடவுளை நோண்டக் கிளம்பிவிட்டார்!ஏதாவது புதிதாகச் சொல்லியிருக்கிறாரா, அல்லது புதிதாக எதையாவது கற்றுக் கொண்டு வந்திருக்கிறாரா  என்று பார்த்தால், ஒன்றையும் காணோம்!வால்பையன் ஆரம்பிக்கிறார்-
"பரிணாம வாத கொள்கையில் நம்பிக்கையற்றவர்களின் முதல் கேள்வி “குரங்கு ஏன் குரங்காகவே இருக்கு” என்பது தான், ஆனாலும் நட்புக்கூட்டங்கள் அதே கேள்வியை மீண்டும் பின்னூட்டத்தில் கேட்டு அவர்கள் அறிவுமுதிர்ச்சியை உலகுக்கு காட்டி அசரடித்தார்கள்!"

வால்பையன் ஏன் வால்பையனாகவே இருக்கிறார் என்று நான் கேட்கப் போவதில்லை!காரணம், அவர் வால்பையனாக இருப்பதனால் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! அதற்காக பரிணாமம் பற்றிக் கிளாஸ் எடுக்க வந்தால் சும்மா இருந்து விட முடியுமா என்ன?

யாரோ கடவுள் நம்பிக்கையாளர்  எப்போதோ கேட்டாராம்! (எப்போது? எங்கே? யாரிடம்?) குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்று  டார்வின் சொன்னது உண்மையானால், இன்னமும் குரங்குகள் இருக்கின்றனவே, அது எப்படி? அதனால் டார்வின் கொள்கையே தப்பு என்றாராம்! வால்பையன் மேலும்  சொல்கிறார், அது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை திசை திருப்பும் பதிவல்ல, அனைத்தையுமே கேள்வி கேட்கும் பதிவு!

அனைத்தையுமே கேள்வி கேட்பது  எப்படி இருந்ததென்றால், கீழே உள்ள படத்தில்  கேள்வியும் பதிலுமாக  இருக்கிற மாதிரி!


மனிதக் குரங்கு, வெறும் குரங்கல்ல! இரண்டும்  பக்கத்தில் பக்கத்தில் தலைக்குக் கைகளை அண்டக் கொடுத்து, மல்லாக்கப்  படுத்துக் கொண்டிருந்தன. சின்ன மனிதக் குரங்கு,  பெரிய  மனிதக் குரங்கிடம்கேட்டது. "வாழ்க்கையின் நோக்கம் என்ன?"

பெரிசு பதில் சொன்னதாம்! "அதற்கு ஒரு விடை இருக்கிறது! ஒரு தக்காளியின் வர்க்க மூலம் என்ன? அதற்கான விடை தான் இதற்கும்!"

சிறிசு சொன்னது, "தக்காளியின் வர்கமூலம்! என்னவொரு முட்டாள்தனமான கேள்வி!"

பெரிசு சொன்னதாம், " அதே! அதே!"

அந்த மாதிரித் தான் இருக்கிறது வால்பையன் எடுத்துக் கொண்டிருக்கும் பரிணாம நிரூபண வாதம்!


குரங்குகள் அனைத்துமே மனிதனாக மாறிவிட்டனவா  என்று யாரும் கேட்கவில்லை. தவிர, டார்வின் சொல்வது, மனிதனுக்கும் மனிதக் குரங்கிற்கும் பொதுவான மூதாதையர் இருந்தார்கள் என்று தான்! மனிதக் குரங்கே மனிதனாக மாறிவிட்டதாக அவரும் சொல்லவில்லை, அப்படி அர்த்தப் படுத்திக் கொண்டு எவரும் கேள்வி கேட்கவும் இல்லை. உயிர்களின் தோற்றம் என்ற தனது ஆராய்ச்சிக் குறிப்பில் டார்வின், நதியின் மூலம் இன்னது என்பதைத் தான் ஆராய்ந்திருக்கிறார். நதி எங்கெங்கெல்லாம் ஓடிக் கடைசியில் இன்றிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறது என்பதைப் பேசவில்லை.

டார்வினை மறுக்க வேண்டிய அவசியம் அன்றைக்குக் கிறித்தவத்திற்கு மட்டுமே இருந்தது.  ஏனென்றால், அவர்கள் தான் பழைய ஏற்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு கடவுள் இந்த உலகை ஆறே நாட்களில் படைத்தார், படைத்த களைப்புத் தீர ஏழாம் நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். டார்வின் சொல்லும் விஷயம் கடவுளை மறுத்ததோ இல்லையோ, இந்த பூமி, இதில் உள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் தேவன் ஆறே நாட்களில் உருவாக்கினார் என்ற கோட் பாடு அடிபட்டு சிதைந்து போனது. மத குருமார்கள் கோவில்களைக் கொடியவர்களின் கூடாரமாக மாற்றிவிட்டார்கள் என்று இயேசு கலகம் செய்ததாகப் புதிய ஏற்பாடு சொன்னதோடு சரி! யூத  குருமார்களுக்குப் பதிலாக, சிலுவையை பிராண்டாக வைத்து அதே கூடாரத்தை நவீனமயமாக்கினது இயேசுவின் பெயரால் பிற்பாடுதான்  நடந்தது. ஏசுவுக்கும் திருச்சபைக்கும் எப்போதுமே சம்பந்தம்  இருந்ததில்லை!

அவர்களுடைய வேதாகமம் சொல்வதை விட இந்த சிருஷ்டி பழமையானது, பல்வேறு படித்தரங்களைக் கொண்டதாக இருந்தது என்றபோது, டார்வினை முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் நிராகரிக்கிற அவசியம் ஆப்ரஹாமைட் மதங்களுக்கு மட்டுமே இருந்தது. அதுவும் கூட ஆரம்ப நிலையில் தான்! நிலவுடைமைச் சமுதாயமாக இருந்தபோது தான்! 
நிலவுடைமைச் சமுதாயத்தின் மிக அடிப்படையான கூறே, அதன் மரபு சார்ந்த நம்பிக்கைகள், பழமை வாதம் தான் என்பது சமூக விஞ்ஞானத்தை அறிந்தவர்களுக்கு ஆச்சரியமூட்டும் செய்தி ஒன்றுமல்ல!  மாற்றத்திற்குத் தயாராக இல்லாத, மாற்றத்தை எதிர்க்கும் தன்மை நிலவுடைமைச் சமுதாயத்தின் அடிப்படை இயல்பு.

வளர்ந்து வந்த வணிகத்தின் தேவை, மதத்தை இரண்டாகப் பிளந்து, தொழிற்புரட்சிக்கு வழி வகுத்தது. , விஞ்ஞானத்தை எள்ளிநகையாடிய திருச்சபை, விஞ்ஞானத்தை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு மாறியது. திருச்சபையின் முக்கியமான விசுவாசிகளில் நிறையப்பேர்  பெரும் விஞ்ஞானிகளாகவும், கண்டுபிடிப்பாளர்களாக இருந்ததும் மிக இயல்பாகவே நடந்தது. அறிவியல் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலேயே இது தெரிய வரும்.

வால்ஸ், அல்லது அவருக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தவர்கள், அல்லது இந்தக் கருத்தை இவர்களுக்கு இரவல் கொடுத்த ரிச்சர்ட் டாகின்ஸ்  மாதிரி இன்றைய நாத்திக வாதிகளாக இருந்தாலும் சரி, நான் ஏன் நாத்திகனானேன் என்று தன்னுடைய நாத்திகத் தன்மையைப் பிரகடனம் செய்த பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் போன்ற தத்துவ வாதிகளும் சரி, அவர்களுக்குத் தெரிந்த கிறித்தவப் போலித்தனத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொண்டு இறை மறுப்பைச்  செய்து கொண்டிருக்கிறார்கள்.  

இதை எல்லாம் ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய கடவுள் என்றொரு மாயை புத்தகத்தின் மீதான விவாதங்களை இந்தப் பக்கங்களில் பேசிய தருணங்களில் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.

ஒளி என்றால் என்ன? இருள் இல்லாத நிலையே ஒளி இந்த நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால், இதிலேயே உண்டு, இல்லை என்ற ஒரு இரட்டைத் தன்மை இருப்பதைப் பார்க்க முடியும். இந்த இரட்டைத் தன்மை, ஒன்றுக்கொன்று நேரெதிரான முடிவுகளை உண்டு எனவும், இல்லை எனவும்  சொல்வதற்கு இடம் கொடுப்பதாக இருப்பதைப் பார்க்கிறோமல்லவா! எப்படி வேண்டுமானாலும் புரட்டிச் சொல்வதற்கு உலக விஷயங்களில் நாம் பார்க்கிற இந்த இரட்டைத் தன்மை இடம் கொடுக்கிறது. அது ஒன்றினாலேயே, கடவுள் கோட்பாடும் உண்டு எனவும் இல்லை எனவும் ஒரே விஷயத்தினால் தீர்மானிக்கப் படுவதாக ஆகிவிடுகிற தன்மையை முதலில் புரிந்து கொண்டால் ஒழிய, செக்கு மாடுகள் மாதிரித் திரும்பத் திரும்பச்சுற்றி வந்த இடத்திலேயே தான்  சுற்றிக் கொண்டிருப்போம்.  இந்த விஷயத்தையும் கூட, மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பின் கீழ் ஒரு சுற்று பார்த்திருக்கிறோம்!

இப்போது வால்பையன் பேசும் பரிணாமம், அதை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்த்திருக்கிறார்கள் என்ற வாதத்திற்கு, சுருக்கமான பதிலாக....!


"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!"


முழுதாகப் பொருளோடு, பதம் பிரித்துத் தெரிந்து கொள்ள,
படிக்க இங்கே!

மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்! அதில் சிவபுராணத்தில் வரும் வரிகள் இவை! பரிணாம வளர்ச்சியை, இங்கே இந்திய ஞான மரபு நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னாலேயே அறிந்திருந்தது, படைப்பின் பல்வேறு படிநிலைகள், படித்தரங்களை அறிந்திருந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். தசாவதாரம் என்று சொல்லப் படுவதிலேயும் கூட, இந்தப் பரிணாமம் படிப்படியாக உயர்வதைப் பார்க்க முடியும். டார்வின் என்பவர் பிறந்தது, இருநூறு வருடங்களுக்கு முன்னால் தான், அவர் தன்னுடைய உயிர்களின் தோற்றம் என்ற ஆராய்ச்சிக் குறிப்பை எழுதி நூற்றைம்பதே வருடங்கள் தான் ஆகின்றன என்பதை மனதில் வைத்துக் கொண்டு யோசித்தால் , கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் கூட, டார்வினின் பரிணாம இயலை அடிப்படையாக வைத்து, கடவுள் மறுப்பு அல்லது கடவுள் இருப்பை தீர்மானித்து விட முடியாது என்று தெரிந்து வைத்திருப்பாரே!

கட + உள் என்று எல்லாவற்றையும் கடந்து  உள்ளே பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றை டார்வினைப் பற்றிப் பேசி, புரிந்து கொள்ளவோ, தெரிந்து கொண்டு விடவோ முடியாது! வெறுமனே கும்மியடித்துப் பொழுது போக்கும் விஷயமும் இல்லை இது!

அப்புறமாக, நீண்ட நாட்களுக்கு முன்னாலேயே, ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி இறக்குமதி செய்யப்பட்ட நாத்திகத்தை அரைகுறையாகப் புரிந்து கொண்டு பேசுவதற்குப் பதிலாக, தமிழிலேயே கிடைக்கும் எழுத்தாளர் சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா புத்தகத்தைப் படித்தாலேயே கொஞ்சம் அறிவியலோடு கூடிய  கேள்விகளைத் தெரிந்து கொள்ள முடியும் என்று எழுதியிருந்ததை மறுபடி நினைவு படுத்துகிறேன்!

அறிவியல் பேசுவதானாலும், ஆன்மிகம் பேசுவதானாலும், பொழுது போக்கு நாத்திகமாகப் பரிணாமத்தைத் தொட்டு, டார்வினைத் தொட்டுப் பேசினாலும், சுஜாதா எழுதிய புத்தகம் கொஞ்சம் சுவாரசியமான தொடக்கமாக இருக்கும்! வேறு நல்ல புத்தகம் உங்களுக்குத் தெரிந்து, நீங்கள் படித்துப் புரிந்துகொண்டதை சுருக்கமாகவோ, அல்லது புத்தகத்தைப் பற்றிய முழு விவரங்களோடு தெரிவித்தாலும் சரி, அதை வைத்துக் கொண்டே பேசலாம்!

என்ன வால்ஸ், தயாரா?!



டியர் மிஸ்டர் வாசகரே, அழைப்பு உங்களுக்கும் தான்!


19 comments:

  1. ஹிஹிஹிஹி!


    நான் இன்னும் பரிணாமம் பாகம் ஒன்றே ஆரம்பிக்கவில்லை! முதலில் எழுதியது முன்னுரை, இது விளக்கஉரை!

    அதற்குள் டவுசர் கிழியுது!
    சுஜாதாவின் புத்தகம் வாங்கி படிக்கனும்! ஆங்கில புத்தகங்கள் தாவூ தீருது!

    புல்லாகி, பூண்டாகி பரிணாமத்தை குறிக்கிதா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று!

    உரையாடுவோம்!

    ReplyDelete
  2. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

    படிக்கிறதுக்குள் ஏதோ ஆனது போல இருக்கு... இந்த வேதாந்தம் சிந்தாந்தம் இப்படிதான் போல...

    ஆனாலும் நல்லாருக்கு :) வித்யாசமாய் சொல்லீருக்கீங்க...

    என்ன ஒன்று எல்லாம் பொழுது போக்குன்னு சொல்லீட்டீங்க... ம்ம்ம்ம்...

    நான் தயார் இல்லை :(
    வரும் பின்னூட்டங்களை பார்வைஇடுகிறேன், ஏதோ என்னால முடிஞ்சது

    ReplyDelete
  3. அய்யய்யோ... இதத்தான் சொல்ல நினைச்சேன்.. பதிவ படுச்சவுடனே மறந்து போச்சு :(

    முதல்ல இருக்குற கார்ட்டூன் ரெம்ப நல்லாருக்கு :) சூப்பர் செலக்சன்

    ReplyDelete
  4. வாருங்கள் திரு மஸ்தான்!

    இங்கே வேதாந்தம், சித்தாந்தம் பற்றி எதையுமே விரிவாகப் பேசவில்லையே!

    பயமுறுத்தும்படியாக எந்த வார்த்தைப் பிரயோகமும் கூட இல்லை! இங்கே டார்வின் கோட்பாட்டை முன்னிலைப் படுத்திக் கொண்டு ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி scientologists என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம், நாத்திக வியாபாரத்தை இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் படு சூடாக நடத்திக் கொண்டிருக்கிறது.

    அதில் விஞ்ஞானப் பார்வையும் இல்லை, மனிதனுக்கு உதவும் போக்கும் இல்லை! மதங்களில், மத குருமார்கள் சிலருடைய தவறுகளைப் பெரிதுபடுத்தி, ஒட்டு மொத்த நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிற போக்கு சரிதானா என்ற எதிர்க் கேள்வியைத் தான் முன்வைத்திருக்கிறேன்.

    இங்கே உள்ளூரில் நாத்திகம் என்பது வெறும் பொழுதுபோக்கு, வியாபாரம், அடுத்தவன் தலை மேல் பழியைப் போட்டு விட்டுத் தான் செய்கிற தவறுகளை மறைப்பது என்ற அளவில் மட்டுமே குறுகிப்போய்க் கிடக்கிறது.

    உண்மையைக் காணச் செய்யப் படுகிற முயற்சியாக நிச்சயம் இல்லவ இல்லை!

    மெய்ப்பொருள் காண்பதறிவு, டாகின்ஸ், பொழுதுபோக்கு நாத்திகம் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து இங்கே தேடினீர்களானால், முந்தைய பதிவுகள் இது தொடர்பாக எழுதியது படிக்கக் கிடைக்கும்.

    ReplyDelete
  5. வால்ஸ்!

    நீங்க இன்னும் ட்ராக்குக்கு வரலைன்னு எனக்குத் தெரியுமே!

    முன்னுரைக்கு விளக்கவுரை, விளக்கவுரைக்கு மேலதிக விளக்கவுரை இப்படி மெதுவாக ஆரம்பித்து எப்போது, விஷயத்துக்கு வருவீங்க?

    மணிவாசகப் பெருமானுடைய அந்த சிவபுராண வரிகள் படிப்படியாக உயிர்கள் பரிணாம வரிசையில் மேலேறி வருவதைச் சொல்வது தான்! டார்வின், குரங்குக்கும் மனிதனுக்கும் பொதுவான மூதாதையர்கள் இருப்பதாக மட்டுமே சொன்னார். இங்குள்ள ஞான மரபு, ஒரு செல் என்ற நிலையில் இருந்து படிப்படியாகப் பல்வேறு உணர்வுநிலைகளுடன் (அதைத்தான் ஓரறிவு, ஈரறிவு,...ஐந்தறிவு, ஆறாவது அறிவு என்று சொல்கிறோம்)உயர்ந்துகொண்டே வருவதைச் சொல்கிறது.

    மேற்கத்திய மனமோ அறிவோ இங்கே இருந்த ஞான மரபை உள்வாங்கிக் கொண்டது சொற்பம் தான்! இங்கிருந்த வடமொழி நூல்களை ஜெர்மன் மொழிக்கு மாற்றம் செய்த, நிறையப் பரிச்சயம் செய்து கொண்ட மாக்ஸ் முல்லர் போன்றவர்களே நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. //மணிவாசகப் பெருமானுடைய அந்த சிவபுராண வரிகள் படிப்படியாக உயிர்கள் பரிணாம வரிசையில் மேலேறி வருவதைச் சொல்வது தான்! //

    அப்படியிருந்தா தான் அதை ஆஹோ, ஓஹோன்னு புகழ்ந்திருப்பேனே! அதை இடையில் எதுகை, மோனையை புடிச்சிட்டு கல்லாகிபோச்சே!


    //மேற்கத்திய மனமோ அறிவோ இங்கே இருந்த ஞான மரபை உள்வாங்கிக் கொண்டது சொற்பம் தான்!//

    சமீபகாலமா இந்த ஞானமரபுங்கிர வார்த்தை அதிகமா அடிபடுதே! ராஜன்னு சொல்லி அதுக்கு ஒரு வழி பண்ணனும்!


    //இங்கிருந்த வடமொழி நூல்களை ஜெர்மன் மொழிக்கு மாற்றம் செய்த, நிறையப் பரிச்சயம் செய்து கொண்ட மாக்ஸ் முல்லர் போன்றவர்களே நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறார்கள். //


    வட மொழின்னாலே தடுமாற்றம் தான்!

    ReplyDelete
  7. @வால்பையன்
    //வட மொழின்னாலே தடுமாற்றம் தான்!//

    திருவாசகம் வட மொழி நூலா ?! :)

    உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் திருவாசகம் என்பது முதன் முதலாக மேலை நாட்டினர் (ஐரோப்பியர்கள் & கிறிஸ்தவர்கள்) மொழி பெயர்த்து ஆராய்ந்த இந்திய நூல்களுள் ஒன்று.

    ReplyDelete
  8. @ சபரிநாத் அர்தனாரி

    //வடமொழி நூல்களை ஜெர்மன் மொழிக்கு மாற்றம் செய்த,//

    அவரது இந்த ஸ்டேட்மெண்டுக்கு நான் சொன்ன பதில் அது!?

    திருப்பதி படத்தில் சதா நடித்திருப்பதால் அவரிடம் ரெண்டு லட்டு இருக்குன்னு சொல்வது போல் இருக்கு உங்க ஸ்டேட்மெண்ட்!

    ReplyDelete
  9. வாருங்கள் சபரிநாதன்!

    வால்சுக்குப் பதிவுகள் எழுதும் எல்லா நேரங்களிலும் தடுமாற்றம் வரும்!

    அவர் பெருந்தன்மையாக வடமொழியில் மட்டும் தடுமாற்றம் வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்! திருவாசகம் தமிழா, வடமொழியா அல்லது இனான்யா மாதிரி வேறு புரியாத மொழியா என்பதை சேக்காளி ராஜனுடன் கலந்து பேசிய பிறகு சொல்லப் போகிறார், பாருங்கள்!

    :-))

    ReplyDelete
  10. மஸ்தான்!

    முதல் படத்தை விட, அந்த மனிதக் குரங்குகள் பேசிக் கொள்கிற படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள்!

    இன்னமும் சுவாரசியமாக இருக்கும்! வால் பையன் சௌகரியத்துக்காகவே அதைக் கீழே தமிழில் கதையாகச் சொன்னேன்! கவனிக்கவில்லையா, என்ன!

    ReplyDelete
  11. //அந்த மனிதக் குரங்குகள் பேசிக் கொள்கிற படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள்!//


    எம்புட்டு பெருசாக்கி பார்த்தாலும் அதில் ஒன்று ஆமை என்று இன்னும் உங்களுக்கு தெரியாமல் இருப்பது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது! நாளைக்கு ஒரு லார்ஜ் அதிகமாக போனால் அது உங்களுக்காக தான்!

    ReplyDelete
  12. வால்ஸ்!

    நிறுத்திட்டதாச் சொன்னது, மறுபடி ஆரம்பிச்சாச்சா :-((

    சின்னது குரங்கோ இல்லையோ, நிச்சயமாக ஆமை இல்லை!

    இங்கே சில மண்டைகாய வைக்கிற பதிவுகளைப் படித்த பிறகு, அந்த வலைத்தளத்தின் கார்டூன்கள் தான் எனக்கு நிவாரணம்!

    ReplyDelete
  13. //சின்னது குரங்கோ இல்லையோ, நிச்சயமாக ஆமை இல்லை!//


    அதன் மூக்கி மைப்பு, வயிற்று அமைப்பை கொஞ்சம் பாருங்க!

    வான்கோழியும், மயிலும் ஒன்றல்ல ஆனால் காட்டு வான்கோழியும், மயிலும் ஒருவத்தில் பல ஒற்றுமைகள் உள்ளது, கடவுளை தேடுவது தக்காளிக்கு தாவணி போடும் வேலையாக இருக்கலாம், ஆனால் பரிணாம வளர்ச்சி அனுபவிக்கவே சிறந்ததாக இருக்கிறது, இயற்கையை ரசிக்க கிளம்பிவிடலாமா என அடிக்கடி தோன்றுகிறது!

    ReplyDelete
  14. டார்வினின் பரிணாமக் கொள்கையைப் பிடித்து, அதை வைத்து டாகின்ஸ் மாதிரி சயன்டாலஜி ஆசாமிகள் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று நிறோபிக்கிற கொடுமையை விட, தக்காளிக்குத் தாவணி என்ன சூரிதார், ஜீன்ஸ், இன்னும் என்னென்னவெல்லாமோ போட்டுப் பார்த்து விடலாம்!

    ஏப்ரல் முட்டாள்கள் தினம் எப்படிவந்தது என்பது, தக்காளிக்குத் தாவணிபோட்டுப் பார்த்ததில் இருந்து தானா?

    அடக் கடவுளே!

    ReplyDelete
  15. //ஏப்ரல் முட்டாள்கள் தினம் எப்படிவந்தது என்பது, தக்காளிக்குத் தாவணிபோட்டுப் பார்த்ததில் இருந்து தானா?//


    சும்மா இருக்கும் பொழுது அவ்வபொழுது நான் இம்மாதிரி சிந்திப்பதுண்டு!(நம்பிட்டீங்களா, இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு)

    ReplyDelete
  16. வருடம் முழுக்கவே முட்டாளைடிக்கப் படுகிற ஒரு சமுதாய அமைப்பில் இருந்து கொண்டு ஏப்ரல் முதல் தேதி என்ன, மே முதல் தேதி தான் என்ன!

    :-))

    ReplyDelete
  17. //வருடம் முழுக்கவே முட்டாளைடிக்கப் படுகிற ஒரு சமுதாய அமைப்பில் இருந்து கொண்டு ஏப்ரல் முதல் தேதி என்ன, மே முதல் தேதி தான் என்ன!//



    இதில் ஒரு காமெடி இருக்கு!
    தான் முட்டாளாக்கபடுகிறோம் என்று தெரியாதவர்களுக்கு எந்த கவலையுமில்லை! தெரிந்தவர்களுக்கு தான் ஆயிரம் கவலை! நான் சொல்வது சரிதானே!

    ReplyDelete
  18. @வால்பையன்,

    //அவரிடம் ரெண்டு லட்டு//
    அதென்னங்க கணக்கு ரெண்டு லட்டு ;).

    ஊருக்கு சமீபத்தில் வருகிறேன். உங்களை சந்திக்க விருப்பம். உங்களுக்கு நேரமும் விருப்பமுமிருப்பின் பார்க்கலாம்.

    ReplyDelete
  19. //@வால்பையன்,

    //அவரிடம் ரெண்டு லட்டு//
    அதென்னங்க கணக்கு ரெண்டு லட்டு ;).

    ஊருக்கு சமீபத்தில் வருகிறேன். உங்களை சந்திக்க விருப்பம். உங்களுக்கு நேரமும் விருப்பமுமிருப்பின் பார்க்கலாம். //


    குண்டு மதிப்பா ஸாரி குத்துமதிப்பா சொல்றது தான்!

    9994500540 அழையுங்கள் சந்திக்கலாம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!