கொஞ்சம் சுர்ரென்று...காரமாக! விமரிசனம்!



செய்தித் தாட்களில், சில விஷயங்களைப் பார்த்திருக்க முடியாது! அப்படியே பார்த்திருந்தாலும் அது , ஒரு ஓரத்தில் கூறு கட்டிப் போட்டிருக்கும் செய்தி, அல்லது செய்தித்தொகுப்பாக மட்டுமே இருப்பதில் இருந்து, முழு உண்மையைத் தெரிந்து கொள்ள முடியாது! அங்கே உண்மையில் என்ன நடந்தது, என்னென்ன தமாஷ் அரங்கேறியது என்பதெல்லாம், அந்தந்த துறையில் இருப்பவர்களுக்கே சமயங்களில் பிடிபடுவதில்லை.

உதாரணமாக, இங்கே ஒரு நிறுவனம் படம் தயாரிக்கிறது. அவர்களுடைய தொலைக்காட்சியே அதை ஆஹா ஓஹோவென்று பில்டப் கொடுக்கிறது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் மைக்கை நீட்டி கத்தியைக் காட்டிப் பயமுறுத்துவது போலவே, கருத்துக் கேட்கிறார்கள். ஜனங்களும் கொஞ்சம் கூட சிரிக்காமல், படம் ரொம்ப நல்லா இருக்கு! சூப்பர்! பாக்ஸ் ஆபிஸ் ஹிட், நூறு நாள் ஓடும் என்றெல்லாம் பீலா விடுவதைத் தொலைக்காட்சியில் நிறையப் பார்த்த அனுபவம் இருக்கிறது இல்லையா, அதே மாதிரி!

இங்கே செய்தித் தாள்களும், மற்றைய இதழ்களும், விளம்பரங்களை எதிர்பார்த்துப் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருப்பவைதான்! உண்மையான தகவல்களை உங்களுக்கு வீடு தேடி வந்து சொல்ல வேண்டும் என்கிற அவசியமோ, கட்டாயமோ அவர்களுக்கு இல்லை. இங்கே தங்களுக்கு சௌகரியப்படுகிற மாதிரி செய்திகளை வெளியிடவில்லை என்பதற்காக, ஹிந்துவை வாங்காதே, தினமலரை வாங்காதே என்றெல்லாம் பானர்  தயாரித்து, அதன் பின்னணியில் உள்ள விஷயம் என்ன என்பது கூடத் தெரியாமல் இங்கே நிறையப் பதிவர்கள் தங்களுடைய பதிவுகளிலும் இணைத்துக் கொண்டு, இன்றைக்கும் கூடப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா!

இப்படி நெகடிவாகப் பதிவு எழுதுவதால், அல்லது இயக்கம் நடத்துவதால் மட்டுமே அந்தப்பத்திரிகைகளின் சர்குலேஷன் கொஞ்சமாவது குறைந்து விட்டதாக, ஒரு ஆதாரமும் இதுவரை இல்லை.அவர்கள் பாட்டுக்கு எங்கேயோ எது  மேலோ மழை பெய்த கதையாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  எதிர்த்துக் கத்தச் சொன்னவனும் அவன் வேலையைப் பார்க்கப் போய் விடுகிறான். கத்திக் கொண்டிருப்பவர்கள் தான் பாவம், இன்னமும் கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எமெர்ஜென்சி நாட்களில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையும், அதன் மாநில மொழி வெளியீடுகளும், மிகவும் தைரியமாக, அரசை எதிர்த்துச் செய்திகளை வெளியிட்டதாகச் சொல்லப் பட்டதுண்டு. உண்மைதான்!

 "எப்போதெல்லாம் சர்குலேஷன் குறைகிறதோ, அப்போதெல்லாம் அரசை எதிர்த்து பரபரப்பான, அம்பலப்படுத்துகிறமாதிரியான செய்திகளை வெளியிடுகிற பத்திரிக்கை இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்- அதுவும் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர் அதன் முதலாளி பகவன் தாஸ் கோயங்கா."

இதுவுமே, வேடிக்கையாகச் சொன்னாலும், யதார்த்தமான நிலைமையை படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தது. எமெர்ஜென்சி நாட்களில், ஹிந்து பத்திரிக்கை நல்ல பிள்ளையாக, சமர்த்துப்பிள்ளையாக இருந்து விளம்பர வருமானத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. 'மெல்லக் கடிதோச்சி' என்று மென்மையாக விமரிசனம் செய்பவர்கள் என்று அதற்கு அர்த்தம் அல்ல. ஹிந்துவோ, தினமலரோ, அல்லது வேறெந்தப் பத்திரிகையானாலும், செய்தி அவர்களுக்கு ஒரு வியாபாரம் மட்டும் தான். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

போஃபார்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் என்று அம்பலப்படுத்தியது ஹிந்து பத்திரிக்கை தானே என்று கொஞ்சம் புரியாமல் கேட்க நினைப்பவர்களுக்கு,போஃபார்ஸ் பிரச்சினை ராஜீவ் காண்டிக்கு மறக்க முடியாத கசப்பாக மாறிப்போனது என்றாலும், ஹிந்து குடும்பத்துக்குள் நடந்த ஆதிக்கப் பிரச்சினையில் என் ராம் கையில் ஹிந்துவின் முழுப் பொறுப்பும் வந்து சேர்ந்தது என்பதும், மென்மையான அன்றைய ஆசிரியர் கஸ்தூரி மிகவுமே புண்பட்ட மனதோடு ஒதுங்க வேண்டி வந்தது என்பதும் போஃபார்ஸ் மிகச் சிறந்த பீரங்கி என்பதை நிரூபித்தது. பாருங்களேன், வெறும் அறுபத்துநாலு கோடி அளவுக்கே ஊழல் என்ற போது கொதித்து எழுந்தவர்கள், இப்போது அறுபதாயிரம் கோடி ஊழல், அதற்கு மேலேயும் இருக்கும் என்று சொல்லப் படுவதில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லையே! அதே மாதிரி, தமிழ் நாட்டில் என்ன கூத்து நடந்தாலும் அதைக் கண்டுகொள்வதும் இல்லையே!

என்ன மாதிரியான செய்தி வெளியிட்டால், வருமானம் அதிகம் கிடைக்குமோ, அதை மட்டுமே வெளியிட்டு ஆதாயம் தேடுகிற வணிக நோக்கம் ஒன்றைத் தவிர, சமூக நோக்கங்கள், சமூகப் பொறுப்பு, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருந்து பலப்படுத்துவது என்பதெல்லாம் சும்மா உள உளாக்காட்டிக்குத் தான்! அப்படியான ஒரு பங்களிப்பு இருக்குமானால், அது பக்க விளைவு தானே தவிர, பிரதானமான குறிக்கோளாக இருப்பதில்லை என்பது இன்றைய யதார்த்தம்!

இங்கே ஏதோ ஒரு தரப்புக்குத் தீவீரமான ஆதரவு அல்லது கடுமையான எதிர்ப்பு என்ற  இரண்டுமே ஒரு ஆதாயத்தை அடிப்படையாக வைத்துத் தானே தவிர, இன, மொழிப் பாசம், நியாய உணர்வு, என்பதை வைத்து அல்ல! அவையெல்லாம், வெளியே சொல்லிக் கொள்வதற்காகத் தானே தவிர, தீர்மானிப்பவைகளாக இருப்பதில்லை.

இப்போது கூட மும்பையில் ஐ பி என் டிவி அலுவலகம் சிவசேனா குண்டர்களால், அடித்து நொறுக்கப்பட்டபோது, ஹிந்து என்.ராம், மிகவும் ஆவேசமாகப் பேட்டி அளித்திருக்கிறார். அறுபத்துநாலு கோடி ஊழலுக்கே சுவிட்சர்லாந்து போயெல்லாம் புலன் விசாரணை செய்தவர்கள், ஆ..ராசா! என்று அறுபதாயிரம் கூடி ரூபாய்க்கு மேல் வாயைப் பிளக்க வைக்கிற அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக செய்திகளில் வாயைத் திறக்கவே இல்லை. கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் ஆந்திராவில், பத்திரிகையாளர்களை காசுகொடுத்துச் சாதகமாக செய்தி வெளியிடச் செய்த அசிங்கத்தை, திரு பி சாய் நாத் இரண்டு கட்டுரைகளில் அம்பலப்படுத்த ஹிந்துவில் வெளியானது. தன்பங்குக்கு ஒரே ஒரு தலையங்கள் எழுதியதோடு என் ராமுடைய ஹிந்து பத்திரிக்கை தன்னுடைய கடமையை முடித்துக்கொண்டது.

India's National Paper என்ற வாசகம் இன்றைக்கும் ஹிந்துவின் முகப்பில் இருக்கும்! ஆரம்பிக்கப்பட்ட காலங்களில், ஹிந்து பத்திரிகை நாட்டு மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாளிதழாக இருந்ததென்னவோ உண்மை! எப்போதும் அப்படியே இருந்து விட முடியுமாஎன்ன?

எவர்  எது சொன்னாலும், அதை அப்படியே உண்மை, பொய் என அப்படியே எடுத்துக் கொண்டுவிடாமல், கொஞ்சம் சுய சிந்தனையோடு இருக்கவேண்டியது, இன்றைய முக்கியத் தேவை! பொய்யை விட, ஆயுதங்களை விட, Disinformation  என்று சொல்லப்படும் செய்திகளை உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லும் ஊடகங்கள் மிகவும் ஆபத்தானவை. அழிவைத் தருபவை.

இங்கே ஊடகங்களில் ஹிந்து நாளிதழை விமரிசனத்துக்கு எடுத்துக் கொண்டது ஒரு உதாரணத்துக்கு மட்டுமே. இது முழுமையான விமரிசனமோ, ஹிந்து நாளிதழைப் பற்றி என்னுடைய ஒட்டு மொத்தமான மதிப்பீடோ அல்ல. ஹிந்துவை அளவிட, இன்னும் நிறைய விஷயங்கள்இருக்கின்றன!

நம்மைக் காப்பாற்றிக் கொள்வது, நம் கைகளில், சிந்தனையில், செயல்பாடுகளில் தான் இருக்கிறது.

அது எப்படி என்பது தெரியாதவர்கள், உண்மைத் தமிழன்  இட்லி வடை பொங்கல் சட்னி சாம்பாரை விட்டு விட்டு, கரம் மசாலாவில் காரம் கொஞ்சம் அதிகமாகவே போட்டு ஒரு பதிவை எழுதியிருக்கிறார். சுர்ரென்று! படித்துவிட்டு அப்போதாவது தெரிகிறதா பார்க்கலாம்!

6 comments:

  1. பணம் மனிதனை எப்படி வேண்டுமானலும் மாற்றிக் கொண்டே இருக்கிறது..

    பத்திரிக்கை நடத்துவதும் இலாபம் சம்பாரிக்கவே எனும் போது அங்கு பொறுப்பு குறையவே செய்கிறது
    என்பது உண்மையே..

    தங்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாருங்கள் சிவா!
    ஒரு தொழிலை நடத்துவது, பணம் ஈட்டவே என்கிறபோது, வருமானம், லாபம் என்பது பாவம் அல்ல.
    இப்போது பிரச்சினை பணம் சம்பாதிப்பது அல்ல, அதை எப்படி சம்பாதிக்கிறார்கள் அல்லது சம்பாதிப்பதற்காக என்னென்ன சமரசங்கள் செய்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றியது தான். அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் என்று இல்லை, அரசு செய்யும் தவறுகளை அம்பலப் படுத்தாமல் இருப்பதற்காகவே விளம்பரங்கள் குவியும் அல்லது அதையும் மீறி எழுதினால் அடக்குமுறைகள் ஏவப்படும் என்ற நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

    சோரம் போவது என்பது புவனேஸ்வரி மாதிரி உடலை விற்கும் பெண்களுக்கு மட்டும் பொருந்துகிற வார்த்தை அல்ல.

    அன்புள்ள RAD MADHAV,
    பதிவின் உள்ளடக்கத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை, குறிப்பாக விளம்பரம் தேடும் பின்னூட்டங்களை அனுமதிப்பது இல்லை என்பது கொள்கை ரீதியான முடிவு. அந்த வகையில் உங்களுடைய பின்னூட்டத்தை அனுமதிக்க முடியாததற்குவருந்துகிறேன்.

    ReplyDelete
  3. \\சோரம் போவது என்பது புவனேஸ்வரி மாதிரி உடலை விற்கும் பெண்களுக்கு மட்டும் பொருந்துகிற வார்த்தை அல்ல\\

    புரிகிறது, அந்த உணர்வை பணம் மழுங்கடித்து விடுகிறது :)

    ReplyDelete
  4. மழுங்கடித்து விடுகிறது என்பது சரியான கணிப்பு இல்லை சிவா!

    பணம் என்பது வெறும் கருவிதான் சிவா! பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள் இல்லையா, அந்தப் பத்தைப் பற்றித் தான் இந்த விவாதமே!பணத்தைவைத்து என்ன செய்யலாம் என்பதை மதுரை-திருமங்கலம் இடைத் தேர்தலில் பரீட்சித்துப் பார்த்ததை, நாடாளு மன்றத் தேர்தல்களிலும் செய்து காட்டிய ஒரு தரப்பு சாமர்த்தியத்தையும், லாலு, முலாயம் கொட்டத்தை அடக்கிய மாதிரியே இங்கேயுமே செய்திருக்கலாம் என்ற வாய்ப்பைத் தவறவிட்ட இன்னொரு தரப்பையும் பற்றிக் கொஞ்சம் யோசித்து விட்டு, பணம் என்பது எப்பேர்ப்பட்ட கருவியாக, எவரெவர் கைகளில் பயன்படுகிறது என்பதையும்சொல்லுங்களேன்!

    ReplyDelete
  5. நல்ல இடுகை, இந்த பத்திரிக்கைகள் மட்டும் அல்ல மொத்தத்தில் அனைத்தும் தரம் தாழ்ந்து போய் விட்டது காலத்தின் கோலம். ஒன்று சார்பு நிலையுடன் அல்லது எதிர் சாராரின் நிலையுடன் தான் பத்திரிக்கை நடத்த முடிகின்றது. நடு நிலைமை என்பது ஏட்டளவில் தான். நன்றி.

    ReplyDelete
  6. /மொத்தத்தில் அனைத்தும் தரம் தாழ்ந்து போய் விட்டது காலத்தின் கோலம்/

    கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்களேன்! அந்த எல்லாமில் நாமுமே அடங்கியிருக்கிறோம் என்பது மட்டுமல்ல-நம் தரம் தாழ்ந்து போய்விட்டபடியால் தான் எல்லாமே தரம் தாழ்ந்து போனதாகி விட்டது.

    காலத்தின் கோலம் என்பதென்ன? காலம் என்பது வெறும் புள்ளி விவரம் அல்லது முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி, இருப்பதைத் தானே காட்டமுடியும்!?

    மாற்றம் நம்மிடமிருந்து தான், ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் தான் ஆரம்பித்தாக வேண்டும்! இப்படி நினைக்க ஆரம்பித்தோமேயானால், நல்லதோர் மாற்றம், கொஞ்சம் நாள் கழித்தாகிலும் வந்து சேருமே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!