கருத்துக் கணிப்பும் கலைஞர் கலக்கமும்!


கருத்துக் கணிப்பு என்று வெளிவந்தாலே ஏதோ ஒரு தரப்புக்கு சந்தோஷமும் இன்னொரு தரப்புக்கு 'அல்வாவும்" தான் என்றாகி விட்டது இல்லையா!!

இந்தக் கருத்துக் கணிப்புக்களில், தெளிவுபடுத்தப்படாத அல்லது சரி என்று ஒத்துக் கொள்ள முடியாத, நிரூபிக்கப்படாத அம்சங்கள் இரண்டு இருக்கின்றன.

நான் இங்கே ஜெயிக்கும் கட்சி எது  ஜெயிக்காத கட்சி எது என்ற ஆராய்ச்சியில் இறங்கப்போவதில்லை. இப்போதிருக்கும் trend ஒன்றும் புதிதும் அல்ல!ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் இருக்கிறது! இதைப் புரிந்துகொண்டதால் தான், தங்கள் கைப்பிடியில் கோட்டைகளாக இருந்த நகர்ப்புறங்களை விட்டோடி, கிராமப் புறத் தொகுதிகளில் திமுக ஒண்டிக் கொண்டது! இலவசங்களை இன்னும் தருவேன் என்று தேர்தல் அறிக்கை விட்டது! அதை மிஞ்சும் வகையில் அதிமுக அம்மா அறிக்கை விட்ட பிறகு புஸ்வாணமாகியும் போனது!

பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாதபடி, தேர்தல் ஆணையம் எடுத்த கெடுபிடிகள், திமுக கூட்டணியை மட்டுமே மிகவும் பாதித்திருக்கிறது. அதிமுக அணியை விட தேர்தல் ஆணையம் தான் இந்தத்  தேர்தலில் தங்களுக்கு முதல் எதிரி, அறிவிக்கப்படாத 'நெருக்கடி நிலை' என்றெல்லாம் திமுகவைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. வெள்ளிக் கிழமை, திமுக பொருளாளர், இன்னும் இலவச அறிவிப்புக்கள் வரும் எதிர்பாருங்கள் என்று பேசியிருக்கிறார்! 
இலவசங்களோடு, இன்னும் என்னென்ன வரும் என்பதும் ஊகிக்க முடிவதுதான்! (வேறென்ன? அராஜகம் தான்!)
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய புள்ளிவிவரம், விஜய்காந்துக்குப் பதினொரு சதவீத வாக்கு வங்கி அப்படியே இருக்கும் என்று லயோலா சர்வே சொல்லியிருப்பது! அடுத்தது, மதிமுக, தேர்தலில் பங்கு கொண்டிருந்தால் 1.34 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க முடியும் என்ற ரீதியில் இன்னொரு சர்வே! விஜயகாந்த் மாதிரி திடீர் கேப்டன்களுக்குப் பதினோரு சதவீத வாக்கு வங்கி என்பதை எதை வைத்து உறுதி செய்தார்களாம்? உண்மையில் அதில் கால்வாசி இருந்தாலே மிகப்பெரிய ஆச்சரியம்!

அதை விடப் பெரிய ஆச்சரியம் வைகோவுக்கு ஒன்றரை சதவீதம் கூட ஆதரவு இல்லை என்பது! இதையும்,ஜீரணிக்க முடியாத ஒன்றாகப் பார்க்கும் போதே உணர்ச்சி வசப்பட்டுப் பேசிப் பேசியே வைகோ தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாரோ என்றும் தோன்றுகிறது!

ஒன்றுக்கு மூன்றாக, செய்திகளைப் பார்த்து விடுவோமா? நிலவரம் என்ன, கலவரம் என்ன என்பது தானே புரிந்துவிடும்!

முந்துகிறது அ.தி.மு.க.: லயோலா கருத்துக் கணிப்பு

First Published : 02 Apr 2011 02:37:55 AM IST

சென்னை, ஏப்.1: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகளும் உள்ளதாக சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் சார்பில் தமிழகம் முழுவதும் 117 பேரவைத் தொகுதிகளில் மார்ச் 21 முதல் 29 வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் மூன்று பேரவை தொகுதிகள் வீதம் மொத்தம் 117 தொகுதிகளில் 3,171 பேரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.பேராசிரியர் ச.ராஜநாயகத்தின் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட 30 பேர் இதில் ஈடுபட்டனர்.

சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர் ச.ராஜநாயகம் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட, கல்வியாளர் ஹென்றி ஜெரோம் பெற்றுக்கொண்டார்.

கருத்துக் கணிப்பு முடிவுகள் விவரம்: தற்போதைய சூழலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 48.6 சதவீதம் பேர் அ.தி.மு.க. அணிக்கு வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். 41.7 சதவீதம் பேர் தி.மு.க. அணிக்கும், பிற கட்சிகளுக்கு 1.5 சதவீதம் பேரும், முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.
அதிமுக அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேரும் , தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என 36.7 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. புறக்கணிப்பால் பாதிப்பில்லை: ம.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று பெரும்பான்மையானோர் (53.6 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அதிமுக அணி பாதிக்கப்படும் என நான்கில் ஒருவர் (25.4 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வுக்குத்தான் பாதிப்பு என 7.4 சதவீதத்தினரும், தி.மு.க. அணியைப் பாதிக்கும் என 3.8 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.

மின்வெட்டு முக்கியப் பிரச்னை: தங்கள் தொகுதியின் மிக முக்கியப் பிரச்னையாக மின்வெட்டை (25.2 சதவீதம்) பொதுமக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். விலைவாசி உயர்வு, குடிநீர், போக்குவரத்துப் பிரச்னை, ரேஷன் உள்ளிட்ட பிரச்னைகள் அடுத்தடுத்த முக்கியப் பிரச்னைகளாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த அணியின் வேட்பாளர் ஜெயித்தாலும் தொகுதியின் பிரச்னை தீராது என 42.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தங்களது தொகுதியில் உள்ள பிரச்னைகளை தி.மு.க. அணியினரோடு ஒப்பிடும் போது அ.தி.மு.க. அணியினரால் தீர்க்க முடியும் என்று சற்று அதிகமானோர் (33.7) கருதுகின்றனர்.

வாக்களிக்கப் பணம்: பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறு என்று 80 சதவீதத்தினர் தெரிவித்திருந்தாலும், கடந்த தேர்தல்களில் ஒருமுறையாவது பணம் பெற்றதாக 47.9 சதவீதம் பேர் ஒத்துக் கொள்கின்றனர். பணம் வாங்கிக்கொண்டு தான் விரும்பும் வேறொருவருக்கு வாக்களிப்பது தவறல்ல என 31.5 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

அதிமுக அணிக்கு 105 தொகுதிகள்: இந்த ஆய்வு நடத்தப்பட்ட காலக்கட்டத்தில், 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 105 தொகுதிகள் வரை உள்ளன. தி.முக. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும், மீதமுள்ள 59 தொகுதிகளில் கடுமையான போட்டியும் நிலவுகிறது.

கடுமையான போட்டி நிலவும் தொகுதிகள் எந்த அணிக்குச் செல்லும் என்பது வாக்குப் பதிவுக்கு முன்பாக மதிமுக எடுக்கும் நிலைப்பாடு, பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களைப் பொருத்து அமையும்.

தேர்தல் வியூகத்தில் தி.மு.க. முன்னிலை: தேர்தல் வியூகத்தை சிறப்பாகச் செயலாக்கி வருவதில் தி.மு.க. அணி முன்னிலைப் பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கை, சுமூகமான தொகுதிப் பங்கீடு, சரியான வேட்பாளர்கள் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம், தெருமுனைக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் ஆகியவற்றில் தி.மு.க. அணி முன்னிலை பெற்றுள்ளது.

உள்கட்சிப் பூசல் இன்மை, சுவரொட்டி, பேனர் விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க. அணி முன்னிலை பெற்றுள்ளது.

கள அனுபவம், திகட்டும் சலுகை அறிவிப்புகள்: சலுகைகள், இலவச அறிவிப்புகள் குறித்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களைத் திகைத்துப்போக வைத்துள்ளன. அதேபோல், அனைத்துத் தொகுதிகளிலும், அனைத்துக் கட்சிகளிலும் பூசல்கள் மலிந்துள்ளன. சில சூழல்களில் மனக்கசப்பாகவும், சில சூழல்களில் வெளிப்படையான எதிர்ப்பாகவும் அவை உள்ளன.

தடை உத்தரவு போன்ற சூழல்: தேர்தல் ஆணையத்தின் கடுமையான செயல்பாடுகளால், வழக்கமாகத் தேர்தல் காலங்களில் காணப்படும் திருவிழாச் சூழல் எங்கும் காணப்படவில்லை. பல இடங்களில் உள்ள வெளி மாநிலக் காவலர்களால் தடை உத்தரவு போடப்பட்டுள்ளதைப் போன்ற இறுக்கம் நிலவுகிறது. சுவர் விளம்பரத்துக்கு காட்டப்படும் கெடுபிடிகளால் சிறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குறித்த எந்த விவரமும் வாக்காளர்களுக்குத் தெரியவில்லை.

எனினும், தேர்தல் ஆணையம் மிகப் பொறுப்பாக செயல்படுவதாக 60.5 சதவீதம் பேரும், தன்னுடைய அதிகார வரம்பை மீறிய கண்டிப்புடன் செயல்படுவதாக 24.7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

தே.மு.தி.க. வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது: பேராசிரியர் ராஜநாயகம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது என்று பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்தார்.

லயோலா கல்லூரி சார்பில் கடந்த தேர்தல்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. இருப்பதாக கூறப்பட்டது. இந்த முறை தே.மு.தி.க. அ.தி.மு.க. அணியில் இணைந்திருக்கிறது. இது அந்தக் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:

தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டதால் அந்தக் கட்சிக்கு வாக்கு வங்கி உருவாகியுள்ளது. கூட்டணியில் போட்டியிடுவதால் வாக்கு வங்கியில் சிறிய சிராய்ப்பு ஏற்படலாம். ஆனால், பெரிய சேதம் ஏற்படாது. அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் - கேட்கவில்லை:2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி ஆகிய கேள்விகள் எங்களது கேள்விப் பட்டியலில் இடம்பெறவில்லை. மக்களைப் பாதிக்கும் விஷயங்களை அவர்களாகவே முன்வந்து தெரிவித்திருந்தார்கள்.

மணல் கொள்ளை, திருப்பூர் சாயப்பட்டறை போன்ற பகுதிகள் சார்ந்த பிரச்னைகளை மக்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவித்தனர். 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரமும் மக்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தால் அவர்களாகவே தெரிவித்திருப்பார்கள். இது ஊடகங்களால் திணிக்கப்பட்ட பிரச்னையாகவே களத்தில் தெரிகிறது என்றார் ராஜநாயகம்.

ஏற்கெனவே உங்களது கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டதா 

என்ற கேள்விக்கு, என்னுடைய நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு இது ஒன்றுதான் என்றார்.

இன்றைய தினமணியில் வெளிவந்திருக்கும் இன்னொரு செய்தியையும் பாருங்கள்!

சேலம், ஏப். 1: கருத்துக்கணிப்புகளின் பின்னணியில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக் கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது.
இன்றைய அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் மாநில அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஆகியோரின் போலீஸ் பாதுகாப்புகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இவர்களின் போலீஸ் பாதுகாப்புகளை வாபஸ் பெறும்படி தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது யார்?

எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் 100, 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் திமுக கூட்டங்களுக்கு குறைந்த அளவே போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாநில முதல்வரையே எதிர்க்கட்சிக்காரரைப் போன்று பேச வேண்டிய நிலைக்கு ஆளாக்கி விட்டனர்.

போலீசார் பழிவாங்குகின்றனர்: போலீசாருக்கு ரூ. 80 ஆக இருந்த ஊதியத்தை பல ஆயிரங்களாக உயர்த்தியதுடன், 3 போலீஸ் கமிஷன்கள் அமைத்ததும் திமுகதான். ஆனால் இன்று அந்த போலீஸ் கம்பு என்னையும் என் தோழர்களையும் தாக்குகிறது. இதற்காக நான் அவர்களை பழிவாங்கமாட்டேன். இதற்கு காலம் பதில் சொல்லும்.

இன்று கருத்துக்கணிப்புகள் வெளியிட்டுள்ளனர். அவற்றின் லட்சணம் குறித்து எங்களுக்குத் தெரியும். பெரிய பெரிய ஜாம்பவான்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 2 இடம் கூட கிடைக்காது என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டனர்.

காசு பெற்றுக் கொண்டு கருத்துக்கணிப்பு... ஆனால் மத்தியில் காங்கிரஸ் அரசையே நிலை நிறுத்தும் அளவுக்கு நாங்கள் வெற்றி பெற்றோம். கருத்துக்கணிப்புகள், புள்ளி விவரங்களைக் கூறி காசு சம்பாதித்துக் கொள்பவர்களின் பெயர்களை தேர்தலுக்குப் பிறகு நான் வெளியிடத் தயாராக உள்ளேன்.

மக்களுக்கு திமுக கூட்டணி குறித்து நம்பிக்கையின்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு திட்டமிட்டு இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். இது போன்று செயல்படும் செல்வ சீமான்களுக்காக நாங்கள் ஆட்சி நடத்தவில்லை. மாறாக சாக்கடையில் புரளும் ஏழைகளுக்காகவே நாங்கள் ஆட்சி நடத்துகிறோம்.

எனவே திமுகவினர் தயவு செய்து இதுபோன்ற ஜோதிடங்களை, கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றார்.

பலவீனத்தின் இன்னொரு முகம்........!

மதுரை, ஏப்.1: மதுரை அருகே வட்டாட்சியரைத் தாக்கிய துணை மேயர் உள்ளிட்ட திமுகவினரைக் கைது செய்யக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அமைச்சர் முன்னிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் தாக்கப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட துணை மேயர் பி.எம்.மன்னன், திமுக ஒன்றியச் செயலர் ரகுபதி மற்றும் திருஞானம் 3 பேரையும் சனிக்கிழமைக்குள் (ஏப். 2) கைது செய்ய வேண்டும்.

மேலும், மத்திய அமைச்சர் முன்னிலையில் இச்சம்பவம் நடை பெற்றுள்ளதால் அவரையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்.

அப்படியே ஒரு ஓரமாக இந்த செய்தியையும் படித்துவிட்டு........

இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்!

வைகோவை அதிகம் புண்படுத்தியது, ஜெயலலிதாவின் ஆணவமா,அல்லது கேப்டனுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைக் கூடத் தங்களுக்கு அளிக்கவில்லையே என்ற ஏமாற்றமா?

தேர்தலைப் புறக்கணிப்பதென்று வைகோ எடுத்த முடிவும், அதற்குப் பிறகு அவர் ஊர் ஊராகப் போய்த்தன் கட்சியினருடன் பேசிக் கொண்டிருப்பதில் இருந்தும் மதிமுக ஆதரவாளர்களுடைய வாக்குகள் திமுக அணிக்குத் தான் போகும் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது என்ற கருத்து சரியா?

இந்தத்  தேர்தலுக்குப் பிறகு வைகோ-மதிமுக நிலை என்னவாக இருக்கும்




 

4 comments:

  1. //"வைகோவை அதிகம் புண்படுத்தியது, ஜெயலலிதாவின் ஆணவமா,....."//
    இந்தக் கேள்விக்கு உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பதில் தெரியும்! ஸ்டெரிலைட் போன்ற விஷயங்கள் விஜய் மல்லையா வதந்திகளை நீக்கிப் பார்த்தால் இடங்கள் எவ்வளவு குறைவாய் இருந்தாலும் முன்னாலேயே அழைத்துப் பேசியிருந்தால் ஒத்துக் கொண்டிருக்கலாம் என்ற தோற்றம்தான் வருகிறது. இவர்கள் இல்லை என்ற உடனேயே முன்னர் எதிர்த்த முந்தைய கட்சிக்கு ஆதரவு என்பதும் அரசியலின் அபத்தத்தைக் காட்டுகிறது. தேர்தலுக்குப் பிறகும் ம தி மு க அப்படியே இருக்கும் ஒரு சில வெளி நடப்புகள் தவிர...!

    ReplyDelete
  2. அன்புடன் நண்பரே வணக்கம்.
    """செல்வ சீமான்களுக்காக நாங்கள் ஆட்சி நடத்தவில்லை. மாறாக சாக்கடையில் புரளும் ஏழைகளுக்காகவே நாங்கள் ஆட்சி நடத்துகிறோம்.""""/

    அப்போ இதுவரை நீங்கள் 5..முறை ஆட்சிசெய்தும் இந்த சாக்கடை மக்களை அதிலிருந்து மீட்கவில்லை இனிமேல மீட்க போகிறீர்கள் .. ???உமமுடிய ஆட்சில்சாக்கடை மக்கள் இருக்கிறார்கள் நீரே ஒதுகொள்க்ரீர்... இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை ?/ என யார் கேட்பது. ??? என்று ஒட்டு கேட்க வரும்போது மக்கள் கேள்வி கேடடு துரதுகிரார்களோ!! அன்றுதான் நமது நாட்டுக்கு ஜனநாயகம்?? அது வரை பணநாயகம் ???

    ReplyDelete
  3. வாருங்கள் ஸ்ரீராம்!

    மதிமுக ஆரம்பித்த அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பான தருணங்களை, கரூர் அரவக்குறிச்சியை சேர்ந்த இளைஞர்கள் வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்துத் தீக்குளித்த தருணங்களில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை கூட வைகோ ஒரு தெளிவான, அரசியல் ரீதியான, சரியான முடிவை எடுத்ததில்லை! உணர்ச்சிவசப்படத் தெரிந்த அளவுக்கு, கட்சியைத் தலைமை ஏற்று நடத்தத் தெரிந்தவராக இருந்ததில்லை!

    கூட வந்தவர்களை, நம்பி வந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்கிற சாமர்த்தியமும் இருந்ததில்லை! எந்த முகவை இவருக்காக உதறிவிட்டு வந்தார்களோ, அதே முக சாமர்த்தியமாக வலைவீசித் திரும்பப் பிடித்துக் கொண்டுபோனதைத் தடுக்கவும் வைகோவால் முடியவில்லை.

    நாடாளுமன்ற உறுப்பினராக வைகோ அளவுக்கு சிறப்பாக செயல்பட்டவர்கள் திரு இரா.செழியன் ஒருவரைத் தவிர, திராவிட இயக்கங்களில் வேறு எவரும் இருந்ததில்லை என்பதைப் பார்க்கும் போது, வைகோ ஏன் ஒரு நல்ல தலைவராக உருவாக முடியவில்லை என்ற கேள்வியை, ஒரு ஆதங்கமாக வெளிப்படுத்துவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?

    மதிமுக அப்படியே இருக்கும் என்ற கருத்து கொஞ்சம் வியப்பை ஏற்படுத்துகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கடைசியில்..........?

    ReplyDelete
  4. கணபதி ஐயா! வாருங்கள்!

    தமிழகத்தின் மாண்பு மிகு, மானமிகுக்களுக்கு எவ்வளவு தரம் விரட்டுப் பட்டாலும் சுரணை வராது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!