ஜெயித்தது யார்? ஜெயிக்கப்போவது யாரோ?
ஏப்ரல் 9-ஆம் தேதியன்று,மத்திய அரசு தன்னுடைய பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து லோக்பால் மசோதா விவகாரத்தில் வெளி நபர்களையும்  சேர்த்துக் கொள்வது, அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவது என்று ஒப்புக் கொண்டபோது, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாட்டம் கொஞ்சம் அதிகப்படியாகத் தான் தெரிந்தது. 

வெறும் ஒற்றை அறிவிப்புக்கே இத்தனை கொண்டாட்டமா?

ஆச்சரியம் ஒருபுறம், காங்கிரஸ்வாலாக்கள் குள்ள நரிகளாயிற்றே, எப்படி இந்தப் பின்னடைவை சமாளிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ஒரு புறமாகக் குடைந்து கொண்டிருந்ததில், விடை தெரிய அதிக நாட்கள் தேவைப்படவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுக்களை விரைவாக விசாரித்து, தண்டனை வழங்கும் ஒரு அமைப்பின் தேவை கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாகவே நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது. ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி, இத்தனை நாட்கள் தள்ளிப்போடத் தெரிந்தவர்களுக்கு அன்னா ஹசாரே போன்ற காந்தீயவாதிகள் நடத்திய உண்ணாவிரதம் எல்லாம் ஒரு பொருட்டா என்ன?

ஆனால், போராட்டம் தொடங்கிய நேரம், சமாளிப்பதற்குத் தேவையான அவகாசத்தை அளிக்கவில்லை! அதனால் என்ன? அவதூறுகளை அள்ளி வீசினால் போகிறது! தினம் நூறு குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினால், அசராமல் தாக்குப் பிடிக்க முடிகிறவர்கள் எத்தனை பேர்? காங்கிரஸ் அதைத் தான் செய்ய ஆரம்பித்தது.


அன்னா ஹசாரே மற்றும் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களும் சரி, ஆளும் தரப்பும் சரி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதத்தில் நாடெங்கிலும் திரள ஆரம்பித்த ஜனங்களுடைய ஆதரவு, கொந்தளிப்பு இரண்டும் சேர்ந்து, ஆளும் தரப்பை வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ள வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஐந்து மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல்கள் நெருங்குகிற சமயம் பார்த்து இந்தப் போராட்டம் ஆரம்பித்தது, காங்கிரசை ரொம்பவுமே நெளிய வைத்துவிட்டது.
 
போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி, வழக்கமான  விஷமத்தனமான பிரசாரத்தை ஆரம்பித்து வைக்க, தன்னுடைய போராட்டம் அரசியல் சார்பற்றது என்று அன்னா ஹசாரே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டி வந்தது.  .

அரசியல் சார்பு அல்லது ஆதரவு என்று வந்தால் "கறை" ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில், அரசியல் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக் கொள்ளத் தயக்கம்! ஆதரவு தெரிவிக்க ஜந்தர் ந்தருக்கு வந்த உமாபாரதி போன்றவர்கள் திருப்பி அனுப்பப் பட்டதும் நடந்தது.

"
கறை நல்லது" என்ற ஸ்லோகன் எல்லாம் டிவி விளம்பரத்தில் மட்டும் தான் எடுபடும்போல!!

காங்கிரஸ் கட்சி குள்ள நரிகள் அசந்துவிடுவார்களா என்ன     !

அபிஷேக் மனு சிங்வி  என்ற காங்கிரஸ் கட்சி பேச்சாளர், "நீங்கள் சொல்கிறபடி எல்லாம் சட்டமியற்ற முடியாது, வேண்டுமென்றால் தேர்தலில் ஜெயித்து வாருங்கள், அப்புறமாக நீங்கள் விரும்புகிறபடி சட்டமியற்றிக் கொள்ளுங்கள்" என்று நக்கலாகச்சொன்னார். சொன்னது கொஞ்சம் கொந்தளிப்பை ஏற்படுத்தி, சிங்வியின் யோக்கியதையையே கேள்விக்குள்ளாக்குகிற மாதிரி ஆகிவிட, அதே வார்த்தைகளை கபில் சிபல் வேறுவிதமாக சிரித்துக் கொண்டே அரசுக்கு சிவில் சொசைடி கட்டளையிட முடியாது" என்று சீரியசாகச் சொன்னார். உண்ணாவிரதம் மூன்று நாட்களைத் தொட்டபோதும் கூடக் காங்கிரஸ் அசருவதாக, இறங்கி வருவதாக இல்லை!

ஆனால், உலகக் கோப்பை முடிந்து, ஐபிஎல் கிரிக்கெட் தொடங்குவதற்கு முந்தைய இடைவேளையில், வேறு பரபரப்புச் செய்தி எதுவும் இல்லாத நிலையில், டிவி ஊடகங்கள் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை மிக விரிவாகவே கவர் செய்து, ஊது ஊதென்று ஊதித்தள்ள ஆரம்பித்துவிட்டன. இதை இரண்டாவது விடுதலைப் போராக சித்தரிக்க ஆரம்பித்தது,  

இதற்கு முன்னால் எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டத்தைப் பற்றிய பிரக்ஞை ஊடகங்களுக்கு மட்டுமல்ல, பின்னால் மெழுகுவர்த்திகளைத் தூக்கிக் கொண்டு அலைந்தவர்களுக்குமே இல்லை என்பதைப் புலப்படுத்தியது. 

காங்கிரஸ்காரர்கள் முதலில் இந்தப் போராட்டமே ஒரு ப்ளாக்மெயில் என்றார்கள். காந்தீய வழியில் ஒரு விஷயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பது எப்படி, எவரை ப்ளாக்மெயில் செய்வதாக இருக்க முடியுமென்று சோனியா காண்டியைப் பின்பற்றும் காங்கிரஸ் வாலாக்களால் சொல்ல முடியவில்லை.அரசைத் தனிநபர்கள் மிரட்டுவதா? தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடைய அதிகாரத்தை சிவில் சொசைடி என்ற பெயரில் தாங்களே கையில் எடுத்துக் கொள்வதா?அதெப்படி என்றார்கள்.
 
ஆனால், அரசு என்பது பெரும்பாலான ஜனங்களுக்கு எதிராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமையை சரிவர செய்யத் தெரியாதவர்களாக, ஊழலில் கூட்டாளிகளாக இருப்பதை சொல்ல மறுத்தார்கள்.அரசோ, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ தங்களுடைய கடமையை சரியாக செய்திருந்தால், இப்படி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அவசியமே இருந்திருக்காதே! 

தன்னலமற்ற நபராகத் தெரிந்த ஒருவர் மேற்கொண்ட போராட்டத்துக்கு அதில் உண்மை இல்லாமலிருந்தால், ஜனங்களுடைய ஆதரவு ஒவ்வொரு ஊராகக் கைகளில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு பெருக ஆரம்பித்திருக்காதே!

நிலைமை கைமீறிப் போய்விடும் என்பதை உணர்ந்த பிறகுதான் காங்கிரஸ் இறங்கிவந்தது. குள்ளநரித்தனம் போய்விடுமா என்ன? ஜெயித்து விட்டதாக ஜனங்கள் தெருக்களில் கொண்டாடினார்களாம்! அதனால் என்ன? இந்தப் போராட்டத்தை எந்தெந்த வழிகளில் கேவலப்படுத்தலாம் என்பதைக் கோயபல்சுக்கே பாடம் சொல்லித் தருகிற அளவுக்குத் தேர்ச்சி பெற்றதில்லையா காங்கிரஸ்! கண்ணசைவிற்குத் தகுந்தமாதிரி ஆடுகிற அமர்சிங் முதல் சண்டித்தனம் செய்கிற மாயாவதிகள் உட்பட எத்தனை கருவிகள் கைகளில் என்பதை இவர்களுக்குக் கொஞ்சம் காட்ட வேண்டாமா!

"இந்த வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ!" தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் பேசும் வசனம் இது.

சிபிஐ, வருமானவரித்துறை,இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் கைகளில் இருக்கும்போது கண்ணசைவிற்குத் தகுந்தமாதிரி ஆட எத்தனை பேர் கிடைப்பார்கள், சும்மா விட்ருவோமா

அன்னா ஹசாரே ஆரம்பித்துவைத்த ஊழலுக்கெதிரான இயக்கம், இப்போது சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன் என்ற தகப்பன்-மகன் வழக்கறிஞர்களைக் கொச்சைப்படுத்துகிற முயற்சியில் கலகலத்துப் போயிருக்கிறது.!

ஒரு ஒலிப்பதிவு சிடியை வைத்து  முலாயம் சிங்கின் சகா அமர்சிங் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மாயாவதி அரசு மிகச் சொற்பமான விலைக்கு பூஷன் குடும்பத்துக்கு பண்ணை நிலத்தை வழங்கியதில் ஒருகோடியே முப்பது லட்சம் பத்திரப்பதிவுக் கட்டணத்தைக் குறைவாக செலுத்தியிருக்கிறார் என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து தாக்கீது! மாயாவதி சிலை வைப்பு விவகாரத்தில் மாயாவதியை எதிர்த்து வழக்காடிய ஜெயந்த் பூஷனுக்கும் மனை ஒதுக்கீடு, இது லஞ்சமல்லாமல் வேறென்ன என்று கொக்கரிக்கும் காங்கிரஸ் வாலாக்கள் என்று  ஷாந்திபூஷன் பிரசாந்த் பூஷன் இருவரையும் குறிவைத்து ஏகப்பட்ட கேள்விக்கணைகள்

லோக்பால் மசோதா, ஊழலுக்கெதிரான இந்தியா எல்லாம் பின்னுக்குப்போய் விடவேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்வம் வெளிப்படையாகவே தெரிகிறது!

"காற்றில் அலையும் மெழுகுவர்த்தி தீபங்கள்!" பைனான்ஷியல் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழின் செய்திக் கட்டுரை, அன்னா ஹசாரே இயக்கத்தின் இன்றைய நிலைமையைத் தொட்டுக் கொடுத்திருக்கும் தலைப்பு!

தீபங்கள் எரியுமா? கண்ணமர்ந்து போய் விடுமா என்பது ஜனங்கள் எந்த அளவுக்கு விழிப்போடு இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. 1 comment:

  1. அவங்க எல்லாம் ரொம்ப ஒற்றுமையாய் இருக்காங்க பாஸு, வெளியே சண்டை போடுற மாதிரி காட்டிக்கிட்டாலும், உள்ள எல்லாம் ஒண்ணா மண்ணா தான் இருக்காங்கே. உசாரா இல்லாட்டி ஹசாரே கூட உள்ள இருக்க வேண்டி இருக்கும், கொஞ்ச நாள் களி கூட திங்கணும் போல, சரி போராட்டத்திலே இது எல்லாம் சகஜம்முன்னு எடுத்துகிட்டாலும், அவர் எத்தனை நாள் தாக்கு பிடிக்கிறாரோ தெரியலே., இது இன்னைக்கு நாளைக்கு முடியபோற பிரச்சனை இல்லை.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!