கருத்துக் கணிப்புகள்! கணிப்பா, திணிப்பா?

நிறைய விஷயங்களை இங்கே ஸ்பூனில் ஊட்டிவிட்டுத் தான் சொல்ல வேண்டியிருக்கிறதோ? கொஞ்சம்  தேடிப் பார்த்தாலேயே எளிதில் எல்லா விஷயங்களையும், இணையம் நம்முன்னால் கொண்டுவந்து கொட்டத் தயாராக இருக்கும்போது கூட, ஏன் தகவல்களைத் தேடி, சரிபார்த்துக் கொள்ள  தோன்றுவதே இல்லை?

மக்கள் யார்பக்கம் என்று ஒரு சரியான கணிப்பை, ஒரு மிகச்சிறிய பகுதியிடம் மட்டும் கேட்டு முடிவு செய்து விட முடியுமா? Sample size சிறிதோ பெரிதோ ஒரு சரியான representative factors இருக்குமானால், கணிப்பு சரியாகவே இருக்குமென்று தான் புள்ளியியல் பாடம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் காண்பதென்ன?

இங்கே ஜனங்களுடைய நாடித்துடிப்பை சரியாகக் கணிக்கிறார்களா என்பதை முடிவு செய்வதற்கு முன் ஒவ்வொரு ஊடகத்தையும், ஒருபக்கச் சார்போடு செயல் படுகிறார்களா? கிடைத்த தகவல்களை சரியாக அனலைஸ் செய்து உள்ளது உள்ளபடியே சொல்கிறார்களா? தகவல்களைத் திரித்து தங்களுடைய வசதிக்கேற்றபடி சொல்கிறார்களா?
விலைக்கு வாங்கப்பட்ட செய்தியாக, கருத்து கணிப்புகள் இருக்கிறதா? 

பதிவில் இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருந்தால், மூடிவைத்து விட்டு அடுத்த வரியைப் படிக்கப் பொறுமையில்லாமல், நகர்ந்து விடுகிறவர்கள் எண்ணிக்கை இங்கே 90%.. 95% மேல் இருக்கிற கள யதார்த்தத்தை, கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமானால், ஒரு நல்ல கருத்து கணிப்பு நடத்துவதற்கு, களநிலவரத்தை சரியாக நாடிபிடித்துப் பார்ப்பதற்கு, சரியான கேள்விகள், உறுதிப்படுத்திக் கொள்ள உதவியாக இன்னும் கொஞ்சம் துணைக்கேள்விகள், கேள்வி கேட்கப் படுகிறவருடைய அரசியல் சாதிச்சார்பு இவைகளைப் புரிந்துகொண்டு பதிலை வகைப்படுத்துவது, இவையெல்லாம் முக்கிய காரணிகளாக இருந்தாலும் .......

நம்மூர் ஜனங்கள் இங்கே கருத்துக் கணிப்புக்காக சொல்கிற பதில், அப்படியே தேர்தல் முடிவுகளோடு ஒத்துப்போகும் என்பதற்கு கொஞ்சமும் உத்தரவாதம் இல்லை. கேள்விக்கு குண்டக்க மண்டக்க பதில் சொல்லிக் குழப்புவது இங்கே சர்வ சாதாரணம். 

     
இவ்வளவு நீண்ட விவாதமெல்லாம் தேவையில்லையே!ஆர்கே நகர் தொகுதியில் டெபாசிட் இழந்ததற்கு என்ன என்ன காரணம் என்று ஸ்டாலின் ஒரு கோடிகாட்டியதே போதுமானது! ஆர்கேநகர் இடைத்தேர்தலில் ஒரு பூத்தில் திமுகவுக்கு விழுந்த வாக்குகள் 11 ஆனால் அங்கே இருந்த திமுக ஆதரவு பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கை 25 என்று சொல்லியிருக்கிறார்.இதில் புதிய செய்தி எதுவுமில்லை. கழகம் ஆட்சியில் இருந்த சமயத்தில் வாக்குப்பதிவில் காட்டிய அதே வித்தையை தினகரனும் செய்து காட்டினார். அவ்வளவுதான்!    

கருத்து கணிப்புகள் பெரும்பாலான நேரங்களில் கருத்துத் திணிப்பாக, ஸ்பான்சர் செய்யப்பட்ட செய்திகளாக, விலைக்கு வாங்கப்படக் கூடியவையாக இருப்பதை NDTV பிரணாய் ராய் உள்ளிட்ட சில ஊடகக்காரர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், வளர்ந்த விதம்,பர்கா தத், வீர் சங்வி போன்றவர்கள் ஊட்டி வளர்க்கப்பட்டகதை, நிரா ராடியா போன்ற கார்பரேட் தரகர்கள் மத்திய மந்திரி சபையில் கேட்ட துறையை வாங்கி கொடுக்கக் கூடிய விதத்தில் வளர்ந்ததெல்லாம் இப்போது சமீபத்தில் நம் கண்முன் நடந்த கதை.

ஊடகங்களில் வருகிற செய்திகளின் வேர் எதுவென்று தேடிப்பார்க்கப் பழகினாலேயே அவைகளின் உண்மை இன்னதென்று உரைத்துப் பார்த்துவிட முடியும்.

அப்படிப் பார்க்கப் பழகிக் கொள்ளப் போகிறோமா? இதுதான், இது மட்டுமே தான் நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி! 


கேள்விப்படுகிற எல்லாவற்றையுமே கேள்வி கேட்கவும் தெரிந்து கொண்டாகவேண்டுமே! இல்லையென்றால் அம்பாரம் அம்பாரமாகக் காதுல பூ சுற்றிக்கொள்வது நிச்சயம்!



              
              

2 comments:

  1. 'ஜெயிப்பவர்களுக்கு ஓட்டுப் போடுவோம்; நம் வாக்கு வாணாவானேன்?' என்று ஓட்டுப் போடுபவர்களில் ஒரு சாரார் நினைப்பதுண்டு.
    அவர்களைக் குறி வைத்துத் தூண்டில் போடுவது தான் இந்தக் கருத்துக் கணிப்புகளின் ஆகப்பெரிய இலட்சியம்!
    சிலரை வெல்பவராகக் காட்டி வாக்குத் திரட்டும் ஒரு மாயக் கண்ணாடி இந்தக் கருத்துக் கணிப்புகள்!

    ReplyDelete
    Replies
    1. ஒருவிரல் புரட்சி என்று இங்கே தப்பும்தவறுமாக ஜனங்களைத் திசைதிருப்புகிற ஊடகங்கள் ஒருபுறம்! யார் ஆண்டால் என்ன நம் நிலைமை மாறவா போகிறது என்று வாக்களிக்காமலேயே இருந்துவிடுகிற மத்திமர் மனநிலைமை இன்னொரு புறம்! பொய் தானென்று தெரிந்துமே யார் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளியிறைக்கிறார்களோ அவர்களுக்கே வாக்களித்து, இலவசங்களில் ஏமாறும் ஜனங்கள் ஒருபக்கம் என்று Winner takes all என்பதான Westminster தேர்தல்முறையை மாற்றி, தேர்தல் சீர்திருத்தங்கள் அவசர அவசியமாகி வருவதன் வெளிப்பாடு இது ஜீவி சார்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!