ஆறு--நான்கு! நான்காம் தேதி, ஆறாம் மாதம்!



ஆறு--நான்கு! நான்காம் தேதி, ஆறாம் மாதம்!

நேற்றோடு இருபத்தோரு வருடங்கள் ஆகிவிட்டன.

1978 முதல் டெங் சியாவோ பிங்  தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சந்தைப் பொருளாதாரத்திற்குச் சீனாவைத் தயார் செய்து கொண்டிருந்த தருணம். மா சேதுங் காலத்தியக் கட்டு மானங்களில் கொஞ்சம் தளர்வு இருந்தாலும், மக்களுக்கு நம்பிக்கை இல்லை. பொருளாதார சீர்திருத்தங்கள் இருக்கும் நிலையை இன்னமும் மோசமாக்கிவிடும் என்கிற அச்சம் ஒருபுறம். கோர்பசேவ் கொண்டுவந்த க்ளாஸ்நோஸ்ட்  (வெளிப்படையான தன்மை, சிந்தனை, கொஞ்சம் சுதந்திரம்) பற்றித் தெரிந்து கொண்டிருந்தவர்கள், பொருளாதார சீர்திருத்தங்களை விட கொஞ்சம் ஜனங்களுடைய குரலுக்கு மதிப்புக் கொடுக்கும் சுதந்திரத்தை அதிகமாக வலியுறுத்த ஆரம்பித்திருந்த இயக்கம் வளர்ந்து கொண்டே போய்க் கொண்டிருந்தது.

1989 ஜனவரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செக்ரெடேரி  ஜெனெரல் பொறுப்பிலிருந்து வெளியேற்றப் பட்ட ஹோ யோபாங் , ஏப்ரல் பதினான்காம் தேதி மரணம் அடைந்த நிகழ்வு, பெய்ஜிங் பல்கலைக் கழக  மாணவர்களை ஒன்று திரட்டும் தருணமாக ஆகிப் போனது. ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை மாணவர்கள் போராட்டம், உச்ச கட்டமாக டியனான்மன் சதுக்கத்தில் ஒருலட்சம் கூடிய பெரும் கூட்டமாக ஆனது.

இப்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, மே பத்தொன்பதாம் தேதியே, இந்தப் போராட்டத்தை, ரத்தம் சிந்த வைத்தாவது முடிவுக்குக் கொண்டு வர டெங் சியாவோ பிங் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. சீன மக்கள் ராணுவத்தின் இருபத்தேழாம், மற்றும் முப்பத்தெட்டாம் படைப் பிரிவுகள் சதுக்கத்தின் நான்கு முனைகளிலும், டாங்குகளுடன் சூழ்ந்துகொண்டு முன்னேறின. ஜூன் மூன்றாம் தேதி, உடனடியாகக் கலைந்து செல்லுமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இள ரத்தங்கள் பொங்கியெழுந்து மீறிய போது, சீன மக்கள் ராணுவம் தன்னுடைய சொந்த மக்களையே கொன்று குவித்த சம்பவம் அரங்கேறியது.

ஜூன் நான்காம் தேதி காலைப் பொழுதுக்குள் செஞ்சேனை தனக்கிடப் பட்ட உத்தரவைக் கனகச்சிதமாக நிறைவேற்றி முடித்து விட்டது. 
 
டியனான்மன் சதுக்கப் படுகொலை 
இந்த வீடியோவைக் கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள்! பத்து நிமிடம் தான்! இந்த ராணுவப் படுகொலையில் இறந்தவர்கள் எண்ணிக்கையைப் பற்றி ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு எண்ணிக்கையைச் சொல்கிறது.

 

ஜூன் 4, பிபிசி செய்திகளில்! என்ன நடந்ததென்றே எவருக்கும் புரியவில்லை!

ரஷ்யர்களின் மதிப்பீட்டில் பத்தாயிரம் பேர் கொல்லப் பட்டிருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. நேடோ உளவுத்துறைத் தகவல்கள் ஏழாயிரம் என்று மதிப்பிடுகின்றன. சீனச் செஞ்சிலுவைச் சங்கம், ஜூன் நான்காம் தேதி காலை மட்டும் கொல்லப் பட்டவர்கள் எண்ணிக்கை 2600 என்று சொல்லிவிட்டு அதே வேகத்திலேயே அந்தத் தகவலை முழுவதுமாக மறுத்தும் விட்டது.

மாணவர்களுக்கு ஆதரவாகக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எழுந்த குரல்கள் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி நசுக்கப் பட்டன. போராட்டத்தில் ஆதரவாக இறங்கிய தொழிலாளர்கள் உடனடியாகத் தீர்த்துக் கட்டப் பட்டனர். மாணவர்கள் விஷயத்தில் கடுமையான தண்டனைக் காலம், அவர்கள் வாழ்வையே முடக்கி வைக்கிற மாதிரியான நடவடிக்கைகள் என்று தொடங்கின. சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், இந்த ஜனநாயக உரிமைகளுக்குக் கொஞ்சம் செவி சாய்க்கலாமே என்று சொன்னவர்களும் சாய்க்கப் பட்டனர்.



சீனப் பிரதமராக இருந்த ஜாவோ ஜியாங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சமட்டத் தலைமையான பொலிட்பீரோ-அதன் நிலைக் குழுவின் உறுப்பினர்! கட்சிப் பொறுப்பிலிருந்து கல்தா கொடுக்கப் பட்டு, சாகிற கடைசித் தருணம் வரைகாவலில் வைக்கப் பட்டிருந்தார். இவர் ராணுவச் சட்டம் தேவை இல்லையே என்று சொன்னது, இவரே தேவையில்லை என்று காம்ரேடுகள் முடிவெடுக்கக் காரணமாகிப் போனது.

மாசேதுங் காலத்துக் கலாசாரப் புரட்சி காலத்திலாவது,
ஏதோ ஒரு விதத்தில் ஜனங்கள் தகவலை அறிந்து கொள்ள முடிந்தது. டெங் சியாவோ பிங் கொண்டுவந்த சீர்திருத்தங்களுக்குப் பின்னால், கடுமையான தணிக்கை முறை சீனர்களது வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிப் போனது. பொருளாதார சீர்திருத்தங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. சீனா வலிமையான வஸ்தாதாகத் தன்னைக் காட்டிக் கொள்ள, ஒவ்வொருவரையாகத் தொடையைத் தட்டி சவால், வம்புக்கு இழுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது.

டியனான்மன் சதுக்கத்தில்  இருபத்தொரு வருடங்களுக்கு முன்னால் கிளம்பிய பொறி அணைந்துவிட்டதாகவும் தெரியவில்லை. என்ன தான் சீனா, கடுமையான கட்டுப்பாடுகள், இணையத்தைத் துண்டிப்பது, இன்னபிற அடக்குமுறைகளைக் கையாண்டு, ஒன்றுமே நடக்காத மாதிரிக் காட்டிக் கொள்ள முனைந்தாலும், எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி, இந்த அடக்குமுறைகளே, ஆளுபவர்கள் மத்தியில் உள்ளூர இருக்கும் அச்சத்தைக் காட்டுகிற மாதிரித் தான் படுகிறது.

oooOooo


தோழர் வரதராஜனுக்குப் பிடித்த விஷயங்கள் இரண்டு! ஒன்று தயிர் வடை! இன்னொன்று, நல்ல எண்ணங்கள் என்ற படிக் கட்டுக்களின் மீதேறியே நரகத்துக்கும் போகலாம் என்ற ஆங்கில சொலவடையை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது! இதை பல பதிவுகளிலும் பார்த்திருக்கிறோம், நினைவிருக்கிறதா?

நல்லதை நினைத்து
நரகத்துக்குப் போகவும், மற்றவர்களையும் பிடித்துத் தள்ளுவதிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மாற்றே இல்லை!

இருங்கள்! காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏதோ கசமுசா கசமுசா என்று முனகுவது காதில் விழுகிறது! அவர்களும் அதில் சளைத்தவர்கள் இல்லையாம்!

விடுதலையடைந்து ஒரு வருடம் கூட ஆகாத தருணம்! ஹைதராபாத் நிஜாம், பிரிட்டிஷ் நரிகள் ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருந்த குளறுபடிகளை வைத்துப் பாகிஸ்தானுடன் இணைவதாக அறிவித்த போது, வைசிராயாக இருந்த மௌன்ட் பேடன் நிஜாம் மீது எந்த நடவடிக்கைக்கும் ஒப்புதல் தரவில்லை. ஒரு வழியாக, மௌன்ட் கப்பலேறிப் போன பிறகு, கவர்னர் ஜெனெரலாக இருந்த ராஜாஜி, பிரதமராக இருந்த நேரு, துணைப் பிரதமராக இருந்த வல்லபாய் படேல் மூவரும் கூடி ஒரே ஒரு விஷயத்தில் ஒன்று பட்டு நின்றார்கள். 


அது எதில் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால்.......

1948 செப்டெம்பர் மாதம் 13, 14, 15 மூன்றே நாட்களில் Operation Polo  என்று பெயரிடப்பட்ட போலீஸ் நடவடிக்கையில் ஹைதராபாத் நிஜாம் சரண்டர்!  ஹைதராபாத் நகரில் போலோ என்று குதிரை சவாரி செய்து கொண்டே விளையாடுகிற ஒரு வகைக்காக பதினேழு  விளையாட்டு மைதானங்கள் இருந்ததால் இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் போலோ என்று பெயர் வைத்தார்களாம்! 

ஹைதராபாத் நிஜாம் கிடைத்த இடைவெளியில், ஜனங்களிடமிருந்து சுரண்டிக் கொழுத்த செல்வங்களின் பெரும்பகுதியை உறவினர்கள் மூலமாக லண்டனுக்கும் பாகிஸ்தானுக்கும் அனுப்பி வைத்தாயிற்று. 

1946 ஆம் ஆண்டு முதலே தெலங்கானா பகுதி மக்கள் நிஜாம் ஆட்சியின் கீழ் சொல்ல ண்ணாத துயரங்களை அனுபவித்து வந்தவர்கள், ஆந்திர மகா சபா என்ற அமைப்பின் கீழ் ஒன்று பட்டு, நிஜாமையும், ரஜாக்கர்கள் என்று அழைக்கப் பட்ட  நிஜாமுடைய கொலைகாரக் குற்றேவல் படையையும் எதிர்த்துப் போராட ஆரம்பித்திருந்தார்கள். இந்திய ராணுவம், நிஜாமை அடக்கிய உடனேயே தங்களுக்கு நிவாரணத்தைக் கொண்டு வந்து விடும் என்று நம்பினார்கள். ஆனால் நடந்ததே வேறு!

கொடூரமான நிஜாமுக்கு ராஜப் பிரமுகர் அந்தஸ்து, செல்வங்களை அப்படியே அனுபவித்துக் கொள்ள அனுமதி வழங்கிய சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் சர்க்கார் தெலங்கானா மக்களின் போராட்டத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு போயிருந்தால் கூடப் பரவாயில்லை!

சேராத துருவங்கள் ஒன்று சேர்ந்த அதிசயமாக ராஜாஜி, நேரு, படேல் மூவரும் ஒரு விஷயத்தில் ஒன்றாக இருந்தது! கம்யூனிஸ்டுகள் என்றாலே அப்படி ஒரு வெறுப்பு! இந்த ஒரு விஷயத்தில் மட்டும், மற்ற எதிலுமே ஒன்று சேராத பிரகிருதிகள் மூவரும் ஒன்று சேர்ந்தார்கள். இந்திய ராணுவம் தங்களுடைய சொந்த ஜனங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டதும் நடந்தது.

தெலங்கானா மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம், கடுமையான அடக்குமுறைக்குப் பின்னால் 1951 இல் முடிவுக்கு வந்தது.

தெலங்கானா மக்களுக்கு
மட்டும் இன்றைக்கு வரைக்கும் விடிவு வரவே இல்லை!

 தெலங்கானா போராட்டம், தோழர் சுந்தரய்யா குறித்து முன்பு இதைத் தொட்டு  எழுதியது இங்கே 




No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!