சண்டேன்னா மூணு! கொஞ்சம் ஆவக்காய்! ஆந்திரா! அரசியல்!



சண்டேன்னா மூணு! வரவு எட்டணா! செலவு பத்தணா!




எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலுமே,  அதற்கான தீர்வுகள் பொதுவாக  இந்த நான்கு அடிப்படைகளுக்குள் அடங்கி விடும் என்று சொல்வார்கள்.


1.       உடனடியாகச் செயலில் இறங்குவது!


2.   ஆறப்போட்டு, நிதானமாகச் செயல் படுவது


3.   அலட்சியம் செய்து, ஒதுக்க வேண்டியது.


4.   அனுவவித்தே  தீர்க்க வேண்டியது!.

பிரச்சினையைத் தீர்க்க நாம் செய்யும் தவறான முடிவுகளே பிரச்சினையைக் கொழுந்து விட்டு எரியச் செய்து விடும். பிரச்சினை எதுவானாலும், அதன் உண்மையான தன்மையை அறிந்து, சரியான முடிவுகளை, சரியான நேரத்தில், சரியாகச் செய்வதில் தான் இருக்கிறது. இதில் செய்யும் குளறுபடிகள், பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இன்னமும் வளர்த்து விடும்!



உதாரணமாக, நம்மூர் பானா சீனா, தெலுங்கானா கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக  அறிவித்தார், ஆந்திரா தீப்பற்றி எரிகிறது! தெலுங்கானா கோரிக்கை நியாயம், அல்லது நியாயமில்லை என்பதற்காக இல்லை! சந்தடி சாக்கில் ராஜசேகர ரெட்டி மகன் ஆதரவாளர்கள், தங்களுக்கு "வாழ்வளித்து" வரும் வாரிசை முதல்வராக்க இந்தப் பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டதும்,  செல்வம் கொழிக்கும் (?) ஹைதராபாத் நகரமே தெலுங்கானாவுக்குள் அடங்கி விடுவதால், அதை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதில் வேறுபலரும் சேர்ந்து கொண்டதும், நீ ஒன்று சொன்னாயா, நான் நாலு சொல்கிறேன் என்று தெலுங்கானா கொடுத்தால், ராயலசீமா கொடு, கம்மம் கொடு என்று விதண்டாவாதம் செய்வதற்கே பிறந்த சிலரும் கும்மிஎடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!   என்னதான் பிரதமர் மன்மோகன் சிங் சமாதானம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாலும், துண்டு போர்த்திய அரசியல் வித்தகர், நேற்றைய பொருளாதாரமேதை  பானா சீனா கிளப்பி விட்டிருக்கும் பிரச்சினை, இப்போதைக்கு ஓயாது போல இருக்கிறது.
 

மஞ்சள் துண்டு தலைவர் ,நேற்றைய நாட்களில் பானா சீனாவை   "சிவகங்கைச் சின்னப் பையன்!" என்று அனுபவமோ முதிர்ச்சியோ இல்லாதவர் என்பதை நக்கலாகச்  சொன்னது சரியாகத் தான் இருக்கிறது!சால்வை அல்லது துண்டு எல்லாம் போர்த்திக் கொண்டதால் மட்டுமே  மஞ்சள் துண்டு போர்த்திக் கொண்டிருப்பவர்  போல சாமர்த்தியம் வந்து விடுமா என்ன?


இந்தமாதிரி அரசியல் வியாதிகள் எல்லாம், தலைவிதியே என்று அனுபவித்தே தீர வேண்டிய அவசியம் உள்ளவை அல்ல! மாற்றப்படவேண்டியவையே! குப்பையில் தள்ள
வேண்டியவைதான்! தாமதிக்கிற ஒவ்வொரு கணமும் நாட்டைக் குப்பையில் தள்ள இவர்கள் தயங்கமாட்டார்கள்!

மாற்றத்தைச் சாதிக்கும் வலிமை, இங்கே வெறும் ஓட்டுக்களை மட்டுமே சொல்லவில்லை, நம்முடைய கைகளில் தான் இருக்கிறது!

  oooOooo


இந்தப்பக்கங்களில் தலைமைப்பண்பு, ஒரு தெளிவான  திட்டத்தோடும், பார்வையோடும் செயல்படுகிற அரசியல் தலைவன், அப்படிப் பட்ட தலைவனிடம் இருக்க வேண்டிய, அல்லது இருக்கக் கூடாத  குணங்கள் என்று கொஞ்சம் மேலோட்டமாகப் பார்த்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியை பற்றிய நேற்றைய நாட்களின் இந்தக் கருத்து, அது ஓரளவுக்கு உண்மையானதாகவும் இருந்தது.

"எவ்வளவுதான், காங்கிரஸ் பலவீனப்பட்டுச் சிதைந்துகொண்டிருந்தாலுமே, நாடு முழுமைக்கும் அறியப்பட்ட கட்சியாகவும், எல்லாப் பகுதிகளிலுமே, ஆதரவு சதவீத அளவில் மட்டுமே மாறுபட்டிருந்தாலும், நாடுமுழுக்கவும் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரே கட்சி."


இப்போது கூடஇந்தக் கருத்து உண்மையானதாக இருக்கிறது என்றாலும், காங்கிரஸ், தனக்கென்று சொந்த லட்சியங்களோ,தேசத்தின் எதிர்காலத்தைக் குறித்த தெளிவான பார்வையோ, உறுதியான தலைமையோ இல்லாமல், சீரழிவின் உச்சகட்டத்திற்கே போய்க் கொண்டிருக்கிறது. பதவி வெறியும் ஊழலும் நிறைந்த மாநிலக் கட்சிகளுக்குக் கொஞ்சம் தீனிபோட்டுக் கொண்டு,  பதவிவெறியும் ஊழலும் நிறைந்த நபர்களால் மட்டுமே ஆனதாக காங்கிரஸ் மாறி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. 

1977 இல் உருவானதுபோல, ஒரு மாற்று முயற்சியை, வழி நடத்துவதற்கும் தலைமை தாங்குவதற்கும் ஜெயப்ரகாஷ் நாராயணன் மாதிரித் தலைவர்கள் இல்லாத வெறுமை நன்றாகவே தெரிகிறது. புரையோடிப்போன  புண்ணை ரண சிகிச்சை மட்டுமே காப்பாற்ற முடியும்! காங்கிரஸ் புரையோடிப்போய்  இனி மீளவே மீளாது என்ற அளவுக்கு அழுகிப்போனதாக இருக்கிறது என்பதையே ஆந்திராவில் நடந்து கொண்டிருக்கும் கூத்துக்கள் காண்பித்துக் கொண்டிருக்கின்றன.


"Rosaiah said he had discussed with the high command the issue of Telangana, and had told it that to pass a resolution in the Assembly was difficult.

On Home Secretary G.K. Pillai’s comment that Hyderabad would be the capital of Telangana, Mr. Rosaiah said he thought the Home Secretary had no proper brief."

ஹிந்து நாளிதழில் செய்தி என்றால், இங்கே இப்படி!

The crisis prompted Rosaiah to publicly express “astonishment, surprise and anguish” at the “flutter” over Home Minister P. Chidambaram’s “so-called statement” on Wednesday night announcing the initiation of the process to create Telangana.


அரசியல்! பாழாய்ப்போன ஓட்டுப்பொறுக்கும் அரசியல்! ஜனங்களுடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப் படுவதற்காகவா அரசியலுக்கு இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்!

oooOooo

தோழர் பி.சுந்தரய்யா

படிக்கக் கிடைத்தும், படிக்கத் தவறியவை!

திரு.வி.திவாகர்! மின்தமிழ் வலைக் குழுமத்தில் அறிமுகமானவர்! தமிழ்மரபு அறக் கட்டளையால் சென்ற ஆகஸ்ட் மாதம் மரபுச் செல்வர் என்று கௌரவிக்கப்பட்டவர்! எழுத்தாளர்! இதுவரை நான்கு சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார், அடுத்தவீடு என்ற பெயரில் தன்னுடைய வலைப்பதிவில்  "ஆவக்காயையும் ஆந்திராவையும் யாராலும் பிரிக்கமுடியாது. மலரும் மணமும் போல என்று கூட சொல்லலாம். ஆவக்காய் ஊறுகாயும் கோங்குரா பச்சடியும் சுவையும், காரமும் கூடியதுதான். சுவையில் மயங்கி முதலில் அதை உண்ணும் தமிழர்கள் அதன் காரத்தில் பிறகு கண்ணீர் விடுவதை......."என்று ஆரம்பித்து ஆ..உஷ்...காரம்..ரொம்ப ஜாஸ்தி என்ற தலைப்பில் எதிரும்புதிருமான தன்மை கொண்ட ஆந்திர தேசத்து இயல்பைச் சொல்லியிருந்தார். இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருந்த நேரம், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தெலுங்கானா கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படுவதாக, அறிவித்து, அடுத்து அடுத்து அரசியல் ஸ்டன்ட்கள் அரங்கேற ஆரம்பித்து, இன்னமும் முடியவில்லை.

இருபத்தேழு, இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் தோழர் பி.சுந்தரய்யா எழுதிய புத்தகம், 'தெலுங்கானா போராட்டமும் அதன் படிப்பினைகளும்' நண்பர் ஒருவரிடமிருந்து மிகவும் கெஞ்சிக் கூத்தாடிய பின்னர் கிடைத்தது. முழுதும் படித்து, விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னாலேயே,  இரவல் கொடுத்த நண்பர் திரும்ப வாங்கிக் கொண்டு போய்விட்டார்! படிக்க விரும்பிக் கையிக் கிடைத்தும் படிக்க முடியாமல் போன புத்தகம் அது. இப்போது கிடைத்தால் கூட, அன்றைக்கு என்ன ஆர்வத்தோடு படிக்க நினைத்தேனோ, அதே ஆர்வத்தோடு படிக்க முடியும்!

இன்றைக்குத் தெலுங்கானா கோரிக்கையைப் பற்றிப் படிப்பவர்களுக்குப் பத்தோடு பதினொன்றாக, பிராந்திய உணர்வுகள் மிஞ்சி போனதால் வந்ததாக மட்டுமே தோன்றும்.

இப்போதைய ஆந்திரம் என்பது, மூன்று தனித்தனிப் பகுதிகளாக, ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா என்று இருப்பதைப் படத்திலேயே பார்க்க முடியும்.தெலுங்கானா மக்கள் மிகக் கடுமையான உழைப்பாளிகள், மிக மோசமாக ஏமாற்றப்பட்டவர்களுமே கூட! நிஜாம்  ஆட்சிக் காலத்தில், மிகக் கடுமையான முறையில் சுரண்டப்பட்ட தெலுங்கானா மக்களை, ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு, அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்தது. போராட்டம் தோற்கடிக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான லட்சிய தாகமும், சுதந்திர வேட்கையும் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும், மக்களும் கொல்லப்பட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தில் தோளோடு தோள் கொடுத்து நின்ற காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரிகளாகிப் போன தருணம் ஆரம்பித்தது. 1946-1951 காலகட்டம்.

தெலுங்கானா போராட்டத்தின் பின்னணியையும், அது தோற்றதில் கிடைத்த பாடங்களையும் பரிசீலனை செய்வதற்குக் கட்சி இரண்டாக உடைந்த பிறகு தான் அவகாசமே கிடைத்தது. 1972 ஆம் ஆண்டு, தெலுங்கானா போராட்டத்தில்  பங்குகொண்டு முன்னணியில் இருந்த தோழர் பி. சுந்தரய்யா, ஒரு நீண்ட ஆய்வைக் கட்சிக்கு சமர்ப்பித்ததில் இருந்து, வெட்டியும் சுருக்கியும், கட்சி ஆவணமாக, புத்தகமாகவும் வந்தது. தன்னுடைய சொந்தக் கசப்புக்களையும், கருத்துவேறுபாடுகளையும் சகித்துக் கொண்டு, கட்சி எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டவராக வாழ்ந்து மறைந்த தோழர்சுந்தரய்யா இன்றும் மக்கள் நினைவில் வாழுகிறார்.

வெள்ளைத் துரை போன பின்னாடி வந்த லோகல் துரைமாரும், தெலுங்கானா மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவது  தான், இன்னும் கொடுமை!

தெலுங்கானா என்றவுடனேயே தோழர் சுந்தரய்யாவும் நினைவுக்கு வருகிறார்! தெலுங்கானா மக்களின் போராட்டமும் நினைவுக்கு வருகிறது!

எதிரும் புதிருமான குணாதிசயங்களை, ஊறுகாய், லட்டு இனிப்பு என்று சொல்லிவிட்டு, ஆந்திராவின் குணாதிசயத்தைச் சொன்ன பொது, வேறு சில விஷயங்களையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. போதாக்குறைக்கு இப்போது தெலுங்கானா பிரச்சினை வேறு பற்றிக் கொண்டு எரிகிறதா, சூடும் தாங்கவில்லை.

கடுமையான உழைப்பாளிகள், எளிமையானவர்கள், மிக நேர்மையானவர்கள் என்று ஒரு பெரும்பகுதி! எண்டமூரி வீரேந்திரநாத் தன்னுடைய  கதைகளில் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை, மரண ஹோமம்! ஆந்திராவில் இந்த வார்த்தை வெறும் கற்பனையல்ல, அடிக்கடி நடக்கும் நிஜம்!

எளிய மக்கள் தலையில் ஏறிக் காசு மிதிக்கும் கொடூரம், நிஜாம்களுக்கு முன்னாலேயே இருந்ததா, நிஜாம் ஆட்சியில் தான் பெரிதாக வளர்ந்ததா என்பதை அவ்வளவு சுலபமாக எல்லோரும் தெரிந்துகொள்ள முடியாதபடிக் குழப்பிக் கொண்டிருக்கும் ஆந்திர அரசியல் ஆவக்காயைச் சாப்பிடாமலேயே கண்களில் நீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.


 

8 comments:

  1. சிவகங்கைச் சின்னப் பையர் (!) தானாக, தன்னிச்சையாக இந்த முடிவு எடுத்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. இவர்களுடைய இந்த முடிவு எங்கு கொண்டு போய் விடுமோ...? இப்பொழுதே கூர்க்கா லேண்ட் கோஷமும் மாயாவதியின் தனிப்ரதேசமும் ஆரம்பமாகி விட்டன...
    காங்கிரஸ் கட்சி என்று இல்லை, இன்று எந்த அரசியல் கட்சியிடமுமே ஒரு தொலைநோக்குப் பார்வை, சுயநலமில்லாத தன்மை, வோட்டுக்கள் போய் விடும் என்ற பயம் இல்லாமல் நாட்டு நலன் குறித்து முடிவுகள் எடுக்கக் கூடிய தலைவர்கள் இல்லை. தப்பித் தவறி இருந்தாலும் நமது மீடியாக் காரர்கள் மதச் சாயம் முதல் ஜாதிச் சாயம் வரை பூசி விடுவார்கள்.
    இன்னும் 'சப்மிட்' ஆகவில்லையே பின்னர் வந்து வோட் போடலாம்னு பார்த்தா , பின்னூட்டம் எழுதுவதற்குள் 'சப்மிட்' ஆகிவிட்டதால் வோட்டும் போட்டுட்டேன்...!

    ReplyDelete
  2. பதிவெழுதின வேகத்திலேயே பின்னூட்டம் வந்திருப்பது இது தான் முதல் முறை! நன்றி ஸ்ரீராம்! இங்கே ஒரு தனி நபரைத் துதிபாடுவது, அல்லது தூற்றுவது இரண்டுமே இல்லை. தனியாக அறிவித்தாரா, கலந்து பேசி அறிவித்தாரா என்பதெல்லாம் கிடக்கட்டும், செயல்படுத்தும் விதத்தில் அறிவித்தாரா அல்லது தேர்தல் வ்காக்குருதி போல, அள்ளி வீசிவிட்டு, அந்த நேரத்துக்குச் சமாளித்தாரா என்பது தான் முதல் கேள்வி!

    தற்காலிக நிவாரணம், வெற்று வாக்குறுதி, தொலைநோக்குப் பார்வை இல்லாத அறிவிப்புக்கள், எல்லாவற்றிலும் பாதிக்கப் படுவது நாம் தான்! அவர்கள் இல்லை! மற்ற இடங்களில் இருந்து வரும் தனிநாடு கோரிக்கைக்கும், தெலுங்கானா கோரிக்கைக்கும் அடிப்படையில் வித்தியாசம் உண்டு. இது, பின்னாட்களில் வந்த மாதிரியான சுயநல அரசியலில்எழுந்ததுமல்ல.

    தலைமை தாங்குவதற்குச் சற்றும் அருகதை இல்லாத இல்லாத கட்சி காங்கிரஸ் என்பது மறுபடி நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட். ரசித்தேன் ஐயா..

    ReplyDelete
  4. வாங்க தண்டோரா!

    பிடிச்ச சப்ஜெக்ட் எது? ஆவக்காயா, அரசியலான்னு சொல்லாமலேயே போனா எப்படி?

    ReplyDelete
  5. தண்டோராஜிக்கு பிடித்த சப்ஜெக்ட் அரசியல்வியாதிகளை வறுத்தெடுப்பது..!

    ReplyDelete
  6. வேறு என்ன செய்வார் ப.சி.? அம்மா பேச்சை மீறாத மகனாச்சே..! சொன்னதை செய்துவிட்டு அடக்கமாக இருக்கிறார்.. நீங்கள் அம்மாவை விட்டுவிட்டு பையனை போட்டு மிதிக்கிறீர்களே ஸார்..!

    ReplyDelete
  7. ஆனால் தெலுங்கானா வரவேற்கத்தக்கதுதான்..! அந்த மாநில மக்கள் விரும்புவது தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்துதான்..

    வேண்டாம் என்பவர்கள், இத்தனை நாட்கள் இருந்த சுகத்தை இழந்துவிடுவோமே என்பதால்தான்..!

    ReplyDelete
  8. வாங்க உண்மைத் தமிழன் சார்!
    அரசியல் வாதிகள் நம்மை நிஜத்தில் வறுத்து எடுக்கும்போது, இப்படி எழுத்திலாவது அவர்களை வறுத்து எடுக்கலாமே என்ற எண்ணம் இல்லாருக்கும் தான் இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்லவே! பழைய எம்ஜியார் படங்களில் எம்ஜியார் நம்பியாரைக் குத்து விடும்போது, தாங்களும் தங்கள் எதிரிகள் மீது குத்து விடுவதாகக் கற்பனையில் இன்வால்வ் ஆனதினால் தானே, எம்ஜியார் மீது ஒரு பரந்த ஈர்ப்பே இருந்தது!

    இப்போதிருக்கும் அரசியல்வாதி எவருமே தாய் சொல்லைத் தட்டாத தனயனோ, தாயை காத்த தனயனோ இல்லை. நல்ல விலை கிடைத்தால் தாயையே விற்றுவிடவும் தயங்காதவர்கள் ! இந்தப் பிரச்சினையில், தாயுமே கூடப் பெற்ற மகனையே விற்ற அன்னை மாதிரித் தான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!