யார் குற்றவாளி? கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்!

யார் குற்றவாளி?

தினமணி தலையங்கத்தின் கேள்வி! சரியான விடை, கயவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான்!
 

போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க உளப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மத்திய அரசால் எடுக்கப் படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச  இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை. 

 
வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் இந்தப் பதிலை கேட்டுக்கொண்டு சும்மா இருக்கின்றன.

அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு இதில் என்ன பங்கு என்று யாரும் கேள்வி எழுப்புவதற்கு முன்னதாகவே ""ராஜீவ் காந்தி குற்றமற்றவர், அவர் இதில் சம்பந்தப்படவே இல்லை'' என்று மறுக்கிறார் கட்சியின் செய்தித் தொடர்பாளர். ஏன் இந்த அவசரம், எதற்காக இத்தனை பதற்றம்? "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வதைப்போலத்தான் இதுவும்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் என்ற முறையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் அர்ஜுன் சிங் இத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டார். ஆனாலும், பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது தானே வழக்கம்.
பதில் ஏதும் அளிக்காமல். அர்ஜுன் சிங்கும் சும்மா இருக்கிறார்,  அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல் பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது  இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
 

யூனியன் கார்பைடு நிறுவனப் பங்குகளை "டவ் ' நிறுவனத்துக்கு விற்பனை செய்தபோது, கார்பைடு நிறுவனத்தின் இழப்பீடுகளில் "டவ் ' நிறுவனத்தைத் தொடர்புபடுத்த மாட்டோம் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு உறுதி அளித்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது. இந்தப் புகாரும் நிரூபிக்கப்படுமேயானால், அதைவிட மோசமான விவகாரம் எதுவும் இருக்க முடியாது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கை நடத்தி, முதல் குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே தீர்ப்பு வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் காரணமாக, இது குறித்து 10 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி அமைச்சர் குழுவை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இதெல்லாம், கொதித்துப்போய்க் கிடக்கும் மக்கள் மனதை சற்று குளிர வைக்க மட்டுமே. இதனால் ஏதோ புதிதாக ஒரு குற்றப்பத்திரிகை தயாரித்து, தண்டனை பெற்றுவிடுவார்கள் என்று நம்புவதற்கில்லை.

ஏனென்றால் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு போபால் விஷ வாயு விபத்து வழக்கில் சட்ட ஆலோசனை அளித்த அபிஷேக் மனு சிங்வி, அதில் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டே காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளராக இருக்கும்போது நாம்தான் மத்திய அரசைப் புரிந்து நடக்க வேண்டும்.  இனியும் இந்த தேசத்தை இவர்கள்தான் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்தால் அது அவர்களின் தவறு அல்ல.
 

நிலம், நீர், காற்று என்று அனைத்தையும் பாழாக்கும் தோல் பதனிடும் ஆலைகளும் சாயப்பட்டறைகளும் ரசாயன உர ஆலைகளும் நிறுவப்பட உகந்த இடம் இந்தியாதான் என்று மேற்கத்திய நாடுகள் எப்போதோ தீர்மானித்துவிட்டன. அன்னியச் செலாவணி கிடைக்கிறது, வேலைவாய்ப்பு பெருகுகிறது என்று புளகாங்கிதம் அடைந்து நம்முடைய அரசியல் தலைவர்கள் அவற்றுக்கு நடைபாவாடை விரிக்கின்றனர் என்று நம்மை நம்ப வைக்கிறார்கள் என்றாலும், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இதில் லாபம், கமிஷன் எல்லாமும் என்பது நாம் சொல்லாமலேயே விளங்கும்.
 

மேற்கத்திய நாடுகள் இந்தியாவைத் தங்களுடைய குப்பைத் தொட்டியாகவே நினைப்பதை அவ்வப்போது அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் நகரக் கழிவுகளையும் சுத்திகரிக்கப்படாத மருத்துவமனைக் கழிவுகளையும் கன்டெய்னர்களில் ஏற்றிவரும் வெளிநாட்டுக் கப்பல்கள் உறுதிப்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் ஒரு சாதாரணமான சத்துமாவை, ஊட்டச்சத்து மாவு என்று விற்பனை செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டின் உணவுத் துறையின் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டாக வேண்டும். அமெரிக்காவுக்கு ஒரு உணவுப் பொருள் அல்லது மருந்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள அந்த ஏற்றுமதி நிறுவனம், சீரிய தயாரிப்பு முறைகளை (குட் மானுபேக்சரிங் புராஸஸ்) அமெரிக்கா நிபந்தனைகளுக்கு ஏற்ப கொண்டிருக்க வேண்டும்.  


ஆனால் அமெரிக்கர்கள் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டும் என்றால் இந்தியச் சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது. இதுதான் யதார்த்த நிலைமை.

விஷவாயு கசிவு நேர்ந்தபோது, ஆன்டர்சன் போபாலில் இருந்திருந்தால், விஷவாயு இந்தியர்களை மட்டுமே கொன்றிருக்குமா, இல்லை, அவரைக் கட்டுப்படுத்தவோ, அவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தவோ தனக்கு அதிகாரம் இல்லை என்று சும்மா கடந்துபோயிருக்குமா?


oooOooo 

தங்களால் ஒன்றும் செய்ய முடியாது , எதையும் கட்டுப் படுத்தவோ, சரியான முறையில் நிர்வகிக்கவோ முடியாது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இன்னொரு பேரழிவுக்கு இந்த நாட்டை அணு உலை விபத்து நட்ட ஈடு  வரையறை செய்யும் சட்ட முன்வரைவு என்று தைரியமாக, அடிப்படை நாணயமோ, நேர்மையோ, குறைந்தபட்சம் முதுகெலும்போ இல்லாத காங்கிரஸ் கட்சி அரசு, ஐ மு கூட்டணிக் குழப்பமாக முயல்கிறது என்றால்............

அதற்கு முதல் காரணம், இந்தக் கையாலாகாதவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான் முதல் குற்றவாளி!

தவறைத் திருத்திக் கொள்ளக் கொஞ்சமாவது முயற்சிக்கப் போகிறோமா?

நீங்கள் தான் சொல்ல வேண்டும்! உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேரிடமும்! அழுத்தமாக!

கார்டூன்கள், தலையங்கத்திற்கு தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்!5 comments:

 1. காங்கிரஸ் இந்தியாவில் பரவிய விஷக் கிருமி,

  குற்றவாளிகளை விமானம் ஏற்றி அனுப்பும், விமானம் ஏறிவரும் டக்ளஸ் போன்ற குற்றவாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து கைக்குலுக்கும்.

  ReplyDelete
 2. டக்ளஸ் மட்டும் தானா? அதைப் போல நிறையக் கொள்ளிக் கட்டைகளை வளர்த்துவிட்டு, தலையைச் சொறிந்து சூடு பட்ட அனுபவமும் காங்கிரசுக்கு இருக்கிறதே திரு கண்ணன்!

  ReplyDelete
 3. நம்மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்!?

  ReplyDelete
 4. வால்ஸ்!
  /நம்மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்!?/

  இப்படிக் கேட்பதை விட நான் ஏன் வால் பையனாக மட்டுமே இருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டால் சரியான விடை உடனே கிடைத்துவிடும்! அந்த நாம், நம்மில் நாமும் தான் அடக்கம் அதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் இல்லையா?

  ReplyDelete
 5. காங்கிரஸ் இந்தியாவில் பரவிய விஷக் கிருமி,

  --இல்லை.

  நம்மை மெல்ல கொன்று கொண்டு இருக்கின்ற வைரஸ்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!