முகமூடி சீர்திருத்தங்கள்! யாருக்காக....?

ஐ.மு.கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு 
ஒட்டு மட்டும் போட்ட மக்களுக்கு "அடி மேல் அடி" கொடுப்பதைக் கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் நடத்திக் கொண்டிருப்பதன் இன்னொரு முகமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவைகளின் விலையை அதிகரிப்பது என்ற அரசின் முடிவு இருக்கிறது. இந்த ஒரு ஆண்டு காலத்துக்குள்ளேயே, விலை உயர்வு அறிவிக்கப் பட்டிருப்பது இது மூன்றாவது முறை. இந்த ஒரு முடிவால் மட்டுமே விலைவாசிக் குறியீடு ஒரு சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அரசே மதிப்பிட்டிருக்கிறது. உண்மை நிலவரம் அதை விடக் கூடுதலாகக் கூட இருக்கலாம்.

பொருளாதாரச் சீர்திருத்தத்தின் ஒரு அங்கமாக எரிபொருட்களின் விலையை சர்வதேச நிலவரத்துக்குத் தகுந்த மாதிரி நிர்ணயிக்கிற எரிபொருள் விலை சீர்திருத்தம் தவிர்க்க முடியாதது என்று இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்த சீர்திருத்தம் எவ்வளவு பெரிய மோசடி என்பதைக் கொஞ்சமாவது இந்தப்பக்கங்களுக்கு வருகிறவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக  இந்தப் பதிவு.

இப்போதைய விலை உயர்வால், உடனடியாகவும் அதிக லாபமும் பெறப்போவது அம்பானிகளுடைய ரிலையன்சும், எஸ்ஸார்  குழுமத்தின் எண்ணெய் நிறுவனங்களும் தான் என்பது செய்திகளைக் கொஞ்சம் கூர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்.அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குக்  கொடுப்பது போலவே மானியமும் சலுகையும் வேண்டும் என்று ரிலையன்ன்ஸ் கம்பனி முதலில் போர்க்கொடி தூக்கியது. இல்லைன்றால் இந்தியாவுக்குள் வணிகம் செய்வது கட்டுபடியாகாது, வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது மட்டும் செய்யப் போகிறோம் என்றும் கூட செய்திகள் வந்தன.

இப்போது அறிவிக்கப் பட்டிருக்கும் விலை உயர்வுக்குப் பின்னாலும் அரசுக்கு சுமார் இருபத்துமூன்றாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு இருக்கும் என்று அரசு சொல்லும் மதிப்பீடு இருக்கிறது பாருங்கள், இங்கே தான் அரசு செய்யும் மோசடி இருக்கிறது. 

2009 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி வருவாய் 56365 கோடி ரூபாய்கள்! மானியமாகத்  தந்ததோ வெறும் 14058 கோடி தான்!. ஒட்டகத்தின் மீது ஏற்ற வேண்டிய பாரத்திற்கும் அதிகமாகவே சுமையை ஏற்றி விட்டு, அதை மாற்றுவதகாகக் கொஞ்சூண்டு சுமையைத் தூக்கி எறிகிற மாதிரிப் பாவனையிலேயே முட்டாள் ஒட்டகங்கள் ஏமாந்து, சுமையைச் சுமந்து வாயில் நுரைதள்ளிக்  கொண்டு போகிற கதை மாதிரி இல்லை?! 


போதாக்குறைக்கு, விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த பெட்ரோல் பொருட்களின் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியைக் குறைத்துக் கொண்டால், பொதுமக்களுக்கு அதிகச் சுமை இருக்காது என்று ஒரு மத்திய அமைச்சர் பேசியிருப்பதன் பின்னணியைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் இன்னும் கொஞ்சம் விவரங்கள் தெரிய வரும்.
 
Crude Oil and Commodity Prices
June, Tuesday 29 2010 - 12:04:51

Crude Oil
$75.60 ▼2.65   3.39%
12:04 PM EDT - 2010.06.29

Natural Gas
$4.58 ▼0.16   3.34%
12:04 PM EDT - 2010.06.29

 எண்ணெய் விலை சந்தை நிலவரத்தில் மாறிக் கொண்டிருப்பது இரண்டு படங்களிலும் தெளிவாக! படத்தின் மீது க்ளிக் செய்தால், நீங்கள் க்ளிக் செய்யும் நேரத்தில் எண்ணெய் விலை நிலவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஒன்பது மாத நிலவரத்தைப் பார்த்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் (சுமார் 160 லிட்டர்கள்) விலை இன்றைய நிலவரப்படி 75.60 டாலர்கள்.  எல்லா மதிப்புக்களையும் ரவுண்டாக எடுத்துக் கொண்டு பார்த்தால்  லிட்டருக்கு இருபத்திரண்டு ரூபாய் தான் அடக்கமாகிறது. பெட்ரோல் டீலருக்குக் கொடுக்கும் கமிஷன் வெறும் ஒன்றரை சதவீதம் தான். மிச்சம் எல்லாம் மத்திய அரசு பல வகைகளிலும் விதிக்கிற வரிகள் தான். அடக்க விலைக்கு மேல் நூறு முதல் நூற்று முப்பது சத வீதம் வரை பலவிதமான வரிகளை மத்திய அரசு விதிக்கிறது. இவர்கள் விதித்தது போக மாநில அரசுகள் தங்கள் பங்குக்கு விற்பனை வரியை விதிக்கின்றன,

விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் தாங்கள் விதிக்கும் வரியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று உபதேசம் செய்கிற மத்திய அமைச்சர்கள் தாங்களே அதைச் செய்தால் என்ன? எவரும் இந்தப் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்பது பேசுகிற புண்ணியவான்களுக்கே நன்றாகத்  தெரியும்

இங்கே பேரலுக்கு 159 அல்லது 160 லிட்டர்கள் என்று சொல்லும்போது சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயில் சரிபாதிக்கும் கொஞ்சம் குறைவாகத் தான் பெட்ரோல் இருக்கிறது. அப்படியென்றால், மிச்சமிருப்பதெல்லாம் வீண் தான் என்று நினைத்துவிடாதீர்கள்!

ஒரு பேரலில் கிடைப்பது என்ன என்ன என்று பார்க்கலாமா?

27.5 லிட்டர் பெட்ரோ கெமிகல் பொருட்கள்-- இதில் ரசாயன உரங்கள் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியா உட்பட பிடுமேன், தார் போன்றவைகளோடு, பெட்ரோலியம் ஜெல்லி, வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்கள், சலவை செய்யப் பயன்படும் வேதிப் பொருட்கள், பபிள் கம் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், பிளாடிக் பொருட்கள் தயாரிப்பில் என்று பட்டியல் கொஞ்சம் பெரிது.

6.5 லிட்டர் எல்பிஜி எரிவாயு.

14.5 லிட்டர் ஒயிட் கெரசின்  என்றழைக்கப்படும் விமானத்திற்கான எரிபொருள். புகை வராது. இங்கே நாம் வீடுகளில் உபயோகிக்கும் மண் எண்ணெய் தரம் மிகவும் கம்மி, புகை நிறைய வரும்.

6.6 லிட்டர் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் 

6.6 லிட்டர் ஹீட்டிங் ஆயில்

72.5 லிட்டர் பெட்ரோல்

35 லிட்டர் டீசல்

ஆகப் பெட்ரோல் சுத்திகரிப்பில், பெட்ரோலை விட லாபகரமான வேறு பல பொருட்கள் கிடைப்பதால் தான், இன்றைக்குப் பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன என்பதை விட, அரசுகளையே ஆட்டிப் படைத்து விடக் கூடிய அளவுக்குக் காசு அதில் புழங்குகிறது என்பதை புஷ் காலத்தில் ஈராக்கின் மீது யுத்தம், பிரிட்டிஷ் பெட்ரோலியக்  கம்பனியின்  ஆழ்துளைக் கிணற்றில் இருந்து கடலை மாசு படுத்திவரும் எண்ணெய்க் கசிவு போன்ற நிகழ்வுகள் அம்பலப் படுத்தின.

இப்போது இங்கேயும் அப்படித் தான்!

மக்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இந்த விலையேற்றம் இருக்கும் என்று தெரிந்தும் இதைச் செய்கிறார்கள் என்றால், தேர்தல் நேரத்தில் கொஞ்சம் வாக்குறுதிகள் ப்ளஸ் ஒட்டுக்குக் கொஞ்சம் காசுடன், அதைத் தள்ளுபடி செய்கிறேன், இதைத் தள்ளுபடி செய்கிறேன் என்று கடன் தள்ளுபடித் தில்லுமுல்லுக்களோடு சேர்த்து--

எவ்வளவு அடிமேல் அடிவிழுந்தாலும் பொறுத்துகிட்டு ஓட்டுப் போடறாங்களே! இந்த ஜனங்க எவ்வளவு ரொம்ப நல்ல இளிச்சவாயங்கன்னும்

சொல்வது புரிகிறதா?

புரியவில்லை என்றால், உங்களை அந்த ஆண்டவன் கூடக் காப்பாற்ற முடியாது!


வேறு பதிவுகளில், வலைக் குழுமங்களில் இந்தப் பிரச்சினையை அலசுகிறார்களோ இல்லையோ, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு இழை ஆரம்பித்து, அப்புறம் வேறுபக்கங்களில் கவனம் சிதறி விட்டது. ஜனங்களால் என்ன செய்துவிட முடியும், கொஞ்ச நாள் காக்கைகள் போலக் கூடிக் கரைவார்கள் அப்புறம் கலைந்து விடுவார்கள் என்ற அரசியல் வாதிகளுடைய பால பாடத்தில் கற்றுக் கொண்டதைத் தவறு என்று நிரூபித்துப் பாடம் புகட்டும் வரை .........!

டில்லியில் 1984 இல் நடந்த சீக்கியர்களைப் படுகொலை செய்த விவகாரத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் சப்பைக் கட்டுக் கட்டிருக்கிறார். அந்த சம்பவம் நடந்தே இருக்கக் கூடாது என்று சொல்லிருக்கிறார். சீக்கிய சமூகத்திடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்! இருபத்தாறு ஆண்டுகள் கழித்து! இதற்கு முன்னாலும் இப்படி ஒரு மன்னிப்புக் கோரும் நாடகம் இந்தியாவிலேயே அரங்கேறியது. எந்த மரியாதையும் கிடைக்கவில்லை. இப்போது கனடாவில் போய் அதே மன்னிப்புக் கேட்கும் வசனம் ஒலி பரப்பாகி இருக்கிறது.

இந்திரா காண்டி குடும்பத்து வாரிசுகள் எவரும் இந்தப் படு கொலைக்காக இது வரை வருத்தம் தெரிவிக்கவில்லை. அதற்குக் கூட மன்மோகன் சிங் மாதிரி ஒரு டம்மிப் பீஸ் தேவைப் படுகிறது!  


காங்கிரசுக்கு வேண்டுமானால் டம்மிப் பீஸ்கள், முகமூடிகள் தேவையாயிருக்கலாம்!

நமக்குமா?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!
7 comments:

 1. //எவ்வளவு அடிமேல் அடிவிழுந்தாலும் பொறுத்துகிட்டு ஓட்டுப் போடறாங்களே! இந்த ஜனங்க எவ்வளவு ரொம்ப நல்ல இளிச்சவாயங்கன்னும் //

  உண்மையான வரிகள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. for long, i was hoping that someone exposes the 'fraud' of claimed loss of public sector Oil firms. thank you for doing this. Also, the government conveniently prices the oil it finds at the same price as the international price. In other words, the cost of the oil explored in India is calculated at $75 per barrel even though it should be way below that.

  Every time P.C / Manmohan says that the public sector is losing money on petrol, my blood boils!

  ReplyDelete
 3. திரு.ரவி!

  ப்ரொபைலில் தங்களைப் பற்றிக் கொஞ்சமாவது சொல்லியிருப்பவர்களுடைய பின்னூட்டங்களைத் தவிர மற்ற பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவில் இருந்தாலும், இந்த ஒரு பின்னூட்டத்தை, இதில் சொல்லாமல் சொல்லியிருக்கும் சில விஷயங்களுக்காக அனுமதிக்கிறேன்.

  முதலாவதாக, இதை வேறு யாரோ வந்து எக்ஸ்போஸ் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறீர்களே....அது! அது ஏன்?

  அது ஏன் நீங்களாகவே இருந்திருக்கக் கூடாது? இந்த விஷயம் இணையத்தில் தேடினாலே எளிதில் கிடைக்கக் கூடியது தான், ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடியமுயற்சி கூட ஏன் உங்களிடமிருந்து ஆரம்பிக்கவில்லை என்பதை நீங்களே கேட்டுக் கொள்ளுங்களேன்!

  அடுத்து, ஒவ்வொருவிலை உயர்வு வரும்போதும் ஏற்படுகிற கொதிப்பு....!வந்த வேகத்திலேயே அடங்கிப் போய்விட்டால் அதற்குப் பேர் கொதிப்பல்ல!

  கடைசியாக, உள்ளூரிலேயே கிடைக்கும் பெட்ரோலுக்கும் அதே எழுபத்தைந்து டாலர்! உண்மை அதைத் தாண்டியும் இருக்கிறது திரு ரவி! உள்ளூரிலேயே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டால், அரபு+அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் பெட்ரோல் நிறுவனங்கள் எப்படி லாபம் பார்க்க முடியும்? உள்ளூர் அரசியல் வாதிகள் எப்படி நாலு(நாட்டு) காசு பார்க்க முடியும்?

  ReplyDelete
 4. to make profitable income to relaiance, essar groups govt taking steps like that.

  media keeping mum or diverting real issue.

  what people will do without knowing realthing?

  for that we need some forum or real public support politician needed.

  ReplyDelete
 5. வாருங்கள் திரு.பாலு!

  இது இப்போது தான் புதிதாக ஆரம்பித்தது என்று என்ன வேண்டாம்! ஆரம்ப காலங்களில் டாட்டா பிர்லா என்றிருந்தது பட்டியல் கொஞ்சம் பெரிதாயிருக்கிறது, அவ்வளவு தான்!

  உப்புக் கருவாடும் ஊற வச்ச சோறும் என்று அம்பாசடர் கார் விவகாரத்தை, (டொயோடா பிரச்சினையைத் தொட்டு எழுதிய பதிவுகளில் ஒன்று) எழுதியிருந்தேன் நினைவிருக்கிறதா?

  அந்த நாட்களோடு ஒப்பிடும்போது இன்றைக்கு நீங்கள் நினைப்பதுபோல ஜனங்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல! என்ன,அவர்களுடைய முன்னுரிமைப் பட்டியலில் அவர்களுடைய வாழ்வையே சிதைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் இல்லை! எந்த நடிகை தமிழ்நாட்டில் எல்லோருமே தனக்கு மச்சான்ஸ் தான் என்று சொல்கிறாள், இப்படி விஷயங்களில் மட்டுமே முன்னுரிமை கொடுத்துத் தொலைந்துபோய்க் கொண்டிருப்பவர்கள்!

  ReplyDelete
 6. //2009 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி வருவாய் 56365 கோடி ரூபாய்கள்!//

  எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக customs duty, excise duty, corporate tax, Dividend, sales tax என்று வருடத்திற்கு ரூ 1,61,798 கோடி (2008-09) கிடைக்கிறது.

  இது தொடர்பாக ஒரு பதிவிட்டுள்ளேன். பார்க்கவும்.

  http://bala-bharathi.blogspot.com/2010/06/blog-post_26.html

  நன்றி.
  ஹரிஹரன்

  ReplyDelete
 7. வணக்கம் திரு.ஹரிஹரன்.
  உங்களுடைய பதிவில் விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மானியங்கள், சலுகைகள், தள்ளுபடிகள் எல்லாமே இந்தியத் திருநாட்டில் ஏமாற்று வேலைகள் தான் என்பதை மட்டுமே மையமாக வைத்து எழுதப் பட்ட பதிவு இது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான மானியம் தொடர்பான கணக்குகள், அரசு வெளியிடும் தகவல்கள் எல்லாமே குழப்பமானவைதான்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!